வைணவமும் தமிழும்/வைணவ உரைவளம்



6.வைணவ உரைவளம்

வைணவம் உரைவளத்தால் ஏற்றம்பெற்றது என்றும், சைவம் சாத்திர வளத்தால் சிறப்புற்றது என்றும் பெரியோர்கள் பணிப்பதுண்டு. இந்த இரண்டு சமயங்களையும் நுணுகி ஆராய்வாருக்கு இது தெளிவாக புலனாகும்.

உரையாசிரியர்கள்: இவர்களை வைணவப்பெருமக்கள் 'வியாக்கியாதாக்கள்' என்று குறிப்பிடுவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களையும் அவற்றின் பொருள் சிறப்புகளையும் ஆழ்வாரிடம் நேரில் பெற்று அவற்றை உலகில் பரவச் செய்தவர் நாதமுனிகள். ஆதலின் அப்பெரியாரையே முதல் உரையாசிரியராகக் கொள்வது வைணவ மரபு. அவர் முதலாக வந்த அவ்வுரை உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார் (நாதமுனிகளின் பேரர்), பெரியநம்பிகள், திருமாலையாண்டான், இராமாநுசர் காலம்வரையிலும் கேள்விவழியாகவே வழங்கி வந்து எம்பெருமானார் காலத்தில் தான் 'வியாக்கியானம்’ என்ற பெயரால் எழுத்து வடிவம் பெற்றது. இங்ஙனம் உரை வளர்ந்த வரலாற்றை இவண் காண்போம்.

1. ஆறாயிரப்படி : இராமாநுசர் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்கள் செழித்து வளரத் திருவுள்ளங்கொண்டார். முதன்முதலாகத் திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ற தம் சீடரைக் கொண்டு 'ஆறாயிரப்படி' என்ற வியாக்கியானம் இட்டருளினார்.

தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறா யிரம்.[1]

என்று கூறுவர் மணவாளமாமுனிகள். 'ஆறாயிரப்படி' என்பது ‘ஆறாயிரக் கிரந்தங்கள்’ என்னும் அளவினையுடையது என்பது பொருள். ஒற்று ஒழித்து உயிரும் மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துகளையுடையது ஒரு கிரந்தம் எனப்படும்.[2] 'படி' என்பது 'அளவு' என்னும் பொருளையுடையதாக இவ்வியாக்கியானம் செய்யப்பட்டதாதலின் 'ஆறாயிரப்படி' என்ற பெயரைப் பெற்றது. இறைவனைப்பற்றி நுவல்கின்ற 'விஷ்ணுபுராணம்' ஆறாயிரம் கிரந்தங்களையுடையது. இதனையொட்டி இறைவனைப்பற்றிக் கூறுகின்ற இத்திருமறைக்கும் அத்தொகையளவிலேயே இவ்வியாக்கியத்தை அருளிச்செய்தார் பிள்ளான்.

2. ஒன்பதினாயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் நஞ்சீயர்.

தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை ஆய்துரைத்தது
ஏரொன் பதினா யிரம்.[3]

என்பர் மணவாளமாமுனிகள். பிரம்மசூத்திரத்திற்கு இராமாநுசர் அருளிச் செய்த 'ஸ்ரீபாஷ்யம்’ ஒன்பதாயிரம் கிரந்தங்களையுடையதாதலின் அத்தொகையளவில் 'ஒன்பதினாயிரப்படி' என்னும் இவ்வியாக்கியானம் எழுந்தது. இதுபற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு.

வரலாறு இது: நஞ்சீயரின் ஆசாரியர் பட்டர். அவரிடம் ஆறாயிரப்படியை முறைப்படி கேட்டவர் நஞ்சீயர். அதனைச் சற்று விரிவாகச் செய்யத் திருவுள்ளம் பற்றினார். இதனைத் தம் ஆசாரியரிடம் விண்ணப்பித்து அவர்தம் இசைவு பெற்று ஒன்பதினாயிரப்படி என்ற இதனை அருளிச் செய்தார். பட்டர் திருநாடலங்கரித்த பின்னர் ஆசாரிய பதவி நஞ்சீயரை வந்தடைந்தது. இந்த ஒன்பதாயிரப்படியை செவ்வைப்படியாக எழுதித் தரும் பொறுப்பு இவர்தம் சீடர்களில் ஒருவரான ‘நம்பூர் வரதராசர்' என்பாருக்குத் தரப்பட்டது. அவரும் தம் ஊரில் இதனை எழுதிக் கொண்டு வருவதாகச் சொல்லி அதனை வாங்கிச் சென்றார்.

