வேண்டும் விடுதலை/விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும். தனித்தமிழ் நாடு கேட்பதும் தேச விரோதமன்று

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும்,
தனித்தமிழ் நாடு கேட்பதும் தேசவிரோதமன்று!

பாவலரேறு அவர்களின் அறிக்கை!


மிழ் இனம் கடுமையான - மிகக் கொடுமையான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டுக்காக உழைப்பவர்களெல்லாரும் ‘தீய சக்திகள்' என்றும், 'தேச விரோதிகள்'. என்றும் 'நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்' என்றும் குற்றஞ்சாட்டப் பெற்றுச் சிறைகளில் வைக்கப்பட்டு வருகிறார்கள். - அவர்கள். மேல் கறுப்புச் சட்டங்கள் பாய்ந்திருக்கின்றன.

அண்மையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், தமிழர்களின் அரசியல், பொருளியல், இனவியல், வாழ்வியல் உரிமைகளுக்காகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களாகிய பெருமைக்குரிய மருத்துவர் - இராமதாசு, பண்ணுருட்டி இராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், தலித் எழில்மலை முதலியவர்களால் சென்னையில் கூட்டப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 'தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில்', வெளிப்படுத்தப் பெற்ற ஞாயமான, உண்மையான கருத்துகளையும், கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத பார்ப்பனிய முதலாளிய அரசு, அத்தலைவர்களின் மேலும், அம்மாநாட்டில் பேசிய தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், கடல் தனசேகரன், மணியரசன், தியாகு முதலிய துணிவும் நேர்மையும் கொண்ட தமிழினத் தலைவர்கள் மேலும் தேசவிரோதம், சதி முதலிய கடுமையான சட்டங்களைச் சுட்டிக் குற்றவாளிகளாக்கி அவர்களைப் பொறுப்பில் ளிெவராதபடி சிறைப்படுத்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கதும் எதிர்த்துப் போராடத்தக்கதுமான ஒரு கொடுமையான அடக்குமுறையாகும்.

இலங்கையில், சிங்கள அரசின் கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் இன அழிப்புக்கும் ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தங்களுக்கென்று இறைமையுள்ள ஒரு தனித்தமிழ் ஈழ நாட்டை உருவாக்கிக் கொள்ளவும், தங்கள் உயிர்களையும் மதியாது, பலவகை அழிவுகளுக்கும் இடையில் எழுந்து போராடி வரும் விடுதலைப் புலிகளாகிய தமிழினப் போராளிகளைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவர்களைக் கொடுமையாளர்கள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் கொள்ளையர்கள் என்றும் இழிவுபடுத்தி அவர்கள் இயக்கத்தை இங்குத் தடைப்படுத்தியும், அங்கு நேர்ந்த கொடுமைகளுக்குத் தப்பி இங்கு வந்த இலக்கக் கணக்கான ஏதிலி(அகதி)களை இங்கிருந்து விரட்டியடித்தும் வருகின்ற செயல்களைக் கண்டித்து அவர்களின் நேர்மையான, ஞாயமான கோரிக்கைகளை எடுத்துப் பேசுவது, எப்படித் தேசவிரோதம் ஆகும்?

பாலத்தீனர்களின் விடுதலையைப் பற்றியும், தென்னாப்பிரிக்கர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றியும் இங்குள்ள தலைவர்களும் நாமும் பேசவில்லையா? அங்குள்ள மக்களுக்காகப் போராடி வரும் தலைவர்களான யாசீர் அராபத்தையும் மண்டேலாவையும் நாம் வரவேற்றும், பாராட்டியும் நம் இந்திய அரசு அவர்களுக்குப் பற்பல உதவிகளையும் பரிசுகளையும் வழங்கவில்லையா? அவையெல்லாம் தேச விரோதமில்லாத பொழுது, 'சதி'யில்லாதபொழுது, தமிழீழ விடுதலையைப் பற்றியும் தம்பி பிரபாகரனைப் பற்றியும் பேசுவது மட்டும் எப்படி தேசவிரோதமும் சதியும் ஆகும்?

