வ. வே. சு. ஐயர்/பல மாறுவேடங்களில் ஐயர் இந்தியா திரும்பினார்!

பல மாறுவேடங்களில் ஐயர் இந்தியா திரும்பினார்!

பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் தனது அரசியல் குருவான சாவர்கரைப் பிரிட்டிஷ் போலீஸ் படையிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று கவலையும், கண்ணிரும் ததும்பும் சோகத்துடன் வ.வே.சு. ஐயர் பாரீஸ் நகரத்தின் சாலையிலே தனி மனிதனாக நின்று தவித்தார்! எவ்வளவோ ஆறுதல்களைக் காமா அம்மையார் அவருக்குக் கூறிய பிறகும்கூட, ஐயர் ஒரே துயர மயமாகி பாரிஸ் வீதிகளிலே அலைந்து திரிந்து கொண்டே இருந்தார்!

மறுபடியும் நாம் எங்கே போவது என்ற கவலை அவரைத் துன்புறுத்தியது. மீண்டும் லண்டன் போகலாமா என்றால் அங்கே பிரிட்டிஷ் போலீஸ் படையின் தொல்லைகளையும் துன்பங்களையும் ஏற்றாக வேண்டுமே என்பதால் அங்கே போக அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், காமா அம்மையார் வீட்டில் இருக்கலாமா என்றால் அங்கும் அவருக்குப் பாரமாக இருக்க வேண்டும் என்ற குழப்பங்களிலே சிக்கி என்ன செய்வது என்று சிந்தித்தார்.

இறுதியாக அவர், இந்தியாவுக்கே மீண்டும் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். பார்சிக்காரர் போல ஐயர் மாறுவேடம் போட்டுக் கொண்டு, காமா அம்மையாரிடம் தேவையான பொருள் வசதிகளைப் பெற்றுக் கொண்டு. இத்தாலி நாட்டின் தலைநகரமான ரோம் நகருக்கு வந்து சேர்ந்தார்.

 ரோம் நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு ஒரு முஸ்லீம் பெருமகனைப் போல வேடமணிந்து கொண்டு, மக்கா மாநகர் வந்தார். சில நாட்கள் அவர் முஸ்லீம் உடைகளோடு மக்கா நகரிலே அலைந்து திரிந்த பின்பு, அதே முஸல்மான் வேடத்தோடு கப்பல் ஏறி இந்தியாவிலே உள்ள பம்பாய் நகர் வந்தார்.

எந்த நாட்டின் சுதந்திரத்துக்காக வன்முறை வீரனாக ஒவ்வொரு நாட்டிலும் போராடி வந்தாரோ அந்த சுதந்திரப் போர் வீரப் பெருமகன், பம்பாய் வீதிகளிலே தனது சுய உருவத்தோடு, இந்தியக் குடிமகனாக நடமாட முடியாமல், தலைமறைவாகவே பல நாட்கள் திரிந்து கொண்டிருந்தார்! எபடிப்பட்ட ஒரு சோக வாழ்விது என்று எண்ணிப் பார்ப்போர் எவராக இருந்தாலும், அவர்கள் நிச்சயமாகக் கண்ணீர் சிந்தியே தீருவர்! ஆனால், லட்சியத் திருமகன் வ.வே.சு. ஐயர் இந்தக் கவலைகள் ஏதும் இல்லாமல் ஒரு விடுதலை வீரனாகவே விளங்கினார்.

பம்பாய் பெரு நகரிலும் அவர் ஓர் இஸ்லாமியப் பெருமகனாக வாழ முடியவில்லை. ஏனென்றால், எங்கே தனது வேடம் அடையாளம் காணப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், அவர் ஒரு முஸ்லீம் பக்கிரி வேடத்திலேயே இலங்கை நாட்டின் தலைநகரமான கொழும்பு மாநகருக்கு வந்தார். அங்கேயும் அவர் கழிப்பறைக்குப் போகும் போதும் கூட, முஸல்மான் வேடத்தோடுதான் செல்லவேண்டி இருந்தது. இந்த நிலைமை அவருக்குள்ளே ஒருவித வெறுப்பையும், விரக்தியையும் உருவாக்கியது. இதனால், அவருக்கு வன்முறை மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்தக் காரணத்தால் அவர் மனம் மெதுவாக- மெதுவாக மென்முறை என்ற ஊஞ்சலிலே ஆட ஆரம்பித்தது.

