வைணவ புராணங்கள்/(2) புராண பாகவதம்

(2) புராண பாகவதம்

ஆசிரியர்: நெல்லி நகர் அருளாளதாசர். இவர் நெல்லி நகர்க்கதிபதி. இவர்தம் இயற்பெயர் வரதன்; வரதராச ஐயங்கார் எனவும் வழங்கும். குணச்சிறப்பினாலும் அருளாளதாசர் என வழங்கப் பெற்றார். அளவாற் பெரிய பாகவத புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தவர். இந்நூல் 9147 பாடல்களைக் கொண்டது. இதன் சிறப்புப் பாயிரம்:

எதுகுலத்து வருமுறையோன்
சரிதையைநற் ககன்இசையால்
உதவும்சொலைத் தமிழினால்
உரைத்தவன் திருவரங்கம்
பதியமர்வேத் திரக்கரத்தோன்
பழமறையோன் வரதன்நெல்லிக்
கதிபதியாய் உயர்ந்திடுபே
ரருளாள நாதனரோ (1:53)

என்பது.இப்பாடலால் இவர் திருவரங்கத்தில் வாழ்ந்தவர் என்றும்.இவர் 'வரதன்' எனப்படும் 'அருளாளநாதன்' என்று பெயர் பெறுகின்றார் என்றும் அறிகின்றோம்.

இதற்கு அடுத்த பாடல் நூல் செய்த காலம் கூறுவது. அப்பாடல் இவரை நெல்லிநகர் வரதராசன் என்றும், நூலை 'வாசுதேவ கதை' என்றும் கூறுகின்றது. வாசுதேவன்-வசுதேவர் புதல்வனான கண்ணன். பாகவதம் - பகவானுடைய கதையைச் சொல்வது; பகவான் - கிருட்டின பகவான். இப்பாகவதம் கிருட்டிண பகவான் கதையையே அதிகமாய்ச் சொல்வதால் 'வாசுதேவ கதை' என்று பெயர் பெற்றது; நூலின் பல இடங்களில் இந்நூற்பெயர் 'வாசுதேவ கதை’ என்றே சொல்லப் பெறுகின்றது.

நூலின் இடையிலும் இந்தக் கதையை வடமொழிப் பதினெண்ணாயிரம் சுலோகங்களைத் தமிழில் நெல்லிவரையன் 9,000 விருத்தயாப்பில் சொன்னான் என்று பாடல்பகர்கின்றது (14:5). பாடல் இது:

இதுவலால் உருக்கு மிணிக்குநா ரதன்தான்
இசைத்ததை நைமிசா ரணியத்து
அதிற்சவு னகனே முதல்வரெண் பத்தெண்
ணாயிநர் முனிவர் கேட்பச்
சதுர்மறைச் சூதன் உரைத்திடும் நூல்கலோக
மாம்பதி னெண்ணா யிரமும்
விதிதமிழ் நெல்லி வரதையன் சொன்னான்
விருத்த மொன்யான் சகசிரமே.

வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்தது. 3600 சுலோகங்களுடையது. மகா பாகவதம் என்று இது வழங்கும். இதில் 25 கீதைகள் உள்ளன. ஆறு அவதாரக் கதைகள் இதில் நுவலப் பெறுகின்றன. பெரும்பாலும் அனுட்டுப்புச் சுலோகத்தாலும் சிறுபான்மை பிறவற்றாலும் செய்யப் பெற்றுள்ளது. அத்தியாயம் 600, அத்தியாயம் ஒவ்வொன்றின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்து உண்டு. நாரத முனிவர் உருக்குமினிப் பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் பரீட்சித்து மன்னனுக்கு இது சுக முனிவரால் சொல்லப் பெற்றது. இதுவே பதினெண் புராணத்துள் ஒன்று என்பர். இதனையே தமிழில் அருளாளதாசர் பாடினார்.

வரதராச ஐயங்கார் என்றும் சொல்வதைக் கேட்டுள்ளோம். ஐயங்கார் என்பது பிற்கால வழக்கு, 17-ஆம் நூற்றாண்டில் பல பிரபந்தங்கள் பாடிய அழகிய மணவாளதாசர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என வழங்கப்பெறுகின்றார்.இதற்குமுன் இச்சொல்லுக்குச் சிறப்பான ஆட்சி இருந்ததாகத் தெரியவில்லை. வரதன், வரதராசன், வரதையன் என்றே இவர் பெயர் வழங்கப்பெற்றது. 16-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 'ஐயங்கார்’ என்ற சொல்லாட்சி பெருகிவிட்டபடியால் 'ஐயன்', 'ஐயங்கார்' ஆகிவிட்டார் போலும்.11பாடல்கள் பகரும் வரதர் எப்படி அருளாளதாசர்  என்பது தெரியவில்லை. 'தாசர்’ என்று பெயர் சூட்டிக் கொள்வது அக்காலத்தில் வைணவத்தில் ஒரு சிறப்பாகக் கருதப்பெற்றது போலும். பிள்ளை உறங்கா வில்லிதாசர் (12-ஆம் நூற்றாண்டு) கூர குலோத்துமதாசர் (14-ஆம் நூற்றாண்டு), அரிதாசர் (16-ஆம் நூற்றாண்டு), மணவாளதாசர் (17-ஆம் நூற்றாண்டு) முதலான வழக்குப் பெயர்களை நோக்கினால் இவ்வுண்மை ஒருவாறு தட்டுப்படும்.

நூல்: இத்தமிழ் பாகவத புராணம் 'வாசுதேவ கதை’ என்றும் 'புராண பாகவதம்’ என்றும் பெயர் பெறும் 132 படலங்களும் 9147 பாடல்களும் கொண்டது. செவ்வைச் சூடுவார் பாகவதத்தைப் போல் இதில் கந்தப் பாகுபாடு இல்லை. முதலில் உள்ள கடவுள் வாழ்த்துப்

11 இக்காலத்தில் அம்மரபு பெருவழக்காகி விட்டதைக் காண்கின்றோம். பகுதி ஆறு பாடல்கள் உடையது. இவற்றில் முறையே ஆலிலையில் பள்ளி கொண்ட குழவி, யாவும் தானாகி நின்ற தலைவன், பரமபதத்து ஒளி கொளரி, தசரதனடியில் வீழ்ந்த செம்மல், வாசுதேவன், மகிழ் திருப்பணி செய் ஆயனார் என்று வணக்கம் கூறப்பெறுகின்றது.

முதல் படலம் திருவரங்கப் படலம் என்பது; 155 பாடல்களையுடையது. முதல் வாழ்த்து காவிரிக்கு

சீராகும் இந்திரை மண்மகள்
சேர்ந்து போற்ற
ஓரா யிரவாய் பணிமீது
உறைவானை உள்கி
நீராயுழ னந்திரு பாலும்
நிறைந்து நேர்ந்த
காராளன் பொழில்சூழ் திருக்காவிரி
வாழி வாழி.

என்பது. பிறகு அரங்கநகர் அப்பன் பாதாதி கேசமாகப் பல பாடல்களில் வாழ்த்தப் பெறுகின்றார். அரங்கநாதன் அடியினை பீதாம்பரம், உந்தி மலர், உதரபந்தனம், கவுத்துவம், வாயும் முறுவலும், கண்டம், கண்ணினை, திருமுகச்செவ்வி, நீலமேனி மகுடம்11 , பஞ்சாயுதங்கள், பின் அரங்கநாயகி, பூதேவி, நீளை, கோதை, சூடிக்கொடுத்தவள், பிரணவ விமானம், அனந்தன், சேனாபதி, அநுமன் வாயில்காவலர், இவ்வாறு வருகின்றன. இதன் பிறகு தலங்களுக்கு வாழ்த்து கூறப் பெறுகின்றது. முதலில் அரங்கம் தொடங்கி பின் 83 பாடல்களில் 108 திருப்பதிகட்கும் வாழ்த்து சொல்லப் பெறுகின்றது. அடுத்த பாடலில் வருபவர்கள் இத்தலங்களில் எழுந்தருளியுள்ள மலர் மங்கை நிலமங்கை, குழுத்தேவர் ஆகியோர். அடுத்த பாடலில் பிரகலாதன் முதல் வீடணன் வரையுள்ள பாகவதர்கள் ஆகியோர் வருகின்றனர். பின்னர் பன்னிரு ஆழ்வார்கள், இராமாநுசர்,நாதமுனி, உய்யக்கொண்டார், மணக்கால்

12 அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்) நினைவுக்கு வருகின்றது. நம்பி, ஆளவந்தார்,பெரிய நம்பி, எம்பெருமானார், பெரிய நம்பிபிள்ளை, நம்பிள்ளை, மணவாளமாமுனி, சீரங்கநாராயண முனி, பராசர பட்டர், வேதவியாச பட்டர், கந்தாடையண்ணன், வாதிட்டையாயன் (2 பாடல்கள், பின்னர் மீண்டும் கண்ணனைப் பல பாடல்களால் துதித்து, சுக முனிவரையும் வணங்கி, சாத்துவிக மகாபுராணமாகிய இதனைச் சொல்லத் தொடங்குகின்றார். இவ்வாறு 'பாயிரம்’ என்று சொல்லத்தக்க திருவரங்கப் படலத்துள்ள 155 பாடல்களில் இவர் மிக விரிவாகத் துதி சொல்லியுள்ளார். தமிழில் இவ்வளவு அதிகமான கடவுள் வாழ்த்துப் பகுதி வேறு எந்த நூலிலும் இல்லை. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் யாவும் 'வாழி' என்ற முடியையே கொண்டவை. மேலும் இங்கு, பெரும்பான்மைப் பகுதி பாடல்தோறும் யாப்பை மாற்றி இவர் பாடி வரும் முறை ஒரு விசித்திர அமைப்பாகும்.

