வைணவமும் தமிழும்/வீடுபேற்றிற்குரிய வழிகள்

12. வீடு பேற்றிற்குரிய

வழிகள்

வீடு பேற்றிற்கு, அதாவது முக்திக்கு அநுட்டிக்கப் பெறுவதை ‘இதம் அல்லது வழி என்று வழங்குவர். சமயநூல்களில் முத்தி நிலையை அவாவி நிற்பவர்கள் ‘முமுட்சுகள் என்று வழங்கப்பெறுவர். வைணவ சமயத்தில் முத்தியை அடைவதற்கு சித்தோபாயம், சாத்தியோபாயம்’ என்ற இருநெறிகள் உண்டு.

1. சித்தோபாயம் : சித்தோபாயம் என்பது முன்னமே இருக்கும் உபாயம், அஃதாவது இறைவனாகிய உபாயம். இதனை வேதாந்த தேசிகர், .

          மன்னும் அனைத்துற வாய்மருள்
              மாற்றருள் ஆழியுமாய்த்
          தன்னினை வால்அனைத் துந்தரித்(து)
             ஓங்கும் தனிஇறையாய்
          இன்னமு தத்தமு தால்இரங்
             குந்திரு நாரணனே
          மன்னிய வன்சரண் மற்றோர்பற்
             றின்றி வரிப்பவர்க்கே”

[மருள்அஞ்ஞானம்; அருள்-கருணை ஆழி கடல்:தரித்துதாங்கி, இன்னமுதத்து அமுது - இலக்குமி பற்று-உபாயம்; வரிப்பவர்-சரணம் அடைபவர்; வன் சரண் சித்தோபாயம்]

என்று குறிப்பிடுவர். “சீமந்நாராயணன் ஒருவனே நமக்கு எல்லா வித உறவினன் நம் அஞ்ஞானத்தை ஒழிக்க கூடிய கருணைக் கடல்; தனது சங்கற்பத்தாலே அனைத்தையும் தாங்கி நிகரற்று நிற்பவன்; பெரிய பிராட்டியார் நமக்குப்புருஷ காரமாய் நின்று பரிந்து பேச, நம்மிடம் பின்னும் கருணை வளரப் பெற்றவன். இத்தகைய எம்பெருமான் வேறு உபாயத்தைக் கடைப்பிடிக்க ஆற்றல் இல்லாது பிரபத்தியை அநுட்டிப்பவர்கட்கு மற்ற உபாயத்தின் இடத்தில் நின்று பலன் கொடுக்கும் சித்தோ பாயமாகின்றான்” என்பது இதன் பொருள்.

இந்த நெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு காணப்பெறுகின்றது.

          வீடாக்கும் பெற்றி
              அறியாது மெய்வருத்திக்
          கூடாக்கி நின்றுண்டு
              கொண்டுழல்வீர்!- வீடாக்கும்
          மெய்ப்பொருள்தான் வேத
              முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
          நற்பொருள்தான் நாரா
              யணன். (நான். திருவந் 13)

    [வீடு-மோட்சம்; பெற்றி - உபாயம்; கூடு எலும்புக்கூடு
    மெய்ப்பொருள்-இறைவன்; விண்ணவர்-நித்தியசூரிகள்]

என்ற பாசுரத்தில் திருமழிசைபிரான் எம்பெருமானைச் சித்தோபாயமாக காட்டுவதை அறியலாம். பரமபத நாதனையே சரணமடைந்து உய்ந்துபோகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோர் இடத்தில்,

       அடைக்கலம் புகுந்த என்னை
           ‘அஞ்சல் என்ன வேண்டுமே (திருச்சந்த-92)

என்று அருளிச்செய்துள்ளதையும் உணரலாம்.இதிலும் எம்பெருமான் சித்தோபாயமாகவே கருதப்பெறுகின்றான் என்பதையும் தெளியலாம்.

   திருமங்கையாழ்வாரும்,

        “நள்ளேன் உன்னை யல்லால் -
             நறையூர் நின்ற நம்பியோ” (பெரி. திரு72:1)

என்ற பாசுரஅடியில் சித்தோபாயத்தில் தன் ஊற்றத்தை வெளியிடுகின்றார், இன்னொரு பாசுரத்திலும் இவர்,

          வேங்கடத்து அரியைப் பரிகீறியை
              வெண்ணெய்உண்டு உரலிடை ஆப்புண்ட
          தீங்கரும்பினை, தேனை, நன்பாலினை,
              அன்றி.என்மனம் சிந்தைசெய்யாதே (பெரி திரு. 73:5)

என்று எம்பெருமானையே சித்தோபாயமாகக் கொண்டிருப் பதைக் காணலாம்.

  நம்மாழ்வாரும் ஒரு பாசுரத்தில் இந்த உபாயத்தை,

          பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
              ஆயனை, பொன்சக் கரத்து
          அரியினை அச்சுத னைப்பற்றி யான் இறை
              யேனும் இடரிலனே (திருவாய்,310:4)

      [புள்-கருடன் இறை- சிறிது இடர்-துன்பம்]

என்ற பாசுரப்பகுதியில் எம்பெருமானைச் சித்தோபாயமாகப் பற்றிப் பயன்பெற்றதைக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

நாயக-நாயகி பாவனையில் வரும் மகள்.பாசுரங்களில் இந்தச் சித்தோபாயம் சிறப்புற்று ஓங்கியிருப்பதைக் கண்டு களிக்கலாம். பெற்றோர். அல்லது உறவினர் கூட்டக் கூடுகையின்றியே தலைவனுடன் தானாகவே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவனுடைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள். குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டி அல்லது நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன், என்ற பதற்றத்தை உடையவள் இவள் காலக் கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திருமந்திரத்தில் பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் எல்லோருக்கு சேஷி (தலைவன்) என்றும், சரண்யன் (பாதுகாப்பவன்) என்றும் அறுதியிடப்பெற்றவன் எம்பெருமான்; எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் அவனே. பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் இவை உணரப்பெற்றபின்பு 'நாராயண’ என்ற சொல்லினால் உறுதிப்பெற்றுள்ள எம்பெருமானுடைய சொரூபம் இயல்பு உருவம், குணம், விபூதி முதலியவற்றின் சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்ந்திருப்பவன் - இவன். எம்பெருமான் சாத்தியோபாயமாக இருந்தால் தான் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்ககூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அவன் சித்தோபாயமாக இருப்பவன்; ஆதலால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரண்ம் இல்லை; 'அவனே உபாயம்’ என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெற வேண்டுமென்று பதற்றத்தையுடையவளாக இருக்கின்றாள். ஆண்டாள் பாசுரங்களில் இந்நிலையைக் காணலாம். கண்ணன் இருக்கும் இடத்திற்கு தன்னைக் கொண்டு உய்க்குமாறு வேண்டும். (நாச் திரு. 12) பதற்றத்தை,

