ஒழிபியல்

96 .குடிமை


1.இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் அல்லாமல் பிறரிடம் நடு நிலைமை, நாணமுடைமை ஆகியவை ஒருசேர இயல்பாக அமைவதில்லை.

இல் பிறந்தார்-நல்ல குடும்பத்தில் பிறந்தவர்; இயல்பு-எந்த நூலையும் கற்காமலிருந்தும், பிறர் சொல்லக் கேளாமல் இருந்தும், குடும்பக் கால் வழியாக இயற்கையாக அமையும் குணம்; செப்பம்-நடு நிலைமை; நாணம்-செய்யத் தகாத ஒன்றைச் செய்யத் தயங்கும் குணம்; ஒருங்கு-ஒரு சேர, ஒன்றாக.

குறிப்பு: ஒழிபியல் நூலின்கண் முன் இயல்களில் சொல்லாது ஒழிந்தவற்றைக் கூறும் இயல். மணக்குடவரும் பிறரும் இதனைக் குடியியல் என்பர். குடி இயலாவது அரசரும் அமைச்சரும் வீரரும் அல்லாத மக்களது இயல்பு கூறுதல் என்பர் மணக்குடவர். 951

2.ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம், மெய்ம்மை, நாணம் ஆகிய இம்மூன்று குணங்களிலிருந்தும் தவற மாட்டார்கள். 952

3.நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

முகமலர்ச்சி, கொடுக்குங் குணம், இனிய சொல், பிறரை இகழ்ந்து பேசாமை ஆகிய நான்கும் உண்மையான நல்ல குடும்பத்தில் பிறந்தவர்க்கு உரிய கூறுபாடுகள் என்று நல்லோர் சொல்லுவர். 953

4.அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

பல கோடி அளவில் அடுக்கிய பொருளைப் பெற்றாலும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான தீய செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

குன்றுவ-பிறரால் இகழப்படுவதற்குக் காரணமான தீய செயல்கள் 954

5.வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று.

தாம் முன்பு பிறருக்குக் கொடுத்துதவியதை விட வறுமையின் காரணமாகக் குறைவாகக் கொடுத்துதவக் கூடிய நிலை நேர்ந்த போதும், பழம் பெருமையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் தம் இயல்பிலிருந்து நீங்குவது இல்லை.

உள் வீழ்தல்-சுருங்க நேர்தல், குறைவாகக் கொடுக்க நேர்தல்; பழங்குடி பல தலைமுறையாக நல்ல குடும்பம் என்று பேரெடுத்து வந்த குடும்பம்; பண்பு-கொடுத்துதவும் குணம்; தலைப்பிரிதல்-நீங்குதல். 955

6.சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

‘குற்றமற்ற நற்குடிப் பண்புடன் வாழ்வோம்' என்று எண்ணி வாழ்பவர், கோபம் காரணமாக அல்லது வஞ்சிக்கும் எண்ணம் கொண்டு தமக்குத் தகுதியில்லாத இழிசெயல்களைச் செய்ய மாட்டார்.

சலம்-வஞ்சனை அல்லது கோபம்; சால்பு-தகுதி, நல்ல பண்பு; ; மாசு அற்ற குலம்-குற்றம் அற்ற குடி. 956

7.குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர்ந்த குடும்பத்தாரிடம் உண்டாகும் குற்றம் வானத்தில் உள்ள சந்திரனிடம் காணப்படும் களங்கம் போலப் பலரும் அறியும்படி உயர்ந்து தோன்றும்.

விசும்பு-வானம்; மதி-சந்திரன்; மறு-களங்கம். 957

8.நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

ஒருவனுக்கு நல்ல குணத்தில் அன்பின்மை தோன்றினால், அவன் குடிப் பிறப்பின் கண் ஐயங் கொள்ள நேரும்.

நார்-அன்பு; ஐயப்படல்-சந்தேகப்படுதல். 958

9.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

நிலத்தின் இயல்பை அந்த நிலத்தில் முளைத்த முளை தெரிவிக்கும்; அது போல ஒருவன் பிறந்த குலத்தின் தன்மையை அவன் வாய்ச் சொல் அறிவிக்கும்.

கால்-முளை; காட்டும்-அறிவிக்கும். 959

10.நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டும் யார்க்கும் பணிவு.

ஒருவன் தனக்கு நலம் வேண்டும் என்று விரும்புவானானால், அவன் நாணம் என்னும் பண்பினை விரும்புதல் வேண்டும். அவ்விதமே, குடியின் உயர்வை அவன் விரும்புவானானால், அவன் எல்லாரிடத்தும் பணிந்து நடத்தலை விரும்புவானாக.

நாணுடைமை-தகாதவற்றைச் செய்ய அஞ்சும் தன்மை. 960

97. மானம்


1.இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

இன்றியமையாத சிறந்த செயல்களே ஆயினும், அவற்றால் ஒருவன் குடிப்பிறப்புத் தாழ நேரின், அந்தச் செயல்களை அவன் ஒழித்தல் வேண்டும்.

இன்றி அமையாச் சிறப்பின பசுவுக்கு நீர் வேண்டுதல் பெற்ற் தாயின் பொருட்டு இழி செயல் புரிதல் போல்வன; குன்ற் வருப-தன் நிலை அல்லது தன் குடும்ப நிலை தாழ்வாகக் கருதப்படத் தக்க செயல்கள்.

மானம்-'எக்காலத்தும் தமது நிலையில் திரியாமை’ என்பர் மணக்குடவர்; 'எந்தக் காலத்தும் தம் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு நேர்ந்த போது உயிர் வாழாமையும்' என்பர் பரிமேலழகர். 961

2.சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

மிகுந்த சிறப்பினையும், பேராண்மையினையும் விரும்புகின்றவர் செல்வம் முதலிய பெருமைகள் ஏற்படுமாயினும், புகழைத் தாராத இழிந்த செயல்களைச் செய்ய மாட்டார்.

சீர்-சிறப்பு, புகழ், செல்வம்; பேராண்மை-மிகுந்த ஆண்மை.

'சீரினும் சீர் அல்ல செய்யார்’ என்னும் சொற்றொடருக்குப் பரிமேலழகர் 'புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார் 'என்று பொருள் கொள்கின்றார். இதே தொடருக்கு மணக்குடவர் ‘தமக்குப் பொருள் மிகுதி உண்டாயினும், நிகரல்லன செய்யார்’ என்று பொருள் கொள்கின்றார். 962

3.பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

நல்ல குடியில் பிறந்தவர் நிறைந்த செல்வம் பெற்ற போது எல்லாரிடமும் பணிவாக இருத்தல் வேண்டும்; செல்வம் குறைந்து சுருங்கிய காலத்தில் அவர் (தம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல்) தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

பெருக்கம்-செல்வம், பதவி முதலியன உயர்ந்து இருக்கும் சிறந்த நிலை; சிறிய சுருக்கம்-செல்வம், பதவி முதலியன மிகவும் சுருங்கிய வறுமைக் காலம். 963

4.தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

மக்கள், தங்கள் உயரிய நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் போது தலையிலிருந்து நீங்கிய மயிரைப் போன்று இகழப்படுவார்கள்.

தலையில் உள்ள வரை நறுநெய் பூசி அணி செய்யப்படும் மயிர் தலையிலிருந்து உதிர்ந்து விட்டால் வெறுத்து ஒதுக்கப் படுகிறது. அங்ஙனமே தம் நிலையில் உள்ள வரையில் ஒருவருக்குப் பெருமை உண்டு: நிலையின் இழிந்தால் உலகத்தவரால் வெறுக்கவே படுவர் என்பது கருத்து.

மாந்தர்-மக்கள்; இங்கே உயர்குடி மக்களைக் குறிக்கும்; இழிந்த-நீங்கிய, தாழ்ந்த; நிலை-பதவி. 964

5.குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

செல்வம், சிறப்பு முதலியவைகளால் மலை போன்ற நிலையில் உள்ளவரும் இழிவுக்குரிய செயல்களில் ஒரு குன்றி மணி அளவு செய்ய நேர்ந்தாலும், தமக்குரிய மதிப்பில் குறைந்து போய் விடுவர்.

குன்றின் அனையார்-மலை போன்று உயர்ந்த தன்மையர்; குன்றுவர்-குறைந்து விடுவர்; குன்றுவ-தாழ்தற்குக் காரணமான செயல்; குன்றி-குன்றிமணி. 965

6.புகழ் இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

தன்னை இகழ்ந்துரைப்பார் பின் சென்று நிற்கும் நிலை ஒருவனுக்கு இம்மையிலும் புகழைத் தராது: மறுமையிலும் அவனைத் தேவருலகத்துச் செலுத்தாது. எனவே, அவரைப் பின்பற்றிச் செல்வதால் என்ன பயன்?

இகழ்ந்துரைப்பார் பின் சென்று நிற்பவனுக்கு இழிவைத் தவிர்த்து நன்மை சிறிதும் இல்லை என்பது கருத்து.

இன்றால்-இன்று, ஆல், அசை; புத்தேள் நாடு-தேவர் உலகம்; உய்யாது-செலுத்தாது; என்-என்ன பயன்; மற்று-அசை நிலை; சென்று நிலை-சென்று நிற்கின்ற நிலை. 966

7.ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

தன்னை மதித்துத் தம்முடன் சேர்த்துக் கொள்ளாதவர் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவன் தன் நிலையிலேயே நின்று அழிந்தான் என்று சொல்லப் படுதல் அவனுக்கு நன்று.