இன்னொரு சிறப்பு. இந்த நூலில் ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் ஒரு திருமால் வணக்கப் பாடல் வருகின்றது. இவற்றையும் திருவரங்கப் படலப் பாடல்களையும் சேர்த்தால் இது 300 பாடல்கட்கு மேற்பட்ட ஒரு சிறந்த திருமால் தோத்திர நூலாக அமையும். பல சமயம் இரண்டு துதிப் பாடல்கள் தரப் பெறுகின்றன. முதல் பாடல் துதியில் 'தொண்டீர்' என்று மக்களை நோக்கிய விளி அமைகின்றது. இரண்டாம் பாடல் வரும்போது 'என் மனனே, உலகேழயின்றவன் நாமம் பகர்தி' என்பது போன்ற தொடர்களால் நெஞ்சை விளித்துப் பேசுகின்றார். சிற்சில இடங்களில் அந்தந்தப் படலத்தில் கூறப்போகும் பொருளைச் சுருக்கி 'இவ்வாறெல்லாம் செய்த கண்ணனை வணங்குகிறேன்' என்கின்றார். பன்னிருநாமங்களையும் சொல்லி வணங்கும் பாடல்கள் பல.13 ஒரு பாடல்:

கேசவன் நாராயணன் உயர்மாதவன்
கிளர்கோ விந்தன் விண்டு
மாசகன் மதுசூதன் திரிவிக்கிரமன்
மன்னி வாமன் அயிர்மலியும்

13 நம்மாழ்வாரின் பன்னிரு திருநாமப்பாட்டு (திருவாய் 27) நினைவிற்கு வருகின்றது.

தேசுறு நிகரில் சீதரன்

இருடிகேசன் ஒண்பதும நாபன்சீர்

வீசிய தாமோதரன் என உரையின்

வினையற உயர்பதத் துறலாம்

என்பது.

ஒரு பாடலில் பன்னிரு மாதப் பெயர்களும் அமையப் பாடியுள்ளார்.

வாமமவிர் சித்திரைவை காசியானி கலையாற்றி

வெண்ணைக்காடி யாவனிக்கு ணின்று கஞ்சத்

தீமையன் மண்விழப் புரட்டாசியற் பசிசு

பாலன் சிரந்துணியவே ஆழியைவிடு நற்றேவன்

சோமகுல அந்தகன்சேய் முனர்நடுங்காத திகைத்தாள்

தூசிடைமாளா தருளுந் துளபமார் கழியான்

பூமன்வனிதைக் காய்மாசில் சாபங்குனியப் போரினில்

தெசமுகனைச் செற்றூனைப் போற்றி செய்வாம்.

என்பதில் இதனைக் காணலாம். பல இடங்களில் தசாவதாரங்கள் குறித்துப் பாடப் பெற்றுள்ளது.

ஊரிலி யுருவம் இலிகுண மிலிபே
ரிலியிழை கருமமொன் றிலியால்
ஆருனை யறிவார் அறிந்தவர் பிறவி
அளக்கரின் வீழ்ந்திடா வண்ணம்
சீருறு மீன்கூ ரும்கிரி மான்குறள்
மழுச்சி லையலா யுதராய்
நேரில்யா தவனா யிவணினிற் றோன்றி
நிகரிலாக் கற்கியு மாவாய்.

என்பதில் தசாவதாரங்களும் நுவலப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.

ஒரு துதிப்பாடலில் முத்தி நகர் ஏழும் குறிப்பிடப்பெற்றுள்ளன.

மாசில் அயோத்தி மதுராபுரி மாயா
காசி உயர்காஞ்சி கவின்சேர் அவந்திகா
ஏசில்கடற் றுவரையோ டிவ்வெழு நகரின்
ஆக்கல் முத்தியருள் அச்சுதன்பதம் பணிவாம்.

என்பதில் ஏழு நகரங்களும் குறிப்பிடப் பெற்றுள்ளதைக் காணலாம்.

ஒரு பாடலில் எண்கள் நிரல்பட அமைத்துப் பாடியுள்ளதைக் காணலாம்.

ஒருதனி முதல்வன் இருகட ராகி

உயர்ந்திரு மூர்த்திகள் மூன்றாய்

அருமறை நான்காய் ஐந்துபூ தமுமாய்

ஆறுசாத் திரங்களாய் ஏழு

பரவையாய் எட்டுப் பருப்பத மாகிப்

பவமிலா நவக்கிர கத்தின்

கரூபமாய் நிலத்தில் தசவவ தாரம்

ஆகிய சோதியைப் பணிவாம்.

என்ற பாடலில் ஒன்று முதல் பத்துஎண்கள் நிரல்பட அமைந்திருப்பதைக் காணலாம்.

கம்ப ராமாயணத்தில் பாயிரத்தில் உள்ள ”நாடிய பொருள் கைகூடும்” என்ற பாடலைத் தழுவி இவர் தம் நூலுக்கும் இரு பாடல்கள் அமைத்துள்ளார். அவற்றுள்,

நீதிசேர் செல்வம் வாய்க்கும்,

நிவந்த மெய்த்தருமம் நீளும்,

ஏதமின் ஞான மெய்தும்,

இந்திரை இனிது நோக்கும்,

சேதிய ராச னோடச்

செருவென்று விதற்ப னல்கும்

கோதையை மணந்த மாயோன்

சிலைவலி கூறு வோர்க்கே

என்பது ஒரு பாடல்.  நாச்சியார் அவதாரப் படலத்தில் நாச்சியார் திருவவதாரம் செய்து வளர்ந்து வருகின்ற நிலையைக் குறிப்பிடுமிடத்து பிள்ளைத் தமிழுக்குரிய பெரியாழ்வாரின் கருத்துகள் பலவற்றைப் பாடலில் அமைத்துப்பாடியுள்ளார். பின்வரும் பாடல்'தாலப் பருவத்து'க்குரியது.


தாலேலோ வினைதானி லாதவள்
தாலேலோ கதைதங்கு பொற்குயில்
தாலேலோ கமலா சனத்தவள்
தாலேலோ திருவென்று சாற்றினார்.

என்பது. தொடர்ந்து விளையாட்டு. 'செங்கீரையாடுக செம்மையுற', 'சப்பாணி கொட்டுக சந்தமுற','தவழ்ந்தே விளையாடுதி, 'தோள்வீசி நடந்திடு', 'தளரும் நடை நீ நட', 'அச்சோ புயலே', 'புறம்புல்குதி, 'அப்பூச்சி கண்டாடுக', 'அம்புலி வா என்று துதி', 'அக்காக்கை பொன்னால் அமர்கோல் கொடுவா', 'தும்பிமலர்ஒது' என்றெல்லாம் தாயார் போற்றுவதாகக் கூறி மகிழ்கிறார். விளையாட்டைச் சொல்லும்போது, 'சிறு போது சிறு சோறு அடுதல்', 'கழங்காடுதல்', 'அம்மனை பாடியாடுதல்','பந்தாடுதல்','ஊசலாடுதல்','நீராடல்,'மலர் கொய்தல்' என்பவற்றைத் தனித்தனியாக விரித்துரைக்கின்றார்.

இயற்கையை இவர் வருணிக்கத் தலைப்படும்போது எங்கும் மர வகைகளை அடுக்கிச் செல்வார் (7. 32-35).

பாகவதக்கதை இந்த (வடமொழி) பாகவதத்தின் போக்கும் தொடர்பும் விளங்குதற் பொருட்டு கதையின் சுருக்கம் ஈண்டு தரப் பெறுகின்றது.

ஆறாம் அத்தியாயத்தில் 'நாச்சியார் திருவவதாரப் படலம்’ என்ற பெயரோடு கதை தொடங்குகின்றது. கண்ணனுடைய தேவியாகிய உருக்குமினி விதர்ப்ப நாட்டு மன்னன் மகளாகப் பிறந்து, மணப்பருவம் அடைந்தபோது நாரத முனிவன் வருகின்றான் (6), 78 படலம் வரையில் அவளுக்கு நாரத முனிவன் கூறும் வரலாறு ஆகும். முனிவன் அவளுக்கு கசேந்திர மோட்சம், வராக அவதாரம், கபில முனி வரலாறு, நரசிங்க அவதாரம், துருவன், மச்சாவதாரம், கூர்மாவதாரம் (7-13) ஆகியவற்றை உரைக்கின்றான். அடுத்த அண்டப்படலம் (14) என்பதில் பூலோகம் முதலான உலகங்கள், தீவுகள் முதலியவை மற்ற புராணங்களில் உள்ளனபோல் விரிவாக நுவலப் பெறுகின்றன. பின்னர் பிருது சக்கரவர்த்தி, இடபராசன், வாமன அவதாரம், அஜாமிளன், உருக்குமாங்கதன், அம்பரீடன், பரசுராம அவதாரம், இராகவன்.அவதாரம் ஆகிய வரலாறுகள் இயம்பப் பெறுகின்றன (15-22).

அடுத்த 42 படலங்கள் (23-64 கண்ணன் பிறந்தது முதல் அவனுடைய படத்தை உருக்குமிணி காண்கின்ற வரையில் கண்ணனுடைய வரலாற்றை நாரத முனிவன் நவில்கின்றான். தேவகிப் படலம் (23) கம்சனின் தங்கையாகப் பிறந்த தேவகியின் மணமும் அவள் பெற்ற குழந்தைகளைக் கொன்ற செய்தியையும் கூறுகின்றது. தேவர்கள் திருமாலை வேண்ட அவர் பூவுலகில் தேவகி வயிற்றில் கருவாய் வந்து தங்குகின்றார். சிறையிலிருந்த வசுதேவர் ஆயர்பாடியில் நந்தகோபன் மனைவியசோதையிடம் அக்குழந்தையைக் கொண்டு போய் விடுகின்றார். உரோகிணி பெற்ற பெண்ணைத் தேவகியின் பெண் என்று எண்ணிக் கம்சன் கொல்ல முயலும்போது, அக்குழந்தை மாயையாக மாறி, உன்னைக் கொல்லத் திருமால் குழந்தையாகப் பிறந்திருக்கிறான் என்று கூறி மறைகின்றது. கம்சன் தன் மந்திரிகளோடு ஆலோசித்து அக்குழந்தையைக் கொல்ல வழி என்ன என்று தேடுகிறான் (24).

