வ. வே. சு. ஐயர்/குற்றால நீரருவியிலே வ.வே.சு.ஐயர் மறைந்தார்

குற்றால நீரருவியிலே வ.வே.சு.ஐயர் மறைந்தார்

காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்த கருணை வேண்டுகோளுக்கு ஏற்றவாறு, வ.வே.சு.ஐயர் மேலிருந்த வழக்குகளை எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி திரும்பப் பெற்றுக் கொண்டதால், கொலை வழக்குச் சட்டப் பிரச்னையிலே இருந்து அவர் விடுதலை பெற்றார்!

காந்தியடிகளிடம் அவர் கொடுத்த வாக்குப்படி, அறப்போர் முறையுடன் அகிம்சைத் தத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் சிறந்த ஓர் எழுத்தாளராக, சிந்தனையாளராக, ஆன்மிக ஞானியாக, செயல்வீரராக, மனோபலமுடைய ஆண்மையாளராக, ஒழுக்க சீலராக, மனிதாபிமானியாக நேர்மை தவறாதவராக, ‘நா’ நயம் படைத்தவராக, சுதந்திர மானாபிமானியாக, விடுதலை வீரராக, பன்மொழிப் புலமையாளராக, ஆறுமொழி ஆய்வு நிபுணராக, பத்திரிக்கை ஆசிரியராக, தமிழ் இலக்கிய வித்தகராக, சிறந்த நூல் படைப்பாளராக, நல்லதோர் மொழிபெயர்ப்புக் கலைஞராக, தமிழே எனது உயிர் மூச்சு என்ற உறுதிப்பாடுடைய தமிழராக, நூல் உரையாசிரியராக, உலகம் சுற்றி வந்த அனுபவ அறிஞராக, குருகுல ஆசானாக, ஆசிரமவாசியாக, வ.வே.சு.ஐயர் விளங்கினார்!

பல துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றியலைந்த அனுபவ ஆசானாக விளங்கிய வ.வே.சு.ஐயர், அந்த வன்முறைக் கோரக் கொடுமைகளிலே இருந்து விடுபட, அகிம்சா முறையை, காந்திய முறையைக் காலத்துக்கும், தனது அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்ப மாற்றிக் கொண்டவர், காலத்திற்கேற்ப மக்களின வளர்ச்சிக்குரிய மனித சமத்துவப் பண்பிலே மட்டும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதனாக சாதீயத்தின் காப்பாளராகக் காட்சியளித்தார். இதற்குரிய எடுத்துக்காட்டாக ஐயரின் சேரன்மாதேவி குருகுலம் இருந்ததைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழிவளங்களையும், பழக்க வழக்கங்களையும் இந்திய மக்கள் மறந்து வருகிறார்கள். அதற்கு நேர்விரோதமாக ஆங்கில மொழி மோகிகளாக மாறிவரும் பழக்கத்தை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வ.வே.சு. ஐயர் விரும்பினார். இந்திய நாடு உலகத்திற்கு மிகச்சிறந்த தத்துவங்களையும், உயர்ந்த கருத்துக்களையும் வழங்கிய பெருமை நம்முடைய முன்னோர்களுக்கு உண்டு என்பதை மக்கள் உணர்ந்து மதிக்க வேண்டும்.

அயல் நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றிப் போலியான வாழ்க்கை வாழ்வதைக் கைவிட வேண்டும். நமது ஞானிகள், தத்துவவாதிகள் காட்டிய வழிகளைப் பின்பற்றிச் சுதந்திர வாழ்வு வாழவேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்வது தம்முடைய கடமை என்பது வ.வே.சு. ஐயரது கொள்கை. அதற்கு என்ன செய்யலாம் என்று தனது நண்பர்களுடன் கலந்து யோசித்தார்.

குருகுலமுறையில் நமது பிள்ளைகளுக்கு தேசியப்பண்பாட்டுக் கல்வியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான். அவர்கள் உண்மையான இந்தியர்களாக வாழமுடியும் என்று யோசனை கூறியது நண்பர்கள் குழு. இந்த சிந்தனைக் கருத்து ஐயருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உயர்ந்த சேவைக்குத் தன்னையே காணிக்கையாக்கிக் கொண்டார்.

