வேமனர்/இறப்புக்காகப் பிறந்திலர்


இயல்-1
இறப்புக்காகப் பிறந்திலர்
நீ சாவதற்காகப் பிறக்கவில்லை

-கீட்ஸ்

ந்தவிதச் சோதனைக்குட்படுத்தினாலும் வேமனர் ஒரு பெருங் கவிஞர் என்பதற்கு ஐயமில்லை; மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்கைக்கொண்டு மதிப்பிட்டாலும் அவர் முற்கால, இடைக் கால, தற்காலத் தெலுங்குக் கவிஞர்களுக்குள் ஒரு மாபெருங்கவிஞராகவே திகழ்கின்றார். வேறு எவரும், தேன்குரலோடு திகழ்ந்த போத்தனருங்கூட, இவர் அளவுக்குப் பாதிகூடச் செல்வாக்குப் பெறவில்லை. வேமனர் சாதாரண மக்களிடையே ஓர் அரசர் போல் திகழ்கின்றார்; அவர் பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களிடையே அவர்களறிந்த மொழிகளிலேயே பேசுகின்றார். அவர்களும் அவரிடம் மனந்திறந்தே பேசுகின்றனர். அவர்கள் சில சமயம் அவருடைய கண்டனமொழியின் தாக்குதலுக்கு அஞ்சி விலகலாம். ஆயினும் அவர் நன்னேக்கம் கொண்டவர் என்பதை அறிவார்களாதலின், அவர்கள் அவரை மிக விரும்பி நேசிக்கின்றனர். கவிஞர் என்ற முறையில் அவரை விரும்பும்பொழுதே, அவர்கள் அவரை மெய்யறிவு பெற்றவர் என்றும் ஞானி என்றும் உயர்வாகவே கருதுகின்றனர்; ஒரு முக்கிய செய்தியைக் கணக்கிடுவதற்கோ, ஓர் உண்மையை வற்புறுத்துவதற்கோ அல்லது ஒரு நீதியைக் கோடிட்டுக் காட்டுவதற்கோ அவர் அடிக்கடி மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெறுகின்றார். இந்திய மொழிகள், இலக்கியங்கள் இவற்றைக் கற்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் பக்தியுடன் கழித்த ஜி. டி. கிரியர்ஸன் என்ற மேனாட்டு வித்தகர் வேமனரை "இன்று தெலுங்கு எழுத்தாளர்கள் அனைவரிலும் மிக மிகச் செல்வாக்குடையவர் என்றும், அவர் காரணமாகக்குறிக்கப் பெறாத பழமொழியோ அல்லது உயிர்நிலையான கூற்றோ இல்லை" என்பதைக் கண்டுள்ளார்.

வேமனரின் புகழும் செல்வாக்கும் ஆந்திரத்தின் சாதாரண ஆண்மக்கள் பெண்மக்கள் இவர்களின் எல்லைக்குள் மட்டிலும் அடங்கியவையல்ல; அண்டைப்புறப் பகுதிகளிலும் அவை நீண்டு பரவிக்கிடந்தன. நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அவரது பாடல்கள் தமிழிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பெற்று விட்டன. பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்றவர்களில் ஒரு கால் அவர் முதலாவது தெலுங்குக் கவிஞராக இருந்துமிருக்கலாம், அல்லது இல்லாமலுமிருக்கலாம்; ஆனால் வேறு எந்தத் தெலுங்குக் கவிஞரும் இவரைப்போல் மிகப்பல மொழிகளில் பெயர்க்கப்பெற வில்லை என்பது மட்டிலும் உறுதி.

ஆயினும், இந்த நூற்றாண்டின் இருபது ஆண்டுவரையில் வேமனர் தெலுங்கு இலக்கிய உலகத்தினரின் கவனத்திற்குக் கீழேயே இருந்தார் என்று சொல்லலாம். இந்தக்காலப்பகுதிவரை எந்தத் தெலுங்குக் கவிஞரோ, புலவரோ, திறனாய்வாளரோ அல்லது இலக்கிய வரலாற்று அறிஞரோ வேமனரைத் தற்செயலாகவும் வெறுப்பாகவும்கூட எங்கும் குறிப்பிட்டிலர். முதல் இரு தெலுங்கு இலக்கிய வரலாற்றறிஞர்களாகிய குருசாடை சீராம மூர்த்தியும், கந்துக்கூரி வீரேசலிங்கமும் தம்முடைய வரலாற்று நூல்களினின்றும் அவரை ஒதுக்கி வைப்பதே பொருத்தமாகும் என்று கருதியவர்கள். சீராமமூர்த்தியின் நூலைப் போலன்றி வீரேச லிங்கத்தின் முதன்முதலாக 1899-இல் வெளிவந்த 'ஆந்திர கவுல சரித்திரமு' (தெலுங்குக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு) என்னும் நூல் பலவற்றையும் உள்ளடக்கிய நூலாக அமைந்துள்ளது; அதில் சில்லறைக் கவிஞர்கட்கும் புகழ்பெருத கவிஞர்கட்கும் கூடப் பல பக்கங்கள் ஒதுக்கப்பெற்றுள்ளன; ஆனால் வேமனரை விடு படச்செய்துவிட்டது. 1917-இல் வெளிவந்த அதன் இரண்டாவது பதிப்பில் சில சேர்க்கைகளுடன் அதில் காணப்பெறும் கவிஞர்களின் தொகை 220ஆகும்; இப்பதிப்பிலும் வேமனர் இரக்கமற்று ஒதுக்கி விடப்பட்டுள்ளார்.