வ.வே.சு. ஐயரின் உள்ளத்திலே நீறுபூத்த நெருப்புப் போல சுதந்திர வன்முறை உணர்ச்சி கனன்று கொண்டிருந்ததே தவிர, நெருப்பு மீது படர்ந்த சாம்பலைப் போல உதிர்ந்து சிதறிக் கொண்டே இருந்தன. ஆனாலும், தான் சுற்றியலைந்த நாடுகளிலே பட்ட அனுபவத் துன்பங்கள், சோக இடையூறுகள், இடையறாது ஏற்பட்ட இன்னல்கள் சோதனைகள் எதுவும் அவரது நாட்டுப் பற்றையோ, விடுதலை உணர்ச்சிகளையோ எள்மூக்களவும் மாற்றவில்லை. இது வன்றோ ஓர் இலட்சிய வீரத் திருமகனின் வித்தக இயல்பு என்பதையே வ.சே.சு.ஐயர் நிரூபித்தபடி வாழ்ந்தார்.

கொழும்பு மாநகரிலே இருந்து தமிழ் நாட்டின் ஒரு பகுதியான, பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் பேசும் மக்களைப் பார்த்த மகிழ்ச்சியிலே ஐயர் பெரு மூச்சை விட்டார். தனது வேட உடைகளை எல்லாம் களைந்தார்! தமிழ் உடைகளை அணிந்த தமிழ்ப் பெருமகனாக, அச்சம் ஏதுமற்றுப் பழைய வ.வே.சு.ஐயராக மாறினார்!

ஐயர், புதுச்சேரி நகர் வந்து சேர்ததும் அவர் செய்த வீரச்செயல் என்ன தெரியுமா? லண்டன் மாநகரிலே உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாண்ட் பார்டு என்ற ரகசியப் போலீஸ் துறையின் பெரிய அதிகாரிக்கு ஒரு தந்தி கொடுத்தார். அந்தத் தந்தியில் அவர் "நான் பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு மிக ஜாக்கிரதையுடன் வந்து சேர்ந்து விட்டேன்." என்று குறிப்பிட்டிருந்தார்.

தந்தியிலே இருந்த இந்த வாசகங்களைக் கண்ட ஸ்காட்லாண்ட் யார்டு போலீசும், பிரிட்டிஷ் அரசும் வ.வே.சு.ஐயர் மீது கடுங் கோபம் கொண்டன. ஏனென்றால், ஏறக்குறைய ஆறு மாதங்களாக போலீசையும், ஆட்சியையும் ஏமாற்றிவிட்டு மிகச் சுலபமாக இந்தியா போய் சேர்ந்துவிட்டானே என்று அதிர்ச்சி அடைந்தன லண்டன் போலீசும், பிரிட்டன் ஆட்சியும்!

புதுச்சேரிக்கு வ.வே.சு.ஐயர் வந்த போது, தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள், அடக்கு முறை வெறிச்சட்ட ஆர்ப்பாட்டங்கள், மிகக் கோரமாகப் பேய்த் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தமையால், தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார், வங்கம் தந்த ஞானத்தங்கம் அரவிந்த கோஷ், சு.நெல்லையப்பர் போன்ற பல தேசபக்தர்கள் தமிழ் நாட்டைவிட்டுப் புதுச்சேரிக்கு வந்து தங்கி, சுதந்திர தேவிக்குரிய பணிகளைக் கூடிச் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் வ.வே.சு. ஐயருக்கு புதியதோர் சுதந்திர எழுச்சி வேகம் ஏற்பட்டு, நட்புக் கொண்டு, தேசப் பணிகளைச் செய்யலானார். இவர்கள் எல்லாரும் புதுச்சேரி நகரிலே இருந்து செய்யும் சுதந்திரப்போர்ப் பணிகள், தமிழ்நாட்டிலே உள்ள விடுதலைப் போர் வீரர்களுக்கு சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பெய்தது போல இருந்தது.

இந்திய சுதந்திரத்துக்கும், வெள்ளையர் ஆட்சியின் ஆணவத்தை வேரறுப்பதற்கும் பணிபுரியும் தமிழ் நாட்டு இளைஞர்கள் புதுச்சேரி நகர் வந்து, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி ஏந்திச் சுடும் பயிற்சியைப் பெற்றுச்சென்று கொண்டிருந்தார்கள்.

தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரும், வெள்ளையர் ஆட்சியை அகற்றிட, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும்பயிற்சியைப் பெற்றார் என்று கூறப்படுகின்றது.

இங்கிலாந்து நாட்டிலே இருந்து தப்பித்து வந்துவிட்ட வ.வே.சு.ஐயர் மீது ஏற்கனவே கோபமும், ஆத்திரமும் அளவுக்கு மீறிப் பெற்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சி, எப்படியாவது வ.வே.சு. ஐயரை புதுச்சேரியிலே இருந்து பிடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்திலே இருந்தது.

