வேண்டும் விடுதலை/தென்மொழி, தமிழ்நிலம் ஆசிரியர் தமிழ்நாட்டு பிரிவினை உணர்வைத்

 
தென்மொழி, தமிழ்நிலம் ஆசிரியர் தமிழ்நாட்டுப்
பிரிவினை உணர்வைத் தூண்டுகிறார்!
நடுவணரசின் கண்டனம்!


• அவரின் எழுத்துகள் வன்முறையைத் தூண்டுவனவாக இருக்கின்றன!

• அவர் எழுத்துகளை ஆராய்ந்த நடுவணரசின் உசாவல் குழு அவரைக் கடுமையாகக் கண்டிக்கிறது!

• அக்குழுவின் முடிவை, நடுவணரசின் செய்தித்தாள் கழகமும் ஏற்றுக்கொள்கிறதாக அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது!

நடுவணரசின் செய்தித்தாள் கழகத்தின் (Press Council of India) சார்பில், தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றச் சாட்டுகளை ஆய்வதற்காகக் கடந்த அக்தோபர் 28-ல் ஐதராபாத்தில் ஓர் ஆய்வுக் குழு அமைக்கப் பெற்றிருந்தது.

அக்குழு, தன் ஆய்வு அறிக்கையையும் இறுதியான தீர்ப்பு முடிவையும் அரசுக்குக் கொடுத்திருந்தது. அதனடிப்படையில் செய்தித்தாள் கழகம், நவம்பர் 10 ஆம் பக்கல் அத்தீர்ப்பு அறிக்கையை ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பித் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. அறிக்கையின் ஆங்கில வாசகத்தையும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கீழே தருகிறோம்.

எத்தகைய சூழ்நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் அரசு நடவடிக்கைக்குக் கவலைப்படாமல் தமிழின முன்னேற்ற முயற்சிகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. என்பதை அன்பர்கள் தெளிவாக, இவ்வறிக்கையினின்று விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இந்தச் சூழ்நிலையில், நம் இயல்பான முயற்சிகளுக்காக அரசு எந்த அளவு தண்டனை கொடுத்தாலும் நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள அணியமாகவே இக்கடுமையான, அஞ்சத்தக்க நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். அப்போக்கில் இன்று போல் என்றுமே உறுதியுடன் இருப்போம் என்பதை அன்பர்களுக்கும் அதே பொழுது அரசுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி, ஐதராபாத்தில் நடந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை வருமாறு:-

தமிழ் மாத இதழ் 'தென்மொழி' தமிழ்க்கிழமை இதழ் 'தமிழ் நிலம்’ ஆகியவற்றின் மேல் அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறிய குற்றச்சாட்டுகளின்படி, நடுவணரசின் செய்தித்தாள் கழகம் 1986, அக்டோபர் 28 இல் ஐதராபாத்தில் எடுத்த தீர்மான முடிவு.

கடந்த 1986, சனவரி 17-இல் அரசின் (தகவல்) மற்றும் செய்தி பரப்புத்துறை அமைச்சகம், தமிழ் மாத இதழான ‘தென்மொழி' தன் சூலை - ஆகத்து 1985 வெளியீட்டிலும், தமிழ்க்கிழமை இதழான ‘தமிழ்நிலம்' தன் 1985 சூலை 28 வெளியீட்டிலும், அவற்றின் வாசகர்களிடையில் பிரிவினை நோக்கத்தைத் தம் ஆசிரியவுரைகளில் வெளிப்படுத்தியிருந்தன என்று, ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இவற்றுள், முதல் வெளியீட்டில் இலங்கை அரசாலும், அதன் பாதுகாப்புப் படைகளாலும் கொடுமைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாத திரு. இராசீவ் காந்தியின் நடவடிக்கையைத் திறனாய்வு செய்திருக்கிறது. இரண்டாம் வெளியீட்டில், தமிழின் முன்னேற்றத்ததிற்கு முடிவான தீர்வு இறைமை பெற்ற தமிழ்நாட்டு அரசை அமைப்பதே என்று கூறப்பெற்றிருக்கிறது. அத்துடன் தமிழகத் தலைவர்களைத் தனித்தமிழ் நாட்டைத் தனியரசாக உறுதி செய்ய அறைகூவி அழைக்கிறது.

