வைணவமும் தமிழும்/சம்பிரதாயங்களாக - சில

14. சம்பிரதாயங்களாக-சில

ஒவ்வொரு சமயத்தினரும் சம்பிரதாயமாகச் சிலவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். இவையே நாளடைவில் சமயப் பண்பாடுகளாக அமைந்து விடுகின்றன. வாழ்க்கையோடு ஒட்டிப் பிரிக்க முடியாதபடி அமைந்து விடுவன் அனைத்தும் பண்பாடுகளாம். வைணவ சமயத்தில் அமைந்த அத்தகைய சிலவற்றை ஈண்டு நோக்குவோம்; எடுத்துக் காட்டுவோம்.

1. சம்பிரதாயப் பெயர்கள் : வைணவ உரைகளில் அதாவது வியாக்கியானங்களில் - சில பெரியோர்களின் இயற்பெயர்கள் சம்பிரதாயமாக மாறி வழங்கப்பெற்றுள்ளன. இதனை வைணவரல்லாதாரும் - ஏன்? பெரும்பாலான வைணவர்களும் கூடத்தான்-அறிந்திருக்கவேண்டும்.அதுமன் ‘சிறிய திருவடி என்றும், கருடன் பெரியதிருவடி என்றும், ஆதிசேடன் அனந்தாழ்வான் என்றும், இலக்குவன் ‘இளைய பெருமாள்’ என்றும், இராமன் பெருமாள்” என்றும், அரங்கநாதன் பெரிய பெருமாள்’ என்றும், சுக்கிரீவன் ‘மகாராசர்’ என்றும், ஜடாயு பெரிய உடையார் என்றும், திருமலை திருமலையாழ்வார் என்றும், ஆழ்வார்திருநகரியின் திருக்கோயிலிலுள்ள புளியமரம் - உறங்காப்புளி - திருப்புளி யாழ்வார்' என்றும், ஆளவந்தார் பெரிய முதலியார் என்றும் சம்பிரதாயப் பெயர்களுடன் வைணவர்களின் திருவுள்ளத்தில் இடம் பெறுவர். இங்ஙனமே கூரத்தாழ்வான் ஆழ்வான் என்றும் கிடாம்பி ஆச்சான் 'ஆச்சான்' என்றும், திருக்குருகைப் பிரான் பிள்ளான் பிள்ளான்” என்றும், குருகைக் காவலப்பன் ‘அப்பன்’ என்றும், பெரியவாச்சான்பிள்ளை ஆச்சான் பிள்ளை’ என்றும், முதலியாண்டான் ‘ஆண்டான் என்றும், சுருக்கமான பெயர்களால் வழங்கப்பெறுவர். தமிழ் அறிஞர் உள்ளத்தில் உ.வே.சாமிநாத அய்யர் ‘அய்யர்வாள்’ என்றும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிள்ளை அவர்கள் என்றும், பன்மொழி புலவர் வேங்கடராஜூலு ரெட்டியார் ‘ரெட்டியார் என்றும், தியாகராசச் செட்டியார் செட்டியார் என்றும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், திரு.வி.க என்றும் டாக்டர் மு.வரதராசன், மு.வ.என்றும் வழங்க வில்லையா? அதுபோல என்க,

2. திருமேனிகள் : ஈசுவரன், சடகோபன், உடையவர் (இராமாநுசர்) இவர்களின் திருமேனிகளைப் பற்றி சம்பிரதாயமாக வழங்கி வரும் மரபுகள் உள்ளன. .

(அ). ஈசுவரன் திருமேனி: கருடனுடைய உடலாய் நிற்கும் வேதத்தின் பொருளாய் நிற்பவன்.இவனது திருமேனியில் சீவான்மா இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்துவ மாகவும், மூலப்பிரகிருதி ஸ்ரீவத்சம் என்னும் மறுவாகவும், ‘மான்' என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாகவும், - ஞானம் நந்தகம் என்னும் வாளாகவும், மருள் (அஞ்ஞானம்) வாளின்உறையாகவும், தாமசாகங்காரம் சார்ங்கம் என்னும் . வில்லாகவும், சாத்விகாகங்காரம் பாஞ்சசன்னியம் என்னும் சங்காகவும், மனம் சுதர்சனம் என்னும் சக்கரமாகவும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பத்தும் அம்புகளாகவும், தந்மாத்திரங்கள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகிய இருவித பூதங்களின் வரிசையும் வைஜயந்தி என்னும் வனமாலையாகவும் இங்ஙனம் எல்லாத் தத்துவங் களும் எம்பெருமானுக்கு ஆயுதமாகவும், ஆபரணமாகவும் இருப்பதாகக் கருதுவது வைணவமரபு2. அதாவது எம் பெருமான் சேதநம், அசேதநம் என்னும் தத்துவங்கள் அனைத் தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டுள்ளான் என்பது கருத்து.