இன்னும் சரியாகச் சொல்லப்போனால், சீராமமூர்த்திக்கோ அல்லது வீரேசலிங்கத்திற்கோ மிகவும் முன்னதாக 1829-இல் காவலி வேங்கட்டராமசுவாமி என்பார் 'தக்கணத்துக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற தன் நூலை வெளியிட்டார். அவருடைய சொந்தக் கூற்றுப்படியே "நம்பகமான ஆவணங்களினின்றும் தொகுக்கப்பெற்ற இந்தியத் தீவக்குறையிலடங்கிய (peninsula) பல்வேறு மாநிலங்களில் பெரும்புகழுடன் திகழ்ந்த மேன்மைபொருந்திய முற்கால இக்காலக் கவிஞர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டது" இந்நூலாகும். இந்திய எழுத்தாளர் ஒருவரால் தற்செயலாக ஆங்கிலத்தில் முதன்முதலாக எழுதப்பெற்ற இந்நூல் தெலுங்குக் கவிஞர்களைப்பொறுத்த வரையில் ஒருதலைச்சார்பாகவே உள்ளது. அது மொத்தத்தில் 108 கவிஞர்களைப்பற்றிக்கூறுகின்றது; அவர்களில் 47 பேர் தெலுங்குக் கவிஞர்கள்; இந்த 47 பேர்களிலும் வேமனர் ஒருவராக இல்லை.

வேமனரின் மொழி பண்டைய வழக்குடன் திகழ்ந்தாலும் அவருடைய சொல்வளம் கடினமாக இருந்தாலும், சிந்தனை வழக்கறிந்ததாக இருந்தாலும் அவர் ஏன் மௌனமாகப் புறக்கணிக்கப் பெற்றார் என்பதை நாம் அறியலாம். உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. அவருடைய மொழி தூய்மையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது; அவருடைய சொல்வளமோ தெளிவாகவும் மென்மையாகவும் உள்ளது; புதியனவாகவும் துணிவானவையாகவும் உண்மையுடையனவாகவும் உள்ள அவருடைய ஒப்புமைகள் அடி வானம் முழுவதையும் ஒளியுடையதாகச் செய்யவல்ல மின்வெட்டுக்களைப் போலுள்ளன. உயிர்ப்புடனுள்ள சிலகூறுகளில் அவருடைய சிந்தனை அவருடைய காலத்திற்கு மிக முந்தியதாக இருப்பதோடன்றி நவீன காலத்திற்கும் கூட முந்தியதாக உள்ளது.

உண்மையான பெருங்கவிதைகொண்டு திகழவேண்டிய பிறிதின் சார்பற்ற பல நுண்புலங்களைக் கொண்டுள்ளது அவருடைய கவிதை; ஆகவே அது மேற்கோளாகத் திகழ்வதற்குத் தகுதியுடையதாகின்றது. ஜேம்ஸ் அரசரின் விவிலிய நூலும் செகப்பிரியரும் தத்தமக்கிடையில் ஆயிரக்கணக்கான புதிய தொடர்களையும் மரபு மொழிகளையும் ஆங்கிலப் பேச்சுவழக்கிற்கு வழங்கியுள்ளனர். அங்கனமே தெலுங்குப் பேச்சுமொழியும் வேமனருக்கு மிகவும் கடப்பாடுடையதாகின்றது. வேமனர் அம்மொழிக்குப் புதியதொரு முனையையும், புதியதோர் ஆற்றலையும் கிட்டத்தட்ட புதியதொரு வேகத்தையும் தந்துள்ளார். இப்படியிருக்கத் தெலுங்கு இலக்கியவாணர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக மிகப்பிடிவாதமாக மௌன வெறுப்பைக்காட்ட வேண்டியதன் காரணம் என்ன? இந்த வினா கள்ளமற்ற முறையில் பலர்முன் வைக்கப்பெறுதல் வேண்டும். கள்ளமற்ற முறையிலும் அதற்கு விடைகாணலும் வேண்டும்.

முதலாவதாக, வேமனர் திருமறைகளையும், திருமறைகளில் கூறப்பெற்றுள்ள பலிகலையும், புராணங்களையும் அவற்றின் கட்டுக்கதை வீரர்களையும், தர்ம சாத்திரங்களையும் அவற்றின் சமமற்ற நீதிமுறைகளையும் ஏளனம் செய்கினறார். உண்மையிலேயே தெய்விக அருள் பெற்றதாகவும் தவறு செய்யாத மேலாண்மைக்குரியதாகவும் கூறப்பெறும் எல்லாச் சமயநூல் தொகுதிகளையும் அவமதிக்கின்றார். அவர் முற்றிலும் தெய்வத் திருச்சிலைகளை உடைத்தெறிபவர்; எல்லாவித வடிவங்களிலும் நடைபெறும் உருவ வழிபாட்டை இணங்காத முறையில் எதிர்த்து நிற்பவர்; அதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் கூறுபவர்களிடம் சிறிதும் பொறுமைகாட்டாதவர். சாதிமுறை அமைப்பினை நிலைநிறுத்த முயல்வோர்களிடம் விடாது போரிடும் ஒரு சமூகக் கலகக்காரர். மனிதனை எதிர்த்து மனிதன் மேற்கொண்டு வரும் மிகக்கொடிய குற்றமாகிய தீண்டாமை என்ற வழக்கத்தை வல்லந்தமாகவும் எதிர்த்து நிற்பவர். இவற்றின் காரணமாக மரபுச்சட்டம் மீறாத வைதீகர்களின் கண்களில் அவர் பாசாண்டராகவே, அதாவது கடவுளின் இருப்பை மறுப்பவராகவும் நம்பாதவராகவும் காணப்பெற்றார், அவருடைய பெயரைக் கூறினாலும் அது பாவகரமாகக் கருதப்பெற்றது.

