Siva Temple Architecture etc./சிவாலய சில்பங்கள்


சிவாலய சில்பங்கள்
முதலியன


நமது தாய் தேசமாகிய இந்தியா, கோயில்கள் நிறைந்த தேசம் என்று அன்னியர்களால் புகழப்பட்டிருக்கிறது. அக்கோயில்களைக் கண்டு மகிழ, ஐரோப்பா, அமெரிக்கா, முதலிய கண்டங்களிலிருந்து பலர் வருஷா வருஷம் வருகின்றனர். நமது கோயில்களைப்பற்றி இதுவரையில் பிரசுரிக்கப்பட்ட புஸ்தகங்களெல்லாம், பெரும்பாலும், சூவெல், பெர்கூசன், டுப்ரெயில் முதலிய ஐரோப்பியர்களால் எழுதப்பட்டவைகளே. இது இந்தியர்களாகிய நமக்கு ஒரு மானக் குறைவாகும் ; ஆகவே இக்குறையைச் சிறிதளவாவது நீக்க வேண்டியது நமது கடன் என எண்ணி இச்சிறு நூலை இயற்றலானேன்.

கோயில்கள் உண்டானது

மனிதன் இவ்வுலகில் உண்டாகி, தெய்வம் ஒன்றுண்டு எனும் உணர்ச்சியைப்பெற்ற பிறகு, அத்தெய்வத்திற்கு இருப்பிடமாக அதனைத்தொழ அவன் ஓர் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பது நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயமே.

மனிதர்கள், வேட்டையாடி குகைகளில் வசிக்கும் நாகரீகத்தை யடைந்தபோது, அக்குகைகளில் அழகியவற்றுள் தாங்கள் வணங்கும் தெய்வங்களை நியமித்துக் கோயில்களாகப் பாவித்திருக்கவேண்டும். பிறகு ஆடுமாடுகள் மேய்த்து பயிர்களை உண்டாக்கி, குடிசைகளில் வசிக்கும் நாகரீகத்தை யடைந்தபோது, அழகிய சிறு குடிசைகளில் பிரத்தியேகமாகத் தங்கள் தெய்வங்களை வைத்து கோயில்களாகப் பாவித்திருக்கவேண்டும். பிறகு செங்கற்களால் வீடுகள் கட்டி பட்டணங்களில் வசிக்கும் நாகரீக திசை யடைந்த போது, செங்கல் மரம் முதலியவைகளால் கோயில்களைக் கட்டி யிருக்கவேண்டும், என்பது நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமே. ஆயினும் இப்படிப்பட்ட கோயில்களெல்லாம் பல நூற்றாண்டுகள் அழியாமலிருப்பது கடினம். கருங்கற்களால் கோயில்களை அமைக்க மனிதர்கள் கற்ற பிறகுதான், அக்கோயில்கள் பல நூற்றாண்டுகளாக நிரந்தரமாய் இருக்கத் தலைப்பட்டன. இந்தியாவில் புத்தர் காலத்திற்கு முன்பாக எல்லாக் கட்டிடங்களும் மரத்தாலானவை யென்றும், செங்கல் கட்டிடங்கள் கி. மு. 5-ஆம் ஆண்டிற்கு பிறகுதான் பெரும்பாலும் தோன்றினவென வென்றும், அதற்குப் பிறகுதான் கருங்கல் கட்டிடங்கள் கட்டத் தலைப்பட்டன வென்றும் எண்ணப்படுகிறது.

நமது தேசமாகிய இந்தியாவிலும் கோயில்கள் இம்மாதிரியாகத்தான் வளர்ந்து வந்தன என்று நாம் கூறலாம். தற்காலத்திலும் நாட்டுப்புறங்களில், பெரிய இரண்டு மூன்று கற்பாறைகளாலாகிய பொந்துகளில் கிராம தேவதைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மூங்கில்களை நிறுத்தி ஓலைகளைக்கொண்டு மூடப்பட்ட குடிசைகளில் கிராமத்தார் வணங்கும் சிறு தெய்வங்கள் இருப்பதை இன்னும் காணலாம். அன்றியும் மண் சுவர்களை யெழுப்பி, ஒடுகளினால் கூரைகளை அமைத்துக் கட்டிய பல சிறு கோயில்களை கிராமாந்திரங்களில் பல இடங்களில் இன்றும் காணலாம் ; சாதாரணமாய் எல்லாக்கிராமங்களிலும், கிராமப் பிடாரி ஐயனார் கோயில்கள் பெரும்பாலும் தற்காலமும் செங்கல் கட்டிடங்களாகத்தானிருக்கின்றன. கடைசியாகக் கருங்கல் கோயில்கள் பல நமது தேசத்தில் கட்டப்பட்டன.

