Siva Temple Architecture etc./ஆரிய சில்பம்

ஆரிய சில்பம்

இனி வட இந்தியாவிலுள்ள ஆரிய கோயில் சில்பத்தைப்பற்றி சிறிது ஆராய்வோம். இது இந்திய ஆரிய சில்பம் என்றும் அழைக்கப்படுகிறது. சிலர் இதற்கு வேசர சில்பம் என்று பெயரிட்டிருக்கின்றனர். இன்னும் சிலர், வேசர சில்பம் ஆரிய சிலபத்தின் பகுதி என்று கூறுகின்றனர்; இதை இச்சிறு நூலில் இனி ஆரிய சில்ப மென்றே கூறுவோம். இச்சில்பமமைந்த கோயில்கள், வட இந்தியாவில், சிந்து, கூர்ஜரம், ராஜஸ்தான் அயோத்யை, ஐக்கிய மாகாணங்கள், வங்காளம், ஒரிஸ்ஸா முதலிய இடங்க்ளில் இருக்கின்றன; மொத்தத்தில் விந்திய பர்வதத்திற்கு வடக்கேயுள்ள கோயில்களெல்லாம் ஆரிய சில்ப முடையவை. இந்த ஆரிய சில்பத்துக்கோயில்களின் முக்கிய அம்சங்கள் அடியில் வருமாறாகும் :-

(1) இக்கோயில்களின் முக்கிய அம்சம் விமானமேயாகும் (2) இவைகளில் கோபுரங்கள் கிடையா (3) விமானங்களில் திராவிட கோயில்களில் இருப்பதுபோல் நிலைகள் அல்லது மாடிகள் கிடையா (4) சதுர வடிவாயுள்ள கர்ப்ப கிரகத்தின் மீது கட்டப்பட்ட (Spires) வளைந்த ரேகைகளையுடைய கும்பட்டங்கள் போன்ற உருவை உள்ளனவாயிருக்கும். (Curvilinear) (5) விமானங்கள் வட்ட வடிவமானவை (6) விமானங்கள் நான்கு பக்கங்களிலும் உச்சியினின்றும் கீழே இறங்கும் நான்கு பட்டைகளையுடையவை, (7) சிகரமானது சிறிது நடுவில் அழுத்தப்பட்ட நெல்லிக்கனியைப் போலிருக்கும். இதற்கு முக்கிய உதாரணமாக, வட இந்தியாவிலுள்ள சிற்றூர், நாசிக், காசி, உதயபுரி ஈஸ்வர கோயில்களைக் கூறலாம். இப்படிப்பட்ட விமானங்கள் பௌத்த ஸ்தூபங்களின்றும் பிறந்தவை என்று எண்ணப்படுகிறது. ஸ்தூபங்கள், உள்ளே குடையப்பட்ட அறைகளாக மாறி, சதுரமான பீடங்களின்மேற்கட்டப்பட்டு, மேலே நீண்ட கும்மட்டங்கள் போன்ற சிகரங்களை யுடையவைகளாயின, என்று ஆக்ஸ் போர்டு (Oxford) சம்ஸ்கிருத பேராசிரியர் அ. அ. மெர்டானல் என்பவர் அபிப்பிராயப் படுகிறார்.

ஒரிஸ்ஸா சில்பம்

இது ஆரிய சில்பத்தின் பகுதியாகும்; இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால் இச்சில்பக் கட்டிடங்களில் தூண்களே கிடையாது என்னலாம். இதற்கு உதாரணமாக புவனேஸ்வரில் உள்ள பல ஆலயங்களைக் கூறலாம்; இதனை வேசர சில்பம் என்று சிலர் அழைக்கின்றனர்.

காஷ்மீர் சில்பம்

இது அப்பெயர் குறிக்கிறபடி காஷ்மீர் தேசத்திலுள்ள சில கோயில் சில்பத்தைக் குறிக்கிறது. இச் சில்பக் கோயில்களின் காலம் சுமார் கி. பி, 600 முதல் 1100 வரையில் என்று எண்ணப்படுகிறது.

இச் சில்பத்தின் முக்கிய அம்சங்கள் (1) சீன சில்பத்தில் இருப்பதுபோல் கூரை மேற்கூரைகள் (2) இக்கூரைகளில் பலகணிகள் (Dormer windows) அமைக்கப்பட்டிருக்கின்றன. (3) தூண்கள் ஐரோப்பிய (Doric) தூண்களைப் போன்றவை; இம்மூன்று குறிகளும் கிரேக்க சில்பத்தினின்றும் இத்தேசத்திற்கு வந்ததாக எண்ணப்படுகிறது. (4) மூன்று வளைவுகளையுடைய கமான்கள். (Three foiled arches).

இச் சில்பத்தின் முக்கியமான கோயில் இங்குள்ள மார்த்தாண்ட ஆலயமாம். இது 60 அடி நிகளம் 36 அடி அகலம் ; கிழக்கு நோக்கியுள்ளது ; மேற்குபுரம் இரண்டு கட்டடமுகங்கள் (facades) சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவைகளை சேர்த்து மொத்தம் அகலம் 60 அடி யாகிறது, இதன் உயரமும் 60 அடி இருந்திருக்கலாம் என்று கன்னிங்காம்துரை அனுமானிக்கிறார். இதன் கூரை முற்றிலும் அழிந்து போயிருக்கிறது. பெர்கூசன் துரை இதன் கூரை மரத்தால் ஆயிருக்கவேண்டுமென்று எண்ணுகிறார். இதன் சுற்றுப்பிராகாரம் 220 அடி x 142 அடி, கோயிலைச் சுற்றிலும் தண்ணீர் தேக்கப்பட்டதாக எண்ணுகிறார்கள். இது சூர்ய நாராயண விஷ்ணு ஆலயமா யிருந்தது. இது லலிதா முக்த பீடன் எனும் அரசனால் (725 - 760) கட்டப்பட்டது. சிகண்டர்ஷா (1393 - 1416) வினால் கோயிலும், ஸ்வாமியும் அழிக்கப்பட்டது.

இதற்கு மற்றொரு உதாரணம் வந்திபுரம் என்று தற்காலம் வழங்கப்படும் அவந்திபுரத்திலுள்ள சிவாலயமாம்; இது அவந்தி வர்மனால் (855 - 883) கட்டப்பட்டதாம்.

நேபாள கோயில் சில்பம்

இங்குள்ள இந்து ஆலயங்கள் பெரும்பாலும் மரத்தாலாயவை ; பெரும்பாலும் அடிபீடம் மாத்திரம் கல்லால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயில்கள் ஒன்றின்மேலொன்றான பல கூரைகள் உடையவை; சீன கோயில்களைப் போன்றவை. இதற்கு உதாரணமாக பாட்கேவான், படான், பசுபதி, முதலிய இடங்களிலுள்ள கோயில்களைக் கூறலாம். இவைகளெல்லாம் 18-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பட்டுதான் கட்டப்பட்டவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=Siva_Temple_Architecture_etc./ஆரிய_சில்பம்&oldid=1294695" இலிருந்து மீள்விக்கப்பட்டது