ஒட்டார்-சேர்த்துக் கொள்ளாதவர், அவமதிப்பவர்l அந்நிலையிலேயே-தான் இருந்த துன்ப நிலையிலேயே; ;கெட்டான் அழிந்தான், இறந்தொழிந்தான். 967

8.மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கைப் பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

ஒருவனுக்குள்ள பெருந்தன்மையானது தன் வலிவை இழக்கக் கூடிய நிலை நேர்ந்த போது அவன் தன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை இறவாமைக்கு மருந்தாகுமோ? ஆகாது.

மருந்து-இறவாமல் இருக்கச் செய்யும் தேவாமிர்தம்; ஊன்-தசை, இங்கே உடம்பினைக் குறிக்கும்; ஒப்புதல்- பாதுகாத்தல்; பீடு-பெருமை அல்லது வலிமை; பெருந்தகைமை-பெரிய தகைமை, பெருமதிப்பு. 968

9.மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமான் போன்ற இயல்புடையவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

கவரிமான்-ஒருவகை மான்; அன்னார்-போன்றவர்; உயிர் நீப்பர்-உயிரை விட்டு விடுவர்; மானம் வரின்-மானம் கெடவரின். 969

10.இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

தமக்கு இழிவு நேர்ந்த விடத்து உயிர் வாழாத மனமுடையவரின் புகழை உலகத்தார் வணங்கிப் போற்றுவர்.

இளி-இழிவு, மானக்கேடு; ஒளி பெருமை, புகழ்; தொழுது ஏத்தும்-வணங்கிப் போற்றுவர். 970

98. பெருமை


1.ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

ஒருவனுக்குப் பெருமதிப்பாவது செயற்கரிய செயலைச் செய்ய எண்ணும் ஊக்க மிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவானது அந்த ஊக்க மிகுதி இல்லாமலேயே உயிர் வாழலாம் என்று எண்ணுதலேயாகும்.

உள்ள வெறுக்கை-ஊக்க மிகுதி; அஃது இறந்து அந்த ஊக்க மிகுதி நீங்கி; வாழ்தும்-வாழலாம்; எனல்-என்று எண்ணுதல். 971

2.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆனால் ஒருவன் செய்யும் தொழிலினது உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

ஒக்கும்-ஒத்திருக்கும், ஒரே தன்மையுடையதாக இருக்கும்; சிறப்பு- பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள். 972

3.மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

மேலான இடத்தில் இருந்தாலும், மேன்மைக் குணம் இல்லாதவர் மேன்மக்கள் ஆகார். கீழான இடத்தில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாத மேன்மக்கள் கீழ்மக்கள் ஆகார்.

மேல்-மேலிடம், உயர்ந்த பதவி, உயர்ந்த குடும்பம் முதலியன; கீழ் - தாழ்ந்த பதவி, தாழ்ந்த குடும்பம். 973

4.ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

ஒரே மன உறுதியோடுள்ள கற்புடைய மகளிர் போல ஒருவன் தன் ஒழுக்கத்திலே ஒரே மன உறுதியோடு இருந்து தன்னைத்தான் காத்துக் கொண்டு ஒழுகி வருவானாயின், அவனிடம் பெருமைக் குணம் உண்டு.

ஒருமை மகளிர்-தம் கணவரையே தெய்வமாக மதித்து, அவர் கருத்துப்படி மன உறுதியோடு நடக்கும் கற்புடைய மகளிர்; தன்னைத் தானே காத்துக் கொண்டு வாழைக்கை நடத்துதல். 974

5.பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

பெருமைக்கு உரிய குணம் உடையவர், பிறர் செய்வதற்கு அரியனவாய செயல்களைச் செய்து முடிக்கும் வழியில் வழுவாது இருந்து செய்து முடிப்பர். 975

6.சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

பெரியாரைப் போற்றி அவரது இயல்பினை நாம் அணையாகக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமையுடையார் அறிவில் புலப்படுதல் இல்லை.

சிறியார் அறிற்விற் சிறியார், குண நலன்களில் சிறுமைபுடையவர்; பேணுதல்-போற்றுதல்; நோக்கு-கருத்து. 976

7.இறப்பே புரிந்து தொழிற்றாம் சிறப்பும்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள், பதவி முதலியவைகளால் ஆன சிறப்பும் பெருந்தன்மை அற்ற சிறியாரிடத்தில் பொருந்துமானால், அது வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தொழிலையுடையதாகும்.

இறப்பு-வரம்பு கடந்த செயல்; தொழிற்று ஆம்-தொழிலையுடையது ஆகும்; சிறப்பு-பொருள், பதவி முதலியவைகளால் ஆன உயரிய நிலை; சீர் அல்லவர்-சிறப்பற்ற சிறியோர்; படுதல்-பொருந்துதல், தங்குதல். 977

8.பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமைக் குணமானது எக்காலத்திலும் பணிவோடு இருக்கும்; மற்றைச் சிறுமைக் குணமோ தன்னைத் தானே புகழ்ந்து பாராட்டிக் கொள்ளும்.

பெருமை, சிறுமை என்பன முறையே பெருந்தன்மை வாய்ந்த பெரியாரையும், சிறுமைக் குணமுடைய சிறியாரையும் குறிக்க வந்தவைகளாகும். 978

9.பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பெருமைக் குணமாவது, பெருமைப்படுதற்குரிய காரணம், உண்டான போதும் செருக்கு இல்லாமல் இருத்தல்; சிறுமைக் குணமாவது எத்தகைய காரணம் இன்றியும் அளவு கடந்த செருக்கினைக் கொண்டு இருத்தல்.

பெருமிதம்-செருக்கு; ஊர்ந்துவிடல்-மேற்கொள்ளல். 979

10.அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பெருமைக் குணம் உடையோர் பிறருடைய குறைபாட்டை மறைத் துப் பேசுவர்: சிறுமைக் குணம் உடைத்தோர் குணத்தை மறைத்துப் பிறருடைய குற்றத்தையே, கூறி விடுவர்.

அற்றம்-அவமானம், குறைபாடு, மறைக்கத் தக்கது; குற்றமே என்பதில் உள்ள ஏகாரம் குற்றத்தைத் தவிர்த்துப் பிற நலன்களை அவர் கூறார் என்பதைத் தெரிவிக்க வந்த இடைச்சொல். 980

99. சான்றாண்மை


1.கடனென்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

தம் கடமைகள் இவை என்பதை அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாய் இருக்கும் என்று அறிஞர் சொல்லுவர்.

கடன்-கடமை, செய்யத் தக்கவை, இயல்பு; சான்றாண்மை-பெருந்தன்மை;பல நற்குணங்களையும் பெற்று ஆளுந்தன்மை. 981

2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

சான்றோர் நலமாவது அவருடைய குண நலமே. மற்ற நலம் வேறு எவ்வகையான நலத்திலும் உள்ளதொரு நலம் அன்று. 982

3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊனழிய தூண்.

அன்புடைமை, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்களாகும்.

நாணம்-பழி பாவங்களைப் புரிய அஞ்சும் குணம்; ஒப்புரவு-உலக ஒழுக்கத்துக்கு ஒத்து நடந்து கொள்ளுதல்; கண்ணோட்டம்-தாட்சண்யம்; வாய்மை-உண்மை; சால்பு-நற்குணம்; ஊன்றிய-தாங்க நிறுத்திய. 983

4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

தவம் என்பது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாத நற்குணத்தை அடிப்படையாகக் கொண்டது.

நோன்மை-தவம்; சால்பு-நற்குணம். 984

5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

ஒரு செயலைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது அதற்குத் துணையாளர் எல்லார்க்கும் பணிவாக இருத்தல்; அந்தப் பணிவு சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றிக் கொள்ளும் கருவி ஆகும்.

ஆற்றுவார்-ஒரு செயலைச் செய்து முடிப்பவர்; ஆற்றல்-வல்லமை, செய்து முடிக்கும் தன்மை; மாற்றார்-பகைவர்; மாற்றுதல்-வேறுபடுத்தல்; படை-கருவி. 985

6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லா கண்ணும் கொளல்.

சால்பாகிய பொன்னின் அளவை அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனில், அது தமக்கு நிகரில்லாதவரிடமும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் குணமே ஆகும்.

கட்டளை-உரைகல், பொன்னின் தரத்தை அறிந்து கொள்ள உரைத்துப் பார்க்கும் கல்; துலை-சமம். 986

7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?

தமக்குத் தீமைகளைப் புரிபவர்க்கு இனிய செயல்களைச் செய்யா விட்டால் ‘சால்பு' என்னும் குணத்தால் உண்டாகக் கூடிய நல்ல பயன் வேறு என்னவாக இருத்தல் கூடும்?

இன்னா-தீயன; பயத்தது-பயனைத் தரக்கூடியது. 987

8.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத வறுமை நிலை இழிவானது அன்று.

இன்மை-பொருளின்மை, வறுமை; இளிவு-இழிவு; திண்மை-வலிமை; உறுதி. 988

9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

சான்றாண்மை என்னும் குணத்துக்குக் கடலைப் போன்றவ்ர் என்று புகழப்படுபவர் ஊழிக் காலத்தில் உலகமே நிலை மாறினாலும் தாம் தம் உயரிய கருத்து நிலையிலிருந்து மாற மாட்டார்.