இரண்டாவதாக, வேமனர் ஒரு சிவனடியாராக இருந்த போதிலும், இலிங்கம் தரித்தல், பட்டினி கிடத்தல், இரவு முழுவதும் உறங்காது விழித்திருத்தல், தல யாத்திரையை மேற்கொள்ளல் போன்ற புறப்பகுதிகளாகிய சிவ வழிபாட்டு மரபுகளை ஏளனம் செய்கின்றார். எடுத்துக்காட்டாக, இலிங்கத்தைத் தரித்திருப்பவர்கள் வஞ்சகர்களிலேயே மிகக்கீழானவர்கள் என்று பெயரிட்டுக் கூறும் அளவுக்கு அவருடைய இத்தகைய நடைமுறைகளின் கண்டனம் அமைகின்றது. பழைய எழுத்தாளர்களுள் சைவர்களாக இருப்போர் இயல்பாகவே சினமூட்டப்பெற்று அவர்களும் அவருக்கு எதிராக எழுந்த மௌன சூழ்ச்சியில் சேர்ந்து கொண்டனர்.

மூன்றாவதாக, வேமனர் சூத்திரர். தெலுங்கு அணி இலக்கணத்திற்கு ஒரு நிபுணர் என்று கூறப்பெறும் அப்பகவி என்பார் சூத்திரக்கவியொருவரின் நூலைப் பரிசோதனையின்றியே தள்ளுபடி செய்யப்பெறுதல் வேண்டும் என்ற விதியையும் வகுத்திருந்தார். 1829-இல் சென்னை சிவில் சர்வீஸைச் சார்ந்த சார்லஸ் ஃபிலிப் பிரெளன் என்பவரால் கல்லூரிப் பாடக்குழுவிற்காக அச்சிடப் பெற்ற 'வேமனரின் பாடல்கள்: நீதி, சமய, அங்கதப்பகுதி' என்ற தொகுப்பு நூலின் முதல் பதிப்பின் 500 படிகளில் 450 படிகள் எவரும் அறியாமல் மறையும் அளவுக்குச் சூத்திரக் கவிஞர்களின் மீது உயர்வகுப்பினைச் சார்ந்த மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். (எஞ்சிய ஐம்பது படிகள் பதிப்பாளர் படிகளென அவருக்கு இலவசமாக வழங்கப்பெற்றன. கல்லூரிப் பாடக்குழுவில் உயர் வகுப்பினைச் சார்ந்த சில பண்டிதர்களின் சுறுசுறுப்பான மறைமுக உடந்தையினால் மறைந்த படிகள் யாவும் பயன்படாத தாள்களாகச் சுருட்டப்பெற்றுக் கல்லூரி நூலகத்தின் வேண்டாத பொருள்கள் போடும் அறைக்குள் தள்ளப்பெற்றிருந்தன என்பதைக் கண்டறிவதற்குப் பிரெளனுக்குப் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. சென்னைப் பணியாளர்க் குழுவினைச்சார்ந்த மேஜர் ஆர். எம். மாக்னடால்டு என்பார் 1866-இல் 'சென்னை இலக்கிய அறிவியல் ஆய்வேட்டில்' எழுதுங்கால் இதைப்பற்றிச் சற்று விரிவாகவே விளக்கிச் சொல்லும் அளவிற்கு வேமனரைப் பற்றிய வெறுப்பு மிகக் கடுமையாகவும் பிடிவாதமாகவும் இருந்தது. இவ்விடத்தில் அவருடைய விளக்கவுரையை முற்றிலும் மேற்கோளாக காட்டுவது பொருத்தமாகும்.

டாக்டர் போப் என்பார் வேமனரின் எழுத்துகள் தெலுங்கு மக்களிடையே மிகவும் புகழுடன் திகழ்ந்தன என்று குறிப்பிடுகின்றார். அவருடைய செல்வாக்கு முழுவதும் ஆந்திரர்களின் எல்லைக்குள்ளேயே அடங்கிக்கிடந்தது என்பது என் நம்பிக்கை. அவர்களுக்குள்ளேயேயும் இந்து சமயத்தில் உண்மையான நம்பிக்கையுடைய கிறித்தவ சமயம் பரப்பும் துணைக் குரு கோலன்ஸோ என்பாரை எந்த உணர்வுடன் நோக்குகின்றாரோ அதே உணர்வுடன் வேமனரை மதிக்கின்றனர். அரசினர் பள்ளிகளில் வேமனர் முதன்முதலாகப் பாடநூலாக ஆக்கப்பெற்ற பொழுது இந்த உணர்ச்சி வெளிப்படையாகப் புலயிைற்று. ஆசிரியர்களும் மாணக்கர்களும் சேர்ந்தே ஆணையை மழுப்புவதற்குத் தம்மாலானவற்றையெல்லாம் செய்தனர். வகுப்புக்களுக்கென பாடமாக வைக்கப்பெற்ற அதனை வகுப்புக்களில் தொடங்குவது பல்வேறு சாக்குப்போக்குகளால் சில இடங்களில் ஒத்திவைக்கப் பெற்றது. சில பாடல்கள் தூய்மையற்ற சமயத் தாக்குதல்களைக் கொண்டுள்ளன என்று மற்ற இடங்களில் ஆசிரியர்களே சில பாடங்களை நீக்கும் பொறுப்பினை மேற்கொள்ளலாயினர். குறிப்பாகப் பிராமணர்கள் இந்த ஆசிரியர்மீது வெறுப்புக்கொள்ளுகின்றனர்; தம்முடைய நோக்கத்திற்கு ஆதரவாக அவருடைய நடையின் இழிவழக்கையும் சமயக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கிவராத அவருடைய பொருளையும் வெற்றி பெற்ற வெறுப்புடன் எடுத்துக் காட்டுகின்றனர்.

