வைணவமும் தமிழும்/சம்பிரதாயங்களாக - மேலும் சில
முன்னர்ச் சுட்டியது போக மேலும் சில ஈண்டுக் காட்டப்பெறுகின்றன. முதலில் வைணவ ஆகமங்கள்பற்றிய குறிப்புகள் தரப்பெறுகின்றன.
1.வைணவ ஆகமங்கள்: பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இரண்டும் வைணவ ஆகமங்கள் ஆகும். எம்பெருமானை உபாசிப்பது மானசம், ஓமம், விக்கிரகஆராதனம் என்று மூன்று விதமாக நடைபெறும். மூன்றாவது வகை ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்றும் இருபிரிவினையுடையது. ஒருவர் தம் குடும்பநலன்களைக் கருதித் தம் இல்லத்தில் எம்பெருமானின் திருமேனியை எழுந்தருளப்பண்ணித் தம் சக்திக்கு ஏற்றவாறு ஆராதிப்பது ஆத்மார்த்தம் ஆகும். வீட்டில் ஏற்றப்பெற்ற விளக்கு எங்ஙனம் வீடு முழுதும் ஒளியை உண்டாக்குகின்றதோ அம்மாதிரியே இவ்வாராதனம் அவர்தம் குலம்முழுவதும் மேம்பாடு அடைவதற்குக் காரணமாக இருக்கும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் திருமேனிகளை விதிப்படிவழிபடுவது.சந்திர சூரியர்களின் ஒளி உலகினருக்குப் பயன்படுவதுபோலே இந்த வழிபாட்டால் உண்டாகும் பலன் உலகம் முழுவதையும் வாழ்விக்கும். இவன் குறிப்பிட்டவாறு பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியின் சக்தி தாரதம்மியத்தால் அந்தந்த தலங்கள் (1) திவ்வியம் (2) ஆர்ஷம் (3) பெளராணம்(4) மாதுசம், (5) ஸ்வயம், வியக்தம் என்று ஐந்து வகையாகப்பாகுபடுத்தப்பெற்றுள்ளன. இந்தத் திருத்தலங்க்ளின் சொருபசக்தி விசேடங்கள் ஆகமங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இந்த ஆகமங்கள் பாஞ்சராத்திரம், வைகாநச கல்பசூத்திரம் என்பவையாகும். இவற்றுள் பாஞ்சராத்திர சம்ஹிதை ஆதி கேசவப்பெருமாள் திருவுள்ளப்படி திரேதாயுகத்தில் உண்டானது. அனந்தன், கருடன், விஷவக்சேனர், நான்முகன், சிவன் இவர்களனைவர்க்கும் ஏற்பட்ட ஐயங்களைப் பகவான் ஐந்துஇரவுகளில் போக்கியருளின செய்திகளைக் கொண்டது. வைகானச கல்பகுத்திரம் சீமன் நாராயணனே விகனசர் என்னும் மாமுனிவருக்கு அருளிச் செய்தது.
இந்த இரண்டு ஆகம சாத்திரங்களும் ஞானம், யோகம், கிரியை, சரிதம் இவற்றை நுவலும். இவற்றுள் கிரியையும் சரிதமும் நம் சந்ததிகளுடன் சம்பந்தப்பட்டவை. கிரியை என்பது திருக்கோயில்கள் கட்டப் பெறுவது பற்றியும், திருமேனிகள் செய்வதுபற்றியும் இத்திருமேனிகளைப் பிரதிட்டை செய்வதுபற்றியும் சொல்லும், சரியை என்பது திருக்கோயிலில் நடைபெறும் தினசரிச் சடங்குகள், உற்சவங்கள் நடைபெறும் முறை இவைபற்றிச் சொல்லும், இந்த இரண்டு சாத்திரங்களும் வைணவ சந்நிதிகளைப்பற்றியே ஏற்பட்டிருந்தாலும், சில சந்நிதிகள் பாஞ்சராத்திர ஆகம நெறி களையும் மற்றவை. வைகானச ஆகம நெறிகளையும் மேற்கொண்டு நடைபெற்று வருகின்றன. கோயில் (திருவரங்கம்), பெருமாள்கோயில்(காஞ்சி), திருக்குடந்தை, திருநாராயணபுரம், திருவெவ்வுளுர் (திருவள்ளுர்), திருநின்றவூர் முதலான சந்நிதிகளில் ஆராதனம் பாஞ்சராத்திரம் ஆகமநெறிகளையொட்டி நடைபெறுகின்றது. திருமலை, திருவல்லிக்கேணி, திருமாலிருஞ்சோலைமலை, திருக்கோட்டியூர், திருநீர்மலை முதலான சந்நிதிகளில் வைகானசஆகம நெறிகளையொட்டி ஆராதனம் நடைபெற்று வருகின்றது.இந்தச் சந்நிதிகளில் ஆராதனம் செய்யும் முறையே பாஞ்சராத்திரிகளும் வைகானசர்களும்தான் அதிகாரிகளாவர். ஆனால் பதரிகாசிரமம் ஜகந்நாதம், திருவனந்தபுரம் முதலிய திருத்தலங்களில் ஆக்னேயாகி புராணங்களில் துவலப்பட்டபடி செய்யப்பெறும் ஆராதனமாதலால் எல்லாப் பார்ப்பனர்களும் அதிகாரிகளாக அமைகின்றனர்.