ஊழி-பெருவெள்ளத்தால் உலகம் முடியும் காலம்; ஆழி-கடல். 989

10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோர் தம் தன்மையிலிருந்து குன்றுவாரானால், இந்தப் பெரிய உலகமானது தன்னுடைய பாரத்தைத் தாங்க முடியாததாகி விடும்.

சான்றவர்-பல நற்குணங்களும் நிறைந்தவர்; இரு நிலம்-பெரிய உலகம்; பொறை-பாரம்; மன் ஓ என்னும் இரண்டும் இரக்கப் பொருளைக் காட்டவந்த இடைச் சொற்களாகும். 990 }}

100. பண்புடைமை


1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

யாவரிடத்தும் அவர்கள் எளிதாகக் கண்டு உரையாடக் கூடிய தன்மையில் இருப்பதால், பண்புடையவராக வாழும் நல்ல வழியை அடைதல் எளிதென்று அறிஞர் சொல்லுவர்.

யாவரிடத்தும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை தானே வந்து எய்தும் என்பதாம்.

எண்பதும்-எவரும் எளிதாகக் காணக்கூடிய தன்மை, பண்புடைமை -ஒத்த அன்பினராய்க் கலந்து ஒழுகும் தன்மை; வழக்கு-வழி; என்ப -என்று சொல்லுவர். 991

2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடையவராக இருத்தலும் உயர்ந்த குடிபிறப்பு உடையவராக இருத்தலும் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நல்ல வழியாகும்.

ஆன்ற குடி-உயர்ந்த குடி; நல்ல வழியாகும். 992


3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உறுப்புக்களில் ஒத்திருத்தல் மட்டும் மக்கள் எனப்படுதற்குரிய ஒப்புமையாகாது. செறியத் தக்க மக்கட்பண்பால் ஒத்திருப்பதே பொருத்தமான ஒப்புமையாம்.

உறுப்பு ஒத்தல்-அவயவங்கள் மட்டும் ஒத்திருத்தல்; வெறுத்தக்க- செறியத் தக்க (செறிவு-நெருக்கம்)

உறுப்புக்களால் நன்மக்களுக்கு ஒப்பாக இருத்தல் ஒப்புமையாகாது. பண்பால் இவர்கட்கு ஒப்புமையுடையவராக இருத்தலே சிறந்த ஒப்புமையாகும் என்றும் பொருள் கூறலாம். 993

4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறருக்குப் பயன்படும்படி வாழ்பவர் தம் பண்பை உலகத்தார் கொண்டாடுவர்.

நயன்-நீதி; நன்றி-நன்மை; புரிதல்-விரும்புதல்; பயனுடையர்- பயன்படும்படி வாழ்பவர்; உலகு-உலகில் உள்ள பெரியோர் அல்லது உலகத்தவர். 994

5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டில் கூட நல்லது அன்று. எனவே உலக இயல்பை அறிந்து நடப்பவரிடம் பகைவர் மாட்டும் நல்ல பண்புகளே உள்ளனவாகும்.

பண்புடையார், தம் பகைவரிடமும் துன்பம் நேரும் வகையில் நடந்து கொள்ள மாட்டார் என்பது கருத்து.

நகை-விளையாட்டாகப் பேசுதல், சிரிக்க வைப்பதற்காகப் பேசுதல்: இன்னாது-நல்லது அன்று. துன்பம் தருவது; பாடறிவார்-உலக இயல்பை அறிந்து நடப்பவர்; பாடு-உலக ஒழுக்கம்.

உதாரணம்: 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலித்தொகை) 995

6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

பண்புடையவர்கள் தோன்றி வாழ்வதனாலேயே, இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தோன்றாதொழியின் இவ்வுலகம் மண்ணில் புகுந்து அழிவது உறுதியாகும்.

பண்பு-நல்ல குணம்; பறிதல்-தோன்றுதல்; மண்புக்கு-மண்ணில் புகுந்து; மாய்தல்-அழிதல்; உலகம் என்பது இங்கு உலகியலைக் குறிக்கிறது. 996

7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

ஒருவர், அரம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் அவரிடம் மக்கட்பண்பு என்னும் நல்ல குணம் இல்லாதிருந்தால் அவர் ஒர் அறிவுடைய மரத்துக்குச் சமம் ஆவர்.

அரம்-இரும்பு முதலிய உலோக வகைகளை ஆராயும் கருவி; மக்கட்பண்பு-மக்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணம், மனிதத் தன்மை. 997

8.நண்பற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

ஒருவர், தம்முடன் நட்புக் கொள்ளாது நன்மை அல்லாத செயல்களையே செய்யும் பகைவரிடத்திலும் பண்புடையவராக ஒழுகா விட்டால் அவர் இழிந்தவரே ஆவர்.

நண்பு+ஆற்றார்-நண்பாற்றார்; ஆற்றார் - நடந்து கொள்ளாதவர்; நயம்-நன்மை, அன்பு, இனிமை; கடை-இழிந்தவர். 998

9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பிறரோடு கலந்து மகிழ்வோடு பழக முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகமானது பகற்காலத்திலும் இருண்டு கிடப்பதாகவே தோன்றும்.

நகல்-அன்போடு கலந்து உறவாடுதல்; மா-பெரிய; இரு- பெரிய; மாயிறு-மிகப் பெரிய; ஞாலம்-பூமி, உலகம்.

பகலும் இருள்பால் பட்டன்று என்று கூட்டிப் பகற் பொழுதிலும் இருளின் கண் அழுந்திக் கிடக்கும் எனற் கொள்க. 999

10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

நல்ல குணம் இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம் பயனற்றுப் போவது நல்ல பசுவின் பால், அது வைக்கப் பெற்ற கலத்தின் தீமையால் கெட்டுப் போவது போன்றதாம்.

நன்பால்-நல்ல பசுவின் பால்; கலம்-பாத்திரம்: கலந்தீமை-கலத்தின் தீமை, நன்றாகக் கழுவப் பெறாததால் அழுக்குப் படிந்த செம்பு; திரிந்தற்று-கெட்டுப் போவது போன்றது. 1000

101. நன்றியில் செல்வம்


1.வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

வீடு முழுதும் நிறைந்துள்ள பெரும் பொருளை ஒருவன் சேர்த்து வைத்திருந்து, அதனை அவன் அனுபவிக்காமல் இறந்து போவானானால், அந்தப் பொருளால் அவனுக்குச் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை.

வாய்-இடம், இங்கே இது வீட்டைக் குறிக்கும்; சான்ற-நிறைந்துள்ள; சால்-நிறைதல்; வாய் சான்ற பொருள்- உண்பதற்காகவே தேடிய பெரும் பொருள் எனப் பொருள் கூறுவதும் பொருந்தும்.

குறிப்பு: "அஃது உண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல" என்னும் சொற்றொடருக்கு "அந்தப் பொருளை அனுபவியாமல் அவன் இருந்தானானால், அவன் இறந்தவனுக்கே சமமாவான் ஏனெனில், அவன் அந்தப் பொருளால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை" என்று உரைப்பினும் அமையும். 1001

2.பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருளாலே எல்லாம் முடியக் கூடும் என்று எண்ணிப் பிறருக்குச் சிறிதும் கொடுக்காமல் இருக்கும் கருமித்தனமாகிய மயக்கத்தினால் சிறப்பில்லாத இழிந்த பிறப்பே உண்டாகும்.

ஆம் எல்லாம்-எல்லாம் ஆகும்; ஈயாது-உதவாமல்; இவறுதல்- கருமியாக இருத்தல்; மருள்-மயக்கம்; மாணாப் பிறப்பு- சிறப்பில்லாத இழிந்த பிறப்பு; மருளான் மாணாப் பிறப்பு ஆம் என இயைக்க. 1002

3.ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை.

பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே விருப்பங் கொண்டு பிறர்க்கு உதவுவதால் வரும் புகழையும் விரும்பாத மனிதர் பிறந்திருத்தல் பூமிக்கே பாரம் ஆகும்.

ஈட்டம்.சொத்து வைத்தல்; இவறல்-விரும்புதல்; இசை-புகழ்; நிலக்கு-நிலத்துக்கு, பூமிக்கு; பொறை-பாரம்.

'இவறி’ என்பதற்கு உலோப குணம் கொண்டு என்றும் பொருள் கொள்ளலாம். 1003

4.எச்சமென்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பிறருக்கு ஒன்றும் உதவாதிருத்தலால், ஒருவராலும் விருப்பப்படாதவன் தான் இயந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?

எச்சம்-எஞ்சி நிற்பது; கொல்லோ-கொல், ஓ-இவை ஐயப் பொருளில் வந்தவை; நச்சுதல்-விரும்புதல். 1004

5.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பிறருக்குக் கொடுத்து உதவுவதும், தாம் உண்டு களிப்பதும் இல்லாதாருக்கு அடுக்கடுக்காகப் பலப்பல கோடி மதிப்புள்ள செல்வம் இருப்பதாக இருந்தாலும், அவை யாவும் இல்லாததற்குச் சமமே ஆகும்.

துய்த்தல்-நுகர்தல்; அடுக்கிய கோடி-பலப்பல கோடி. 1005

6.ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

தானும் அனுபவிக்காமல், தகுதி வாய்ந்தவர்க்கு ஒன்றைக் கொடுத்துதவும் குணமும் இல்லாமல் இருப்பவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவன்.