பூதனை வதை, சகடாசுரன், காரியாசுரன், குக்குடாசுரன் வதைகள் (23-28) நடைபெறுகின்றன. கண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வாயினுள் யசோதை உலகத்தைக் காணுதல் (29), ததிபாண்ட முத்தி (30), மருத மரமாக வந்த அசுரர், பகாசுரன், அகாசுரன் வதை (31-33), கண்ணன் தானே ஆயர் சிறுவராயும் கன்றுகளாயும் இருந்து மாயை காட்டுதல் (34), தேனுகன் வதை, காளியமர்த்தனம், பெலம்பன் வதை, கோபியர் ஆடை கவர்தல், வனத்திலிருந்த வேதியர் மனைவியருக்கு அருள் புரிதல், கோவர்த்தனக்கிரியைத் தூக்கல்'[1], கல்மாரியிலிருந்து காத்தல், குழலுதுதல்[2]' (35-42) அம்பிகாவனத்தில் நந்தனை நாகம் பற்றி விழுங்கக் கண்ணன் திருவடி பட்ட மாத்திரத்தில் நாகம் வித்தியாதரனாகி விமானத்தில் ஏறிச் செல்லுதல் (43, கும்பன் பெண் நப்பின்னையை ஏழு விடைகளை அடக்கி மணத்தல் (44), அருட்டாசுரன், கேசி வதை, வியோமனன் வதை (45.47), அக்ரூரன், சமந்தக மணியின் வரலாறு (48), தாருகன் வதை (49), சுதாமகாவுக்கு அருளுதல், திரீவக்கிரி என்ற கூனிக்கு அருளுதல் (51), இந்திர தனுவை யொத்த ஒரு வில்லை வளைத்து வளைத்து ஒடிக்க, சூழ்ந்த சேனையை அழித்தல் (52), கஞ்சன் செய்யும் கொலை முயற்சி - குவலயாபீடம், சானூரன், கம்சன் வதை (54-56), உக்கிரசேனன் முடிசூடுதல், சாந்திய முனிவர்க்கு இறந்து போன பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று குரு தட்சிணையாகக் கொடுத்தல் (5758), கண்ணன் மதுரையில் இருக்கும்போது அங்கிருந்து உத்தவன் ஆயர்பாடி சென்று கண்ணன் பழகிய ஆயர் கன்றுகள் இடங்கள் பார்த்து வருதல் (59).

பாண்டவர்க்கு நேர்ந்த இன்னல்களை அக்ரூரன் சொல்லக் கேட்டு அறிதல் (60), கம்சன் வதம் கேட்டு அவன் மாமனாகிய சராசந்தன் படையோடு வந்து, கண்ணனிடம் போரிட்டுத் தோற்று ஓடுதல் (61), அசுரர் கோமான் சிரகாளன் என்பவன் முனிவருக்குத் தீமை செய்வது கேட்டு அவனோடு பொருது அவனை அழித்தல் (62), காள எமன் வதை (63), இரேவகன் என்னும் அரசன் மகள் இரேவதியை மணத்தல் (64), நாரத முனிவன் கண்ணன் குணாதிசயங்களை உருக்குமினிக்கு எடுத்துக்கூற அவள் அவனை மணக்க உறுதி கொள்ளுதல், அவளுடைய விரகதாபம், ஒரு தோழி கண்ணன் உருவத்தை படத்தில் எழுதுதல் (65), விதர்ப்பராசன் மந்திரிகளோடு கலந்து மகளுக்கு ஏற்ற மணவாளன் கண்ணனே என முடிவு செய்தல், ஆனால் அவனுடைய மகனான உருக்குமிதன் சிசுபாலனுக்கு அவளைக் கொடுக்கத் துணிந்து மறுநாளே ஒலை போக்குதல், உருக்குமிணி ஒரு புரோகிதன் மூலம் கண்ணனுக்கு ஒலை அனுப்புதல், மறுநாள் சிசுபாலன் வரவும் உருக்குமிதன் தங்கைக்கு மணக்கோலம் செய்யுமாறு கட்டளையிடுதல், உருக்குமிணியும் அன்னையுமாக அம்பிகை ஆலயம் சென்று வழிபட்டு வரும் வழியில் கண்ணன் வர அன்னை உருக்குமிணியைக் கண்ணன் கையில் கொடுக்க, அவன் அவளைத் தேரில் ஏற்றிச் செல்லுதல் (66-70), ஆகிய நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெறுகின்றன. சூழ்ந்த சேனைகளை முறியடித்துச் செல்லும்போது உருக்குமிதனைப் பலராமன் மார்பில் அடித்துத் தலையை முறிக்கப் போகும்போது உருக்குமிணிக்காக அவனை விடச் செய்கின்றான். மீண்டும் உருக்குமிதன் சண்டைக்கு வர அவனைப் பங்கப்படுத்தி வெற்றியோடு துவாரகை அடைகின்றான் (71-78), உருக்குமிணிப் பிராட்டி திருமணம் (79) சிறப்பாக நடைபெறுகின்றது.

சத்திராசித்து மன்னன் என்பவன் சிறப்பான சமந்தக மணி வைத்திருக்கிறான். அதைக் கண்ணன் கேட்டபோது அவன் கொடுக்கவில்லை. அவன் தம்பி அம்மணியை அணிந்து வேட்டையாடும்போது ஒரு சிங்கம் அவனைக் கொன்று மணியோடு செல்ல, கரடியரசன் சாம்பவான் அச்சிங்கத்தைக் கொன்று அம்மணியைத் தன் மகள் சாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் சாம்பவதியை மணந்து அம்மணியைப் பெற்றபின் சத்திரசித்து உண்மையறிந்து தன் மகள் சத்தியபாமையைக் கண்ணனுக்கு மணம் செய்து கொடுத்தான் (80-81). சத்தியபாமையின் தந்தை சத்திராசித்துவைக் கொன்ற சதத்தனுவாவை வதைத்தான் (82). தன்னை விரும்பித் தவம் செய்த காளிந்தியை மணந்தான் (83). மித்திர விந்தை சுயம்வரத்திற்குச் சென்று அவளை மணந்தான் (84. ஏழு விடைகளை அழித்து நாக்கின சித்துவை மணந்தான் (85). பத்திரை என்ற பெண்ணை மணந்தான் (85. வில் வளைத்து மச்சம் வீழ்த்தி இலக்கனையை மணந்தான் (87), நரகாசுரன் வதை (88), பாரிஜாதத்தைப் பெற்று சத்தியபாமைக்குக் கொடுத்தல் (89). சுபத்திரையை அர்ச்சுனனுக்கு மணம் செய்வித்தல் (90), வசுதேவர் வேள்வி செய்தல் (91.கண்டகர்ணன் முக்தி(92). கயிலாய யாத்திரை, பெளண்டனன் வதை, சுதரிக்கனன் வதை, துவிந்தன் வதை (93-96).

மன்மதன் பிறப்பு, சம்புராசன் வதை, அநிருத்தன் பிறப்பு, கண்ணன் ஏக காலத்தில் பதினாறு ஆயிரம் கோபியருடனும் கூடி வாழ்ந்திருத்தலை நாரதன் காணுதல் (97-99) அங்கிசமன், திபிகன் வதை (100), ஓந்தியாய் இருந்த நிருகராஜன் (101). உருக்குமிணி திருமணம் (102) பரசுராமன் அத்தினாபுரத்தைப் பெயர்த்து எறிவதற்கு அஞ்சி துரியோதனன் தன் மகள் இலக்கணையைக் கண்ணன் மகன் சாம்பனுக்கு மனம் செய்து கொடுத்தல் (103), லவனாகரனுடன் பொருது அவன் மகள் உடாங்கனையைத் தன் மகன் சாம்பனுக்கு மணம் செய்வித்தல் (104).

தரும புத்திரனுடைய இராசசூய யாகத்தில் தன்னை எதிர்த்த சராசந்தனை வதைத்தல் (105). சிசுபாலன், சாலுவன், தந்தவக்கிரன் வதை (106-108), பாண்டவர் வனவாசம் (109). தரும புத்திரனுக்கு வியாசர் குருகுல வரலாறு கூறுதல் (110). தட்சயாக அழிவை வியாசர் கூறுதல் (111). பார்த்தன் சிவனை நோக்கித்தவம் செய்து பாசுபதாத்திரம் பெறுதல், ஊர்வசியின் சாபம் பெறுதல் (12. வீமன் மந்தார மலர் பெற்று வருதல் (113). சிறைபட்ட துரியோதனனை விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சுப் பொய்கை வரலாறு (114), விராடநகர் வாசம், கீசகன் வதம் (115). கிருட்டினன் தூது (16). மகாபாரதப் போர் (117). பலராமன் தீர்த்த யாத்திரை (118). துரியோதனன் வதை (119. உத்தரை வயிற்றில் பரீட்சித்து பிறத்தல் (120). மிதிலை மன்னனுக்கு அருள் செய்தல் (12). குசேலர் அருள் பெற்றது (122), அந்தணன் புதல்வனை மீட்டது, தசாவதார நடிப்பு (123). யாதவர் சாபம் பெறுதல், உத்தவன் வினவும் வினாக்களுக்குக் கண்ணன் உபதேசம் கூறி அனுப்புதல்,இதுவே உபதேசப் படலம் (124). துவாரகையில் இருந்தோர் முக்தி அடைதல் (125). மார்க்கண்டேயர் வரலாறு, விருகாசுரன் (127-128). பரீட்சித்து மோட்சம் அடைதல், சனமேசயன் தந்தைக்குக் கடன்கள் ஆற்றி பாகவதம் கேட்டு முக்தி அடைதல் (129-130). கல்கி வரலாறு, கலியுக தர்மம் (131). வைனதேயனுக்குப் புராணங்களின் சாரமான திருமால் பதிகளையும் மூர்த்திகளையும் தீர்த்தங்களையும் வியாசர் உரைத்துப் புராணத்தை நிறைவு செய்தல் (132).

இவண் குறிப்பிட்டதே பாகவதக் கதை. அளவால் கந்த புராணம், கம்ப ராமாயணம் ஒத்த பெருமை இந்நூலுக்கு உண்டு என்பது தெளிவு. இவ்வளவு பெரிய நூலுள்ள பொருள்களைத் தேர்ந்தெடுத்து சில மட்டும் இங்கு சொல்ல முற்படுகிறோம். எல்லாவற்றையும் சிறு அளவில் சொல்லிவிட முடியாது.