முப்பதாண்டுகட்குப் பின்னர் நிலைமை சீர்திருந்தவில்லை. வில்லியம்ஹோவார்டு காம்பெல் என்ற கிறித்துவச் சமயப் பரப்பாளர் 1898-இல் சென்னை கிறித்தவக் கல்லூரி இதழில் எழுதுகையில், 'பிராமணர்கள் எப்பொழுதுமே வெறுப்பான முறையில் அவருடைய (வேமனருடைய) கோட்பாட்டை எதிர்க்கவே செய்தனர். இன்னும் அவர்கள் அவருடைய நூல்களைப் பற்றி இழிவாகவே பேசுகின்றனர்' என்று பதிவு செய்திருப்பதினின்றும் இதனை அறியலாம்.

நான்காவதாக, குறுகியபொருளில் வேமனரை ஒரு புலவர் என்று மட்டிலும் கூறுதல்கூடாது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு பொதுவிருப்பான பேச்சில் தேர்ச்சி பெற்ற வித்தகர் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை; அவர் கையாளும் ஒவ்வொரு சொல்லின் மிகச் சிறு மாறுதலையும் அறிந்திருப்பதுடன் பழைய சொற்களையும் புதுப்பொருள்களை நல்கும்படி செய்வதிலும் வல்லவர். தொடர் மொழிகள், மரபுத் தொடர்கள் இவற்றின் விரிந்த எல்லையில் மிகவும் பழக்கப்பட்டவர் அவர்; தன்னுடைய சொந்தச் சுரங்கத்தின் கணிப்பொருள்களின் கலவையினின்றும் புதிய தொடர் மொழிகளையும் மரபுத் தொடர்களையும் புதிதாக உண்டுபண்ணும் தனித்திறமையையும் பெற்றிருந்தார். அவர் சொற்சுருக்கத்தையும் பொருள்செறி தொடர்களையும் கையாள்பவர். மனநிலை மட்டிலும் அவர் வயமிருப்பின் திட்ப நுட்ப வாசகங்களையும், சொற்சுருக்கக்கூற்றுக்கள், முதுமொழிகள், ஆணைமொழிகள், நன்னெறியுரைகள், அறிவுரைகள் ஆகியவற்றையும் பேரளவில் குவித்துத் தள்ளமுடியும். ஆனால் தெலுங்கு இலக்கியச் செருக்குடையவருக்கு இதுபோதாது.அமரகோசத்தையும் வேறு நிகண்டுகளையும் மனப்பாடமாகத் தெரிந்தவர்கள், கட்டுப்பாடான இலக்கண விதிகளுக்கும், யாப்பு விதிகட்கும் இணங்க எழுதக்கூடியவர்கள்; பேரொலிகளை விளைவிப்பனவும் தாடையுடையக்கூடியனவுமான வடமொழிக் கலப்புத் தொடர்களைக் கையாளக்கூடியவர்கள், அணி இலக்கண நூல்களை யாத்துக் காலத்துக்கொவ்வாத உவமைகளையும் பழங்கால உருவகங்களையும், நாட்பட்ட புனை கருத்துகளையும் தொகுத்துக்கூற வல்லவர்கள்- சுருக்கமாகக்கூறினால், மரபு வழிப்புலமைபெற்று மரபுவழித் தலைப்புக்களில் மரபு முறைப்படி எழுத வல்லவர்கள் மட்டிலுமே மேதக்க வரிசைக்கவிஞர்களுடன் சேர்க்கக்கூடியவர்களாக இருந்தனர்; மற்றவர்கள் எவ்வளவுதான் இயல்பான சொல் திறமையுடனும் அறிவாழத்துடனும் திகழ்ந்தபோதிலும், தம்முடைய சிந்தனையிலும் சொல்திறனிலும் முன்மாதிரியாக இருந்தபோதிலும் அவர்கள் அரைகுறைப் படிப்பாளிகளாகக் கருதப்பெறக்கூடியவர்களாகவே இருந்தனர்.

இறுதியாக, வேமனர் அரசர்களையோ மன்றங்களையோ அல்லது அரசவைக் கவிஞர்களையோ மதிக்கக்கூடியவர் அல்லர். ஆதரவாளர் உவப்பதற்காகக் கவிதையெழுதி அற்பத்தொகை சம்பாதிப்பது கவிஞர் தொழிலையே இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறுகின்றார், சுதந்திரமாகவும் கட்டுப்பாடற்றும் இயங்கக்கூடிய திண்ணிய ஆன்மாதான் உண்மையான கவிஞராக இருக்க முடியும் என்றும் அத்தகைய கவிஞரே நீடித்து நிலைபெற்றிருக்கக் கூடிய செய்தியைத் தரக்கூடுமென்றும் அவர் நம்புகின்றார்.பிறப்பு இறப்பு பற்றிய இறுதி உண்மைகளைச் சிந்தித்துக் கணநேரத்தோற்றமாகவாவது காண்பதற்கும், அவற்றைக்கொண்டு மனித இனத்திற்குச் சேவை செய்யவும் பயன்படுத்த இயலாத படிப்பும் புலமையும் பயனற்ற அலங்காரங்களாகும் என்று அவர் உறுதியாகக் கூறுகின்றார். கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் புலவர்களும் அண்மைக்காலம் வரையில் ஏதாவது ஒரு மன்றத்துடன் இணைக்கப்பெற்றிருந்தாலும் அதிகாரமும் செல்வமும் உடையவர்களிடமிருந்து ஆதரவுகளையும் உதவிகளையும் பெற விரும்பினதாலும் வேமனர் அவ்வாறு கூறுவது அவரது ஆணவமான போக்காகும் என்று நம்பியதனாலும் அவர்கள் அவரை வெறுத்தனர்; இலக்கியப் போர்க் கருவிகளில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததான மௌன வெறுப்பினால் அவரைக் கொல்லவும் முயன்றனர். ஆனால் சமூகசமயச்சீர்திருத்த வாதியாக இருந்த வீரேசலிங்கமும்கூட ஏன் இந்தக் கேடிழைக்கும் கூட்டத்தினருடன் சேர்ந்தார்? வேமனரின் நாகரீகமற்ற நாட்டுப் புறச்சீடர்களால் சிறிதும் அரக்கமாயத்தையொத்த தந்திரமுடைய புகழ்க்குறைப்போராலும் மாசு கற்பிப்போராலும் பெரிதும் வேண்டுமென்றே சுமத்தப்பெற்ற சில செருகுப் பாடல்களின் இழிவுத்தன்மையும் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த தன்மையும் கிராம்வெல்லிடமிருந்தது போன்ற அவருடைய கடுமையான ஆசாரமுடைமை வல்லந்தமாகத் தாக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

