வ. வே. சு. ஐயர்/ஊழிற் பெருவலி யாஉள
யார் எங்கே சென்றால் என்ன? அவனுக்கு முன்னே அங்கே சென்ற காத்திருந்து, அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு பெயர்தான் ஊழ்!
அதனால் திருவள்ளுவர் பெருமான் ஊழிற் பெருவலி யாவுள? என்ற கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலாக, மற்று ஒன்று சூழினும் தான்முந்துறும் என்றார். அவ்வாறு காத்திருப்பதுதான் அவனது ஊழ் எனவே, அது வலிமை வாய்ந்தது.
அந்த ஊழ் மன்னாதிமன்னர்களையும், மாவீரர்களையும், அறிவுலக வித்தகர்களையும் அவர்களது சாதனை ஆற்றல்களையும் இருந்த இடம் தெரியாமல் தவிடு பொடியாக்கி மறைந்து போகும்படி செய்துள்ளதை நாம் வரலாற்றிலும், புராண இதிகாசங்களிலும், சமுதாயச் சம்பவங்களிலும் படித்திருக்கின்றோம் ஊழ் அத்தகைய பெருவலிமை பெற்றதாகும்.
அந்த ஊழ், நமது வ.வே.சு. ஐயரது வாழ்விலும் விளையாடத் துவங்கியதன் காரணம்தான், அவரது ரங்கூன் வாழ்க்கையும், லண்டன் பயணமும், பாரிஸ்டர் பட்டம் பெற நினைத்த எண்ணமும் ஆகும்.
வ.வே.சு.ஐயர், தீரமுள்ளவர்தான், ஈரமுள்ள குணங்களைக் கொண்ட குடும்பஸ்தர்தான்; பிறருக்கு மனத்தாலும் எவ்வித தீமைகளையும் நினைக்காதவர்தான். ரங்கூன் புறப்படும் வரை யாருக்கும் எந்தத் தீங்கும் நெஞ்சிலே நினைக்காமல், தானுண்டு தனது கல்வி வளர்ச்சியுண்டு, குடும்பம் உண்டு, குடும்ப ஒழுக்கமுண்டு என்றளவில் வாழ்ந்த ஓர் ஒழுக்க சீலர்தான்!
அத்தகைய ஓர் அறவாணனைக் குமுறும் எரிமலையாக்கி, கொந்தளிக்கும் ஊழிக் கடலாக்கி, அவரை நாடு நாடாகச் சுற்றிடும் நாடோடியாக்கி, அயல் நாட்டு வீதிகளிலே ஆபத்துமேல் ஆபத்துக்களை உருவாக்கி அலைய வைத்து, அவமான வாழ்க்கையை அனுபவிக்க வைத்து வேடிக்கை பார்த்து விளையாடி விட்டது அவருடைய ஊழ்!
பாரிஸ்டர் பட்டம் பெற்று வருவாயைப் பெருக்கி தனது குடும்பத்தை வாழவைக்க நினைத்து லண்டன் சென்ற வ.வே.சு.ஐயர், அதை மறந்து, இந்திய சுதந்திர உணர்ச்சியை அவரது நெஞ்சிலே நெருப்பாக்கி, அவரைப் புரட்சி வீரராக்கிவிட்டது அவரது ஊழ்!
பாரிஸ்டர் பட்டம் பெறச்சென்ற வ.வே.சு. ஐயர், இந்திய சுதந்திரப் போர் வீரரானார்! அந்தப் போராட்டத்தை நடத்தும் தளபதிகளிலே ஒருவரானார்! இந்தியச் சுதந்திரப் போர்த் தளபதிகளிலே ஒருவரானார்! என்றாலும், அந்த உணர்ச்சியாவது அவரை, அவரது வாழ்விலே வளமாக உயர்த்தியதா என்றால் அதுவுமில்லை. இறுதியாக, ஆற்றோடு ஓடும் நீரிலே மூழ்கிப் பரிதாபமாகச் சாகும் மரண அவல நிலையைத்தான் அளித்தது அவரது ஊழ். அந்த வேதனையான வரலாற்றை இனிக் காண்போம்!