புராண பாகவதம் - நூற்பொருள்: நூலில் அண்டப் படலம்’ என்பது பூவுலகம், தீவுகள் முதலிய பிரபஞ்சப் பகுதிகள் எல்லாவற்றின் தோற்றமும் கூறுகிறது. இது 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறப்புடைய எல்லாப் புராணங்கட்கும் பொருந்தும் ஒரு பொது இயல்பு. பெரிய அளவிலான சிவபுராணங்கள் அனைத்திலும் இவ்வியல்பைக் காணலாம். அப்படியே 'கலியுக தர்மம்' என்று எல்லாப் புராணங்களுக்கும் ஒரு படலம் சொல்லும். அதை இவர் காஞ்சிப் படலத்தில் சில பாடல்களால் சொல்லுகிறார். திருமால் வரலாற்றில் போர்ச் செய்திகள் மிகவும் அதிகம். அவற்றையெல்லாம் இவர் வருணிக்கும்போது பெருங்காப்பிய இலக்கணம் பொருந்த விரித்துச் சொல்வது ஆங்காங்கு சிறப்பாகவே உள்ளது. அப்படியே ஒரிடத்தில் இவர் வேட்டையை வருணிப்பதும், போர்த்தன்மை பொருந்தவே அமைந்துள்ளது.

'கயிலாச யாத்திரை’ என்ற படலத்தில் திருமாலின் துவாதச நாமங்களும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. குருகுல மரபே பாரதச் சரித்திரம். இம்மரபு, இந்நூலில் மிகவும் விரித்துப் பாடப் பெற்றுள்ளது (539 பாடல்கள்). சந்தப் பாடல்கள் சொல்லப் பெற்ற இடமெல்லாம் இந்நூலாசிரியருக்கு எளிதாக வந்து ஏவல் கேட்கின்றன. நம என்று பாடித்துதிப்பதில் இவருக்குப் பெருவிருப்பம் முடிந்த இடமெல்லாம்.இது சொல்லப் பெறும். திருமாலைச் சென்று துயிலெழுப்பிய பிறகு தேவர்கள் துதிக்கின்றனர். 12 பாடல்கள் திருமாலின் பன்னிரு பெயர்களையும்"[3] சொல்லித் துதிப்பன.

ஈச நேமிய எம்பர னே, அலை
வீசு பாற்கடல் மேவிய வித்தக
மாசி லாமலர் மங்கைதன் நாயக
கேச வாகெரு டக்கொடி யாய்நம.

கண்ணன் மண் தின்றான் என்று கோபித்து யசோதை வாயைத் திறக்குமாறு சொல்ல, அவன் வாயைத் திறந்தபோது அவ்வாயினுள்ளே யசோதை காண்கின்றாள்:

பிரமனைக் கண்டாள் அண்ட
கோளத்தின் பெருமை கண்டாள்

இரவியைக் கண்டாள், வானின்
இந்துவைக் கண்டாள், எட்டு
வரையினைக் கண்டாள், ஏழு
மகோததி தன்னைக் கண்டாள்
கரியிரு நான்கும் கண்டாள்,
கனகமாங் கிரியைக் கண்டாள்

ஏருறத் திசையின் வைகும்
எண்மரைக் கண்டாள், வானில்
தாரகைக் கண்டாள், தேவ
தவத்தினர் குழாத்தினைக் கண்டாள்
பாரினைக் கண்டாள், ஆயர்
பாடியில் தன்னைக் கண்டாள்
சீருறு மகனைக் கண்டாள்,
சிறந்ததன் கைக்கோல் கண்டாள்

ஏதிவன் இயற்கை என்னா
ஏங்கினள் இருகண் மூடி
ஆதியாய் அகண்ட மெல்லாம்
தன்வயிற் றடக்கி நின்ற
சோதியாம் இவனை என்னே
என்மகன் என்று சொல்லும்
பேதமை என்ன வென்று
பீதிகொண் டசோதை நின்றாள்

அனைத்தும் அற்புதமான காட்சிகள்.

பாரதப் போர் பகருமிடத்து தொடக்கத்திலுள்ள கீதை உபதேசத்தை இங்கும் இயம்புகின்றார். 'பாரதப் படலம்' என்ற பகுதி போரைச் சொல்வது. இதனுள் 12 பாடல்கள் கீதை உபதேசம், கருத்து, கண்ணன் 'யாவும் நானே' என்று நவில்வது.


'விசயநீ யானே உன்றன்
வில்வியான் விசிகம் யானே
கசியுறு சதமும் யானே
துணியுமொன் னலரென் சேட்டை
வசையுனக் கெங்ங்ன் எய்தும்
வருந்தல் நீ என்று மாயன்
இசையுற விளம்பத் தன்பேர்
உருவம்வான் இலங்க நின்றான்

என்பது அவற்றுள் ஒரு பாடல்

நாராயண கவசம் என்று இவர் குறிப்பிடுகின்றார் (110:166). ஆனால் கவசத்தைச் சொல்லவில்லை. கவசம் செவ்வைச் சூடுவார் பாகவதத்தில் உள்ளது.

சிசுபாலன் கண்ணனைப் பழித்தபோது, விடுமன் அவனைத் தடுத்துக் கண்ணனைப் புகழ்கின்றான் (13 பாடல்கள் 106: 49-62).

இவனே உலகேழையும் ஈன்ற ருள்வோன்,
இவனே அயனைத் தரும் றில்பிரான்,
இவனே அரன்வெவ் விடரைக் களைவோன்
இவனே உயரும் பதம்சபவனே."

என்பது காண்க. கண்ணன் அருள் பெற்றோருள் இருவர் குறிப்பிடத்தக்கவர்- ஒருவன் மலர் கொண்டு அணிந்தவன், ஒருவன் சாந்தம் கொண்டு அணிந்தவன் (படலம் 50, 5)

இவர்தம் பாடல்கள் எளிமையாய் இருப்பினும் கவிதைப்பண்பில் சிறந்தவையல்ல; சுவையற்றிருப்பதும் உண்டு. பின்வரும் பாடல்கள் காண்க. திருக்கல்யாணத்துக்காக உருக்குமிணியை அலங்கரிக்கும் சமயம் சேடியர்கள் வாக்காக வருவன:



நித்திலம் பெண்நிறை மலர்க் காந்தளாம்
கைத்தலப் பெண் அருந்ததிக் கற்புப்பெண்
வித்தகப் பெண் விதர்ப்பனருட் பெண்நல்
உத்தமப் பெண் உருக்குமிணிப் பெண்ணே



மாதவப் பெண் மதிமுகம் பெண்மலர்
மீதி னுற்றபெண் வித்துருமப்
ஏதமற்ற பெண்ணிந் திரையாகும் பெண்
ஒதிமப் பெண்ணு ருக்குமிணிப் பெண்ணே

இவற்றில் யாப்பும் சரியாக அமையவில்லை.

கண்ணனுக்குத் தேவியர் எண்மர்; பதினாயிரத்தொரு நூற்றெண்மர் என்று புராணம் சொல்லும்.இத்தனை பேரிடமும் அவன் எவ்வாறு நேயமோடிருக்கிறான் என்பதைக் கண்டறிய ஒருநாள் நாரத முனிவன்'[4] வந்தான். அவன் கண்டபோது, கண்ணன் ஒவ்வொரு தேவியர் இல்லிலும் எவ்வெவ்வாறு இருந்தான், எப்படி நாரதரைத் தவறாது உபசரித்தான் என்பதைப் புராணம் மிகவும் சுவைபடக்கூறும் (99.34-57)

'உபதேசப் படலம் (படலம்-124) என்பது இப்புராணத்தில் ஒரு சிறப்பான பகுதி. இதனுள்ளும் உத்தவன் கேட்க கண்ணன் உத்தரம் கூறியனவாக 14 பாடல்கள் உள்ளன. அவை மிகவும் சிறப்பானவை; அவை கீழே தரப்பெற்றுள்ளன.

ஏதமில் இயமம் எத்தனை, நியமம்
எத்தனை, சற்குணம் ஏது,
நீதியாய் வழங்கும் தவம்ஏது, சவுசம்
ஏது, நிகரில்பொறை ஏது,
பாதகம் அகலும் தவம்எது, தியாகம்
எதுதனம் எதுபலம் ஏது,
வேதமார் வேள்வி ஏது, மறைநெறியார்
விழுமிய தக்கணை ஏழு. (1)

தயிரியம் எதுநற் சவுரியம் ஏது,
சத்தியம் எது, உண்மை ஏதாம்,
இயல்புறும் இலாபம் எது, வித்தை ஏது,
நலனுறு விபவங்கள் ஏது,
மயர்வறு வயங்குந் திருஏது, வண்மை
விளர்வி தானங்கள் ஏது,
துயர்உறும் இவச்சை ஏது, சுகம் ஏது
துரிதமாய் வருதுக்கம் ஏது (2)

உறவெது, சுவர்க்கம் எரிநர கெய்தாது
உயர்த்திடு மனைஎது, நெறிசேர்
அறிவெது, அழிவில் லாதன எது,நல்
அறிவிலா னெவனெவன் மூர்க்கன்,
வறியவ னெவன்,சம் பன்னனர், வயங்கும்
பண்டித னெவன்,மரு ளகற்றி
அறிவுறும் ஈசன் எவன்,எவன் ஈசன்
இயம்பென அரியருள் செய்வான் (3)

சத்தியம்பரர் சொத்து றத்தலின் னாவைத்
தவிருதல், பிறர்மனை அடையாச்
கத்தமெய் மறையை யறிகுதல் நிலைமை
துலங்கிடும் பொறுமை துன்பங்கள்
எத்தனை வரினும் வெருவுதல் ஒழிதல்
சஞ்சலம் விடைய மற்றிருத்தல்
குத்திர விடமம் விலக்குதல் அவச்சொல்
குறைப்ப தீதுஇமயம் பன்னிரண்டே (4)

தவம்செவம் ஓமம் சவுசநற் சிரத்தை
தானம் ஆசாரிய சேவை

பவந்தனை ஒருவுந் தீர்த்தயாத் திரைஒண்
பரமனாம் முராரிதன் பத்தி
அவந்தனை அகற்றும் பரவுப காரம்
அறிஞனா யுளம்மகிழ்ந் திருத்தல்
கவந்தனைக் களைந்தோன் அருச்சனை யிவைதான்
துவதசங் கலக்கமில் நியமம் (5)