ஏதம்-துன்பம், இங்கே நோய் என்பது பொருள். துவ்வான்- அனுபவிக்காமல். 1006

7.அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஆதரவு அற்றவர்களுக்கு ஒரு சிறு பொருளேனும் கொடுத்து உதவாதவன் செல்வம் எதற்குச் சமம் என்றால், ஒருவனை மணந்து கொள்வதற்கு வேண்டிய எல்லா நலங்களும் குறைவறப் பெற்ற கன்னி ஒருத்தி எவரையும் மணந்து கொள்ளாமல், தன்னந் தனியாகவே இருந்து முதுமை அடைந்து வருந்துவதற்குச் சமம் ஆகும்.

அற்றார்-ஆதரவு அற்றவர், வறியவர்; ஒன்று-ஒரு சிறு பொருள்; ஆற்றாதான்-கொடுத்து உதவாதவன்; ஆற்றுதல்-(வேண்டுவன கொடுத்துத்) துன்பத்தைத் தணிவித்தல்; மிக நலம்-அளவுக்கு மீறிய நலம்; தமியள்-தனியாக இருப்பவள்; மூத்தற்று-முதுமை யுற்றாற் போலும். 1007

8.நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பிறரால் விரும்பப்படாத கருமி ஒருவன் செல்வம் பெற்றிருத்தல் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்திருத்தலுக்குச் சமம் ஆகும்.

நச்சு மரம் ஊருக்கு நடுவில் இருந்தாலும், அதன் பழத்தை எவரும் விரும்பார்; ஆதலால், அது யாருக்கும் பயன்படாது. அது போலப் பிறருக்கு உதவாத கருமியின் பணமும் ஒருவனுக்கும் பயன்படாமல் அழியும்.

நச்சுதல்-விரும்புதல்; நச்சுமரம்-விஷத்தன்மையுள்ள மரம்; பழுத்தற்று-பழங்களையுடையதாக இருத்தற்குச் சமம். 1008

9.அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பிறருடைய அன்பையும் இழந்து, தன்னையும் வருத்தி, அறம் புரியவும் எண்ணாமல் சேர்த்து வைத்த மிக்க செல்வத்தை அயலார் கொண்டு செல்வர்.

ஒரீஇ -நீத்து, விடுத்து; தற்செற்று-தன்னை வருத்திக் கொண்டு, (அஃதாவது உண்ணாமலும் உடுக்காமலும் வருத்திக் கொள்ளுதல்); அறம் நோக்காது-தருமம் புரிய எண்ணாமல்; ஒண்மை-மிகுதி. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது முதுமொழி. 1009

10.சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

சிறந்த குணநலம் பொருந்திய செல்வர் சிறிது காலம் வறுமைப் பட்டிருந்தாலும் அந்தச் சிறிய காலம் எது போன்று இருக்கும் என்றால் மழை பெய்து உலகைக் காக்கும் மேகமானது வறண்டு போக மழையைப் பொழியாமல் இருந்தால், உலகத்துக்கு எவ்வளவு துன்பம் உண்டாகுமோ அவ்வளவு துன்பத்தை மக்கள் அனுபவிக்கும் காலமாக இருக்கும்.

சீர்-சிறப்பு , பெருமை; துனி-வெறுப்பு. இங்கே இச்சொல் வெறுக்கத் தக்க வறுமையைக் குறிக்க வந்துளது; மாரி-மழை; மழையைப் பொழியும் மேகத்துக்கு ஆகி வந்தது; வறங்கூர்தல்-மழை பெய்யாது போதல்; வறம்-வற்றுதல்; கூர்தல்-மிகுதல்; அனையது-அத்தகையது. 1010

102. நாணுடைமை


1.கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

செய்யத் தகாத செயல் காரணமாக நாணுவதே நாணம் ஆகும். அஃது அல்லாத பிற நாணங்கள் அழகிய நெற்றியையுடைய பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள நாணத்துக்கே ஒப்பாகும் .

கருமம்-செயல், இங்கே இச்சொல் இழிசெயலைக் குறிக்க வந்துள்ளது. நாணுதல்-நமக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய வெட்கப்படுதல்; திரு-அழகிய; நுதல்-நெற்றி; நல்லவர்-பெண்கள். 1011

2.ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவும் உடையும் அவை போல்வன பிறவும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. மக்களுக்குச் சிறப்பாக இருப்பது நாணமே ஆகும்,

ஊண்-உணவு; எச்சம் (ஊண், உடை ஒழிந்த) மிகுதி; அஃதாவது உறக்கம், அச்சம், ஆசை முதலியன போன்று எஞ்சி நிற்பவை; 'எச்சம்' என்பதற்குப் ப்திலாக 'அச்சம்' என்று பாடங் கொள்வாரும் உளர். 1012

3.ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

உயிர்களெல்லாம் ஊனாலாகிய உடம்பைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டு உள்ளன. அது போலச் சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நற்குணத்தை இருப்பிடமாகக் கொண்டதாகும்.

ஊன்-ஊனாலாகிய உடல்; குறித்த இருப்பிடமாகக் கொண்டன; நன்மை-நல்ல குணம்; சால்பு-மேன்மை.

குறிப்பு: 'ஊனைக் குறித்த' என்றும் பாடபேதம் உண்டு. இதற்கு 'எல்லா உயிர்களும் உணவையே குறிக்கோளாகக் கொண்டு உயிர் வாழ்கின்றன' என்று பொருள் கொள்ளலாம். 1013

4.அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை?

சான்றோருக்கு நாணுடைமையே ஆபரணமாகும்; அந்த நாணம் என்பதை மறந்து பெருமிதத்தோடு நடந்து செல்வது, அந்த நடையைக் கண்டாருக்குப் பிணி போன்றே தோன்றும்.

பீடு நடை-பெருமித நடை, கர்வத்தோடு எவரையும். பொருட் படுத்தாமல் நடந்து செல்லும் நடை.

குறிப்பு: அழகு செய்தலின் 'அணி' என்றும், காண்போருக்குப் பொறுத்தற்கு இயலாத தன்மையில் இருத்தலின் 'பிணி’ எனறும் கூறினார் என்பர் பரிமேலழகர். 1014

5.பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

பிறருக்கு வரும் பழியையும், தமக்கு நேர்ந்த பழியையும் அஞ்சி நாணுபவர்களை நாணுக்கு ஓர் இருப்பிடம் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறைபதி-இருப்பிடம்; உலகு-உலகத்தவர்.

தம் பழிக்கு அஞ்சி நாணுதலே அன்றிப் பிறர் பழிக்கும் அஞ்சி நாண வேண்டும் என்பது கருத்து. 1015

6.நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

மேன்மக்கள் தங்களுக்கு நாணத்தைப் பாதுகாப்பாகக் கொள்வார்களே அன்றி, அதனை ஒழித்து அகன்ற உலகில் வாழ்வதை விரும்ப மாட்டார்கள்.

மேன்மக்கள் நாணத்தை விடுத்து உலகில் வாழ மாட்டார்கள் என்பது கருத்து.

வேலி-பாதுகாப்பு; வியன் ஞாலம்-இடம் அகன்ற உலகம்; பேணலர் -விரும்பார். மன்னும் ஓவும் அசை.

குறிப்பு: நாணத்தைப் பாதுகாப்பாகக் கொள்வதன்றி ஞாலமே பெறக் கூடும் எனினும் மேலோர் விரும்பார் என்று பொருள் கூறுவாரும் உண்டு. 1016

7.நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

நாணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர், நாணத்துக்காக உயிரை விடுவாரே அன்றி உயிருக்காக நாணினை இழக்க மாட்டார்.

துறத்தல்-இழத்தல், நீங்கியிருத்தல், விடுதல்; நாண் ஆளுதல்- நாணினைத் தம் கொள்கையாகக் கொண்டு ஒழுகுதல்.

நாணம் உயிரினும் சிறந்தது என்பது கருத்து. 1017


8.பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்

அறம்காணத் தக்கது உடைத்து.

பிறர் கண்டு நாணத் தக்க பழியைத் தான் நாணாது செய்வானானால், அச்செயல் அறம் நாணி அவனை விட்டு விலகக் கூடிய குற்றத்தினை உடையதாகும்.

நாணமில்லாதவரிடம் அறச்செயல் சிறிதும் இராது என்பது கருத்து. 1018


9.குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்

நாணின்மை நின்றக் கடை.

ஒருவன் தன் ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பானானால், அஃது அவன் குடிப்பிறப்பின் உயர்வை மட்டும் கெடுக்கும். அவனிடத்தில் நாணமில்லாத தன்மை நிலைபெற்று இருக்குமானால், அஃது அவன் நலன்களையெல்லாம் கெடுத்து விடும்.

குலம்-குடிப்பிறப்பு; சுடுதல்-கெடுத்தல், அழித்தல்; நின்றக் கடை- நிலை பெற்று இருக்குமானால்.

ஒழுக்க அழிவினும் நாண் அழிவு மிகவும் தீயது என்பது கருத்து. 1019

10.நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி யற்று.

உள்ளத்தில் நாணம் இல்லாத மக்கள் உலகத்தில் நடமாடுதல் எதற்குச் சமம் என்றால், மரத்தால் செய்யப்பட்ட பதுமையானது கயிறு கொண்டு ஆட்டப்படுவதனால் இயங்கிக் காண்போருக்கு உயிர் உள்ளதாகத் தோன்றி மயக்குவதற்குச் சமமாகும்.

