வ. வே. சு. ஐயர்/யார் இந்தக் கீர்த்திகர்? சகுனியா அல்லது விபீஷணனா?
இலண்டனில் உள்ள இந்தியா விடுதியில் ஒரே நேரத்தில் இருபது பேர்கள்தான் தங்கலாம். ஆனால், அங்கே ஒரே சமயத்தில் ஏழுபேருக்கு மேல் தங்குவது இல்லை. என்ன காரணங்கள் அதற்கு?
இந்தியப் புரட்சி இளைஞர்கள் கல்வி கற்க வந்துள்ளோம் என்ற பெயரிலே அங்கே வந்து தங்குவதால், அடிக்கடி அங்கு ரகசியப் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனால் இந்தியர்கள் அச்சப்பட்டு அங்கே தங்குவதில்லை.
இந்தியா விடுதியிலே தங்கி இருப்பவர்களுக்குப் போதிய பணியாளர்கள் இல்லை. அதனாலே அங்கே தங்கி இருப்பவர்களே எல்லா வேலைகளையும் செய்து கொண்டாக வேண்டும் என்பதால் இந்தியர்கள் அங்கே தங்காமல் வெவ்வேறு விடுதிகளுக்குப் போய் தங்கிவிடுவார்கள்.
இந்தியா விடுதியிலே சுவையான, விதவிதமான உணவு வகைகள் இல்லை. விருப்பத்துக்கேற்றபடி உணவுண்ண முடியவில்லை. இக்காரணங்களாலும் பலர் வெவ்வேறு உணவு விடுதிகளுக்குச் சென்று தங்கிவிடுகின்றார்கள்.
எனவே, யார் வசதிக் குறைவுகளைப் பற்றிக் கவலைப்படாதவர்களோ, யார் சுவையான உணவு வகைகளைப் பற்றி அக்கறைப் படாதவர்களோ, யார், வேலைகளைச் செய்திட வேலைக்காரர்கள் இல்லையே என்று வருத்தப்படாதவர்களோ, யார் லண்டன் ரகசியப் போலீஸ் கண்காணிப்புகளைப் பொருட்படுத்த மாட்டார்களோ, அவர்கள் தான் இந்தியா விடுதியிலே தங்குவார்கள்.
அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் வ.வே.சு. ஐயர், விநாயகராவ் சாவர்கர், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் ஆகியோர் ஆவர். இவர்களுள் சாவர்கர் மராட்டியர், மற்ற இருவர்களும் திருச்சி மாநகரைச் சேர்ந்த தமிழர்களாவர்! வ.வே.சு. ஐயர் எதிலும் முனைப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர்! மராட்டியர் எல்லாவற்றுக்கும் விளை நிலமாக விளங்குபவர் என்றால் மிகையன்று!
துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு வீசுதல், துப்பறிதல், துணிகரமாக எச்செயலிலும் ஈடுபட்டுச் செய்தல் போன்ற செயல்களைச் செய்வதற்குப் பயிற்சி பெற்றால் தானே ஒரு புரட்சி இயக்கத்தை நடத்த முடியும்? வாய்கிழியப் புரட்சி புரட்சி என்று கூறிவிட்டால் போதுமா? ஆனால் மேற்கண்ட செயல்களிலே பயிற்சி பெற்றவர்களே இந்தியா விடுதியிலே தங்கியிருந்த இளைஞர்கள்.
அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் வ.வே.சு.ஐயர்! துப்பாக்கி சுடும் பயிற்சியிலே நிபுணராவதற்காக ஐயர், பாரீஸ் நகரமே சென்று வந்தார். அத்தோடு நின்றாரா அவர்? பாரீஸ் நகரிலே இருந்து ஏராளமான துப்பாக்கிகளை வாங்கி, பம்பாயிலே உள்ள அபிநவபாரத் சங்கத்திற்கு அனுப்பினார்!
இங்கிலாந்திலும், இந்தியாவிலும் புரட்சியை உருவாக்குவதற்காக வ.வே.சு.ஐயரும், அவரது நண்பர்களும் பல ரகசியத் திட்டங்களைப் போட்டு வந்தார்கள். அவற்றை கைப்பற்றிட பிரிட்டிஷ் ரகசியப் போலீசார் எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லை.