பரமனாம் எனது பதந்தனில் கருத்தைப்
பற்றுவித்து அமர்தல்சற் குணமாம்,
சரீரவிந் திரிய மொடுக்குதல் தவமாம்
சவுசமே கருமத்தை யொழித்தல்,
இருநிலத் திடுக்கண் கழிப்பது பொறையாம்,
இருள்தரு காமத்தை ஒழித்தல்
அரியமா தவமாம், தியாகம்இல் வாழ்க்கை
அகற்றுசந் நியாசமே ஆகும் (6)

தருமமே தனமாம், தயங்கிய பிராணா
யாமமே சரியிலாப் பரமாம்,
விரிவுறு மவிதோய் வேள்வி யேயான்
ஆகிய வரிவிளம்பு தக்கணைதான்
மருளகல் குருவாய் மலருஞா னோப
தேசமாம், வருதயி ரியமாம்
விரகமோ டிரத மொருவதல், கலரை
வெறுத்தலே சவுரியம் ஆகும் (7)

ஆற்றுஞ் சமமே அவமில்சத் தியமாம்
அரையுநல் வசனமே உண்மை,
தோற்றும்ஈ றிலாமுராரியாம் எனையே
துதித்திடும் பத்தியாம், வித்தை

சாற்றிடில் பரமாத்து மாவினை அறிதல்
சரியிலா விபவமா வனதான்
ஏற்றமா கியவை குந்தத்தினில் அங்கும்
ஈசுரன் இணையடி சேர்தல் (8)

ஆசையற் றிடுதல் திருவென லாகும்,
அளித்திடு தானமே தென்னில்
ஏகற நிலத்தில் பலபிரா னியையும்
தெண்டியா தொழிதலாம், இலச்சை
மாசுறு கருமம் தனின்மன மொழிதல்,
மறுவிலாச் சுகமின்ப துன்பம்
பாசம்அற் றிடவே கடக்குகை, துக்கம்
பலமுறு காமநத் திடுதல் (9)

உறவுசற் குருவாம் கவர்க்கமாம் அவன்தாள்
உயர்ந்தசாத் திககுண மலிதல்
மறலிதன் உலகின் நிரைய மாவது
தாமத குணம் வளர்தல், ஒண்மனையே
அறிவுறு கருத்தார் சரீரநல் லாள் இலா
அச்சுத னாமெனை அடைதல்,
வெறியுறு நெறியா வதுமனம் எங்கும்
விரிந்துகுத் திரதெய்வத் தமர்தல் (10)

அருளிலா தவன்இந் திரியநிக் கிரகம்
செயுநல னறிவி லாதவனாம்
மருடரு மதிக மூர்க்கனாங் காரம்வளரநான்
சமர்த்த னென்று அமர்வோன்
திருவரும் வறியன் சேர்ந்திடும் பொருளில்
சிந்தையில் பிரிதியில் லவனே

இருநிதி யுறுசம் பன்னனாம் அவனே
இயல்புறு சற்குண முடையோன் (1)


சரியில்பண் டிதன்இல் வாழ்க்கையில் பாசந்
தவிர்த்துநற் கதியினை அறிவோன்
இருநில மதனின் ஈசனா னவனே
விடையறப் பற்றுதல் தவிர்ந்தோன்
மருடரு நீசன் சகலபா வத்தின்
மருவுவோன் இவையெலா ஞான
உருவமா யமரும் தவவுனர் கெனவே
உலகளந்த வன்பினா அறைவன் (12)


இருநிலம் அதனில் இயற்றும்இல் வாழ்க்கை
உத்தியைக் கடந்திட விலங்கி
வருதருநா வாயா மனிதர்தஞ் சனன
மன்னியல் ஓடத்தை விடுப்பான்
சரியில்சற் குருவாம் சார்ந்திடா நெறியைத்
தருமனு கூலமாம் பவனன்
பரமனா கியயா னிவையறித் துய்யாப்
பாவியர் தம்மைத்தாங் கொடுப்பார் (3)


துட்டமா வினின்வாய் துலங்கய முறவே
பிணித்திடும் சூத்திரக் கயிறு
மட்டினை அறியாததிகமாய் மெட்டி
அவமென மனத்திடை உணர்ந்தே
விட்டுமெட் டிடுதல் விரகினைச் சீவன்
விடையத்தின் கருத்தினை விட்டே
அட்டைபோல் அவைபற் றுவமுனர்த் திருப்பி
என்னிடத்து அமைப்பதே அறிவாம் (14)
என்பவையாம்.

நப்பின்னை வரலாறு:ஆசிரியர் 36 பாடல்களில் நப்பின்னைப் படலம் என ஒரு படலம் அமைத்துள்ளார். நப்பின்னை வரலாறு தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பான வரலாறு. யசோதையின் தமையனாய் மிதிலையில் வாழ்ந்த கும்பகனுடைய பசுநிரையில் காலநேமி என்ற அசுரனின் புத்திரர் எழுவர் எருதின் உருவம் கொண்டு புகுந்து யாருக்கும் அடங்காது பேரின்னல் விளைத்து வந்தனர். அவற்றை அடக்குவார் யாரும் இலர். மிதிலை அரசனான வெகுலாசுவன் என்பவன் தன் சேனைகளைக் கொண்டு அடக்க முயன்றும் முடியவில்லை. "இந்த எருதுகளை அழிப்பவர்கட்கு என் மகள் நப்பின்னையை மணம் செய்து கொடுக்கிறேன்" என்று அவன் பறைசாற்ற வந்தோரெல்லாம் அந்த எருதுகளால்தாக்குண்டுமடிந்தனர். அதன்மேல் கும்பகன் நந்தகோபனுக்குச் சொல்லியனுப்ப, அவன் அங்கு வருகின்றான். உடன் வந்த அவன் மகனாகிய கண்ணபிரான் அந்த எருதுகளோடு போரிட்டு அவற்றை அழித்தனன். நப்பின்னை கண்ணனுக்கு மாலை இட்டாள். முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நப்பின்னை திருமணம் உருக்குமிணிப் பிராட்டியின் திருமணத்திற்கு முன் நிகழ்ந்தது. நப்பின்னையின் வரலாறு தமிழ் நாட்டில் வழங்கும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய காப்பியங்களும், தேவாரம், திருக்கோவையார் ஆகிய சைவ நூல்களும், ஆழ்வார் பாசுரங்களும் நப்பின்னையை கண்ணன் தேவியாகக் கூறுகின்றன. ஆண்டாள் திருப்பாவை 20-ஆம் பாசுரம் திருமாலைத் துயிலெழுப்புமிடத்து, "செப்பன்ன மென்முலை செவ்வாய்ச்சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவேதுயிலெழாய்” என்று கூறியிருத்தலைக் காணலாம். திருவள்ளுவ மாலை, "உபகேசி தோள் மணந்தான்”[5] என்று கூறும். நேமிநாதர் விருத்தி கூறும் பண்டைய தமிழ் இலக்கணத்தில் "ஏறு தழுவுதல்” என்ற ஒரு செயல் ஆயர்களிடையே திருமணத்துக்கு முன் நிகழ்வதாகச் சொல்லப் பெற்றுள்ளது.இதுவே பாகவதபுராணத்தில்"நப்பின்னைப்படலமாக” உருக்கொண்டது போலும் எனக் கருதலாம். நப்பின்னையின் பெயர் பின்னை 'ந'என்பது அடைமொழி, பின்னை, 'பிஞ்ஞை' என்னும் இலக்கியத்தில் வழங்கும்.

தமிழ்நாட்டில் ஆண்டாள் நீளையின் அவதாரம் என்று சொல்வர்.[6] இந்த நீளையே நப்பின்னை என்பது பிள்ளை லோகஞ்சீயர் முதலான ஆன்றோர் கருத்து.[7] வடநாட்டுக் கிருஷ்ண லீலைகளில் கிருஷ்ணனுக்கு இராதை எப்படி ஒப்பானவளோ, அப்படியே தமிழ்நாட்டில் நப்பின்னை ஒப்பானவள்.

நப்பின்னை அல்லாமல் அருளாளதாசர், 'நாக்கினசித்து திருக்கல்யாணம்’ என்ற ஒரு படலம் அமைத்துள்ளார். இங்கு இவ்வரலாறு 32 பாடல்களால் பகரப் பெறுகின்றது. கெளசலராசன் மகள், 'நாக்கினசித்து', தன்னிடமுள்ள ஏழு எருதுகளையும் அடக்கியவனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுப்பதாக முரசறைவித்தான். பிற அரசர்கள் எருதுகளை அடக்க முடியாது போக கண்ணன் அவற்றை அடக்கி காய்சினசித்தை மணந்தான். வந்து தடுத்த மன்னர்களை அர்ச்சுனன் தன் அம்பு மழையால் தடுக்க, கண்ணன் காய்சினசித்தைத் துவாரகைக்குக் கொண்டு சென்றான்.

இது புராண வரலாறு. இங்கு நாக்கினசித்து அரச பரம்பரை. நப்பின்னை ஆயர்குலத்தவள். ஆனால் எருதுகளை அடக்கி மணந்த இரு வரலாறுகளையும் இரு மணங்களையும் புலவர் கூறுவது ஒரு விசித்திரமே. நப்பின்னையின் வரலாறு வடமொழியில் இல்லை. கண்ணன் மணந்த தேவியருள் தலைசிறந்தவர் எண்மர் [8]அவர்களாவர்:

உருக்குமினிப் பிராட்டி மித்திர விந்தை
சத்தியபாமை சத்தியை
சாம்பவதி பத்திரை
காளிந்தி இலக்கனை

என்று வடமொழிப் புராணங்கள் கூறும். இவ்வெண்மருள் முதல் இருவரையுமே அடியவர் உலகம் நன்கு அறியும். இங்கு நீளையோ இராதையோ சொல்லப் பெறவில்லை. நப்பின்னை பற்றிய தமிழ் வரலாறுகள் வடமொழித் தொடர்பில்லாமலேயே வழங்குபவை. வடமொழியையொட்டி எட்டு மணங்களையும் பற்றிக் குறிப்பிட்ட அருளாளதாசர், தமிழ் மரயையொட்டி நப்பின்னை மணத்தை அதிகமாகச் சொன்னார் போலும். எப்படியும் ஏறு தழுவிய இரு வரலாறுகள் இங்கு உள்ளமை அறியத்தக்கது. அன்றியும் உருக்குமினி திருமணத்திற்கு முன் நப்பின்னை, இரேவதி என்ற இருவர் மணங்களை இப்பாகவதம் கூறுவது கருதத் தக்கது.”[9]

சத்தியை-சத்தியவதி, நாக்கினசித்து-நக்னஜித் என்று வடமொழியில் கூறப்பெறும்.