அகம்-உள்ளம், மனம்; இயக்கம்-நடமாட்டம்; பாவை-பதுமை; நாண் - நாணம்; நாணால்-கயிற்றால்.

நாணம் இல்லாதார் மக்களே அல்லர்; உயிரற்ற மரம் போல்வர் எனபது கருத்து. 1020

103. குடிசெயல் வகை


1.கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையில் பீடுடையது இல.

ஒருவன் தான் செய்ய மேற்கொண்ட செயலைச் செய்யும் போது இச் செயலைச் செய்து முடிக்கும் வரை தான் சோர்வடைய மாட்டேன் என்று சொல்லும் பெருமையைப் போல மேம்பாடானது வேறு ஒன்றும் இல்லை.

கருமம்-செயல், இஃது இங்கே குடும்பச் செயலைக் குறிக்கும்; கைதூவல்-சோர்வு கொள்ளல்; கைதூவேன்-சோர்வடைய மாட்டேன்; பீடு-பெருமை, மேன்மை.

குடிசெயல் வகை-பிறந்த குடும்பத்தை உயரச் செய்யும் திறமை. 1021

2.ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

முயற்சியும், நிறைந்த அறிவும் ஆகிய இரண்டினையும் உடைய இடையறாத செயலால் ஒருவன் குடும்பம் உயரும்.

ஆள்வினை-முயற்சி; ஆன்ற-நிறைந்த; நீள் வினை-விடாது புரியும் செயல்: நீளும் குடி-குடும்பம் உயரும். 1022

3.குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

'என் குடும்பத்தை உயரச் செய்வேன்’ என்று கூறி, அதற்காக முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு உதவி புரிய முன் வந்து நிற்கும்.

செ்வல்-செய்வேன்;: தெய்வம்-இச்சொல் இங்கே ஊழ்வினையைக் குறிக்க வந்தது. மடிதற்றுதல்-தொழில் புரிவார் தம் ஆடையை இறுகக் கட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் குறிக்கும். தெய்வம் அல்லது ஊழ்வினை மடி தற்றுதலாவது, ஒருவன் செய்யும் முயற்சியை அவன் ஊழ்வினை மிகவும் எளிய தன்மையில் நிறைவேற்றி வைக்கும் என்பதாம்; முந்துறுத்தல்-முன் வந்து நிற்றல். 1023

4.சூழாமல் தானே முடிவெய்தும் தன்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

தம் குடும்பம் உயர்வதற்கான செயலை விரைந்து செய்ய முயல்வார்க்கு அவர் எண்ணிப் பார்ப்பதற்குள் அச்செயல் தானே நிறைவேறும்.

சூழ்தல்-எண்ணிப் பார்த்தல்; முடிவெய்தல்-நிறைவேறுதல்; தாழாது -தாமதம் செய்யாமல், அஃதாவது விரைந்து; உஞற்றுதல்- முயலுதல். 1024

5.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

குற்றமற்றவராக இருந்து தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வாழும் ஒருவனை உலகத்தார் வலிய வந்து சுற்றத்தார் போன்று சூழ்ந்து கொண்டிருப்பர்.

குற்றம் இலன்-உள்ளத்தாலும் உடலாலும் எத்தகைய குற்றமும் செய்யாதவன்; குடிசெய்தல்-குடும்பத்தை உயர்த்துதல்;: சுற்றமா- உறவினர் போன்று; சுற்றும்-சூழ்ந்து கொண்டு இருப்பர்; உலகு- உலகத்தவர்.

உலகத்தார் அனைவரும் சுற்றத்தார் போன்று அவனைச் சூழ்ந்திருந்தால், அவன் குடும்ப உயர்ச்சிக்கு அவன் செய்ய முயலும் எதுவும் மிகவும் எளிதில் முடியும் என்பது கருத்து. 1025

6.நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அவன் தான் பிறந்த குடும்பத்தை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதே ஆகும்.

நல் ஆண்மை-நல்ல ஆண்மைத் தன்மை, ஆளுந் தன்மை; இல்லாமை-இல்லாததை அல்லது குடும்பத்தை ஆளும் தன்மை; ஆக்கிக் கொள்ளல்-ஆளுதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளுதல். 1026

7.அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

போர்க்களத்திலே போர்பு ரியும் வீரர் பலருள்ளே தலைமை தாங்கிப் போரை நடத்தும் பொறுப்பு எதற்கும் அஞ்சாத சிறந்த போர் வீரருக்கே அமைவது போலக் குடும்பத்தில் உள்ள சுற்றத்தார் பலருள்ளும் அந்தக் குடும்ப பாரத்தைத் தாங்கி நடத்தும் பொறுப்பு வாய்ந்தவர் மீதே குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

அமரகம்-போர்க்களம்; வன் கண்ணர்-அஞ்சா நெஞ்சர்; தமர்- சுற்றத்தார்; தமரகம்-குடும்பம்; ஆற்றுவார்-ஆற்றல் வாய்ந்தவர், வல்லமை மிகுந்தவர்; மேற்று-மேலது ஆகும்; பொறை-குடும்ப பாரத்தைத் தாங்குதல். 1027

8.குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

தம் குடும்பத்தை உயர்த்துவதற்கான செயலைப் புரிய எண்ணுவோருக்கு அச்செயலைச் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. 'இதற்கு ஏற்ற காலம் வரட்டும்' என்று சொல்லிக் கொண்டு அவர் சோம்பலை மேற்கொண்டு தமக்குள்ள பெருமையையும் எண்ணிப் பார்த்துக் கொண்டு இருப்பாரானால், அந்தக் குடும்பமே கெட்டு விடும்.

குடி செய்வார்-குடும்பத்தை உயர்த்த எண்ணுபவர்; பருவம்-காலம்; மடி-சோம்பல்; மானம்-பெருமை; இது இங்கே வீண் பெருமை, படாடோபம், கர்வம் முதலியவற்றுள் ஒன்றைக் குறிக்கும். 1028

9.இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

தன் குடும்பத்துக்கு நேரக் கூடிய குற்றத்தை வரவொட்டாமல் தடுத்து, அதனால் நேரும் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளும் ஒருவனுடைய உடம்பு துன்பத்துக்கே இருப்பிடமான தன்றோ?

இடும்பை-துன்பம்; கொள்கலம்-பண்டம், இடுங்கலம்;. இங்கே இது துன்பங்கள் பலப் பல வந்து தங்கியிருத்தற்கு இடமாக இருக்கும் உடம்பைக் குறிக்கிறது : கொல்லோ-இரக்கக் குறிப்பு; மறைத்தல்- பிறர் மீது தாக்கா வண்ணம் தடுத்து மறைத்துக் கொள்ளல், காத்துக் கொள்ளுல். 1029

10.இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

குடும்பமாகிய அடிமரம் துன்பமாகிய கோடரியால் வெட்டி வீழ்த்தப் படும்போது குடும்பத் தலைவன் முட்டுக்கால் மரம் போல உடனிருந்து அதனைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடுத்து இருந்து தாங்கிக் கொள்ளுதற்கு தகுந்த ஒரு நல்ல ஆண் மகன் இல்லாத குடும்பம் அழியும்.

இடுக்கண்-துன்பம்; கால்-அடிமரம், மரத்தின் மூலம்; கொன்றிட- அழிக்க; அடுத்து-அருகே இருந்து; ஊன்றும்-தாங்கிக் கொள்ளும்; நல்லாள்-ஆண் மகன். 1030

104. உழவு


1.சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உலகத்தவர் பல தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏர் உழுதலைப் புரியும் உழவர் தொழிலையே பின்பற்றி நிற்கின்றனர். அதனால் மிக உழைத்து வருந்த நேர்ந்தாலும் உழுதலைச் செய்யும் உழவுத் தொழிலே சிறந்தது.

சுழன்று-அலைந்து திரிந்து; ஏர்-ஏரையுடைய உழவர்; பின்னது-பின் பற்றி நிற்பர்; உழத்தல்-வருந்துதல். 1031

2.உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவுத்_தொழிலைச் செய்ய இயலாமல் பிற தொழில்களைச் செய்கின்றவர் எல்லாரையும் உழவர் தாங்குதலால், இந்த உலகத்தாராகிய தேருக்கு உழவர் அச்சாணி போன்றவர் ஆவர்.

உழுவார்-உழவர்; ஆணி-அச்சாணி, கடையாணி; ஆற்றாது-செய்ய இயலாமல்; எழுவார்-வேறு தொழில்களைச் செய்யச் சென்றவர்;: பொறுத்தல்-தாங்குதல். 1032

3.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

எல்லாரும் உண்ணும் படி உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றவர்களே உரிமையோடு வாழ்கின்றவர் ஆவர்; மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது, அதனால் உண்டு அவர் ஏவியதைச் செய்து, அவரைப் பின் தொடர்ந்து செல்பவரே ஆவர்.

தொழுது உண்ணுதல்-ஏவிய ஏவலைச் செய்து வணங்கி ஊதியம் பெற்று உண்ணுதல்; பின் செல்லுதல்-இடும் தொழிலைச் செய்யப் பின் சென்று காத்துக் கிடத்தல்.

குறிப்பு: உழவுத் தொழில் புரிவதே சுதந்திர வாழ்வு: பிற வாழ்வுகளெல்லாம் அடிமை வாழ்வு என்பது கருத்து. 1033

4.பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

நெற் கதிர்களின் நிழலையே தமக்குடையதாகக் கொண்டு வாழும் உழவர், பல அரசர்களின் குடைக் கீழுள்ள நிலம் முழுவதையும் தம் அரசன் குடைக் கீழ்க் காணச் செய்ய வல்லவர் ஆவர்.