எம்பெருமானுடைய ஆபரணங்கள் ‘திவ்வியாபரன ஆழ்வார்கள்' என்னும் திருநாமத்தால் வழங்கப்பெறும். உலகிலுள்ள மற்ற ஆபரணங்களுக்கில்லாத மென்மை,மணம், அழகு, ஒளி முதலியன இவ்வாபரணங்களுக்கு உண்டு சங்கு சக்கரம் ஆபரணங்கள் பகவானை வெறுத்து நிற்பவர்கட்கு ஆயுதங்களாகவும், விரும்பி நிற்பவர்கட்கு ஆபரணங்களாகவும் தோன்றும். ஆபரணங்களுக்கு எங்ஙனம் தோற்றம், அழிவு முதலிய குற்றங்கள் இல்லையோ, அங்ஙனமே ஆயுதங்களுக்கும் இவை இல்லை. நித்தியசூரிகளே திவ்வியாபரண ஆழ்வார்கள், திவ்வியாயுத ஆழ்வார்கள் எனப் பெயர் பெற்றுள்ளனர். இவை பகவானுடைய ஆயுதங்கள் என்னும் நிலைக்கேற்ப ஞானம், சக்தி முதலிய திருக்குணங்களைப் பெற்றுள்ளன.

(ஆ).சடகோபனின்திருமேனி: ஆழ்வார்கள் பன்னிருவருள் சடகோபர் நம்மவர் என்று போற்றத்தக்க பெருமைவாய்ந்து 'நம்மாழ்வார்' என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார் என்பதை நாம் அறிவோம். ஏனைய ஆழ்வார்களைச் சடகோபரின் ஒவ்வோர் அவயமாகவும் நம்மாழ்வாரை அவயவியாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம் பெருமாள். பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் - திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேகராழ்வாரையும், திருப்பாணாழ்வாரையும் திருக்கைகளாகவும், தொண்டரடிப் பொடியாழ்வாரைத் திருமார்பாகவும், திருமங்கையாழ்வாரைத் திருநாபியாகவும் மதுரகவிகளையும், எம்பெருமானாரையும் திருவடிகளாகவும் பெரியோர் அருளிச்செய்வார். (எம்பெருமானுடன் கலந்து தெய்வமாக உயர்ந்த ஆண்டாள் விடப்பெற்றிருப்பது கவனிக்கதக்கது.)

நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்பொழுதும் விளங்குகின்றார் என்பது வைணவக் கொள்கை. அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் செல்வோரின் முடிமீது அவர் திருவடியாக வைக்கப் பெறுவதைச் 'சடகோபன்' 'சடாரி’ என்று வழங்குகின்றனர். 'சடகோபன்' 'சடாரி' என்பன நம்மாழ்வாரின் திருப்பெயர்.

களாகும்.

(இ). இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமண்டலமாகவும், உய்யக் கொண்டாரைக் (புண்டரீகாட்சரைக்) கண்ணாகவும் மணக்கால் நம்பியைக் (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும், ஆளவந்தாரை (யாமுனாச்சாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாயும், திருக்கச்சிநம்பியைத் திருக்கையாகவும், திருக்கோட்டி நம்பியை ஸ்தனமாகவும், திருவரங்கப்பெருமா ளரையரை வயிறாகவும், திருமாலையாண்டானை முதுகாகவும், கிடாம்பியாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடை யாகவும், பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாயும், வடக்குத் திருவீதிப் பிள்ளையை முழங்கால்களாகவும்,பிள்ளை உலக ஆசிரியரைத் திருவடியாயும், திருவாய்மொழிப் பிள்ளையைப் பாதஇரேகை யாகவும் மணவாள மாமுனிகளைப் பாதுகையாயும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்டரமாகவும், (திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும் முத்லியாண்டான்னத் திரி தண்டமாயும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும் வடுக நம்பியைக் கல்லாடையாகவும், திருக்குருகைப்பிரான் பிள்ளானைத் தோமாலிகையாகவும், பிள்ளையுறங்காவில்லி தாசரை நிழலாகவும்.இங்ஙனம் இராமாதுசரைக் சர்வாசாரிய சொருபராகக் கொள்வது மரபு.

3. திருவாய்மொழியின் பாசுரப் பிரிவினை: பராசரபட்டர் என்ற சமயப் பேரறிஞர் தாம் அருளியுள்ள திருவாய்மொழித் தனியனில்,

          வான்திகழும் சோலை
              மதிலரங்கர் வண்புகழ்மேல்
          ஆன்ற தமிழ்மறைகள்
              ஆயிரமும்.