இதற்குத் தகுந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்திலே உள்ள சேரன் மாதேவி என்று தேர்வு செய்து, அங்கே ஓர் ஆசிரமத்தை நிறுவ ஏற்பாடு செய்தார். இந்த ஆஸ்ரமத்துக்குப் பரத்வாசர் ஆசிரமம் என்று பெயர் சூட்டினார் ஐயர்.

இந்த ஆசிரமம் நிறுவுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பத்தாயிரம் ரூபாயை நிதியாக நிர்ணயம் செய்து. அந்த நன்கொடையின் முன்பணமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கியது. கடல் கடந்த நாடுகளும் ஆசிரமத்துக்கு நிதியை வாரி வழங்கின. இதையெல்லாம் பார்த்த ஐயர் தனது சேவைக்கு மக்களிடம் பெருகிவரும் மதிப்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

சேரன் மாதேவியில் ஆசிரமம் ஏற்படுத்துவதற்காக பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டது. அந்நிலத்தின் ஒரு பகுதியிலே ஐயர் குருகுலத்தை உருவாக்கினார். ஆசிரமம், அச்சுக்கூடம், ஆசிரம அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய நிலம் போக, மற்றப் பகுதி நிலம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டது. விவசாயப் பண்ணை நடத்துவதற்கும் அந்த நிலம் பயன்பட்டது. மொத்தத்தில் குருகுலப் பணிகள் எல்லாமே மனநிறைவுடன் நடந்தன.

பரத்வாசர் ஆசிரமத்தில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்விகற்று வந்தார்கள். அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த குருகுலத்திற்கு ஐயர் தமிழ்நாட்டுக் குருகுலம் என்று பெயரிட்டார். இதிலிருந்தே வ.வே.சு. ஐயரின் தமிழ்ப்பற்றை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இது அவருக்கிருந்த தணியாத தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது அல்லவா? இங்கு தமிழ்க் கல்வியும் கற்பிக்கப்பட்டது.

‘பால பாரதி’ என்ற ஒரு மாதஇதழை வ.வே.சு.ஐயர் வெளியிட்டு வந்தார். அந்தப் பத்திரிக்கையை நடத்தி அதன் மூலம் வந்த குறைவான வருவாயை வைத்துக் கொண்டே தனது குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார்.

வ.வே.சு.ஐயர் உலகம் சுற்றியவர்! அங்கே ஆண்டுக் கணக்கிலும் வாழ்ந்துள்ளார். அதனால், அந்நாட்டு மக்களது பழக்க வழக்க முற்போக்கு எண்ண வளர்ச்சிகளை நன்கு உணர்ந்தவர், நேரில் பார்த்தவர், பலரிடம் பழகிப்புரிந்தவர்! எனவே, அவர் பரந்த மன முடையவர் உயர்ந்த நோக்கம் உள்ளவர்; பாரத நாட்டின் மீது தனது உயிரையே வைத்திருந்தார். அத்தகையவரின் ஆசிரமத்தில், ‘தனித்து உண்ணல்’ என்ற, ஒரு சாதி முறைப் பழக்கம் இருந்தது. சமபந்தியில் பல்வேறு சாதி மாணவர்களும் ஒற்றுமையாக உண்பதை வ.வே.சு. ஐயர் ஆதரிக்க மறுத்து விட்டார். உயர்ந்த சாதிக்கென்று தனி மாணவர் பந்தியை நடத்தி உணவை உண்ண வைத்தார். மற்றச் சாதிகளுக்கென்று ஒரு தனிப் பந்தியும் அந்த ஆசிரமத்தில் இருந்தது. இந்தப் பிரச்னை தமிழ் நாட்டில் பெரியதோர் கலவரத்துக்கும், குழப்பத்துக்கும் முன் மாதிரியான சான்றாக அமைந்தது.

