வேண்டும் விடுதலை/குடமுருட்டியில் வெடித்த குண்டு

குடமுருட்டியில் வெடித்த குண்டு


"ஏறத்தாழ எழுபது கோடி மக்கள் வாழ்கின்ற, உலகின் மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியா. இந்த நாட்டில்தான் உலகில் மிகச் சிறந்த ஆன்மீக உணர்வு பொங்கித் துளும்புகிறது; இங்கு தான் வற்றாத 'புனித' ஆறுகளும், எண்ணிலடங்காத கோயில் - குளங்களும் நிறைந்திருக்கின்றன; மேலும், இந் நாட்டைத்தான் முப்பத்து மூவாயிரம் தேவர்களும், பதினெண்ணாயிரம் முனிவர்களும், கின்னரர், கிம்புருடர் போன்றவர்களும், சிவன், விண்ணு, பிரம்மா போன்ற கடவுள்களும், வலம் வந்து காக்கிறார்கள். (மற்ற நாடுகளை யார் காக்கிறார்களோ தெரிய வில்லை). இஃது உலகிலேயே மிகவும் புண்ணியம் நிறைந்த நாடு” என்றெல்லாம் தொன்மைப் பெருமைகள் நிலவுகின்றன. இங்குதான் வெறும் மேலுடன் சுற்றித் திரிந்த காந்தி என்னும் மாந்தத்தெய்வம்(!) பிறந்தது; இங்குதான் புத்தர் என்னும் 'புண்ணியன்' நல்லிறக்கம் கொண்டார்’ என்றவாறெல்லாம் புகழ்பாடிக் கொண்டாடுகிறார்கள்.

இத்தகைய சீரும் சிறப்பும்(!) கொண்ட இந்நாட்டின் தலைமை அமைச்சர்தாம் குண்டு தொளைக்காத எஃகுக் கவசச்சட்டை அணிந்துகொண்டு, பல்லாயிரக்கணக்கான காவலர்கள் புடைசூழ்ந்து காவல் காக்க, குண்டுகள் ஊடுருவாத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று பேசுகிறார் என்றால், இஃது ஒரு குடியரசு நாடு என்றோ, இங்குள்ள தலைமையமைச்சர் மக்கள் நலம் கருதுகிறவர் என்றோ கூறவியலுமா என்பதைத் தேசியம் பேசும் திருடர்கள் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

அண்மையில் திருவையாறு இசை விழாவிற்கு வரவிருந்த இந்நாட்டின் தலைமை அமைச்சர் வருகைக்கு இரு நாள்களின் முன், தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள குடமுருட்டி ஆற்றின் பாலத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதை வெடிக்கச் செய்தவர்கள் 'உழவர்கள் விடுதலை இயக்கம்' என்றும் 'தமிழக விடுதலைப் படை' என்றும் செய்தித்தாள்களில் செய்தி வந்தது. யார் இந்தக் குண்டை வைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, நம் இந்திய ஆட்சித் தலைமையைப் பற்றி வெட்கித் தலை குனியத்தான் வேண்டும்.

“காவிரி வறண்டு கிடக்கும்போது, இராசீவ் காந்தியே, தியாகராயர் திருப்போற்றி விழாவுக்காக உங்கள் வருகை தேவைதானா?" என்றும்,

"இராசீவ் காந்தி ஓர் இந்தி வெறியர், அவர் இலங்கைத் தமிழர் சிக்கல் குறித்துப் புறக்கணிப்பாக இருக்கிறார்" என்றும் குண்டு வெடித்த பாலத்துக்கு அருகில் கிடைத்த அறிக்கைகளிலும், சுவரொட்டிகளிலும் செய்திகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இவற்றில் உள்ள கேள்வியும், கருத்தும் ஞாயம் அற்றனவென்று கருதிவிட முடியாது. இங்குள்ள இலக்கக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இருக்கின்ற உணர்வுதான் அது.

வெறும் விளம்பரத்தாலும், வேடிக்கை விழாக்கள், விளையாட்டுகள் போலும், பணக்காரப் பொழுதுபோக்குகளாலும் இந்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள், உழவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் வயிறு நிரம்பிவிடாது. ஆட்சி என்பது அவர்களுக்காகத்தான் - பெரும்பான்மையும் இருக்க வேண்டுமே தவிர, வடையும், பொங்கலும் நெய் வழிய வழிய முக்கிவிட்டுப் பண்பாடு, கலை, என்று வாய்ப்பாட்டுப் பாடிக்கொண்டும் அதற்குத் தக ஆடிக் கொண்டும், பட்டாடை உடுத்திக்கொண்டு அவற்றைக் கேட்டும் பார்த்தும் தலைகளை ஆட்டிக் கிறுகிறுத்துப் போகும் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அன்று என்று எச்சரிக்கை செய்யத்தான் இந்தக் குடமுருட்டிப் பாலத்தில் வெடித்த குண்டு என்று அதிகார வெறியர்கள் எண்ணிக்கொள்க!