பிற செய்திகள்: 'அச்சுதானந்த கோவிந்தன்' என்பது இவருக்குப் பிடித்தமான ஒரு தொடர் உருக்குமிணியை நாச்சியார் என்றே சொல்லுவார்; இரு படலங்களை இப்பெயரையொத்து அமைத்துள்ளார். உருப்பிணி என்றும் சொல்வார்; இச்சொல் வடிவம் நாலாயிரப் பிரபந்தத்துள்ளும் காணப்படுவது. வடமொழிப் பெயர்களைத் தமிழில் வழங்கும்போது சில ஆசிரியர்கள் தம் மனம் போல் மாற்றிக் கொள்வர். 'சிஷ்யன்' என்ற சொல் 'சீடன்’ எனவே வழங்கும் மணவாள மாமுனி 'சிச்சன்' என்பார். வானாசுரன் மகள் 'உழை' என்று சிலப்பதிகாரம் கூறும். அருளாளதாசர் 'உடாங்கனை' என்றே வழங்குகின்றார்.இவர் சிலப்பதிகாரம் பயின்றதில்லை போலும் 'மிதிலை' என்பதை 'மிதுலை' என்று குறிப்பிடுகின்றார். காவிய நாயகிக்குரிய சிறப்புகள் அனைத்தையும் உருக்குமிணிப் பிராட்டியாருக்கு அமைத்துப் பாடுகின்றார். உருக்குமிணி அவதாரம் கூறுமிடத்து, பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்களையொட்டிக் கருத்துகள் அமைத்திருப்பதைக் காண முடிகின்றது. பொற்கொடிக்குச் சாதகம் பண்ணினார், தாயர் வாய்ச்சங்கம், பைந்தமிழ் காட்டினர், காமம் உருக்குமிணி என விளம்பினர், சோபனம் பாடித் தொட்டிலுய்த்தனர், பொன்னின் சங்கிலித் தொட்டிலாட்டித் தொனியெழப் பாடுவார், தாலேலோ என்று சாற்றினார், திருவிளையாடீரெனவே விளம்புவார், திருவே செங்கீரையாடுக, சப்பாணிகை கொட்டுக, தவழ்ந்தே விளையாடுதி, தோள்வீசி நடந்திடு, தளருந் நடை நீ நட, புறம்புல்குதி, அக்காக்கை பொனாலமர் கோல் கொடுவா, தும்பி மலருது, பின்னர் கழங்குமாடிக் களித்து வந்தாள், அம்மானையுமாடினள், பந்தாடியு வந்தனள், ஊசல்லினி நாடினள், நீராடல் உவந்தனள் - என்ற சொல் வழக்குகளில் பெரியாழ்வார் பாணியில் பிள்ளைத்தமிழ் பொருளமைப்பினைக் காண முடிகின்றது.

பேதை, பெதும்பை நிலைகளை மேற்காட்டியவாறு அமைத்தபின்னர் மங்கைப் பருவ அழகை விரிக்கின்றார். பாதாதிகேசமாக 25 பாடல்களைக் காண்கின்றோம். சில சமயம் முழுப் பிரபந்தங்களையே இவர் நூலுள் அமைத்துள்ளதையும் கான முடிகின்றது. அவ்வாறு அமைத்தவை ஊசல், பள்ளியெழுச்சி என்பனவாகும். ஊசலில் பெரிதும் விருப்பமுடையவர் போலும்[10] சந்தர்ப்பம் நேர்ந்தபொழுதெல்லாம் ஊசல் வழக்குதலைகாட்டுகின்றது. உருக்குமிணி திருமணத்தில் 'பொன்னுரசலினேறினள் பூந்திரு' என்று பன்முறை குறிப்பிட்டபிறகு நான்கு பாடல்கள் ஆடிரூசல் என்று அமைத்து மகிழ்கின்றார்.

கைவளைகள் கலகலென ஆடீரூசல்
காலிலணி சிலம்பார்ப்ப ஆடீருசல்
மொய்யணிஐம் பாலிலெழ ஆடீரூசல்
மூவுலகில் நிகரில்மின்னே ஆடீரூசல்
மெய்யுரைசெய் நாவுடையீர் ஆடீரூசல்
விதர்ப்பனருள் மெல்லியலிர் ஆடீரூசல்



பையரவில் நடித்திடுவான் தேவி யான
பங்கயமேற் பகங்கிளியே ஆடீரூசல்

என இவற்றில் ஒரு பாடல். திருமணம் முடிந்தபிறகு கண்ணனும் உருக்குமிணியும் ஊசலில் அமர்கிறார்கள். அந்த இடத்தில் கவிஞர் எட்டுப் பாடல்கள் கொண்ட ஒர் ஊசல் பிரபந்தமே பாடிவிடுகின்றார்.

நீலமணி யொடுமாலின் மணியு மாட
நித்திலத்தா மமுமாட நிறைந்த பூவின்
மாலைகளும் அசைந்தாட வண்டும் ஆட
மருங்கெழில்மே கலையாடக் குழையும் ஆட
வேல்களெனும் விழிகுழையோ டாடக் காதின்
விளங்குதிருக் குண்டலமும் தோடும் ஆட
ஆலினமர் பழம்பொருளே ஆடீ ரூசல்
அழகுசெறி உருக்குமினி ஆடீ ரூசல்

என்பது அவற்றில் ஒரு பாடல். அடுத்த ஏழு பாடல்களில் ஊசலாடினார்கள் என்றே சொல்லி மகிழ்கின்றார். பின்னும் சத்தியபாமை திருமணம் முதலான இடங்களிலும் ஊசலாடினார்கள் என்றே இயம்பிக் கொண்டேகுகின்றார்.

பள்ளியெழுச்சியும் இதுபோல, பாற்கடலில் பள்ளிகொண்டு யோகத்துயில் புரியும் பரந்தாமனை இந்திரனை முன்னிட்ட தேவர்கள் சென்று வணங்கித் துயிலெழுப்புகின்றனர். இவ்விடத்தில் ஆசிரியர் பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பள்ளி எழுச்சிப் பிரபந்தமே பாடியுள்ளார். இங்கு கூர்மம், ஆதிமூலம், மீனம், வராகம், நரசிங்கம், வாமனன், இராமன், கண்ணன் ஆகிய அவதாரங்களை முறையாகப் பாடுகின்றார். பல இடங்களிலும் இவர் கூறும் குறிப்பால், கசேந்திரனுக்கு அருள் செய்து வந்த ஆதிமூலத் தோற்றத்தையும் ஓர் அவதாரமாகவே கருதினார் என்று தெரிகின்றது.

வெற்பினைக் கடைமத்தென
வேலையுள் நிறுவிச்
சற்ப்பவண் கயிறாகிடக்
கடைந்தமிர் தத்தை

அற்பமா மசுரரக்
கிடாதெமக் குவந்தளித்த
அற்புதா அமலா
பள்ளியுணர்ந்தரு ளாயே

நூலில் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக வருகின்றன. முதலாவதாக வசுதேவர் தேவகியை மணம் புரிவதிலிருந்து வாணாகரன் மகள் உடாங்கனையை (உஷையை அநிருத்தன் மணம் புரிகின்ற வரையில் குறிப்பிடப் பெற்ற பதினைந்து திருமணங்களிலும் மாலையிடுதல், கனலிடை ஆகுதிகள் சமித்துடன் நிறைத்தல், மங்கள நாணினைப் பூட்டுதல், பொரி அக்கினியில் பெய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல் என்ற சடங்குகள் தவறாது குறிப்பிடப் பெறுகின்றன.

அங்கி யின்நிறை யாகுதி பெய்தனர்
சங்கு பேரி கழன்றிடச் சாகைமா
நங்கை நப்பினை நற்கந் தரத்தினிற்
செங்கை மங்கல நாண்செறித் தானரோ,

மற்று மாகுதி செய்து வலமுறச்
கற்றித் தேயுவைத் தாய்மலர்த் தாளிறை
பற்றி அம்மி மிதித்துப்பல் லாண்டெழ
உற்று நோக்கினர் உம்பர் அருந்ததி.

என்ற பாடல்களில் இவற்றைக் காணலாம்.

பிறிதோரிடம்,கண்ணனின் மகனான சாம்பன்,துரியோதனன் மகள் இலக்கணையை மணம் புரிகின்றான். அந்த இடத்தில் வரும் ஒரு பாடல்;

அருமறை யவர்க ளெல்லாம்
ஆகுதி செய்யச் சாம்பன்
தெரிவைதன் கந்த ரத்திற்
சிறந்தமங் கலநாண் சாத்தி

அரிவைதன் னுடனே தீயை
வலம்வர அம்மி மீதின்
கருவமர் குழலி காலால்
மிதிக்கவான் வடமீன் கண்டார்.

என்பது. சில இடங்களில் பாடலின் முடிவில் பலசுருதியும் சொல்லப் பெறுகின்றது.

பாகவத புராணம் கண்ணன் வரலாற்றைக் கூறும் முகத்தால் திருமால் பரத்துவத்தைக் கூற எழுந்தது. ஆதலால் சிவபெருமானும் திருமாலைத் துதித்தலைக் கூறுவது இயல்பாக அமைகின்றது. இந்த இயல்பைப் பல இடங்களிலும் காணலாம். சிவபெருமான் தம்முன் தோன்றிய அரியைப் பன்னிரு நாமமும் நவிற்றித் துதித்தலை,

கேசவ நமவே நாரண நமவே
கிளரொளி மாதவ நமவே
மாசறு சுடர்கோ வித்தனே நமவே
வண்மைசேர் விண்டுவே நமவே
ஏசற உயர்ந்த எழிலுறு மதுசூ-
தனநம இடரினை யகற்றும்
தேசுறு திரிவிக் கிரமனே நமவே
சிறந்திடு வாமனா நமவே.