சென்றவர் காவிரியைக் கடந்து செல்லும்போது ஓரிடத்தில் நீரில் நீந்திச் செல்லும் நிலை வந்தது. பட்டோலையைத் தலையில் கட்டிக்கொண்டு நீந்திச் செல்லுகையில் அது எப்படியோ வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கரையை அடைந்த இவர் அவ்விழப்புக்கு மிகவும் வருந்தினார். வீட்டினை அடைந்தவர், நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு தம் திருவாராதனப் பெருமாளுக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து, தாம் மாத்திரம் உணவு கொள்ளாமல் சயனித்துக் கொண்டார். அந்த இரவில் திருவரங்கத்து இறைவன் அவர் கனவில் எழுந்தருளி ”அன்பனே, ஏன் வருந்துகின்றாய்? உன்னுடைய ஆசாரியனை முன்னிட்டு கொண்டு நீ எழுதத் தொடங்கினால் நாம் உனது நினைவிலிருந்து கொண்டு உதவுவோம்” என்று கூறி மறைந்தனன்.

வரதராசரும் இறைவன் பணித்தவண்ணம் எழுதத் தொடங்கி சில நாட்களில் ஒன்பதினாயிரப்படியையும் எழுதி முடித்தார். தாம் தமிழில் கற்றுத் துறைபோகிய வித்தகராதலின் பற்பலஇடங்களில் சில சிறப்புப் பொருள்களையும் எழுதினார். நிறைவு செய்த பணியை நஞ்சீயரிடம் சமர்ப்பித்து, அவரிடம் நிகழ்ந்தவற்றை அனைத்தையும் விண்ணப்பிக்க, நஞ்சியரும் அவரது கூரிய அறிவிற்கு மெச்சி அவரை ஆரத்தழுவி “இவர் இன்று முதல் நம்முடைய பிள்ளை; இவருடைய திருநாமமும் கலி கன்றிதாசர்”, என்று அருளிச் செய்து இவரைத் தம் அணுக்கத் தொண்டராக்கிக் கொண்டார். அன்று முதல் வரதராசருக்கு 'நம்பிள்ளை’ என்ற திருநாமமும்வழங்கலாயிற்று.

3. பன்னிராயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர்.

அன்போ டழகிய மணவாளச்சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா-தம்பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்தது
ஏதமில்பன் னிரா யிரம்.[4]

என்பர் மணவாள மாமுனிகள். 'பாகவதம்' பன்னிராயிரம் கிரந்தங்களையுடையது. அதனையொட்டி அத்தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. இந்த ஆசிரியரைப்பற்றியும் ஒரு சுவையான வரலாறு உண்டு. வரலாறு இது: இவர் இல்லற வாழ்க்கையினர். ஒருநாள் ஓர் இடத்தில் சேர்ந்து கற்கும் மாணாக்கர்களைக் கான நேர்ந்தது. அவர்களை நோக்கி “நீங்கள் கற்பது என்ன” என்று வினவினார். அவர்களும் இவர் எழுத்துவாசனை அற்றவர் என்பதை அறிந்தவர்களாதலின் 'முசல கிசலயம்'[5] படிப்பதாக மொழிந்தனர். இவரும் அதனையறியாது தம் ஆசிரியரான பெரியவாச்சான்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்தார். பிள்ளையவர்களும் நகைத்து “நீர் கல்வி வாசனையே அறியாதவ ராதலின்”உலக்கை தளிர்க்குமோ? ஆதலின், இதனை நீர் ஏன் கேட்கின்றீர்? உமக்கு இதனால் ஆக வேண்டியதென்ன? என்று எள்ளி நகையாடியுள்ளனர் என்று விளக்கினார். இவரும் பெருநாணம் கொண்டு பிள்ளையவர்களின் திருவடியில் விழுந்து வணங்கி “அடியேனைப் புலவனாகும்படி திருவருள் புரிதல் வேண்டும்” என்று வேண்டினார். பிள்ளையவர்களும் முப்பத்திரண்டு அகவை முதிர்ந்த இவரை மாணாக்கராக ஏற்றுக்கொண்டு அனைத்தையும் கற்பித்தார். இதனால் இவரும் சிறந்த புலவரானார். 'முசலகிஸலயம்' என்ற பெயரில் காவியம் ஒன்றையும் அருளிச் செய்து தம்மை எள்ளி நகையாடிய மாணாக்கர்க்குக் காண்பித்து அவர்களைத் தலை குனிய வைத்தார். பின்னர் வாழ்க்கையை வெறுத்து துறவறத்தை மேற்கொண்டு பிற சமயவாதிகளையெல்லாம் வாதத்தில் வென்று ‘வாதிகேசரி’ என்ற விருதையும் பெற்றார். .