பிரெஞ்சு ஆட்சியின் பிடியிலே புதுச்சேரி நகர் இருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியும், போலீசும் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களைக் கைது செய்ய முடியவில்லை. அதனால், எப்போது இந்திய சுதந்திரப் போராளிகளைக் கைது செய்யலாம், எப்படிக் கைது செய்யலாம் என்று பிரிட்டிஷ் ஆட்சி திட்டமிட்ட படியே இருந்தது. ஆனால், அந்த முயற்சி கடைசி வரை ஈடேறவில்லை.

இந்த நேரத்தில் தான், வ.வே.சு. ஐயர், புதுவை நகருக்கு வரும் தமிழ் நாட்டின் இந்திய விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியைக் கற்றுக்கொடுத்து அனுப்பி வருகிறார் என்ற செய்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எட்டியது.

எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல அப்போது ஒரு நிகழ்ச்சி நடந்து, பெரும் பரபரப்பைத் தமிழ்நாட்டிலும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆஷ் என்ற வெள்ளைக்காரர் பணியாற்றி வந்தார்! செங்கோட்டை நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற ஒரு வன்முறைச் சுதந்திரப் போராளி, ஆஷ்துரையை மணியாச்சி என்ற நகரில் ரயில் வண்டியிலே அவன் பயணம் செய்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதற்குப்பிறகு, வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு செத்தார் என்ற செய்தி, தமிழ்நாட்டில் ஒரு பரப்பரப்பு உணர்ச்சியை மூட்டி விட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் ஒரு குலை நடுக்கத்தை உருவாக்கியது.

ஆஷ் துரை என்ற கலெக்டரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சி நாதன் என்பவர், புதுவை நகருக்கு வந்து, மூன்று மாதங்கள் தங்கி, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றவர் என்று செய்தி பரவியது.

நீதி மன்றத்தில் இந்தக் கொலை வழக்கு நடந்த போது, “வாஞ்சி நாதன் துப்பாக்கி சுடும் பயிற்சியை யாரிடம் பெற்றார்”' என்று நீதிபதி கேட்டார். அதற்கு, வ.வே.சு.ஐயரிடம் தான் அவர் சுடும் பயிற்சியைப் பெற்றார் என்று பதில் கூறப்பட்டது. இந்தக் காரணத்தால்தான் வ.வே.சு. ஐயரை ஆஷ்துரை கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி; அவரையும் கைது செய்திட பிரிட்டிஷ் ஆட்சி திட்டமிட்டிருந்தது.

இக் காரணத்தை முன்வைத்து, புதுச்சேரியிலே உள்ள வ.வே.சு. ஐயரை எப்படிக் கடத்திவருவது என்று பிரிட்டிஷ் ஆட்சி பரிசீலனை செய்து கொண்டிருந்தது. பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரி நகரிலே இருந்து, மெதுவாகப் பிரிட்டிஷ் பகுதியிலே உள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற எல்லைக்கு ஐயரைக் கடத்திக் கொண்டு வருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என்று புதுச்சேரிக்கு அருகே உள்ள பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட எல்லையில் அரசு தண்டோரா போட்டு மக்களுக்குத் தெரிவித்தது. அதனைப் போலவே அதிகாரிகளும் அறிக்கை வாயிலாக அதே செய்தியை மக்களுக்குத் தெரிவித்தார்கள்.

ஐயர் தலைக்குப் பத்தாயிரம் ரூபாயா! என்று புதுச்சேரி மக்களும், அதனைச் சூழ்ந்துள்ள கிராமத்தார்களும் வியந்து போனார்கள். ஆனால், எந்த ஒரு மனிதனும் அவரைப் பிடித்து வெள்ளையனிடம் ஒப்படைக்க முன்வரவில்லை. அந்த அளவுக்கு அப்போது மக்கள் இடையே தேசாபிமானம் ஒற்றுமை உணர்வு ஓங்கி வளர்ந்து காணப்பட்டது.

எனவே, ஐயரைப் புதுச்சேரியிலே இருந்து குண்டுக் கட்டாக, இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு வந்து விடுவது என்று சதித்திட்டம் போட்ப்பட்டது. ஆனால், ஐயர் எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்து, இந்திய, பிரிட்டிஷ் ஆட்சிகளின் முகத்திலே கரிபூசி அவமானப்படுத்தி விட்டார்! போலீசாரின் எந்த வித நடவடிக்கைகளையும் சந்திக்கத் தயாராக இருந்தார் என்பது மட்டுமல்ல; அவர்களின் எந்த நிக்ழ்ச்சிக்கும் ஐயர் இடம் கொடுக்காமலேயே விழிப்புடன் இருந்தார்!