என்ற பாடலில் காணலாம். பல இடங்களிலும் சிவபெருமானைக் குறிப்பிடும்போது முறையாக ஆகுவாகனன், தோகை மாமயிற் சண்முகன், கணங்கள் முதலியன தவறாது குறிப்பிடப் பெறுகின்றன. பின்னர் பஸ்மாசுரன் என்னும் வருகாசுரனுக்குப் பரமேசுவரன், "நீ யார் தலையில் கை வைத்தாலும் அவர் அழிவர்” என்று வரங் கொடுக்கவும், அவன் அவர் தலையிலேயே கை வைக்கப் பார்க்கின்றான். அவர் ஒடவும், திருமால் அங்கு தோன்றி அவன் தன் தலையிலேயே கைவைத்து அழியும்படிச் செய்து, “மருளனாகிய அசுரனுக்கு இவ்வரம் அருளலே அவம்” என்று அறிவுறுத்துகின்றார்.

'அம்பிகாவனப் படல'த்தில் அம்பிகையை நந்தகோபன் முதலான யாதவர் சென்று வழிபடுவதைக் குறிப்பிடும்போது, விநாயகரையும் சண்முகரையும் குறிப்பிடுகின்றார். அங்கு அம்பிகைபாகன் ஆலயமும் உள்ளதாகக் கூறுவர். இதுபோலவே நாச்சியார் தேரேறு படலத்தில் கண்ணன் வராதது கண்டு உருக்குமினி அம்பிகைக்கு அர்ச்சனை புரிந்து வேண்டுகிறாள். அம்பிகையை அங்கு துர்க்கை என்று குறிப்பிடுகின்றார்.

சரித்திரத்தின் தன்மையால் ஆசிரியர் திருமால் பரத்துவம் கூறும் நிலைமை இருப்பினும், பல இடங்களிலும் சிவனுக்கும் திருமாலுக்கும் வேறுபாடின்மையை நன்குணர்த்திச் செல்வதைக் காணலாம். தட்சகப் படலத்தில் அரிஅரனுடனே, 'உன்னை என்கினரேல் என்னையும் அகற்றினராம். உன்றனைத்தான் யானென உணரார் சாந்தியை உறார் என்று ஒதுவதைக் காணலாம். 'கயிலாய யாத்திரைப் படலத்தில் அரிஅரன் இருவரும் ஒருவரையொருவர் துதித்துக் கொள்வதைக் காணலாம்.

வரையினைத் தனுவாய் வளைத்தருள் முதல்வா
நம, உனை மதிக்கிலா அசுரர்
திரிபுர மெரித்த சிவநம, இந்து
திகழ்கின்ற வேணியாய் நமவே,
கரியுரு தனைப்போர்த் தருளுவாய் நமவே
கறைமிடற் றிறைவனே நமவே
அரகரா நமவே, பசுபதி நமவே,
அந்தகாந் தகாநம என்றான்.

இது திருமால் சிவபெருமானைத்துதித்தது.சிவபெருமான் திருமாலைத் துதித்தது'கேசவ நமவே என்ற பாடல் முன்னர்க் காட்டப் பெற்றது[11]: மேலும் சிவபிரான் வருணனைக் கூறும்போது இவர் சைவசம்பிரதாயம் முழுமையும் தழுவிச் செல்வதைக் காணலாம். -

வானதி பிறைவெண் கூவிளை கடுக்கை
சாந்தையோ டெருக்கலர் மத்தம்
பூநிறை சடைகள் அசைந்திட நுதலின்
அழல்விழி பொருந்திடப் பஞ்ச



ஆனைந் திகழ உழைமழுக் கபாலம்
அழல்கரித் துறமலை யரையன்
மானிடத் திலகக் கொடிகுடை வயங்க
அரனுயர் விடையின்மேல் வந்தான்.


உரககங்கணம் கையில் இலங்கிடச் சூலம்
ஒளிவிட உமாபதி விடைமேற்
சரியிலாப் பவளக் கிரியென வரவே
சங்கொடு தமருகம் முழங்க
மரவுரி யுடுத்த சதமுகன் குண்டோ
தரன்திரி வாமிமா வனுவோடு
அரிமுகன் பஞ்ச வாகுவெண் ணிற்றை
அணிந்தவர் அன்புடன் அடைந்தார்.

என்ற பாடல்களில் இப்பண்பைக் கண்ணுறலாம்.

கம்பராமாயணத் தொடரும் கருத்தும் இந்நூலெங்கும் ஒளிர்வதைக் காணலாம். இஃது இயற்கை. பெருநூல் செய்த இவ்வாசிரியர், தம்மினும் பெருநூல் செய்தாரைப் பயின்று செய்ததே மரபு:நாடிய பொருள் கைகூடும் என்ற பாடலைத் தழுவியது முன்னர் காட்டப் பெற்றது. 'வண்மை யில்லையோர் வறுமை யின்மையால்’[12] என்ற கம்பன் பாடலைத்தழுவி எழுந்தது இவண் காட்டப் பெறும் பாடல்

மறமில்லை மனந்தனின் ஞானமுற
அறனில்லை அதன்ம மிலாதுயரும்,
உறவில்லை உறும்பகை யின்மையினால்
குறைவில்லைவள நாடியல் கூறரிதே.

என்பது.

'நாராயணன் எங்கும் இருக்கின்றான் என்று இரணியன் முன் சொன்ன கம்பர் பாடல்:

சாணினும் உளன்ஒர் தன்மை
அணுவினைச் சதகூ றிட்ட
கோணினும் உளன்,மா மேருக்
குன்றினும் உளன்இந் நின்ற
தூணினும் உளன்நீ சொன்ன
சொல்லினும் உளன்.இத் தன்மை
காணுதி விரைவில் என்றான்
நன்றெனக் கனகன் நக்கான்

என்பது. இதனை நினைந்த வண்ணம்,

நொய்ய தாகும் அணுவினை நூறெனக்
கொய்து விட்ட கோணங்கள் தோலுளன்
வையம் வானம் வடவரை மீதுளன்
மெய்யுட் டோன்றி விளங்கிய மாமுதல்.

நிகரி வாத என்நெஞ்சி லுளன்இவன்
புகலும சொல்லி னுளன்,மணிப் பூணுளன்
இகழ்வில் உன்னி தயப்பங் கயமெனும்
முகையின் விஞ்சும் பொருட்டுள மூர்த்தியோன்.

என்ற பாடல்களை அமைக்கின்றார் இந்நூலாசிரியர். இவற்றோடு கம்பர் பாடலை ஒப்புநோக்கி உணர்க.

'நம்பியைக் காண நங்கைக்
காயிரம் நயனம் வேண்டும்'

என்ற கம்பர் பாடல் இவ்வாசிரியர் வாக்கில்,

மாயன் வடிவின் னலம்மகிழ்ந்
தினிது நோக்க
ஆயிழை உனக்கு விழிஆயிரம்
வேண்டும்

என்று வருகின்றது. இரண்டையும் ஒப்புநோக்குக.

இந்தப் பாகவதம் திருமாலின் பத்து அவதாரங்களையும் விவரிக்கின்றது. முதல் ஏழு அவதாரங்களையும் தனித்தனிப் படலங்களில் குறித்துக் கூறிய பின்னர் நாரத முனிவன் கண்ணன் பிறப்பு முதல், அவனே உருக்குமிணிக்கேற்ற மணவாளன் என்று கூறுவது வரையில் பல படலங்களால் விரித்துரைக்கின்றார். இதுவரையில் நூலின் பாதிப்பகுதியாகும்.கண்ணன்மணம் செய்தபின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அடுத்த பகுதி. வைதிகப் படலத்தில், கண்ணன் உருக்குமணியுடன் ஒர் யாகம் செய்யத் தொடங்குகின்றான். அப்போது ஒர் அந்தணன் தோன்றி, "என் பிள்ளைகள் மூவர் பிறந்தவுடன் உடலோடு மாயையால் மறைந்து விட்டார்கள். என் மனைவிநாலாம்பிள்ளை பெறப்போகின்றாள்.இப்பிள்ளையையேனும் மாயையால் மறையாமல் நீ காத்தருள் என்று வேண்டலும், பார்த்தன் அதற்கு உறுதியளிக்கின்றான். அப்பிள்ளையும் பிறந்தவுடன் மறைந்தது கண்ட வேதியன் பார்த்தனுடைய வில்லாற்றலைப் பழிக்கின்றான். கண்ணனிடம் முறையிட, அவன் அவ்வேதியனையும் பார்த்தனையும் தேரில் ஏற்றிக்கொண்டு விரசையாற்றங்கரையில் இருவரையும் நிறுத்திவிட்டு, அப்பால் வைகுந்தம் புகுகின்றான்.