நீண்டகாலமாக வேமனர் தெலுங்கு இலக்கிய நிறுவனத்திற்குப் பழியுரையாக இருந்தபோதிலும், வேமனரின் இலக்கியப் படைப்பைப் பற்றிச் சிறிதளவு அறிந்த ஒவ்வொரு மேனாட்டுச்சிந்தனையாளரும் எழுத்தாளரும் அதனால் மிகவும் நன்கு கவரப்பெற்றனர். இவர்களுள் மிக முன்னதாகக் கவரப்பெற்றவர் ஃபிரெஞ்சு மடத்தைச் சார்ந்த ஜே. ஏ. டூபாய் என்பவராகும். 1871-இல் முதல் ஆங்கிலப் பதிப்பாக வெளியிடப்பெற்ற தன்னுடைய "இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள்" என்ற நூலில் அந்த மடாதிபதி மெய்யறிவுச்சார்ந்த போக்கில்' எழுதியுள்ள சில இந்தியக் கவிஞர்களைக் குறிப்பிட்டு மேலுங்கூறுகின்றார்:

மிகப்புகழ்வாய்ந்தவர்களுள் ஒருவர் வேமனர். . . . . . .. ரெட்டி வகுப்பைச் சார்ந்தவரும் கடப்பை மாவட்டத்தில் பிறந்தவருமான இந்த மெய்விளக்க அறிஞர் பதினேழாவது நூற்றாண்டின் இறுதியில் இறந்தார். நான் கண்ட பல்வேறு சுருக்கங்களிலிருந்து அவருடைய படைப்புக்கள் எனக்கு மிக்க கவர்ச்சிகரமாகத் தோன்றுகின்றன. அவை தெளிந்த கூரிய அறிவுத்தன்மையாலும் தன்னுண்மை (சுதந்திரம்)யாலும் புகழுடன் திகழ்கின்றன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சென்னை சிவில் சர்வீஸைச் சேர்ந்த சார்லஸ் ஃபிலிப் பிரெளன் வேமனருடன் நெருங்கிய பழக்கத்துடன் அறிமுகமானவர். எனினும், அவர் அறிவாற்றலுள்ளவராக இருப்பதைவிட மொழிவாணராகவே அதிகமாகத் திகழ்ந்தார்; அவர் வேமனரை அணுகும்முறை முற்றிலும் மொழியைச் சார்ந்தே இருந்தது. அவர் பதிவு செய்தபடியே, "நடை மிகவும் எளிதாகவும் மிக விரிந்த நிலையில் பல்வகைப் பெருக்கத்தலைப்புக் களைக்கொண்டும் குறிப்பாக அந்த மொழியினைக் கற்போருக்கு மிகவும் பயன்படத்தக்கனவாகவும் உள்ள ஒரு கவிஞரின் படைப்புக்களைத் தான் தேடிக்கொண்டிருந்தபொழுது உண்மையிலேயே, அவர் வேமனரைக் காண நேர்ந்தது. இந்த வரம்புக்குள் அணுகினால், அவர் கருத்துப்படி கிரேக்கச் சில்லறைக் கவிஞர் லூவியன் என்பார்தான் வேமனருடன் மிகச்சரியாக ஒத்த ஒர் ஐரோப்பியக் கவிஞராக அமைகின்றார். பிரௌன் சொன்னர்: "கிரேக்க மொழிக்கு லூஷியன் எப்படியோ அப்படியே தெலுங்கு இலக்கியத்திற்கு இந்த நூலாசிரியர் ஆவார்; சிறந்த கவிதையென்றோ அல்லது சிறந்த இலக்கியம் என்றோ சொல்லமுடியாவிட்டாலும் இவர் முதன்முதலாகக் கல்வியைத் தொடங்குபவருக்கு மிகப்பழக்கப்பட்ட எழுத்தாளராக அமைகின்றார். இதிலிருந்து பிரௌன் வேமனரை முதல்வகுப்புப் பாடநூலுக்கு அப்பால் காணமுடியவில்லை என்பது தெளிவு.