இராஜாஜி போன்ற சீர்த்திருத்த நோக்கம் கொண்டவர்கள் மற்ற ஜாதி மக்களோடு மட்டுமன்று தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களுடனும் அமர்ந்து சமபந்தி உணவு உண்டார்கள். அதனால் அவர்கள் ஜாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டித்தார்கள். அதற்காக ஏச்சும் பேச்சும், நன்மை தீமைகளையும் அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். ராஜாஜியும் ஓர் பிராமணர் தான் ஆனால், அவர் முற்போக்கு எண்ணமுடையவராக இருந்தார்! திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்ததால் அவரும் வ.வே.சு. ஐயரைப் போல, அதை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தவர்தான்!

அதிலே கூறப்பட்டுள்ள ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவர் பெருமானது கருத்தை ஆழ்ந்து ஊன்றிப் படித்தவர் என்பதின் எதிரொலியாக வாழ்ந்தவர்!

தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரும் ஓர் ஐயர் அவர் சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடியவர். கவிதையிலே வீர முழக்கமிட்டவர். பிராமணர் என்று அடையாளம் காட்டிடும் முப்புரிநூலை அதாவது பூணுலைக் கழற்றி கனகலிங்கம் என்ற ஒரு புதுச்சேரி தாழ்த்தப்பட்டவருக்குப் போட்டு சாதி ஆதிக்க உணர்வை சாடிய கவிஞர் அவர்!

வ.வே.சு.ஐயரின் அரசியல் குரு நாதரான சாவர்கர், வைதீக மத்தின் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உயில் எழுதி வைத்து விட்டு, அதன்படியே எனது பிணத்தை எடுக்கவேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையாளராகச் செத்தார்!

ஆனால், என்ன காரணத்தினாலோ வ.வே.சு. ஐயர் பரத்துவாசர் என்ற ஆசிரமத்தில் எல்லா ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பெரிய கலவரமே, தகராறே உருவானது. தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு போன்ற சுயமரியாதைக்காரர்கள், காங்சிரசில் இருந்து கொண்டே வ.வே.சு. ஐயரின் போக்குக்குச் சாதிவெறி என்ற பெயரைச் சூட்டி ஐயரைப் பலமாக எதிர்த்துக் கண்டனம் செய்தார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஐயர் ஆசிரமத்திற்கு வழங்கிய ஐயாயிரம் ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் என்று தகராறை எழுப்பினார்கள். மேற்கொண்டு கொடுப்பதாக வாக்களித்திருந்த மற்ற ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இந்தப் பிரச்னை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அதனால், காந்தியடிகள் கூறினால், அல்லது ஆணையிட்டால் வ.வே.சு. ஐயர் பணிந்து விடுவார் அல்லது கேட்டு ஆவன செய்வார் என்ற எண்ணத்தால், தமிழ்நாட்டின் முற்போக்காளர்களில் சிலர், காந்தியண்ணலிடம் சென்று எடுத்துக் கூறினார்கள். அதற்கு மகாத்மா காந்தி, அந்தச் சர்ச்சையில் நான் தலையிடமாட்டேன் என்று கண்டிப்பாகவே கூறிவிட்டார்.

டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திருச்சிநகரைச் சேர்ந்தவர் மட்டுமல்லர், லண்டன் நகர்லே உள்ள “இந்தியா விடுதி”யிலே ஒன்றாகத் தங்கிப் பாரிஸ்டர் பட்டத்துக்குப் படித்தவரும் கூட அது மட்டுமன்று வ.வே.ச. ஐயரும் திருச்சி நகர் தந்த வரகனேரி தியாகமூர்த்தி என்பதால், டாக்டர் ராஜனும், மற்றும் சிலரும் ஐயரிடம் சென்று, ஐயர் பிடிவாதம் காட்டாமல், எல்லா சாதி மாணவர்களும் ஒன்றாய் அமர்ந்து சமபந்தி உணவு உண்பதற்கு தக்க வழி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லாருக்கும் ஐயர் முடியாது என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

இந்த வர்ணாசிரமக் களங்கம், வ.வே.சு. ஐயருக்கு இருந்த பன்முகத் திறமைகளையும் பன்முகப் பண்புகளையும், பன்முக அறிவுகளையும் பாழ்படுத்திவிட்டது மட்டுமல்ல; அவருக்கு பெரிய தலைவர்களிடம் இருந்த தொடர்பையும் அறுந்து போகச்செய்து விட்டது. அரசியல் குறுக்கத்தையும், அறிஞர்களது அருவருப்பையும் உருவாக்கி விட்டது எனலாம். இந்தப் பிரச்னை பின்நாளில் ஆசிரமத்தில் பெரிய பிளவை மட்டும் உருவாக்கவில்லை. அதை மூடவும் வேண்டிய நிலைக்கு எதிர்ப்பு எழுந்துவிட்டது.

