2. அங்கவியல்
அங்கவியல்
64. அமைச்சு
1.கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
ஒரு தொழிலைச் செய்யும் போது, அதற்கு வேண்டிய கருவி, அதற்கு ஏற்ற காலம், அதனைச் செய்யும் முறை, அம்முறையில் செய்யப்படும் அரிய செயல் ஆகிய இவைகளை மாட்சிமைப்படப் பொருத்தமாக எண்ணிச் செய்ய வல்லவனே அமைச்சன் ஆவான்.
மாண்டது-சிறப்புடையது.
கருவிகளாவன ; அமைச்சருக்குச் சேனை, பொருள் முதலியன; மற்றவர்கட்கு அவரவர் தொழிலுக்கு ஏற்ற கருவிகள். 'அமைச்சு' என்பது இங்கு அமைச்சன் என்னும் பொருளில் வந்தது 631
2.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
அஞ்சாமையும், குடிப்பிறப்பும், காக்கும் தன்மையும், பல நூல்களையும் கற்று அதனால் பெற்ற அறிவும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்தினையும் சிறப்புறப் பெற்றவனே அமைச்சனாவான்.
வன்கண்-அஞ்சாமை; குடி-குடும்பச் சிறப்பு; ஆள்வினை -முயற்சி; குடிகாத்தலை ஒன்றாகக் கொண்டால் கற்றறிதல் என்பதனைக் கற்றல், அறிதல் என இரண்டாகக் கொள்க. 632
3.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
தன் அரசரிடத்திலிருந்தும், தன் அரசனுக்குப் பகைவராக உள்ளோரிடத்திலிருந்தும் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், என்றென்றும் பிரியாமல் இருக்க வேண்டியவர்களை இன்சொல் கூறல், பொருள் தந்து உதவல் முதலியவைகளால் பிரிந்து போகாமலும் காப்பாற்றிக் கொள்ளுதலும், முன்னரே பல்வேறு காரணங்களால் பிரிந்து இருப்பவர்களை அவரவர்கட்கு ஏற்றவைகளை உதவி, சேர்த்துக் கொள்ளுதலும் ஆகிய இவைகளில் வல்லமை பெற்றவனே சிறந்த அமைச்சனாவான்.
பேணிக் கொளல்-அவரவர்கட்கு வேண்டியவைகளை உதவித் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல். 633
4.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
ஒன்றைச் செய்வதற்கு முன்பு நன்றாக ஆராய்ச்சி செய்தலும், செய்யத் தக்கது என்று தோன்றினால் அச்செயல் முடிவு பெறும் வகையில் நன்கு எண்ணிச் செய்தலும், இச்செயலைச் செய்யலாமா செய்யக் கூடாதா என உள்ளத்தில் குழப்பம் ஏற்படுமானால், நன்கு சிந்தித்து இரண்டில் ஒன்றைத் துணிந்து சொல்லும் ஆகிய இவற்றில் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சன் ஆவான்.
தேர்தல்-தேர்ந்து அறிதல்; ஒருதலையாச் சொல்லுதல்-இருவகை எண்ணங்களில் ஒன்றைத் துணிந்து சொல்லுதல். 634
5.அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
தான் ஒன்றைத் தெரிவிக்க நேர்ந்த போது, அதில் உள்ள நீதி அநீதிகளை உணர்ந்து, அறிவோடும் அமைதி வாய்ந்த தன்மையோடும் அதனைத் தெரிவிக்கக் கூடிய சொல்லையுடையவனாயும், அவ்விதம் சொல்லுவதனால் விளையக் கூடிய நன்மை தீமைகளை எந்தக் காலத்தும் உணர்ந்திருப்பவனாயும் உள்ள அமைச்சனே ஒன்றைக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான்.
அறன்-தரும நெறி அல்லது கடமை; ஆன்ற-அறிவு நிரம்பிய; அமைந்த-பொறுமையோடு கூடிய; திறன்-விளையத்தக்க நன்மை தீமைகள்; தேர்ச்சித் துணை-கலந்து ஆலோசித்தற்குத் தகுந்த துணைவன். 635
6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.
நல்ல நூல்களைக் கற்றறிந்ததனால் ஆகிய அறிவும், இயற்கையாக அமைந்துள்ள நுண்ணறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன்னே வந்து நிற்கக் கூடிய மிகவும் நுட்பமான சூழ்ச்சிகள் எவை இருக்கின்றன? எவையும் இல.
பிறரால் நிகழக்கூடிய எத்தகைய சூழ்ச்சிகளையும், அத்தகைய் அமைச்சர்கள் எளிதில் அறிந்து கொள்வர் என்பது பொருள். 636
7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
செய்ய வேண்டுவன இவையே என்று நூலறிவாலும், நுண்ணறிவாலும் நன்கு தெரிந்து கொண்ட போதிலும் அந்த இடத்தின் நிலையையும், அறிந்து, அவைகளுக்கு ஏற்பவே செய்தல் வேண்டும்.
செயற்கை-செய்ய வேண்டிய கடமை; உலகத்து இயற்கை-உலக ஒழுக்கத்துக்கு ஏற்ற செயலுமாம். 637
8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்.
அறிந்து சொல்லுவோர் தம் சொற்களையும் இகழ்ந்து தானும் எண்ணிப் பாராது ஒருவன் ஒன்றைச் செய்பவனாக இருப்பினும், அவனுக்கு அருகே இருக்கும் அறிஞன் வாளா இராமல், உண்மைப் பொருளை விளக்கிக் கூறுதலே முறைமை ஆகும்.‘
'அறிகொன்று அறியான்’ என்பதற்கு அறிய வேண்டியவைகளுள் ஒன்றையும் அறியாதவன் என்றும் பொருள் கொள்ளுவர். உழையிருந்தான்-அருகே இருப்பவன். இங்கே அமைச்சனைக் குறிக்கும். 638
9. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
அரசனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்குத் தீங்கினை விளைவிக்கும் மந்திரியைக் காட்டிலும், அந்த அரசனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கக் கூடிய எழுபது கோடிப் பகைவரே மேலானவர்கள்.
தெவ்-பகைவர்; உறுதல்-பொருந்துதல். 639
10.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
அமைச்சர்க்கு நன்கு சிந்தித்துப் பார்க்கும் அறிவு இருந்தால் மட்டும் பயனில்லை; அந்த அறிவுக்கு ஏற்பச் செய்யும் திறமையும் இருத்தல் வேண்டும். அத்தகைய திறமை இல்லாதவர் முடிவு பெறாத செயல்களையே செய்வர்.
முறைப்படச் சூழ்தல்-ஒழுங்குபட எண்ணுதல். 640
65. சொல்வன்மை
1.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
பேச்சு வன்மை என்பது ஒருவனுக்குச் செல்வம் போன்றதாகும். அந்தச் செல்வத்தைப் பிற செல்வங்களுக்குச் சம்மாக எண்ணுதல் கூடாது. அஃது எல்லாச் செல்வங்களிலும் சிறந்து விளங்குவதாக இருக்கின்றது.
சொல்வன்மை-பிறர் உள்ளங்களைக் கவரும் வகையில் பேசுந் தன்மை; நாநலம் என்னும் நலன்-பேச்சு வன்மை என்னும் செல்வம்; பிற நலன்களாவன: கேட்டறிதல். பார்த்தறிதல், சுவைத்தறிதல் முதலியன. 641
2.ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
நல்ல சொல்லால் செல்வமும், தவறான சொல்லால் கேடும் வரும். ஆதலால், ஒருவர் தம் சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
சொல்லின் கண் சோர்வு-பேசும் போது நேரத் தக்க தவறு; காத்தோம்பல்-போற்றிக் காத்தல்; 'ஓம்பல்' இங்கே 'காத்துக் கொள்க’ என்னும் பொருளில் வந்துள்ளது. 642
3.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
நண்பர்களைத் தம்மிடமிருந்து பிரியவொட்டாமல் மேலும் நட்பினை உண்டாக்குவதோடு, நண்பர்கள் அல்லாத பகைவர்களும், அந்தப் பகைமை ஒழிந்து தம்மிடம் நட்பு முறை பாராட்டத்தக்க சொற்களை ஆய்ந்து பேசுவதே பேச்சு வன்மையாகும் என்றும் இக்குறளுக்குப் பொருள் கூறலாம்.
கேட்டார்-நண்பர்; கேளார்-பகைவர்; வேட்ப- விரும்பிக் கேட்கும் படி; பிணித்தல்-சேர்த்தல், நண்பராகச் செய்தல், தகை அவாய்- தன்மையை அவாவி, அஃதாவது விரும்பி என்றும் பொருள் கொள்வர். 643
4.திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினுாஉங்கு இல்.
ஒருவர் ஏதேனும் சொல்ல விரும்பும் போது நன்றாக ஆய்ந்து இடம் பொருள் உணர்ந்து அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற சொல்லையே சொல்லுதல் வேண்டும். ஏனென்றால், நீதியை நிலைக்கச் செய்வதற்கும், அடைய விரும்பும் பொருளை அடைவதற்கும், அந்தச் சொல் வன்மையைக் காட்டிலும் சிறந்தது வேறொன்று இவ்வுலகில் இல்லை.
திறன்-எந்த எந்தச் சமயத்தில் எதை எதை எந்த எந்த வகையில் சொல்ல வேண்டுமோ, அந்த வகைகளையெல்லாம் எண்ணிச் சொல்லும் திறமை. 644
5.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
ஒருவர் ஒரு சொல்லைச் சொல்லும் போது மற்றொருவர் அச்சொல்லை மறுத்துச் சொல்லாத வண்ணம் நன்கு சிந்தித்துப் பார்த்தே சொல்லுதல் வேண்டும். 645
6.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
தாம் ஒன்றைச் சொல்லும் போது, பிறர் விரும்பி அதை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை மட்டும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்விதம் நடத்திய குற்றமற்ற பேச்சுச் சிறப்பினை உடையவர்தம் கொள்கையாகும். 646
7.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
ஒருவன் தான் எண்ணிய ஒன்றைப் பிறர் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல வல்லவனாகவும், அவ்விதம் சொல்லும் போது எத்தகைய சொற்குற்றம், பொருட் குற்றங்களையும் புரியாதவனாகவும், தான் சொல்ல விரும்பும் ஒன்றைச் சொல்லுதற்கு வேண்டிய அஞ்சாமை உடையவனாகவுமாக இருந்தால் அவன் பேச்சில் குற்றம் கண்டு அவனை வென்று விட எவராலும் இயலாது.
இகல்-பகைமை, கருத்து வேறுபாடு. 647
8.விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
தாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒழுங்கு பெறத் தொகுத்து வைத்துக் கொண்டு இனிமையாகச் சொல்லுதல் வேண்டும். அத்தகைய வல்லமை வாய்ந்தவர் கிடைக்கப் பெற்றால், இவ்வுலகில் உள்ளோர் தாமே அவரிடம் விரைந்து சென்று, அவர் சொல்லும் தொழில் கேட்டு அவ்வண்ணமே நடக்கவும் முன் வருவர்.
ஞாலம்-உலகில் உள்ள மக்கள்; நிரந்து ழுங்குபடக் கோத்து. 648
9.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
குற்றமற்றவைகளாகிய சில சொற்களால் ஒரு கருத்தை விளக்கிச் சொல்ல அறியாதவரே, பொருளற்ற பலப் பல சொற்களை அடுக்கிச் சொல்ல விரும்புவர்.
காமுறுதல்-விரும்புதல்; மன்ற-நிச்சயமாக அல்லது விளக்கமாக; தேற்றாதவர்-தெளியாதவர், அறியாதவர். 649
10.இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
தாம் கற்ற நூல்களின் பொருளைப் பிறர் அறிந்து கொள்ளும்படி விளக்கமாகச் சொல்ல இயலாதவர், கொத்தாக. அழகு பெற மலர்ந்திருந்தும், மணம் சிறிதும் இல்லாமல் இருக்கும் மலருக்குச் சமமானவராகவே மதிக்கப்படுவர்.
இணர்-பூங்கொத்து; ஊழ்த்தல்-மலர்தல்; நாறா மலர்-மணமில்லாத மலர். 650
66. வினைத் தூய்மை
1.துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
ஒருவருக்குத் துணையினது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும். அதனோடு, அவர் செயல் நலமும் பெற்றிருந்தால், அவர் விரும்பும் எல்லா நலன்களையும் அந்தச் செயல் நலம் தரும்.
அமைச்சர்கள் பேச்சு வன்மையோடு செயல் நலமும் உடையவர்களாக இருத்தலின் இன்றியமையாமையை இக் குறள் தெரிவிக்கிறது. வினை நலத்தால் இம்மையில் பெறக் கூடிய செல்வத்தோடு, மறுமை இன்பத்தையும் அடையக் கூடும் என்றும் இக்குறளுக்கு விரிவுரை கூறுவர். 651
2.என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
ஒர் அமைச்சர் தமக்கும், தம் அரசனுக்கும் புகழையும், நன்மையையும் தாராத செயல்களை எந்தக் காலத்தும் முற்றிலும் ஒழித்து விடுதல் வேண்டும்.
ஒருவுதல்-விட்டு நீங்குதல்; நன்றி-நன்மை. 652
3.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅது என்னும் அவா.
மேம்பாட்டினை அடைய விரும்புவோர் தம் புகழ் கெட வரும் தொழிலைச் செய்தலை முற்றிலும் விட்டு நீங்குவாராக.
ஓஒதல்-ஒவுதல், ஒழித்து விடுதல்; ஒளி-இங்கே புகழினைக் குறிக்கும்; மாழ்குதல்-கெடுதல்; ஆஅதும்-ஆகுவோம்; மேம்பாட்டினை அடைவோம். 653
4.இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
தடுமாற்றம் சிறிதும் இல்லாத அறிவினையுடையவர் எத்தகைய துன்பத்தில் ஆழ்ந்த போதும், அது தீர்த்தற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்.
இடுக்கண்-துன்பம்; இளிவந்த-இழிவான செயல்கள்; நடுக்கற்ற காட்சி-தடுமாற்றம் சிறிதும் இல்லாத அறிவு; அஃதாவது எத்தகைய துன்பத்திலும் நிலை கலங்காத தன்மை; காட்சி-இங்கே அறிவினைக் குறிக்கும். 654
5.எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
நான் எத்தகைய தவறுகளைச் செய்து விட்டேன் என்று பிறகு எண்ணி வருந்தக்கூடிய செயல்களை என்றென்றும் செய்யா தொழிக, அத்தகைய குற்றங்களை ஒரு முறை செய்ய நேர்ந்து விட்டாலும், மீண்டும் அவற்றைப் புரியாதிருத்தலே நல்லது.
எற்று-எத்தகையது; இரங்குவ-வருந்தக் கூடிய செயல்கள். 655
6.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
தன்னைப் பெற்றெடுத்த தாயின் பசித் துன்பத்தை நேரில் கண்டு வருந்தத் தக்க நிலை நேர்ந்தாலும், அறிவின் மிக்க பெரியோர் அறிந்து இகழ்ந்து கூறத் தக்க செயலினை ஒருவன் செய்யா திருத்தல் வேண்டும். 656
7.பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
பெரிய குற்றங்களைத் தாங்கிக் கொண்டு பெறத் தக்க செல்வத்தை அறிவிற் சிறந்த பெரியோர்கள் ஏற்க மாட்டார்கள்; அத்தகைய குற்றங்களைச் செய்ய இசையாது வருந்தும் கொடிய வறுமையான நிலையையே விரும்புவர்; அதுவே சிறந்தது.
மலைந்து-மேற்கொண்டு; நல்குரவு-வறுமை. 657
8.கடிந்த கடிந்தொரார் செய்வார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
அறிவுடையோரால் வெறுக்கப் பெற்ற செயல்களைத் தாமும் வெறுத்து நீக்காமல் செய்ய முயல்வாருக்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும், அவை துன்பத்தையே தரும்.
கடிந்து-வெறுத்து ஒதுக்கிய செயல்கள்; கடிந்து-வெறுத்து;ஒரார்- நீக்காதவர்; பீழை-துன்பம். 658
9.அழக்கொண்ட எல்லால் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
பிறர் வருந்தும்படி ஒருவன் பெற்ற பொருள்கள் யாவும், அவனும் அவ்விதமே வருந்தும்படி ஒழிந்து போகும். நல்ல வழியில் பெற்ற பொருள்கள் அவ்விதம் பெற்றவனை விட்டு நீங்குதல் கூடும். எனினும் பின்னர், வேறோர் வகையில் அவை அவனுக்கு நன்மையைத் தரும். 659
10.சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலந்துள்நீர் பெய்திரீஇ யற்று.
தீய செயலால் பொருள் தேடி, அப்பொருளைக் காப்பாற்ற எண்ணுதல், உலராத பச்சைக் களிமண்ணால் செய்யப் பெற்ற மண் பாண்டத்துள் நீரைப் பெய்து அதைக் காப்பாற்ற முயல்வதற்குச் சமமே ஆகும்.
சலம்-தீய செயல்கள், வஞ்சனை; ஏமார்த்தல்-ஏமம் செய்தல், பாதுகாத்தல்; இரீஇயற்று-இருத்திய அத்தன்மைத்து. 660
67. வினைத்திட்பம்
1.வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்று சொல்லப் படுவது ஒருவன் உள்ளத்தின் உறுதியே ஆகும். மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும். -
மற்றவை.கருவி, உபாயம் முதலியன; படை, அரண், நட்பு முதலியவைகளையும் கொள்ளலாம். வினைத்திட்பம்-செயலின் கண் உறுதியாய் இருத்தல். 661
2.ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
ஒன்றைச் செய்ய முயலும் போது, இடையூறு வருதல் கூடும். அத்தகைய இடையூறு வருவதற்கு முன்பே அதனை உணர்ந்து நீக்குதலும், அவ்விதம் முயன்றும் இடையூறு நேரின், அதன் பொருட்டு உள்ளம் தளராமையும் ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆய்ந்தவர் தம் கொள்கையாகும்.
விளக்கம்: வினைத்திட்பம் இரு வகைப்படும். ஒன்று இடையூறு நேரா வண்ணம் முன்னரே அறிந்து காக்கும் உள்ள உறுதி. மற்றொன்று இடையூறு வந்த காலத்தும் உள்ளம் தளராமை.
ஊறு-துன்பம்; ஒரால்-நீக்குதல்; ஒல்காமை-உள்ளம் தளராதிருத்தல்; ஆறு-வழி; கோள்-கொள்கை. 662
3.கடைக்கொட்க செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
ஒருவன் ஒரு செயலைத் தொடங்கினால் அதை அதன் இறுதி வரையில் செய்து மீள்வதே அவனுக்கு ஆண்மையாகும் . இடையிலேயே மீள்வானாயின், அ ஃது அவனுக்கு நீங்காத துன்பத்தையே விளைவிக்கும்.
வேறொரு பொருள்: ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளியிடும்படியாக மறைத்துச் செய்வதே வினைத் திட்பம் ஆகும். அங்ஙனமின்றி, இடையில் அச்செயல் பலருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும். 663
4.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
ஒரு செயலை இவ்விதம் செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது ஆகும். அதனைச் சொல்லிய வண்ணம் செய்தல் எவர்க்கும் அரியது ஆகும். 664
5.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
செய்யும் செயல்களால் தனிச் சிறப்பைப் பெற்று உயர்ந்தவர்தம் வினைத் திட்பமானது, அந்த நாட்டை ஆளும் அரசன் உள்ளத்திலும் பதிவதால், எல்லாராலும் நன்கு மதிக்கப்படும்.
வீறு-தனிச்சிறப்பு; மாண்டார்-சிறப்புக்களால் உயர்ந்தவர்; ஊறு எய்தல்-(உள்ளத்தே) சென்று. தங்குதல்; உள்ளப்படும்-நன்கு மதிக்கப்படும். 665
6.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
எண்ணினவர் அவற்றைச் செய்து முடிக்கும் உள்ள உறுதியை உடையவராகப் பெறுவாராயின், தாம் எண்ணியவற்றை எண்ணியபடியே பெறுவர். 666
7.உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருண்டு செல்லத் தக்க பெரிய தேருக்கு, அதன் அச்சில் இருந்து அதனைத் தாங்கும் சிறிய ஆணியைப் போன்ற திண்ணியாரை இவ்வுலகம் பெற்றிருக்கிறது. ஆதலால், ஒருவரை அவர்தம் வடிவின் சிறுமை கண்டு இகழக் கூடாது .
அச்சாணி-தேரின் கடையாணி. 667
8.கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
மனத்தெளிவுடன் ஆராய்ந்து கண்டறிந்த ஒரு தொழிலினைச் சோர்வு கொள்ளாமலும், காலம் கடத்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.
துளங்காமை-திட்பமுடைமை, உள்ளச் சோர்வு கொள்ளாமை; தூக்கம்-சோம்பலால் தாமதமாகச் செய்தல்; கடிதல்-நீக்குதல். 668
9.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
முடிவில் இன்பத்தைத் தரத் தக்க ஒரு செயலைச் செய்யும் போது, துன்பம் மிகுதியாக வருமாயினும், அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது, துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும். 669
10.எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
எத்தகைய அரண்களை ஒருவர் பெற்றிருப்பினும், தாம் செய்யும் தொழிலில் அவருக்கு உள்ள உறுதி இல்லாதிருக்குமேல், அவரை உலகம் விரும்பிப் போற்றாது.