இப்படி இருந்தபோதிலும் நாம் பிரௌன்மீது அன்பற்று இருக்கவேண்டியதில்லை. காரணம் என்னவென்றால், அவர்தான் முதன்முதலாக வேமனரின் கவிதைகளைச் சேகரித்து, ஒத்துப்பார்த்து ஒழுங்குப்படுத்திச் செவ்வைப்படுத்தி, அச்சிட்டு வெளியிட்டார். அக்கவிதைகளை ஆங்கிலத்திலும் இலத்தீன் மொழியிலும் முதன் முதலாக மொழி பெயர்த்தவரும் இவரே. தெலுங்கு இலக்கிய நிறுவனம் வேமனரை இனி என்றுமே புறக்கணிப்பதற்கு இயலாத முறையில் ஆற்றல்களைத் தன்னுடைய கவனத்தாலும் விடாமுயற்சியாலும், ஆர்வத்தாலும் தொடங்கி வைத்தவரும் இவரேயாகும். 'வேமனரின் கவிதைகள்: நீதி, சமயம், அங்கதம் பற்றியவை' என்ற தலைப்பில் தான் முதன்முயற்சியாக வெளியிட்ட நூலின் நூன்முகத்தில் தனக்கு நேரிட்ட சங்கடங்களையெல்லாம் கணக்கிட்டுக் கூறியுள்ளார். பொருத்தமான பகுதிகள் ஈண்டுத் தரப் பெறுகின்றன:

ஒரு மொழியைக் கற்கத் தொடங்கும்பொழுது அந்த மொழிக்குரிய மக்களிடையே மிகப்பெருவழக்காகப் பயின்று வரும் நூல்களைப் பற்றி விசாரித்தறிவது நம்முடைய இயல்பேயாகும்; இந்த நூல்கள் யாதொரு சங்கடமுமின்றி வெளி நாட்டார் எளிதில் கருத்துணர்வதற்கேற்ற நடையில்அமைந்திருத்தல் வேண்டும். 1824-இல் தெலுங்கைப் பற்றி யான் மேற்கொண்ட இத்தகைய விசாரணைதான் இந்தத்தொகுப்பு நூலில் யான் சேகரித்த பாடல்களில் நன்கு அறிமுகமாவதற்கு வாய்ப்பு அளித்தது. வேமா அல்லது வேமனரின் (இந்த இரண்டு பெயர்களும் புழக்கத்திலிருந்தன)பல கைப்படிகள் என்கைக்குக் கிட்டின. என்னுடைய அரசு அலுவல்களுக்கிடையே கிட்டும் ஓய்வுநேரங்களில் நான் அவற்றைப் பயின்று மொழிபெயர்க்கவும் முடிந்தது. எழுத்துப்பிழை, யாப்புப் பிழை, பொருட் பிழை முதலிய பல்வேறு பிழை மலிந்த சருக்கங்களாகக் கிடந்தன. அவைகள்; எந்த இரண்டு படிகளும் ஒன்றுபோல் ஒழுங்குபடுத்தி அமைந்த முறையினைப் பின்பற்றவில்லை; அவை விரிந்த நிலையில் இரண்டிலிருந்து எண்ணூறு திட்ப உரைகளில் வேறுபட்டிருந்தன. நான் மசூலிப்பட்டினத்தில் தங்கி இருந்தபொழுது அப்பகுதியில் கிடைத்த சில படிகளைச் சேகரித்த பிறகு படிப்படியாக விசாகப்பட்டினம், நெல்லூர், குண்டுர், கடப்பை, சென்னை ஆகிய இடங்களிலிருந்தும் பிற படிகளைப் பெற்றுச் சேர்த்தேன். பின்னர் ஓர் அட்டவணையைத் தயாரிக்கச் செய்தேன். அதில் ஒன்பது பத்திகளில் பல்வேறு இடங்களில் கிடைத்த பாடல்கள் அவை கிடைத்த இடங்களைக் காட்டின; இங்ஙனம் அப்பாடல்களை நான் ஒத்துப்பார்க்க வழியமைத்துக்கொண்டேன். நான் கண்ட பாடல்களின் தொகை கிட்டத்தட்ட 2500 ஆகும். எனினும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததில் அவற்றின் தொகை 2000க்குச் சிறிது அதிகமாக இருந்ததைக் காட்டியது.

அதன்பிறகு அப்பாடல்கள் ஒரு திட்டமான ஒழுங்கில் அமைப்பது இன்றியமையாததாயிற்று. பெயர்த்தெழுதுவோர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு தேர்ந்தெடுத்துக்கொண்டனரென்பது தெளிவு; எந்த இடத்திலும் எவ்வித ஒழுங்கும் மேற்கொள்ளப்பெறவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு நான் முழுவதையும் இணைவிளக்கப் பொருத்தமானபடி சமயம், நீதி, அங்கதம், மறைமெய்ம்மை, பல்வகை என்ற ஐந்து தலைப்புக்களில் அமைத்துக்கொண்டேன்.

டாக்டர் ஜி.யு. போப்பும், மேஜர் ஆர். எம். மாக்டனால்டும் வேமனரை வியந்து போற்றிய அடுத்த இரண்டு ஐரோப்பியர்களாவர். முன்னதாகக் குறிப்பிட்டவர் மடாதிபதி டூபாயின் “இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள்" என்ற நூலின் தனது பதிப்பில் 'வேமனரின் செய்யுளியற்றும் போக்கிலுள்ள இனிமையையும் சந்த நயத்தையும் எதுவும் விஞ்ச முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்க் குறிப்பிட்டவரின் கருத்துப்படி, 'தெலுங்கு இலக்கியப் பரப்பு முழுவதை நோக்கினால் வேமனரது எழுத்துக்கள் ஐரோப்பியர்களின் கவனத்தைக் கவர்ந்தது போல் வேறு எந்த நூலாசிரியரின் எழுத்துக்களும் கவர்ந்ததில்லை’ என்பதாகும்.