பாஞ்சராத்திரிகளும் வைகானசர்களும் தனித்தனியான குரு பரம்பரையையுடையவர்கள். தத்துவங்களிலும் இருவரிடையேயும் சொல் வேற்றுமை உள்ளது. பாஞ்சராத்திரிகர்கள் வாசுதேவன்,சங்கர்ஷணன் பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு மூர்த்திகளின் விதானமாகவும்; வைகானசர்கள் விஷ்ணு, புருஷன், சத்தியன், அச்சுதன், அநிருத்தன் என்ற ஐந்து மூர்த்திகளின் விதானமாகவும் எம்பெருமானை ஆராதித்து வருகின்றனர். வைகானகர் ஆராதனம் செய்யும் இடங்களில் ஏதாவது காரணங்களால் ஆராதனம் தடைப்பட்டால், எக் காரணத்தைக் கொண்டும் இதரர்கள் அதனைச் செய்தல் கூடாது. வைகானசர்களின் சந்நிதிகளில் ஆராதனம் செய்யும் இடங்களில் திருமேனியை இதரர்கள் தொடுவதையும்கூட அங்கீகரிக்காமல் பிராயச்சித்தமும் செய்வதுண்டு. பாஞ்சராத்திரிகட்கு இந்த ஆட்சேபங்கள் இல்லை. ஆதலால்தான் இராமாநுசர்போன்ற ஆசாரியப் பெருமக்கள் பாஞ்சராத்திர ஆகமத்திற்கு ஏற்றம் கொடுத்தார்கள் என்று கருதலாம்.
வைகானசர்களின் பூசையில் மந்திரோச்சாரணம் முக்கியமாக இருக்கும் என்றும், பாஞ்சராத்திரபூசையில் தந்திரம் முக்கியமாக இருக்கும் என்றும் சொல்லுவார்கள். பாஞ்சராத்திரர்கள் அவசியம் நேர்ந்தால் பிராயச்சித்தத்திற்குப் பதிலாக தீட்சை செய்துகொண்டுதான் செய்வார்களாம். இந்த இரு வகையினரும் திருவிலச்சினை செய்து கொள்வதில்லையாம் தங்களில் பெரியோர்களிடத்தில் தீட்சைபெற்றுக் கோயில்களில் பூசை செய்வர் என்பர். பாஞ்சராத்திரஆகமம், வைகானச ஆகமத்தைப்போலவே பூர்வீகமானதேயாகும். பிரம்மோற்சவத்தில்(பெரிய விழாக்களில்) பாஞ்சராத்திர சந்நிதிகளில் மூன்றாம் நாட்களிலும், வைகானச சந்நிதிகளில் நான்காம் நாட்களிலும் கருடசேவை நடைபெறுவதாகச் சொல்லப் பெறுகின்றது.