இச் செய்தி கடுமையானது என்று கருதப்பட்டதால், அவ்விதழ்களின் ஆசிரியர் மேல் அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்தற்குக் காரணம் காட்டுமாறு அறிக்கை கொடுக்கப்பட்டது.

அதற்கு ஒரு முழுத் தொகுப்பான எழுத்துரை விடையாகக் கொடுக்கப்பட்டதில், அவ்விதழ்கள் தமிழர்களுக்கு தம் முந்தைய வரலாற்றை அறிவிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைப் பிறவினத் தாக்குதல்களிலிருந்து காக்கும் எண்ணத்துடனும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கருத்துடனும் அவை எழுதப் பெற்றனவாகக் கூறப்பட்டது. அத்துடன் அவர்களின் மொழி, இலக்கியம் பண்பாடு ஆகியவை பிறவினத்தவரால் அழிக்கப்படுவதாகவும், அவற்றைக் காப்பது தங்கள் கடமை என்றும் கூறப்பெற்றது. மற்றபடி, தமிழரல்லாத பிற இனத்தவரின் உணர்வுகளை ஊறுபடுத்துவது தங்கள் நோக்கமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தி, 1986 செப்டம்பர் 18-இல் புதுத்தில்லியில் மேற்படி கழகத்தின் உசாவல் குழுவில் கருத்தாய்வு செய்யப்பட்டது.

அக்குழுவின் உசாவலுக்கு முறையீட்டாளரோ குற்றஞ் சாட்டப்பட்டவரோ நேரில் வரவில்லை.

எனவே, பதிவில் இருந்த செய்திகளை மட்டும் நன்கு ஆய்ந்து பார்த்ததில், அவ்வாய்வுக் குழு, குற்றஞ்சாட்டப் பெற்ற அக்கருத்துரைகள், எல்லா வகையான செய்தியிதழ் நெறிமுறைகளையும் வரைமுறைகளையும் அல்லது. இந்நாட்டுச் சட்ட முறைகளையும் வலித்தமாக மீறுவனவாக முழு மனத்துடன் முடிவு செய்தது. அவை நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப் பரப்பத் தூண்டுவனவாகவும், நாட்டு ஒற்றுமைக்கு ஏதம் விளைவிப்பனவாகவும் உள்ளன. என்று ஆய்வுக்குழு தீர்மானித்து, இவ்விதழாசிரியரைக் கண்டித்தது.

செய்தியிதழ்க் கழகமும் அவ்வாறே முடிவு செய்கிறது.

- தென்மொழி, சுவடி 22 ஓலை 12, 1986

தமிழ்நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப்
பெருஞ்சித்திரனார் தூண்டிவருகிறார்.

அண்மையில் நடுவணரசுச் செய்தி ஒலி - ஒளிபரப்புத்துறை அமைச்சகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் மேலும், அவர் தென்மொழி, தமிழ்நிலம் ஆகிய இதழ்களில் எழுதிவரும் பாடல்கள், கட்டுரைகள், பேச்சுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேலும் நேரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளது.