இலண்டனுக்குப் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்ற வ.வே.சு.ஐயர், தனது மைத்துனர் பசுபதி உருவாக்கிக் கொடுத்த உண்டியல் கடைத் தொழிலை ஏற்றார். பிறகு, புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் சட்டக் கல்லூரியிலே சேர்ந்து. பார்-அட்-லா கல்வியைக் கற்கலானார்.
வ.வே.சு.ஐயர், லண்டனுக்குச் செல்வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்புதான், இந்தியாவிலே அரசப்பிரதி நிதியாக இருந்த லார்டு கர்சான் என்ற ஆங்கிலேயே ஆட்சி வெறியர், வங்காள மாநிலத்தை இரண்டு துண்டாகப் பிரித்தார். அதை இந்தியாவே எதிர்த்தது. வங்காள வாலிபர்கள் அதனால் பயங்கரவாதிகளாக மாறிவிட்டார்கள். வெள்ளையர்கள் இந்தியாவிலே இருந்தாலும் சரி, லண்டனிலே இருந்தாலும் சரி, அவர்களது இனத்தின் வேரை அறுத்தெறியப் பலாத்கார முறைகளைப் பயன்படுத்தி, யார்யார் வங்கப் பிரிவினைக்கு காரணகர்தர்களாக இருந்தார்களோ, அவர்களை எல்லாம் ஒவ்வொருவராகச் சுட்டுப் பிணமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பயங்கரவாத சுதந்திரப் போர் உணர்வுகளுக்குத் தளபதிபோல் விளங்கினார். மராட்டிய மாவீரரான விநாயக ராவ் சாவர்கர். அவர் மராட்டியத்திலே உள்ள நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பகூர் என்ற சிற்றூரிலே பிறந்தவர். இளம்பிராயத்திலேயே அவர் தேசப்பற்று மிக்க வீர இளைஞராகத் திகழ்ந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாட்டுப்பற்றைக் கவிதைக்களாக்கி, ஊரிலே உள்ள வாலிபர்களை எல்லாம் ஒன்று திரட்டி சுதந்திர உணர்வுப் பாடல்களைப் பாடிப் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருமளவுக்கு நாட்டுப் பற்றாளராக நடமாடியவர். அவரது வீர சுதந்திர உணர்ச்சிகளை லோகமான்ய பாலகங்காதர திலகரே பார்த்து, அவரும் ஆவேசத்துடன் சாவர்கர் கூட்டத்திலே கலந்து கொண்டு வீர முழக்கமிட்டார்!
திலகரை பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தி தண்டனை கொடுத்ததைப் பத்திரிக்கையிலே படித்த சாவர்கர், வெள்ளையரை இந்தியாவிலே இருந்து ஓட ஓட விரட்டிட வன்முறைதான், பலாத்காரம் தான் சரியான வழி என்ற தவறான கருத்தை ஏற்றுக்கொண்டார்.
மராட்டிய மாவீரன் சிவாஜியைக் குருவாக ஏற்றுக் கொண்ட சாவர்கர், தனது குல தெயவமான பவானிகோயிலுக்குச் சென்று. "என் தாய் நாட்டை, இந்தியாவை வெள்ளையர் ஆட்சியிலே இருந்து விடுவிப்பேன். அதற்காக, எனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் பலிகொடுப்பேன்! இந்தியாவைப் பிரிட்டிஷாரிடம் இருந்து மீட்டிட, அதற்காக எந்த வழியையும் ஏற்றுக் கொண்டு போராடுவேன். இந்தியாவின் முன்னேற்றத்துக்காவே உழைத்துச் சாவேன்" என்று தனது குலதெய்வம் முன்பு சத்தியம் செய்து சபதம் மேற்கொண்டார் அந்தச் சூளுரைக்கு ஏற்றபடி தனது சொந்த மாநிலத்திலே, அவரையொத்த வாலிபர்களைத் திரட்டி ‘நண்பர்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பைத் துவக்கினார்.