          மதுரைப் புறத்து
              என்னை உய்த்திடுமின் (1),
          ஆய்ப் பாடிக்கே
              என்னை உய்த்திடுமின் (2)
          நந்த கோபாலன்
              கடைத் தலைக்கே
          நள் இருட் கண்
              என்னை உய்த்திடுமின் (3)
          யமுனைக் கரைக்கு
              என்னை உய்த்திடுமின் (4)
          துவரா பதிக்கு
              என்னை உய்த்திடுமின் (9)

என்ற பாசுரங்களின் அடிகளில் கண்டு மகிழலாம். பராங்குச நாயகி (நம்மாழ்வார்) உருவெளிப்பாடு கண்டு பேசும்,

          என்நெஞ்சினால் நோக்கிக் காணிர்
              என்னை முனியாதே;
          தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
              நம்பியைநான் கண்டபின்
          மின்னும் நூலும் குண்டலமும்,
              மார்வில் திருமறுவும்,
          மன்னு பூணும் நான்குதோளும்
              வந்துளங்கும் நின்றிடுமே. (திருவாய் 552)

என்ற பாசுரத்தில் தன் பதற்ற நிலையைப் புலப்படுத்துகின்றாள்.

தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தலைவி தாயாரையும் தோழியையும் வேண்டு கின்றாள் பரகால நாயகி (திருமங்கையாழ்வார்).

          தவளஇ ளம்பிறை துள்ளும்முந்நீர்த்
          தண்மலர்த் தென்றலோடு, அன்றில்ஒன்றி;
          துவளஎன் நெஞ்சகம், சோரஈரும்;
          சூழ்பனி நான்துயி லாதிருப்பேன்;
          இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்;
          என்நலம் ஐந்துமுன் கொண்டுபோன
          குவளை மலர்நிற வண்ணர்மன்னு
          குறுங்குடிக் கேஎன்னை உய்த்திடுமின்
- பெரி. திரு.951

[தவள-வெண்ணிறமான முந்நீர்-கடல்]

இப்பாசுரத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் பாசுரங்களிலும் ஆழ்வார்நாயகியின் சித்தோபாய ஊற்றத்தைக் காணலாம்.

2. 'சாத்யோபாயம்' என்பது நம்மால் மேற்கொள்ளப் பெறும் உபாயமாகும். இது பக்தி என்றும், பிரபத்தி என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும்.

(i) பக்திநெறி : பேரன்பின் முதர்ச்சியே பக்தி என்பது, பக்தியை மேற்கொண்டார் பக்தர். பத்தர் எனப்படுவர். பத்தரெனினும் பித்தர் எனினும் ஒன்றேயாகும். உலகில் நோயால் கொள்ளும் பித்தும், மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா இன்பம் தருவது. “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்ற சுந்தரமூர்த்தி அடிகளின் திருவாக்காலும் பக்தர்களின் மேம்பாட்டினை உணரலாகும். குலசேகரப் பெருமாளும் “பேதைமா மணவாளன் தன் பித்தனே’ (பெருதிரு. 3:5)”எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே’ (3:6) “பித்தனாய் ஒழிந்தேன்” (3:7) “பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே” (3.8) என்ற அவர்தம் வாக்குகளால் தம்மைப் “பித்தன் என்றும், பேயன் என்றும் கூறிக் கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பக்தி நிலையை மெய்விளக்க அறிஞர்கள் ‘பக்தியோகம்’ என்று வழங்கி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை,

          எமநியம ஆசனங்கள்
              இயல்ஆவி புலனடக்கம்
          தமதறியும் தாரணைகள்
              தாரையறா நினைவொழுக்கம்
          சமமுடைய சமாதிநலம்
              சாதிப்பார்க்கு இலக்குஆகும்
          அமரர்தொழும் அத்திகிரி
              அம்புயத்தாள் ஆரமுதே5

     [தாரை அறா இடைவிடாத சாதித்தல் அநுட்டித்தல்;
     அம்புயத்தாள் - பெரிய பிராட்டியார், ஆர் அமுது -
     அருளாளன்!]

என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இதில் நுவலப்பெற்றுள்ள எட்டு அங்கங்கள்: (1) இயமம் என்பது அகிம்சை,சத்தியம், திருடாமை, காமத்தை அ! -க்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (2) நியமம் என்பது தூய்மை, உள்ளதைக்கொண்டு மனநிறைவு பெறுதல், வேதாந்த பரிசயம் செய்தல், எல்லாச் செயல்களையும் இறைவனிடம் சமர்ப்பித்தல்; (3) ஆசனம் என்பது, பதுமாசனம் முதலிய ஆசனங்கள் (4) பிராணாயாமம் என்பது, மூச்சை அடக்குதல் (5) பிரத்தியாகாரம் என்பது புலன்களை உலக விஷயங்களின்றும் திருப்புதல், (5) தாரணை என்பது, பகவா னுடைய திருமேனியை மனத்திற்கொள்ளுதல்; (7) தியானம் என்பது, இடைவிடாது இறைவனை நினைத்தல்; (8) சமாதி என்பது, இறைவனை நேரிற் கண்டாற்போன்ற அடைதல். இந்த எட்டு அங்கங்களையுடைய பக்திநெறிவழி ஒழுகுவார்க்குப் பிராட்டியாருக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான்.

இந்தப் பக்திநெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு குறிப்பிடப்பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.