எனைத்திட்பம்-படை, அரண், நட்பு முதலிய அரண்கள்; செல்வம், கல்வி, உறவு என்றும் கூறுவர். 670
68. வினை செயல்வகை
1.சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
ஒரு செயலைக் குறித்து ஆராய்ச்சி செய்வதன் முடிவு அச்செயலைச் செய்து முடிக்கத் துணிவு கொள்ளுதலே ஆகும். அங்ஙனம் துணிந்த செயலில் காலந் தாழ்ந்து நிற்பது குற்றமாகும்.
சூழ்ச்சி-ஆராய்ச்சி செய்தல்; தாழ்ச்சி-காலம் தாழ்த்தல். 671
2.தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
நன்றாக எண்ணி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒன்றை நிதானமாகவே செய்தல் வேண்டும். காலங்கடத்தாமல் உடனே செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்வதில் சிறிதும் காலம் கடத்துதல் கூடாது.
தூங்குதல்-தாமதித்தல் நிதானமாகச் செய்தல். 672
3.ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
ஒல்லும்வாய்-இயலும் இடம்; ஒல்லாக்கால்-செய்ய இயலும் இடம் நேராதபோது; வாய்-இடம்.
குறிப்பு: 'வினை'என்பதற்குப் பரிமேலழகர் 'போர்' என்றே பொருள் கொள்ளுகின்றார்; போர் செய்ய இயலாத போது சாம பேத தான தண்டங்களுள் ஒன்றைச் செய்க என்று அவர் பொருள் கூறுகின்றார். 673
4.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும்.
செய்யத் தொடங்கிய ஒரு செயல், தீர்க்கத் தொடங்கிய ஒரு பகை ஆகிய இரண்டனையும் அரைகுறையாக விட்டு வைத்தல் கூடாது. அவ்வாறு விட்டு வைக்க எண்ணினால், தீயின் ஒரு பகுதியை மட்டும் அணைக்காமல் விட்டு வைத்தால், அஃது எவ்விதம் பின் வளர்ந்து ‘கெடுதியை விளைவிக்குமோ, அவ்விதம் அந்த அரைகுறைச் செயலும் பகைமையும் கெடுதியும் விளைவிக்கும்.
எச்சம்-எஞ்சிய பகுதி;தெறும்-கெடும். 674
5.பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது அதற்கு வேண்டிய பொருள், அதற்கு ஏற்ற கருவி, தகுந்த காலம், செயல் முறை, செய்தற்குரிய இடம் ஆகிய இந்த ஐந்தனையும் மயக்கந் தீர எண்ணிப் பார்த்த பின்பு, அந்தச் செயலைச் செய்ய வேண்டும். 675
6.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
ஒரு தொழிலைச் செய்யும் போது அது முடியும் வகையும், இடையில் வரக் கூடிய இடையூறும், அச்செயல் வெற்றிகரமாக முடியும் போது அதனால் அடையக் கூடிய பெரிய பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். 676
7.செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
செயலைச் செய்பவன் செய்ய வேண்டிய முறையாவது அந்தச் செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவனுடைய எண்ணத்தைத் தான் அறிந்து கொண்டு, அதனைத் தன் உள்ளத்தே ஏற்றுக் கொள்ளுதலே ஆகும்.
உள்ளறிவான்-ஒரு செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவன். 677
8.:வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைக் கொண்டு பிறிதொரு செயலையும் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அஃது ஒரு மதம் பிடித்த யானையைக் கொண்டு, மற்றொரு மதம் பிடித்த யானையைப் பிடித்துக் கொள்வது போன்றதாகும்.
கோடல்-கொள்ளுதல், நனைகவுள்-மதத்தால் நனைந்த கன்னம்; யாத்தற்று-கட்டுதல் போலும்; யா-கட்டு. 678
9.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
தம்மிடம் முன்னரே நட்புக் கொண்டுள்ளவர்கட்கு நல்லனவற்றைச் செய்து, அவர்களை மகிழச் செய்வதற்கு முன்னர், தம் பகைவரோடு சேராமல் தனியே இருப்போரை நட்பாக்கிக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்eகது.
நட்டார்-நண்பர்; ஒட்டார்-எவரிடமும் கலவாமல் இருப்பவர், பகைவர்; ஒட்டிக் கொளல்-சேர்த்துக் கொள்ளுதல்.
ஒட்டாரை ஒட்டிக் கொளல்-பகைவரோடு சேராதரைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளல் என்பர் பரிமேலழகர்; பகைவரையே தன்னிடம் சேர்த்துக் கொள்ளல் என்பர் மணக்குடவர். 679
10.:உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
சிறிய நாட்டுக்கு அமைச்சராக உள்ளோர்; தம்மினும் வலியார் படை எடுத்தவிடத்துத் தம் குடியும், படையும் கலங்கக் கூடும் என்று அஞ்சி, அக்குறை தீரக்கூடிய சந்து வாய்க்கப் பெறின் தம்மினும் பெரியராய் அவர் தம் நட்பை மிகவும் தாழ்மையோடு ஏற்றுக் கொள்வர்.
உறை-உறையுமிடம், அஃதாவது நாடு; குறைபெறின்-தம் குறைகள் தீரப் பெறின் அல்லது குறையிரத்தற்கு உடன்பட்டுத் தம் எண்ணத்தை ஏற்றுக் கொள்வாராயின் என்பது. 680
69. தூது
1.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
யாவரிடத்தும் அன்பாயிருத்தல், தன் பதவிக்கு ஏற்ற நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல், அரசர்களாலே விரும்பப்படும் குணங்களையுடையவனாக இருத்தல் ஆகிய இவை தூதுரைப்பவனுக்குரிய தகுதிகளாகும்.
ஆன்ற குடிப்பிறப்பு-அரசர்களோடு அமர்ந்து உரையாடுதற்கு ஏற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறத்தல்; அவாம்-விரும்பத் தக்க; தூது-அரசர்கள் இடையே கருத்து வேற்றுமை நேர்ந்த போது ஒருவர் எண்ணத்தை மற்றொருவருக்கு எடுத்துரைத்தல். 681
2.அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
அரசன் மாட்டு அன்பு, அரசனுக்கு ஆவன அறியும் அறிவுடைமை, வேற்று அரசரிடம் சொல்லும் போது அந்த அரசரிடம், தம் அரசன் கூறியவைகளை ஆராய்ந்து சொல்லத் தக்க சொல்வன்மை ஆகிய இவை தூது உரைக்கச் செல்பவர்க்கு இன்றியமையாத மூன்று குணங்கள் ஆகும். 682
3.நூலாருள் நூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
வேல் போன்ற போர்க் கருவிகளைக் கையாளும் பிற அரசரிடம் சென்று, அவன் போன்றே போர்க் கருவிகளைக் கையாளும் தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயல்களைப் பற்றித் தூதுரைக்கச் செல்பவன் எத்தகைய பண்புடையவனாக இருத்தல் வேண்டும் எனில், சிறந்த நூல்களை எல்லாம் கற்றுணர்ந்த ஒரு புலவன் முன்பு சென்று தனக்குள்ள நூற்புலமையைக் கூறி, வெற்றி பெற்றுத் திரும்பக் கூடியவனைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவனாக இருத்தலாம்.
நூலார்-பல நூல்களையும் கற்றறிந்த புலவர்; வேலார்-வேல் முதலிய போர்க் கருவிகளைக் கையாளும் அரசர். 683
4.அறிவுரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
இயற்கை அறிவு, நல்ல தோற்றம், பலரோடும் பல காலம் ஆராய்ந்த கல்வி அறிவு இம்மூன்றையும் குறைவறப் பெற்றிருப்பவனே வேற்று வேந்தரிடம் தூதுரைக்கச் செல்லத்தக்கவன்,
வினை-தூது. 684
5.தொகச் சொல்லித் தூவாதநீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் துாது.
பல செய்திகளையும் தொகுத்துச் சொல்லியும், பயனற்றவற்றை நீக்கியும், கேட்டறியும் வேற்றரசர் உள்ளம் மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவனே தூதன் ஆவான்.
தொகச் சொல்லுதல்-சுருங்கச் சொல்லுதல்; தூவாத - வேண்டாதவை; நக-மகிழும்படி. 685
6.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாம் துாது.
தூதுக்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு, மாற்றரசன் வெகுண்டு நோக்கினால், அந்தக் கொடிய பார்வைக்கும் அஞ்சாதவனாய், அவன் உள்ளத்தில் நன்கு பதியுமாறு தன் அரசன் தெரிவித்ததைச் சொல்லி, அந்தந்தக் காலத்துக்கு ஏற்றதை அறிந்து நடந்து கொள்பவனே தூதனாவான்.
கற்று-தூதுக்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு; கண் அஞ்சான்-கண்பார்வைக்கு அஞ்சாதவனாய்; செலச்சொல்லி-உள்ளத்தில் பதியும்படி சொல்லி, காலத்தால் தக்கது அறிதல். சமயோசித அறிவின்படி நடத்தல். 686
7. கடன் அறிந்து காலம்கருதி இடனறிந்து
தான் மேற்கொண்டுள்ள செயலின் நன்மையை மனத்திற் கொண்டு. அதனை முடித்தற்கு ஏற்ற சமயத்தையும் உள்ளத்திற் கொண்டு, தக்க இடத்தையும் தெரிந்து கொண்டு, இவைகளை யெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்துத் தன் அரசன் தெரிவித்த செய்தியைத் தெரிவிப்பவனே தூதர்களில் சிறந்தவனாவான்.
விளக்கம்: தூதர்களுள் இரு வகை உண்டு. தானே தன் கடமையை அறிந்து இடம் காலங்களுக்கு ஏற்ற வண்ணம் தன் அரசன் தெரிவித்த செய்தியைச் சுருக்கியும், விளக்கியும் கூறுபவன் தலைசிறந்த துாதுவன் ஆவான். மற்றவன் அரசன் கூறியதை அவன் கூறியபடியே கூறுபவன்.
இவர்களுள் தலையாய துாதுவனின் இலக்கணங் கூறுவது இக்குறள். 687
8.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
உள்ளத்தாலும், உடலாலும் தூய்மையுடைமை, போதிய பாதுகாப்புடைமை, என்ன தீங்கு நேர்ந்தாலும் தாங்கத் தக்க உள்ளத் துணிவுடைமை ஆகிய இம்மூன்றினிடத்தும் என்றும் வழுவாது வாய்மைத் தன்மை பெற்றிருத்தலே தூதுவனின் குணம் ஆகும்.
இம்மூன்றின் வாய்மை-தூய்மை, துணைமை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றினும் வழுவாது நிற்தம் உண்மைத் தன்மை; வழியுரைப்பான்-அரசன் கூறிய வழியின்படி தூது உரைப்பவன். 688
9.விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
விடுமாற்றம்-ஓர் அரசன் பிறிதோர் அரசனுக்குச் சொல்லி அனுப்பும் சொற்கள், அஃதாவது துாதுரை; வடு-குற்றம்; வாய் சோர்தல், அச்சத்தினாலோ பிற காரணங்களினாலோ வாய் தவறித் தகுதியற்ற சொற்களைச் சொல்லுதல்; வன்கண்-உள்ள உறுதி. 689
10.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
தன் அரசன் மாற்றரசனுக்குச் சொல்லி விடுக்கும் வார்த்தை தன் உயிருக்கே அழிவு தருவதாய் இருப்பினும், தான் சொல்ல வேண்டுவனவற்றில் சிறிதும் குறைக்காது தன் அரசன் சொல்லியவாறே சொல்லித் தன் அரசனுக்கு நன்மையைத் தருபவனே தூதனாவான். 690
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
1.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
என்றும் போர்த்தொழிலிலேயே ஈடுபாடுடைய ம்ன்னரைச் சார்ந்து ஒழுகும் அமைச்சர், தூதர் முதலியவர்கள் அந்த மன்னரை மிகவும் நீங்கியிராமலும், மிகவும் நெருங்கியிராமலும் நெருப்பினிடமிருந்து குளிர் காய்கின்றவர்கள் போல இருத்தல் வேண்டும்.
இகல்வேந்தர் என்பதற்கு அடிக்கடி மாறுபடுதலையுடைய அரசர் என்றும் பொருள் கொள்ளலாம். 691
2.மன்னர் விழைப விழையாமை மன்னரான்
அரசரால் விரும்பப்படுபவைகளை அவரைச் சார்ந்தவர்களும் விரும்பாதிருத்தல் வேண்டும்; அவ்வாறு இருத்தல் நிலையான செல்வத்தை அவர்கட்குப் பெற்றுத் தரும்.
விழைக-விரும்பப்படுபவைகள்; அவை அரசரால் நுகரப்படும் பொருள்கள், அலங்காரங்கள் முதலியவை. 692
3.போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
அரசரைச் சார்ந்த அமைச்சர், வீரர் முதலானோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், அரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய பிழைகள் நேர்ந்தனவாகக் கேட்டு அரசன் ஐயுற்றானானால், அந்த ஐயத்தினின்று அவனைத் தெளிவித்தல் யாவர்க்கும் அரிதாகி விடும்.
போற்றுதல்-காத்தல்; அரியவை-பொறுத்தற்கு அரியவாகிய பிழைகள்; கடுத்தல்-ஐயுறுதல், சந்தேகித்தல்; தேற்றுதல்-தெளிவித்தல். 693
4.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியோ ரகத்து.
பலப்பல சிறப்புக்கள் அமைந்த அமைச்சர் போன்ற பெரியாரிடத்துத் தங்கியிருக்கும் போது ஒருவன் செவியுள் மட்டும் படும்படி மற்றொருவன் மறைவாகச் சொல்லிக் கொள்ளுதலும், ஒருவனைப் பார்த்து ஒருவன் மெல்ல நகைத்துக் கொள்ளுதலும் ஆகியவற்றை முற்றிலும் நீக்கி ஒழுகுதல் வேண்டும். 694
5.எப்பொருள் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
அரசர் பிறரோடு மறைவாகப் பேசுவது எப்பொருள் குறித்தாயினும், அதனைச் செவி சாய்த்துக் கேளாமலும், அவரைப் பின் தொடர்ந்து வினவாமலும் அம்மறைப் பொருளை அவர் தாமே தம் வாய் விட்டு வெளிப்படுத்திய போது கேட்டறிதல் வேண்டும்.
ஒரார்-உற்றுக் கேளார்; தொடரார்-பின் தொடர்ந்து சென்று கேட்டறியார்; விட்டக்கால்-வெளிப்படுத்திய போது; மறை-இரகசியச் செய்தி. 695
6.குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
அரசனிடம் சில செய்திகளைச் சொல்ல விரும்பினால், அவன் உள்ளக் குறிப்பை அறிந்து, சொல்வதற்கு ஏற்ற காலத்தையும் எண்ணிப் பார்த்து அறிந்து, வெறுப்பு இல்லாதனவாயும் அவனுக்குத் தேவைப்படுவனவாயும் உள்ள செய்திகளை அவன் விரும்பும் வகையில் சொல்லுதல் வேண்டும். 696
7.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
மன்னனைச் சார்ந்தவர்கள் அவன் விருப்பத்தோடு கேட்கக் கூடிய பயனுள்ள செய்திகளை அவன் தம்மைப் பார்த்துச் 'சொல்லுக’ எனக் கேளாவிடினும் சொல்லுதல் வேண்டும். பயனற்ற செய்திகளை அரசன் கேட்டாலும், எந்தக் காலத்தும் சொல்லாதிருத்தல் வேண்டும். 697
8.இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.
அரசரை, 'இவர் எம்மினும் இளையர்; இன்ன முறையினை யுடையவர்’ என்று எண்ணி இகழாமல், அவர் தம் அரச பதவியின் பெருமைக்கு ஏற்ப மன்னரைச் சார்ந்தோர் ஒழுகுதல் வேண்டும்.
இளையர்-வயது, உடலமைப்பு முதலியவைகளுள் இளையர்; இனமுறையர்-இன்ன முறையினையுடையவர் (அஃதாவது மகன் முறை, பெயரன் முறை, மைத்துனன் முறை முதலிய முறை); ஒளி-ஆட்சியின் சிறப்பு. 698
9.கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
கலக்கம் அற்ற திண்ணிய அறிவினையுடையவர், "யாம் அரசனால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டோம்" என்று எண்ணி, விரும்பாதனவற்றைச் செய்ய மாட்டார்.
கொளப்பட்டேம்-(அரசனால் விரும்பி) ஏற்றுக் கொள்ளப் பட்டோம்; கொள்ளாத-அரசனால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் படாத செயல்கள்; துளக்கம்-உள்ளக் கலக்கம்; காட்சி-அறிவு. 699
10.பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
'யாம் எம் அரசனுக்கு மிகவும் பழைமையானவராய் உள்ளோம்' என்று எண்ணிப் பழைமை பாராட்டித் தமக்குத் தகுதி அல்லாதவற்றைச் செய்து நட்புரிமை கொண்டாடுதல், அமைச்சருக்குக் கேட்டினைத் தரும். 700
71. குறிப்பறிதல்
1.கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
ஒருவர் தம் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்தை அவர் கூறாமலேயே, அவர்தம் முகத்தாலும் அவர்தம் கண்ணாலும் எண்ணி அறிய வல்லவன், எந்தக் காலத்தும் வற்றாத கடல் சூழ்ந்த உலகத்துக்கு ஒர் அணிகலன் ஆவான்.
கூறாமை-வாயால் விளக்கிச்சொல்லாமை; நோக்கி-கண், முகம், முதலியவைகளைக் கண்டு; குறிப்பறிதல்-ஒருவர் சொல்லாமலேயே அவர்தம் முகக்குறிப்பைக் கொண்டு தெரிந்து கொள்ளுதல்; வையக்கு - உலகத்துக்கு. 701
2.ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
ஒருவன் உள்ளத்தில் உள்ளதை அவன் முகத்தாலும் கண்ணாலும் ஐயமில்லாமல் உறுதியாக அறிய வல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பவனாக மதித்தல் வேண்டும்.
விளக்கம்; குறிப்பறிதலில் சந்தேக விபரீதமின்றி உள்ளது உள்ளவாறு அறிதல் வேண்டும் என்பதும், அவ்வாறு அறிய வல்லவன் தெய்வத்துக்குச் சமமானவன் என்று தெரிவிப்பதும் குறிப்பறிதலின் சிறப்பினைத் தெரிவிக்கின்றன. 702
3.குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாதும் கொடுத்தும் கொளல்.
முகக் குறிப்பினாலே உள்ளக் கருத்தை அறிய வல்லவரை உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதாயிருப்பினும் அதனைக் கொடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
இக்குறள் அரசர்க்கு ஏற்றது என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். உறுப்பினுள் என்பதற்கு நாட்டின் இன்றியமையா உறுப்புக்களான யானைப் படை, குதிரைப் படை முதலிய படைகளைக் குறிப்பர். சிலர் உடலிற் சிறந்ததாகிய கண் போன்ற உறுப்பினையும் குறிப்பர். 703
4.குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போர் அனையரால் வேறு.
ஒருவர் மனத்தில் எண்ணியதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ள வல்லவரோடு, மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும், அறிவால் வேறுபட்டவரேயாவர்.
கூறாமலேயே அறிந்து கொள்ள இயலாதவர் மனிதர் அல்லர்; அறிவிற் குறைந்த விலங்கு அல்லது மரம் முதலியவைகட்குச் சமமானவர் என்பதை வள்ளுவர் தம் உள்ளக் குறிப்பாலேயே விளக்குதல் அறிந்து இன்புறத் தக்கது. 704
5.குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
குறித்ததைக் காண வல்ல கண்களால் பிறர் உள்ளக் குறிப்பை அறிய இயலா விட்டால், உறுப்பினுள் சிறந்த அக்கண்களால் என்ன பயன் ?
உணராவாயின்-உணர இயலாதனவாயின்; பயத்தவோ-என்ன பயனைச் செய்வன? பயன் சிறிதும் இல்லை.
குறிப்பறியாதார் கண்ணிருந்தும் குருடரேயாவார் என்பது கருத்து. 705
6.அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
தன்னை அடுத்த பொருளின் வடிவத்தைக் காட்ட வல்ல பளிங்கு போல ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ள குணத்தை முகமானது காட்டிக் கொடுத்து விடும்.
அடுத்தது-தனக்கு எதிரில் இருப்பது; கடுத்தது-மிகுந்து தோன்றுவது. 706
7.முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
ஒருவன் உள்ளமானது ஒன்றை விரும்பினாலும், வெறுத்தாலும் அதனை அவனுடைய முகம் முற்பட்டுத் தெரிவித்து விடும். ஆதலால், அம்முகத்தை விட அறிவின் மிக்கது வேறொன்று உண்டோ? இல்லை.
முதுக்குறைவு-பேரறிவு; உவத்தல்-விரும்புதல்; காய்தல்-வெறுத்தல்; முந்துறும்-முற்பட்டுத் தெரிவித்து விடும். 707
8.முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
ஒருவனுடைய உள்ளத்தைக் குறிப்பாலறிந்து, அவனுக்கு உற்றதை உணரக் கூடியவரைப் பெற்றால், அவன் அவர் முகம் நோக்கி நிற்றல் ஒன்றே போதும். வாயினாலோ, செய்கையினாலோ, வேறு எத்தகைய குறிப்பினாலோ அவருக்கு அவன் தன் நிலையைத் தெரிவிக்க வேண்டியதேயில்லை என்பது குறிப்பு. 708
9.பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
ஒருவருடைய கண் நோக்கின் வேறுபாட்டை உணரும் திறமுடையவரைப் பெற்றால், அவருக்கு மற்றையவரின் பகைமையையும் நட்பையும் அவர் கண்களே அறிவித்து விடும்.