பின்னர் பெரியோர்கள் அருளிச்செய்த வியாக்கியானங்களையெல்லாம் கற்று அவற்றின் சாரமான பொருட் சிறப்புகளையெல்லாம் சுருக்கி, எல்லார்க்கும் எளிதாகவும் விளக்கமாகவும் இருக்குமாறு 'பன்னீராயிரப்படி' என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார்.

4. இருபத்து நாலாயிரப்படி : இந்த வியாக்கியானத்தை அருளிச் செய்தவர் பெரியவாச்சான் பிள்ளை.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளா லேவியிடப்
பின்பெரிய வாச்சான்பிள் ளையதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலா யிரம்[6]

என்று உரைப்பர் மணவாளமாமுனிகள். 'இராமாயணம்’ இருபத்து நாலாயிரம் சுலோகங்களையுடையது. அத் தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. நம் பிள்ளையின் நியமனத்தால் ‘வியாக்கியான சக்கரவர்த்தி’ என்று வழங்கும் பெரியவாச்சான் பிள்ளை பற்றியும் சுவைமிக்க வரலாறு ஒன்று உண்டு.

வரலாறு இது : நம்பிள்ளை கூரத்தாழ்வானுடைய[7] திருப்பேரனான நடுவில் திருவீதிப் பட்டருக்குத் திருவாய் மொழியின் வியாக்கியானத்தை தனியாக அருளிச்செய்து கொண்டு வந்தார். பகலில் கேட்டவற்றையெல்லாம் ஒன்று கூடக் குறையாமல் இரவில் எழுதி வந்தார். நூலும் முடிந்தது. இவர் எழுதியதும் முடிந்தது. எழுதியவற்றைப் பட்டர் ஒருநாள் பிள்ளையவர்களின் திருமுன் வைத்து விவரத்தைச் சொன்னார். ஏட்டினை அவிழ்த்துப் பார்த்த பிள்ளை அது மகாபாரதத்தின் தொகையளவில் இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தங்களாக இருக்கக் கண்டார். மிகவும் வருந்தித் தம்முடைய அனுமதியின்றி எழுதியதனால் நீரினைச் சொரிந்து கரையானுக்கு இரையாக்கினார். பின்னர் நம்பிள்ளை தம் விருப்பத்திற்குகந்த மாணவரும், சாத்திரங்கள் அனைத்தையும் முற்றக் கற்றுத் துறை போய வித்தகருமான பெரியவாச்சான் பிள்ளையை நோக்கி, திருவாய்மொழிக்கு ஒரு வியாக்கியானம் செய்யுமாறு நியமித்தார். அவரும் ஆசாரியர் நியமனப்படி . இவ்வியாக்கியானத்தை அருளிச் செய்தார். இதைத் தவிர இவர் நாலாயிரத்தில் மற்றைய மூவாயிரத்திற்கும் வியாக்கியானம் அருளிச் செய்துள்ளார்.

5. முப்பத்து ஆறாயிரப்படி: இதனை எழுதி உதவியவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை.

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை
வள்ளல் வடக்குத் திருவிதிப் பிள்ளை- இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடுமுப்பத் தாறா யிரம்.[8]

என்ற மணவாளமாமுனிகளின் திருவாக்கால் இதனை அறியலாம். பிரம்மசூத்திரத்திற்கு இராமாநுசர் அருளிச் செய்தது. ஶ்ரீபாஷ்யம் என்ற பேருரை. அதன் ஆழ்பொருளையெல்லாம் அவனிக்கு விளக்கும் பொருட்டு சுதரிசனபட்டர் என்பார் 'சுருதப் பிரகாசிகை' என்ற நூலொன்றைச் செய்தார். அது முப்பத்தாறாயிரம் கிரந்தங்களையுடையது. அத்தொகை அளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது.