          அறிந்துஐந்தும் உள்ளடக்கி,
              ஆய்மலர் கொண்(டு),ஆர்வம்
          செறிந்த மனத்தராய்ச்
              செவ்வே -அறிந்து அவன்தன்
          பேர்ஒதி ஏத்தும்
              பெருந்தவத்தோர் காண்பரே
          கார்ஒத வண்ணன்
              கழல். (இரண், திருவந்6)

        [ஐந்தும் ஐம்புலன்கள், ஆர்வம்- பக்தி; செவ்வே-
        நன்றாக கார்ஒத வண்ணனை கருங்கடல் நிறத்தினனை]

என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் பக்திநெறியைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்தில் வைத்திருக்கும் ‘விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின்,

          மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
              மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
          ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
              அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.
-பெரியாழ் திரு45.3

          [மார்வம் இதயம்; ஆர்வம்- பக்தி; அரவதண்டம் -
          யமதூதர்களால் வரும் துன்பம்]

என்ற பாசுரப்பகுதியில் இந்நெறியினைக் காணலாம்.

          பூகம் சாந்து என்நெஞ்சமே,
              புனையும் கண்ணி எனதுடைய
          வாச கம்செய்ய மாலையே;
              வான்பட்டாடையும் அஃதே;
          தேசம் ஆன அணிகலனும்
              என்கை கூப்பும் செய்கையே7
(திருவாய் 432)
          [சாந்து-சந்தனம்; கண்ணி - மாலை]

என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அவருடைய பக்தி நிலையைக் கண்டு அநுபவிக்கலாம்.

மெய்விளக்க அறிஞர்கள் இப்பக்திநெறி கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று மூன்று நிலைகளில் பயிற்சி அடையவேண்டிய நெறி என்றும் கூறுவர். (அ). கர்மயோகம்: சாத்திரங்களைப் பயின்ற அறிவினால் சில சடங்குகளையும் கடமைகளையும் தவறாது செய்தல் வேண்டும். இவற்றுள் நித்தியகர்மங்களும் நைமித்திகக் கடமை களும் அடங்கும். நித்திய கர்மங்கள் என்பன சந்தியாவந்தனம், பகவதாராதனம் போன்று நாடோறும் செய்யப் பெறுபவை; நைமித்திகக் கடமைகள் என்பன கிரகணம், கார்த்திகை, சங்கராந்தி, ஆவணிஅவிட்டம், போன்ற விசேட நாட்களில் மேற்கொள்ளப்பெறும் கடமைகளாகும். இறைவனை ஏத்தல், திருத்தலப்பயணத்தை மேற்கொள்ளல், அறம்புரிதல் போன்றவை யாவும் கர்மயோகத்தில் அடங்கும். யாதொரு பலனையும் எதிர்பாராது செய்யப்பெறும் கருமத்தில் மனம் தூய்மையுறுகின்றது. இஃது ஆன்மா தியானத்தில் அழுந்த வழியாகவும் அமைகின்றது.

          பரிவது இல் ஈசனைப் பாடி
          விரிவது மேவல் உறுவீர்!
          பிரிவகை இன்றி.நல் நீர்தூய்
          புரிவ துவும்புகை பூவே. (1.6:1)

என்ற திருவாய்மொழிப் பாசுரதத்தில் பலனை எதிர்பாராது இறைவனுக்குச் செய்யப்பெறும் கருமம் கூறப்பெறுகின்றது.

இறைவன் ஆராதனைக்கு எளியவன் என்பதும் இதனால் பெறப்படுகின்றது. எளியவனாயிருப்பதுடன் ஆராதிப்பார்க்கு இனியனாகவும் இருக்கின்றான் இறைவன் என்பதை,

          ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
          மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை,
          தூய அமுதைப் பருகிப் பருகிஎன்
          மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (1.7:3)

          [ஆயர்-இடையர் மயர்வு அஞ்ஞானம்]

என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இக்கருமயோகத்தினால்தன்னை மறத்தல்,மனத்தைக் கட்டுப்படுத்தல், ஆன்மாதுபவம்பெறல் போன்ற நிலைகள் ஏற்பட்டு சமுசாரத்தில் ஆழ்ந்திருக்கும் ஆன்மா துய்மையுறுகின்றது.

(ஆ). ஞானயோகம்: கருமயோகத்திற்கு அடுத்த நிலை இது. இந்த நிலையை,

          ஞானத்தால் நன்குணர்ந்து
              நாரணன்தன் நாமங்கள்
          தானத்தால் மற்று.அவன்பேர்
              சாற்றினால், வானத்து
          அணிஅமரர் ஆக்குவிக்கும் (இரண்-திருவந்2)


      [தானம்-அன்பின் முடிவெல்லை யானஇடம் சாற்றினால்
      - அநுசந்தித்தால், அணி அமரர்-நித்தியசூரிகள்]

என்பது பூதத்தாரின் திருவுள்ளக்குறிப்பு. கருமயோகத்தில் துய்மை அடைந்த ஆன்மா இந்நிலையில் தியானத்தில் ஆழ்கின்றது. முன்னர்க்குறிப்பிட்ட இயமம், நியமம் போன்ற செயல்களால் ஆன்மா அமைதி நிலையை நாடுகின்றது. அலைந்து திரியும் மனத்தை அங்ஙனம் அலையவிடாமல் நிலைநிறுத்தும் நிலை ஏற்படுகின்றது. அதாவது, மெய்விளக்க அறிஞர்கள் குறிப்பிடும் கைவல்யநிலை (ஆன்மாதுபவம்) உண்டாகின்றது. இந்த யோகத்தினால் தன் ஆன்மா இன்னது என்று தனக்குப் புலனாவதுபோல எல்லாச் சீவர்களிடமும் ஆன்மா என்று ஒன்று இருப்பது தட்டுப்படுகின்றது. எல்லா ஆன்மாக்களும் சமம் என்ற உண்மையும் பளிச்சிடுகின்றது. தியானத்தின்மூலம் ஆன்மாதன் உண்மை நிலையை உணர்ந்து தான் இறைவனைச் சார்ந்திருக்கும் நிலையை அடைகின்றது. அதன்பிறகு அஃது இறைவனை அடைய அவாக்கொள் ளுகின்றது.