2. பஞ்சம்ஸ்காரம் : ஒரு வைணவனுக்கு அகத்துய்மை, புறத்தூய்மை என்ற இருவகை தூய்மையும் இருத்தல்வேண்டும். இவற்றுள் அகத்துய்மையாவது மனத்திலுள்ள காமம் குரோதம் முதலிய அழுக்குகளற்றும் எம்பெருமானிடத்தில் அன்பு பூண்டிருத்தலுமாகும்.புறத்துாய்மையாவது சங்கு சக்கரம் முதலிய இலச்சினைகளைப்பெறுதலாகும்.இந்தப்புறத்துய்மை பஞ்சசம்ஸ்காரத்தில் அடங்கும். இவை தாபம், புண்ட்ரம் நாமம், மந்திரம், யாகம் என்பவையாகும். தாபம் என்பது ஓமத்தீயில் சுடப்பெற்ற சங்கு சக்கரங்களைப் புயங்களின் மேற்பகுதிகளில் தரித்துக்கொள்ளுதல். இங்ஙனம் சங்கு சக்கரங்களைப் பெற்றுக்கொள்வதை, தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ்திருச் சக்க ரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி யாட்செய் கின்றோம் (7)
[செஞ்சுடர்-சிவந்த ஒளி, ஆழி வட்ட வடிவமான பொறி,
அடையாளம்,ஒற்றுண்டு அடையாளம் செய்யப்பெற்று:
குடி-குடி வழிவழியாக ஆட்செய்தல் அடிமை செய்தல்]
என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். புண்ட்ரமாவது, நெற்றி முதலிய பன்னிரண்டு இடங்களில் மேல்நோக்கி இடுக்கின்ற திருமண்காப்புகள். ‘நாமம் TITL9, இராமாநுசதாசன் என்ற தாஸ்ய நாமத்தை பெறுதல். யாகம் என்பது பகவதாராதனமாகும். மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திர உபதேசம் பெறுதல்.ஓவிய வடிவம் அல்லது திருமேனி வடிவமாக இருக்கும் எம்பெருமானை ஆராதிப்பது சிறந்த பல யாகங்களைச் செய்வதிலும் மிக்கது. கற்புடை மகளிர்க்கு மாங்கல்யம் முதலியவற்றை அணிந்து கொள்ளல் இன்றியமையாததுபோல் ஸ்ரீவைணவரா யிருப்பவர்க்கு பஞ்சசமஸ்காரம் இன்றியமையாதது. இதனை ஓர் ஆசாரியன் மூலம் பெறுதல் வேண்டும்.
3. திருமண்காப்பு: இது வைணவர்களின் சமயக்குறி. எம்பெருமானின் வியூகநிலைகளை விளக்கும்போது’ பன்னிரண்டு கிளை வியூகங்கள் குறிப்பிடப்பெற்றன. இந்தப் பன்னிருவரும் திருமாலடியார்களின் திருமேனியில் பன்னிரண்டு இடங்களில் அதிட்டித்திருந்து அவர்களின் திருமேனியைக் காப்பர்.
(அ) நெற்றியில்-கேசவன்: இவர் தங்கமயமாய் நான்கு புயங்களிலும் நான்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டு சீதேவிப் பிராட்டியாரோடு சேவைசாதியப்பர்.
(ஆ) வயிற்றில்-நாராயணன் : இவர் நீலமேக சாமள வண்ணத்தராய் நான்கு புயங்களிலும் நான்கு சங்கங்களைத் தாங்கிக் கொண்டு அம்ருதோத்பவை பிராட்டியாருடன் சேவை பாவித்தருள்வார்.
இ) மார்பில்-மாதவன் : இவர் இந்திர நீல இரத்தினத் துடன் நான்கு கைகளிலும் நான்கு கதைகளைத் தாங்கிக் கொண்டு கமலைப் பிராட்டியாராடு காத்தருள்வார்.
(ஈ) கண்டத்தில்-கோவிந்தன்: இவர் சந்திரகாந்தி யோடு நான்கு விற்களைத் தாங்கிய வண்ணம் சாதுதேவி (சந்திரகோபிநீ பிராட்டியாருடன் சேவைபாலிப்பார். -
(உ) வலப்புற வயிற்றில் விஷ்ணு : இவர் தாமரைப் பூந்தாதின் நிறத்தோடு நான்கு கைகைளிலும் நான்கு ஹலாயுதங்களைப் (கலப்பை) பிடித்தவராய் விஷ்ணு பத்தினி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார்.
(ஊ) வலப்புறத்தில் - மதுசூதனன் : இவர் தாமரைப் பூ நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு முசலங்களைத் தாங்கிக் கொண்டவராய் வைஷ்ணவி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார். (எ) வலப்புறக் கழுத்தில் - திரிவிக்கிரமன் : இவர் அக்கினி காந்தியோடு கட்கங்களை நான்கு புயங்களிலும் தாங்கிக் கொண்டு வராரோகிணி பிராட்டியாருடன் சேவை பாலிப்பார்.
(ஏ)இடப்புறவயிற்றில்-வாமனன்: இவர் இளஞாயிறு வண்ணத்துடன் நான்கு கைகளிலும் வச்சிராயுதங்களைத் தாங்கியவராய் அரிப்பிரியை பிராட்டியாருடன் கருணை செய்வார்.