இந்த வியாக்கியத்தை 'ஈடு' என்ற பெயராலேயே வழங்குவர். ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்' (திருவாய் 1, 6:3) என்ற இடத்து 'ஈடு' என்ற சொல் ஒப்பு என்ற பொருளில் வந்திருத்தல் போற்றத்தக்கது. ஈடு : கவசம். கவசமானது உடலைக் காத்தல் போன்று முப்பத்தாறாயிரப்படி என்ற இந்த வியாக்கியானமும் கற்போராலும், எழுதுவோராலும் வேற்று மக்களாலும் தன்னிலை திரிந்து மாறுபடாதபடி திருவாய்மொழியைக் காத்து நிற்றலின் இவ் வியாக்கியானத்திற்கு ஈடு என்ற தனிச் சிறப்புப் பெயரினை நம் பெருமக்கள் வைத்து வழங்கினர். இனி, இது நம்பிள்ளை நாடோறும் காலட்சேபத்தில் அருளிச் செய்தனவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளையால் எழுதி வைக்கப்பட்டதாதலின் இதனை 'ஈடு' என்று வழங்கினர் எனக் கொள்ளலும் பொருந்தும். இடுதல் - எழுதுதல் இனி இது சுருதப் பிரகாசிகையினை ஒத்திருத்தலின் இதனை 'ஈடு' என்று வழங்கினர் என்றும், தன்னைக் கற்பார் எல்லாரையும், இறைவனிடத்து ஈடுபடச் செய்வதாதலின் ஈடு என்று வழங்கினர் என்றும் கூறுவதுண்டு. நம்பிள்ளை நாள்தோறும் காலட்சேபத்தில் சொல்லியது ஆதலானும் இதற்கு ஆசிரியர் நம்பிள்ளையேயாதலானும் அப் பெரியாரின் திருப்பெயரைச் சேர்த்து இதனை நம்பிள்ளை ஈடு என்றும் வழங்குவர். இது பற்றியும் ஒரு வரலாறு உண்டு.

வரலாறு இது : வடக்குத் திருவீதிப் பிள்ளையின் ஆசாரியர் நம்பிள்ளை, ஒரு முறை நம்பிள்ளை திருவாய்மொழி பற்றி நாள்தோறும் அருளிச் செய்து கொண்டுவரும் உரைகளைக் கேட்டுக் குறிப்பெடுத்து வைத்தவற்றைத் தனியே ஏடுகளில் விரித்து எழுதிவரலாயினார். அவ்வாறு எழுதிவைத்த குறிப்பின் விரிவே 'ஈடு முப்பாத்தாறாயிரப்படி' என்பது. தம் ஆசாரியரின் உரை முற்றுப் பெற்றதும் ஒரு நாள் தாம் எழுதியவற்றைத் தம் ஆசிரியரின் திருமுன் வைத்தனர் வடக்குத் திருவீதிப்பிள்ளை. ஆசாரியப் பெருமகனாரும் அந்த ஏட்டினை முற்றிலும் நோக்கியதால் அது மிகச் சுருக்கமும் மிக விரிவுமின்றி சுருதப்பிரகாசிகையளவில் முப்பத்தாறாயிரம் கிரந்தங்களோடு கூடியதாய் இருக்கக் கண்டு மிகவும் திருவுள்ளம் உவந்தார். ஆயினும் தம் இசைவு பெறாமல் எழுதியதனால் அதனை வாங்கிக் கட்டி தம் இல்லத்தில் வைத்துக் கொண்டார்.

இச்செய்தியினைக் கேள்வியுற்ற நம்பிள்ளையின் மாணாக்கருள் மற்றொருவரான 'ஈயுண்ணி மாதவப்பெருமாள்' என்பார் அதனை அடைய வேண்டுமென்ற பெருவிருப்பங்கொண்டார். தம் கோரிக்கையை திருவரங்கநாதனிடம் விண்ணப்பித்தார். ஒருநாள் அரங்கநகர் அப்பன் தன் திருவடி தொழ வந்த நம்பிள்ளையை அர்ச்சகர் மூலமாக நோக்கியருளி ஈடுமுப்பத்தாறாயிரப் படியை மாதவப் பெருமாளுக்கு பிரசாதிக்குமாறு கட்டளையிட்டார். அக்கட்டளையினைத் தலைமேற்கொண்டு தம் மாணாக்கரான மாதவப்பெருமாள் என்னும் சிறியாழ்வான் அப்பிள்ளைக்கு ஈட்டைக் கொடுத்து அவரை வாழ்வித்தார்; அத்னால் அவர் மூலமாக உலகோரையும் வாழ்வித்தருளினார்.

சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளைஎழு
தேரார் தமிழ்வேதத் தீடுதனைத் - தாருமென
வாங்கிமுன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாங்கொடுத்தார் பின்னதனைத் தான்.[9]


என்று இதனைப் பதிவு செய்தார் மணவாளமாமுனிகள்.

திருவாய்மொழி 'பகவத் பிரபந்தம்' என்று திருநாமம் பெற்று வழங்குவது போன்று, இவ்வியாக்கியானங்களின் தொகுதியும் 'பகவத் விஷயம்' என்றே போற்றப்பெறுகின்றது. மேலும் திருவாய்மொழியும், இந்த வியாக்கியானங்களும் எந்தவிதக் குற்றமின்றி ‘திருமாலவன் கவி' (திருவிரு.48) என்று முற்றிலும் பகவான் விஷயமாகவே இருக்கையால் இவற்றிற்கே ‘பகவத்விஷயம்’ என்ற சிறப்புப் பெயரை வைத்துப் போற்றினார்கள் என்றலும் பொருந்தும்.

வேறுசில உரைகள் : பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு வியாக்கியானம் இட்டருளியதுபோலவே ஏனைய பிரபந்தங்கள் அனைத்திற்கும் வியாக்கியானம் செய்தருளினர். பெரியாழ்வார் திருமொழியின் முதல் நான்கு பத்திற்கு இவர்தம் வியாக்கியானம் கிடைக்கவில்லை. அந்த நான்கு பத்திற்கு மட்டிலும் மணவாளமாமுனிகள் வியாக்கியானம் செய்துள்ளார். நஞ்சீயர், அழகிய மணவாளசீயர், அழகிய மணவாளப் பெருமாள் நயினார் என்னும் பெரியோர்களும் 'திருப்பாவை அமலனாதிபிரான்', 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' ஆகியவற்றிற்கு வியாக்கியானம் இட்டருளினர். மணவாளமாமுனிகளின் சீடர் 'அப்பிள்ளை’ என்பார் ‘இயற்பா'வுக்கு அருளிச் செய்த வியாக்கியானமும் உண்டு. மணவாளமாமுனிகளும், பிள்ளை லோகாச்சாரியசீயரும் இராமாநுச நூற்றந்தாதிக்கு வியாக்கியானம் செய்துள்ளனர். இவை தவிர, முப்பத்தாறாயிரப்படிக்கு ஜீயர் அரும்பதம் அடைய வளைந்தான் அரும்பதம் என்ற இரண்டு குறிப்புரைகளும் உள்ளன.

6. பதினெண்ணாயிரப்படி : பெரிய பரகால சுவாமி என்பவர் ஆறாயிரப்படி என்னும் உரைக்கு ஒர் உரை வரைந்துள்ளார். இது 'பதினெண்ணாயிரப்படி' என வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு சொல்லுக்குப் பொருளும் ஒரு பாசுரத்தின் விளக்கமும் அமைந்துள்ளன.

உரைகளின் நயம் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் அருளிச்செய்யப் பெற்றது போன்றே, வியாக்கியானங்களும் இறைவனுடைய திருவருளுக்கு முற்றிலும் இலக்காய், ஆழ்வார்களின் பேரருளுக்குப் பாத்திர யூதர்களாய், வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் பேரறிவுபடைத்தவர்களாய் இருந்த பெருமக்களால் அருளிச் செய்யப் பெற்றவையாதலின், திவ்வியப் பிரபந்தம் போன்றே வியாக்கியானங்களும் அருமை பெருமைகளையுடையன. இவ்வியாக்கியானங்கள் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை; சுவாதுபவத்தோடு செய்யப்பெற்றதாதலின், கற்போர்க்கும் சுவாதுபவத்தை விளைவிக்கக் கூடியவை.