என்று சொல்லியிருப்பதனால் திருவாய்மொழி ஆயிரமும் திருவரங்கநாதன் மீதாகும் என்று ஏற்படுகின்றது. இந்த ஐதிகம்3 எப்படிப் பொருந்தும்? திருவாய்மொழி ஆயிரத்தில் பலபல திவ்விய தேசங்களன்றோ அநுபவிக்கப் பெற்றுள்ளன? அவற்றுள் ‘கங்குலும்பகலும்' (திருவாய் 72) என்ற திருவாய். மொழியொன்றே அரங்கநாதன் விஷயமாகக் காணப்படா நிற்க பட்டர் ஆயிரமும் அரங்கநாதன் மீதாவது ஆகும் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம்.அதற்கு மறுமொழி பகர்ந்தவர்கள் கங்குலும் பகலும் என்ற பதிகத்தின் முடிவில் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை ஆயிரத்து, இப்பத்தும் என்கையாலே திருவாய்மொழி ஆயிரமும் அரங்கநாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப்பெற்றது; அதிலிருந்து சிலதிவ்விய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் பெற்றது; ஆனதுபற்றியே ‘திருவேங்கடத் துக்கு இவை பத்தும்' (6.101) என்றும், திருமோகூர்க்கு ஈர்த்த பத்திவை (101:1) என்றும், 'இவை பத்தும் திருக்குறுங்குடிஅதன் மேல் (5.5:11) என்றும் ஆழ்வாரே அருளிச் செய்துள்ளார்” என்றார்களாம். இப்படி இருக்கும்போது இந்த ஐதிகம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டியதாகின்றது.

4. திருக்கோயில்கள் : சைவர்கள் தில்லைச் சிற்றம் பலத்தைக் 'கோயில்' என்று வழங்குதல் போல, வைணவர்கள் .திருவரங்கத்தைக் கோயில் என்று வழங்குவர். இரண்டு இடங்களும் பல அற்புத நிகழ்ச்சிகளால் ஏற்றம் பெற்றன என்பதை நாம் அறிவோம். வைணவர்கட்கு வேறு ஒரு முக்கிய சான்றும் உள்ளது. நம்மாழ்வாரின் முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் 'தண்அம்துழாய்' (28) என்ற திருப்பாசுரத்தில் ‘பொருநீர்த் திருவரங்கா அருளாய்' என்ற தொடரில் திருவரங்கத்தைப் பற்றிய குறிப்பு வருவதால் 'கோயில்' என்ற பெயர் திருவரங்கத்திற்கு ஏற்பட்டதாகப் பெரியோர் பணிப்பர். அங்ஙனமே காஞ்சியைப் பெருமாள்கோயில்’ என்று வழங்குவர். இதற்குக் காரணம் திருவிருத்தத்தின் “நானிலம் வாய்க் கொண்டு’ (26) என்ற திருப்பாசுரத்தில் கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது என்ற தொடரில் வெஃகா என்பது காஞ்சியிலுள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலைக் குறிப்பதால் காஞ்சிக்குப் பெருமாள் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது: திருவேங்கடத்தைத் திருமலை என்ற பெயரால் வழங்குவர். இதற்குச் சான்று திருவிருத்தத்தில் இசைமின்கள் தூது (31) என்ற திருப்பாசுரத்தில் ‘திசைமின் மிளிரும் திருவேங்கடத்து என்ற தொடரில் திருவேங்கடம் வருவதால் திருவேங்கடம் ‘திருமலை என்ற பெயரால் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

திருவரங்கத்து அழகிய மணவாளன் இராமாயணக் கூறுடையவன் (தோலாததனிவீரன் தொழுத கோயில்) என்றும், திருவேங்கடத்துத் திருவாழ்மார்பன் (சீநிவாசன்) கண்ணன் அவதாரக் கூறுடையவன் (கண்ணன் அடியிணைக் காட்டும் வெற்பு) என்றும், அத்திகிரி அருளாளன் இந்த இரண்டு அவதாரக் கூறுகளையுடையவன் என்றும் வைணவர்களின் திருவுள்ளத்தில் இடம் பெற்றுள்ளன. (அ). எம்பெருமான்களின் திருக்கழல்கள்: திருவரங்கம் பெரிய பெருமாளின் திருவடியைத் திருப்பொலிந்த சேவடி என்று குறிப்பது வழக்கம், சான்று :

          திருப்பொலிந்த சேவடிஎன்
              சென்னியின்மேல் பொறித்தாய் (5.4:7)

என்பது பெரியாழ்வார் திருமொழியின் பாசுரப்பகுதியாகும்.

கச்சிநகர் தேவப்பெருமாளின் திருவடியைத் ‘துயரறு சுடர்அடி' என்று குறிப்பிடுவது மரபு.

          துயர்அறு சுடர் அடி
              தொழுதுஎழு என்மனனே! (1.1:1)

என்ற திருவாய்மொழிப் பாசுரஅடியே இதற்குச் சான்று. திருவேங்கடமுடையானின் திருவடி ‘பூவார்கழல்’ என்று குறிப்பிடுவது வழக்கம். சான்று :

          பூவார் கழல்கள் அருவினையேன்
              பொருந்துமாறு புணராயே (6.10;4)

என்ற திருவாய் மொழிப் பாசுரஅடியில் வரும் ‘பூவார்கழல்’ என்ற தொடர்

(ஆ).கோவில் அமைப்பில்: திருக்கோயில் அமைப்பில் சில தத்துவங்கள் விளக்கம் பெறுவனவாக உள்ளன.