கண்களின் நோக்கு வேறுபாட்டைக் கொண்டு உள்ளத்து நிகழ்வதை அறிய வல்லவர் பிறர் பகையையும் நட்பையும் கண்களாலேயே அறிந்து கொள்வர் என்பது கருத்து. 709
10.நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
‘கண்’ என்று பொதுவாகக் கூறியிருப்பதால், தம்முடைய கண், பிறருடைய கண் இரண்டனையும் குறிக்கும். நுண்ணறிவு பெற்ற ஒருவர், மற்றொரு நுண்ணறிவு பெற்றவர் நம் கருத்தை அறிந்து கொள்ளப் பயன்படுவது கண்ணே என்றும் பொருள் கொள்ளலாம். சொல், செயல் முதலியவற்றால் கருத்தை மறைக்க இயலும். ஆனால், கண் என்னும் அளவு கோல் கருத்தை அறிந்து கொள்ளுவதில் சிறிதும் தவறாது. இச்செயல் அறிஞரால்தான் இயலும் என்பதையும் வள்ளுவர் குறிப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். 710
72. அவையறிதல்
1.அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
சொற்களின் வகைகள் பலவும் அறிந்த துய்மையினையுடைய அமைச்சர், அரசர்மாட்டு இருக்கும் சபையாரின் மரபினை அறிந்து, அவ்விடம் சொல்லத் தகுவனவற்றை ஆராய்ந்து பார்த்துச் சொல்லுதல் வேண்டும்.
அவை-அரசரைச் சார்ந்த அறிஞர்களும் பெரியோர்களும் குழுமியிருக்கும் இடம், அரசசபை; சொல்லின் தொகை-சொற்களின் வகைகள். அஃதாவது செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல், முதலியன பலவும் அடங்கிய சொற்குழு; தூய்மையவர்-இங்கே இச்சொல் குற்றமற்ற உள்ளம் வாய்ந்த மந்திரிகளைக் குறிக்கும். 711
2.இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
வெளிப்படைச் சொல், குறிப்புச் சொல் முதலிய பல வகைச் சொற்களின் ஒழுங்கினை ஆராய்ந்து அறிந்த நன்மையினை உடையவர், தாம் ஒன்றைச் சொல்லத் தொடங்கு முன், அந்தச் சபையின் தன்மையினை எண்ணிப் பார்த்துக் குற்றம் நேரா வண்ணம் ஆராய்ந்து சொல்லுதல் வேண்டும்.
இடைதெரிதல்-இடம், காலம் முதலியன அறிதல்; சொல்லின் நடைதெரிதல்-இன்ன சொல் இன்ன இடத்துக்கு ஏற்ற சொல் என்பதை அறிதல். 712
3.அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறிவார் வல்லதூஉம் இல்.
அவையின் தன்மை அறியாமல் ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர் சொல்லின் கூறுபாடும் அறியார்; கற்று வல்ல கலையும் அவர்க்கு இல்லை.
சொல்லின் வகையறியும் திறனும் சொல்வன்மையும் இருந்தும் ஒருவர் சபையின் தன்மையறியாது பேசுவாராயின் அவை இரண்டும் இல்லாதவராக எண்ணப்படுவர். 713
4.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்.
வான்சுதை வண்ணம் கொளல்.
அறிவிற் சிறந்தவர் முன்பு தாமும் அறிவிற் சிறந்தவராக இருந்து பேசுதல் வேண்டும்; அறிவில்லாதவர் குழுமியுள்ள அவைக் களத்திலே வெண்சுண்ணம் போல் இருத்தல் வேண்டும்; அஃதாவது ஒன்றும் அறியாதவர் போல் இருத்தல் வேண்டும்.
ஒளியார்-ஒள்ளியார், அறிவில் மிகுந்தவர்; வெளியார்-வெள்ளிய அறிவுடையார், அஃதாவது அறிவில்லாதவர்; வான்சுதை-வெண்மையான சுண்ணாம்பு.
கருத்து: அறிவில்லாதவர் முன்பு சிறந்த நுண்ணிய கருத்துக்கள் பயன்படா; அவர்கள் பேசும் சொற்கள் போன்ற சொற்களைக் கொண்டே அவர்கட்கு ஏற்றவாறு பேசுதல் வேண்டும். 714
5.நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
தம்மைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள் குழுமியுள்ள அவைக் களத்தின் முன்பு தாம் முன்னதாக ஒன்றும் பேசாமல் நாவடக்கத்துடன் இருத்தல் நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றுள்ளும் மிகவும் சிறந்தது.
முதுவர்-தம்மினும் அறிவிற் சிறந்தவர்; முந்து-முற்பட்டு; கிளவா-பேசாத; கிளத்தல்-சொல்லுதல்; செறிவு- நாவடக்கம்.
கருத்து: வயது, அறிவு, குணம் முதலியவற்றால் தம்மிலும் மூத்தவர்கள் ஒன்றைக் குறித்துப் பேசிய பின்பே, தாமும் பேசுதல் வேண்டும். 715
6.ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
விரிவான நூற்பொருளைக் கேட்டு அவற்றின் உண்மையை ஆராய வல்லவர் குழுமியுள்ள அவையின் கண் சொற் சோர்வு படுதல், ஒழுக்க நெறியிலே சிறந்தவர் அந்த நெறியிலிருந்து தவறி நடந்தால் அஃது எத்தகைய குற்றமாகக் கருதப்படுமோ அத்தகைய குற்றமாகக் கருதப்படும். , ஆறு-நல்லொழுக்கம்; நிலை தளர்தல்-நல்வழியிலிருந்து தவறி நடத்தல்; வியன்புலம்-விரிந்த அறிவு, அகன்ற நூற்பொருள்கள்; ஏற்று-உட்கொண்டு; இழுக்கு-குற்றம்.
'ஆற்றின் நிலை தளர்ந்தற்றே' என்பதற்கு 'ஆற்று வெள்ளத்திலே அகப்பட்டுக் கரையேற இயலாமல் தவிக்கும் ஒருவன் நிலை போன்றது’ என்று பொருள் கூறுவாரும் உண்டு. 716
7.கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து.
குற்றம் நீங்கச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவைக் களத்தின் முன்பு சொல்லுவதால் பல நூல்களையும் கற்று அதன் பயனையும் அறிந்துள்ளவரது கல்வி, விளக்கமுற்றுத் தோன்றும். 717
8.உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
பொருள்களைத் தாமே தெரிந்தறியும் அறிவுடையார் முன்பு ஒன்றைச் சொல்லுதல், தானே வளர்வதற்குரிய பயிருள்ள பாத்தியில் நீரினை ஊற்றியது போலாகும்.
தானே வளர்தற்குரிய கல்வி கற்றார் அவைக் கண் சொல்லுவதால் மேலும் சிறந்து வளரும் என்பது கருத்து. 718
9.புல்லவையுள பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
புல்லவை-கல்வி அறிவில்லாதவர் குழுமியுள்ள சபை; பொச்சாந்து-மறந்து; செலச் சொல்லுதல்-மனத்தில் பதியும் படி சொல்லுதல். 719
10.அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.
அறிவாலே தம் இனத்தவர் அல்லாதவர் சபையில் அறிவுடையார் ஒரு பொருள் பற்றிப் பேசுதல் தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிர்தம் போன்றது.
அங்ஙணம்-தூய்மையில்லாத முற்றம், சேறு நிறைந்த இடம், கழிவு நீர் செல்லும் வாய்க்கால் என்றும் கூறலாம்; உக்க- சிந்திய; அமிழ்து-பால், தேவாமிர்தம்; தம் கணம்-தம் இனத்தவர்; கோட்டி கொளல்-கூட்டத்தில் கலந்து பேசுதல். 720
73. அவையஞ்சாமை
1.வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
சொல்லைத் தொகுத்துரைக்கும் முறையினை அறிந்த தூய்மை உள்ளம் வாய்ந்தவர்கள், கற்று வல்லோர் அவை, கல்லாதவர் அவை என்னும் அவையின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் பேசும் போது அச்சங் காரணமாக வாய் தவறிப் பிழைபடப் பேச மாட்டார்.
வகை அறிதல்-கல்வியறிவுடையோர் கூடியுள்ள சபை அல்லது கல்வி அறிவு இல்லாதவர் கூடியுள்ள சபை என்பதை அறிந்து கொள்ளும் வல்லமை; வல்லமை-கற்று வல்லவர் கூடியுள்ள சபை; வாய் சோர்தல்-அச்சங் காரணமாகத் தவறான சொற்களைச் சொல்லி விடுதல்; சொல்லின் தொகை -சொற்களின் வகைகள். 721
2.கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
கற்றவரின் முன்பு தாம் கற்றவைகளை அவர் தம் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர் கற்றவர்களுள் கற்றவராக மதிக்கப்படுவார். 722
3.பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
பகைவர் உள்ள போர்க்களத்தின் இடையே அஞ்சாது சென்று உயிர் விடுவோர் உலகத்திலே பலர் உள்ளனர். ஆனால், கற்றார் தம் அவைக்கண்ணே அஞ்சாது சென்று பேச வல்லவர் சிலரே ஆவர்.
எளியர்-இங்கே எளியர் என்னும் சொல் மிகப் பலராய் உள்ளமையைக் குறிக்க வந்துள்ளது. அரியர்-அருமையாகக் காணக் கூடியவர்; சிலர் 723
4.கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர் உள்ளத்தே நன்கு பதியும்படி எடுத்துச் சொல்லித் தாம் சொன்னவைகளைக் காட்டிலும் சிறந்த பொருள்களைத் தம்மினும் மிக்காராகிய அக்கற்றாரிடமிருந்து மிகுதியாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
கற்றார் முன் அஞ்சாமல் எடுத்துச் சொல்வதாலும் அக்கற்றோரிடமிருந்து நாணாமல் கேட்டறிந்து கொள்ள முந்துவதாலும் இக்குறள் அவையஞ்சாமையின் பாற்படுகிறது. 724
5.ஆற்றின் அறிவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
அளவை நூலாகிய தருக்க சாத்திர நூலை அமைச்சர்கள் சொல்லிலக்கண நெறியின் படி அறிந்து கற்றல் வேண்டும். அவ்வாறு கற்றல் எதற்காக எனில் அது வேற்று வேந்தரிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்களுக்குத் தக்க வண்ணம் விடை தருதற் பொருட்டே ஆகும்.
ஆறு-வழி அல்லது நெறி; சொல்லிலக்கணம் நன்கு அறிந்த பிறகே அளவை நூலாகிய தருக்க நூலை அறிந்து கொள்ள வேண்டுமாதலின், தருக்க இலக்கணத்துக்குச் சொல் இலக்கணம் வழியாக உள்ளது. மாற்றம்-சொல்; மாற்றம் கொடுத்தல்-பதில் கூறுதல். 725
6.வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலோடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அஞ்சாத நெஞ்சம் படைத்த வீரர்களல்லாத கோழைகட்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? அது போன்றே நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் கூடியுள்ள சபையில் எழுந்து பேச அஞ்சுபவர்களுக்கு, அவர்கள் கற்ற நூலோடு என்ன தொடர்பு உண்டு?
நூலறிவு இருந்தும் அவைக்கு அஞ்சுதலின் அந்த அறிவு பயனற்றது ஆகின்றது. வன் கண்ணர்-அஞ்சாத நெஞ்சம் படைத்த வீரர்; நுண்ணவை-நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் குழுமியுள்ள சபை. 726
7.பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
அவையின் கண் சென்று பேச அஞ்சுபவன் கற்ற நூல், பகைவரின் போர்க் களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளுக்குச் சமமே ஆகும்.
பகையகம்-போர்க்களம்; பேடி-பகைவனை எதிர்த்துப் போர் புரிய அஞ்சும் கோழை, பெண்ணியல்பு மிகுந்த ஆடவன்; ஒள்வாள்-கூர்மை தங்கிய வாளாயுதம். 727
8.பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்குசெலச் சொல்லா தார்.
நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின் கண் சிறந்த பொருள்களை அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும்படி சொல்ல இயலாதவர், பல அரிய நூல்களைக் கற்றாராயினும் உலகுக்குப் பயனில்லாதவரே ஆவர். 728
9.கல்லா தவரின் கடைஎன்ற கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.
பல அரிய நூல்களை நன்றாகக் கற்றறிந்த போதிலும், நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின் கண் பேச அஞ்சுகின்றவர் ஒன்றும் கல்லாத வரை விடக் கடைப்பட்டவரே ஆவர். 729
10.உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சி
கற்று வல்லார் அவைக் களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிர் வாழ்ந்துள்ளார் எனினும் இறந்தாரோடு ஒப்பவே மதிக்கப்படுவார். 730
74. நாடு
1.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
குறையாத விளைபொருளும், குணநலஞ்சான்ற அறிஞர்களும், கேடில்லாத செல்வமுடையோரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும்.
தள்ளா விளையுள்-குன்றாத விளையுளைச் செய்யும் உழவர் என்பர் பரிமேலழகர்; மழையில்லாத காலத்திலும் சாவி போகாத நிலம் என்று மணக்குடவர் கூறுவர். 731
2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
பெரும் பொருள் வளத்தால் பலராலும் விரும்பப்பட்டதாகிக் கேடில்லாமையோடு மிகுதியாக விளைபொருளைத் தருவதே நாடாகும்.
பெட்டக்கதாகி-விரும்பப்படுவதாகி; பெட்பு-விருப்பம்; அருங்கேடு-கெடுதியில்லாமை, அஃதாவது மிக்க மழை, மழையின்மை., எலி, விட்டில், கிளி, பன்றி, யானை, பகைவரால் கொள்ளை போதல் முதலியவற்றால் அழிவின்மை; ஆற்ற-மிகுதியாக. 732
3. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
பிற நாட்டு மக்கள் பலப்பல காரணங்களால் ஒருங்கே வந்து குடியேறினாலும், அதனால் நேரத்தக்க பெரிய சுமையையும் தாங்கிக் கொண்டு தன் அரசனுக்குரிய வரிப்பணத்தையும்
குறைவின்றித் தர வல்லதே நாடாகும்.பொறை-சுமை; இறைவன்-அரசன்: இறை-வரி; ஒருங்கு- முழுவதும்; நேர்வது-தருவது.
பொறையொருங்கு தாங்குதலாவது ஏனைய நாடுகளில் உள்ள குடிகள் போர் காரணமாகவோ, கொடிய பஞ்சங் காரணமாகவோ திரண்டு தன் நாட்டுக்கு வந்தால், தாங்கிக் கொள்ளுதல். 733
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
மிக்க பசியும், நீங்காத நோயும், அயல் நாடுகளிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யத் தக்க பகையும் தன்னிடம் சேராமல் இனிது நடப்பதே நாடாகும். 734
5.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
மாறுபட்ட கொள்கைகளையுடைய பல் வகையான கூட்டங்களும், உடனிருந்தே பாழ்படுத்தும் உட்பகையும், அரசனைத் துன்புறுத்தும் கொலைத் தொழில் பொருந்திய குறும்பரும் இல்லாததே நாடாகும். 735
6.கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
பகைவரால் கெடுதி அடையாததாய், அங்ஙனம், கெட்டாலும், செழுமையில் குன்றாததாய் உள்ள நாடே எல்லா நாட்டிலும் சிறந்த நாடு என்று அறிஞர் கூறுவர். 736
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
நிலத்தின் மேல் உள்ள நீர், நிலத்தின் கீழ் உள்ள ஊற்று நீர் ஆகிய இருவகை நீர் நிலைகளும் வாய்ப்பு உடைத்தாக விளங்கும் மலையும், அந்த மலையிலிருந்து பெருகி வரும் ஆற்று நீரும், வலிய கோட்டையும் நாட்டுக்குச் சிறந்த உறுப்புக்களாகும்.
இருபுனல்-பூமிக்கு மேலிருந்தும், அடியிலிருந்தும் கிடைக்கத் தக்க இருவகை நீர்; மழை நீர், ஊற்று நீர் என்றும் கூறலாம். வருபுனல்-ஆற்று நீர்; வல்லரண்-உறுதி வாய்ந்த கோட்டை; உறுப்பு-அவயவம். 737
8.பிணிஇன்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து.
நோயில்லாதிருத்தல், செல்வமுடைமை, விளைவுடைமை, இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். 738
9.நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம்தரும் நாடு.
தேடி வருந்தாமல் எளிதில் கிடைக்கத் தக்க செல்வத்தை யுடைய நாடுகளே சிறந்த நாடுகள் என்று நூலோர் சொல்லுவர்: தேடி முயன்றே பொருள் பெறத் தக்க நாடுகள் சிறந்த நாடுகள் ஆக மாட்டா.
நாடா வளம்-தேடி வருந்தாமல் எளிதில் கிடைக்கத் தக்க செல்வம்; நாட-தேட 739
10.ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.
மேற்சொன்ன வளங்களெல்லாம் உடையதாக இருந்தாலும், வேந்தனோடு ஒற்றுமையாக வாழ இயலாத குடிகளையுடைய நாடு, பயன் சிறிதும் இல்லாத நாடே ஆகும்.
வேந்து அமைவு என்பதற்குக் குடிகள் அரசனிடம் அன்புடையராதலும், அரசன் குடிகளிடம் அருளுடையனாதலும் ஆகிய இரண்டும் அடங்கும் என்று பரிமேலழகர் விளக்கம் தருவர். 740
75. அரண்
1.ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.
அரண்-பகைவரால் துன்பம் நேர்ந்த போது அரசனுக்கும், சேனைக்கும் பிறருக்கும் பாதுகாப்பாக இருப்பது; ஆற்றுபவர்- பகைவர் மேல் படையெடுத்துச் செல்பவர்; போற்றுபவர்- தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர். 741
2.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிழலும், மலையும், அழகிய நிழலையுடைய காடும் உடையதே அரணாவது.
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய இவை நால்வகை அரண்களாகும். 742
3.உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
உயர்வு, அகலம், உறுதி, பகைவர் அணுகுவதற்கு அருமை ஆகிய இந்நான்கும் பொருந்தியதே அரண் என்று நூலோர் கூறுவர்.
உயர்வு-ஏணியாலும் அடைய முடியாது; அகலம்-அடிப் பாகம் அகன்றிருத்தல்; திண்மை-உறுதி; அருமை-பொறி முதலியவைகளால் நெருங்க முடியாத அருமை; இது மதிலரணின் சிறப்புக் கூறுகிறது. 743
4.சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
பெரிய இடத்தை உள்ளடக்கிக் காக்க வேண்டிய இடம் சிறியதாய்த் தன்னை எதிர்த்து வந்த பகைவர் தம் ஊக்கத்தைக் கெடுக்க வல்லது அரண் ஆகும்.
சிறுகாப்பு-காக்க வேண்டிய இடம் சிறியதாய் இருத்தல்; ேரிடம்-கோட்டைக்குள் இருப்போர் துன்பின்றி இருத்தற்குரிய அகன்ற இடம். 744
5.கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
எதிரியால் கைப்பற்றப்படுவதற்கு அருமையுடையதாய்ப் பல்வகை உணவுப் பொருள்களையும் தன்னகத்தே உடையதாய் உள்ளிருந்து போர் புரிதற்கு எளிதாகிய தன்மையுடையது அரண்.
கூழ்-உணவு, நீரது-தன்மையுடையது. 745
6.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
கோட்டைக்குள்ளே தங்கியிருப்பவர்கட்கு இன்றியமையாது வேண்டிய எல்லாப் பொருள்களும் குறைவறப் பெற்றதாய், போர் நிகழும் போது உள்ளிருந்து போர் புரிந்து காத்தற்குரிய சிறந்த வீரர்களையும் உடையது அரண். 746
7.முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
கோட்டையை முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் கோட்டைக்கு வெளியே இருந்து போர் செய்தும், கோட்டை மதில்களைப் பல்வகைச் சூழ்ச்சிகளால் துளைத்தும், இடித்தும் வேறு என்ன செய்தும் கைப்பற்ற முடியாத அருமையுடையது அரணாகும்.
அறைப்படுத்தல்-பல்வகைச் சூழ்ச்சிகளால் கோட்டையைக் கடக்க முயலுதல், சதி செய்தல், கீழறுத்தல். 747
8.முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
கோட்டையை முற்றுகையிட வந்து சூழ்ந்து கொண்டுள்ள பகைவரை முற்றுகையிடா வண்ணம் தடுத்துத் தாக்க வல்லதும், கோட்டைக்குள் இருப்போரை வெற்றி பெறுமாறு செய்ய வல்லதும் அரண் ஆகும்.
முற்றாற்றி முற்றியவர்-கோட்டையை முற்றுகையிடச் சூழ்ந்து கொண்டுள்ள பகைவர்; பற்றியார் பற்றாற்றி. கோட்டையைப் பற்றாகக் கொண்டுள்ளவரை அந்தக் கோட்டையை விடாமல் இருக்கச் செய்து. 748
9.முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.
கோட்டையை முற்றுகையிடும் பகைவர் அழியும்படியாகக் கோட்டைக்கு உள்ளிருப்போர் பலப் பல வீரச் செயல்களைப் புரிந்து சிறக்கும் மாட்சியை உடையது அரணாகும்.
