வேண்டும் விடுதலை/தேசிய இனங்களின் விடுதலைக் கோரிக்கை தீவிரமடைகின்றது

தேசிய இனங்களின் விடுதலைக்
கோரிக்கை தீவிரமடைகிறது!


தென்னார்காடு மாவட்டத்தில் திருமுதுகுன்றம் - திருச்சி சாலையில் உள்ள பெண்ணாகடம் என்னும் ஊர், சமயச் சார்பிலும், அரசியல் சார்பிலும் வரலாறு படைத்த ஊர். பாடல் பெற்ற திருத்தலமாகிய அதில்தான் உழவர்களும் தொழிலாளர்களும் கடந்த காலத்தில் கிளர்ந்தெழுந்து புரட்சிக்கொடி ஏந்தி, முதலாளியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போரிட்டனர்.

அந்தப் புரட்சிப் போராட்டத்தின் முதல் புரட்சியாளராய், முழுமைப் போராளியாய் விளங்கிய தீவிரப் பொதுவுடைமையாளர் புலவர் கலியபெருமாள் அவர்களும், அவர் குடும்பமும் அந்த மண்ணில்தான் வீரவரலாறு படைத்தனர். பொதுவுடைமைப் போர் புரிந்த கலியபெருமாளின் குடும்பத்தையே கொலைக் குற்றம் சாட்டிப் பதினைந்தாண்டுகள் சிறைவைத்தது அந்த நாளின் மக்கள் உரிமையை மதிக்காத மாநில அரசு! ஆம்! அந்த அரசு ஒரு திரவிட அரசே! இன்னும் சொன்னால் தமிழன் அரசே! ஆனாலும் அதிகார வெறியாலும் ஆளுமை அங்காப்பினாலும் அந்த அரசு அவ்வாறு செய்தது! கலியபெருமாளும், அவர் துணைவியார் திருவாட்டி வாலாம்பாள் அம்மையார், அவர் மக்களாகிய வள்ளுவன், நம்பியார் என்னும் இரண்டு குலக்கொழுந்துகளும், கலியபெருமாளின் தம்பி, வாலாம்பாளின் தமக்கையார் ஆகிய அனைவரும் முதலாளியக் கொடுமைகளுக்குப் போர்க்கொடி ஏந்திப் போரிட்டனர். பொதுவுடைமைப் போரில் அவர்கள் பதினைந்தாண்டுச் சிறைசென்ற பெருமை அவர்களைச் சேரக்கூடாது என்று நினைத்த தன்னதிகாரத் தந்நலத் தான்தின்னிக் கொடுமையர்கள் அவர்களைக் கொலைக்குற்றவாளிகள் எனச் சிறையில் அடைத்தனர். வரலாறு எப்பொழுதும் கண்மூடிக் கிடப்பதில்லை; அஃது எப்பொழுதும் தூங்குவதே இல்லை. அறிதுயில் கிடக்கின்ற அது, பாசறை வீரன் போல அடிக்கடி விழித்துக் கொள்ளும்! வெகுண்டு சீறும் ! வரலாற்றை யாரும் தூங்கவைத்துவிட முடியாது! ஏனென்றால் உண்மைதான் வரலாறாக மாறுகிறது.

அத்தகைய வீரவரலாறு படைத்த மண்ணில் தான் வரும் மே மாதம் 5, 6ஆம் ஆம் நாள்களில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடும் நடைபெற இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாநாட்டைத் தமிழகத்தின் முற்போக்கு இளைஞர் அணி நடத்துகிறது. அதில் தீவிரப் பொதுவுடைமை (மார்க்சிய இலெனினிய) வீரர் கலியபெருமாள் அவர்களும், பெரியார் சம உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து அவர்களும், உலகத் தமிழின முன்னேற்றக் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மக்கள் உரிமைக் கழகத் தலைவர்களும், இன்னும் பிற முகாமையரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இரண்டு நாள் மாநாட்டிலும் தலைவர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றியும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை முயற்சிகள் பற்றியும் தீவிரமாகக் கலந்து ஆய்வு நிகழ்த்தி, இரண்டாம் நாள் மாநாட்டு இறுதியில் முடிவான எதிர்காலத் திட்டங்களை வெளியிட உள்ளனர்.

தமிழ்த் தேசிய இன விடுதலை வேட்கை கொண்ட அனைத்து அணிகளின் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் அனைவரும் தவறாமல் மாநாட்டில் பங்குகொள்ள வேண்டுகின்றோம்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அறிஞர்கள், வீரர்கள், வரலாறு படைக்கப் போகும் மறவர்கள் அனைவரின் பெயர்ப்பட்டியலும், நிகழ்ச்சி நிரலும் அடுத்து வெளிவரும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 34, மார்ச்சு, 1984