வ.வே.சு. ஐயரை, அவரைச் சேர்ந்த நண்பர்கள் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக்கினர். தேசியக் கல்வித் திட்டம் என்றால் என்ன? காந்தியடிகள் அதை ஆரம்பித்ததின் நோக்கம் யாது என்பனவற்றை எல்லாம் அவர் ‘தேசபக்தன்’ பத்திரிக்கையில் விளக்கி எழுதி மக்களுக்கு அதன் அருமை பெருமைகளை எடுத்துரைத்தார்.

தமிழ் நாட்டு மாணவ, மாணவியர்களுக்குத் தமிழ் மொழியில் தான், தாய் மொழியில் தான் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்போடு எழுதினார் வ.வே.சு. பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது 'எனது கொள்கை' என்ற தலைப்பில் வ.வே.சு. ஐயர் எழுதி எதிர்கால வாரிசுகளின் பொறுப்பைத் தூண்டிவிட்டார்.

ஐயர் புதுவையிலே வாழ்ந்திருந்த போது, ‘மங்கையர்க் கரசியின் காதல், சந்திர குப்த சக்கரவரத்தியின் சரித்திரம், புக்கர் வாஷிங்டன், தன்னம்பிக்கை, நெப்போலியன், கம்பராமாயணம், பாலகாண்ட உரை’, போன்ற அரும்பெரும் சாதனைகளைச் செய்து காட்டிய அவரது வரலாறு, மொழிபெயர்ப்புப் புலமைகளை இலக்கிய உலகுக்கு சான்றாக உள்ளது.

திருக்குறளையும், குறுந்தொகையையும் அவர் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழி பெயர்த்துள்ளார். இதன் வாயிலாக தமிழன்னையின் தன்னிகரற்ற பெருமைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

வ.வே.சு. ஐயர் நடத்தி வந்த தேசபக்தன் பத்திரிகை, தமிழ் மக்களுக்கு அவரது தமிழ்ப் பற்றையும் புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன. அது ஒரு பல்சுவை பத்திரிக்கையாக தமிழ் மக்கள் இடையே நடமாடியது என்று தலைநிமிர்ந்து கூறலாம்.

‘தேச பக்தன்’ தொடங்கிய நேரத்திலேதான் காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பமானது. காந்தியடிகளின் கொள்கைகளை தனது மூளைக்குக் கோபுரச் சிகரம் போல் உயர்த்திக் கொண்ட வ.வே.சு. ஐயர், மக்கள் ஏன் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும? அதனால் வரும் எதிர் கால நன்மைகள் என்னென்ன? என்பனவற்றை எல்லாம் வ.வே.சு. ஐயருக்கே உரிய தமிழில் அற்புதமாக எழுதியதை மக்கள் படித்துப் பின்பற்றி வந்தார்கள். அதனால், அண்ணல் போராட்டத்துக்குரிய ஆதரவும் பெருகியது.

‘தேசபக்தன்’ பத்திரிக்கைப் பலம் காந்தியடிகளது போராட்டத்திற்குப் பெரிய ஆதரவைப் பெருக்கிக் கொண்டே இருப்பதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி, வ.வே.சு. ஐயரைச் சிறையிலே அடைக்கவும், பத்திரிக்கையை நிறுத்திவிடவும் முயற்சி செய்தது.