(i). திருவரங்க விமானம்: திருக்கோயிலின் ஏழு திருச்சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது; பிரணவ ஆகாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளா யுள்ளன. பரவாசுதேவர் இதிலிருந்து சேவை சாதிக்கின்றார். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் 'நமோ நாராயணாய' என்பதிலுள்ள ஏழு எழுத்துகள் ஏழு திருமதில்களாகவும் அமைந்துள்ளன[1] எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல, திரு அரங்கத்துக்குச் செல்வோர்கட்கும் இறைவன் நேரே புலப்படுவான் என்பது கருத்து.

விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம். விஷ்ணுகாயத்திரி மந்திரத்தின் அறிகுறியாக 24 தூண்கள் அமைக்கப்பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்).

(ii). காஞ்சி வரதராசரை (அத்திகிரி)[2], அருளாளனைச் சேவிக்க 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள். அதாவது, தந்மாத்திரைகள் 5: ஞானேந்திரியங்கள் 5; கர்மேந்திரியங்கள் 5 ; பூதங்கள் 5 ஆக, 20.இவற்றுடன் பிரகிருதி, மகான் 1, அகங்காரம்1. மனம்1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன்[3](சீவன்மா) மகாபுருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

(iii), திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம் : ‘அட்டாங்கவிமானம் என்பது.96 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை, தஞ்சை கோபுரத்தின் நிழல் போல; ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை உடையது. மேல்தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும், விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் - மூன்று பதங்கள் (ஒம்+நமோ+நாராயணாய போலவும், மூன்றெழுத்துகள் கூடி (அ+உ+ம= ஓம்) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்.

5. எம் பெருமான் சிலவற்றுடன் ஒப்பு : வைணவ உரையாசிரியர்கள் எம் பெருமானை, நீர், மேகம், இரத்தினம், நிதி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளனர். இவை மிகவும் அற்புதமாக உள்ளத்தைத் தொடும் விளக்கங்களாக அமைந்துள்ளன. இவற்றை வழிவழியாக வைணவப் பெருமக்கள் அநுபவித்து மகிழ்கின்றனர்.

(அ) யானை: 'கைம்மான மழகளிற்றை' (பெரி. திரு.581) என்பது மங்கை மன்னனின் மணிவார்த்தை ஒரு யானை - கையையும் கால்களையும் படுத்துக்கொண்டு கிடப்பதுபோலத் திருவரங்கப் பெருமான் அறிதுயில் கொண்டு பள்ளியில் கிடக்கும் கோலத்தில் ஈடுபட்டுச்சொல்லுகின்றபடியாகும் இது. ‘தென்னானாய் வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” (திருநெடுந் 10) என்று மீண்டும் அருளிச் செய்வர் இவ்வாழ்வார். ‘என்ஆனை என்னப்பன் எம்பெருமான்’ (திருவாய். 3.9:1) என்றார் சடகோபரும் யானைக்கும் எம்பெருமானுக்கும் பலவிதமாக ஒப்புமை உண்டு.

(i) யானையை எத்தனை தடவைப் பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப்போல் பரமானந்தத்தைத் தரும்; எம்பெருமானும் “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆரா அமுதமே" (திருவாய் 25:4) என்று இருப்பான்.

(ii). யானைமீது ஏறவேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்; எம்பெருமானைச் சேரவேண்டியவர்களும் அவன் திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.

(iii). யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்: “எட்டினோடிரண்டெனும் கயிற்றினால்” (திருசந்த.83) என்றபடி எம்பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகின்ற கயிற்றை அவன்தானே தந்தருள்வான்; “மதிநலம் அருளினன்” (திருவாய் 1.1.1)

(iv). யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமானும் சுத்த பவித்திரனாய், சுத்த சத்து மயனாய் இருந்தாலும் “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்" (திருவிருத்) உடைய நம்போலியருடன் சேரத்திருவுள்ளமாயிருப்பன்,வாத்சல்யத்தாலே

(v). யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும். பிராட்டியின் புருஷகாரமின்றி பெருமான் வசப்படான்.

(vi). யானை பாகனுடைய அநுமதியின்றித் தன்பக்கம் வருபவர்களைத் தள்ளிவிடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” (திருவாய் 4.6.8) என்னும்படி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

(vii). யானையின் மொழியைப் பாகனே அறிவான்; எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்? இராமாநுசருக்கு நம்பிகள் சாதித்த 'ஆறு வார்த்தைகளை' நினைவுகூர்வது. (viii). யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்க வேண்டா... உன்றன் பைநாகப் பாய்சுருட்டிக்கொள்” என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைப்பிரான் போல்வாருக்கு எல்லாவகையிலும் அடியன்.

(ix). யானை உண்ணும்போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்தவர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோமன்றோ?

(x). யானைக்கும் கை நீளம்: எம்பெருமானும் ‘அலம்புரி நெடுந்தடக்கை ஆயன்” (பெரிதிரு. 1.6:2) அன்றோ? “நீண்டவத்தைக் கருமுகிலை” (பெரி. திரு. 252)

(xi). யானை இறந்த பின்பும் உதவும்: எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய பின்பும் இதிகாசபுராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?