இரண்டாவதாக வேமனரை மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்பாளரும் ஒரு சார்லஸ் என்பவரே; அவர் பெயர் சார்லஸ் இ. கோவர் என்பது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்று வழங்குவது முற்றிலும் சரியன்று; காரணம், கோவரே நன்றியுடன் ஒப்புக்கொண்டபடி, சார்ல்ஸ் ஃபிலிப்பின் மொழி பெயர்ப்பே தன்னுடைய முக்கிய மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது. 'தூய்மையாகப் பகுத்தறிவுள்ளவராக இருப்பதற்கும், தீவிரமான முறையில் ஒரே கடவுட்கொள்கையுடையவராக இருப்பதற்கும், விடாப்பிடியான முரட்டுக்குணமுடையவராக இருப்பதற்கும் பொருத்தமான பொருளில் சொல்லைக்கையாள்வதற்குமாக’ அவர் வேமனரைப் பாராட்டினர். ஆயினும் அவர் வேமனரை நீதியுணர்ச்சியில் திருவள்ளுவருக்கு மிகக் கீழான நிலையிலும், கவிதை ஆற்றலில் இன்னும் மிகத் தொலைவிலும்' வைத்துப் பேசினார். இந்த மதிப்பீடு சரியோ, அன்றிச் சரியன்றோ, வின்சென்ட் ஏ. ஸ்மித் என்பார் தன்னுடைய 'ஆக்ஸ் ஃபோர்டு இந்திய வரலாறு' என்னும் நூலில் மிகக் கடுமையாகவும் ஐயத்திற்கிடமற்றதாகவும் சாதியைப் பற்றிப் பழித்துக் கூறும் ஒர் இந்திய எழுத்தாளரைக் குறிப்பிட விரும்பியபொழுது அவர் வேமரின்பால் கவனம் செலுத்தி 1871-இல் வெளியிடப் பெற்ற கோவரின் 'தென்னிந்தியாவின் நாட்டுப் பாடல்கள்' என்ற நூலிலிருந்து நான்கு பாடல்களை மேற்கோளாகக் காட்டியதை சுவை பயப்பதாக உள்ளது.

வில்லியம் எச். கேம்ப்பெல் என்பார் வேமனரை மதிப்பிடுவதில் பிரௌன் அல்லது கோவரை விடச் சிறந்த தீர்ப்பாளராகத் திகழ்ந்தார். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் தன்னுடைய கட்டுரையில் பிற செய்திகளுக்கிடையில் அவர் கூறியது:

வேமனர் மக்களின் கவிஞர் என்பதை வற்புறுத்திக்கூறலாம். அவர் புலவர்கட்காக எழுதவில்லை; ஆனால் எளிய கல்வியறிவில்லாத கிராம மக்களுக்காகவே எழுதினார். அவருடைய செய்தியின் மேம்பாட்டிற்கு ஏற்ப அவருடைய நடையிலும் எளிமையும் வேகமும் இருந்ததால் அவர் புகழுடன் திகழமுடிந்தது. வெறும் இலக்கியப் புகழைச் சிறிதும் கருதாது பண்டைய கவிதைபற்றிய விதிகளை ஏளனம் செய்தார். அங்ஙணம் செய்வதில் தனது கூரறிவினையும் காட்டினர். இந்தியாவில் பண்டைய கவிதை உண்மையில் புகழுடன் திகழ முடியாது. பெரும்பாலான பொது மக்களுக்குக் கிட்டத்தட்ட முற்றிலும் அதனைப்புரிந்து கொள்ள முடியாத நிலைமையே காரணமாகும்... எள்ளல் குறிப்பின் ஆற்றல் காரணமாகவே வேமனர் மிகவும் புகழுடன் திகழ்ந்தார். மனிதர்களின் குறைபாடுகளையும் மூடத்தனத்தையும் காண்பதற்கேற்ப அவர் கூரிய பார்வையைப் பெற்றிருந்தார். அவற்றை அவற்றின் இழிந்த தன்மையும் முட்டாள்தனமும் தெளிவாகப் புலப்படும் வண்ணம் விரிந்துரைக்கும் ஆற்றலும் அவரிடம் அமைந்திருந்தது.... வேமனர் உண்மையில் முக்கியமாக எள்ளி நகையாடுபவர் மட்டிலும் அல்லர்; உண்மையில் அவர் ஒரு சீர்திருத்தவாதியும் கூட. தன் நாட்டு மக்களின் முன்னேற்றத்தின் பொருட்டுத் தன்னிடம் வாழ்க்கைக் குறிக்கோள் ஒன்றிருப்பதை உணர்ந்தார்; அதனைத் தான் நிறைவேற்றுவதில் எந்தவிதச் சலுகையும் குறுக்கிடுவதற்கு அனுமதிப்பதில்லை... பெரும்பான்மையான இந்தியச் சிந்தனையாளர்களின் கொள்கைக்கு மாறாக வேமனரின் அகிலத்தைப் பற்றிய கொள்கை முக்கியமாக உலகமே கடவுள் என்ற மாயாவாதக் கொள்கையைச் சார்ந்திருப்பதைவிடக் கடவுளுண்டு என்ற கொள்கையில் தான் அதிகமாகச் சார்ந்திருந்தது. யாவற்றிற்கும் மேலான உயிருக்கும் (பரமான்மா) தனிப்பட்டவர் உயிருக்கும்(சீவான்மா) உள்ள வேற்றுமையை அவர் ஏற்றுக்கொண்டார். யாவற்றிற்கும் மேலான ஆற்றல் ஒன்றின்கீழ் மனிதர்கள் யாவரும் கைப்பாவைகள் என்று கருதுவதினின்றும் தன்னைத் தவிர்க்கக்கூடிய மனித சித்தத்திற்கு ஓர் இடத்தையும் முக்கியத்துவத்தையும் ஒதுக்கி வைக்கின்றார். மிக்க ஆற்றலுடனும் அக்கரையுடனும் வறட்டுத் துறவினைப் பலரறியப் பழித்துக்கூறினர்; அது ஒரு விக்லிஃபுக்கோ அல்லது ஒரு லூதருக்கோ செல்வாக்குத் தந்திருத்தல் கூடும்.