குடை-வெண்கொற்றக் குடை; நீழல்-அரசர்கன் ஆட்சி புரியும் நிலத்தைக் குறிக்க வந்த சொல்; பல குடை நீழல்-பல அரசர்களுடைய குடைகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்; அலகு -கதிர். 1034

5.இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

கையால் உழுது உண்பதை இயல்பாக உடைய உழவர்,பிறரிடம் சென்று பிச்சையெடுக்க மாட்டார்; அன்றியும் தம்மிடம் வந்து இரந்து கேட்பவர்கட்கு ஒளிக்காமல் அவர் கேட்கும் பொருள் ஒன்றனைத் தருவார்.

இரவார்-பிச்சையெடுக்க மாட்டார்; இரப்பார்-பிச்சை யெடுப்பவர்; கரவாது-ஒளிக்காமல்; கை செய்தல்-கையால் தொழில் செய்தல், இங்கே உழுதல் என்பது பொருள். மாலையவர்-இயல்புடையவர்; மாலை-இயல்பு, 1035

6.உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.

உழவருடைய கை உழவுத் தொழிலைச் செய்யாது, மடங்கியிருக்குமானால், 'பலராலும் விரும்பப்படும் பற்றினையும் விட்டு விட்டோம்' என்று கூறும் துறவிகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட துறவற நெறியில் நிலைத்து நிற்கும் ஆற்றல் இல்லாதொழியும்.

கைம்மடங்குதல்-தொழில் புரியாமல் கைகட்டிக் கொண்டு இருத்தல்; விழைதல்-விரும்புதல், பற்று; எல்லாராலும் விரும்பப் படும் உணவு என்றும் பொருள் கூறுவர்; நிலை-நிலைத்து இருத்தல். 1036

7.தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஒரு பலம் புழுதி, கால் பலம் ஆகும்படி உழவன் நிலத்தினை நன்கு உழுது காய விடுவானானால், ஒரு பிடி எருவும் இல்லாமல் அந்த நிலத்தில் பயிர் செழித்து விளையும்.

தொடி-ஒரு பலம் கொண்ட அளவு; கஃசு-கால் பலம்; உணக்குதல்- உலர்த்துதல்; பிடித்து எரு-ஒரு கைப்பிடி அளவுள்ளதாகிய எரு; சால்படும்-நிறைய விளையும்; படுதல்-முளைத்தல், தோன்றுதல்.

ஒரு பலம் புழுதி கால் பலமாக உலர வேண்டுமானரல் மண் மிக்க மிருதுவாக இருக்க வேண்டும். ஆகவே, அந்த அளவுக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும் என்பது குறிப்பாக விளக்கப்பட்டுள்ளதை அறிக. 1037

8.ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

ஏர் உழுதலைப் பார்க்கிலும் எரு இடுதல் நல்லது; இவை செய்து களையெடுத்த பின் நீர் பாய்ச்சுவதைப் பார்க்கிலும் பயிர் அழிய வொட்டாமல் அதனைக் காப்பது நல்லது.

கட்டல்-களையெடுத்தல்; காப்பது-பசு, எருது முதலியவை மேயாத படி காவல் காத்தல்.

குறிப்பு: உழுதல், எருவிடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், காத்தல் ஆகிய இவை ஐந்தும் பயிர் வளர்வதற்கு ஏதுவாகும். 1038

9.செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

நிலத்துக்கு உரியவன் உரிய காலங்களில் எல்லாம் சென்று நிலத்தைப் பார்வையிடாமல் வாளாயிருப்பானானால், அவனுடைய அன்புடன் கூடிய கவனிப்பு இல்லாத அவன் மனைவியைப் போல், அந்த நிலமும் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்; அஃதாவது நல்ல பலன் தாராது போய் விடும்.

கிழவன்-நிலத்துக்கு உரியவன்; கிழமை-உரிமை; புலத்தல்-வெறுத்தல்; ஊடுதல்-பிணங்குதல்; இல்லாள்-மனைவி.

பிறரை ஏவி விடாது தானே சென்று வயலைப் பார்த்தல் வேண்டும் என்பது கருத்து. 1039

10.இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

'எம்மிடம் சிறிதும் பொருள் இல்லை’ என்று வயலைக் கவனிக்காமல் சோம்பலாக இருப்பவரைக் கண்டால் நிலம் என்னும் பெண், அவருடைய அறிவின்மையை எண்ணி இகழ்ந்து தன்னுள் சிரிப்பாள்.

இலம்-பொருள் பெற்றிலேம்; அசைஇ-சோம்பி; நிலம் என்னும் நல்லாள்-நிலமாகிய பெண்; நிலத்தைப் பெண்ணாக உருவகப் படுத்திக் கூறுகிறார் ஆசிரியர்; நகும்-தனக்குள் சிரித்துக் கொள்வாள்.

பொருள் இல்லாவிட்டாலும், முயற்சி மட்டும் இருந்தால் நிலம் வேண்டிய பலனைத் தரும் என்பது கருத்து. 1040

105. நல்குரவு


1.இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எது என்று கேட்டால், வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது வறுமையே ஆகும்.

இன்மை-வறுமை; இன்னாதது-துன்பந் தருவது; நல்குரவு-வறுமை.

துன்பந் தருவதில் வறுமையை விடக் கொடியது வேறொன்றும் இல்லை என்பது கருத்து. 1041

2.இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் அவனுக்கு இவ்வுலக இன்பம், மறு உலக இன்பம் ஆகிய இரண்டும் இல்லாமற் போய் விடும்.

பாவி-தீமையே செய்பவன்; மறுமை-மறு உலக இன்பம்; இம்மை- இவ்வுலக இன்பம். 1042

3.தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

நிரம்பப் பொருள் வேண்டும் என்னும் ஆசையால் வந்த வறுமையானது தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பின் வரலாற்றையும் அதன் காரணமாக வந்துள்ள புகழ் மொழியையும் ஒரு சேரக் கெடுக்கும்.

தொல்வரவு-குடிப் பிறப்பின் பழைய வரலாறு; தோல்-புகழ் மொழி; தொகையாகக் கெடுக்கும்-ஒருசேரக் கெடுக்கும்; நல்குரவு-வறுமை; நசை-விருப்பம். 1043 .

4.இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

வறுமையானது நல்ல குடிப் பிறந்தாரிடத்தும் இழிவான சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வினைை உண்டாக்கி விடும்.

இல் பிறந்தார்-நற்குடியில் பிறந்தவர்; கண்-இடத்தில் என்பதைக் குறிக்கம் ஏழாம் வேற்றுமை உருபு; இன்மை-வறுமை; இளி-இழிவு; சோர்வு-மறதி. 1044

5.நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

வறுமை என்னும் துன்பநிலை ஒன்றின் காரணமாகப் பலவகைப் பட்ட துன்பங்கள் வந்து விளையும்.

இடும்பை-துன்பம்; பல்குரை-பலப்பல; 'குரை' என்பதற்கு இங்கே பொருள் இல்லை. இச்சொல் அசை நிலையாக வந்துள்ளது; சென்று படும்-வந்து விளையும். 1045

6.நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

நல்ல நூல்களில் உள்ள பொருளினை நன்றாக ஆராய்ந்து அறிந்து தெளிவாகச் சொன்ன போதிலும், வறியவர் சொல்லிய நற்பொருள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும்.

நற்பொருள்-நல்ல நூற்பொருள், மெய்ந்நூற்பொருள்; நன்கு உணர்தல்-ஆராய்ந்து அறிதல்; சொற்பொருள்-சொல்லிய பொருள்; சோர்வு படும்-ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும், பயன்படாமல் போகும். 1046

7.அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

அறஞ் செய்தற்குப் பொருந்தாத வறுமை ஒருவனை அடையுமானால், பெற்றெடுத்த தாயாராலும் அவன் அயலான் போல எண்ணப்படுவான்.

அறம் சாரா-அறஞ் செய்தற்குப் பொருந்தாத; ஈன்ற தாய்-பெற்றெடுத்த தாயார்; பிறன் போல நோக்குதல்-அயலானைப் போல எண்ணுதல். 1047

8.இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

நேற்றும் என்னைக் கொலை செய்வது போல் வந்து துன்புறத்திய வறுமையானது, இன்றைக்கும் என்னிடம் வந்து சேருமோ?(வந்தால் இனி யாது செய்வேன்.)

வருவது கொல்லோ: 'கொல்', 'ஓ’ இவை இரண்டும் _அச்சக் குறிப்பைத் தருவன; நெருநல்-நேற்று; கொன்றது போலும்-கொன்றது போன்ற பெருந்துன்பத்தைத் தந்த; நிரப்பு-வறுமை. 1048

9.நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

ஒருவர் நெருப்பின் நடுவே இருந்து உறங்குதலும் கூடும். ஆனால், வறுமை நிலையில் இருந்து வருந்தும் ஒருவர் எந்த வகையாலும் சிறிது கண்ணை மூடவும் இயலாது.

