வ. வே. சு. ஐயர்/இலண்டனில் தீபாவளி விழா! காந்தியடிகள் சமையல்காரர்!

இலண்டனில் தீபாவளி விழா! காந்தியடிகள் சமையல்காரர்!

ங்கிலாந்து நாட்டிலே இருந்த இந்தியர்கள், சாவர்கர் எழுதிய கட்டுரைகளைப் படித்து இந்திய நாட்டின் சுதந்திரப் பற்றிலே புதியதோர் புத்துணர்ச்சியைப் பெற்றார்கள். ஆனால், சுதந்திரத்தின் விரோதிகளான இங்கிலீகாரர்கள் இந்திய இளைஞர்கள் மீது எரிச்சலும், பகையும் கொண்டார்கள்.

இதனால், மாவீரர் சாவர்கர் எழுதிய நூல்கள் சில பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. ஏன் தடை செய்தீர்கள் என்று இந்தியர்கள் அரசினரைக் கேட்டபோது, ஆங்கில அரசுக்கு எதிராக எவ்விதச் சுதந்திரக் கருத்துக்களையும் எழுதக்கூடாது என்றார்கள். ஆனால், சாவர்கரும், ஐயரும், மற்ற இந்திய வாலிபர்களும், பிரிட்டிஷ் அரசை ஏமாற வைத்து விட்டு, தடை செய்யப்பட்ட நூல்களை உலக நாடுகளின் விற்பனைக்கு அனுப்பினார்கள்.

தடை செய்யப்பட்ட அந்த நூல்களைப் படித்த இந்தியர்கள் புதிய உணர்வு பெற்றார்கள். எப்படியும் இந்திய தேசத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

சாவர்கரது நூல்கள், இங்கிலீஷ்காரர்களை இந்தியாவிலே இருந்து விரட்ட வேண்டும் என்ற உணர்ச்சிகளை மக்களிடம் பல்வேறு வகையில் தூண்டிவிட்டது என்றால், வ.வே.சு. ஐயர் அந்த மக்களது உணர்ச்சிகளையும் மீறி ஒருபடி மேலே சென்று, பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசுக்குச் சென்று துப்பாக்கிகளை வாங்கி, இந்தியாவிலே இருந்த அபிநவபாரத் உறுப்பினர்களுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார்.

அந்தத் துப்பாக்கிகள் எல்லாம் பம்பாயிலே இருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. புரட்சி எந்த உருவத்திலாவது உருவாகாதா? வெள்ளைக்காரன் வெளியேற மாட்டானா? என்ற நோக்கம் ஐயரிடம் வேரூன்றிவிட்டது.

பலாத்காரத்தின் மூலமாகத் தான் இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்ற கருத்து ஐயரின் உயிர் மூச்சாக இருந்தது. ஆனால், இந்த ஐயரின் உணர்ச்சியும் சாவர்கரின் எழுச்சியும் அண்ணல் காந்தியடிகளது அகிம்சைத் தத்துவப் போக்கை மாற்ற முடியாமல் தோற்றுப் போயின. அவ்வாறிருந்தும் கூட, காந்தி பெருமானிடம் அவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் கடுகள்வும் குன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வ.வே.சு.ஐயரும், சாவர்கரும் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் தங்கியிருந்தபோது, இந்தியா சுதந்திரத்தை வன்முறையால்தான் பெறமுடியும் என்பதற்காகப் போராடித் தொல்லைகளை ஏற்றுக் கொண்டிருந்த போது, காந்தியண்ணல் தென்னாப்ரிக்க இந்தியர்களது உரிமைகளுக்காக அதே வெள்ளை ஆட்சியை எதிர்த்துத் தென் ஆப்ரிக்காவிலே தலைமையேற்றுப் போராடிக் கொண்டிருந்தார்.

தென்னாப்ரிக்காவிலே வெள்ளையர் ஆட்சி இந்தியர்களுக்குக் கொடுத்துவரும் வரம்பு மீறிய செயல்களை லண்டனிலே உள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் பெரிய அதிகாரிகளைப் பார்த்துக் கூறி அதற்கோர் வழிகாணவேண்டும் என்பதற்காக அண்ணல் காந்தி லண்டன் நகர் வந்திருந்தார். அப்போது, ஐயர் அவர் தங்கியிருந்த முகவரியைத் தெரிந்து கொண்டு காந்தி பெருமானைச் சந்தித்தார்!

இந்தச்சந்திப்புக்கு முன்பு இருவரும் சந்தித்ததில்லை. அதனால், ஐயர் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். காந்திபெருமான் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இருவரும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி நெடுநேரம் உரையாடினார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான ஒரே வழி பலாத்காரம் தான் என்ற தனது உணர்வைக் காந்தியடிகளிடம் வற்புறுத்தி, வலியுறுத்தி ஐயர் பேசினார்!