ஒரு முறை, எப்படியும் வ.வே.சு. ஐயரைப் பிடித்து விடுவது என்று பிரிட்டிஷ் அரசு கங்கணம் கட்டிக் கொண்டு, கூலிப்படை களைப் புதுச்சேரியிலேயே அமர்த்திக் கொண்டு பகீரத முயற்சியிலே இறங்கியது.

திடீரென்று ஐயர் தங்கியிருந்த ஓர் இடத்தருகே, “பிடிவிடாதே, விடாதே பிடி” என்ற கூச்சல் கேட்டது. என்ன இது ஒரே கூச்சலாக இருக்கிறதே என்பதைத் தெரிந்து கொள்ள ஐயர் வீதியின் நடுப்பாகத்திலே நின்று கொண்டு கூச்சல் போட்டு ஓடியவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உடனே அடுத்த ஒரு கூலிப்படை ஓடிவந்து, “இதோ இவன் தான், திருடன், பிடிபிடி, விடாதே பிடி” என்ற கூச்சல்களைப் போட்டுக் கொண்டு ஐயரையும் பிடித்துத் தள்ளித் துக்கியபடியே ஓடினார்கள். அதற்குள் வேறோர் கும்பல் நன்றாக் குடித்துவிட்டுக் போதையில், யார் எவர் என்ற அடையாளம் தெரியாததால், ஐயரைத் துக்கிக் கொண்டு ஓடியவர்களைப் பிடித்து, உதைத்து, விரட்டி விட்டு, என்ன ஏது என்று புரியாத போதையிலே அங்கங்கே நிலை தடுமாறி விழுந்து விட்டார்கள். அதைக் கண்டு ஐயர் அவர்கள் மீது இரக்கப்பட்டு நடுவீதியிலே விழுந்து கிடந்த அவர்கள் ஒவ்வொருவரையும் தூக்கி வீதியின் ஓரத்தில் கிடத்தும் போது, முதலில் துரத்திக் கொண்டு வந்த அக்கூலிக் கும்பல் மீண்டும் போதையேற்றிக் கொண்டு ‘விடாதே பிடி’ ‘விடாதேபிடி’ என்று கோஷம் போட்டுக் கொண்டு வந்ததைக் கண்ட ஐயர், உடனே எழுந்து, இந்தக் குடிகாரர்களிடம் சிக்கி விட்டால், முன்பு போல நம்மை வேறு எங்காவது கடத்திக் கொண்டு போய் வேறோரிடத்திலே தள்ளிவிட்டு ஓடி விடுவார்களோ, இதில் ஏதாவது அரசியல் சதி இருக்குமோ என்று அச்சம் அவருக்கு ஏற்பட்டு விட்டதால், ஐயர் அக்குடிகாரர்களுக்கு முன்னாலே ‘விடாதே பிடி’ என்று ஓசையிட்டபடியே ஓடினார்! ஏதோ குடிகாரர்கள் கலாட்டா போலிருக்கிறதே என்று மக்கள் யாரும் இதற்கு மதிப்பு அளிக்கவில்லை.

வ.வே.சு. ஐயர் இவ்வாறு ஓடிவந்த பாதையிலே ஒரு விநாயகர் கோவில் இருந்தது. வேறுவழி ஏதும் ஐயருக்குப் புலப்படவில்லை. திடீரென அவர் அக்கோயிலுக்குள் புகுந்துகொண்டு, அங்கிருந்த பிள்ளையார் சிலைக்குப் பின்னாலே மறைவாக ஒளிந்து கொண்டார் ஐயரை விரட்டிக் கொண்டு வந்த முதல் கூலிக் கும்பல் ஐயரைக் காணாமையால் வந்த வழியே மீண்டும் போதைக் கூச்சலிட்டுக் கொண்டே ஓடிவிட்டது.

இதைப் போலவே, பிரிட்டிஷ் போலீசார் வேறோர் முறை வ.வே.சு. ஐயரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று திட்டம் போட்டார்கள்.