          கையபொன் ஆழிவெண் சங்கொடும்
              காண்பான் அவாவுவன்நான்
          மையவண்ணா!மணியே! முத்தமே!
              என்றன் மாணிக்கமே! (திரு விருத்84)


      [கைய கைகளிலுள்ள மைய மையுடைய நிறம்]

என்ற பாசுரத்தில் பராங்குசநாயகி எம்பெருமானாகிய நாயகனைக் காண விரைகின்றாள். தனிமையில் கண்டு கூடிக் குலவி இன்புற வாய்ப்பில்லையாயினும், ஆடவரும் மகளிரும் பலர் கூடிய கூட்டத்திலாயினும் காணப்பெற்றாலும் அது கொண்டு ஆறியிருப்பதாகச் சொல்லுகின்றாள். நாயகனையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்து அந்நினைப்பு மிகுதியால் அவன் எதிரில் நிற்பதாகப் பாவித்து மைய வண்ணா, மணியே, முத்தமே, மாணிக்கமே என்று முன்னிலைப் படுத்திப் பேசுகின்றாள். இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் நாயகி “என் ஆசையை அடக்கமாட்டாமல் வினையொடும் எம்மொடும் நொந்து, கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனம்” (64) என்கின்றாள். ஈண்டு. கனி பகவதது.பத்தாலாகும் இனிய ஆனந்தத்திற்கு உவமை, கட்டிளமைத்தாய் நுகரும் செவ்வியல்லாததாய் அவ்வளவு இனியதல்லாத நமோச்சரன மாத்திரத்திற்கு உவமை. காயின் முதிர்ச்சி கணியாதல்போல், நமோச்சரணத்தின் பயன் அது பவாநந்தமாகும் என்பது உவமையால் உய்த்துணர வேண்டியதாகும் என்பதை அறிதல் வேண்டும். இந்த அவா படிப்படியாக வளர்ந்து பேருருவம் கொள்வதை அவர்தம் பாசுரங்களால் (திருவாசிரியம் 2; பெரிய திருவந், 8; திருவாய். 73:6,83:4:8103.2.10.10:10) அறிகின்றோம்.இந்நிலையில் ஆன்மா தியானத்தில் அழுந்துகின்றது. இந்த உயர் நிலையில் எல்லா உயிர்களிடையேயும் ஊடுருவி நிற்கும் பரமான்மாவின் சாயல் தோன்றுகின்றது. இது திடீரென்று தோன்றி மறையும் நிலையாகும்.

(இ).பக்தியோகம்: ஞானயோகத்துக்கு அடுத்த நிலையே பக்தியோகம் என்பது. இந்த நிலையிலும் தியான நிலை உண்டு இந்த தியான நிலையில்தான் ஆன்மா தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினை அறிகின்றது. இது ஞானநிலையின் இறுதிப்படியும் பக்தி நிலையின் முதற்ப்டியும் ஆகும்.

          உய்த்துணர்வு என்னும்
              ஒளிகொள் விளக்கேற்றி
          வைத்து அவனை
              நாடி வலைப்படுத்தேன்
முன்-திருவந்94)

என்ற பேயாழ்வாரின் பாசுரத்தில் இந்த நிலையினை அறியலாம். ஞானமே பக்தி நிலையாக முதிர்கின்றது. இதுவே “ஞானம் கனிந்த நலம்" (இராமாநு. நூற்.66) என்று அமுதனார் குறிப்பிடுவது. இந்த நிலையில் முமுட்சுகள் தம் முனைப்பை அகற்றி இறைவனுடைய சங்கற்பத்துக்கு அடிபணிந்து இறைவனுடன் நிரந்தரத்தொடர்பு கொள்வதற்குத் தயாரா கின்றனர். இந்த நிலையில்தான் தமக்கும் இறைவனுக்கும் அறுபடாத தைலதாரைபோன்ற தொடர்பு ஏற்படுகின்றது. நாளாக நாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல் தோன்றுகின்றது. வானநூல் அறிஞர் பூமியின் சிறுமையையும், அதனை ஈர்த்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வதுபோல் பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும் எல்லா உயிர்களையும், புரக்கும் இறைவனின் பெருமையையும் உணர்கின்றனர். இந்நிலையில் சீவான்மா பரமான்மாவுடன் கலக்கின்றது. அப்பொழுது அது கடலில் கிடக்கும் கடற்பஞ்சு போன்ற நிலையினை அடைகின்றது.

(ஈ).பக்திநிலையின்பிரிவுகள்: இந்த பக்தி நிலையையும் பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்ற பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டும் மரபும் உண்டு.இந்த நிலையை ஆழ்வார்பாசுரங்களில் ஆங்காங்குக் காணலாம். பரபக்தி என்பது எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவல் : அவனை நேரில் காணல். பரஞானம் பின்பு மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல் பரமபக்தி என்பதை அறிதல் வேண்டும். மற்றொரு விதமாகவும் பண்டைய ஆசிரியர்கள் இவற்றை விளக்குவர், எம்பெருமானோடு கலந்த போது சகிக்கும்படியாகவும், பிரிந்தபோது துக்கிக்கும்படி யாகவும் இருக்கும் நிலை 'பரபக்தி’; எம்பெருமானுடைய முழு நிறைவு நேர்காட்சி 'பரஞானம்'; அவனுடைய அநுபவம் பெறா விடில் நீரைவிட்டுப் பிரிந்த மீன்போல் மூச்சு அடங்கும்படி இருத்தல் ‘பரம பக்தி' என்று விளக்கம் தருவர் அவர்கள்.

