வேண்டும் விடுதலை/தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக் குரல் முழக்கப்பட வேண்டும்

தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கைக் குரல் முழக்கப்பட வேண்டும்!


ந்தியாவில் உள்ள தேசிய இன மக்கள் உரிமை எழுச்சிக்காகப் போரிட வேண்டிய காலகட்டம் இது. தில்லியின் வல்லாட்சியானது, இன்றைய நிலையில் அனைத்துத் தேசிய இனங்களின் தனிவளர்ச்சியை ஏதாமொரு வகையில் ஒடுக்கிக் கொண்டே வருகிறது. அசாமியரின் இன எழுச்சிப் போராட்டத்தையும், பஞ்சாபியரின் தன்னதிகாரக் கோரிக்கை எழுச்சியையும் தன் வல்லதிகாரக் கொடுங்கைகளால் கடுமையான அடக்கு முறைகளின் வழி, அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது தில்லி, தேசியம், ஒருமைப்பாடு என்னும் முதலாளியக் கோட்பாடுகளின் அடிப்படையில், மாநிலங்களின் நயன்மையான இன நலக் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதும், இழிவுபடுத்துவதும், படைத் துறைகளையும் காவல்துறையையும் கொண்டு வன்முறைகளை ஏவிவிடுவதும் தில்லியின் வழக்கங்களாகி விட்டன. பொதுவாகவே, இந்தியா தன்னுரிமை பெற்ற நாளிலிருந்து, அதன் ஓரினக் கருத்துக் கோட்பாடு, ஆரியத்தின் சார்பாகவும், அவ்வினத்தின் சாதிய, மதவியற் கொள்கைகளை நிலைநிறுத்தும் முயற்சியாகவுமே, இருந்து வருகிறது.

தென்னாட்டுத் திரவிட இனங்களுக்கிடையில், இதுபற்றிய ஒரு முணுமுணுப்பு இடை நாளிலிருந்தே இருந்து வந்தாலும், போதிய இனநலக் கருத்தெழுச்சிக்குரிய சரியான வடிவம் கிடைக்காமல், தேசியப் போர்வையில், அவை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் தில்லியின் கரவான போக்கை, இக்கால் தென்மாநிலங்கள் நன்குணர்ந்து வருகின்றன. தேசிய இனங்களின் உரிமைக் கிளர்ச்சிகளை வித்திட்டு வளர்த்தெடுக்க வேண்டிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கூட, ஏனோ தன்னைப் பிற்போக்கு ஆற்றல்களுடன் இணைத்துக் கொண்டும், அக்கட்சிக் கோட்பாடுகளுக்குப் புதுவகையான விளக்கங்களைக் கூறிக் கொண்டும் தில்லியின் இன எழுச்சி ஒடுக்கல் முறைக்கே தன் மறைமுக ஆதரவைக் கொடுத்து வருகிறது.

இலங்கைத் தமிழர் சிக்கல் அனைத்துலகப் பார்வைக்கு வளர்ந்துவிட்ட நிலையில், தமிழ்த் தேசிய இனம் ஒரு புதிய எழுச்சி பெற்றுத், தமிழர்களுக்கென ஒரு தனிநாட்டைச் சமைத்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கால நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத் தமிழர்களும், என்றோ எழுப்பப்பட்டுப் பலவகையான அரசியல் சட்டச் சூழல்களால் கைவிடப்பெற்ற அல்லது தள்ளி வைக்கப் பெற்ற, தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நாம் கருதுகிறோம்.

இக்கால் உள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு, ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சியைக் குறைகூறுவதும், அதை ஆட்சியிறக்கம் செய்து விட்டுப் பதவியை அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே நோக்கமாயிராமல், தில்லிப் பிணைப்பிலிருந்து ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டை விடுவிப்பதையே முழு நோக்கமாகக் கொண்ட போராட்டத்தைத் தொடங்குவதே, தம் தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அப்போராட்ட வெற்றியில்தான் எதிர்காலத் தமிழினத்தின் மறுமலர்ச்சியே அடங்கியுள்ளது என்பதைத் தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். அத்தகைய எழுச்சிக் குரல் எந்த அணியிலிருந்து, எந்த மூலையிலிருந்து வந்தாலும், அவ்வணியுடன் நம் இருகைகளையும் பிணைத்துக் கொள்ள நாம் என்றும் அணியமாயிருக்கிறோம் என்பதை இப்பொழுதைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தமிழ்நிலம், இதழ் எண் : 30, சனவரி, 1984