இந்தச் சங்கத்திலே உறுப்பினர்களானவர்களிடம், அவர் நாட்டுப் பற்றை உருவாக்கினார். அதற்காக எல்விதத் தியாகத்தையும் செய்யத் தயார் என்ற உறுதிப்பாட்டை அவர்களது நெஞ்சிலே ஊன்றினார். அமைதியான பாதையிலேயே சுதந்திரப் போரை நடத்துவோம். மக்கள் இடையே அவ்வகையில் விழிப்புணர்வுகளை வித்திடாவிட்டால், பலாத்கார முறைதான் வழி என்ற முடிவேற்பட்டால் அதையும் செய்யத் தயாராகி, இந்தியாவை விடுவிப்போம்' என்று. அவர் அச்சங்க உறுப்பினர்களிடையே சுதந்திர ஆண்மையை வளர்த்தார்! இதுதான் நண்பர்கள் ரகசியச் சங்கத்தின் இலட்சியம் என்பதை உருவாக்கியவர் மாவீரர் சாவர்கர்.
சாவர்கர் ஈடு இணையற்ற நாவன்மை படைத்த பேச்சாளர் அவர் ஆற்றும் வீர உரை எரிமலையைப் போன்ற ஓர் ஆவேசத்தை மக்களிடையே ஊட்டவல்லது. அதனால் அவர், யாரையும் எவரையும் எளிதில் தன் பக்கம் இழுக்கும் வல்லமை பெற்றிருந்தார். இளைஞர்களும், தேசபக்த ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரது வீர உரைகேட்டு அதற்கேற்ப நடக்கும் ஒரு மயக்க உணர்வையும் பெற்றிருந்தார்கள்.
மெட்ரிக்குலேஷன் கல்வியிலே வெற்றிபெற்ற சாவர்கர் பூனாவிலே உள்ள பெர்கியூஷன் கல்லூரியிலே சேர்ந்து படித்தார். அங்கேயும் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நாட்டுப்பற்றை உணர்ச்சியோடு அவர்கள் நெஞ்சிலே பதித்தார். அத்துடன் சாவர்கரது நாவன்மை மிக்க பேச்சும் மாணவர்களை அவர் பக்கம் இழுக்கப் பயன்பட்டது.
சாவர்கர் சிறந்த நாவலர் என்பதால், ஆங்கில ஏகாதிபத்தியம் இந்திய மக்களுக்குச் செய்து வரும் நிர்வாகக் கொடுமைகளை அவர் அவ்வப்போது பம்பாய், பொது மக்கள் இடையே நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுவார். அவரது பேச்சுக்கள் பத்திரிக்கைகளிலே அடிக்கடி வெளிவரும். அதைப் பொதுமக்கள் மட்டும் படிக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியும்தான் கூர்ந்து படித்தது!
ஆட்சியின் இந்த வெறிநிலையை உணர்ந்த சாவர்கர், பம்பாயிலே சட்டம் படிப்பதை மறுத்து, லண்டன் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்கலாம் என்று கருதினார். அதே நேரத்தில் லண்டன் மாநகரிலே உள்ள இந்திய இளைஞர்களிடமும் நாட்டுப் பற்றுணர்ச்சியை உருவாக்கி அவர்களையும் சுதந்திரப் புரட்சியிலே ஈடுபடுத்தினால், இந்தியாவை வெள்ளையரிடம் இருந்து விடுவிக்கலாம் என்ற முடிவுக்கு சாவர்கர் வந்தார்.
பாரிஸ்டர் படிக்க லண்டன் செல்ல முடிவெடுத்த சாவர்கருக்குப் போதிய பண உதவி இல்லை. அதனால், வழி என்ன என்று அவர் சிந்தனை செய்து கொண்டிருந்த போது, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிலே, லண்டனிலே உள்ள ஒரு தொழிலதிபர். இந்தியாவிலே இருந்து லண்டன் வந்து பாரிஸ்டர் பட்டப் படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கத் தயார், என்று விளம்பரம் செய்திருந்ததைப் பார்த்தார். உடனே விண்ணப்பம் செய்தார்.