அந்தத் திட்டம் எப்படிப்பட்ட திட்டம் என்பதை இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலே படித்திருப்பீர்கள். அந்தப் பிண ஊர்வலம் ஓர் அற்புதமான ராஜதந்திர வியூகம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதையும் இந்தப் புதுச் சேரிப் பிரச்சனையிலே சேர்த்துப் படித்தால், வ.வே.சு.ஐயர் பிரிட்டிஷ் ஆட்சியையும், போலீசையும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைத்தார் என்ற வீர வரலாறை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஐயரை எப்படியாவது அல்ஜீரியா நாட்டின் போர் முனைக்கு அனுப்பிவிடலாம்; அங்கே போய் செத்துத் தொலையட்டும் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது.

எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது தமிழ் நாட்டுப் பிரிட்டிஷ் போலீஸ் துறை. ஆனால் வ.வே.சு.ஐயர் பிரிட்டனின் பழிவாங்கும் படலத்துக்குப் பலியாகவில்லை. வ.வே.சு.ஐயரிடம் இந்தப் பிரச்னையிலும் ஆங்கிலேயர் அரசு தோற்று மண்ணையே கவ்வியது!

சுதந்திரப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட எல்லாரையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வ.வே.சு. ஐயரைப் போலவே அரசியல் வஞ்சத்துக்கு ஆளாக்கி அவர்களது வாழ்க்கைகளையே பூகம்பம் போல பிளந்து விட்டது.

இவ்வாறு, ஆண்டுகள் பல நகர வ.வே.சு. ஐயரின் அரசியல் ஞான முதிர்ச்சி வன்முறை வழிகளால் பாரத நாட்டிற்கு சுதந்திரம் பெறமுடியாது என்பதைத் திட்டவட்டமாய் உணர்த்தியது. காந்தியடிகளாரின் அகிம்சை முறைதான் இந்தயாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்தார்.

வ.வே.சு. ஐயர் மனமாற்றம் கொண்ட நேரத்தில், காந்தியடிகளாரின் சுதந்திரப் போராட்டமுறைகளுக்கு இந்தியாவிலே பலத்த செல்வாக்கு வளர்ந்து மக்கள் வன்முறைகளைக் கைவிட்டு, காந்தியண்ணலின் அகிம்சைப் போராட்டப் பண்பே அறப்போர் மாண்பு என்று நம்பி காந்தியாரின் சொல்வாக்கை பின்பற்றி நடந்தார்கள்.

இதனால், மறப்போர் முறைக்கும், வன்முறை செயற்பாடுகளுக்கும், பலாத்கார உணர்வுகளுக்கும், பலிவாங்கும் பழிச் செயல்கட்டும் மக்கள் இடையே மதிப்பு மங்கி அற்றுவிட்டது என்பதை வ.வே.சு. ஐயர் உணர்ந்தார். அரசியல் விடுதலைக்கு சாத்வீக முறையே சாலச் சிறந்த ஆயுதம் என்பதையும் தனது மனத்தில் பதித்துக் கொண்டு பணிகளைச் செய்து வந்தார்.

1915-ஆம் ஆண்டு, காந்தியடிகள் புதுச்சேரி நகருக்கு வருகை தந்தார். வ.வே.சு. ஐயர் அண்ணலை சந்தித்து. நான் லண்டனில் வன்முறைதான் சிறந்த போராயுதம் என்று வாதிட்டேன். அந்தக் கருத்து இப்போது தோற்றுப் போனதை முற்றிலுமாக உணர்ந்தேன்.  எனது கருத்து தங்களிடம் தோற்றது. இனி நான் அறப்போராட்ட அகிம்சை வழியைத்தான் பின்பற்றுவேன்’ என்று தெரிவித்து வணங்கினார்.

வ.வே.சு.ஐயரின் இந்த மனமாற்றப் போக்கைக்கண்டு மகாத்மா மிகவும் மகிழ்ந்தார். முதல் உலகப்போர் முடிந்தது! காந்தி அடிகளார் விடுத்த ஒரு வேண்டுகோளுக்கு ஏற்றவாறு வ.வே.சு. ஐயர் மீது பிரிட்டிஷ் அரசு தொடுத்திருந்த எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது. உடனே, புதுவையிலே இருந்த வ.வே.சு.ஐயர் தமிழ் மண்ணிலே தான் பிறந்த பூமியிலே காலடி வைத்தார்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு, தனது மனமாற்ற அரசியல் கொள்கையால், அவர் மனம் அளவிலா மகிழ்ச்சி பெற்றாலும், அந்த சுதந்திரப் போர் வீரத் திலகத்தின் பிறப்பும், வளர்ப்பும், தியாகமும், ஆன்மிக ஞானமும், தேசபக்தி உணர்வும் நம்மை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதைச் சிந்திப்போமாக!