இனி, இவையன்றித் தமிழ்நாட்டுக்கும் தமிழின மக்களுக்கும் ஞாயமாகக் கிடைக்க வேண்டிய அரசியல், பொருளியல், மக்களியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், கருத்துகள் கூறுவதும், கோரிக்கைகள் வைப்பதும எப்படிக் குற்றமாகும்? இவையெல்லாம் குடியரசு அமைப்பிலுள்ள ஒரு குடிநாயக ஆட்சியின் நடைமுறைகள் இல்லையா? தாக்கமுற்ற ‘பாதிக்க’ப்பெற்ற மக்கள் தங்கள் இன உரிமைகளையும், வாழ்வியல் உரிமைகளையும் பேசுவது எழுதுவது எப்படித் தவறாகும்? தமிழர்கள் இந்தியாவின் ஒரு தேசிய இனமில்லையா? இங்குள்ள மற்ற தேசிய இனங்களைப் போல இத்தமிழ்த் தேசிய இனமும் தன்னுரிமை கேட்பதும், இனி அதுவும் நிறைவேறாதபொழுது, தனிநாடு கேட்பதுந்தான் எப்படித் தேச 'விரோத' 'சதி' ஆகிவிடும்? அத்தகைய குரல் எழுப்புதல்கள், கோரிக்கை வேண்டல்களே குற்றம், சதி, தேச விரோதம் என்றால், குடியரசின், மக்களாட்சியின் இலக்கணம்தான் என்ன என்பதை ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

அண்மையில் இரும்புத் திரைக்குப் பின்னால், பொதுவுடைமைக் கொள்கை என்ற பெயரில் மக்கள் நலத்துக்கு எதிரான அனைத்ததிகார அடக்குமுறை ஆட்சி நடந்த உருசியா, அதன் நோக்கத்திற்கு எதிராகச் சின்னா பின்னப்பட்டுப் போய்விட்டது. இந்த உலக நாடுகளின் ஆட்சியாளர்களுக்கே ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தேசியத் தன்னுரிமை என்பது ஏதோ மக்கள் நலத்துக்கு மாறான கோட்பாடு அன்று. அப்படியே தன்னாட்சி உரிமை - தனிநாட்டுக் கொள்கை என்பதும் அரசியல் கொள்கைக்கே ஆகாத கோரிக்கையும் அன்று. மக்களரசின் படிநிலை (பரிணாம) வளர்ச்சியே அவை.

இந்தியா ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், ஏதோ மக்கள் நலம், நாட்டு நலம் கருதுகிறவர்கள் போலும், தன்னுரிமை. தன்னாட்சி அல்லது தனியாட்சி என்று கோருபவர்கள் மக்கள் நலன், நாட்டு நலன்களுக்கு மாறாகச் சிந்திப்பவர்கள் போலும் - ஆளும் வகுப்பினரால், அரசினரால் ஒரு மாயையான ஒரு தவறான எண்ணம் மக்களிடையில் உருவாக்கப்படுகிறது. இது மக்கள் நலனுக்கே எதிரான சிந்தனையாகும்.

வழி வழியாக அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடிமைப் படுத்தப்பட்டும் வரும் ஓர் இனம், தன்மான உணர்வு கொண்டு, தனக்குள்ள தான் இழந்துபோன வாழ்வியல் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், போராடுவதும் தவறு என்று எந்த அரசியல் நலச் சிந்தனையாளரும் இதுவரை கூறியதில்லை.