ஒழுங்காக வளர்ந்து வரும் வேமனரின் இலக்கியப் புகழ் ஒரு புறமும், இந்தியாவில் மாறிவரும் சமூக சமய நீதி பற்றிய சூழ்நிலை மற்றொறுபுறமும் வேமனரின்மீது ஆய்ந்துகொண்ட மௌன வெறுப்பினைப் போற்றிக் காத்ததற்குத் தெலுங்கு இலக்கிய உயர் மட்டப் புலவர்கட்கு அதிகமான சிரமத்தைத் தந்தன. எல்லாவற்றையும்விட இலக்கியத் திறனய்வு பற்றிய ஒரு புதிய நூலில் நெருக்கி நிரப்பப்பெற்ற வெடிமருந்து இதுகாறும் தாக்குதலுக்கு அசையாதிருந்த அரணில் முதல் பெரிய பள்ளத்தை உண்டாக்கியது. 'கவித்வ தத்துவ விசாரமு' என்ற தலைப்பினையுடைய நூல் முதன்முதலாக 1914-இல் டாக்டர் சி.ஆர். ரெட்டி என்ற பெரியாரால் வெளியிடப்பெற்றது. தன்னுடைய தந்தையாரால் கற்பிக்கப்பெற்றுச் சிறு பருவம் முதற்கொண்டே டாக்டர் சி.ஆர். ரெட்டி பண்டைய தெலுங்கு இலக்கியங்களில் பழக்கப்பட்டவராக இருந்தார். பின்னர் சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் அவர் பெற்ற கல்வி மேனாட்டு இலக்கியங்களில் மிக நல்லதாக இருக்கும் பகுதியில் நல்ல பழக்கத்தை உண்டாக்கியது. இயற்கையாகவே கூரிய அறிவும் ஒளிர்விடும் சொல்திறமும் அவரிடம் வாய்த்திருந்தன. மன இயல்பாலும் பயிற்சியாலும் தன்னுடைய நோக்கிலும் போக்கிலும் தற்காலத்திற்குரிய புதுமையைப்பெற்றிருந்தார். தன்னுடைய இலக்கியத் திறனனாய்வு நூலில் தன்னுடைய இயற்கைத் திறன்கள் யாவும் கொண்டிருக்குமாறு செய்திருந்தார். அஃது ஒரு வெடிகுண்டுபோல் வெடித்துப் பழைய பல தவறாண எண்ணங்களையும் ஒருதலைச்சார்புடைய கருத்துக்களையும் ஊதி எறிந்தது; அது இன்னும் தெலுங்கு இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்த ஓர் உயர்தர இலக்கியமாகத் திகழ்கின்றது. ஒரு திருப்பு - கட்டத்தை உண்டாக்கும் அந்த நூலில் வேமனரை டாக்டர் ரெட்டி ஆந்திரம் அளித்த மிகச்சிறந்த முன்மாதிரியான கவிஞர்களுள் ஒருவர் என்பதாகப்போற்றியுள்ளார். உண்மையிலேயே படைப்புக் கற்பனையிலும், சொல்திறனிலும் நகைச்சுவையிலும், முன்மாதிரியிலும், துணிவாகக் கூறுவதிலும், மூடப்பழக்கங்களை அப்பட்டமாகத் திறந்துகாட்டும் திறனிலும் பாசாங்குகளை வெளிப்படுத்திக் காட்டுவதிலும் வேமனர் தெலுங்கு இலக்கியத்தில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார்.

தங்ககளுடைய எதிர்த்தாக்குதல் சின்னபின்னமாக உடைபட்டதும் வேமனரின் குரல்கள் பேராற்றல் வாய்ந்தவை என்றும், அதன் எதிரொலிப்பினைத் திக்குமுக்காடச் செய்ய இயலாதென்றும், அவர் தரும் செய்தி உயிருள்ளதென்றும், அனைத்தையும் உட்படுத்தியுள்ள அதனை அடக்கி வைக்க முடியாதென்றும், அவருடைய ஆளுமை மிகத் துடிப்புடையதென்றும், அது சிதைக்க முடியாத அளவுக்கு மிக்க இயக்க ஆற்றலைக் கொண்டதென்றும், தெலுங்கு இலக்கியத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. சமய வெறியாலும், சமூகச் செருக்கினலும், தவறாண இலக்கிய மதிப்பீடுகளினாலும் அவர்கள் அறிவுக்குருடாக்கப் பெறாதிருப்பின் வேமனர் என்றும் சாவாத் தன்மையுடையவர் என்பதை மிக முன்னதாகவே அறிந்திருப்பர். அவருடைய சொல்லாற்றலையும், அவருடைய ஆளுமையின் செல்வாக்கினையும் தவிர, அவருக்குச் சாவாத்தன்மையை நல்குவதற்குத்தொடக்கத்திலிருந்தே வேரொரு வலு மூலத்தையும் கொண்டிருந்தார். அவருடைய வாழ்நாட் காலத்திலேயே அவர் ஒரு கட்டுக்கதையாகிவிட்டார்.