இம் மூன்றுநிலைகட்கும் முறையே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ஆகிய மூன்று பெருமக்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். ஆயினும் இம் மூன்று நிலைகளும் இம் மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி இருக்குமாயினும் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொருவரிடை யேயும் தலையெடுத்து மற்றவை அடங்கியிருக்கும். பொய்கை யாழ்வாருக்குப் பரஞானம் பரமபக்திகளின் சாயை மாத்திரம் தோன்றி பரபக்தியே விஞ்சியிருக்கும். பூதத்தாழ்வாருக்குப் பரபக்தி முற்றிப் பக்குவமாகி பரமபக்தித் தோன்றக் காரணமான பரஞானமே விஞ்சியிருக்கும். பேயாழ்வாருக்குப் பரமபக்தியே விஞ்சிப் பரபக்தி பரஞானம் ஆகிய இரண்டும் அதற்குள்ளயே மறைந்து கிடக்கும். இம் மூவருடைய அருளிச்செயல்களினின்றும் இந்த நிலைகளைக் கண்டறிந்து தாம் கண்டவற்றை இவ்வாறு வகுத்தருளினர். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் ஒளியும் மற்றவைகளின் ஒளியின்மையும் எம்பெருமானுடைய சங்கற்பத்தினால் உண்டானவை என்பது இவர்தம் உள்ளக்கிடக்கையாகும். ஆகவே, இதில் எவ்வகையான மறுப்புக்கும் இடம் இல்லை. இந்த மூன்று நிலைகளும் முத்தியிலே உண்டாகக் கூடியவை யேயாயினும் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தனவாகும். இனிஇவற்றை எம்பெருமானிடம் வேண்டிப் பெறுதலும் உண்டு.

பொய்கையார் “வையம் தகளி” என்றும், பூதத்தார் “அன்பே தகளி என்றும் இரண்டு திருவிளக்குகள் ஏற்றிக் காட்டினர். அந்த ஒளியில் பேயார் 'கண்டேன், கண்டேன்’ என்று களிப்புடன் பேசுகின்றார்.

     “மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்,
     தன்னொடும் மாயனைக் கண்டமைகாட்டும் தமிழ்த் தலைவன்”

ஆன்றோ இவர்? ஒவ்வொரு திருவந்தாதியிலும் முதற் பாசுரத்தின் உள்ளீடான பொருளை ஆதாரமாகக் கொண்டு பூருவர்கள் சுவையாக நிர்வகித்தமை இது ‘எம்பெருமானை உபய விபூதிக்கும் உரியவன் என்றார் பொய்கையார், அவன் ‘நாராயண' ஒலியின்பொருள் என்றார் பூதத்தார்: நாராயன ஒலியுடன் ‘திரு’ (g) என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றார் பேயார்”

இங்ஙனம் ஒவ்வொரு ஆழ்வார் செய்த உதவியை வேதாந்த தேசிகர்,

          பாட்டுக்கு உரிய பழைய
          மூவரைப் பண்டொருகால்
          மாட்டுக்கு அருள்தரும் மாயன்
          மலிந்து வருத்துதலால்
          நாட்டுக்கு இருள்செக நான்மறை
          அந்தி நடைவிளங்க
          வீட்டுக்கு இடைக்கழிக் கேவெளி
          காட்டும் மெய்விளக்கே7

     [பழையவர்-முதலாழ்வார்கள் மாடு-செல்வம்: மலிந்து
     அதிகமாக; நாடு - உலகம் இருள்-அஞ்ஞானம்; வீடு -
     திருக்கோவலூரில் உள்ள வீடு, மெய்விளக்கு மூன்று
     அந்தாதிகள்]

என்று சிறப்பித்துப் பேசுவர். எம்பெருமான் முதலாழ்வார் களைக்கொண்டு மூன்று திருவந்தாதிகளைப் பாடுவித்து உலகிலுள்ள அஞ்ஞான இருளைப் போக்கிப் பக்தி, பிரபத்திகளாகின்ற உபாயங்களை வெளியிட்டு உலகினை உய்வித்தான் என்பதைப் பாசுரத்தின்மூலம் விளக்குகின்றார் தூப்புல் புலவர் தேசிகர்.

(ii). பிரபத்திநெறி: உயர்ந்தோர் தாழ்ந்தோர், கற்றவர். கல்லாதவர் என்ற வேறுபாடின்றி எல்லோராலும் மேற் கொள்ளக்கூடிய நெறியே பிரபத்தி நெறியாகும்8 இந்தநெறி சரணாகதி 'பரந்யாசம்' 'பரசமர்ப்பணம்' "உபாயாதுஷ்டானம்” என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும். சர்வஇரட்சகனான எம்பெருமானின் கருணையின்மீது பெரு நம்பிக்கை கொள்வதே இந்நெறியைக் கடைப்பிடிப்போரிடம் வேண்டப் பெறுவது. பகவத்கீதையில் சரமசுலோகத்தில், பேசப்பெறு வதும் இந்நெறியேயாகும். மணிவாசகப்பெருமானும் இச் செந்நெறியைக்குறிப்பிடுகின்றார் (திருவா அடைக்கலப்பத்து.

இப்பிரபத்திநெறியில் ஐந்து அங்கங்கள் இருப்பதைக் காட்டுவர் ஆசாரியப் பெருமக்கள், முதலாவது ஆநுகூல்ய சங்கற்பம் என்பது. இது எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றைச்செய்வதாக உறுதிகொள்ளலாகும்.இரண்டாவது பிராதிகூல்யவர்ஜனம் என்பது. அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யாதிருக்க உறுதிகொள்ளல்; அல்லது அவற்றைச் செய்யாது விடுதலாகும் இது. மூன்றாவது மகாவிசுவாசம் என்பது. அவன் நம்மைக் காக்கவல்லவன் என்று தேறி, தவறாது நம்மைக் காப்பான் என்று உறுதியாக நம்புதலாகும் இது. நான்காவது கோபத்ருவரணம் என்பது, பக்தியோகம் முதலிய உபாயங்களை அநுட்டிக்க ஆற்றலற்ற தம்மிடம் அருள்புரிந்து அவ்வுபாயங்களிடத்தில் நின்று பலன் தருமாறு அவனை வேண்டுதல் இதுவாகும். ஐந்தாவது கார்ப்பண்யம் என்பது பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரம் இல்லாமையையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்தினிடமோ, வீடுபேற்றைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையை அநுசந்தித்தல்; அவனது இவ்வதுசந்தாநத்தால் முன் தமக்கு இருந்த முனைப்பு ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானின் கருணை தம்மீது வளர்ந்தோங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்சலி10 முதலிய வற்றைச் செய்தல் இது.