(ஐ) இடப்புயத்தில்-சிரீதரன் : இவர் தாமரையின் நிறத்தோடு நான்கு கைகளிலும் நான்கு வாள்களைக்கொண்டு சாரங்கணி பிராட்டியாருடன் சேவையளிப்பார்.
(ஒ) இடப்புறக் கழுத்தில்-இருடிகேசன் : இவர் மின்னல் நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு உழலைத் தடிகளைத் தாங்கிய வண்ணம் தேவதேவி பிராட்டியாருடன் தயை செய்தருளிப் பொலிவார்.
(ஓ). முதுகடியில்-பதுமநாபன் : இவர் சூரிய ஒளியுடன் நான்கு கைகளிலும் நான்கு பஞ்சாயுதங்களைத் தாங்கிக் கொண்டு மகாலட்சுமி பிராட்டியாருடன் குளிர நோக்கி வாழ்த்துவார்.
(ஒள) பிடரியில்-தாமோதரன் : இவர் இந்திர கோபம் போன்ற ஒளியுடன் நான்கு கைகளிலும் நான்கு பாசாயுதங் களைக் கொண்டவராய் சர்வலோகசுந்தரி (சர்வாங்க சுந்தரி)ப் பிராட்டியாரோடு எழுந்தருளியிருந்து காத்தருள்வார். இத்திருமண்காப்பு எல்லா வகுப்பார்க்கும் பொது வானது. இதற்கு நீள அகல உயரம் இடைவெளி முதலிய அளவுகள் உண்டு. இவற்றை ஐந்து விரல்களாலும் தரிக்கலாம். ஒவ்வொரு விரலால் தரிக்கப்பெறுவதற்கும் தனித்தனிப் பலன் சொல்லப் பெற்றுள்ளது.
4. நவிற்றவேண்டியமந்திரங்கள்: இந்தப் பன்னிரண்டு புண்ட்ரங்களை தரிக்கும்போது நாவினால் நவிற்றவேண்டிய மந்திரங்கள் உள்ளன. நெற்றியில் வெள்ளை மண்ணால் புணர்ந்ததைத்தரிக்கும்போது'கேசவாயநம என்றும், வயிற்றில் தரிக்கும்போது நாராயணாய நம: என்றும், மார்பில் தரிக்கும் போது கோவிந்தாயநம : என்றும், வறிற்றின் வலப்பாகத்தில் இடப்படும்போது விஷ்ணுவே நம: என்றும், வலப்புறத்தில் இடப்படும்போது மதுசூதனாயநம என்றும், வலக்கழுத்தில் இடப்பெறும்போது திரிவிக்கிரமாயநம என்றும், வயிற்றின் இடப்பாகத்தில் இடப்படும்போது, வாமனாய நம: என்றும், இடப்புயத்தில் இடுங்கால் சிரீதராநம: என்றும், இடக்கழுத்தில் தரிக்குங்கால் இருடிகேசாயநம என்றும், முதுகின் அடிப்புறத்தில் தரிக்குங்கால் பதுமநாபாயநம என்றும், பிடரியில் இடுங்கால் தாமோதராய நம: என்றும், பதின்மூன்றாவதாகச் சிரசில் இடுங்கால் வாசுதேவாயா நம"; என்றும் சொல்லிக் கொண்டே இடுத்தல்வேண்டும். கேசவாதி நாமங்களைச் சொல்லி இடப்பெறுவதால் திருநாமம் என்று பெயராயிற்று.பெண்கள் பிறைக் கீற்று போல் திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். 5. திருச்சூர்ணத்தைத் தரிக்கும்போது : ஊர்த்துவப் புண்ட்ரத்திலுள்ள இடைவெளியில் திருச்சூர்ணத்தைத் தரிக்க வேண்டும். திருச்சூர்ணம் இலக்குமி சொரூபமானது. மஞ்சள் காப்பைத் தரித்துக்கொண்டு இலட்சுமியை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும். மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு இடங்களிலும் இடப்படும் மஞ்சள் காப்புக்கு உரிய மந்திரங்கள் முறையே (அ) சிரீதேவியை நம; (ஆ) அம்ருத்தோ பவாயை நம: (இ) கமலாயை நம; (ஈ) லோக கந்தரியை நம (உ) சிரீ விஷ்ணு பத்தியை நம:(ஊ) சிரீவைணவ தேவியை நம:(எ)வராரோஹாயை நம: (ஏ) ஹரி வல்ல பாயை நம; ஐ சாரங்கிண்யை நம: (ஓ) தேவதேவிகாயை நம: (ஓ) மகாலட்சுமியை நம (ஒள) லோக பூஜிதாயை நம: என்பனவாகும்.