முனைமுகம்-போர்முனை; மாற்றலர்-பகைவர்; சாய- இறந்து பட; வினைமுகம்-(கோட்டைக்குள்ளே தங்கியுள்ள வீரர்கள் புரியும்) வினை வேறுபாடுகள்; வீறு எய்தல்-பலப்பல பொறிகளைக் கொண்டு பகைவரை எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் முதலிய போர்ச் செயல்களைச் செய்து சிறப்புறுதல்; வீறு-சிறப்பு: மாண்டது. மாட்சிமைப்பட்டது. 749
10.எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
மேற்சொன்ன எத்தகைய மேன்மைகளையெல்லாம் பெற்றிருந்த போதிலும் போர் புரியும் திறமை இல்லாதாரிடத்தில் உள்ள அரண் பயனில்லாதது ஆகும். 750
76. பொருள் செயல் வகை
1.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருளாகப் பலராலும் மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லது வேறு சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை.
பொருள்-செல்வம்; பொருளல்லவர்-மதிக்கப்படாதார்; அறிவில்லார், குணத்தால் இழிந்தவர், நோயாளர், தொண்டுக் கிழவர், பகைவர் இன்னோரன்னர். 751
2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
எல்லாரும் எள்ளுவர்-தாய், மனைவி, மக்கள் முதலியோர், அனைவரும் இகழ்வர்; எல்லாரும் செய்வர் சிறப்பு-பகைவர், அயலார் முதலிய அனைவரும் புகழ்வர். சிறப்புச் செய்தல்- புகழ்ந்து பேசுதல், மகிழ்ந்து வரவேற்றல், உபசரித்தல் முதலியன. 752
3.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பொருள் என்று பலராலும் புகழப்படும் அணையாத விளக்கு ஒருவர் செல்ல எண்ணும் இடங்களுக்கெல்லாம் அவரை அழைத்துச் செல்வதோடு, ஆங்காங்கே பகை என்னும் இருள் சூழ்ந்திருப்பினும், அதனை அடியோடு போக்கி விடும்.
பொய்யா விளக்கு-அணையாத விளக்கு; பொருள் என்பது அழியத் தக்கதாக இருப்பினும் தன்னை உடையவரின் எண்ணத்தை முடித்து வைக்கும் இயல்புடையதாக இருப்பதால் அதனைப் 'பொய்யா விளக்கு' என்றார். 753
4.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
பொருளைத் தொகுத்தற்குரிய வழியை அறிந்து எவர்க்கும் எத்தகைய துன்பத்தையும் விளைவிக்காமல் தேடிய பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும். 754
5.அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
ஒருவர் பொருள் திரட்டத் தொடங்கும் போது அப்பொருளை ஏழைகளிடமிருந்து பெற நேரினும், தமக்குச் சமமானவரிட மிருந்து பெற நேரினும், அவர்கள் உள்ளம் துன்புறா வண்ணம் அருள் உள்ளத்தோடு அதனை அவர்களிடமிருந்து பெறுதல் வேண்டும். அவர்கள் அப்பொருளை அன்போடு தருகின்றனரா என்று எண்ணிப் பார்த்துப் பெறுதல் வேண்டும். இவ்விதம் வாராத பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கி விட வேண்டும்.
அருள்-தாழ்ந்தோர்மாட்டு உயர்ந்தோர் காட்டும் இரக்க குணம்; அன்பு-சமத்துவமான நிலையிலிருப்போரிடமிருந்து வெளிப்படும் இன்போடு கூடிய உள்ள நெகிழ்ச்சி; புல்லுதல்-பொருந்துதல், தங்குதல்; புரளவிடல்-நீக்கி விடுக, போக விடுக. 755
6.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
இயல்பாகக் குடிமக்கள் வரியாகச் செலுத்தும் பொருளும், சுங்கப் பொருளும், தன் பகைவரிடமிருந்து திறையாகக் கொள்ளும் பொருளும் ஆகிய இவை அரசனுக்குரிய பொருள்களாகும்.
உறுபொருள்-குடிமக்கள் நிலவரியாக ஆறில் ஒரு பங்கு தரும் பொருள். தொகுத்து வைத்தார் இல்லாமற் போக, நெடுங்காலம் நிலத்தின் கண் இருந்து பின் கண்டெடுத்த பொருள்; சந்ததி அற்றுப் போக அரசனிடம் வந்து சேர்ந்த பொருள் என்றும் கூறுவர். உல்கு பொருள்-சுங்கப் பொருள், சுங்கப் பொருளாவது, நிலம் மூலமாகவும். நீரின் மூலமாகவும், ஒரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குச் செல்லும் பொருளுக்கு அரசன் தீர்வையாகப் பெறும் பொருள்: ஒன்னார்- பகைவர்; தெறு பொருள்-திறைப் பொருள்: திறை-கப்பங் கட்டுதல். 756
7.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
அன்பென்னும் தாயால் பெற்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை பொருட்செல்வமாகிய செவிலித் தாயால் வளரும்.
அருள்-எத்தகைய தொடர்பும் கருதாமல் யாவரிடத்தும் தோன்றத் தக்க இரக்க குணம்; இது தொடர்பு பற்றி வரும் அன்பின் முதிர்ச்சியால் உண்டாவது. ஆதலால், அன்பாகிய தாயிடமிருந்து பிறந்த குழந்தை என்றும், இந்த அருட்குணம் வளர்வதற்குப் பொருள் இன்றியமையாததாக இருப்பதால், பொருளைச் 'செல்வச் செவிலி’ என்றும் கூறினர்; செவிலி- வளர்ப்புத் தாய். 757
8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன் கையில் பொருள் வைத்துக் கொண்டு ஒன்றைச் செய்வானுடைய செயல், சமவெளியில் நிகழும் யானைப் போரை ஒருவன் மலையின் மீது இருந்து கொண்டு அச்சமும், வருத்தமும் சிறிதும் இன்றிக் கண்டு இன்புறுதற்குச் சமம் ஆகும்.
தன்கைத்து-தன் கையினிடத்தில்; ஒன்று உண்டாகச் செய்வான்-ஒரு தொகைப் பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்பவன். 758
9.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரியது இல்.
ஒருவன் பொருளைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்; தன் பகைவரின் செருக்கினைக் கெடுக்க வல்ல கூர்மையான ஆயுதம் அதனைப் போல் வேறொன்றும் இல்லை.
பொருளைச் செய்தல்-பொருளைத் தொகுத்து வைத்துக் கொள்ளுதல்; செறுநர்-பகைவர்; செருக்கு-பெருமிதம், அகந்தை; எஃகு-ஆயுத வகை; கூரியது-கூர்மையானது. 759
10.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
நல்ல வழியில் வந்த பொருளை மிகவும் அதிகமாகத் தொகுத்துக் கொண்டவருக்கு மற்றை அறன், இன்பம் ஆகிய இரண்டும் எளிதில் பெறக்கூடிய பொருள்கள் ஆகும்.
ஒண்பொருள்-ஒள்ளிய பொருள். நல்வழியில் தொகுத்த சிறந்த பொருள்; காழ்ப்ப-மிகுதியாக; காழ்த்தல்-முதிர்தல்; எண்பொருள்-எளிய பொருள்கள்; ஏனை என்பது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் பிறவாகிய அறனும் இன்பமும் ஆகும். 760
77. படைமாட்சி
1.உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் பகுதிகளும் நிறைந்ததாய்ப் போரின் கண் நேரத் தக்க எத்தகைய இடையூறுகட்கும் அஞ்சாததாய் நின்று, பகையை வெல்லத் தக்க படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாகும்.
உறுப்பு-அங்கம்; இங்கே இச்சொல் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் பகுதிகளையும் குறிக்கும். ஊறு- துன்பம், இடையூறு; வெறுக்கை-செல்வம். 761
2.உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
படைபலம் குறைந்து அரசனுக்குப் போரின் கண் துன்பம் நேர்ந்த போது தான் அழிந்து, சிறிதாயிருந்தாலும் எத்தகைய இடையூறுகளுக்கும் அஞ்சாது போர் புரியும் உள்ளத் துணிவு, பரம்பரை பரம்பரையாகப் படைக்கலப் பயிற்சி புரிந்து வரும் மூலப் படைகளுக்கு அல்லாது மற்றப் படைகளுக்கு இல்லை. உலைவு - துன்பம், கேடு; ஊறு- இடையூறு; வன்கண்-அஞ்சா நெஞ்சமுடைமை; தொலைவிடம்-படைகள் அழிந்து குறைவாக உள்ள நிலை; தொல்படை-வழி வழியாகப் போர்த் தொழில் பயிற்சி பெற்று வந்த பெருமை வாய்ந்த மூலப்படை.
மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படைகளுள்ளும் மூலப்படையே சிறப்புடையது. 762
3.ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
எலியாகிய பகை திரண்டு கடல் போல் ஒலித்தாலும், நாகப் பாம்புக்கு என்ன நேரிடும்? அந்நாகம் மூச்சு விட்ட அளவில், அந்த எலிக்கூட்டம் அழிந்தொழியும்.
அது போலப் பெரும் படையாயினும், வலிமையற்றதாயின் ஆண்மையுடைய ஒருவன் வீரத்துக்கு ஆற்றாது. அஃது அழிந்தொழியும்.
ஒலித்தல்-கூச்சலிடல்; உவரி-கடல்; நாகம்-நல்ல பாம்பு என்னும் கொடிய விடமுள்ள பாம்பு; உயிர்த்தல்-மூச்சு விடுதல். அளவினால் பயனில்லை; படைக்கு ஆண்மையே சிறந்தது என்பது கருத்து. 763
4.அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
போரின்கண் எளிதில் வென்று அழிக்க முடியாததாய்ப் பகைவராலும் சூழ்ச்சி செய்து ஒழிக்கப்படாததாய் வழிவழி வந்த அஞ்சாமையுடையதே படை.
அறைபோகுதல்-பகைவர் தம் சூழ்ச்சியால் நிலை குலையச் செய்தல்; வழிவந்த வன்கண்மை-பரம்பரை பரம்பரையாக வரும் ஆண்மைத் தன்மை. 764
5.கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
எமனே கோபங்கொண்டு தன் மேல் எதிர்த்து வரினும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் வல்லமை உடையதே படையாகும் 765
6.மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், புகழ் பெற்ற முன்னோர் வழி வந்த நன்னடத்தை, தம் தலைவரால் நம்பித் தெளியப் பெற்ற தன்மை ஆகிய நான்கு குணங்களும் படைக்குப் பாதுகாப்பாகும்.
மறம்-வீரம்; மானம்-இழிவு நேர்ந்த போது உயிர் வாழ எண்ணாத தன்மை; மாண்ட-மாட்சிமைப்பட்ட; வழிச்செலவு- பாரம்பரியமாக வரும் குணம்; தேற்றம்-தெளிவு, நம்பிக்கை; ஏமம்-பாதுகாப்பு. 766
7.தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.
தன்னை எதிர்த்து வரும் படையை எதிர்த்து வெல்லும் தன்மையை அறிந்து, பகைவனுடைய தூசிப் படையை எதிர்த்துச் செல்வதே படையாகும்.
தார்-முன்னே கொடி தாங்கிச் செல்லும் படை, அதாவது தூசிப் படை; தானை-சேனை; தலை வருதல்-முன் வருதல்; போர் தாங்கும் தன்மை-இன்ன வகைப் படை வகுப்போடு தன்னை எதிர்த்து வரும் படையை இன்ன வகையால் எதிர்த்து வெல்ல வேண்டும் என்னும் தன்மை. 767
8.அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
பகைவனை எதிர்த்துத் தாக்கும் வன்மையும், எதிர்த்த படையை எதிர்த்து நின்று முறியடிக்கும் வல்லமையும் இல்லையானாலும், படை தன் தோற்றப் பொலிவால் பெருமை பெறும்.
படைத்தகை-படையின் தோற்றப் பொலிவு. அஃதாவது யானை, குதிரை, தேர், காலாள் முதலியவற்றை ஒழுங்குபட நிறுத்தி வைத்து அழகினை மிகைப்படுத்திக் காட்டுதல்; பாடு-பெருமை. 768
9.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
படைபலம் வரவரக் குறைந்து காணப்படுதலும், நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லாமல் இருக்குமானால், அத்தகைய படை வெற்றி பெறும்.
சிறுமை-இழிவாகக் காணப் பெறும் தோற்றம்; செல்லாத் துனிவு-உள்ளத்திலிருந்து என்றும் நீங்காத வெறுப்பு; வறுமை -தரித்திரம். 769
10.நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இவ்வழி இல்.
ஒரு படையானது நெடுங்காலமாக உள்ள வீரர் பலரை உடையதாக இருந்தாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாத போது அந்தப் படை இல்லாததற்கே சமமாகும். 770
78. படைச் செருக்கு
1.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
என் ஐ-என் தலைவன்; தெவ்விர்-பகைவர்களே; முன் நின்று- எதிர்த்துப் போர் புரிந்து; கல் நின்றவர்-மண்ணில் புதைக்கப் பெற்று நடுகல் வடிவாய் நிற்பவர்.
இங்ஙனம் வீரன் ஒருவன் தன் ஆண்மையைப் பகைவன் முன் உயர்த்திக் கூறுதலை 'நெடுமொழி வஞ்சி’ என்பர். 771
2.கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
காட்டில் பதுங்கியிருக்கும் ஒரு முயலைக் குறி பார்த்து அந்தக் குறி தவறாமல் அதைக் கொன்று வீழ்த்திய அம்பினை ஒருவன் பெற்றிருப்பதைக் காட்டிலும், வெட்ட வெளியிலே நின்று தன்னை எதிர்க்க வரும் ஒரு யானையைக் குறி பார்த்து எறிந்த வேல் குறி தவறியதாயினும், அந்த வேலைக் கையில் தாங்கிச் செல்வது சிறந்தது. -
ஒரு சிறிய தொழிலைச் செய்து, அதில் வெற்றி பெற்றுப் பெருமையடைய முயலுவதை விடப் பெரிய செயல்களைச் செய்து முடிக்கத் தொடங்கி, வெற்றி பெறாவிட்டாலும், அந்தப் பெருநோக்கமே சிறந்தது என்பது இக்குறளிள் கருத்து. 772
3.பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவரை அஞ்சாது எதிர்த்துப் போர் புரியும் வீரச் செயலைப் பெருமை மிக்க ஆண் தன்மை என்று அறிஞர் பாராட்டுவர். தன்னை எதிர்த்த அந்தப் பகைவனுக்கு ஏதோ ஒரு காரணத்தால் துன்பம் நேர்ந்த போது, அதையே நல்ல வாய்ப்பாகக் கொண்டு, அவனை வெல்ல எண்ணாமல், அவனுக்கு உதவி புரியும் பெருந்தன்மையை ஆண்மையின் கூர்மை என்பர். அஃதாவது அந்த ஆண்மையிலும் சிறந்ததோர் ஆண்மை என்று அறிஞர் கூறுவர்.
ஊராண்மை-உதவி செய்யுந்தன்மை; அதன் எஃகு-அந்தப் பேராண்மையினும் கூர்மையுடையது. அஃதாவது சிறப்பு வாய்ந்தது; எஃகு-கூர்மை.
இலங்கை வேந்தன் போரில் தோற்றுத் தானை முழுதும் இழந்து, தனியனாக நின்ற போது 'இன்று போய் நாளை வா’ என்ற இராமன் செயலை ஊராண்மைக்குப் பரிமேலழகர் உதாரணம் காட்டுகிறார். இதைத் 'தழிஞ்சி’ என்று இலக்கணம் வல்லார் கூறுவர். 773
4.கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
தன் கையில் தாங்கியிருந்த வேலை மேல் வந்த யானையின் மீது எறிந்து கொன்று,, வருகின்ற யானைக்கு வேறு வேலை தேடி வருகின்றவன் தன் மார்பின்கண் தைத்திருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்ச்சி கொள்வான்.
களிறு - ஆண்யானை; மெய் - உடம்பு: இங்கே இச்சொல் மார்பினைக் குறிக்கும்; பறியா - பறித்து, பிடுங்கி. 774
5.விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு?
பகைவனைச் சினந்து நோக்கிய கண், அப்பகைவன் குறிபார்த்து வேலைக் கொண்டு எறிய முயலும்போது தன் இமைகளைச் சிறிது மூடித் திறந்தாலும் அஃது அஞ்சாமையையுடைய அந்த மாவீரனுக்குத் தோல்வியை யாகும்.
விழித்த கண் - சினந்து நோக்கிய கண்கள்: அழித்து இமைத்தல் - இமைகளைச் சிறிது மூடித் திறத்தல், ஒட்டு - பகைவனுக்கு அஞ்சி ஒடுதல்; வன்கணவர் - வீரத்தில் சிறந்தவர். 775
6.விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
வீரன் தன் வாழ்நாட்களை எண்ணிப் பார்த்து அந்த நாட்களுள் தன் மார்பிலும் முகத்திலும் புண்படாத நாட்களைப் பயனற்ற நாட்களாகவே வைத்து எண்ணிப் பார்ப்பான்.
விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்ட புண்கள்; வழுக்கினுள் - பயனற்ற நாட்களும். 776
7.சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
எண் திசையும் பரந்து நிற்கும் புகழை விரும்பி உயிரை விரும்பாத வீரர் தம் காலில் வீரகண்டையை அணிந்து கொள்வது அவருக்கு அழகு செய்யும் தன்மையுடையதாகும். (அவர்களைத் தவிர ஏனையோர் கழலணிதல் அழகுடையதன்று.)
கமலும்-உலக முழுதும் சூழ்ந்திருக்கும்; இசை-புகழ்; வேண்டா உயிரார்-உயிரை வேண்டாத வீரர்; கழல்-வீரகண்டை; யாப்பு- அணிந்து கொள்ளுதல்; காரிகை-அழகு; நீர்த்து-தன்மை யுடையது. 777
8.உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.
போர் நேர்ந்தால் தம் உயிரின் பொருட்டு அஞ்சாது, போர் புரியத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தாம் போர் புரியும் சிறப்பில் சிறிதும் குன்றாதவர் ஆவர்.
உறின்-நேரின்; உறுதல்-தேர்தல் அல்லது தங்குதல்; மறவர்- வீரர்; செறினும்-சினந்தாலும்; சீர்-தம் இயல்பான போர் புரியும் தன்மை. 778
9.இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
போர் நிகழ்வதற்கு முன்னர்த் தாம் கூறிய சூளுரை தவறாதபடி போர் புரிந்து உயிர் துறக்க வல்ல வீரரை அவர் தம் சூளுரை தவறியதை எடுத்துக் காட்டிப் பழித்துரைக்க வல்லவர் யாவர்? (அத்தகையோர் புகழ்தற்கே உரியர் என்பது கருத்து. )
இழைத்தது-சூளுரைத்தது; 'யான் இன்னது செய்யேனாயின் இன்னவர் ஆகுக’ எனச் சபதங் கூறுதலைச் சூளுரை அல்லது வஞ்சினம் என்பர். இகவாமை-தப்பாமை; பிழைத்தல்-தவறு இழைத்தல்; ஒறுக்கிற்பவர்-தண்டிப்பவர். 779
10.புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
புரந்தார்-காப்பாற்றியவர், இங்கே அரசர்; சாக்காடு-சாவு இரந்து கோள் தக்கது-வேண்டிப் பெற்றுக் கொள்ளத் தக்கது. 780 .
79. நட்பு
1.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நட்பைப் போலச் செய்து கொள்ளுதற்கு அருமையானவை எவை உள்ளன? அத்தகைய நட்பைப் பெற்றுக் கொண்டால் அது போலத் தொழிலுக்கு அரிய காவலாய் இருப்பவை எவை உள்ளன?
யா-எவை; வினை-செயல், தொழில்; காப்பு-காவல். 781
2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
அறிவுடையார் நட்புக்கள் பிறை மதி போன்று நாள் தோறும் வளர்ந்து வரும் தன்மையுடையன; அறிவிலார் நட்புக்கள் முழு மதி நாளுக்குநாள் தேய்ந்து வருதல் போல நாள் தோறும் குறையும் தன்மையுடையன.
நிறைநீர-நிறைந்து வரும் தன்மையுடையன; நீர-தன்மையுடையன; நீரவன் என்னும் சொல் இங்கே அறிவுடையவர் என்னும் பொருளில் வந்தது; கேண்மை - நட்பு; மதிபின் நீர-முழு மதி போன்று தேய்ந்து வரும் தன்மை உடையன; பேதையார்-அறிவில்லாதவர். 782
3.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
நல்ல நூலில் உள்ள அரிய கருத்துக்கள் படிக்குந் தோறும் கற்போர் உள்ளத்தே புதுமையாகத் தோன்றி இன்பந்_தருதல் போன்று நற்குணமுடையார் நட்பானது பழகுந்தோறும் வளர்ந்து இன்பத்தைத் தரும்.
நவிலல்-கற்றல்; நூல்நயம்-நூலில் உள்ள அரிய கருத்துக்கள், அழகுகள் முதலியன; பயிலுதல்-பழகுதல்; பண்பு-நற்குணம்; தொடர்பு-நட்பு. 783
4.நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
நட்புச் செய்தல் ஒருவரோடொருவர் எள்ளி நகையாடுதற் பொருட்டு அன்று; தன் நண்பரின் அளவுக்கு மீறிய நடத்தையைக் கண்டால், கண்டித்து அறிவுரை கூறி திருத்துவதற்கே ஆகும்.