ஆனால், காந்தியண்ணல் ஐயர் கருத்துக்களை தக்க காரணங்களுடன் மறுத்து அகிம்சை ஒன்றுதான் சுதந்திர வழி என்று கூறினார் வாதப் பிரதி வாதங்கள் வளர்ந்து கொண்டே போவதை அறிந்த இருவரும் அவரவர் வழிகளே சிறந்தவை என்று முடிவு கட்டிக் கொண்டார்கள். ஆனால் இருவர் நோக்கமும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான். இதில் வழிகள்தான் வெவ்வேறாகும் என்பதை உணர்ந்தனர்.

காந்தியடிகள் லண்டனில் இருக்கும்வரை ஐயர் அவரைத் தேடி அடிக்கடி சென்று தனது நட்பை வளர்த்துக் கொண்டார். சுதந்திர வேட்கையை அவர் காந்தியிடம் கூறி வழி கண்டு வந்தார்.

இந்த நேரத்தில் ஐயருக்கு ஓர் ஆசை எழுந்தது. லண்டனிலே வாழ்கின்ற சுமார் ஆயிரத்துக்கும் மேலான இந்தியர்களை ஒன்று கூட்டி ஏதாவது ஒரு விருந்து வைத்து மகிழவேண்டும் என்பதே அந்த ஆசை!

அதற்காகத் தீபாவளித் திருவிழாவைப் பயன்படுத்த விரும்பினார். இக் கருத்தை ஐயர் சாவர்கரிடமும், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களிடமும் கூறியபோது, எல்லோரும் அதை வரவேற்றார்கள். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் எல்லாரும் செய்து வந்தார்கள்.

இந்த விழாவிற்குரிய சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்று இந்திய வாலிபர்களைக் கூட்டி ஐயர் கருத்தறிந்தார். எல்லோரும் ஒருமனதாக, தென்னாப்ரிக்காவிலுள்ள இந்தியர்களது உரிமைகளுக்காக, தனியொரு மனிதனாக நின்று போராடி வரும் காந்தியடிகள் சிறப்பு விருந்தினராக அழைக்கத் தகுதியுடையவர் என்ற முடிவுக்கு வந்து அவரையே அழைக்கத் தீர்மானித்தார்கள்.

ஐயர், காந்தியடிகளிடம் சென்றார். தங்களது தீபாவளி விழாத் திட்டத்தைக் கூறினார். காந்தியடிகள் அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று பண்ரிவன்புடன் அவரைக் கேட்டுக் கொண்டார்.



“காந்தியடிகள் தனது மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறினார்! ஒன்று விருந்து விழாவை எந்த உணவு விடுதியிலும் நடத்தக் கூடாது. இரண்டு ஏதாவது ஒரிடத்தில் எளிமையாகவே நடத்த வேண்டும். மூன்று இந்திய முறை உணவே விருந்தில் பரிமாறப்படவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் புலால் உணவோ மதுபான வகைகளோ விருந்தில் இடம் பெறக் கூடாது” என்பதே காந்தியடிகள் விதித்த நிபந்தனைகளாகும். இந்த மூன்றையும் ஐயர் நிறைவான மனத்தோடு ஏற்றுக் கொண்டார். விழா விருந்துக்குரிய நாளையும் அடிகள் குறித்து ஐயரிடம் கொடுத்ததை அவரும் ஏற்றுக்கொண்டார்.

பெற்றுக் கொண்ட நாளையும், அடிகள் அறிவித்த நிபந்தனைகளையும் நண்பர்கள் கூட்டத்தில் ஐயர் குறிப்பிட்டு அவர்களுடைய எண்ணங்களையும் அறிந்தபோது, எல்லாரும் காந்தியாருடைய கருத்துக்களை முழுமனதோடு அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.

விருந்து நடைபெறுவதற்கான ஓரிடத்தை உறுதி செய்து, எல்லா விருந்தினர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான மற்ற வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. இந்திய உணவு முறைகளைத் தயாரிப்பதற்கான உணவுச் சாமான்களை ஐயருட்பட சிலர் கடைகளிலே வாங்கி வந்தார்கள், பாத்திரங்கள் தேடித்தேடி வாங்கி வரப்பட்டன.

விருந்து நாளன்று ஐயர் வெளியே சென்றிருந்தார். இந்திய வாலிபர்கள் அனைவரும் சமையல் வேலையில் ஈடுபட்டுச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு நடுத்தர வயதுடைய ஓர் இந்தியர் வந்தார். இந்தியர் உடையிலே இருந்த அவர் சமையல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உதவிட முன் வந்தார்.