(அ). எந்தவித நியமும் இல்லை: இந்நெறியைக் கண்ணன் போர்க்களத்தில் பார்த்தனுக்கு உபதேசித்தமையால், இந்த நெறிக்கு தேச நியமம், காலநியமம் முதலியவரையறை இல்லை என்பது தெளிவு. பூர்வசன பூஷணமும்,

      ‘பிரபத்திக்கு தேச நியமும் கால நியமும் பிரகார நியமும்
      அதிகாரிநியமமும் பல நியமும் இல்லை' (24)

என்று குறிப்பிடுவது இக் கருத்தை அரண் செய்வதாக அமைகின்றது.

தேச நியமமாவது, தூய இடங்களில்தான் (புண்ணிய தலங்களில் தான்) செய்யவேண்டும், ஏனைய இடங்களில் செய்யலாகாது என்பது; காலநியமமாவது, வேனிற்காலம் முதலான காலங்களில்தான் செய்யவேண்டும், ஏனைய இடங்களில் செய்தலாகாது என்பது பிரகாரநியமமாவது. நீராடல் கால் கழுவுதல் என்பன போன்றவற்றை முன்னதாகச் செய்ய வேண்டும், வேறு வகையால் செய்யவொண்ணாது என்பது; அதிகாரி நியமமாவது, முதல் மூன்று வருணத்தார்கள் அல்லாதவர்களாக இருக்கலாகாது என்பது; பல நியமமாவது இம்மை மறுமைப் பயன்களில் இன்னபலத்திற்கு இது சாதனம், மற்றைய பலன்களுக்கு இது சாதனம் அன்று என்பது.

(ஆ). எடுத்துக்காட்டுகள் : இரவணனிடத்திலிருந்து வந்த வீடணனைத் தம்முடன் சேர்த்துக் கொள்ள GT-7 என்று சாம்பவானும், சுக்கிரீவனும் தம் கருத்தினைத் தெரிவித்தனர். இராமன் சிறிய திருவடியை வினவ, அவன் தன் கருத்தைத் தெரிவித்தது இது. “மனத்துரய்மையையுடைய வனான வீடணன் சரணம் என்று வந்த தேசத்திலும் காலத்திலு குறைபார்க்கக்கடவதன்று. அவன் வந்ததுவே தேசமும் அவன் வந்ததுவே காலமும்” என்று சிறிய திருவடி தம் கருத்தைத் தெரிவித்தான். இராமனும் அதனை ஒப்புக்கொண்ட்ான். இதனால் பிரமத்திக்குத்தேச கால நியமங்கள் இல்லை என்பது உறுதியாகின்றது.

இவ்வுலக மக்களுள் ஒருவருக்கு பகவானை அடைய வேண்டும் என்ற “ருசி” உண்டானால், அந்த ருசி தீருவதற்கு முன்பே அது தோன்றின நேரத்திலேயே இறைவனைப் பற்றி விடவேண்டும். இது மந்திர இரத்தினத்தில் முதற்பதமான் மதுப்பால் (ஸ்ரீமதே-என்பது) தோன்றுகின்றது என்பதாகக் குறிப்பிடும் ஸ்ரீவசனபூஷணம் (28).

மாதவிலக்காக இருக்கும் திரெளபதியைத் துச்சாதனன் அவைக்கு இழுந்து வருகின்றான்."சேலையும் களைவாய்” என்ற அண்ணனின் ஆணைக்குப் பணிந்து அதனைச் செய்ய முற்படும் போது “விதியோ கணவரே!!” என்று கூவுகின்றாள் திரெளபதி,“பாண்டவரை மின்செய்கதிர்விழியால் நோக்கினாள்.” “வான் சபையிலுள்ள, கேள்வி பல உடையோர் கேடிலா நல்லிசையோர், வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள் மேலோர்" இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திக்கற்றவருக்குத் தெய்வந்தானே துணை? அந்தப் பேயன் துகிலுரிகையில் திரெளபதி உட்சோதியிற் கலந்தாள். உலகினை மறந்தாள். கண்ணனிடம் பிரபத்தி செய்து விடுகின்றாள். ஒருமையுறுகின்றாள். கண்ணபிரான் அருளால் துச்சாதனன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்கின்றன. இதனால் பிரபத்தி செய்வார் தூயராய் நின்று பிரபத்தி செய்ய வேண்டும் என்ற நியதி இல்லாமை தெளிவாகின்றது (ஸ்ரீவசபூஷ,29,30).

பார்த்தனுக்குப் பிரபத்தி நெறி போர்க்களத்தில் உபதேசிக்கப்பெற்றது. இதனால் புண்ணிய பூமியில்செய்ய வேண்டும் என்ற நியதி இல்லாது போயிற்று வேனிற் காலத்தில் செய்ய வேண்டும் என்ற காலநியதியும் இல்லாது போயிற்று, நீராடிய பின்தான் செய்யவேண்டும் என்ற பிரகார நியமும் இல்லாது போயிற்று. நீசர் நடுவே இவ்வர்த்தம் கேட்டதால் தூய்மையின்மையும் விலக்கில்லை என்பது தெளிவாயிற்று. மேலும், இதனால் பிரபத்தியைச் செய்யத் தொடங்குகால் தூய்மையில்லாதிருப்பவனுக்கு தூய்மை சம்பாதிக்க வேண்டா; தூய்மையாயிருப்பவனுக்கு தூய்மை இல்லாமையைச் சம்பாதிக்க வேண்டா என்று கூறுவர் பிள்ளை உலகஆசிரியர் (ஸ்ரீவச.பூஷ 31),