6. தவறான கருத்து : திருமண் காப்பைச் சிலர் எம்பெருமானின் திருவடி என்று கருதுகின்றனர். இது தவறு. அடியார்கள் நெற்றியில் இட்டுக்கொள்வது அரிபாதவடிவமான ஊர்த்துவ புண்டரம் ஓர் இரேகைதான்; திருமால்திருவடி அல்ல. எம்பெருமானுக்கு இதைப்போல் இரேகை இடுதல், திருக்கோயில்களில் எம்பெருமானுக்குத் திருமுழுக்காட்டுதல், திவ்வியாபரணங்கள் தரிப்பித்தல், திருப்பரிவட்டம் சேர்த்தல், போனகமளித்தல் முதலியவைகளால் அணிசெய்து உபசாரம் செய்வது போலாகும். அப்பொழுது திருமண்ணையும் அலங்காரத்திற்காக ஒர் அணிபோல் சாத்துகின்றனரேயன்றி வேறு அல்ல என்பது அறியப்படும்.
7. ஆகார நியமம் : வைணவர்கள் இந்த நியமத்தைக் கவனமாகக் கடைப்பிடிக்கின்றனர். உணவு தூய்மை இல்லாவிடில் மனம் தெளிவடைவதில்லை. ஆகவே, உணவுப்பற்றிய கவனம் மிகவும் முக்கியமானதாகின்றது. ஒருவன் பிறப்பினால் சத்துவம் இராசசம் தாமசம் குணங்களையுடையவனாக இருந்தாலும் அவன் நன்னெறி அநுட்டானத்தை மேற்கொண்டு சத்துவ குணத்தை மேலாகக் கொண்ட உணவுகளைப் புசித்து வருவானாகில் விரைவில் நல்வழியை அடைந்து எம்பெருமானின் கருணைக்குப் பாத்திரமாவான் என்பது திண்ணம்.இதனை நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததனால் உடற்கட்டு, உடல்நலம், துணிவு, மனவுறுதி, பக்தி முதலிய பண்புகளை மிகுதியாகப் பெற்றிருந்தனர். இங்ஙனமின்றி இக்காலத்தவர் தான்றோன்றித்தனமாய்ச் சுவைக்கும் போகத்திற்கும் துணையான உணவு வகைகளை உண்டு தம் முன்னோர்கட்கிருந்த எல்லாவித நலன்களையும் இழந்து அற்ப ஆயுள் உள்ளவர்களாய் இருப்பது கண்கூடு. ஆகவே, நம்முன்னோர்கள் உண்டு வந்த முறைப்படி சத்துவகுண உணவுப் பொருள்களை மிகுதியாகவும் இராசசகுண உணவுப்பொருள்களைக் குறைத்தும், தாமசகுன உணவுப்பொருள்களை அறவே நீக்கியும் உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். வைணவப்பெருமக்கள் உணவுப் பொருள்களை வகைப்படுத்திய முறை வருமாறு;
(அ) சத்துவகுணப்பொருள்கள் : எல்லாவிதப் பச்சரிசி, தினை, உளுந்து, பச்சைப்பயிறு, பொரி, அவல், சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம்,வெந்தயம்,வெல்லம்,சர்க்கரை, கற்கண்டு, தேன், திராட்சைப் பழம், பேரீச்சம்பழம், சாதிக்காய், சாதிப்பத்திரி, ஏல அரிசி, பச்சைக் கர்ப்பூரம், குங்குமப்பூ வாதுமை, நல்லெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கொத்தவரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய், பலாக்காய், விளாம்பழம், இலந்தைக்காய், பழம், களாக்காய், மாங்காய்,
மணத்தக்காளிக்காய், சுக்காங்காய், நாரத்தங்காய், பழம், சுண்டைக்காய், நெல்லிக்காய், சேப்பங்கிழங்கு, சருக்கரை வள்ளிக்கிழங்கு,சேப்பங்கீரை, வெண்கீரை,செங்கீரை, வாழைத் தண்டு, பிரண்டை, கறிவேப்பிலை, தூதுவளை, பசுமுள்ளை, கொத்தமல்லிமுளை, பொன்னாங்கண்ணி மனத்தக்காளி, அகத்திக்கீரைகள், எல்லாவகை வாழைப்பழங்கள், பலாப்பழம் மாம்பழம், நாவற்பழம், கிச்சிலிப்பழம், கொய்யாப்பழம் இளநீர், பன்னீர் ஆகியவை.