துஞ்சல்-உறங்குதல்; யாதொன்றும்-எந்த வகையாலும்; கண்பாடு-கண் படுதல், கண் இமையை மூடுதல்; அரிது-அருமையானது. 1049

10.துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள் இல்லாத வறியவர் முற்றிலும் துறக்க வேண்டியவராக இருந்தும், துறவாமல் குடும்பத்தில் தங்கியிருப்பதன் காரணம் என்னவென்றால், பிறர் வைத்துள்ள உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

துப்புரவு-இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள், ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்கள்; துவர-முற்றிலும்; காடி-கஞ்சி; கூற்று-எமன்.

குறிப்பு; பொருள் தொகுத்து இன்புற்று வாழ இயலாதவர் பிறருக்குத் துன்பந் தாராமல் வீட்டை விட்டுத் துறந்து போதலே நலம் என்பது கருத்து. 1050

106. இரவு


1.இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

இரத்தற்குத் தகுந்தவரைக் கண்டால் வறியவர் அவரிடம் இரக்கலாம்; இரந்த போது அவர் கொடாமல் மறுப்பாரானால், அஃது அவருக்குப் பழியே அல்லாமல், இரந்தவர்க்குப் பழி அன்று.

இரத்தல்-பிச்சை எடுத்தல்; காத்தல்-கொடுக்காமல் ஒளித்தல், இல்லை என்று சொல்லுதல்; பழி-பாவம், குற்றம். 1051

2.இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

பிறரிடம் சென்று ஒரு பொருளை வேண்டிக் கேட்டல் ஒருவருக்கு இன்பமே ஆகும்; ஆனால், அவ்விதம் அவர் இரந்து கேட்ட போது அந்தப் பொருள் அவருக்கு எந்த வகையான துன்பமும் இல்லாமல் எளிதில் கிடைப்பதாக இருத்தல் வேண்டும்.

துன்பம் உறாஅ வருதல்-எளிதில் கிடைத்தல். பல முறை நடக்க வைக்காமல் தருதல், அன் போடு உதவுதல், கேட்பதற்கு முன்பு குறிப்பறிந்து தருதல் 1052

3.கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்னின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து.

கள்ளம் இல்லாத உள்ளமும், கடமை அறிந்து உதவும் குணமும் உடையோர் முன்னே நின்று அவரிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்டலும் ஓர் அழகுடையதே ஆகும்.

கரப்பு இலா நெஞ்சம்-கள்ளம் இல்லாத உள்ளம்; கடன்-கடமை; இரப்பு-இரந்து கேட்டல்; ஏர்-அழகு. 1053

4.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

இரந்தார்க்குத் தம்மிடம் உள்ள பொருளை மறைத்து 'இல்லை' யென்று சொல்லும் இழிகுணத்தைக் கனவிலும் அறியாதவரிடம் ஒருவன் சென்று ஒரு பொருளை வேண்டிக் கேட்பதுவும், கொடுப்பது போன்ற சிறப்புடையதே ஆகும். (அஃது இழிவே ஆகாது.)

தேற்றுதல்-தெளிந்தறிதல், நன்றாக அறிதல்; மாட்டு -இச்சொல் இடம் என்னும் பொருளில் வந்தது. 1054

5.கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

சிறிதும் ஒளிக்காமல் உதவுபவர் உலகத்தில் சிலரேனும் உள்ளனர். ஆதலால், ஒருவர் முன் நின்று இரந்து கேட்டலை இரப்பார் மேற்கொள்கின்றனர்: வேறு காரணம் இல்லை.

கரப்பிலார்-ஒளிக்காமல் கொடுப்பவர்; வையகம்-உலகம்; உண்மையான்-உள்ளத்தாலேயே; கண் நின்று-கண்ணுக்கும் தெரியும்படி நின்று. 1055

6.கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

தம்மிடம் உள்ளதை ஒளித்துக் கூறும் குற்றம் இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே ஒழிந்து போகும்.

கரப்பு-ஒளித்து வைக்கும் குணம்; இடும்பை-துன்பம், குற்றம், நோய்; ஒருங்கு-ஒருசேர; கெடும்-ஒழியும். 1056

7.இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

தம்மை அவமதித்து இழிவுரை கூறாது பொருள் தருபவரைக் கண்டால் இரப்பவருடைய மனம் மகிழ்ச்சி அடைந்து உள்ளுக்குள்ளே இன்புறும் தன்மை உடையதாகும்.

இகழ்தல்.அவமதித்தல்; எள்ளுதல்-இகழ்ந்துரைத்தல், இகழ்ந்து நகைத்தல்; உள்ளுள்-மனத்துக்குள்; உடைத்து-உடையதாக இருக்கும் தன்மையுடையது. 1057

8.இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரந்து கேட்கும் தன்மை வாய்ந்தவரைப் பெற்றில்லாது இருக்குமானால் இவ்வுலகத்தில் உள்ள மக்கள், உயிரற்ற மரப்பாவை சென்றும் வந்தும் இயங்கிக் கொண்டிருந்தால், எவ்விதம் இருக்குமோ அவ்விதம் சிறிதும் உணர்ச்சியற்றவராகக் காணப்படுவர்.

இல்லாயின்-இல்லாமல் இருந்தால்; ஈர்ங்கண்-குளிர்ச்சி வாய்ந்த இடம், செழிப்பு மிக்க இடம்; மா-பெரிய; ஞாலம்-பூமி அல்லது பூமியில் உள்ள மக்கள்; மரப்பாவை-மரத்தால் செய்யப் பெற்ற பதுமை; சென்று வந்து அற்று-செல்வதும் வருவதும் போலும் இருக்கும் அத்தகையது. 1058

9.ஈயார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

ஒரு பொருளை விரும்பி இரந்து கேட்டு அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாத போது, பொருள் தருவோரிடம் என்ன புகழ் உண்டாகும்? இல்லை என்ப்து பொருள்.

ஈவார்கண்-கொடுப்போரிடம்; தோற்றம்-புகழ்; முகத்தில் தோன்றும் உள்ள மகிழ்வின் பொலிவு; இரந்து கோள்-இரந்து பெற்றுக் கொள்ளுதல்; மேவார்-மேவுவார், விரும்புவார்; இலா அக்கடை-இல்லாத போது.

இரப்பவர் இல்லையென்றால் வள்ளல்களும் இல்லாமலே போய் விடுவார் என்பது கருத்து. 1059

10.இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

இரந்துண்டு வாழ்பவன், தனக்குத் தாராதவரிடம் கோபங் கொள்ளுவதற்கு அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டச் சான்றாக அமையும்.

வெகுளுதல்-சினத்தல்; நிரப்பு இடும்பை-வறுமைத் துன்பம்; சாலும்-அமையும்; கரி-சான்று, சாட்சி. 1060

107. இரவச்சம்


1.கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

தம்மிடம் உள்ளதை ஒளிக்காமல் மனமகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தவரிடத்திலும் ஒரு பொருளை இரக்காமல் இருப்பது அந்தப் பொருளைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லது.

உவந்து-உளமகிழ்ந்துl கண் அன்னார் ண் போன்று சிறந்தவர்; கோடி உறும்-கேட்டுப் பெற்ற பொருளைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லதாகும். 1061

2.இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

இவ்வுலகத்தைப் படைத்தவன், அதில் உள்ளவர்கள் பிச்சையெடுத்தும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று ஏற்படுத்தியிருப்பானானால், அந்தக் கொடியோனும் இரப்பவரைப் போல எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.

'இது என் தலைவிதி’ என்று சோம்பியிருந்து பிச்சையெடு்த்து வாழ விரும்புவதைக் கண்டிக்கும் முகத்தான் வள்ளுவர் இவ்விதம் கூறியிருக்கின்றார்.

பரந்து-எங்கும் அலைந்து திரிந்து; கெடுக-அழிந்து போவானாக; உலக இயற்றியான்-உலகைப் படைத்த முதல்வன். 1062

3.இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.

வறுமைத் துன்பத்தைப் பிச்சை யெடுப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று எண்ணி, முயற்சியைக் கைவிடும் வன்மையைப் போன்ற வன்மையுடையது வேறொன்றுமில்லை.

இன்மை இடும்பை-வறுமைத் துன்பம்; இரந்து தீர்வாம்-பிச்சையெடுத்து ஒழிப்போம்; வன்பாடு-முரட்டுத் தன்மை. 1063

4.இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

வாழ்வதற்கே வழி இல்லாத போதும் பிச்சையெடுத்து, உயிர் வாழ உடன் படாத மன அமைதி, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையுடையதாகும்.

இடம்-அகன்ற உலகம்; தகைத்து-மதிப்புடையது, பெருமையுடையது; இடமில்லாக்காலும்-வழி இல்லாத போதும்; ஒல்லா-இசையாத, உடன்படாத; சால்பு. மன அமைதி. 1064

5.தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.

முயற்சியால் கிடைத்தது, தெளிந்த நீர் போன்று சமைத்த கூழே ஆனாலும், அதை உண்பதை விட இனிமையானது வேறு இல்லை.

தெண்ணீர்-தெள்+நீர், தெளிந்த நீர்; அடுபுற்கை-சமைத்த கூழ்; அடுதல்-சமைத்தல்; புற்கை-கூழ் அல்லது உணவு; தாள்-முயற்;; ஊங்கு-மேம்பட்டது.

முயன்று பெற்றது எளிய உணவே ஆயினும், அஃது அமிழ்தினும் சிறந்தது என்பது கருத்து. 1065

6.ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டுமென்று அயலாரிடம் சென்று இரப்பதாக இருந்தாலும், அந்த இரத்தலைப் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றுமில்லை.