(xii). யானைக்கு ஒரு கையே உள்ளது. எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ணமுடையவன் (அர்த்தி தார்த்த பரிதான தீட்சிதம்)

(xiii), பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை, எம்பெருமானும் அர்ச்சக பரிசாரர்களுக்கு உதவுவான். இங்ஙனம் பல உவமப் பொருத்தங்களைக் கண்டு கொள்ளலாம்.

(ஆ) நீர் : 'நீரகத்தாய்’ என்று எம்பெருமானைக் கூவி அழைக்கின்றார் கலியன் (திருநெடுந் 8), நீரின் இயல்பை உடையவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல் பற்றி இத்தலத்திற்கு ‘நீரகம்’ என்று திருநாமமாயிற்று. இவ்விடத்து எம்பெருமானை 'நீரகத்தாய்’ என விளிக்கின்றார்.

நீர்க்கும் எம் பெருமானுக்கும் இயல்பாக உள்ள ஒற்றுமைகள்;

(i) நீர்பள்ளத்தில் பாயும்; மேட்டில் ஏறுவது அருமை.எம் பெருமானும் சாதி முதலியவற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவான்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான்.பாண்டவர்க்காக துரது சென்ற போது ஞானத்தால் சிறந்தோம்’ என்றிருக்கும். வீடுமரையும், ‘குலத்தால் சிறந்தோம்' என்றிருக்கும் துரோண ரையும் செல்வத்தால் சிறந்தோம்’ என்றிருக்கும் துரியோதன னையும் ஒருபொருளாக மதியாமல் இவை எல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதியிருந்த விதுரனுடைய திருமாளிகையிலே தானாகச் சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான்.ஆகவே, பள்ளத்தே ஒடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.

(ii) நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது. 'நீரின்றி அமையாது உலகம்' (குறள்- 10) என்பது வள்ளுவர் வாக்கு. எம்பெருமான் இன்றி ஒரு காரியமும் ஆகாது. 'அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது முதுமொழி. ஒருவன் விரும்பினதை வேறொருவன் விரும்பாதபடி உலகமே வெவ் வேறு விருப்பத்தையுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாகவேண்டும்; அதுபோலவே எம் பெருமானையும்

(iii). நீருக்குக் குளிர்ச்சி இயற்கை வெப்பம் வந்தேறி, எம் பெருமானுக்கு தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறியா யிருக்கும். “நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்” (முமுட்சு127) என்ற திவ்விய சூக்தி காண்க

(iv). நீர் நம் விருப்பப்படித் தேக்கி வைக்கவும் ஒடவிடவும் உடையதாயிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே. ஆண்டாள் தான் சூடிக்களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் பூசித்தான் எம்பெருமான்; பாண்டவர்க்காக கழுத்திலே ஓலைக் கட்டித் தூது நடந்தான்.

(v). நீர் சுட்டாலும் அதனை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். ‘தருதுயரம் தடாயேல் உன்சரண் அல்லால் சரண் இல்லை” (பெரு திரு. 51) என்றார் குலசேகரப்பெருமாள்.

(vi). நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயுமிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம் (வழி) உபேயத் துவம் (பேறு) என்ற இரண்டு தன்மைகள் உண்டல்லவா? எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக்” கொள்வாரும் உள்ளமை காண்க. (vii). அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய்கனி கிழங்கு வேர் பலா முதலிய வற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதியொன்றையும் சகிக்கமாட்டாது:நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாதுசந்தானத்தாலும் போதுபோக்குதல் அரிது. “ஒருநாள் காண வாராயே!” (திருவாய் 851),"அடியேன் தொழ வந்தருளே’ (மேலது 5.7:6) என்று பிரார்த்தித்துப் பெற்றே தீரவேண்டும்.

(viii). Gaero, உண்ணும்போது நீர் இல்லாமல் முடியாது; அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்: எம்பெருமான் இவற்றை விரும்பாதவன். “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” (திருவாய். 583)

(ix) கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர்தான குறைய நில்லாது;எங்கும் நிரம்பியிருக்கும். எம்பெருமானும் “கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் என் வள்ளல்” (திருவாய், 3.9:5). கொள்வார் குறையே யத்தனை. ஐசுவரியமே போதும் என்பாரும், கைவல்யமே போதும் என்பாருமாக குறையக் கொள்வார் குற்றமேயாகும்.

(x), நீர் ஐவகைப்பட்டிருத்தல் போல எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன், எங்கனமென்னில்: (அ) பூமிக்கடியில் பதிந்து கிடக்கும் நீர் (ஆ) ஆவரனநீர் (இ) பாற்கடல்நீர், (ஈ) பெருக்காற்று நீர் (உ) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என எம்பெருமானுடைய நிலைமைகளும் ஐவகைப்பட்டிருக்கும். (xi). நீரானது பரிசுத்தமானதாயும் தான் இருக்கும் இடத்திற்குத்தக்கதாய்க்கொள்ளத்தக்கதாயும் விடத்தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் விடத்தக்கவனாகவும், கூராழி வெண் சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.