தருமன் முதலிய குந்தியின் மக்கள் மூவரும் மாத்ரியின் மக்கள் நகுல சகாதேவர்களும் திரெளபதியோடு சேர்ந்து கண்ணனைச் சரண்புக்கனர். இவர்கள் சத்திரியர்கள். திரெளபதி பெண், இவளும் கண்ணனைச் சரண் அடைந்தாள். காகம் (காகாசுரன்) ஒரு பறவை. அதுவும் இராமாபிரானைச் சரண் அடைந்தது. காளியன் ஒரு கொடிய நாகம், அதுவும் கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தது. கசேந்திரன் என்ற யானை ஒரு விலங்கு அவனும் நாராயணனைச் சரண் அடைந்தான். வீடணன் அரக்கர் குலத்தவன்; அவனும் காகுத்தனைச் சரண் புக்கான். பெருமாள் (இராமர்) சத்திரியப் பிறப்புடையவர்) அவரும் வருனனைச் சரண் புக்கர் இளையபெருமாள் சத்திரியர்; அவரும் பெருமாளுக்கு அடிமை செய்தார். இங்ஙனமே முசுகுந்தன் (மானிடன்), கத்திரபந்து(சண்டாளன்), காளியன் மனைவிமார்கள், இந்திரன் முதலிய தேவர்கள் இராக்கதர்களால் அடிபட்டவாணர வீரர்கள் ஆகியோர் சரண் புரிந்த செயல்களையும் அறியலாம். இதனால் பிரபத்திக்கு "ருசி” யுடையார் அனைவரும் அதிகாரிகளாகின்றனர் என்பதை உளங்கொள்ளல் வேண்டும்.

இதற்குத்தான் பிரபத்தி செய்யவேண்டும் என்ற பல நியமும் இல்லை. தருமபுத்திரர் முதலாயினோருக்கு அரசு அடைதல் பலம் திரெளபதிக்குப் பலம் ஆடை; காகத்திற்கும் காளியனுக்கும் பலம் உயிர்; கசேந்திரனுக்குப்பலம் கைங்கரியம்: வீடணனுக்குப் பலம் இராமனை அடைதல்; பெருமாளுக்குப் பலம் கடலைத் தாண்டுதல், இளையபெருமாளுக்குப் பலம் பெருமாளைப் பின் தொடர்ந்து அடிமை செய்தல் (ஸ்ரீவசபூஷ35, 36). எனவே, பிரபத்திக்குப் பல நியமும் இல்லை என்பது தெளிவாகின்றது.

பிரபத்திற்கு விஷய நியமமே முக்கியமானது (ஸ்ரீவச பூஷ25,37,38). இன்ன விஷயத்திலே செய்ய வேண்டும் என்ற நியமமே உள்ளது. குணபூர்த்தி உள்ள இடமே விஷயமா கின்றது, இஃது இறைவனுடைய ஐந்து நிலைகளிலும் கண்ணாலே காணலாம்படி இருக்கும் அர்ச்சாவதாரமேயாகும். இங்குத்தான் எல்லா குணங்களும் நிறைந்திருக்கும். பிரபத்திக்கு வேண்டப்படும் வாத்சல்யம், செளலப்பியம் முதலான குணங்கள் இருட்டறையில் விளக்குப்போல் பிரகாசிப்பது இங்குத்தான் என்பது அறியத்தக்கது. பரமபதத்திலுள்ளாரும் சீலம் முதலிய குணங்களை அநுபவிப்பதற்கு இங்குத்தான் வருகின்றனர். மயர்வற மதிநனம் அருளப்பெற்ற ஆழ்வார் பெருமக்கள் பல இடங்களிலும் இந்த அர்ச்சையில்தான் பிரபத்தி பண்ணினார்கள் என்பது ஈண்டு அறியப்படும்.

(இ). ஆழ்வார் பாசுரங்களில் : ஆழ்வார் பாசுரங்களில் இந்நெறியை அறிந்து தெளியலாம். பொய்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் இந்நெறி குறிப்பிடப் பெறுகின்றது.

அடைந்த அருவினையோடு
          அல்லல்நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய
          வேண்டில்-நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான்
          முரணழிய முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான்
          சரண்
(முதல், திருவந்: 59)

[அடைந்த பற்றிக்கிடக்கும், தீவினை-பழவினை; அல்லல் மனத்துன்பம்; பாவம்-இப்போது செய்வது; மிடைந்தவை - ஆன்மாவை மூடிக்கிடப்பவை; மீண்டு நீங்க; நுடங்கிடை-மெல்லிய இடையையுடைய பிராட்டி]

என்று, வினை, நோய், பாவம் இவை வாசனையோடு நீங்க வேண்டுமாயின் சக்கரவர்த்தித் திருமகளைச் சரணம் புகுதலேயாகும் என்ற குறிப்பினை இப்பாசுரத்தில் கண்டு தெளியலாம்.

திருமங்கையாழ்வார் நைமிசாரண்யத்து எம்பெருமான் திருவடிக் கமலங்களில் சரண்புகுவதைப் பாசுரங்கள் தோறும் ஒரு முறைக்கு ஒன்பதுமுறையாக ‘திருவடிஅடைந்தேன்’ என்று சொல்லுவதைக் காண்கின்றோம். பிராட்டியை முன்னிட்டுச் சரணாகதி செய்வது சொரூபமாகையால் இவரும்,

          தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!
          - - - - - - - - - - - - - - - - - - - - - - -
          நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்

- பெரி திரு.1.6;9

என்று பெரிய பிராட்டியார் சம்பந்தத்தை முன்னிட்டுப் பிரபத்தி செய்வதைக் காணலாம். இந்த ஆழ்வார்,

          கூறாஜவர் வந்து குமைக்கக்
              குடிவிட் டவரை
          தேறா துன்னஅடைந் தேன்திரு
              விண்ணகர் மேயவனே! - பெரி. திரு.6.2;7


    [கூறா-பாகமாக, ஐவர் ஐம்புலன்கள்; குமைக்க இம்சிக்க;
    குடிவிட்டவர்- இந்திரியங்கள்; தேறாது நம்பாமல்]

என்று திருவிண்ணநகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுவதைக் காணலாம். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. அவற்றை நம்பாமல் உன்னைச் சரண் புகுகின்றேன். காத்தருள்க’ என்று வேண்டுவதைப் பாசுரத்தில் கண்டு மகிழலாம். இதே ஆழ்வார்,


          கல்தேன் பாய்ந்தொழுகும்
              கமலச்சுனை வேங்கடவா!
          அற்றேன் வந்தடைந்தேன்
              அடியேனையாட் கொண்டருளே - பெரி.திரு. 1.9;9

      [அற்றேன்-உனக்கு அற்றுத் தீர்ந்தேன்]


என்று திருவேங்கடமுடையானையும் சரண் அடைவதைக் காணலாம்.இவர் திருக்கண்ணபுரத்துக் கருமணியிடமும் சரண் அடைவதை "அம்மானை அமுதத்தை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே" (8.9:2) என்று பாசுர அடியால் அறியலாகும்.