இலண்டன் சென்ற சாவர்கர், அந்த நகரிலே இருந்த இந்தியா விடுதியிலே தங்கினார். பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காகச் சட்டக் கல்லூரியிலே சேர்ந்தார்; படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கே உள்ள இந்திய வாலிபர்கள் இடையே நட்புக் கொண்டார் தனது நாவன்மையின் பேச்சுத் திறத்தாலே அந்த இளைஞர்கள் இடையே இந்தியத் தேசப்பற்றை ஊட்டினார்! அவர்கள் அனைவரும் சாவர்கரின் நாட்டுணர்ச்சிக்குரிய சிந்தனையை ஏற்று அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவர் வழிப்படி நடக்க முற்பட்டார்கள்.
இலண்டன் நகரிலே சாவர்கரின் அபிநவ பாரத் சங்கத்தின் கிளை உருவானது. அங்கே இருந்த நண்பர்கள் அந்தச் சங்கத்தின் உறுப்பினரானார்கள். அதனால், அவர்கள் புதியதோர் நாட்டுணர்ச்சி கொண்டு எழுச்சியுடன் செயல்பட்டார்கள். அந்தக் கிளைச் சங்கத்தில் கூடும் நண்பர்கள் இடையே, இந்தியாவிலே இருக்கும் வெள்ளையர்களை எப்படி அதற்றலாம், அதற்கான வழிகள் எவை என்பன போன்ற வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டன்.
'அபிநவ பாரத் சங்கத்திற்குரிய உண்மையான பெயர் சுதந்திர இந்தியச் சங்கம்' என்பதாகும். லண்டனில் உள்ள எல்லாத் தரப்பினருக்கும் சுதந்திர இந்தியச் சங்கம் என்ற ஒன்று இருப்பதுதான் தெரியும். அச் சங்கத்துள்ளே நடமாடும் ரகசிய வன்முறைகளை அமல்படுத்துவது அபிநவபாரத் சங்கம்தான்.
சாவர்கர் பம்பாய் நகரிலே எப்படிச் செயல்பட்டார் என்பது பிரிட்டிஷ் அரசுக்கும், இந்திய விடுதியில் ஓரிருவருக்கும், பத்திரிக்கை சிலவற்றுக்கும் நன்கு தெரியும். அதனால், லண்டன் அரசு சாவர்கர் மீது எச்சரிக்கையுடன் செயல்பட்டது. சாவர்கர் இந்திய விடுதியில் என்று தங்க ஆரம்பித்தாரோ, அன்று முதல் அந்த விடுதி உற்சாகமாகவும் உணர்ச்சி வடிவமாகவும காட்சியளித்தது. இதனை நன்குணர்ந்த பிரிட்டிஷ் ரகசியப் போலீஸ் அந்த விடுதியைக் கண்காணித்து வந்தது. பத்திரிக்கைகள் சிலவும், பாரிஸ்டர் படிக்க வந்த சாவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டி எழுதின. சாவர்கர் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய கடமையிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து செயல்பட்டு வந்தார்.
முதல் சுதந்திரப் போர் என்று இந்திய வரலாற்றுப் பேராசிரியர்களால் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்ச்சியை, சிப்பாய் கலகம் என்று கூறி அதை ஒரு புரட்சியல்ல என்று அடையாளம் காட்டியது பிரிட்டிஷ் அரசு. இந்த முதல் சுதந்திரப்போர், அதாவது சிப்பாய் கலகம் 1857-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், 1907-ஆம் ஆண்டு ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா லண்டனிலே உள்ள ‘இந்தியா விடுதி’யில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொண்ட லண்டன் ஆசியப் போலீஸ், அன்று முதல் ‘இந்தியா விடுதி’ சம்பவங்களைக் கூர்ந்து கவனித்து வந்தது.
சாவர்களின் இவ்வளவு விவரங்களையும், எப்படிப்பட்ட கால கட்டத்தில் வ.வே.சு. ஐயர் பாரிஸ்டர் பட்டப் படிப்புப் படிக்க லண்டன் வந்தார் என்பதையும், லண்டன் வருவதற்கு முன்பு தீவிரவாதியாகவோ, வன்முறைவாதியாகவோ இருக்கவில்லை; என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே குறிப்பிட்டோம்.