மிகுதி-அளவுக்கு மீறிய நடத்தை; அஃதாவது பழியும் பாவமும் விளையத் தக்க பொருந்தாச் செயல்கள்; மேற்சென்று-முன்னதாகச் சென்று; இடித்தல்-கண்டித்துக் கூறுதல். 784
5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
நட்பாவதற்குப் பலப்பல நாட்கள் சேர்ந்து பழகுதல் வேண்டா; ஒரு நாள் கண்டாராயினும், அன்றிக் காணாமலேயே ஒருவருக்கொருவர் குண நலம் அறிந்திருந்தாராயினும் அமையும். அவ்விருவர் தம் ஒத்த உணர்ச்சி மட்டும் இருந்து விட்டால், அந்த உணர்ச்சியே அவர்கட்கு நட்பாகிய உரிமையை உண்டாக்கும்.
புணர்ச்சி பழகுதல்-சேர்ந்து பலப்பல நாட்கள் பழகுதல்; உணர்ச்சி-அறிவு அல்லது எண்ணம்; கிழமை-உரிமை.
குறிப்பு: கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் நட்பு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 785
6.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
ஒருவர் முகத்தைக் கண்டு மற்றொருவர் சிரித்து மகிழ்வது மட்டும் நட்பாகாது. அவர்கள் இருவரும் உள்ளத்தோடு உள்ளம் கலந்து உறவாடி மகிழ்வதே நட்பாகும். 786
7.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழைப்பதாம் நட்பு.
அழிவினவை-கேட்டினைத் தரும் தீயநெறிகள்' அழிவின் + நவை என்று பிரித்து அழிவைத் தரும் குற்றங்கள் என்றும் கூறலாம்; ஆறு-நல்வழி; அல்லல்-துன்பம்: உழத்தல்- வருந்துதல். 787
8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
உடுத்திருந்த ஆடை ஒருவன் உடம்பினின்று நெகிழ்ந்த போது அவன் கை உடனே விரைந்து அந்த நெகிழ்ந்த ஆடையைத் தாங்கிக் கொள்வது போன்று நண்பனுக்குத் துன்பம் நேர்ந்தால், அப்போதே சென்று அந்தத் துன்பத்தைப் போக்குவதே நட்பாகும். 788
9.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்பினுக்குச் சிறந்த நிலை எது என்றால், எக்காலத்தும் மாறுபாடில்லாமல் இயலும் வழிகளிலெல்லாம் உதவி செய்து தாங்கும் உறுதி வாய்ந்த நிலை ஆகும்.
வீற்றிருக்கை-சிறப்பாகத் தங்கியிருக்கும நிலை; கொட்பு- திரிபு, தளர்ச்சி, நிலையின்மை. 789
10.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
இவர் எமக்கு இத்துணை அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மை யுடையோம் என்று ஒருவரை ஒருவர் சிறப்பித்துப் பேசிக் கொண்டாலும், நட்பானது சிறுமைப் பட்டதாகத் தோன்றும். 790
80. நட்பாராய்தல்
1.நாடாது கட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
நட்புச் செய்யும் குணமுடையவர்க்கு ஒருவரோடு நட்புச் செய்த பின், அந்த நண்பனை விடுதல் முடியாது. ஆதலால், ஆராயாது நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறில்லை.
வீடுஇல்லை-விடுதலை இல்லை. 791
2.ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.
குணத்தையும், செயலினையும் பல முறையும் பல வகைகளாலும் ஆராய்ந்து கொள்ளாதவன் கொண்ட நட்பு, முடிவில் தான் இறத்தற்குக் காரணமாகிய துயரத்தை அவனுக்குத் தந்து விடும். 792
3.குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு.</poem>}}
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தையும், குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
குன்றா இனன் என்பதற்குக் 'குற்றமற்ற சுற்றம்’ என்றும் பொருள் கூறுவர்; யாக்க-கட்டுக, சேர்த்துக் கொள்ளுக. 793
4.குடிப்பிறந்து தன்கண் பழிகாணு வானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.
நல்ல குடும்பத்திற் பிறந்து தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு அஞ்சும் குணமுடையவனை, அவன் விரும்பத் தக்க பொருள்களைக் கொடுத்தேனும் நட்பாகக் கொள்ளுதல் சிறந்தது. 794
5.அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
நல்லதல்லாத ஒன்றைத் தன் நண்பன் செய்யக் கண்டால், அவன் அவ்வாறு செய்ததற்காக அவனே வருந்தி அழக் கூடிய வகையில் எடுத்துச் சொல்லித் தடுத்து, அவன் அவ்வாறு செய்யாதபடி அவனுக்கு உறுதி மொழிகளை வற்புறுத்திக் கூறி, உலக வாழ்க்கையும் அறிந்து உணர்த்த வல்லவர்களுடைய நட்பினை ஆராய்ந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
அல்லது-நல்லது அல்லாதது; அழச்சொல்லுதல்-எண்ணி வருந்தச் செய்தல்; 'இடித்து’ என்பது வற்புறுத்திக் கூறுதலைக் குறிக்கும் சொல்; வழக்கறிதல்-முன்னோர் காட்டிச் சென்ற நல்வழியை அறிந்திருத்தல். 795
6.கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
ஒருவனுக்குக் கேடு வந்த காலத்தும் அதனால் அவனுக்கு ஒரு வகை நன்மையுண்டு. அந்தக் கேடு அவன் நண்பர்களின் குணநலன்களைச் செவ்வையாக அளந்து பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு ஓர் அளவுகோலாகப் பயன்படும்.
கேடாகிய அளவுகோல் நண்பர்களின் உள்ளங்களை ஆய்ந்து அறிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதால் கேடும் ஒருவனுக்கு ஒருவகையில் நன்மையே தருகின்றது என்று வள்ளுவர் கூறுகின்றார். 796
7.ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
அறிவில்லாதவர்களுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கியிருப்பது ஒருவனுக்கு இலாபமான செயல் என்றே சொல்லுதல் வேண்டும்.
ஊதியம்-இலாபம்; பேதை-அறிவில்லாதவன்; கேண்மை-நட்பு. 797
8.உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
ஊக்கம் குறைதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருத்தல் வேண்டும்; அது போலத் தனக்குத் துன்பம் வருங் காலத்துத் தனக்குத் துணையாக இராமல் தன்னைக் கை விடுவார் நட்பினையும் கொள்ளாதொழிக.
உள்ளம் சிறுகுவ-ஊக்கம் குறைவதற்குக் காரணமாக உள்ள செயல்கள்; ஆற்றறுத்தல்-கை விடுதல். 798
9.கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
ஒருவனுக்குக் கேடுவருங் காலத்து அவனை விட்டு நீங்குவாரது நட்பானது அவன் தான் இறக்கும் போது அதை எண்ணிப் பார்த்தாலும், அவன் உள்ளத்தைச் சுடும்.
கை விடுதல்-விட்டு நீங்குதல்; அடுங்காலை-இறக்கும் போது; அடுதல்-சுடுதல்; எமனால் கொல்லப்படுதல். 799
10.மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈந்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
குற்றமற்றவர் நட்பினைத் தேடி அடைக; ஒத்த பண்பு இல்வாதவர் நட்பினை ஏதாவது ஒன்றைக் கொடுத்தாயினும் விட்டு நீங்குக.
மருவுதல்-சேர்தல்; ஒருவுக- நீங்குக; ஒப்பிலார் நட்பு-ஒத்த பண்பு இல்லாதவர் நட்பு. 800
81. பழைமை
1.பழைமை எனப்படுவ தியாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால், அது பழகியவர் உரிமையால் செய்வனவற்றைக் கீழ்ப் படுத்தாமல் அதற்கு உடன்படும் நட்பாகும்.
கிழமை-உரிமை; கீழ்ந்திடா நட்பு-தாழ்வு படுத்தாமல் அதற்கு உடன்படும் நட்பு; கீழ்ந்திடல்-சிதைத்தல், கீழ்ப்படுத்துதல்.
உரிமையால் செய்வன: 1. ஒரு செயலைக் கேளாது செயல். 2. கெடும் வகை செயல். 3. தமக்கு வேண்டுவன தாமே கொள்ளுதல். 4. பணிவு, அச்சம் முதலியன இன்மை. இவை முதலாயன என்பர் பரிமேலழகர். 801
2.நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
நட்பு என்பதற்குச் சிறந்த அங்கமாக இருப்பது நண்பர் உரிமை பாராட்டுவதே ஆகும் அந்த உரிமைக்கு அன்போடு இடங் கொடுத்தல் சான்றோரின் கடமையாகும்.
உறுப்பு-அவயவம், இங்கே 'நட்புக்கு இன்றியமையாத ஒரு பகுதி' என்பது பொருத்தமான பொருள். கெழுதகைமை-உரிமை, உப்பு-இனிமை. 802
3.பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
தமக்கு உடன்பாடில்லாததாக இருப்பினும் நட்பின் உரிமை பற்றி ஒருவர் செய்த செயலைத் தாம் செய்தாற் போல எண்ணி, அந்தச் செயலுக்கு உடன்படாவிட்டால் பழகிய நட்பு என்ன பயனைத் தரும்?
செய்தாங்கு அமைதல்-தாம் செய்தது போன்றே எண்ணி ஏற்றுக் கொள்ளுதல்; அமையாக் கடை-உடன் படாவிடின். 803
4.விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.
நண்பர் உரிமை பற்றித் தம்மைக் கேளாமலே ஒன்றைச் செய்தால் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடு போற்றி, அதற்கு உடன்பட்டிருப்பர் அறிஞர்.
விழைதகையால்-விரும்பும் தன்மையால்; வேண்டி-விரும்பி; கெழுதகையால்-உரிமை பற்றி. 804
5.பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
எண்ணி வருந்தத் தக்க செயலை நண்பர் செய்தாராயின் அஃது அவருடைய அறியாமை என்றாவது, அன்றி மிக்க உரிமை என்றாவது உணர்தல் வேண்டும். 805
6.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
நட்பு முறையில் முதிர்ந்து அதன் எல்லைக்கண் நின்றவர்கள் தம்மோடு பழைமையில் மாறாமல் நின்றவர் தம் நட்பினை அவரால் துன்பம் வந்த போதிலும் கை விட மாட்டார்கள் .
எல்லை-நட்பின் அளவு அல்லது வரம்பு; துறவார்-நீக்கி விட மாட்டார்; தொலைவிடத்தும்-துன்பம் நேர்ந்த போதும்; தொலைக்கண் நின்றார்- நெடுங்காலம் தொட்டு நண்பராக இருப்பவர். தொடர்பு-நட்புரிமை. 806
7.அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
அழிவந்த-கேடு விளையத் தக்க; வழிவந்த கேண்மை-தொன்று தொட்டுப் பழகிய நட்பு. 807
8.கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
பழகிய நண்பர் புரிந்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், அதைக் கேளாமல் நட்பின் உரிமையையே பாராட்ட வல்லவர்களுக்கு அந்த நண்பர் தவறு செய்வாராயின், அந்த நாள் ஒரு நன்னாளாகும்.
கேள்-நண்பர்; இழுக்கம்-குற்றம்; நாள்-இங்கே இச்சொல் 'நல்லநாள்’ என்பதைக் குறிக்கும். 808
9.கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
என்றும் பிரியாமல் பழைமை வாய்ந்த நட்பினையுடையவர் தம் நட்பினைக் கை விடாதவரை உலகத்தவர் விரும்பிப் போற்றுவர்.
கெடாஅ-பிரியாத அல்லது நட்பின் தொடர்பு அறாத; உலகு-உலகம் அல்லது உலகத்தில் உள்ள பெரியோர்; தலைப்பிரிதல் -விட்டு நீங்குதல். 809
10.விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பழைய நண்பர் தவறு செய்த போதிலும், அந்த நண்பரிடத்துத் தாம் முன்பு கொண்டிருந்த உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர் தம் பகைவராலும் விரும்புதற்குரியவராவார். 810
82. தீ நட்பு
1.பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
தமக்கு விருப்பமான ஒன்றை உண்ண விரும்புவோர் எவ்வளவு ஆவலோடு அதை அணுகுவாரோ அவ்வளவு அன்போடு வந்து ஒருவர் பழகினாலும் அவர் தீக்குணம் உடையவராக இருந்தால், அத்தகையோர் நட்பு வளர்வதைக் காட்டிலும் தேய்ந்து குறைவதே நல்லது. 811
2.உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
தமக்குப் பயனுள்ள போது நட்புச் செய்து, பயனில்லாத போது விலகிப் போகும் பொருத்தம் இல்லாதவர் தம் நட்பினைப் பெற்றால் வரும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
உறின்-பயன் அடையின்; அறின்-பயன் அற்று விடின்; ஒரூஉம்-விட்டு நீங்கி விடும்; ஒப்பிலார்-பொருத்தம் இல்லாதவர், தகுதியற்றவர்; கேண்மை-நட்பு. 812
3.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
நட்பினால் தமக்கு வரும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பினைக் குறித்துக் கவலை கொள்ளாது பெறுகின்ற பொருளை மட்டும் பெரிதாகக் கொள்ளும் குணம் உடையவரும், பொருளைக் கவரும் திருடரும் தம்முள் ஒப்புமை உடையவராவர்.
அன்பு காரணமாக நட்புக் கொள்ளாமல் பெறும் பயன் காரணமாக நண்பராக இருப்பவர் பொருளைக் கவரும் திருடருக்குச் சமம் ஆவர் என்பது கருத்து.
உறுவது-தமக்குக் கிடைக்கும் பயன்; சீர்தூக்குதல்-அளந்து பார்த்தல்; பெறுவது கொள்வார்-தாம் பெறும் பொருளின் மீதே கண்ணாக இருப்பர்; கள்வர்-திருடர். 813
4.அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போர் இல்லாத காலத்துத் தாங்கிச் சென்று போர் நேர்ந்த போது, போர்க்களத்திலே கீழே தள்ளி விட்டு ஒடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் நட்பைப் பெற்றிருத்தலை விடத் தனிமையாக இருத்தலே சிறந்தது.
அமரகம்-போர் புரியும் இடம்; ஆற்றறுத்தல்-இடையில் கை விடல்; தாங்கிச் செல்வதை ஒழித்துக் கீழே தள்ளி விட்டுச் செல்லுதல்; கல்லா-கல்வி அறிவில்லாத; மா- மிருகம், குதிரை; நமர்-நண்பர்; தலை-சிறந்தது. 814
5.செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
நட்புச் செய்தும், தமக்குப் பாதுகாவலினைத் தாராத கீழ்மக்களது தீய நட்பு ஒருவருக்கு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே நன்று.
ஏமம்-பாதுகாவல்; சாரா-தாராத; புன்கேண்மை-புல்லிய நட்பு, தீய நட்பு. 815
6.பேதை பெருங்கழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
அறிவில்லாதவனுடைய மிகவும் நெருங்கிய நட்பை விட அறிவுடையாரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது.
பேதை-அறிவில்லாதவர்; பெருங்கழீஇ-மிகவும் நெருங்கிய; ஏதின்மை-நட்பற்ற தன்மை;'பகைமை' என்றும் பொருள் கூறுவர். 816
7.நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
அன்பு சிறிதும் இல்லாமல் மேலுக்கு மட்டும் சிரித்து விளையாடும் குணமுடையவர் தம் நட்பினும் பகைவரால் வரும் தீங்குகள் பத்துக் கோடி மடங்கு மேலாகும்.
மேலுக்குச் சிறிது நட்புச் செய்வோரால் வரும் நன்மையினும் பகைவரால் வரும் நன்மை பத்துக் கோடி மடங்கு மிகும் என்றும் பொருள் கூறுவர். 817
8.ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
ஒல்லும்-இயலும்; கருமம்-செயல்; உடற்றுதல்-கெடுத்தல்; சொல்லாடார்- ஏதும் சொல்லாதவராய்; சோரவுடல்-தளர விடுதல், விட்டு விலகுதல். 818
9.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
செய்யும் செயல் வேறாகவும், சொல்வது வேறாகவும் இருப்பாரது நட்பு ஒருவருக்குக் கனவிலும் துன்பத்தைத் தரும்.
இன்னாது-இன்பத்தைத் தராதது; அதாவது துன்பத்தைத் தருவது என்பது பொருள்; மன், ஒ என்னும் இரண்டிற்கும் பொருள் இல்லை; இரக்கங் காரணமாக வந்தன என்றும் சொல்லலாம். 819
10.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
தனியே வீட்டில் உள்ள போது நண்பராய் இருந்து பலர் கூடியுள்ள மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பினைச் சிறிதும் கொள்ளாமல் தடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
எனைத்தும்-எவ்வளவும், ஒருசிறு அளவும்; குறுகுதல்-அடைதல்; ஓம்பல்-தவிர்க, நீங்குக; மனைக்கெழீஇ-வீட்டில் நண்பராக இருந்து; கெழீஇ-நட்புச் செய்து; மன்று-சபை; மன்றம்-பொது இடம்; பழிப்பார்-பழித்துப் பேசுபவர்; தொடர்பு- நட்பு. 820
83. கூடா நட்பு
1.சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே பொருந்தி நடப்பவர் தம் நட்பு, தகுந்த இடம் வாய்க்கும் போது ஓங்கி அடித்தற்குப் பயன்படும் பட்டடையாகும்.
சீரிடம்-தகுந்த இடம்; எறிதல்-ஓங்கி அடித்தல்; பட்டடை-கொல்லன் உலைக் களத்தில் உள்ள ஒரு கருவி; நேரா நிரந்தவர்-உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே பொருத்தி நடப்பவர். அஃதாவது பகை உள்ளத்தோடு ஒழுகுபவர்; நேரா-(உள்ளத்தால்) கூடாதிருந்து; நிரந்தவர்- (தமக்கு வாய்ப்பு நேரும் வரை வெளிக்கு) நண்பராயிருப்பவர்.
விளக்கம்: கொல்லன் உலைக் களத்தில் உள்ள பட்டடை தக்க சமயம் வாய்க்கும் போது ஓங்கி அடித்தற்கு உதவுவது போல் புறத்தே நண்பர் போல் ஒழுகுவார் செய்யும் நட்பு சமயம் நேர்ந்ததும் தம் எண்ணத்தை முடித்துக் கொள்வதற்கே ஆகும். 821
2.இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
உறவினர் போல் இருந்து, உறவினர் அல்லாதவராக இருப்பவர் தம் நட்பானது பொது மகளிரின் மனம் போன்று உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
இனம் போன்று இனம் அல்லார்-ஒத்த உள்ளத்தினர் போல இருந்து ஒவ்வாத எண்ணமுடையவர், உற்றார் போல் இருந்து உற்றாரின் வேறுபட்டிருப்பவர்; மகளிர்-இங்கே இச்சொல் பொது மகளிரையே குறிக்கும். 822
3.பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
பல நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும், மனம் திருந்தி நட்பினர் ஆகுதல் நற்குண மாண்புகள் இல்லாதவர்க்கு இல்லை.
கற்றக் கடைத்தும்-கற்றிருந்த போதிலும்; மன நல்லர் ஆகுதல்-உள்ளத்தால் நட்பினர் ஆகுதல்; மாணார்-குணநலம் இல்லாதவர், பகைவர் எனினும் பொருந்தும். 823
4.முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
முகத்தால் இனியர் போன்று நடித்துச் சிரித்து மனத்தால் இனியர் அல்லாத வஞ்சகரை அஞ்சுதல் வேண்டும். 824
5.மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினாற் தேறற்பாற்று அன்று.
உள்ளத்தால் கலந்து பழகாதவரை அவர் தம் சொல்லைக் கொண்டு ஒரு சிறிதும் நம்புதற்கு இல்லை.
தேறற்பாற்று அன்று-நம்புவதற்கு இல்லை. 825
6.நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
நண்பர் போல் நன்மையானவைகளைச் சொல்லினும் பகைவர் தம் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். 826
7.சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் தம் வணக்கத்தோடு கூடிய சொல்லினை நன்மையாகக் கொள்ளுதல் கூடாது.
சொல் வணக்கம்-வணக்கத்தோடு கூடிய இனிய சொற்கள்; ஒன்னார்கண்-பகைவரிடம்; வில்வணக்கம். வணங்குதல் போன்று தோன்றும் வில்லினது வளைவு.
வில்லினது வணக்கம் தீங்கையே குறிக்கிறது போலப் பகைவருடைய சொல்லில் காணப்படும் வணக்கமும் (பணிவும்) தீங்கையே விளைவிக்கும். ஆதலால், அப்பணிவு மொழியில் மயங்கக் கூடாது என்பதாம். 827
8.தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
தம்மை வணங்குவது போன்று காட்டிக் கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் உயிரைப் போக்குதற்கு உரிய கொடிய கொலைக் கருவி மறைந்திருத்தல் கூடும்; அந்தப் பகைவர் அழுவது போன்று விடும் கண்ணிரும் அத்தன்மை வாய்ந்ததே ஆகும். 828
9.மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
பகைமை தோன்றாதபடி வெளியே மிகுதியாக நட்புத் தோன்றும் படி செய்தே உள்ளத்தே தம்மை இகழும் தன்மை வாய்ந்த பகைவரை மகிழும் வண்ணம் செய்து அவரிடம் நட்புக் கொள்ளுதலில் மட்டும் எச்சரிக்கையாக இருந்து, அவர்தம் நடபு தானே அழிந்து போகும்படி அவரிடம் நெருங்கிப் பழகாமல் இருத்தல் வேண்டும்.