சரணாகதி தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்நர்களின் தலைவரான நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய் மொழியில் "நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” (591) என்றும், “கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்"(5.8:11) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றார். “எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந் தாய்"(5.7:10) என்று எம் பெருமான் தனக்குச் சரணாக அமைந்தமையையும், “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" (610:10) என்று தாம் எம்பெருமான் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார். இவ்விடத்தில்,

          “சேவிபக்கல் சேஷபூதன் இழியும்
          துறை, பிரஜை மூலையிலே வாய்
          வைக்குமாப் போலே” (முமுட்சு-14)
      [சேஷி தலைன், சேஷபூதன் சேதநன்; பிரஜை-குழவி]


என்ற முமுட்சுப்படியின் வாக்கியத்தையும் நோக்கலாம். பால் பருகும் பச்சைக்குழவி எங்ஙனம் தாயினுடைய மற்ற அவயங்கள் யாவையும் விட்டுத் தான் உயிர் வாழ்வதற்கிடனாய் உள்ள அவள் கொங்கையிலே வாய் வைக்கின்றதோ, அங்ஙனமே சேவியாகின்ற எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடி களையே சீவன் பற்றுகின்றான் என்பதை இந்த வாக்கியம் அழகாகப் புலப்படுத்துவதை அறியலாம். முந்திய செயல் எவ்வாறு குழந்தைக்கு இயல்பாய் அமைந்ததோ, அவ்வாறே பிந்திய செயலும் சேதநனின் சொரூபத்திற்கு இயல்பாய் அமைந்துள்ளது என்பதைத் தெளியலாம். மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தயாமித்துவம் அர்ச்சை, என்னும் இறைவனுடைய ஐந்து நிலைகளையும் உள்ளங்கை நெல்லி போன்று கண்டவர்கள், இந்த ஐந்து நிலைகளிலும் காக்கும் இயல்பினதும், அடையத் தக்கதும், எல்லாத் திருக்குணங்களும நிறைந்ததுமான இடம் அர்ச்சாவதாரமே என்று தெளிந்தவர்கள். இவர்கள் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்வ தற்குப்” (திருவாய் 33;1) பதறிப் பலகாலும் பிரபத்தி பண்ணுகின்ற அளவில், பல இடங்களிலும் அர்ச்சாவதாரத்தில்தான் பிரபத்தி செய்தனர் என்பதை மேலே கண்டோம்.

        “ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும்
        அர்ச்சாவதாரங்களிலே” (gவசபூஷ38)

என்பது ஸ்ரீவசனபூஷண வாக்கியம் முமுட்சுப்படியிலும்,

          "இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள்
          போலன்றிக் கண்ணாலே காணலாம்படி இருக்கும்

(முமுட்சு-140)

என்று இவ்வவதாரத்தின் எளிமை பேசப்பெறுகின்றது.

பகவானை உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டப் பெறும் குணங்கள் வாத்சல்யம்’, ‘சுவாமித்துவம்’,'செளசீல்யம்’, செளலப்பியம் என்பவையாகும். இவற்றுள் வாத்சல்யம்’ என்பது கன்றினிடத்துப் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்வம் என்பது உடையவனாயிருக்கும் இருப்பு:செளசீல்யம் என்பது உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளல்ப்பியம் என்பது எளியனாயிருக்கும் இருப்பு. இந்தத் திருக்குணங்கள் “இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே” (யூரீவச்பூஷ-40) என்று ஸ்ரீவசனபூஷணம் குறிப்பிடுகின்றது. இதனால்தான் பிரபந்நர்களின் தலைவரான சடகோபர் அர்ச்சாவதராங்களில் இன்று மிகப்பெரும்புகழுடன் திகழும் திருவேங்கடமுடையானிடம் சரண்புகுகின்றார்.

          ‘அகலகில்லேன் இறையும்'என்று
              அலர்மேல் மங்கை உறைமார்பா
          நிகரில்புகழாய் உலகம் மூன்று
              உடையாய்! என்னை ஆள்வானே!

          நிகரில்அமரர் முனிக்க ணங்கள்
              விரும்பும் திருவேங் கடத்தானே!
          புகல்ஒன்று இல்லா அடியேன் உன்
              அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. - திருவாய் 6.10:10.


      [இறை-மிகச்சிறிய நிகர்-ஒப்பு: புகல்-பற்றுக்கோடு]

என்ற பாசுரத்தில் இதனைக் காணலாம். மேலே குறிப்பிட்ட நான்கு திருக்குணங்களும் இறைவனைப் பற்றுகைக்குத் துணை செய்யும் விளக்கத்தைப் பாசுரத்தில் காணலாம்.நிகரில் புகழாய் என்பதனால் 'வாத்சல்யம்’ என்ற திருக்குணமும்’ ‘உலகம் மூன்றுடையாய்' என்பதனால் 'சுவாமித்துவம்' என்ற பெருங் குணமும், 'என்னை ஆள்வானே' என்பதனால் 'செளசீல்யம்’ என்ற மேன்மைக் குணமும், 'திருவேங்கடத்தானே' என்பதனால் சேதநன்கண்டு பற்றுகைக்கு எளியனாக இருக்கும்'செளலப்பியம்’ என்ற உயர்ந்த குணமும் விளக்கம் பெறுவதாக ஆன்றோர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். இங்ஙனம் பிரபத்திநெறியைத் தெளிவாக எடுத்துரைத்து வற்புறுத்துவன ஆழ்வார்களின் பாசுரங்கள்.