இந்த மாதிரியே ஏமாற்றங்கள் சிலவற்றைச் சந்தித்த லண்டன் போலீஸ். இந்தியா விடுதிக்குள்ளேயே எட்டப்பன், சகுனியின் வேலைகளைச் செய்திட ஒற்றர்களை நியமித்தது. ஐயரையும் மற்ற இந்திய இளைஞர்களையும் கையோடு பிடிப்பதற்காக முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கிக் காத்திருந்தது.
சாவர்கர், வ.வே.சு போன்றோர் சாதாரணமானவர் அல்லர்! போலீஸ் விவரங்களை நன்றாகப் புரிந்தவர்கள். சிறந்த சிந்தனையாளர்கள் எதையும் ஆழமாக உணர்ந்து பார்த்துச் செயல்படக் கூடிய அறிவாளிகள் குறிப்பாகக் கூறுவதானால் லண்டன் ரகசியப் போலீஸ்காரர்களை விட எல்லாவற்றுள்ளும் கைதேர்ந்தவர்கள்! ரகசியப் போலீஸ் வல்லாளர்களையே திணறடிக்கும் திறமைசாலிகள் ஆவர்.
அது போலவே, லண்டன் ரகசியப் போலீசும் சாதாரணமானது அன்று! உலகப் புகழ் பெற்றது. போலீஸ் புலிகளுக்குள்ளேயே மிக சக்தியும், வல்லமையும், மதி நுட்பமும் உள்ளது ஸ்காட்லாண்டு யார்டு ரகசியப் போலீஸ்துறை! எனவே, இந்திய இளைஞர்களுக்கும் இரகசியப் போலீசுக்கும் இடையே ஒரு துப்பறியும் போரே நிகழ்ந்து கொண்டிருந்தது.
மராட்டியர் ஒருவர் இந்தியா விடுதிக்கு வந்தார். சாவர்கரைச் சந்தித்து சரளமான மராட்டிய மொழியிலே அவரோடு பேசினார். அவர் மராட்டிய மாநிலத்துப் பிரபுக்கள் பரம்பரை என்றும், பல் வைத்தியம் சம்பந்தமாகப் படிக்க லண்டன் வந்திருப்பதாகவும் அவரிடம் கூறினார். இந்தியா விடுதியில் தங்கிப் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். எவர்க்கும் எதற்கும் மயங்காத சாவர்கர், இந்த மராட்டியப் பல்வைத்தியப் படிப்புக்கு வந்தவரிடம் அவரது பேச்சு வன்மை, மொழிவளமையைக் கண்டு மயங்கினார். அதனால், இந்தியா விடுதியில் தங்கிப் படிக்க அவரை அனுமதித்தார். அவர் பெயர் கீர்த்திகர். அவர் விடுதியிலே தங்கிய தோடு சாவர்கர் சங்கத்திற்கு ஒரு பவுனும், உணவுக்குரிய பணமும் கொடுத்தார்.
தினமும் காலையில் எழுந்து பல்மருத்துவமனைக்குக் கீர்த்திகர் செல்வார். மாலையில் தான் விடுதிக்கு வந்து சேருவார். இவ்வாறு சில நாட்கள் சென்றன. பிறகு, கீர்த்திகருடைய போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. வழக்கமாகக் காலையில் எழுந்து மருத்துவமனைக்குப் போவதை நிறுத்திவிட்டார். பொழுது வந்தவுடன் எழுபவர். விடிந்து நெடுநோரமாகியும் கூட எழாமல் தூங்கியபடியே இருந்தார். பிறகு உணவு உண்டபின்பும் விடுதியிலேயே தங்கினார். விடுதியிலே வேலை செய்யும் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு நாடகம், சினிமா, இசைக் கச்சேரி போன்ற கேளிக்கை விழாக்களிலே கலந்து கொண்டு ஆடிப்பாடி இரவு நெடுநேரம் கழித்து விடுதிக்கு வருவார். அதாவது விடுதியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து வந்தார்.