மிகச் செய்தல்-நட்புடையார் போல் மிகுதியாகக் காட்டிக் கொள்ளுதல்; சாப்புல்லல்-அந்த நட்பு ஒழியும்படி நடந்து கொள்ளுதல். 829
10.பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்பு
அகநட்பு ஒரீஇ விடல்.
பகைவர் நமக்கு நட்பினராக ஒழுக வேண்டிய சமயம் நேர்ந்தால், அந்தச் சமயத்திலும் அவரிடம் முகத்தால் மட்டும் நட்புடையாரைப் போல ஒழுகி, மனத்தால் நட்புச் செய்தலைக் கைவிடுதல் வேண்டும். 830
84. பேதைமை
1.பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
பேதைமை என்று சொல்லத் தக்கது ஒன்று உண்டு. அஃது யாதெனின் தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு தனக்கே நன்மை பயப்பவனவற்றைக் கைவிடுதலாகும்.
பேதைமை-யாதும் அறியாமை; ஒன்று-ஒரு குணம்; ஏதம்-குற்றம்; ஊதியம்-நன்மை பயக்கத் தக்கது; போக விடல்-கை விடுதல். 831
2.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
அறியாமை எல்லாவற்றுள்ளும் மிகுந்த அறியாமையாவது தனக்குத் தகாத ஒழுக்கத்தின் கண் ஆசை வைத்தலே ஆகும்.
காதன்மை-ஆசை; கையல்லது-ஒழுக்கம் அல்லாதது; கை-ஒழுக்கம். 832
3.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படாமை, தேட வேண்டியவற்றைத் தேடாமை, அன்பின்மை, பாதுகாக்க வேண்டுவனவற்றைப் பாதுகாவாமை ஆகிய இவை பேதையின் தொழில்கள்.
நாடுதல்-தேடிப் பெறுதல்; நார்-அன்பு; பேணாமை- ாதுகாவாமை அல்லது போற்றாமை; நாண வேண்டுவன-பழிபாவங்கள். 833
4.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்.
கற்க வேண்டிய நூல்களைக் கற்றும், அவைகளை நன்கு உணர்ந்தும், அவ்விதம் கற்று உணர்ந்தவைகளைப் பிறருக்கு உரைத்தும் கற்ற நெறியின் கண் தாம் நின்று அடங்கி ஒழுகாத பேதையரைப் போன்ற பேதையர் உலகத்தில் இல்லை. 834
5.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
ஏழு பிறவியிலும் தான் புகுந்து அழுந்தி வருந்துவதற்குரிய நரகத்தை அடையத் தக்க ஒரு செயலைப் பேதை ஒரு பிறவியிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.
ஒருமை-ஒரு பிறவி; எழுமை-ஏழு பிறவிகள்; அளறு-நரகம்; புக்கு அழுந்தும்-அடைந்து வருந்துவான். 835
6.பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
செய்யும் வகையறியாத பேதை ஒரு செயலைச் செய்ய மேற்கொள்வானாகில் அந்தச் செயலும் பொய்த்துப் போவதோடு தானும் விலங்கு பூணுவான்.
பொய்படுதல்-செயல் முடிவு பெறாமலே பொய்த்துப் போதல்; ஒன்றோ-அந்த ஒன்று மட்டும் அன்று, வேறொன்றும் உண்டு என்பதைக் குறிக்க வந்த சொல்; புனை பூணுதல்-விலங்கு பூணுதல்: கையறியாப் பேதை-செய்யும் முறைமை அறியாத பேதை, ஒழுக்க நெறி அறியாத பேதை; கை-ஒழுக்க நெறி. 836
7.ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைமை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
அறிவில்லாதவன் பெரிய செல்வத்தைப் பெற்றால், அவனோடு தொடர்பு இல்லாத அயலார் அனுபவிக்க, அவனுடைய சுற்றத்தார் உண்ண உணவு இன்றிப் பசியால் வருந்துவர்.
ஏதிலார்-அயலார்; யாதொரு தொடர்பும் இல்லாதவர்; ஆர- அனுபவிக்க; தமர்-தம்மவர், சுற்றத்தார்; உற்றக்கடை-பெற்றால். 837
8.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
இயல்பிலே தவறு செய்யத் தக்க பேதை தன் கையில் ஒரு பொருளையும் பெற்றிருப்பானாகில், இயல்பிலேயே பித்துக் கொண்டுள்ள ஒருவனுக்குக் கள்ளையும் வார்த்தால், அவன் எத்தகைய தன்மையில் தலை கால் தெரியாமல் மயங்கிக் கிடப்பானோ அத்தகைய தன்மையில் இருப்பான்.
மையல்-பித்து, களித்தற்று-கள் குடித்து மயங்கியிருத்தற்குச் சமம்; தன் கையொன்று உடைமை-தன்-கையில் உள்ள ஒரு பொருள். 838
9.பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
அறிவில்லாதவர் நட்பு மிகவும் இனியது. ஏனெனில் அவர் பிரிவாலே எவர்க்கும் எத்தகைய துன்பமும் நேரப் போவதில்லை; 839
10.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
அறிவிற் சிறத்தோர் கூடியுள்ள கூட்டத்தில் அறிவற்ற பேதை புகுவது, தூய்மையல்லாதவற்றை மிதித்து, கழுவப்படாத காலை நல்ல படுக்கையில் வைத்ததற்குச் சமம் ஆகும். 840
85. புல்லறிவாண்மை
1.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.
ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இயலாமையாவது அறிவில்லாமையே ஆகும். மற்றைப் பொருள் இல்லாமையோ என்றால் அதனை இல்லாமையாக அறிவுடையோர் கொள்ள மாட்டார்கள்.
இன்மை - இல்லாமை, வறுமை; உலகு - உலகத்தில் உள்ள அறிவிற் சிறந்த மக்கள்; புல்லறிவு - சிற்றறிவு, அற்ப அறிவு ; ஆண்மை - ஆளும் தன்மை. 841
2.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.
அறிவில்லாதவன் உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தல் என்ன காரணம் பற்றியோ எனில், அஃது அந்தப் பொருளைப் பெறுகின்றவன் செய்த நல்வினையின் பயனே ஆகும்; வேறொன்றுமில்லை.
தவம்-முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் செய்த நல்ல செயல்கள், நல்வினை. 842
3.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
அறிவில்லாதவர் என்று சொல்லத்தக்க புல்லறிவாளர் தாமே வருந்திக் கொள்ளும் வருத்தத்தை அவர் தம் பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது.
பீழித்தல்-துன்புறுத்தல்; பீழை-துன்பம்; செறுவார்-பகைவர். 843
4.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையோம்’ என்று ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் அகந்தையே ஆகும்.
வெண்மை-புல்லறிவு, அறிவின்மை; ஒண்மை-அறிவுடைமை; செருக்கு-அகந்தை, கர்வம். 844
5.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றதாகக் காட்டிக் கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றதாகிய ஒரு நூல் இருப்பின், அந்த நூலையும் 'அவர் கற்றிருப்பாரோ?’ என்றே பலரும் ஐயங்கொள்ள இடம் தரும்.
கற்றறியாத நூல்களையும் கற்றிருப்பதாகக் காட்டிக் கொள்ளுவதும் புல்லறிவாகும் என்பது கருத்து. 845
6.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை உணர்ந்து அதைப் போக்காமல் தம்மிடமுள்ள மறைக்க வேண்டிய உறுப்புக்களை மட்டும் மறைத்துக் கொள்ள எண்ணுவதும் புல்லறிவே ஆகும்.
அற்றம்-மறைக்கத் தக்கது; தம் வயின்-தம்மிடம். 846
7.அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
பிறருக்குத் தெரிவிக்கக் கூடாத அரிய இரகசியங்களையும் வெளிப்படுத்தி விடும் புல்லறிவாளன் தனக்குத் தானே பெரிய துன்பத்தினைத் தேடிக் கொள்வான்.
அருமறை-அரிய இரகசியங்கள் அல்லது பிறருக்குத் தெரிவிக்கக் கூடாதவைகள்; சோர்தல்-கை நழுவ விடல், வெளியிடல்; மிறை-துன்பம். 847
8.ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
பிறர் செய்யச் சொல்லியும் செய்யாதவனாய்த் தானே எண்ணிப் பார்த்து அறிந்து கொள்ளவும் இல்லாதவனாய் உள்ள ஒருவன், இவ்வுலகத்தை விட்டு ஒழிந்து போகும் அளவும் இவ்வுலகத்துக்கு ஒரு பெரிய நோய் போன்றவன் ஆவான்.
ஏவுதல்-செய்யும்படி கட்டளையிடுதல்; தேறான்-தெளியாதவன்; அவ்வுயிர்-அந்த மனிதன், எதற்கும் பயன்படாமல் நெட்டுயிர்ப்போடு உலவி வருதலால் 'அவன்' என்னாமல் 'அவ்வுயிர்’ என்று வெறுத்துக் கூறுகின்றார் திருவள்ளுவர்; போஒம்-இவ்வுலகத்தை விட்டுப் பிரியும்.
எதற்கும் பயனில்லாதவன் இறந்து போவதே நலம் என்பது கருத்து. 848
9.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
அறிவில்லாத ஒருவனுக்கு ஒன்றை அறிவிக்க முயலுபவன் முடிவில் தான் அவனுக்கு உணர்த்த முடியாமைக்குத் தன் அறியாமையை எண்ணித் தானே வருந்த நேரும்; அந்த அறிவற்றவனோ தான் முன்பு இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு தான் எல்லாம் அறிந்தவன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்வான்.
கருத்து: அறிவற்றவன் தனக்கு உரைத்தவனையும் அறிவில்லாதவனாக்கித் தான் எல்லாம் அறிந்தவன் போல தன் எண்ணத்தில் விடாப்பிடியாய் இருப்பான். 849
10.உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
உலகத்தில் உள்ள பெரியோர்கள், 'உண்டு' என்று கூறும் ஒன்றை, 'இல்லை’ என்று சாதிக்கும் ஒருவன், இவ்வுலகத்தினரால் மகன் என்று கருதப்படாமல் பேய் என்றே எண்ணப்படுவான்.
வையம் -பூமி, உலகத்தில் உள்ள மக்கள்; அலகை-பேய்; 850
86. இகல்
1.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
இகல்-பிறரோடு மாறுபடுதல்; பகல் பகுத்தல், வேறுபடுத்துதல்; பண்பின்மை-நற்குணம் இன்மை; அஃதாவது தீய குணம்; பாரித்தல்-வளர்த்தல், பரப்புதல். 851
2.பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
தம்மோடு கூடியில்லாமையை எண்ணி ஒருவன் அன்பில்லாத செயல்களைச் செய்வானாயினும் தாம் அவனோடு மாறுபடுதலைக் குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாது இருத்தலே சிறந்ததாகும்.
பகல்-வேறுபட்டிருத்தல், ஒன்று கூடாதிருத்தல்; பற்றா-பற்று இல்லாத செயல்கள், அன்பில்லாத சொற்கள்; இகல்-மாறுபாடு; இன்னா-துன்பம் தருவன. 852
3.இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவம்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்.
ஒருவன், இகல் என்று சொல்லப்படும் துன்பந்தரும் நோயினை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாததும் நிலையானதுமான புகழைத் தரும். 853
4.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கொடிய துன்பம் இகல் என்னும் மாறுபாடே ஆகும். அந்த இகல் என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லையானால், அஃது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த இன்பத்தினைத் தரும்.
இன்பத்துள் இன்பம் என்பதற்குப் பேரின்பம், அஃதாவது மோட்சம் என்றும் பொருள் கொள்ளுவர். 854
5.இகலெதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்?
இகல் என்னும் மாறுபாடு நேர்ந்தவிடத்து அந்த மாறுபாட்டை மேற்கொள்ளாமல் விலகி நடக்க வல்லவரை வெல்லக் கருதும் தன்மையுடையவர் எவர்? எவரும் இலர்.
சாய்ந்து ஒழுகல்-விலகி நடத்தல்; மிகல் ஊக்குதல்-வெல்லக் கருதுதல். 855
6.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
பிறன் தன்னோடு மாறுபடும் போது அவனை எதிர்த்து நிற்றலே இனியது என்று ஒருவன் எண்ணுவானானால், அவன் வாழ்க்கையானது விரைவில் அழிந்து போவதோடு அவனும் அழிந்து போவான்.
மிகல்-எதிர்த்தல்; தவல்-அழிதல்: நணித்து-மிகவும் அருகில் உள்ளது; விரைவில் நிகழக் கூடியது. தவல் என்பது பொருள் அழிவையும், கெடல் என்பது சாதலையும், குறிக்கும். 856
7.மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
இகல் என்னும் மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவினை உடையவர்கள் வெற்றியடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளைக் காண மாட்டார்கள்.
மிகல்-வெற்றி; மேவல்-அடைதல்; மெய்ப் பொருள் உண்மைப் பொருள்; மேவல்-விரும்புதல்: இன்னா அறிவு-தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. 857
8.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.
இகலுக்கு விலகிச் சொல்லுதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும்; அவ்விதம் விலகிச் செல்லாமல் அதனை எதிர்ப்பதில் ஊக்கம் கொள்வானாயின் அஃது அவனுக்குக் கேட்டினை விளைவிக்கும்.
மாறுபாட்டை எதிர்த்துச் செல்லாது, விலகிப் போதல் ஒருவனுக்கு ஆக்கம் தருவதாகும். அவ்விதம் விலகிப் போதலிலும் ஒர் அளவு வேண்டும். விலகிப் போகும் செயலை ஒருவன் மேலும் அதிகமாகத் செய்வானானால், அவனுக்கு: இது கேட்டினையும் ஊக்குவிக்கும் என்றும் இதற்குப் பொருள் கூறுவர்.
ஆக்கம்-செல்வம்: மிகல் ஊக்கம்-இகலை எதிர்த்துச் செல்லுதலை ஊக்குவித்தல்; ஊக்குதல்-தூண்டுதல் விளைவித்தல். 858
9.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
ஒருவன் தனக்குச் செல்வம் வரும் போது இகலைக் கருத மாட்டான்; தனக்குக் கேடு வருவதற்குக் காரணம் நேரும் போது இகலை எதிர்த்து வெல்லக் கருதுவான் .
மிகல் காணுதல்-இகலை எதிர்த்து வெல்லக் கருதுதல்; கேடு-துன்பம்,தீவினை.
நல்வினையுடையவர் இகலை எதிர்க்க மாட்டார்; தீவினை யுடையவரே எதிர்க்க எண்ணுவர் என்பது கருத்து. 859
10.இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
ஒருவனுக்கு இகல் என்னும் மாறுபாட்டினாலே துன்பமான எல்லாம் உண்டாகும்; அவ்வாறு மாறுபடாது நட்புக் கொள்வதாலே நல்ல குணம் உடையவன் என்னும் மதிப்பு ஏற்படும்.
இன்னாத-துன்பம் தருவன; நகல்-மகிழ்தல், நட்புடன் இருத்தல்; நன்னயம்-நல்ல பண்பு, நற்குணம்; நன்னயம் என்பதற்கு 'நல்ல நீதி’ என்றும் பொருள் கொள்வர்; செருக்கு-மதிப்பு, பெருமிதம். 860
87. பகைமாட்சி
1.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
தம்மைக் காட்டிலும் வலிமையினால் மிகுந்துள்ளவர்களைப் பகைத்து எதிர்த்தலை விட்டொழிக; தம்மைப் போற்றாத எளியாரைப் பகைத்தலை மேற்கொள்ளுக.
மாறேற்றல்-பகைத்து எதிர்த்தல்; ஒம்புக-விட்டொழிக: ஒம்பா-போற்றாத, மேக-மேவுக, விரும்புக. மேற்கொள்க 861
2.அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
ஒருவன் தன்னைச் சூழ்ந்துள்ளவர் மீது அன்பில்லாதவனாகவும், வலிமை பொருந்திய துணையில்லாதவனாகவும், தானும் வலிமையில்லாதவனாகவும் இருப்பானேயானால், அவன் பகைவனுடைய வலியை எவ்வாறு தொலைக்க முடியும்; (சிறிதும் இயலாது என்பது கருத்து.)
ஆன்ற அமைந்த-வலிமை பொருந்திய துவ்வான்-வலிமை யற்றவன்; என் பரியும்-எங்வனம் தொலைக்க முடியும்? ஏதிலான்-பகைவன் துப்பு-வலிமை. 862
3.அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
அஞ்ச வேண்டாதவைக்கு அஞ்சுவான்; அறிய வேண்டியவற்றை அறியான்; பிறரோடு இணங்கி நடக்க மாட்டான்: பிறருக்கு ஒன்றும் ஈய மாட்டான: இத்தகைய குணமுடைய ஒருவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.
அமைவு-அமைதியான தன்மை, இணங்கி நடக்கும் குணம்; தஞ்சம் எளியன்-மிக எளியன். 863
4.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
சினம் நீங்காதவனாய்த் தன் மனத்தை அடக்கி ஆளும் தன்மையில்லாதவனாய் ஒருவன் இருந்தால், அவன் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளியன்.
நிறை-உள்ளத்தை அடக்கி ஆளும் தன்மை. 864
5.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
காரியங்களைச் செய்யத் தக்க நல்ல வழிகளை ஆராய்ந்து பாரான்; பொருத்தமானவற்றைச் செய்யான்; தனக்கு வரத் தக்க பழியையும் எண்ணிப் பாரான்: நல்ல குணமும் இல்லான்; இத்தகைய ஒருவன் பகைவர்க்கு எளியவனாவான்.
வழிநோக்குதல்-தக்க நல்ல வழிகளை ஆராய்ந்து பார்த்தல்; வாய்ப்பன செய்தல்-பொருத்தமான செயல்களைச் செய்தல்; பண்பு-நற்குணம்; பற்றார்-பகைவர்; இனிது-இங்கே எளிமை என்னும் பொருளில் வந்தது. 865
6.காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
தன் நிலையையும், பிறர் நிலையையும் எண்ணிப் பாராமல் பிறரைக் கோபிக்கும் குணமுடையவனும், அளவுக்கு விஞ்சிய காமத்தை உடையவனும் ஆகிய ஒருவனது பகைமை பகைவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.
காணா-எண்ணிப் பாராத; கழி-மிகுதி; கழி பெருங் காமம்-மிகப் பெரிய ஆசை; பேணாமை-பகைமை;: பேணுதல்-விரும்புதல். 866
7.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
தமக்கு மிகவும் நெருக்கத்தில் இருந்தும் (தன் பாதுகாப்புக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்ளாமல்) சிறிதும் பொருந்தாச் செயல்களையே செய்கின்ற ஒருவனது பகையைப் பொருள், நாடு முதலியனவற்றைக் கொடுத்தேனும் தாம் நிச்சயமாகக் கொள்ளுதல் வேண்டும். 867
8.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப் புடைத்து.
ஒருவன் குணமில்லாதவனாய்ப் பலப் பல குற்றங்களையும் உடையவனாக இருப்பின், அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்தத் துணையற்ற நிலை பகைவர்க்குத் தக்க பாதுகாப்பாக இருக்கும்.
ஏமாப்பு-பாதுகாப்பு, அஃதாவது பகைவர்க்கு நல்ல வாய்ப்பு. 868
9.செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
போர் புரிதற்கு வேண்டிய அறிவு இல்லாதவராய், பகைவரைக் கண்டு அஞ்சத் தக்க குணமும் உடையவராய் இருப்போரைப் பகைவராகப் பெற்றால், அவரை எதிர்ப்போர்கட்கு வெற்றி இன்பம் தொலைவில் இராமல் அருகிலேயே நிலைத்திருக்கும். 869
10.கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
அரசியல் அறிவு இல்லாதவனோடு பகைக்க நேர்ந்த போது அவனிடமிருந்து பெறத்தக்க சிறிய பொருளையும் கைக்கொள்ள மாட்டாதவனைப் புகழ் எந்தக் காலத்திலும் வந்து பொருந்தாது.
'கல்லான்’ என்பதற்கு அரசியல் அறிவு இல்லாதவன், நீதிநூல் அறிவு இல்லாதவன், பொது அறிவு இல்லாதவன் என்றெல்லாம் பொருள் கொள்வர். ஒல்லானை-இயலாதவனை; ஒல்லாது-வந்து பொருந்தாது; ஒளி-புகழ். 870
88. பகைத்திறம் தெரிதல்
1.பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
பகை என்று சொல்லப்படுகின்ற தீய குணத்தை ஒருவன் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது.
பண்புஇல் அதனை-நற்குணம் இல்லாததை, அஃதாவது தீய குணத்தை; நகை-விளையாட்டு.
பகைத்திறம் தெரிதல்-பகையினுடைய தன்மைகளை ஆராய்ந்து அறிதல். 871
2.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
ஒருவன் வில்லை ஏராக உடைய உழவர்களாகிய வீரர்களுடன் பகை கொண்டான் ஆயினும், சொல்லை ஏராக உடைய உழவர்களாகிய அறிஞர்களுடன் பகை கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
வில்லேர் உழவர்-விற் பயிற்சியில் வல்ல வீரர்; சொல்லேர் உழவர்-நூல் பயிற்சியுடைய புலவர், அமைச்சர் முதலிய அறிஞர்.