ஆ-பசு; இரவின்-இரத்தலைப் போல; இளிவந்தது-இழிவைத் தருவது.

குறிப்பு: அறச்செயல் குறித்தும் பிறரிடம் சென்று இரத்தல் கூடாது என்பது கருத்து. 1066

7.இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பிறரிடம் சென்று இரப்பாரை யெல்லாம், “நீங்கள் பிறரிட்ம் இரக்கச் செல்லுவதாய் இருந்தால், தம்மிடம் உள்ளதைக் கொடாமல் ஒளிப்பவரிடம் இரக்கச் செல்லாதீர்கள்' என்று யான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுவேன்.

இரப்பன்-வேண்டிக் கேட்டுக் கொள்வேன்; இரவன்மின்-பிச்சை எடுக்காதீர்கள். 1067

8.இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

பிச்சையெடுத்தல் என்னும் பாதுகாப்பு இல்லாத மரக்கலம், கொடாது ஒளித்து வைத்தல் என்னும் வலிய நிலத்தால் தாக்கப்பட்டால் உடைந்து விடும்.

ஏமாப்பு-பாதுகாப்பு; தோணி-மரக்கலம்; பார்-பாறை நிலம்; பக்கு விட்-பிளந்து விடுதல். 1068

9.இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இரத்தலை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இரப்பவர்க்கு இல்லையென்று கூறி, ஒளிக்கும் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற அந்த உள்ளமும் இல்லாமல் அழிந்து ஒழியும்.

உள்ள-நினைக்க; இன்றிக் கெடும்-இல்லாமல் அழியும். 1069

10.கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

'எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டும்’ என்று வறியவன் ஒருவன், பிறன் ஒருவனை நோக்கிக் கேட்கும் போதே அந்த வறியனுக்குத் தன் உயிரே போய் விடும் போன்று தோன்றுகினறது. அவ்விதம் அந்த வறிஞன் கேட்கும் நிலையைக் கண்டும், சிறிதும் இரங்காது தம்மிடமுள்ள பொருளை ஒளித்து வைத்துக் கொண்டு, தாமும் அவனைப் போல் 'என்னிடம் ஒன்றும் இல்லை' என்று கூறுவாரானால், அவர் உயிர் எங்குப் போய் ஒளிந்திருக்குமோ,தெரியவில்லை.

யாங்கு ஒளிக்கும்-எங்கே ஒளிந்திருக்கும்; கொல், ஓ-அவை ஐயப் பொருளைக் குறிக்க வந்தன; சொல்லாட்-சொல்லும் போதே; போம்-போகும். 1070

108. கயமை


1.மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.

கயவர் என்பவர், வடிவத்தால் ழுழுவதும் மக்களையே ஒத்திருப்பர். அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை கூறத்தக்க வேறு ஒரு பொருளை யாம் கண்டதில்லை.

கயவர்-கீழ்மக்கள்; ஒப்பாரி-ஒப்புமை.

குறிப்பு: உறுப்பால் ஒத்திருந்தும் குணத்தால் ஒத்திராமையால் கயவர், மக்கள் என்று சொல்லத்தகாதவர் என்பது கருத்து. 1071

2.நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

நன்மையை ஆராய்ந்து அறிகின்ற அறிஞரைப் பார்க்கிலும் கீழ்மக்களே நன்மையுடையவராவர். ஏனென்றால், அந்தக் கீழ்மக்கள் எதைப் பற்றியும் தம் நெஞ்சில் கவலையில்லாதவர்கள் ஆதலால் என்க.

நன்று அறிதல்-நன்மையை ஆராய்ந்து அறிதல்; திருவுடையர்- தன்மையுடையவர், நல்வினையுடையவர்; திரு-செல்வம், நன்மை; அவலம்-கவலை.

குறிப்பு: கயவரைத் திருவுடையார் என்றது குறிப்பால் இகழ்ந்ததாகும். 1072

3.தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.

கயவரும் தேவரும் ஒரே தன்மையர் ஆவர். அஃது எவ்வாறெனில், கயவரும் தேவரைப் போன்றே தாம் விரும்புவனவற்றைத் தம் மனம் போனவாறு செய்து ஒழுகுவர் ஆதலால் என்க.

தேவர் - மேலுலகில் வாழ்வதாகக் கூறப்படும் ஒருவகைக் கடவுட் சாதியர்; மேவன-விரும்புவன; ஒழுகுதல்-நடத்தல்.. இது கயவரைப் புகழ்வது போலப் பழித்தலின் வஞ்சப் புகழ்ச்சியாம். 1073

4.அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

கீழ்மகன் தன்னினும் அடக்கம் இல்லாதவரைக் கண்டானாயின், அவரினும் தான் மேம்பாடுடையவனாக எண்ணி இறுமாந்து இருபபான்.

அகப்பட்டி-மன அடக்கம் இல்லாதவன், அறநெறியை மீறி நடப்பவன்; செம்மாக்கும்-இறுமாந்திருப்பான்; கீழ்-கீழ்மகன். 1074

5.அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

கீழ்மக்களின் ஆசாரத்துக்குக் காரணமாக இருப்பது அச்சமே ஆகும். அஃது ஒழிந்தால் தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் உண்டாகுமாயின் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

ஆசாரம்- சாத்திர முறைப்படி ஒழுகுதல், நன்னடக்கை; எச்சம்- ஒழிப்பு, எஞ்சி இருப்பது; அவா-ஆசை, பற்று. (இங்கே விரும்பும் பொருளைக் குறிக்கும்.) 1075

6.அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

கயவர் தாம் கேட்டறிந்த இரகசியமான செய்திகளைப் பிறருக்கு வலியச் சுமந்து சென்று சொல்லி வருவதால், அறையப்படும் பறையினைப் போன்றவர் ஆவர்.

அறைபறை அன்னர்- அறையப்படும் பறையினைப் போன்றவர்; மறை-இரகசியம்; உய்த்தல்-செலுத்துதல், சுமந்து செல்லுதல்.

பறையானது அடிக்கப்பட்டவுடன் பெரிதாக முழங்கி எல்லார்க்கும் உணர்த்துகிறது. அது போலக் கீழ்மக்களும் தம்மிடம் கூறப்பட்ட இரகசியச் செய்திகளை உடனே எல்லாரிடமும் சென்று கூறும் இயல்புடையவர் என்பது கருத்தாகும். 1076

7.ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூர்ங்கைய ரல்லா தவர்க்கு.

கன்னத்தை இடித்து உடைக்கும் வளைத்த கையை உடையவர் அல்லாதார்க்குக் கீழ்மக்கள் தாம் உணவுண்ட எச்சில் கையையும் கூட உதற மாட்டார்கள்.

ஈர்ங்கை - ஈரக்கை, எச்சிற் கை; கொடிது-கன்னம்; கூர்ங்கையர்-வளைந்த, முறுக்கிய கையையுடையவர்.

மெலிவார்க்கு யாதும் கொடார். துன்புறுத்துவார்க்கு. _எல்லாங் கொடுப்பார் என்பது கருத்து. 1077

8.சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலேயே, மனம் இரங்கிப் பயன்படுவர் சான்றோர்; மற்றைக் கீழாயினோர் கரும்பினை ஆலையில் வைத்துச் சாறு பிழிவது போல வருத்தினால்தான் பயன்படுவர்.

பயன்படுதல் - உள்ளது கொடுத்தல்; சான்றோர் - மேலாயினார்; கரும்பு போல்-கரும்பை ஆலையில் வைத்துத் சாறு பிழிவது போல; கொல்ல-வருத்த; கீழ்-கீழ்மக்கள். 1078

9.உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

கீழ்மக்கள் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் காணுவார்களாயின் அவற்றைப் பொறாது வேண்டும் என்றே அவர் பால் குற்றம் காண வல்லவர்கள் ஆவார்கள்.

உடுப்பது - நல்ல ஆடை அணிந்து கொள்ளுதல்; உண்பது-நல்ல உணவை உண்டு மகிழ்தல்; வடு-குற்றம்; வற்று-வல்லது. 1079

10.எற்றிற் குரியர்கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.

கயவர் எதற்கு உரியார் என்றால், தமக்கு ஒரு சிறு துன்பம் நேர்ந்த காலத்தில், அதற்காகத் தம்மை விரைந்து பிறர்க்கு விலைக்கு விற்று விடுவதற்கு உரியவர் ஆவர்.

எற்றிற்கு-எதற்கு; உரியர்-உரியவர்; ஒன்று-ஒரு துன்பம்; உற்றக்கால்-நேர்ந்தபோது. 1080



தமிழ்நெறிக் காவலர்—முதுபெரும் புலவர்

பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள்

உலகப் புலவன் வள்ளுவனின்
        உள்ளம் அறிந்த சிவமுத்துப்
புலவன் இனிய எளியநடை
        பொலியும் இந்த உரை நூலைப்
பலரும் வாங்கி நாடோறும்
        படிப்போம்; சுவைப்போம்; இன்புறுவோம்;
நலமும் வளமும் பெருகிடவே
        நடப்போம் வள்ளுவர் நெறியினிலே.
                                         —தணிகை உலகநாதன்


மூவேந்தர் அச்சகம், சென்னை-600 014


"https://ta.wikisource.org/w/index.php?title=3._ஒழிபியல்&oldid=1396677" இலிருந்து மீள்விக்கப்பட்டது