கட்டிடங்களைக் கட்டும் சாஸ்திரத்திற்கு சில்பசாஸ்திரம் என்று பெயர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் கோயில்களைக் கட்டும் சாஸ்திரத்திற்கு கோயில் சில்பசாஸ்திரம் என்று கூறலாம்; இதற்கு உதாரணமாக மானச சாரமெனும் நூலைக் கூறலாம். கோயில்களைப் பற்றிக் கருதுமிடத்து நமது இந்தியா தேசத்தை முக்கியமாக இருபிரிவாகப் பிரிக்கலாம் ; விந்திய பர்வதத்திற்கு மேல்பாகம் முள்ளப் பிரதேசம், கீழ்பாகமுள்ள பிரதேசம்; மேல்பாகத்திற்கு ஆர்யா வர்த்தம் எனப் பெயரிட்டு, அங்குள்ள கோயில்களை ஆரிய சில்பம், அல்லது பெர்கூசன் துரை கூறுகிறபடி, இந்தியஆரிய சில்பம் உடையவை என்றும், கீழ்பாகத்தை, திராவிட தேசமென அழைத்து, இங்குள்ள கோயில்களே திராவிட சில்பமுடையவை என்றும் கூறலாம்.

இவ்விரண்டு சில்பங்களில் நமது தேசத்தில் புராதனமாயிருந்தது திராவிட சில்பமே. புராதன விஷயங்களைப் பற்றி ஆராச்சி செய்யும் சாஸ்திரக்காரர்கள், ஆரியர்கள் இந்தியாவுக்குள் பிரவேசித்தது சுமார் நாலாயிரம் வருடங்களுக்குப் பிறகுதான் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே ஆரிய சில்பம் என்னப்பட்டது அதற்குப் பிறகு தான் நமது தேசத்தில் தோன்றியிருக்க வேண்டும். திராவிடர்கள் இந்தியாவில் அதற்கு முன்பே யிருந்த ஜனங்களாவார்கள். இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்பே திராவிட நாகரீகமானது நமது தேசத்தில் பரவி யிருந்ததென எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. சர்ஜான்மார்ஷல் முதலிய் சாஸ்திரீகர்கள், மோஹஞ்சதரோ, ஹராப்பா முதலிய இடங்களில் பூமி மட்டத்திற் கீழ் தோண்டி, அங்கு அகப்பட்ட பல மிகவும் புராதனமான கட்டிடங்களை வெளிப்படுத்தி யிருக்கின்றனர். இவர்கள் இக்கட்டிடங்களெல்லாம் திராவிடக் கட்டிடங்களே என்றும் கூறியிருக்கின்றனர். ஆகவே திராவிட சில்பம் நமது தேசத்தில் மிகவும் புராதனமானது என்று கூறலாம்.

மேற்சொன்ன, வட இந்தியாவிலுள்ள சிந்து நதிக் கரைக்கடுத்த இரண்டு ஊர்களில் தோண்டி எடுக்கப்பட்ட கட்டிடங்களில் சிவலிங்கங்கள் அகப்பட்டிருக்கின்றன. ஒரு லிங்கமானது அதன் பீடத்துடன் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மற்ற இடங்களிலும் தோண்டிப் பார்த்தால் இன்னும் பல கிடைக்கலாம் என்று எண்ண இட முண்டு. இவ்விஷயத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய தென்னவென்றால், லிங்க பூஜை புராதனமான திராவிடர்களுக்குரியதாம் என்பதே. ஆகவே நமது தேசத்தில் சிவாலயங்களே மிகவும் முற்பட்டவை என்று கூறலாம். ஆகவே இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி இந்தியாவில் மிகவும் புராதனமான ஆலயம் திராவிட சில்பமமைந்த சிவாலயம் எனக் கூறலாம்.