அங்குக் கீழ்த்திசையில் சண்டப்பிரசண்டர், தென் திசையில் பத்திரசயத்திரதர், மேல் திசையில் சயவிரதர், வடதிசையில் நாதாவிதாதா காவல் உட்சென்று அங்கு அச்சுதனைக் காண்கின்றான். "அந்தணன் சிறுவனைத் தருகின்றேன். நீ அவனியில் தச அவதாரம், இந்துவின் வதனத் தெண்மர் தேவியர் மகிழ்ந்திடக் காட்டுதி” என்றான்.இவனும் மச்சாவதாரம் முதலான எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாய் நடித்துக் காட்டுகின்றான். தனது அவதார நிகழ்ச்சிகளையும் விரிவாய் நடித்து மறையவன் புதல்வனுக்காக இங்கு வந்து நிற்பதையும் நடித்துக் காட்டி, மேல்வரப் போகிற பரியுருவாகிய கல்கி அவதாரத்தையும் நடித்துக் காட்டுகின்றான். விமலன் மகிழ்ந்து சிறுவனைத் தரவே, பெற்று வந்து அந்தணனிடம் கொடுக்கின்றான்.[13]

இங்ஙனம் கண்ணன் அங்கு நடித்துக் காட்டிய கல்கியவதாரத்தையும் ’கற்கிப்படலம்’ என்ற தனிப்படலமாக இறுதியில் விரித்துரைக்கப் பெறுகின்றது. சனமேசயனுக்குப்பின் தொடர்பாகப் பல தலைமுறை ஆட்சி செய்வோர் வரலாறுகள் வரையப் பெறுகின்றன. இவ்வாறு பெயரும் ஆட்சிக் காலமும் கூறுகின்ற பாடல்கள் 24. பிறகு உலகில் ஆட்சியும் தருமமும் எப்படிக் கீழாகும் என்பதை,

தருமமில் மிலேச்சர் மரபினோர் அநேகர்

தரையினை யாளுவர், தம்மில்

துரிதம் வந்துற வேஅமரிடை அநேகர்

மடிந்திடச் சூத்திரர் முதலாய்,

வருண மற்றுயரும் சங்கர சாதி,

மறுவிலா அனாமிக ராள்வர்

அருமறை புராண சாத்திரம் எவையும்

அருமறை நெறிஅகன் றிடவே,

வருணமும் இலாமல் மறைநெறிப் படியே

மணம்செயும் கருமமும் அகல,

அரிவையர் பலரை யணைந்திட அதுவும்

அறன்எனச் சம்மத மாகிப்

பருவமோ ரெட்டில் சிசுவைமங் கையர்கள்

பயந்திடப் படியிடை நரர்க்குப்

புருடவா யுகசொல் வருடமுப் பதுமாய்த்

தும்பைபோற் குறுகும்பூ மரங்கள்,

தருமமெய் பொறைசற் குணம்அரு ளீகை

தவந்தெய்வம் பேணுதல் எல்லாம்

இருநிலத் தகலக் கதம்வதை முயற்சி

இகழ்ச்சிபொய் வஞ்சனை யதனம்

மருளிவை மலிய மலர்மகள் வாணி

அகன்றிட மதியிலாக் கயவர்


திரளுறு வரியினும் அதிகமாய்ப் புவிமான்
தடுக்கிட மிடைகுவா ரன்றே.

என்பவை அவை.

இவற்றின்பின் அவந்தி தேசத்தின் கம்பளக் கிராமத்தில் பார்ப்பனர் குலத்தில் விண்டுசித்து’ என்பவன் மகனாய்க் கற்கி பிறப்பான். அவன் தங்கையானவள் கயவர்களை அழிப்பாள். கலியுகம் நீங்கும். கிரேதாயுகம் பிறக்கும். தரும வழியில் நிற்கும் மனிதர்களே எஞ்சுவார்கள். இவ்வாறு கதையை முடித்துப் பின் பாகவதம் வந்த வழியையும் சொல்லுகிறார். அனந்தன் முதலாக விதுரன் வரை சொல்லப்பட்டது என்கின்றார்.

மீன் முதலாக தெய்வத்தன்மை பொருந்திய கிருஷ்ணாவதாரம் வரையில் வளர்ந்து அபிவிருத்தியடைந்த அவதார முறை, அடுத்ததாகிய குதிரை வடிவமுடைய கல்கியவதாரத்தில் கீழிறங்கி விடுகின்றது. இனி வரப்போவதையும் வரையறை செய்து புராணங்கள் உணர்த்துவது இன்று படிக்கும் நமக்கு பெரு வியப்பாய் உள்ளது.இதை நாம் புரிந்து கொள்வது எளிதன்று. உலகத்தில் இறுதி ஊழியிலே கடவுள் குதிரையாக வந்து, அதர்மம் எல்லாம் அழியச் செய்து தருமம் மீண்டும் புதிய யுகத்தில் தலையெடுக்கச் செய்கின்றார். அணு யுகத்தையும் அணுச்சக்தி ஒரே விநாடியில் பல லட்சம் மக்களை அழித்த உண்மைநிகழ்ச்சியையும் நேரில் உணர்ந்த நாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கப் போவதைப் புராணத்தில் படிக்கும்போது சிறிது சிந்திக்கவே செய்வோம். பறக்கும் தட்டுகள் பூவுலகில் பறக்கின்றன. சிலர் கண்டார்கள். இவை பூவுலகத்துக்குச் செவ்வாய்க் கோளிலிருந்து வருபவையோ என்ற அச்சம் அமெரிக்க அறிவியலறிஞர்களின் மனத்தில் உள்ளது. பூவுலகில் தெரிந்த எந்த ஆற்றலும் அப்பறக்கும் தட்டுகளைப் பார்க்க இயலவில்லை. ஒருக்கால் இது கல்கியவதாரத்தின் முன்னோடியாக இருக்கலாம் அல்லவா? எவராலும் அறிந்து சொல்ல இயலவில்லை.

காலம்: நூல் அரங்கேறிய காலத்தை 'திருவரங்கப்படலம்’ 154-ஆம் பாடல் திட்டமாய்க் குறிப்பிடுகின்றது. 

ஆயும் மறையோ ரெண்ண வரும்சகாத்தம்
ஆயிரத்து நானுற்றோ டறுபத் தஞ்சாம்
தூயசுய கிருதுநாளின் முதன்மா தத்தில்
துலங்குகுரு வாரத்துத் திராட நாளில்
நேயமுடன் நெல்லிநகர் வரதராசன்
நிகரிலரங் கத்திலர வணையில ஓங்கும்
நாயகன்முன் அறிஞர்மகிழ்ந் திடவே வாசு
தேவகதை அரங்கேற்றி நலனுற் றானே.

என்பதில் காண்க. அரங்கேற்றிய காலம் சகாத்தம் 1465, அதாவது கி.பி. 1543, சுபகிருது ஆண்டு, சித்திரை மாதம், குருவாரம், உத்திராட நட்சத்திரம். ஆதலால் வாசுதேவ கதை செய்த வரதராசர் (அருளாளதாசர் காலம் 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி.

நூலகத்துள்ள மற்றொரு குறிப்பும் கருதத்தக்கது. தில்லை கோவிந்தராசர் துதிப்பாடல் (திருவரங்கப்படலம் - 68).

நச்சணி நகில்வீ றியஉமை கொழுநன்
நடஞ்செயக் கமலனோ டிமையோர்
நிச்சலும் முராரி தனைத்தொழும் பதியை
முன்புபோல் நிறுவிய நிருபன்
அச்சுத ராயன் வணங்கிட அரவின்
அழகிய தில்லையம் பதிக்கே
மைச்சுடர் வரைபோல் வயங்குகோ விந்த
ராயன்மா மலரடி வாழி.

இவண் குறிப்பிட்ட அச்சுதராயன் 1629-இல் விசய நகரப் பேரரசின் மன்னர் பதவி ஏற்றவன். இவன் காலத்தில் ஆசிரியர் நூல் செய்யத் தொடங்கி 1543-இல் முடித்தார் என்று தெரிகிறது.


  1. 14 பெரியாழ். திருமொழி 3.5 படித்து நுகரத்தக்கது.
  2. 15 மேலது 3.5 ஓதி உணர்ந்து மகிழத்தக்கது.
  3. 16 நம்மாழ்வார் திருவாய் மொழி 27 ஒப்பிடலாம். (பன்னிரு திருநாமப்பாட்டு)
  4. 17 தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் என்பதையே தந்தை பெரியார்ஒரு நகராண்மைக் கழகத்திற்குரிய கூட்டம் என்று கிண்டல் செய்வார். இது தெரிந்திருந்தால் இதனை கிண்டல் செய்திருப்பார். மக்கள் இராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்புவதால் இவ்வாறு கிண்டல் செய்தார். கட்டுக்கதை என்று கொண்டு இதனைத் தள்ளிவிடுதல் அறிவுடைமையாகும்.
  5. 18 திருவள்ளுவ மாலை - 21 நல்கூர் வேள்வியார் பாடல்
  6. 19 துளசிச் செடியின் அடியில் பூமியில் கிடந்தமையால் பூமிப் பிராட்டியாரின் அம்சமாகவும் கூறுவதுண்டு. சீதாப்பிராட்டியால் உழுகின்ற கொழு முனையில் அகப்பட்டமையால் பூமிப் பிராட்டியாரின் அமிசமாகக் கூறுவர்.
  7. 20 மு.இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி (1938)நப்பின்னைப் பிராட்டியார் என்ற கட்டுரை காண்க
  8. 21 கண்ணன் தேவியர் எண்மரை மணந்தான் என்ற வரலாற்றைத் தழுவி சிந்தாமணியில் சீவகனுக்கு ஆசிரியர் திருத்தக்கதேவர் எட்டுமணம் சொல்லுகிறார். ஏறு அடக்கிநப்பின்னையை மணந்ததற்கு ஏற்ப, சீவகன் ஏறு அடக்கிப்பதுமுகனுக்கு ஆயர் குலப்பெண்ணான கோவிந்தையை மணஞ் செய்விக்கின்றான். அங்கும் கோவிந்தைமணம் சீவகனுடைய எட்டு மணங்களுக்குப்புறம்பாகத் தொடக்கத்தில் உள்ளது. கடைசி மணம் பாகவதத்தில் இலக்கணை மணம் சிந்தாமணியிலும் கடைசி மனம் இலக்கணை மணம்.
  9. 22 ஆயர் குலத்து மணங்கள் யாவும் 'ஏறு தழுவுதல்' என்ற முறையில் வருவதும் சிந்திக்கத்தக்கது
  10. 23 பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் 'ஊசல் இலக்கியம்' நினைவிற்கு வருகின்றது.
  11. 24 இந்நூல் பக்கம் 50-ல் காண்க
  12. 25 கம்ப ராமாயணம், பால காண்டம் நாட்டுப் படலம் - 53
  13. 26”வைணவ உரைகளில் இந்த வரலாறு வேறு மாற்றங்களுடன் காணப் பெறுகின்றது. அங்கு நான்கு பிள்ளைகளை மூன்று தேவியரும் மறைத்ததாகவும், அவர்கள் கண்ணன் அவதாரத்தை இங்குள்ளாருக்குக் காட்டுவதற்காக இந்த யுக்தியை மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர். மேலும் பார்த்தனும் பரந்தாமனும் மட்டிலும் அங்கு வந்ததாகக் குறிப்பு பாாததன வைகுநதம புகுவதறகுப பககுவபபடாததால் அவனை விரசையின் இக்கரையிலே விட்டுவிட்டுத்தான் மட்டிலும் உட்புகுந்து நான்கு பிள்ளைகளுடன் வெளிவந்ததாகக் குறிப்பு.