கீர்த்திகருடைய புதுமாதிரியான செயல்களைக் கண்டு சாவர்கரும், வ.வே.சு.ஐயரும் மற்ற விடுதியினர்களும் கடும் கோபமடைந்தார்கள். முதலில், கீர்த்திகருடைய எல்லா நடத்தைகளுக்கும் உதவியாக இருந்த விடுதி வேலைக்காரியைப் பணியை விட்டு நீக்கினார்கள்.
ஆனால், அவர் இதைப் பற்றிக் கவலையேதும் படாமல் அதே தெருவில் வேறு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதே வேலைக்காரியை மீண்டும் வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவளுடன் இரவு நேரங்களில் சுற்றி அலைந்துவிட்டு, இந்தியா விடுதிக்கு நெடுநேரம் கழித்து வந்து தங்குவார்.
இவ்விதமாகக் கட்டுமீறிய செயல்களைச் செய்துவரும் கீர்த்திகள் மீது விடுதியிலுள்ள அனைவருக்கும் சந்தேகம் வலுத்தது. உடனே கீர்த்திகர் படிப்பதாகக் கூறிய பல்மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் ராஜன் விசாரித்தார். பல்மருத்துவமனையை விட்டு கீர்த்திகர் நின்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர்மீது சந்தேகம் மேலும் அதிகமானது.
ஒரு நாள் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு கீர்த்திகர் வழக்கம் போல சுற்றச்சென்றுவிட்டார். அவர் மீண்டும் விடுதிக்குத் திரும்பிட நேரமாகும் என்பதால் ஐயரும், மற்றவர்களும் கீர்த்திகருடைய அறையை வேறொரு திறவுகோல் கொண்டு திறந்தார்கள். உள்ளே இருந்த எல்லாச் சமான்களையும் சோதனை செய்தார்கள்.
கீர்த்திகர் லண்டன் போலீசாருக்கு அனுப்புவதற்காக எழுதிய கடிதங்கள் அவர்களிடம் கிடைத்தன. இதன் மூலமாக, அவர் லண்டன் போலீசாருக்கு ஒர் ஆள் காட்டியாக வேலை செய்கிறார் என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு மோசமான ஒரு விபீஷணனா வரட்டும் அந்தச் சகுனி, உடனிருந்தே கொல்லும் அவனது துரோகத்தைத் தட்டிக் கேட்டு விரட்டியடிப்போம் என்று ஐயர், கீர்த்திகருடைய அறையைப் பூட்டிவிட்டார். தனது அறைக்குச் சென்று துப்பாக்கியை எடுத்தார். அதிலே சில ரவைகளைப் போட்டுத்திணித்துக்கொண்டு, கீர்த்திகர் எப்போது வருவார் என்று எதிர்நோக்கி இருந்தார்.
வழக்கம் போல கீர்த்திகர் அன்றிரவு நெடுநேரம் சென்று அறைக்கு வந்தார். உள்ளே போனார். அவர் பின்னாலேயே ஐயரும் சென்றார். ஐயரைப் பார்த்ததும் கீர்த்திகர் திடுக்கிட்டார். ‘லண்டன் நகருக்கு வந்து நண்பனைப் போலப் பழகிக் கொண்டு வெள்ளையர்களுக்கு உளவு வேலை செய்வது துரோகம், சகுனித்தனம், கேவலம் என்று ஐயர் கோபமாகக் கொந்தளித்தார்.
கடுமையான சொற்களைக் கொட்டும் ஐயரது கோபத்தைப் பார்த்துக் கீர்த்திகர் பயந்தார். ஒருவாறு சமாளித்துக் கொண்ட கீர்த்திகர், உளவுவேலை செய்வது அயோக்கியத்தனம், பச்சைத் துரோகம் என்று ஐயர் கோபத்துக்குப் பின்பாட்டுப் பாடினார்.
நாணயமானவர் போலப் பேசும் கீர்த்திகரது யோக்யதையைப் பார்த்து ஐயர் மேலும் கோபம் கொண்டு, திடீரென்று அறைக் கதவை ஓசை யேற்படும்படி அடைத்துத் தாழ் போட்டார்!