(ஆ).இராசசகுணப்பொருள்கள் : சவ்வரிசி, துவரை, கடலை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, மஞ்சள், பெருங்காயம், சீரகம், புளி, மிளகாய், உப்பு, கடுகு, கொத்தமல்லி (தனியா) இலவங்கம்,இலவங்கப்பட்டை, கசகசா, பாக்கு, ஆட்டுப்பால், புடலங்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், அத்திக்காய், புளியங்காய், மரிமாங்காய், எலுமிச்சங்காய், பூமி சருக்கரைக்கிழங்கு கருணைக்கிழங்கு வெற்றிலை, வள்ளிக் கிழங்கு, கொட்டிக்கிழங்கு, புளியன் மறியன் கொழுந்துகள், வெற்றிலை,புதினா,வாழைப்பூ, ஆவிரம்பூசீமை அத்திப்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம் ஆகியவை. .
(இ) தாமசகுணப் பொருள்கள் : புழுங்கலரிசி, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், பட்டாணி, மொச்சை, பனிப்பயிறு, கொள்ளு, பனை, ஈச்சை, தென்னை வெல்லங்கள், பனங்கற்கண்டு, எருமைப்பால் முதலானவை. கத்திரிக்காய், அவரைக்காய், கீரை, பூண்டு, முதல் இரண்டு வகைகளில் சொல்லாத கிழங்குகள் (எ.டு. உருளை, மரவள்ளிக்கிழங்கு) வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றைக் கீரை வகைகள், சீதாப்பழம், பனம்பழம், நுங்கு, ஆமணக்கெண்ணெய்.
8. வைணவ அதிகாரிகள் : சிறப்பான சாத்திரங்களில் நுவலப்பெற்று அறுதியிடப்பெற்றுள்ள வைணவ அதிகாரிகள் பத்து விதமாக வகுப்புண்டிருப்பர்.
(அ) அத்வேஷிகள்: உலகத் தலைவனான திருமாலையும் தங்களுடைய பார்வையாலும், இரக்கத்தோடு .4-0 நினைவ்ாலும், அப்படிப்பட்ட ஸ்பரிசத்தாலும் மச்ச கூர்ம பிராணிகள் தங்களுடைய முட்டைகளை விருத்திசெய்து தங்களைப் போலாக்குதல் போலவே, உலகோரின் எல்லாப் பாவங்களையும் கடைக்கண்நோக்கு கருணையோடு தொடுதல் ஆகியவற்றால் போக்கநின்ற வைணவர்களையும் வெறுக்காமல் இருப்பவர்கள்.இவர்கள்.
(ஆ) அநுகூலர்கள் : வாசுதேவனுடைய உற்சவச் சிறப்பிலும், s)gff பாகவதர்களுடைய உற்சவத் தொண்டுகளிலும் ஈடுபட்டு இடைவிடாமல் அவர்கட்குத் துணையாக இருப்பவர்கள் இவர்கள்.
(இ) திருநாமதாரிகள் : நினைத்த மாத்திரத்திலும், நாவினால் உச்சரித்தமாத்திரத்திலும் எல்லாப் பாவங்களையும் நசிப்பிக்க வல்ல ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமத்தைச் சொல்லி திருமண்காப்பைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள்.
(ஈ) சக்ராங்கணபரர்கள் : சங்கம், சக்கரம், ஊர்த்துவ புண்டரம், துளசிமணி, நளினாட்சமாலிகைகளைத் தரித்தவர்களாய், சங்கு சக்கரம் தரியாதவர்களுடைய சரீரங்களையும் பார்க்கக் கூடாதென்று பிரமாணங்களை அறிந்தவர்களாய் இருப்பவர்கள் இவர்கள். (உ) மந்திரபாடிகள் : நினைத்த மாத்திரத்தில் எம்பெருமானின் இணைத்தாமரை அடிகளாகிய பரமபதத்தை நல்கக்கூடிய எட்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது செபித்துக் கொண்டிருப்பவர்கள்.
(ஊ) வைணவர்கள் : சிற்றின்பத்தைத் துச்சமெனக் கருதி எம்பெருமானிடம் ஒன்றையும் விரும்பாமல் அவன் திருவடிகளை அடைவதையே பலனாகக் கருதிப் பக்தியை உபாயமாகக் கொண்டு இருப்பவர்கள்.