அரசரோடு பகை கொள்ளினும் அமைச்சர், புலவர் முதலாயினரோடு பகை கொள்ளலாகாது என்பது கருத்து. 872
3.ஏமுற்ற வரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
தான் தனியனாக இருந்து பலருடைய பகையையும் தேடிக் கொள்பவன் பித்துப் பிடித்தவரைப் பார்க்கிலும் அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
ஏமுறுதல்-பித்துப் பிடித்தல்; ஏழை-அறிவில்லாதவன்; தமியன் - தனியன்; பல்லார்-பலர். 873
4.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
பகைவரையும் நண்பராகச் செய்து கொள்ள வல்ல நல்ல தன்மையுள்ள ஒருவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும். 874
5.தன்துணை இன்றால் பகைஇரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
தனக்கு உதவி புரியும் துணையோ எனில் இல்லை. தன்னைத் துன்புறுத்தக் காத்திருக்கும் பகையோ இரண்டு. தானோ ஒருவன். இந்நிலையில் அந்தப் பகைகளுள் ஒன்றை அப்போதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்ள வேண்டும். 875
6.தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
ஒருவனைக் குறித்துத் தாம் முன்பு ஆராய்ந்து தெளிந்தாராயினும், தெளிந்திலர் ஆயினும் தாழ்வு வந்தவிடத்து அவனை ஆராய்ந்து நீக்காமலும், சேர்த்துக் கொள்ளாமலும் ஒர் அயலானைப் போல அவனை விட்டு வைக்க வேண்டும்.
தேறுதல்-தெளிதல்; தேறாவிடுதல்-தெளிந்து கொள்ளாமல் இருத்தல்; அழிவு-தாழ்வு; பகாஅன் விடல்-நீக்காது விட்டு வைத்தல்; பகுதல்-நீக்குதல். 876
7.நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
நோவற்க-நொந்ததைச் சொல்லற்க; மேவற்க-மேலிட்டுக் கொள்ளற்க, வெளிப்படுத்தற்க; மென்மை-மெலிவாக இருக்கும் தன்மை, வலிவற்ற தன்மை. 877
8.வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
ஒருவன் தான் செய்ய வேண்டிய வகையை அறிந்து, அதற்கு வேண்டிய பொருள்களையும் பெருக்கிக் கொண்டு தன்னையும் காத்துக் கொள்வானானால் அவன் பகைவரிடத்துள்ள செருக்கு தானாகவே அழியும்.
வகை அறிதல்-பகைவனை எதிர்த்தற்கு வேண்டிய வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்; தன் செய்தல்-தனக்கு வேண்டிய பொருள்; ஆயுதம் முதலியவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல்; தன் காத்தல்-தன்னைக் காத்துக் கொள்ளுதற்கு வேண்டிய அரண்களை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுதல்; மாயும்-அழியும்; செருக்கு-பெருமிதம். 878
9.இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
முள்ளையுடைய மரத்தை அது சிறியதாக இருக்கும் போதே, களைந்து எறிதல் வேண்டும்; அது முதிர்ந்த போது தன்னை வெட்டுகிறவர்களின் கையையே வருத்தும்.
பகை சிறிதாக இருக்கும் போதே அதனை அழித்தொழிக்க வேண்டும். அதனை வளர விட்டால் தன்னையே அழித்து விடும் என்பது கருத்து. 879
10.உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
தம்மைப் பகைப்பவரது தருக்கினைக் கெடுக்க முடியாதவர் அந்தப் பகைவர் மூச்சு விடும் அளவு கூட உயிரோடு வாழ்கின்றவர் அல்லர், இது நிச்சயம்.
உயிர்த்தல்-மூச்சு விடுதல்; மன்ற-நிச்சயமாக, உறுதியாக; செயிர்ப்பவர்-பகைப்பவர்; செம்மல்-தலைமைப் பதவி; சிதைத்தல்-அழித்தல். 880
89. உட்பகை
1.நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
அனுபவிக்க வேண்டுவன ஆகிய நிழலும் நீரும் ஒருவருக்கு முதலிய இன்பம் தருவனவாய்த் தோன்றிப்பின் தீங்கினை விளைவிப்பனவாயின் அவை தீயனவே ஆகும்.அது போலச் சுற்றத்தார் இயல்புகளும் முன்பு இனியனவாய்த் தோன்றிப் பின் தீங்கு விளைவிப்பனவாயின், அவை துன்பம் தருவனவே ஆகும்.
நீரும் நிழலும் நல்லனவாகவே இருக்கலாம். ஆனால் உடம்புக்கு அவை ஏற்றுக் கொள்ளா விட்டால் அந்தக் குளிர்ந்த நீரையும் நிழலையும் ஒதுக்கியே வைக்கிறார்கள். அது போல இன்றியமையாத சுற்றத்தார் போல் காணப்பட்டாலும், அவர் தன்மைகள் தீங்கு விளைவிப்பனவாக இருந்தால், அவரைப் பகைவர் போன்று நீக்கி வைக்கவே வேண்டும்.
'நிழல் நீர்'என்பதற்கு சூரிய வெளிச்சம் படாத மர நிழலில் உள்ள நீர் என்று பொருள் கொள்வர். இன்னாத-துன்பந் தருவன; தமர் ற்றத்தார்; நீர்-தன்மை; தமர் நீர் - சுற்றத்தாரின் இயல்புகள்.
உட்பகை-அருகே இருந்து கொண்டே தீங்கு விளைவிக்கும் இயல்புடையவன். 881
2.வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் புரியும் இயல்புடைய பகைவரைக் குறித்து ஒருவன் அஞ்ச வேண்டுவதில்லை. ஆனால், உறவினரைப் போலத் தன்னோடு இருந்து கொண்டே தனக்குத் தீங்கு புரியும் உட்பகைவரின் தொடர்புக்கு ஒருவன் அஞ்சுதல் வேண்டும்.
கேள்-சுற்றம்; தொடர்பு-நெருங்கியிருக்கும் தன்மை. வெளிப்படையான பகைவரைக் கண்டு ஒருவன் முன்னதாகவே எச்சரிக்கையாக இருத்தல் கூடும். ஆதலால், அந்தப் பகையைக் குறித்து அவன் அஞ்ச வேண்டுவது இல்லை.உறவினர் போன்றும் நெருங்கிய நண்பர் போன்றும் இருந்து கொண்டே இருக்கும் பகைவருக்காகவே அவன் அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து. 882
3.உட்பகை அஞ்சித்தன் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லையானால் மட்கலத்தைச் செய்வதற்குப் பயன்படும் ஊசி என்னும் கருவி அந்த மட்கலத்தையே சக்கரத்தில் இருந்து வெட்டி எடுப்பதற்கும் பயன்படுவது போன்று, உட்பகைவர் அவன் உள்ளத் தளர்ச்சியோடு இருக்கும் காலம் பார்த்து அவனைத் தப்பாமல் ஒழித்து விடுவர்.
உலைவிடம்-தளர்ச்சி அடைந்த சமயம்; இஃது உள்ளத் தளர்ச்சி, உடல் தளர்ச்சி இரண்டுக்கும் பொருந்தும்; மட்பகை- மட்கலத்தைச் சக்கரத்திலிருந்து வெட்டி எடுக்கப் பயன்படும் ஊசி என்னும் கருவி: மண்ணைப் பகும் கருவி ஆதலின் மட்பகை எனப்பட்டது. அந்தக் கருவி பிறர் அறியாத நிலையில் அந்தக் குடத்தைச் சக்கரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப் பயன்படுதல் நோக்கி உட்பகைக்கு வள்ளுவர் உவமையாக்கினார். 883
4.மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்.
சிறந்த மனப் பான்மையில்லாத உட்பகைவர் ஒருவனுக்கு ஏற்படுவாரானால், அவன் சுற்றத்தார் அவனோடு சேராமைக்குரிய குற்றங்கள் பலவற்றையும் அவர் விளைவிப்பார். 884
5.உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
வெளிக்குச் சுற்றத்தார் போன்று காட்டிக் கொண்டு உள்ளத்தில் பகைமைக் குணத்துடன் இருப்பார்களானால், அந்தப் பகைமை ஒருவனுக்கு, அவன் இறந்து படுவதற்குக் காரணமான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
உறல் முறை-உறவு முறை, சுற்றம்; இறல் முறை இறப்பதற்குக் காரணமானவை. 885
6.ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
ஒருவனுக்கு அவனுடைய உறவின் முறை போல் ஒன்றுபட்டு இருப்போரிடமே உட்பகை தோன்றுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
ஒன்றாமை-ஒன்று சேராமை, பகைமை; ஒன்றியார்-ஒன்று சேர்ந்திருப்போர் சுற்றத்தார்; பொன்றாமை-அழிந்து போகாமை, இறவாமை; ஒன்றல்-தங்கியிருத்தல்; பொன்றாமை ஒன்றல்- இறவாமல் உலகில் தங்கியிருத்தல். 886
7.செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
செப்பும், அதன் மூடியும் பார்ப்பதற்கு ஒன்று சேர்ந்து இருப்பன போல, உட்பகையுள்ளவர்கள் ஒரு குடும்பத்தில் கூடியிருந்தாலும் அந்தச் செப்பும், மூடியும் வேறு வேறாக இருப்பது போல், அந்த உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்கள்; பிரிந்தே இருப்பார்கள்.
செப்பு-செம்பு என்னும் உலோகத்தால் ஆகிய சிமிழ்; புணர்ச்சி- சேர்ந்திருக்கும் தன்மை; குடி-குடும்பம். 887
8.அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
உட்பகையால் பீடிக்கப் பெற்ற குடும்பமானது அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போன்று அதன் வலிமை குறைக்கப் பட்டுத் தேய்ந்து போகும். 888
9.எட்பகவு அன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
உட்பகையானது எள்ளின் பிளவு போன்று மிகச் சிறியதாக இருந்தாலும், அஃது ஒரு குடியை அழிக்க வல்ல தன்மையை உடையதாகும்.
எட்பகவு-(எள்+பகவு) எள்ளின் பிளவு. 889
10.உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறந் தற்று.
உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவரோடு கூடி, ஒருவன் வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடி வாழ்ந்தாற் போன்றதே ஆகும்.
.உடம்பாடு-மனப் பொருத்தம்; குடங்கர்-குடிசை; உடன் உறைதல்-ஒன்று சேர்ந்து இருத்தல்; அற்று-அத்தன்மைத்து. 890
90. பெரியாரைப் பிழையாமை
1.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
எடுத்துக் கொண்ட செயல்களை முடிக்க வல்லவர் தம் திறமையை இகழாதிருத்தல், தமக்குத் தீங்கு நேராமல் காத்துக் கொள்பவர்கள் செய்யும் காவல் எல்லாவற்றிலும் முதன்மையானது.
பெரியாரைப் பிழையாமை-அறிவு ஆற்றல்களால் சிறந்த பெரியோர்களை இகழாதிருத்தல்; ஆற்றுவார்-எடுத்த செயலைச் செய்து முடிக்க வல்லவர்; ஆற்றல்-வல்லமை; போற்றுவார்-காப்பாற்றிக் கொள்ள முயலுவார்; போற்றல்-காத்தல். 891
2.பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
ஆற்றல் மிகுந்த பெரியோர்களை ஒருவன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவானானால், அஃது அந்தப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். 892
3.கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
கெடல்-அழிதல்; அடல்-கொல்லுதல்; ஆற்றுபவர்-ஆற்றலில் வல்லவர்; இழுக்கு-குற்றம், தவறு; 'செய்க' என்பது இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் இருந்து பொருள் தருகிறது. இதனை இடைநிலைத் தீவகம் என்பர். 893
4.கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
ஆற்றல் உடையவர்கட்கு ஆற்றல் இல்லாதார் தீமையைச் செய்தல், தம்மைக் கொல்லத்தக்க எமனைக் கை காட்டி அழைத்தாற் போல் ஆகும்.
கூற்றம்-எமன்; விளித்தற்று-அழைத்தாற் போன்றது; ஆற்றுவார்-வல்லமை வாய்ந்தவர்; ஆற்றாதார்-ஆற்றல் இல்லாதவர். வல்லமை இல்லாதவர்; இன்னா-தீமை. 894
5.யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
மிகுந்த வலிமையினையுடைய வேந்தனாலே வெகுளப்பட்டவர், அந்த வேந்தனிடமிருந்து தப்பி எங்குச் சென்றாலும் எவ்விடத்தும் உயிர் வாழ மாட்டார்.
யாண்டு-எங்கு; வெந்துப்பு-மிக்க வலிமை; செறப்பட்டவர்-வெகுளப்பட்டவர். 895
6.எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தீயால் சுடப்படினும் ஒருவாற்றால் உயிர் வாழ்தல் கூடும். ஆற்றல் மிக்க பெரியாரிடத்தில் குற்றம் செய்து கிடப்பவர் எவ்வாற்றாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
உய்வு-உயிர் தப்புகை; பிழைத்து ஒழுகுவார்-குற்றம் செய்து நடப்பவர். 896
7.வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
பெருமையால் சிறப்புற்ற பெரியார், ஒருவன் மீது கோபம் கொள்வாராயின் அவனுக்கு எல்லா வகையாலும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், மிகுந்த பொருளும் இருந்தும் என்ன பயன்? பயன் சிறிதும் இல்லை.
அவன் தன் வாழ்க்கையில் கவலையற்று வாழ மாட்டான் என்பது பொருள். 897
8.குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
தவத்தால் மலை போன்ற மதிப்பு மிக்க பெரியாரை ஒருவர் குறைவாக மதிப்பாராயின், உலகில் என்றும் அழியாமல் நிலை பெற்றார் போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிந்து போவர்.
குன்றன்னார்-மலை போன்றவர்; குன்ற மதித்தல்-குறைவாக எண்ணுதல்; நிலத்து நின்றன்னார்-உலகில் அழியாமல் நிலைத்து நிற்கத் தக்கவர் 898
9.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
தவத்தால் உயர்ந்த கொள்கையை உடையவர் வெகுள்வாராயின் இந்திரனும் இடை நடுவே தன் இந்திர பதவியை இழந்து அழிவான்.
ஏந்திய கொள்கை-உயர்ந்த கொள்கை; சீறுதல்-வெகுளல்; இடைமுரிதல்-இடைக்காலத்திலேயே நிறை கெடுதல்; வேந்தன்-இந்திரன்; வேந்து-இந்திர பதவி. 899
10.இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
மிகவும் சிறந்த தவத்தினையுடையவர் வெகுள்வாராயின் அளவு கடந்த நல்ல துணையுடையாரும் தப்பிப் பிழைக்க மாட்டார்.
இறந்தமைந்த-அளவு கடந்த; சார்பு-துணை; உய்யார்-பிழைக்க மாட்டார்; சிறந்து அமைந்த சீரார்-மிகவும் சிறந்த தவத்தினை யுடையவர்; செறின்-வெகுளின். 900
91. பெண்வழிச் சேறல்
1.மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
இன்பம் காரணமாக மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடக்க விரும்புபவர் சிறந்த அறப் பயனை அடைய மாட்டார். யாதானும் ஒரு செயலைச் செய்து முடிக்க விரும்புபவர் வேண்டாத பொருளும் மனைவியை விரும்பி அவள் வழி ஒழுதுதலேயாம்.
மனை-மனைவி; விழைதல்-விரும்புதல்; வினைவிழைதல்- ஒரு வேலையைச் செய்து முடிக்க விரும்புதல். 901
2.பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாத நாணுத் தரும்.
அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளை மட்டும் விரும்புபவன் செல்வம் பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாக அவனுக்கு நாணினைத் அரும்.
பேணாது-விரும்பாது, பாதுகாவாது; பெண் விழைதல்-மனையாளை விரும்புதல்; பெரியதோர் நாண்-உலகோரெல்லாம் கண்டு நாணும்படியான வெட்கம். 902
3.இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
ஒருவன் தன் மனைவியிடத்தில் எந்தக் காலத்திலும் தாழ்ந்து நடக்கும் தகுதியற்ற தன்மை, நல்லாரிடம் செல்லும் போது அவனுக்கு எப்போதும் நாணத்தைக் கொடுக்கும்.
தாழ்ந்த இயல்பின்மை-தாழ்ந்து நடக்கும் தகுதியற்ற தன்மை; எஞ்ஞான்றும்-எக்காலத்தும்; (இதை இரண்டு: இடத்தும் கூட்டிப் பொருள் செய்க.) 903
4.மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
இம்மை இன்பத்தை மனைவியிடம் அடைவதற்காக மறுமைக்கு வேண்டிய அறங்களைச் செய்யாமல் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் ஒருவனை மறுமை இலாளன் என்றார் வள்ளுவர்.
மறுமையிலாளன்-மறுமைப் பயனை அடைய மாட்டாதவன்; வினை ஆண்மை-செயலாற்றும் வல்லமை; வீறு-புகழ், பெருமை; இன்று-இல்லை. 904
5.இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
மனைவிக்குப் பயந்து வாழ்கின்றவன் நல்லவர்கட்கு ஒரு நல்ல செயலைச் செய்யவும் எப்போதும் அஞ்சுவான். 905
6.இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
தன் மனைவியின் மூங்கில் போன்ற அழகிய தோளின் மீது கொண்டுள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சி நடக்கும் ஒருவர், இவ்வுலகில் தேவரைப் போன்று தேவலோக இன்பத்தில் திளைத்து வாழ்ந்தாலும் அவர் பெருமை இல்லாதவரே ஆவர்.
இமையார்-இமைத்தல் இல்லாதவர், தேவர்; பாடு-பெருமை; அமை-முங்கில். 906
7.பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
நாணம் இல்லாமல் தன் மனைவியின் கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஓர் ஆண்மகனை விட நாணம் மிகுந்த பெண்ணே பெருமையுடையவள்.
ஆண்மை என்பதற்கு ஆளுந் தன்மை என்றும், 'பெண்மை' என்பதற்கு அமைதித் தன்மை என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறியிருத்தல் நோக்கத்தக்கது. 907
8.நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
நட்டார்-நண்பர்; குறை-வேண்டுகோள்; நன்று-நல்ல அறச் செயல்; நன்னுதலாள்-அழகிய நெற்றியையுடையவள்; பெட்டாங்கு-விரும்பிய வண்ணம். 908
9.அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
அறச் செயலும், அது முடித்தற்குக் காரணமாக அமைந்துள்ள பொருளும், பிற கடமைகளும் தம் மனைவியின் கட்டளைப் படி அடங்கி நடப்போருக்கு இல்லை.
அறிவினை-அறச்செயல், நீதி நூல்களில் கூறியுள்ள படி நடக்க முயலும் செயல்கள்; ஆன்ற-அமைந்த; ஆன்ற பொருள்- (அறஞ் செய்தற்கு) அமைந்த பொருள்; பிறவினை-பிற கடமைகள். 909
10.எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
சிந்தித்துப் பார்க்கும் உள்ளத்தோடு தகுந்த நிலையும் உடைய ஒருவருக்கு எந்தக் காலத்தும் மனையாள் வயப்பட்டு ஒழுகும் அறியாமை இல்லை.
எண்-எண்ணுதல், சிந்தித்தல்; இடம்-நிலை; நெஞ்சத்து இடம் என்பதற்கு விரிந்த உள்ளம் என்றும் பொருள் கொள்வர்; பெண் சேர்ந்து ஆம் பேதைமை-பெண்ணுக்கு அடங்கி நடக்கும் அறியாமை. 910
92. வரைவின் மகளிர்
1.அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
ஒருவனை அன்பு பற்றி விரும்பாது பொருள் பற்றி விரும்பும் பொது மகளிர் இனிய சொற்கள் அவனுக்குத் தீமையைத் தரும்.
விழைதல்-விரும்புதல்; ஆய்தொடியார்-ஆய்ந்தெடுத்த வளைகளை அணியும் பெண்களைக் குறிக்கும் சொல்; இங்கே பொது மகளிரைக் குறிப்பிடுகிறது.வரைவின் மகளிர்-பொது மகளிர்; வரைவு-அளவு; உரிய கணவன் இவன் என்னும் வரையறையின்றிப் பொருள் கொடுப்போர் எவராய் இருப்பினும் அவருக்கு மனைவி போன்று இருந்து இன்பம் தருதலால 'வரைவின் மகளிர்’ என்பது வழக்கு. 911
2.பயன்துாக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்துாக்கி நள்ளா விடல்.
தமக்குக் கிடைக்கக் கூடிய பயனை அளந்து பார்த்து அதற்கு ஏற்றவாறு இனிய சொற்களைச் சொல்லும் பண்பற்ற மகளிரது அன்பினை ஆராய்ந்து பார்த்து அவர்களை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.
தூக்குதல்-ஆய்ந்து பார்த்தல், அளந்து பார்த்தல்; பண்பு ரைத்தல்-இன்சொல் கூறல்; பண்பில் மகளிர்-நற்குணமில்லாத பொருட் பெண்டிர்; நயன்-நன்மை, விருப்பம்; அன்பு: நள்ளல்-விரும்புதல். 912
3.பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணம்தழீஇ யற்று.
இருட்டறையில் பொருள் தருவாரை விரும்பாமல் பொருளை மட்டும் விரும்பும் பொது மகளிரது பொய்யாகத் தழுவி மகிழும் இன்பம், பிணம் எடுப்பார் பொருள் பெறும் பொருட்டு முன்பின் அறியாத பிணத்தினை இருட்டறையில் தழுவியெடுத்தாற் போன்றதே ஆகும்.
பொருட் பெண்டிர்-பொருளுக்காகவே மனைவியைப் போல் நடிக்கும் பொது மகளிர்; முயக்கம்-தழுவி மகிழும் சிற்றின்பம்; ஏதில் பிணம்-முன் பின் அறியாத அயலார் பிணம்; தழீ இயற்று-தழுவுதல் போன்றது.