(xii). நீர்தோண்டத்தோண்டச்சுரக்கும்;"தொட்டனைத்து ஊறும் (குறள்-395) எம்பெருமானும் “கொள்ள மாளாஇன்ப வெள்ளம் கோதில தந்திடும்” (திருவாய் 47:2)

(xiii), நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சார்ந்தவையும்அவனை அடைந்தவர்க்காகவே இருக்கும்.

(xiv). நீர் தானாகப் பெய்ய வேண்டுமேயன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாதது. எம்பெருமான் இயல்பும் அப்படியே. - -

(xiv). நீர் கடலிலிருந்து காளமேகம்வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன்படுத்துவதாகாது. எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அை டயத் தக்கவனாகின்றான். -

(xvi). வசிட்ட சண்டாள வேறுபாடின்றியே அனைவரும் ஒர் துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம் பெருமானும் “நிகரில் அமரர்முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!” (திருவாய் 610:10) என்றும், “கானமும் வானரமும் வேடுமுடைவேங்கடம்” (நான்,திருவந்47) என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்றும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பான்.

(xvii). நீர் சிறிதுதுவாரம் இருப்பினும் உள் புகுந்துவிடும்; எம் பெருமானுக்குச் சிறிய வியாஜமே போதும், “திருமாலிருஞ் சோலை மலை ; என்னத் : திருமால் வந்து என் நெஞ்சுநிறையப் புகுந்தான்” (திருவாய் 10.8.1)

(xviii), தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்புப் பொலியும்.

(xix). தாபம் மிக்கவர்கள் நீரை முகத்திலே தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது, படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமம்தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதுர வாங்கி” (திருக்குறுந்4) விழுங்குவார்கள். எம்பெருமானையும்.

(xx), நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதுமென்பன், “கூராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே” (திருவாய். 6.9.1) என்பர்.

(xxi), நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல், செய்யக் காண் கின்றோம். “நேரே, கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை அயன் (முதல் திருவந், 56), “மருவுநின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணியாயிடை முத்தம் தருதும், உன் தாதையைப் போலும் வடிவுகண்டு கொண்டுள்ளம் குளிர, விரலைச்செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் மவ்வுரையும், திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” பெருதிரு75) என்பன அடைவே பிரமாணம். பகவத் குணங்களில் “சிறுமாமனிசர்” (திருவாய். 810:3); அமிழ்தலும், “ஊன் மல்கிமோடு பருப்பார்” (திருவாய்.35:7); வாய்க்கரையில் நிற்றலும் கொள்க.

இங்ஙனம் பல,

(இ). மேகம்: ‘உலகம் ஏத்தும் காரகத்தாய்' (திருநெ10) மேகத்தின் இயல்பு போன்ற இயல்புடையவன் வாழும் இடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரகம்’ என்று திருநாமம் ஆயிற்று என்பர்.

எம்பெருமானுக்கு மேகத்தோடு ஒற்றுமை பல நிலைகளால் உய்த்துணரத் தக்கது.

(i). பெய்ய வேண்டும் இடமாகவும் சென்று பெய்யும் மேகம், “வந்தருளியென் நெஞ்சு இடங் கொண்ட வானவர் கொழுந்து’ (திருவாய். 57:7) என்று ஆங்காங்குச் சென்று கருணை மழை பொழிவன் எம்பெருமான்.

(ii). மின்னலுள்ள காலம் நீர் நிரம்பியிருக்கும் மேகம், எம் பெருமானுக்கும் பிராட்டியோடு கூடியிருக்கும் காலத்தில் கருணைரசம் விஞ்சியிருக்கும். “இவள் சந்நிதியிலே காகம் தலைப்பெற்றது: அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்" (முமுட்சு-15) என்ற முமுட்சுப்படியின் திவ்விய சூக்தியும் காண்க.

(iii). மொண்ட இடத்திலும் (கடல்) பெய்யும் மேகம், தனக்கு உபதேசிக்குமவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம் பெருமான், வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான், சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமானிடம் சில தர்ம சூக்குமங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.

(iv). பெய்யப்பெறாத காலத்திலே வறக்கும் மேகம்; நெஞ்சுலர்ந்து பேசினானன்றோஎம்பெருமானும், திரெளபதிக்கு ஆபத்திலே அருகேயிருந்து உதவப் பெறாத குறைக்காக,

(v). இன்னகாலத்திலே மேகம் பெய்யுமென்று அறுதி யிடவல்லார் எவரும் இலர் பெய்ய வேண்டிய காலத்திலே பெய்யாதொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே “வந்தாய் போல வாராதாய்! வாராதாய்போல் வருவானே" (திருவாய். 610:9). திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகம் காட்டாதொழிந்தான் விரும்புதலை எதிர்பாராமல் “தாவியன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்” (திருமாலை-35).

(vi). ‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்ய வேண்டும்’ (இரண் திருவந் 16) என்று வளைப்பிட வொண்ணாது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே” பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் “எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப; விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருளை யீந்தவனன்றோ?" (திருமாலை - 44)

(vii), ஜலஸ்தான விபாகமின்றியே பெய்யும் மேகம், வேடன், வேடுவிச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்தாழி, கூனி, மாலாகாரர், பினவிருந்து வேண்டடிசிலிட்டவர், அவன் மகன், அவன் தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தன்’ என்னும்படியிறே பகவத் விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.