நடுவணரசுச் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திலிருந்து, அரசுச் செயலர், திரு. சி.டி. குலட்டி(G.D. Gulati) இந்திய அரசின் செய்தித்தாள் பேரவை(Press Council of India)க்கு கடந்த 17.1.1986ஆம் பக்கல் எழுதிய குற்றச்சாட்டு மடலில், ‘குறிப்பிடப்பெற்ற பின்வரும் இதழ்களின் கட்டுரைகள், பாடல்கள் இவற்றின் பகுதிகள் அவற்றைப் படிக்கின்றவர்களுக்கு, நாட்டுப் பிரிவினை உணர்வாளர்களைத் தூண்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. அவை தொடர்பாக, அமைச்சகச் செய்தித்தாள் பிரிவகம் போதிய கருத்துச் செலுத்தித் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டியனவாக அமைச்சகச் செயலர் குறிப்பிட்டுள்ள பகுதிகள் வருமாறு:

தென்மொழி:

1. சுவடி 21, ஓலை : 10 (சூலை - ஆகத்து ‘85)
அட்டைப்பாடல் : ‘உரிமை ஒடுக்கமே விடுதலை. முழக்கம்'

2. மேற்படி இதழ் பக்கம் : 6
'சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு தோழியின் கடிதம்'

3. மேற்படி இதழ் பக்கம் : 17
வள்ளிவேள்வனின் பாடல் ‘மண்ணில் ஒங்குக உரிமை ஈழமே'

4. சுவடி 21, ஓலை : 11 (ஆகத்து - செப். ‘85)
அட்டைப்பாடல் : ‘வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்’

5. சுவடி 21, ஓலை 12
அட்டைப்பாடல் : ‘அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக'

தமிழ்நிலம்: இதழ் எண். 56 (28.4.1985)

1. முகப்புக் கட்டுரை: இந்தக் கட்டுரையில், இலங்கை பற்றிய செய்திகளில் தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது. இராசீவ் காந்தி செயவர்த்தனனுக்குத் துணை போகின்றார் என்ற பகுதிகளும் கரடிப்பட்டி க. கண்ணன் எழுதிய கட்டுரைப் பகுதிகளும்.

2. இதழ் எண். 56 (28.7.1985)
'திம்புப் பேச்சில் தென்பில்லை' என்னும் முகப்புக் கட்டுரையும், 3-ஆம் பக்கத்தில் வெளிவந்த உ.த.மு.க. மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகளும்.

3. மேற்படி இதழ் : பக்கம் 5
பக்கம் 5-இல் வெளிவந்த மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் 'தமிழ்நாடும் தமிழீழமும் உடனே அமைந்தாக வேண்டும்' என்னும் மடலும், மடற் பகுதிகளும்.

4. இதழ் எண். 62 (1.1.8.1985)
முகப்புப் பக்கச் செய்தி. இதில் செயவர்த்தனாவை இராசீவ் காந்தி நல்லவராக்கப் பார்க்கிறார். தமிழர்களின் ஒரே போராட்டம். தமிழீழம் அல்லது தமிழ்நாட்டுப் போராட்டமே எனும் கருத்துகள்.

5. இதழ் எண். 66 (24.11.1985)
பக்கம் 2. 'குமுதத்திற்கு ஒரு மறுப்பு மடல்' - தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. க. அன்பழகன் அவர்களின் பேச்சுப்பற்றி.

6. மேற்படி இதழ் பக்கம் 4:
'தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ்நாடு பெறுவதே' - கட்டுரை.

7. மேற்படி இதழ் பக்கம் 4: 'தமிழகத் தலைவர்களே! தமிழ்நாட்டை அமையுங்கள்' எனும், மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் மடல்.

இப் பன்னிரண்டு கட்டுரை, பாடல் பகுதிகளில் வெளியிடப் பெற்ற கருத்துகளின் மேலும், இவற்றை வெளியிட்ட இதழ்களாகிய தென்மொழி, தமிழ்நிலம் ஆகியவற்றின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் மேலும், 1978-ஆம் ஆண்டு செய்தித் தாள்கள் பேரவைச் சட்டம் பிரிவு எண். 14-இன் படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை 14 நாள்களுக்குள் காட்டவேண்டும் என்றும், அவ்வாறு காரணம் காட்டாவிடத்து எவ்வகையான மறு அறிவிப்பும் இல்லாமல் மற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியரின், சட்ட ஆய்வுக் குழு ஆராய்ந்து, தக்க விடையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

- தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி, 1986