பொய்மையுடைய பொருட்பெண்டிரைக் கூடிப் பெறும் இன்பம் இருட்டறையில் முன்பின் அறியாத பிணத்தினைத் தழுவிப் பெறும் இன்பம் போன்றதாம் என்றும் பொருள் கூறலாம். 913
4.பொருட்பொருளாளர் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
பொருட் செல்வத்தையே பொருளாகக் கருதும் பொதுமகளிரின் புன்மையான இன்பத்தை, அருட் செல்வத்தையே பொருளாகக் கொண்டு ஆராயும் அறிவுடையார் அனுபவிக்க எண்ண மாட்டார்.
பொது மகளிரை விரும்புபவர் பொருட் செல்வத்தோடு அருட் செல்வத்தையும் இழப்பர் என்பது கருத்து.
பொருட் பொருளார்-பொருள் ஒன்றையே பொருளாக எண்ணும் பொருட் பெண்டிர்; புன்னலம்-அற்பமான சிற்றின்பம்; தோயார்-அனுபவிக்க எண்ணார்; அருட் பொருள் - அருள் என்னும் உயரிய பொருள். 914
5.பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
இயற்கையான நல்லறிவோடு மாட்சிமைப்பட்ட கல்வி அறிவையும் உடையவர், பொதுவாக எல்லாருக்கும் இன்பம் தரும் பொதுமகளிரின் புன்மையான நலத்தினில் திளைக்க மாட்டார்.
பொது நலத்தார்-பொது மகளிர்; மதிநலம்-இயற்கை அறிவு . 915
6.தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
ஆடல், பாடல், அழகு முதலிய தகுதிகளால் செருக்குற்றிச் சிற்றின்பத்தை யாவருக்கும் விலைக்கு விற்கும் தொழிலைப் பரப்பும் பொதுமகளிர் தோளினை நல்லொமுக்கத்தைப் போற்றும் அறிஞர்கள் தழுவ மாட்டார்கள்.
தந்நலம்-தங்கள் நல்லொழுக்கம்; பாரிப்பர்-போற்றிப் பாதுகாப்போர், பரப்புவோர்; தோயார்-தழுவமாட்டார்; தகை-தன்மை: பாரிப்பார் தோள்- தம் எண்ணத்தை எங்கும் பரப்பும் பொருட் பெண்டிர் தோள். 916
7.நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
மனத்தை நிலைநிறுத்தி அடக்கி ஆளும் ஆற்றல் இல்லாதவர் அன்பு நீங்கலாகப் பிறவற்றின் மேல் ஆசை வைத்துத் தழுவ எண்ணும் பொருட் பெண்டிர் தோளைப் பொருந்த எண்ணுவர்.
நிறை நெஞ்சம்-உறுதிப்பாடுள்ள மனம்; தோய்வர்-தழுவுவர்; நெஞ்சில் பிற பேணுதல்-அன்பு நீங்கலாகப் பிறவாகிய பணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை நெஞ்சில் நினைத்துப் போற்றுதல். 917
8.ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
வஞ்சித்தலில் வல்ல பொதுமகளிரின் சேர்க்கை ஆராய்ந்து பார்க்கும் அறிவில்லார்க்கு 'மோகினி மயக்கு' என்று கூறுவர்.
ஆய்தல்-ஆராய்ந்து பார்த்தல்; அணங்கு-மோகினி மயக்கு, வருத்தம் என்றும் கூறலாம். 918
9.வரைவிலா மாணிழையார் மென்தோள் புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
பிறரைத் தழுவுதலில் ஒரு வரையறை கொள்ளாத பொது மகளிர் மெல்லிய தோள்கள் உயர்வு இல்லாத கீழ் மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகம் ஆகும்.
மாண் இழையார்-மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்துள்ள பொது மகளிரைக் குறிக்கும்; புரை-உயர்வு; பூரியர்-கீழ்மக்கள்; அளறு-நாகம். 919
10.இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
இருவகைப்பட்ட மனத்தினையுடைய பொது மகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம்மூன்றும் திருமகளால் ஒதுக்கப் பட்டார்க்கு நட்பாகும்.
இருமனம்-இருவகைப்பட்ட மனம், அஃதாவது ஒருவர் மீது அன்பு உள்ளவர் போல் நடித்து, அதே சமயத்தில் அவர் மீது அன்பில்லாமல் இருக்கும் மனம்; கவறு-சூது, சூதாடு கருவி; திரு-இலக்குமி; தொடர்பு-பற்று, நட்பு. 920
93. கள்ளுண்ணாமை
1.உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகுவார்.
எப்பொழுதும் கள்ளின் மீது காதல் கொண்டு ஒழுகுபவர் பகைவரால் எப்பொழுதும் அஞ்சப்பட மாட்டார்; அன்றியும் உள்ள மதிப்பையும் இழப்பர்.
உட்குதல்-அஞ்சுதல்; ஒளி-மதிப்பு, புகழ்; எஞ்ஞான்றும்-எப்போதும்; காதல்-ஆசை.
'எஞ்ஞான்றும்' என்பது இடைநிலைத் தீவகம். 921
2.கண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்.
கள்ளை உண்ணுதல் கூடாது; சான்றோரால் நன்கு மதிக்கப்படுவதை விரும்பாதவர் உண்ண விரும்பினால் உண்ணக் கடவர்.
சான்றோர்-அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர்; எண்ணுதல்-நன்கு மதித்தல்.
நன்மதிப்பை விரும்பாதவர் ஒருவரும் இரார். எனவே, கள்ளுண்ணுதல் கூடாது என்பதனையே வள்ளுவர் இவ்வாறு வற்புறுத்தினார். 922
3.ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகத்திலும் கள்ளுண்ணட மயக்கத்துடன் விழித்தல் அவளுக்குத் துன்பத்தையே தரும். அப்படியானால் ஒழுக்கம் நிறைந்த சான்றோர் முன்னால் ஒருவன் கள்ளுண்ட களிப்போடு நிற்றல் எத்துணை வெறுப்பைத் தரும்.
ஈன்றாள்-பெற்றெடுத்த தாய்; இன்னாது-இன்பத்தைத் தராது, துன்பினைத் தரும்;; களி-கள்ளுண்டு மயங்கி நிற்கும் நிலை; தாய்க்கு அடுத்தபடியாகச் சான்றோர் அருள் உள்ளம் வாய்ந்தவர், அவராலும் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் கள்ளுண்டல் என்பது கருத்து. 923
4.நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
கட்குடித்தல் என்னும் விரும்பத்தகாத பெருங் குற்றத்தைப் புரிபவர் முன்பு, நாணம் என்று சொல்லப்படுகின்ற நல்லாள் எதிர் நில்லாமல் திரும்பிப் போய் விடுவாள்.
நாண் என்னும் நல்லாள்-நாணம் என்னும் நற்குணத்தை வள்ளுவர் ஒரு பெண்ணாக இங்கே உருவகித்துக் கூறுகின்றார்; நல்லாள்-நற்குணம் பலவும் அமைந்த பெண்; புறங்கொடுத்தல்-முதுகிடுதல், திரும்பிச் செல்லுதல்: பேணா-விரும்பத் தகாத,
கட்குடியன் நாணம் என்பதையே இழந்து நிற்பவன் என்பது கருத்து. 924
5.கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
ஒருவன் தான் வருந்திப் பெற்ற பொருளை விலையாகக் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல் பழைய வினையின் பயன் என்றே சொல்லுதல் வேண்டும்.
கை-செயல்; கையறியாமை-செய்வது அறியாமை; ஆதலால் இதற்குப் பழவினைப்பயன்’ என்றே பரிமேழழகர் பொருள் கொள்ளுகின்றார்; பழவினை-முன் பிறப்பில் செய்த தீவினை. 925
6.துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
உறங்கினவர் செத்தாரை விட வேறுபட்டவர் அல்லர்; அது போலவே எஞ்ஞான்றும் கள் உண்டு அறிவு மயங்கி இருப்பவர், விஷத்தை உண்டு அறிவு மயங்கி இருப்போருக்குச் சமமாகவே இருப்பர்.
கள்ளுண்பவர் உறங்குபவர் போன்று மயங்கி இருந்தாலும், செத்துக் கிடப்பவருக்குச் சமமாகவே கருதப்படுவர்; கள்ளுண்டலும், விஷம் உண்டல் போன்று சீக்கிரத்தில் மக்களை இறக்க வைக்கிறது. ஆதலால், இம்மூன்றும் கள் உண்போருக்கு ஒரு வகையில் உவமைகளாகவே அமைந்திருத்தல் காண்க. 926
7.உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
கள்ளை மறைத்துண்டு அறிவு மயங்கி இருப்பவர் உள்ளூரில் வாழ்கின்றவரால் துப்பறியப் பெற்று எந்நாளும் எள்ளி நகையாடப் பெறுவர்.
உள்ளொற்றி-உள்ளே நிகழும் செயல்கள் துப்பறியப்பட்டு; உள்ளூர்-சொந்த ஊரில் வாழும் மக்களால்; தருதல்-எள்ளி நகையாடுதல்: ஏளனச்சிரிப்பு; எஞ்ஞான்றும்-எக்காலத்தும்; கள் ஒற்றி-கள்ளினை மறைவாக இருந்து அருந்தி; கண் சாய்தல்-அறிவு மயங்கியிருத்தல். 927
8.களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
மறைந்து கள்ளுண்பவன் "யான் ஒரு போதும் கள்ளுண் டறியேன்" என்று சொல்லுதலை விட்டு விடுக. ஏனெனில் நெஞ்சில் மறைத்து வைத்திருந்த அந்தக் குற்றமும் கள்ளுண்ட அப்போதே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டு விடும்.
குறிப்பு:'கள்ளைக் குடித்தவன் உள்ளதைச் சொல்லுவான்' என்பது பழமொழி. 928
9.களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
கட்குடியன் ஒருவனுக்குக் கள்ளினால் விளையும் கெடுதிகளைக் காரணம் காட்டி விளக்குதல் நீரில் மூழ்கியுள்ள ஒருவனை மற்றொருவன் விளக்கினைக் கொண்டு தேடினாற் போன்றதே ஆகும்.
நீரில் மூழ்கி இருப்பவனை விளக்கைக் கொண்டு தேடிக் கண்டறிவது முடியாதது போலக் கள்ளுண்டு களிப்பவனுக்கும் அதன் கெடுதியை விளக்கிக் கூறி அவனைத் திருத்த முடியாது என்பதாம்.
காரணம் காட்டுதல்-விளக்கிக் கூறல்; நீர்க் கீழ்க் குளித்தான்-நீரில் மூழ்கியுள்ளவன்; தீ-விளக்கு; துரீஇயற்று-தேடினாற் போன்றது. 929
10.கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
கள்ளுண்பான் ஒருவன் தான் கள்ளுண்ணாத போது கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் பிறனொருவனைக் காணும் போது கள்ளுண்டு மயங்குவதனால் அடையும் இழிந்த நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும்; (அந்த இழிந்த நிலையை நினைப்பானாயின் அவன் கள்ளுண்டலைக் கை விடுவான் என்பது கருத்து.)
கொல்-ஐயப்பாட்டினைக் குறிக்க வந்த இடைச் சொல். 930
94. சூது
1.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
ஒருவன் சூதாட்டத்தில் வெல்லும் திறமையுடையவனாக இருந்தாலும், அவன் சூதாடுதலை விரும்புதல் கூடாது. சூதாட்டத்தில் வென்ற பொருளும் இரை வைத்து மறைந்த துாண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றதே ஆகும்.
தூண்டில்-மீன் பிடிக்கும் கருவி; பொன்-இரும்பு; ஒரு முறை சூதாடி வென்றவன் மீண்டும் மீண்டும் சூதாடுவதால் தன் கைப்பொருளை இழந்து வருந்துவதற்குத் துாண்டில் இரும்பை விழுங்கிய மீன் அழிந்து போவதை உவமையாகக் கூறினார்.
இரும்பில் உள்ள புழுவை விரும்பி விழுங்கிய மீனானது முடிவில் தன் உயிரையே மாய்த்துக் கொள்வது போன்று முதலில் வந்த சிறு பொருளை எண்ணிச் சூதாடுபவன் முடிவில் தன் கையில் உள்ள எல்லாப் பொருள்களையும் இழந்து விடுகின்றான் என்பது இக்குறளின் பொருளாகும். 931
2.ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
சூதாட்டத்தில் ஒரு பொருளைப் பெற்ற ஆசையாலே மேலும் மேலும் பொருள் பெறலாம் என்று எண்ணிச் சூதாடி, நூறு மடங்குப் பொருளை இழந்து வருந்தும் சூதாட்டக்காரருக்கும் அவர் நலம் பெற்று வாழும் ஒரு வழி உண்டாகுமோ? உண்டாகாது.
சூதர்-சூதாடிகள்; கொல்-ஐயத்தைக் குறிக்க வந்த இடைச் சொல்; நன்று-நன்மை; ஆறு-வழி. 932
3.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
உருளுந் தன்மை வாய்ந்த சூதாடு கருவியை வைத்துக் கொண்டு ஒருவன் இடைவிடாது (பகடை பன்னிரண்டு, தாயம் என்பன போன்றவற்றைக்) கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டுத் தொலைந்து போய்ப் பிறனொருவனிடம் தங்கும்.
உருள் ஆயம்-உருளுந் தன்மை வாய்ந்த சூதாடு கருவி; ஓவாது-ஒழியாது; கூறுதல்-தனக்கு வேண்டும் எண்களை வாயால் சொல்லிக் கொண்டேயிருத்தல் ஆயம்-வருவாய்; புறமே படும்-பிறரிடம் சேரும். 933
4.சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் செய்து, அவனுடைய புகழையும் கெடுக்கின்ற குதினைப் போல வறுமையைத் தருவது வேறொன்றும் இல்லை. 934
5.கவறும் கழகமும் கையும் தருக்கி
சூதாடு கருவியையும், அஃது ஆடும் இடத்தையும், ஆடும் கைத்திறனையும் மதித்துக் கைவிடாதவர் வறியராயினார்.
கவறு-சூதாடும் கருவி; கழகம்-சூதாடும் இடம்; கை-சூது ஆடும் கைத்திறமை; தருக்குதல்-மதித்தல்;. இவறுதல்- விடாது பற்றுதல், விரும்புதல்; இல்லாகியார்- வறியராயினார். 935
6.அகடாரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியான் மூடப்பட் டார்.
சூது என்னும் மூதேவியால் மறைக்கப்பட்டவர் வயிறு நிறைய உண்ண மாட்டார்; மிக்க துன்பப்பட்டு வருந்துவர்.
அகடு-வயிறு; ஆர்தல்-உண்டல்; அல்லல்-துன்பம்; உழப்பர்- வருந்துவர்; முகடி-மூதேவி; மூடப்படுதல்-மறைக்கப்படுதல். 936
7.பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
ஒருவனுடைய காலமானது சூதாடும் இடத்தில் கழியுமானால் அது தொன்று தொட்டு வந்த செல்வத்தையும், இயல்பான நற்குணத்தையும் கெடுக்கும்.
பழகிய செல்வம்-மூதாதையர் சேர்த்து வைத்த செல்வம், பழமை யாய் இருந்து வந்த செல்வம்; காலை-காலம், இளம் பருவம் என்றும் பொருள் கொள்வர். 937
8.பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழ்ப்பிக்கும் சூது.
சூதானது தன்னைப் பற்றினவனது பொருளைத் தொலைத்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து, அவனது இரக்க குணத்தையும் கெடுத்துத் துன்பத்திலும் வருந்தச் செய்யும்.
மேற்கொளீஇ-மேற்கொள்ளச் செய்து, அருள்-கருணை; அல்லல் -துன்பம்; உழப்புதல்-வருந்தச் செய்தல். 938
9.உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
சூதாடுதலை ஒருவன் மேற்கொள்ளுவானானால் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்னும் ஐந்தும் அவனைச் சேர மாட்டா.
ஊண்-உணவு; ஒளி-புகழ்; ஆயம்-சூதாடும் கருவி. 939
10.இழந்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.
பொருளை இழக்குந்தோறும் மேலும் மேலும் ஆடத் தூண்டும் சூதே போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த, உயிர் அந்த உடம்பின் மீது ஆசையை உடையதாகிறது.
இழத்தொறூஉம்-இழக்குந்தோறும்; காதலித்தல் விரும்புதல்; உழத்தொறூஉம்-வருந்த வருந்த; காதற்று-காதலை உடையதாக இருக்கிறது. 940
95. மருந்து
1.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
மருத்துவ நூலோர் வாதம், பித்தம், சிலேத்துமம் என வகுத்துச் சொல்லும் மூன்றும் உடம்புக்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.
நூலோர்-மருத்துவம் வல்ல நூலாசிரியர்கள்; வளி முதலா எண்ணிய மூன்று-வாதம், பித்தமம், சிலேத்துமம் என வகுத்துச் சொல்லிய மூன்று; வளி-வாதம், வாயு; சிலேத்துமம்- கபம். 941
2.மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
ஒருவன் தான் முன்பு உட்கொண்ட உணவு நன்றாகச் செரித்த தன்மையை ஆராய்ந்து அறிந்து பின்பு உண்டால், அவன் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
யாக்கை-உடம்பு; அருந்தியது அற்றது முன்பு உட்கொண்ட உணவு செரித்தது;; போற்றுதல்-தெளிய அறிதல், ஆராய்ந்து அறிதல். 942
3.அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
அற்றல்-செரித்தல்; நெடிது உய்த்தல்-நீண்ட காலம் நிலைத்து நிற்கும்படி செலுத்துதல்; ஆறு-வழி. 943
4.அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
முன் உண்ட உணவு செரித்ததனை அறிந்து, நன்றாகப் பசித்த பிறகு உடம்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டு அவற்றையே உண்ண வேண்டும்.
கடைப்பிடித்தல்-உறுதியாக இருத்தல்; மாறல்ல-மாறுபாடு இல்லாதவை, உடம்புக்குத் தீங்கு புரியாதவை; துவரப் பசித்தல்-நன்றாகப் பசித்தல். 944
5.மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
உடல் நலத்துக்கு மாறுபாடு இல்லாத உணவை அளவுக்கு மீறாமல் உண்டால் உயிருக்கு நேரக் கூடிய பிணித் துன்பம் யாதும் இல்லை!
மாறுபாடு-உடம்புக்கு ஒவ்வாத தன்மை; மறுத்து உண்ணல் -(அளவு மீறின்) தடுத்து அளவோடு உண்ணல். 945
6.இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
ஒருவன் தன் உடம்புக்கு ஏற்ற குறைந்த அளவு உணவு இன்ன அளவினது என்பதை அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நீங்காது நிற்றல் போல் மிகப் பெரிய உணவை உட் கொள்ளுபவனிடம் நோய் நீங்காது நிற்கும்.
இழிவு அறிதல்-உட்கொள்ளத் தக்க உணவின் குறைந்த அளவை அறிதல்; உண்பான் கண்-உண்பவனிடம்; கழிபேர் இரை-மிகவும் அதிகமான உணவு. 946
7.தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
தீ அளவு-உணவு செரித்தற்கு ஒருவன் வயிற்றில் தங்கி யிருக்கும் சூட்டின் அளவு; படும்-ஏற்படும்; செரிக்கும் அளவறிந்து உண்ணுதல் வேண்டும் என்பதாம். 947
8.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
நோய் இன்னது என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்நோய்க்கு முதற் காரணம் இன்னது என்பதையும் ஆராய்ந்து அறிந்து அந்நோயினை தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து உணர்ந்து, அவரவர் உடம்பின் தன்மைக்கும், கால நிலையின் தன்மைக்கும் ஏற்ற வண்ணம் மருத்துவம் செய்தல் வேண்டும்.
நாடுதல்-ஆராய்ந்து அறிதல்; முதல் நாடி-முதற் காரணத்தை ஆராய்ந்து அறிந்து; தணித்தல்-ஆற்றல், தீர்த்தல்; வாய்-வழி; வாய்ப்ப-பொருந்த. 948
9.உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
நோயாளியின் உடல் நிலை, வயது முதலியவைகளின் அளவையும், அவனுக்கு நேர்ந்துள்ள நோயின் அளவையும், அந்நோயைத் தீர்த்தற்கு ஏற்ற காலத்தையும் நன்றாகத் தன் உள்ளத்தில் எண்ணிப் பார்த்துக் கற்றறிருந்த மருத்துவன் மருத்துவம் புரிதல் வேண்டும்.
உற்றான்-நோய் உற்றவன், நோயாளி; கற்றான்-கற்று வல்ல மருத்துவன்; கருதுதல்-எண்ணிப் பார்த்தல். 949
10.உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
அப்பால்நால் கூற்றே மருந்து.
நோய் உற்றவன், நோயைத் தீர்ப்பவன், நோய்க்குத் தக்க மருந்து, மருந்தை அளவும் காலமும் அறிந்து அருகேயிருந்து தருபவன் என்ற அந்த நான்கு பாகுபாடுகளையும் உடையதே மருத்துவ முறையாகும்.
உற்றவன்-நோயாளன்; தீர்ப்பான்-மருத்துவன்; உழைச் செல்வான்-பிணியாளனுக்கு உடனிருந்து உதவுபவன்; அப்பால் -அந்தப் பகுதி; நால் கூற்று-நான்கு பாகுபாடு. 950