பத்திரிக்கையின் தலையங்கத்தை எப்போதும் ஆசிரியர்தான் எழுதுவார். ஆனால், வேறு ஒருவர் எழுதிய தலையங்கத்தைப் போலீசார் ஒரு முறைக்கு மும்முறைப் படித்தார்கள். அந்தத் தலையங்கத்தில் அரசுக்கு எதிராக எழுதியிருப்பதாக ஐயர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்தத் தலையங்கத்தை ஐயர் எழுதவில்லை என்பது போலீசுக்கும் புரியும். ஆனாலும், அவரைத் தண்டிக்க வேண்டும்; பத்திரிகையை இழுத்து மூடவேண்டும். இதுதானே வெள்ளையர் ஆட்சியின் நோக்கம். அதனால் ஐயர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றம் வந்து ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்புக் கூறப்பட்டது. செய்யாத குற்றத்தைச் செய்ததாக அரசு பொய்வழக்குப் போட்டது. அதன் முடிவு ஒன்பது மாதங்கள் கடுங்காவல்!

வ.வே.சு. ஐயர், அந்த ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க பெல்லாரி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவருக்குப் பெல்லாரி கடுங்காவல் தண்டனை கூடப் பெரியதாகத் தெரியவில்லை. தேச விடுதலைதான் அவர் கண்ணெதிரே வந்து நின்றது. அதனால், சிறையின் சித்ரவதைகளை எல்லாம் அவர் தனது கால் தூசாகக் கருதிப் பணியாற்றி வந்தார்.

ஒன்பது மாதம் கடுங்காவலை அனுபவித்து விட்டு விடுதலை பெற்று வெளியே வந்த வ.வே.சு. ஐயர், ‘தேசபக்தன்’ பத்திரிக்கை மூடப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கவலையடைந்தார். அதனால், அவரது குடும்ப வருமானம் சீர்குலைந்து நின்றது.

தனது வறுமையைப் பற்றி ஐயர் வருந்தினாரில்லை. ஆனால், வெள்ளைக் கொடுங்கோலனிடம் பாரத நாடு சிக்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கின்றதே! என்று கிடைக்குமோ எங்கள் சுதந்திரம் என்று அவர் கவலைப்பட்டார். சுதந்திரம் கிடைக்கும் காலம் எப்போது வருமோ என்று ஏங்கினார்.

சேரன் மாதேவி ஆசிரமப் பிரச்னை, சமபந்தி விரோதம், பெல்லாரி சிறைவாசம், தேசபக்தன் பத்திரிக்கை மூடிவிட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பு, வறுமையின் கோரம் போன்ற எதிர்பாராத வாழ்க்கைச் சிக்கல்கள் அவரைத் தினந்தோறும் அனலிடைப் புழுவாய் துடிக்க வைத்தன. என்றாலும் அவைகளுக்காக அவர் பயப்படவில்லை. ஏனென்னறால் எதிர்நீச்சல் போட்டே வாழ்ந்தவர் அல்லவா அவர்?

அந்த நேரத்திலே, 3.7.1925-ஆம் நாளன்று, வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம் ஐயர் எனப்படும் வ.வே.சு.ஐயர், தனது மகள் சுபத்திரையை அழைத்துக் கொண்டு குற்றாலம் சென்றிருந்தார். அப்போது அவருடைய மகள், குற்றாலத்திலே உள்ள ‘கல்யாண் நீரருவி’யில் நடந்து செல்ல ஆசைப்பட்டார். ஆசைப்பட்டது மட்டுமன்று தந்தையையும் வற்புறுத்தினார்!

மகளது அவாவை நிறைவேற்ற எண்ணிய வ.வே.சு.ஐயர், பின்னே நடந்து வர, முன்னே நடந்து போகும் போது, காலிடறி நதியில் சுபத்திரை விழுந்துவிட்டார். இதையறிந்து திடுக்கிட்டு, திகைத்து மகளைக் காப்பாற்றுவதற்காக வ.வே.சு. ஐயர் அருவியில் குதித்தார். பாவம், தந்தையும் மகளும் இருவரும் நீரருவியின் வேகத்தில் மூழ்கி இறந்தே போனார்கள்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன வ.வே.சு.ஐயர். தனது 44-ஆம் வயதில் இறந்து போன செய்தி நாடெங்கும் பரவியது. இதை அறிந்த தேசத்தலைவர்கள் அனைவரும் வருத்தப்பட்டுத் துயரத்தில் மூழ்கினார்கள்.


□ □ □