(viii). மேகம் மழைக் காலத்தில் பெருமுழக்கமிட்டுப் போய்விடும். மழை பெய்யாது; பெய்யுங்காலத்தில் ஆடம்பர மறப்பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனமன்றோ?

(ix). விராடபர்வ காலட்சேபத்துக்கு வரும் மேகம், பகவத் விஷய காலட்சேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான், ‘ஸ்ரீசைலேசதயாபாத்ர (தனியன்) என்று வந்தார் அன்றோ அரங்கநாதன் பெரிய ஜீயர்கோஷ்டியிலே?

(x). சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்; அடியார்க்கு இன்பமாரியாகிய (திருவாய் 4.5:10) கடாட்சதாரையும் ஆழ்வார்கள்ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்கு மிறே.


12. ஆசா ஹிரு 228 (புருடோத்தம நாயுடு பதிப்பு) வேடன்-குகன் வேடுவிச்சி-சபரி, பட்சி-சடாயு, குரங்கு-சுக்கிரீவன்; சராசரம்அயோத்தியில் வாழும் சராசரம், இடைச்சி- சித்தயந்தி; இடையர் - ததியாண்டன், தயிர்தாழி-ததி பாண்டனுடைய தாழி, கூனிகிருட்டிணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்- கண்ணன் காலத்து பக்தர்; பினவிருந்து - இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர்பக்தவிலோசனத்து ரிஷிபத்தினிகள்; அவன் மகன்-பிரகலாதன் அவன்தம்பி - வீடணன்; ஆனை-கஜேந்திராழ்வான்; அரவம்சுமுகன்; மறையாளன் - கோவிந்தசாமி, பெற்ற மைந்தன் - மார்க்கண்டேயன் ஆக பதினெண்மர். (xi). “விண்ணிலமேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்” (நாச்திரு. 8:1) இத்யாதிப்படியே தூதுவிடப்படும் மேகம்; எம்பெருமானும் 'இன்னார் தூதனென நின்றான்' (பெரி.திரு. 22:3), “கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்; தூதனாய், மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 15:7).

(xii). மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும். எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே, மழை சிலர்க்குத் திங்கு சிலர்க்கு நன்மை, எம்பெருமான்படியும் அப்படியே."கஞ்சன் நாள் கவர்கருமுகில் எந்தாய்"(பெருதிரு. 710)"தாயர் மகிழ ஒன்னார் தளர் ‘(பெரியாழ் திரு.171) இத்யாதி.

(xiii). "எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்: மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” (பெரு.திரு. 5;7) என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம்: களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய் 5.8:8) என்றுஅந்நயகதிகளால் எதிர்பார்க்கப்படுகை ஒக்குமல்லவா?

(v). “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை'(குறள்-12) என்கின்றபடியே அன்னத்தின் அபிவிருத்திக்கு ஏதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயும் இருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப்படுபவனாயும் அன்றோ எம்பெருமான் இருப்பது?

(xy). எத்தனை கண்ணநீர் விழவிட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளாகிடக்கும் மேகம், பரதாழ்வான் பலருடனே சித்திரகூடத் தருகே போந்து கண்ணநீர் விழவிட்டு வேண்டினவிடத்தும் தன் மனோரதம் பெறாமலே மீண்டான் அன்றோ?

(ஈ). இரத்தினம்: 'மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை' (பெரிதிரு. 89;)என்பது மங்கைமன்னனின் வாக்கு மை மை நிறம் மானம் மணி - பெரு விலை பெறும் நீல இரத்தினம்; மரகதம்-பச்சைமணி. “எய்ப்பினில் வைப்பினைக்; காசினை மணியை” (பெரி. திரு. 710:4) என்பது மங்கை மன்னனின் திருமொழி. இரத்தினத்திற்கும் எம்பெருமானுக்கும் பல நிலைகளில் ஒப்புமை உண்டு. -

(i). இரத்தினத்தைச் சொந்தமாகவும் அநுபவிக்கலாம்; விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம். அப்படியே “எம்பெருமானை புருஷார்த்தமாகவும்” கொள்ள லாம்.அவனை உபாயமாக்கி ஐசுவாரிய கைவல்யார்த்திகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்”

(ii). இரத்தினத்தை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன். மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன், உத்தம் அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலனிந்து அநுபவித்து மகிழ்வன். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐசுவரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோட்சோபாயமாக்கிக்கொண்டு மோட்ச புருஷார்த்தத்தைக் கொள்வாரும் அவனை எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே" என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.

(iii), இரத்தினத்தை இழந்தவன் கதறியழுவான்; எம் பெருமானை இழந்தவனும் அப்படியே இராமரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறியழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” (முதல் திருவந் 16), “இன்பத்தை இழந்தபாவியேன் எனதாவி நில்லாதே” (பெரு. திரு.7:4)'உன்னைக் காண்டான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கியழுவன்” (திருவாய் 5.8:4) என்றிப்படியெல்லாம் கதறியழுவார்கள்.