காவிரி நீரின் ஒப்பந்தத்தை ஓர் ஒழுங்கு செய்து, தமிழக உழவாண்மைக்கு உயிரூட்ட ஒரு முயற்சியும் செய்யாத அதிகாரிக் கிறுக்கர்கள், இசைவிழாவில் வந்து பாடி ஆடிக்களிக்க வேண்டுவது தேவைதானா என்னும் வினா, இராசீவ் காந்திக்கு உண்மையான அகக் கண்களைத் திறந்திருக்க வேண்டும்.

அதேபோல், இலங்கையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் மிகக் கொடுமையாகச் சாகடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல் வாயளவில் பேசிவிட்டுச் செயலில் மறைமுகமாகச் சிங்கள ஆட்சி வெறியன் செயவர்த்தனன் கையை வலுப்படுத்திக் கொண்டிருப்பதும், அதே பொழுதில், ஆப்பிரிக்க இனமக்களுக்காகவும், அராபிய மக்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிப்பதும் எத்துணையளவு கரவான கொடுமை! இதை இராசீவுக்கு நினைவூட்டத்தான் குடமுருட்டிப் பாலத்தில் குண்டு வெடித்தது!

ஆனால், பல்லாயிரக் கணக்கான கருவிக் காவலர்களின் அதிகாரச் சுவர்களுக்குப் பின்னால், இந் நாட்டின் வல்லதிகாரி இராசீவ் காந்தி திருவையாறு வந்ததும், தியாகராயர் திருப்போற்றி விழாவைத் தொடங்கி வைத்ததும், வழக்கம்போல் நடந்தேறி விட்டன.

இந்த நாட்டின் தலைமை அதிகாரம் பார்ப்பனர்க்கே என்பதை மெய்ப்பிக்கும் அளவில், தியாகராயர் பெயராலும் கலை, பண்பாடு என்னும் புனைவாலும் பார்ப்பனக் கும்பலுக்கு நடுவில், பார்ப்பனீய, முதலாளிய, மதவெறி, இந்திவெறி முதலிய உணர்வுகள் கொண்ட இரண்டுங்கெட்ட, பார்ப்பனத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி திருவையாற்றில் உள்ள பார்ப்பன அதிகாரி ஒருவரின் வீட்டில் உணவுண்ண இசைந்திருக்கிறார் எனில், இந் நாட்டு மக்களுக்கு உண்மையான விடிவு எவ்வாறு கிடைக்கப் போகிறது?

தலைமையமைச்சர் ஒருவர் தமக்குக் கீழுள்ள அதிகாரி ஒருவரின் அதுவும் அய்யர் ஒருவரின் வீட்டில் உணவுண்ணுவது என்றால், இந் நாட்டின் அரசியக்கம் எப்படிச் சரியாக நடக்க முடியும்? ஊழல் எவ்வாறு ஒழியும்? நேர்மை எங்ங்ன் விளையும்?, நடுநிலையாளர் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இவை எல்லாவற்றுக்குமான ஒட்டுமொத்த எச்சரிக்கைதான் குடமுருட்டிக் குண்டு! அந்தக் குண்டு திருவையாற்றில் மட்டுந்தான் வெடிக்கலாம் என்பது நாட்டு நிலையாக இல்லை. பஞ்சாபில் வெடித்துக் கொண்டுள்ளது! அசாமில் வெடித்தது! மிசோராமில் வெடித்தது! நாகலாந்தில் வெடித்தது! வங்காளத்தில் வெடித்தது! குசராத்தில் வெடித்தது! திரிபுராவில் வெடித்தது! இன்னும் பல இடங்களில் வெடிக்க உள்ளது! எழுச்சி கொண்டுவிட்ட இத் தொடர் நிகழ்ச்சியை இனி வாயால் ஊதி அணைத்துவிட முடியாது.

எந்நாட்டிலும், எப்பொழுதும், புதுமைப் புரட்சிக்கு ஆதரவாக எப்படி மக்கள் பலர் உள்ளார்களோ, அப்படியே அதற்கு எதிராகவும் ஆட்சிக்குச் சார்பாகக் கைத்தாளம் போடவும் மேல்மட்ட வாழ்க்கையினர் இருக்கவே செய்வர். அவர்களை வைத்து மட்டும் ஆட்சியினர் மதிமயங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையே இக் குடமுருட்டிக் குண்டு நிகழ்ச்சி!

— தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி 1986