(எ) நீவைணவர்கள்: கர்மம், ஞானம், பக்தி முதலான - இதர சாதனங்கள், போகங்கள் யாவற்றையும் துறந்து அதனால் துய மனத்துடன் எம்பெருமானிடம் சாதன அறிவின்றிப் பக்தியுடையவர்களாக இருப்பவர்கள்.
(ஏ) பிரபந்நர்கள் : எல்லாவற்றிலும் வைத்திருக்கின்ற ஆசையாகிய பற்றையறுத்து “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் கண்ணனே” (திருவாய் 671) என்று கொண்டு எல்லாப் பாசங்களையும் அவன் திருவடிகளில் வைத்திருப்பவர்கள் இவர்கள்.
(ஐ) ஏகாந்திகள்: எம்பெருமானை தவிர, இதர தேவதைகளையும் இதர விஷயங்களையும், பக்தியை உபாயமாகக் கருதுவதையும் துறந்து அவன் திருவடிகளையே சாதனமாகக் கருதி “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர்கைம் மாறுநானொன் றிலேன் என தாவியும் உனதே (திருவாய் 5.7:10) என்றவாறு எல்லாப் பாரத்தையும் அவன்மீது போட்டிருப்பவர்கள். (ஒ) பரமைகாந்திகள் : முன்சொன்னவர்களைப் போலவே யாவற்றையும் விட்டுக் கண்ணனையே உபாயமாகக் கொண்டு அவனே சுவாமி என்றும், தம்மை அவனுடைய சொத்தென்றும் நினைத்து அதனாலே சொத்துக்குடை யவனான சுவாமி அவன் விருப்பப்படி செய்து கொள்ளக்கடவ னென்று தமக்கொரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பவர்கள்.
9. பூநீவைணவ இலட்சுணங்கள் : பட்டர் தம் திருவடிச் சம்பந்தம் பெற்ற ஒரு சிரீவைணவனுக்கு அனந்தாழ்வான்மூலம் அருளிச் செய்தவை இவை:
(i) ஸ்ரீவைணவன் கொக்கைப்போல் இருப்பான். கொக்கு நீர் நிறைந்ததிருக்கும் இடங்களில் வாழும். வெண்மையாய் இருக்கும். சிறிய மீன்களைப்பொருட்படுத்தாது, பெரிய மீன் அகப்பட்டால் விடாது கெளவிக் கொள்ளும், மழைக் காலத்தில் மின்னலுக்கும் இடிக்கும் பயந்து மலை இடுக்குகளில் புகுந்து கொள்ளும். தன் விருப்பமான பொருளைப் பெறுவதிலேயே சிந்தையாயிருக்கும். சிரீவைணவனும் புண்ணிய தீர்த்த முள்ள இடங்களில்தான் வசிப்பான். அவன் மனம் வெண்மையாய், அதாவது கபடமற்றதாய், மிகத் தூய்மையாயிருக்கும். தாழ்ந்த தேவதைகளை அசட்டை செய்வான். அர்த்த பஞ்சகம் தத்துவஞானம் இவற்றை முற்றிலும் நன்கு அறிந்தவர்களைச் சந்திக்க நேருங்கால், அவர்களை நன்கு உபசரித்து அவர்கள் அருளிச்செய்யும் இரகசியங்களை அப்படியே கெளவிக்: கொள்வான். பிரதிகூலர்களால் தனக்கு ஆன்மநாசம் நேருவ தானால் திவ்விய தேசங்களில் சென்று வாழ்வான். பகவத்பாகவத ஆசாரிய தியானத்தில் ஒருமனப்பட்டிருப்பான். (ii) கோழியைப் போலிருப்பான் கோழி எப்போதும் குப்பைகளைச் சீய்த்துச் செத்தைகளை விலக்கி தனக்குப் போக்கியமானவற்றையே உண்டு சீவித்திருக்கும். இங்ஙனமே சிரீவைணவனும் வேதங்களைக் களைந்து அவற்றிலுள்ள தேவதாந்தர மந்தராந்தர முதலிய வாக்கியக் குப்பைகளாகிய சாரமற்றைவைகளை நீக்கி சத்தியம் ஞானம் ஆனந்தம் இவற்றையெல்லாம் நம்மாழ்வார் நான்கு பிரபந்தம் என்னும் அமுதமாக விளைவித்தவைகளையே சதா அநுசந்தித்துக் - கொண்டு வாழ்ந்திருப்பான்,
(iii) உப்பைப்போல் இருப்பான். உணவில் உப்பு அதிகப்பட்டால் அது நிந்திக்கப்படும். தன்னை நிந்தை கூறுமிடத்து மறுமாற்றம் சொல்லாது தன்னையழிய மாறியேனும் தன் சொரூபத்தைத் தழைத்திருப்பவனாய் அவர்களுடைய மகிழ்ச்சியே தனது நோக்கம் என்று கருதியிருப்பான். .