இந்த உரைகளுள் ஈட்டின் நடையழகு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருளுணர்வோடு பயிலப் பயிலப் பேரின்பம் பயப்பது சொல்லாற்றல்கள், பொருளாற்றல்கள் அமைந்தது. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்னும் வனப்பு வாய்ந்தது; கூறப்புகும் பொருளை விளக்குவதற்குக் காட்டப் பெறும் மேற்கோள்கட்குப் பொருள்கூறும் முறை எத்தகையோரும் வியக்கத்தக்கது. பதச்சாரம் கூறுவதில் ஈட்டாசிரியருக்கு ஒத்தாரும் மிக்காரும் இத்தமிழ் நாட்டில் இலர். ஒரு பதிகத்தோடு, மற்றொரு பதிகத்திற்கும், ஒரு பாசுரத்தோடு, மற்றொரு பாசுரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பைக் கூறிச் செல்லும் பாங்கு வேறு எவ்வுரையிலும் காண்டல் அரிது. இவ் வியாக்கியானங்கள் இன்றேல் திவ்வியப் பிரபந்தத்தின் பொருள் சிறப்பினையெல்லாம் அறிந்து கூறவல்லார் ஒருவரும் இலர்.

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் - அந்தோ
திருவாய் மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவார்.இக் காலம்நெஞ்சே கூறு.[10]

என்று மணவாளமாமுனிகளும் கூறியுள்ளதைக் காணலாம்.

ஒரு முக்கிய நிகழ்ச்சி: மணவாளமாமுனிகள் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்று ஈட்டின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றது. மணவாளமாமுனிகளின் ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை மாமுனிகள் பிள்ளையவர்களிடம் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களின் பொருட்சிறப்பினையெல்லாம் ஐயம் திரிபறக் கேட்டுத் தெளிந்தவர். தாம் அறிந்தவற்றை அனைவரும் கேட்டு அறிந்து உய்யும்படி கூற வேண்டும் என்பது மாமுனிகளின் திருவுள்ளம். இத் திருவுள்ளம் கொண்டவராய் திருவரங்கத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் திருவரங்கப்பெருமான் அர்ச்சகர் மூலம் மாமுனிகளை அழைத்தருளித் தாமும், தம் அடியார்களும் திருவாய்மொழியின் பொருட்சிறப்பினைக் கேட்டு மகிழ்ந்து வாழும்படி பெரிய திருமண்டபத்தில் நடத்துமாறு அருளப் பாடிட்டு நியமித்தருளினார். இதனை,

நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள்
தாமார் நம்மைத் தனித்தழைத்து- நீமாறன்
செந்தமிழ்வே தத்தின் செழும்பொருளை நாளுமிங்கு
வந்துரையென் றேவுவதே வாய்ந்து.

என்ற அப்பெரியாரின் திருவாக்காலும் அறியலாம்.

மாமுனிகளும் இறைவன் இட்டகட்டளையைத் தலை மேற்கொண்டு அப்படியே தொடங்கி நடத்தி வரலாயினர். பெரிய பெருமாளும், திருவாய்மொழியின் முதற் பாசுரம் முதல் இறுதிப் பாசுரம் முடியவுள்ள திருப்பாசுரங்கட்கு இவர்தம் விளக்கத்தைக் கேட்டருளி மிகவும் மனம் உவந்து 'முப்பத்தாறாயிரப் பெருக்கர்’ என்ற திருநாமத்தையும் இவருக்குச் சாற்றியருளினார் என்பது வரலாறு. இவ்வரலாற்றாலும் மற்றும் பல காரணங்களாலும் இவ்வியாக்கியானம் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும் திருவாய்மொழியினைப் போன்றே ஆராஅமுதமாய் இன்பமாரியாய், எங்ஙனே சொல்லினும் இன்பம் பயப்பதாய் இருப்பது என்பதற்குத் தட்டில்லை.


  1. உபதேச ரத்தினமாலை (உர.மா)-41
  2. யாப்பருங்கலக்காரிகை- பாயிர உரை.
  3. உ.ர.மா-42
  4. உ.ர.மா.45
  5. முசலகிசலயம்- உலக்கைக் கொழுந்து, கிசலயம்-தளிர்
  6. உ.ர.மா.43
  7. இவர் இராமாநுசருடைய முதன்மைச்சீடர்.
  8. உ.ர.ம,44
  9. உ. ர.பா. 48
  10. உ.ர.மா 40