எனவே, இப்படிப்பட்ட காலகட்டத்திலே, சாவர்களின் தீவிரவாத சுதந்திர உணர்ச்சிகள் ஆலமர விழுதுகளைப் போல வேரூன்றிய நேரத்திலே தான், வ.வே.சு. ஐயர் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் வந்து சேர்ந்தார். சட்டக் கல்லூரி உணவு முறைகள் ஐயருக்குப் பிடிக்கவில்லை. அதனாலும், இந்தியா விடுதியில் இந்திய முறையில் உணவு வகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும், அவர் இந்தியா விடுதியிலே தங்குவதற்காக வந்தார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? வ.வே.சு. ஐயர் இந்தியா விடுதியிலே என்று காலடி வைத்தாரோ, அன்று முதல் ஐயரின் போக்கிலே ஒரு புது மாறுதல் உருவானது.
சாவர்கரின் நாவன்மைக்கு ஐயர் உணர்ச்சி அடிமையானது! அதாவது தேசபக்தராக அவரை மாற்றிவிட்டது. ஏன் லண்டன் வந்தோம் என்பதை அவர் அடியோடு மறந்தார் லண்டனுக்கு அவர் வருவதற்கு முன்பு, தனது குடும்ப நிலை என்ன, என்பதைச் சிந்திக்க மறந்து அவர் தீவிர தேசபக்தரானார். இதுதான் அவரது ஊழ்வினையோ!
சாவர்கரைப் போல ஐயரும் இந்தியாவை வெள்ளையரிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று சிந்தித்தார். ஆனால் ஒன்று. இந்தச் சிந்தனைகளுக்கு இடையே சட்டக் கல்லூரிப் படிப்பை மட்டும் அவர் மறக்கவில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தார். ஆனால், படித்த நேரம்போக, மீதிநேரமெல்லாம் நாட்டு விடுதலை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிக் கிடந்தார்!
இலண்டனிலே இரகசியமாக நடைபெற்று வந்த அபிநவபாரத் சங்கத்திலே ஐயர் உறுப்பினரானார். புரட்சிகரமான திட்டங்கள் இவர் சிந்தனையிலே சுரந்தன. இந்தச் சிந்தனைக் குழப்பங்களுக்கு இடையே தனது மைத்துனர் பசுபதி வைத்துக் கொடுத்த உண்டியல் கடையை மூடலானார். பாவம்!! உண்டியல் கடையை மட்டுமா மறந்தார். ரங்கூன் நகரிலே உள்ள தனது அருமை மனைவியையும் மகளையும் கூட அடியோடு மறந்தே போனார் மனைவி மக்களை மட்டுமா மறந்தார்? லண்டன் வருவதற்கு யார் காரணக்கர்த்தாவாக இருந்தாரோ, அந்த மைத்துனர் பசுபதியையும் ஐயர் மறந்தார்!
வ.வே.சு.ஐயர் இப்போது சுதந்திரப் பைத்தியமானார்! வரம்புக்கு மீறிய ஓர் உண்ர்வில் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை மறப்பது இயல்புதானே! அதனால், ஐயர் மனதில் எப்போது பார்த்தாலும், அடிமைத் தளையை அகற்றிப் பாரததேவியை வெள்ளையர்களிடம் இருந்து எப்போது விடுதலை செய்வோம் என்ற எண்ணத் துடிப்பும், தீவிரமும் அதிகமாகிக் கொண்டே இருந்தன.
சாவர்கர் என்ற மராட்டிய சிங்கத்துக்கு தமிழகத்து வீரவேங்கை யான வ.வே.சு.ஐயர், வலதுகையாகச் செயல்பட்டார். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரை அறுத்தெறியும் சுதந்திரப் போர்ப்படைத் தளபதிகளிலே ஒருவராக வ.வே.சு. ஐயர் திகழ்ந்தார்.