(iv). இரத்தினமுடையவன் மார்பு நெறிப்பன். எம் பெருமானைக் கைக்கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே இராமாநூற்47),"மாறுளதோ இம்மண்ணின் மிசையே?’ (திருவாய் 64:9), “எனக்கென்னினி வேண்டுவதே” (திருவாய் 644),"இல்லையெனக்கெதிரே" (பெருந்தொகை1438) என்று செருக்கிப் பேசுவார்கள்.

(v). இரத்தினம் பெற்றுள்ளவனை a wzi ersbevr தொடரும். எம்பெருமானைக் கைக்கொண்டவனையும் அப்படியே. -

(vi). இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும். புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” (திருவாய் 46:8).

(vii). இரத்தினத்திற்குச் சில ஆதாரங்களில் (ஆச்ரயங் களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே ஆழ்வார்கள் திருவாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்?

(viii). இரத்தினம் ஒளியைவிட்டு இராது.எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்,

(ix). இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை, எம்பெரு மானுக்கும் பிராட்டியாரால் ஏற்றம்.

(x). இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும் இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.

(xi). இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.

(xi). இரத்தினம் எவ்வளவு உயர்ந்ததாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும்; எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து செளலப்பியத்தைக் காட்டு கின்றவனன்றே? -

(xii). இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் உறங்கார்; எந்த வேளையில் யார் கொள்ளைகொள்வரோ என்று அஞ்சி இருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே, “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ? கண்கள் துஞ்சுதலே’ (திருவிருத்-97) என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை; கண்ட பின்பும் இல்லை.

இப்படிப் பல உவமப் பொருத்தங்கள்.

(உ). நிதி : வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றி” (திருவாய். 671) என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு

நிதி-தனம் வைத்தமாநிதி - எம்பெருமான். இந்த இரண்டும்பற்றிய சிந்தனையோட்டம். புதைத்து வைக்கப் பெறும் பொருள் நிதி’ எனப்படும். சென்னை போன்ற இடங்களில் வங்கிபோல் செயற்படும் நிறுவனங்கள் நிதி’ என்று பெயரால் வழங்குதல் காண்க. தைத்திரிய உபநிடதத்தில் எம்பெருமான் 'நிதி' எனப்படுவான்.

இரண்டிற்கும் வேற்றுமை : நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி; எம்பெருமானாகின்ற நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கதாக இருக்கும். இந்த வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.

இரண்டிற்கும் ஒற்றுமை: (i) நிதியானது தன்னையடைந் தவர்களை இரவும் பகலும் உறங்கவொட்டாது; எந்த இடத்தில் யார் கொள்ளை கொள்வரோ என்ற அச்சத்தால் துஞ்சா திருப்பர் நிதியுடையோர். எம்பெருமானும் அப்படியே, “கண்ணாரக்கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே’ (திருவிருத்97.காண்பதற்கும் முன்பும் உறக்கம் இல்லை; கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை;

(ii). நிதியானது ‘சித்தாஞ்சனம்' அணிந்த சில பாக்கிய சாலிகட்கே கிடைக்கும். எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’ பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே தென்படுவன.

(iii), நிதியுடையவன் மார்பு நெறிப்பன். எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் எனக்கு ஆரும் நிகரில்லையே’ (இராமா.நூற் 47),”மாறுளதோ இம்மண்ணின் மிசையே?” (திருவாய். 64:9), “இல்லையெனக்ககெதிரில்லையெனக்கெதி ரில்லையெனக் கெதிரே” (பெருந்தொகை-1438) என்று செருக்கிப் பேசுவார்கள்.

(iv). நிதி படைத்தவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும்; எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் அறிஞர்களால் புகழப்பெறுவர்.

(v). நிதியை இழந்தவன் கதறியழுவன்; எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. சீராமனாகிய வைத்தமாநிதியை இழந்த பரதாழ்வான் சபையில் கதறிஅழுதானன்றோ? "பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி, அழுதேன்" (முதல்.திருவந்: 16) “இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவிநில்லாதே” (பெரு திரு 7: 4) "எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே" (பெருதிரு.7;7) "உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி அழுவன்” (திருவாய் 5.8:4), “என் சொல்லிப் புலம்புவனே?” (திருவிருத். 86) என்று இப்படியெல்லாம் கதறியழுவார்கள். எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப்பொழுது கழியப் பெற்றதும் கள்வர் எல்லாச் சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படிக் கதறியழக் கூடுமோ அப்படிக் கதறி அழ வேண்டும் என்பர்.

  1. திருவரங்க மாலை-95
  2. ஹஸ்திகிரி-அத்திகிரி. ஹஸ்தி-யானை,கிரி-மலை. ஹஸ்திகிரி தமிழில் அத்திகிரி என்றாயிற்று
  3. புருடன்-புருஷன். இது சாரீத்தில் வசிப்பவன் என்று பொருள்படும்