இக்கால் ஆட்சியிலுள்ள பார்ப்பனீய முதலாளிய ஆட்சியாளர்தாம் இதற்குக் குதர்க்கமான பொருளை எடுத்துக்கொண்டு மக்கள் நலத்துக்கு விரோதமான பொருளை அதற்குத் தந்து, மக்களிடையில் தவறான கருத்துப் பரப்புதலை உருவாக்கி வருகின்றனர். ஒற்றுமை என்பதும் ஒருமைப்பாடு என்பதும் அதிகாரத்தாலோ அடக்குமுறையாலோ, உருவாக்கப்படுவன அல்ல. அவை ஓர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களிடையில் தானே உருவாகி, உணர்வு அடிப்படையில் வளர்ந்து மலர்ச்சியடைய வேண்டிய ஓர் அரசியல் மெய்ம்மம் (தத்துவம்) ஆகும். இதை வெறும் கருத்துப் பரப்புதலாலும் (பிரச்சாரத்தாலும்) கலை, பண்பாட்டுக் கூத்துகளாலும் உருவாக்கிவிட முடியாது என்பதைத் தமிழக முதல்வர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நலக் கருத்துகளை அவை எந்த வடிவில் எந்தக் கோணத்தில் இருந்தாலும் அவற்றை வளர விடுவதே நலமான மக்களாட்சிக் கோட்பாடாகும். ஆளும் வகுப்பினர் தங்கள் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடுமே என்னும் அச்சத்தால் அவற்றை அடக்கி ஒடுக்க முற்படுவார்களானால், அவை வெட்ட வெட்டத் தழைக்கும் வெள்வேல மரம் போல் பூதாகாரமாக வளர்ந்து, ஆட்சி அதிகாரங்களையே ஆட்டங்காணச் செய்யும் என்பதே மக்களாட்சி வரலாறாகும்.

இதை நன்றாக உணர்ந்து, அதிகாரமும், காவல்துறையும் தம் கையில் உள்ளது எனும் எக்களிப்பில் முதலமைச்சர் செயலலிதா வரம்பு மீறிய அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் கடைப்பிடித்து, மக்கள் நலம் கருதும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் சிறைப்பிடிப்பதும், அவர்கள் மேல் வீணான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறித் தண்டிக்க முற்படுவதும் ஆட்சியின் எதிர்க் காலத்தையே சிதைப்பதாகும் என்று எச்சரித்துக் கூற விரும்புகிறோம்.

எனவே நலுமான அரசியல் நடைமுறைகளுக்கு வழியமைத்துக் கருத்து வேறுபாடுகளைக் கருத்தளவிலேயே எதிர்கொள்ள முயலுமாறு முதலமைச்சரையும் ஆளும் வகுப்பினரையும் அன்புடனும் கடமையுணர்ச்சியுடனும் கேட்டுக் கொள்வதுடன், சிறைப் படுத்தியுள்ள தலைவர்களை விடுவிக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.

—தமிழ்நிலம், இதழ் எண். 159, அத்தோபர், 1992

பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
அவர்களின்
நூல்கள்


பாவியக்கொத்து 22.00
ஐயை 30.00
கழுதை அழுத கதை 35.00
கொய்யாக்கனி 25.00
கற்பனை ஊற்று 40.00
திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 1 100.00
திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 2 120.00
திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 3 120.00
திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 4 100.00
வேண்டும் விடுதலை 120.00
பெரியார் 40.00
கணிச்சாறு(பெருஞ்சித்திரனார் பாடல்கள்)
முதல் தொகுதி 50.00
2ஆம் தொகுதி 90.00
நூறாசிரியம் 100.00
தன்னுணர்வு 5.00
பாவேந்தர் பாரதிதாசன் 25.00
இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் 5.00
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் 100.00
சாதி ஒழிப்பு 40.00
செயலும் செயல் திறனும் 90.00
ஓ!ஓ! தமிழர்களே! 11.00
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 10.00
நெருப்பாற்றில் எதிர் நீச்சல் 6.00
இளமை விடியல் 50.00
இட்ட சாவம் முட்டியது 10.00
மொழி ஞாயிறு பாவாணர் 50.00
எண் சுவை எண்பது (அச்சில்)
மகபுகுவஞ்சி (அச்சில்)
அறுபருவத் திருக்கூத்து (அச்சில்)
கணிச்சாறு (பெருஞ்சித்திரனார் பாடல்கள்)
- (தொகுதி 3 முதல் 8 வரை) (அச்சில்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள் (அச்சில்)
வாழ்வியல் முப்பது (அச்சில்)
தமிழிழம் (அச்சில்)
மற்றும்
பாவலரேறு நினைவேந்தல் மலர் (முதலமாண்டு) 80.00
பாவலரேறு வாழ்க்கைச் சுருக்கம் 40.00
மொழிஞாயிறு பாவாணர் மலர் 100.00