இந்திய உடையிலே வந்தவரைப் பார்த்த இந்திய வாலிபர்கள், ‘ஐயோ பாவம், ஏதோ ஏழை இந்தியர் போலிருக்கு சரி இவரும் நம்முடன் சமையல் வேலைக்கு உதவட்டும்; விருந்து உண்டு  விட்டுப் போகட்டும்’ என்று நினைத்து, அவரைப் பாத்திரங்களைத் துலக்குமாறும், தண்ணீர் சுமந்து வருமாறும், காய்கறிகளை அரியும் படியும் வேலைகளைக் கொடுத்தார்கள்! அவரும் எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் ஓய்வின்றிச் செய்தார்.

விருந்து வேலையாக வெளியே சென்றிருந்த வ.வே.சு. ஐயர் சமையல் நடக்கும் இடத்திலே எப்படி வேலை நடக்கின்றது. என்பதைப் பார்க்க வந்தார்! அப்போது தமது வாலிப நண்பர்களுடன் போட்டிப் போட்டு சமையற் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் ஏழை இந்தியர் உடையிலே உள்ளவரைக் கண்டார்! மீண்டும் கூர்ந்து பார்த்தார்!

தனது நண்பர்களிடம் ஒரே கூச்சல் போட்டார் எல்லாரும் திரு திரு வென்று ஐயரைத் திரும்பிப் பார்த்த போது, "நண்பர்களே, நீங்கள் செய்தது. நியாயம்தானா? சிறப்பு விருந்தினரை இவ்வாறு வேலை செய்யச் சொல்லலாமா? அழகா இது? ஐயோ, இவர் தான் நண்பர்களே காந்தியடிகள்! என்று காந்தியண்ணலைச் சுட்டிக் காட்டிப் பதறிக் கதறினார்!

இதைக் கேட்ட இந்திய வாலிபர்கள் திடுக்கிட்டார்கள் உடனே, காந்தியடிகளிடம் வ.வே.சு. ஐயரும், சாவர்கரும், ராஜனும் உட்பட அனைவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்று குரல் தழதழக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது அடிகள் ஐயரையும், மற்ற நண்பர்களையும் பார்த்து, 'நானல்லவா உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! இந்திய முறை உணவு வழங்குமாறு உங்களுக்குத் தொல்லையை அல்லவா உருவாக்கிவிட்டேன். அது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை? அந்தக் கஷ்டமான பணியை உங்கள் மீது சுமத்திச் சிரமப்படுத்திவிட்ட என்னை நீங்கள்தான் மன்னிக்க வேண்டும் என்றார். இவ்வாறு கூறிய அடிகள், தொடர்ந்து சமையல் வேலைகளைச் செய்தார்! ஐயரும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லியும் அடிகளார் கேட்கவில்லை. தொடர்ந்து செய்தபடியே இருந்தார். உணவு பரிமாறும் வரை செய்தார். எல்லாருடனும் அமர்ந்து உணவுண்டார்! காந்தியடிகளுடைய எளிமையும், இனிமையான பேச்சும், வ.வே.சு.ஐயரை மட்டுமன்று, விருந்துண்ண வருகை தந்த எல்லா லண்டன் வாழ் இந்தியர்களையும் கவர்ந்தன!

விருந்துண்ட பின்பு வந்திருந்த இந்தியர்கள் முன்பு காந்தியடிகள் விருந்துரையான தனது நன்றியுரையைப் பேசும்போது, 'எனக்கும் சாவர்கருக்கும், ஐயருக்கும் கொள்கை ஒன்றுதான். இந்திய நாடு பரிபூரண சுதந்திரம் பெறவேண்டும். இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு வெளியேறிட வேண்டும். இதுதான் எங்களுடைய உயிர்க் கொள்கை.

ஆனால், அந்தச் சுதந்திரத்தைப் பெறுவது எப்படி? இந்தியாவை விடுவிப்பது எப்படி? இந்த வழியில்தான் எனக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு. இருந்தாலும் இருவருடைய லட்சியம் ஒன்றே. லண்டனிலே உள்ள இந்தியர்கள் அமைதியான முறையிலே போராட்டம் நடத்தி இந்தியாவின் விடுதலைக்கு வழி காண வேண்டும் என்றார்!

விருந்தில் கலந்து கொண்ட அடிகளுக்கு நன்றி தெரிவித்து சாவர்கர் அழகான வீரவுரை ஒன்றை முழக்கமிட்டார் பிறகு, காந்தியண்ணல் விடை பெற்றுச் சென்றார்!

விருந்திலே சாவர்கர் உரையைக் கேட்ட ஐயர், காந்தியடிகள் சாவர்கருடைய இதுபோன்ற இரண்டு பேச்சுக்களைக் கேட்பாரானால், சுதந்திரத்துக்கு பலாத்காரம் தான் சிறந்த வழி என்பதை ஒப்புக் கொள்வார் என்றார். பலாத்கார முறையில் ஐயர் அவ்வளவு நம்பிக்கை உடையவராக இருந்தார்.