வைகையும் வால்காவும்/தோழனைப் பாடுவேன்
உலகின் தோழனைப் பாடுவேன் பொது
வுடைமைத் தந்தையைப் பாடுவேன்!
நிலமெலாம் அதன் விளைவெலாம் சரி
நிகர தாக்கி உழைப்பவர்
நலமெலாம் பெற நானிலத்தில் நாடு
அமைத்த நண்பனைப் பாடுவேன்!
இலெனின் ஆம் பெயர் கொண்ட ஏந்தலின்
இயல்பெலாம் நனிபாடுவேன்!
உலகெலாம் ஒரு குடும்பமாக்கிட
உறுதி தந்தனன் பாடுவேன்!
உலகெலாம் பொதுவுடைமையால் அமைவு
ஊட்ட வந்தனன் பாடுவேன்!
உலகெலாம் மக்கட்குரிமை யாக்குவேன்
உணர்க என்றனன்- பாடுவேன்!
உலகெலாம் உய்ய உலக மக்களின்
உள்ளம் வாழ் இலெனினைப் பாடுவேன்.