(iv) உம்மைப்போல் இருப்பான் (இது பட்டர் அனந்தாழ்வானை நோக்கிச் சொன்னது). எம்பெருமானுக்குத் ததீயாராதனம் நடைபெறும்போது அவரவர் யோக்கியதைக் கேற்ப முதல் திரை முதல் ஏழு திரைகளிலும் இருக்கச் செய்வது சம்பிரதாயம். பட்டர் அனந்தாழ்வானை இந்தச் சோதனைக் குட்படுத்தி அவமானம் செய்தபோது, அனந்தாழ்வானின் முகம் சேஷத்துவ மிகுதியால் அலர்ந்து மகிழ்ந்து விளங்கக் கண்டார். அதனால் அவர் உண்மையான வைணவர் எனப் பெருமைப் பட்டார்.அனந்தாழ்வான்மூலம் வைணவ இலட்சணத்தை அருளிச் செய்தபோது (வைணவ இலட்சணம் அனந்தாழ்வான் பண்புபோல் இருக்க வேண்டுமென்று பாராட்டிக் கூறும்
முறையில்) ‘உம்மைப்போல்' இருப்பான் என்று சொல்லி வைத்தார். பட்டரின் அளவுகோலில் அனந்தாழ்வான் உண்மையான இலட்சணத்தைப் பெற்றிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
(10) அம்மங்கி அம்மாளுக்கு உடையவர் அருளிச் செய்தவை: அம்மங்கிஅம்மாள் என்பவர் திருக்கண்ணபுரம் செல்ல விடைகொள்ளும்போது அருளிச் செய்தவை இந்த ஐந்து வார்த்தைகள்.
(i) அக்கினிச் சுவாலையை அணுகாதே; இங்குத் திருமாலை வெறுப்பவர்களான சிவனடிமார்களையும் மாயாவாதிகளையும் (அத்வைதிகள்) நெருப்பாகக் கருதி அவர்களை அணுகக் கூடாது என்பது.
(ii)அசுசியை மதியாதே: தேகாபிமானிகளாகிய சம்சாரக்கிலேசிகள்.இவர்களைக் கண்டால் கட்டையையும் ஒட்டையும் மதிப்பது போல் ஒரு துரும்பாக மதிக்க வேண்டும் என்பது
(iii) நஞ்சைத்தின்னாதே அன்னியப் பிரயோஜனர்கள் நஞ்சுக்கு ஒப்பானவர்கள் இவர்களிடம் பழகினால் சேதநன்கெடுவானாதலால் இவர்களை நஞ்செனக்கருதி’ அஞ்சவேண்டும் என்பது.
(iv)அபலைகளை அனுகாதே: ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் பயிற்சியின்றி விண் காலம் போக்கித்திரிபவர்கள் அபலைகளாவர். இவர்களைக் கண்டால் காமச்சுவை அறியாத கன்னியர்போல் எண்ணி வாளா இருக்கவேண்டும் என்பது.
(v) ஆர்த்தரோடு கூடி அதுவர்த்தித்துவாராய் ஆர்த்தர் என்பவர் பூர்ணாதிகாரிகள் இவர்களைக் கண்டால் நிலா, தென்றல், சந்தனம், நீர், மலர்கள், தாம்பூலம்போல் உகந்து அவர்களின் திருவடிகளில் சம்பந்தம் பெற வேண்டும் என்பது. “நாம் சொத்து, நாராயணனே சொத்துக்கு உடையவன் அதை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்” என்று மன அமைதியோடு இருப்பவர்கள் இவர்கள். இவர்கள் எப்போதும் திருமாலடியார்களிடம் அடிமைத் தொழில் செய்து அப் பரமசாத்வீகர்களின் அபிமானத்தில் ஒதுங்கி இருந்து வாழக் கடவதான மிக்க உயர்ந்த உறவைப் பெற்றிருப்பவர்கள். இவர்கள் வீடுபேறு அடைவது திண்ணம் என்பது சம்பிரதாயமாக நிலவிவரும் ஓர் உயர்ந்த உண்மையாகும்.