அவ்வளவுதான் கீர்த்திகன் ஆடிப்போனான்! நடுங்கினான்! உடலெல்லாம் உதறல்! என்ன நடக்குமோ என்று வியர்த்துப் போனான் அவன். நெஞ்சே அவனைச் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது.
தாழ்போட்ட வேகத்தோடு ஐயர் கீர்த்திகர் பக்கம் நோக்கி, "உளவு பார்ப்பது உமக்குப் பிடிக்காது, இல்லையா? அப்படியானால், அந்தக் கீழ்த்தரமான விபீஷண வேலையை இங்கே செய்து கொண்டிருக்கும் இனத் துரோகியார்? இதோ, இந்த - ரகசியக் கடிதங்களைப் போலீசுக்கு எழுதிய யோக்யன் யார்?" என்று முகத்தில் கோபம் கொப்பளிக்க அறையின் சோதனையிலே கிடைத்த கடிதங்களை எடுத்து வீசினார்
தன்மேல் வீசப்பட்ட கடிதங்களைக் கண்ட கீர்த்திகன் நடுங்கித் திணறினான். குப் என்று அவனது உடல் வியர்த்தது! பேச முடியாமல் ஊமையாக நின்று கொண்டிருந்தான் அவன்!
"இதோ பார், உண்மையைச் சொல்லிவிடு, இல்லையென்றால் சுட்டுக் கொன்று விடுவேன், என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலே செருகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் மார்புக்கு நேரே நீட்டினார் ஐயர்!
கீர்த்திகன் இருகையாலும் ஐயரை நோக்கிக் கும்பிட்டான்! "என்னைச் சுட்டு விடாதீர்கள், என்னைச் சுட்டு விடாதீர்கள்" என்று கதறினான்! ஐயருடைய காலிலே மரம் ஒன்று சாய்ந்தது போல விழுந்து விட்டான் அவன்.
ஐயர், எடுத்த துப்பாக்கியை மீண்டும் செருகிக் கொண்டு, எழுந்திரு! அங்கே போய், உட்காரு! என்றார். கீர்த்திகனும் எழுந்து அமர்ந்தான்-உடல் நடு நடுங்கியபடியே! பிறகு, அவன் பேசும் போது.
"நான் ரகசியப் போலீசாருக்கு கையாளாக இருந்து இங்குள்ள தகவல்களைச் சேகரித்து அனுப்பியது உண்மைதான். இனிமேல் இந்த ஆள்காட்டி வேலையைச் செய்ய மாட்டேன். என்னைச் சுடாமல் விட்டு விடுங்கள். நான் ஓடி விடுகிறேன். இனி இந்த விடுதிப் பக்கமே திரும்ப மாட்டேன்" என்று அழுது கொண்டே கூறினான் கீர்த்திகன்.
ஐயர், கலகலவென்று சிரித்தார். கீர்த்திகா, உன்னை அவ்வளவு சுலபமாக அனுப்பி விடுவோமா? நான் சொல்வது போல் செய்தால் உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம். நீயும் இந்தியாவுக்குத் திரும்பும் வரை இந்த விடுதியிலேயே தங்கலாம். என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் ஐயர்!
சரி என்று சம்மதம் தெரிவித்தான் கீர்த்திகன். ‘இதோபார், இனியும் நீ உளவாளியாகவே இரு. ஆனால் ஒன்று. நாங்கள் சொல்கிறபடி அறிக்கையைத் தயார் செய்து போலீசாரிடம் கொடுத்து வர வேண்டும். போலீசார் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டு எங்களிடம் கூறவேண்டும். அது மட்டுமன்று, இனிமேல் மாதம் இரண்டு பவுன் தரவேண்டும். என்றார் ஐயர்.
ஏற்றுக் கொண்டான் கீர்த்திகன் ஐயரது நிபந்தனைகளை வ.வே.சு. ஐயர் சொன்னபடியே தவறாமல் செய்து வந்தான். பாவம், ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார்! ஏமாந்து கொண்டே வந்தார்கள் வழக்கம் போல ஐயர் உட்பட அனைவரும் ரகசிய சங்கப் பணிகளைச் செய்து வந்தார்கள்.