வைகையும் வால்காவும்/சூது விளையாட்டு

சூது விளையாட்டு


நட்டார் குறைமுடியார், தன்றாற்றார், நன்னுதலார்
பெட்டாங்கு ஒழுகு பவர் என்றே- பட்டாங்கு
பெண்ணடிமை செய்தல் பிழைஎன்றான் மண்ணுய்தல்
பெண்ணுயர்வால் என்றான் லெனின். 85

நல்குரவு என்னும் இடும்பையுள், பல் குரைத்
துன்பங்கள் சென்று படும் எனலால்- வன்புசெயும்
நல்குரவை வென்றான் நலிவொழித்தான்; நாட்டுரிமை
எல்லார்க்கும் தந்தான் லெனின். 86

உட்கப் படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்என-உற்றுணர்ந்து
மக்கட்கா தல்கொண்டான் மற்றைக்'கள்' தீதொழித்து
திக்கெட்டும் வாழ்ந்தான் லெனின். 87

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்; என்று- உறுதி
உளங்கொண்டு கூட்டுரிமை நாட்டிலே சூது
விளையாட் டொழித்தான் லெனின். 88