Siva Temple Architecture etc./கோயில்களின் காலத்தை அறிதல்

கோயில்களின் காலத்தை அறிதல்

மேற்குறித்த் சில்ப விவரங்களைக்கொண்டு, நமது நாட்டிலுள்ள சிவாலயங்களும் அவைகளின் பகுதிகளும், எக்காலத்தில் கட்டப்பட்டனவென்று நாம் சுமாராகக் கூறக்கூடும். ஒரே நாலத்தில் முற்றிலும் கட்டப்பட்ட சிவாலயமா யிருந்தால், அதன் சில்பத்தைக்கொண்டு, இக்காலத்தில் கட்டப்பட்டதென நிர்ணயித்தல் சுலபமாகும். அப்படிப்பட்ட சிவாலயங்கள் சிலவே. பல்லவ கட்டிடங்களெல்லாம் பெரும்பாலும் எக்காலத்தில் முற்றிலும் கட்டப்பட்டவையென்று கூறலாம். அவைகளெல்லாம் ஒரே வகைச் சில்ப முடையவைகளா யிருக்கின்றன. சோழர்கள் காலத்திய சிவாலயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தப்பட்டு பூர்த்தியாயின என்று ஒருவாறு கூறலாம். இதற்கு சில உதாரணங்களைக் கருதுவோம்.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில்: -இது ராஜ ராஜன் எனும் கீர்த்திபெற்ற சோழ அரசனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1007 ௵ முடிக்கப்பட்டது. இது சோழ சில்பமுடையது. கிழக்கு கோபுரம் 1330 ௵ கட்டப்பட்டது; இது விஜயநகர சில்ப மமைந்தது. வடபுறமுள்ள சுப்பிரமணியர் கோயில் 17 ஆம். நூற்றாண்டில் கட்டப்பட்டதாக மதிக்கப்படுகிறது; சிலர் இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக எண்ணுகின்றனர்; ஆயினும் ஒன்றுமாத்திரம் நிச்சயம்; இது ராஜராஜனால் கட்டப்பட்டதல்ல. இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிறு கோயிலும் பிறகே கட்டப்பட்டதாகும். மேற்கிலுள்ள சித்தர்கோயில் மிகவும் புதிய கட்டிடமாம். இங்குள்ள வினாயகர் கோயில் 1801௵ சரபோஜி மகாராஜாவால் கட்டப்பட்டது.

சிதம்பரம் பெரியகோயில் :-இது மிகவும் புராதன காலத்தில் மரத்தாலாய சிறு ஆலயமா யிருந்ததென்று எண்ணுவதற்கு ஆதாரங்கள் உள; அது காலக்கிரமத்தில் ஜீரணமாயாவது போயிருக்கவேண்டும், அல்லது அதைப் பிரித்து கற்கோயில்கள் உண்டானபோது, கற்கோயிலாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். தற்காலக் கோயிலில் மிகவும் பூர்வீகபாகம் இங்கிருக்கும் நிர்த்தசபையாம். இதற்கருகிலுள்ள கனகசபையும் மிகவும் புராதனமானதாம். இது கி.பி. 985௵ இருந்ததென்பதற்கு, கல்வெட்டுகள் உள. இதைச் சுற்றிலும் உள்ள மதிலிலடங்கிய 320 அடி சதுரமுள்ள கோயில்தான் பழய கோயில்; இது விக்கிரம சோழனால் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பார்வதி ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோபுரங்கள் சுமார் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை, இவைகள் விஜயநகர சில்பமுடையவை; பெரும்பாலும் இரண்டாம் பிராகாரமும் அக் காலத்தியதே. ஆயிரக்கால் மண்டபம் 1395-1655 வருடங்களுக்குள் கட்டப்பட்டதாம். சுப்பிரம்னியர்கோயில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக மதிக்கப்படுகிறது. வடக்கு கோபுரம் 1516௵ கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இங்குள்ள கோவிந்தராஜருடைய சந்நிதி தற்காலம் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது.

திருவாரூர் கோயில்:-இங்கு வன்மீசுநாதர் கர்ப்பக்கிரஹம் தான் மிகவும் பழமையானது. இது 191x156 அடி விஸ்தீரணமுடையது; இது ஒரே பிராகார மடங்கியது; இதற்கு ஒரு சிறு கோபுரமும் உண்டு. இங்குள்ள அசலேஸ்வரர் கோயில்தான் மிகவும் புராதனமானதென்று சிலர் எண்ணுகின்றனர். வெளி கோபுரங்களெல்லாம் விஜயநகரத்தரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாம்.

பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரகாதர் கோயில்:-இது தேவார காலத்திற்கு முன்பாக இருந்திருக்கவேண்டும். ஆதியில், இது மரத்தாலாய கோயிலாயிருந்து பிறகு செங்கல்களாலும் சுண்ணாம்பினாலும் அமைக்கப்பட்ட ஆலயமாயிருந்திருக்கலாம். பிறகுதான் கருங்கல்லால் கட்டப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதற்கு சந்தேகமில்லை. ஆதியில் இருந்த கர்ப்பக்கிரஹம் பழய சோழ கட்டிடமாம். இது சுமார் 50 வருடங்களுக்கு முன் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் முற்றிலும் பிரிக்கப்பட்டு, புதிதாய்க் கட்டப்பட்டது. ஒரு சிவாலயத்திற்குரிய எல்லா அங்கங்களும் இருந்தபோதிலும், இவைகளெல்லாம் ஒரு ஒழுங்காயிராமல், கோணல் மாணலாக கட்டப்பட்டிருக்கிறதென டாக்டர் பெர்கூசன் கூறுகிறார். இப்படி நேரிட்டது. அப்போதைக்கப்போது பல புதிய கட்டிடங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தபடியால் இருக்கலாம். பெரிய கோபுரம் விஜயநகர சில்பம், கிருஷ்ணதேவராயர் காலத்தில் (1509 - 1530) கட்டப்பட்டது; இது தெற்குபார்த்தது; இக்கோயிலில் பல கோபுரங்கள் இருந்தும் இரண்டு கோபுரங்களாவது, ஒன்றுக்கொன்று நேராக இல்லை. 1000 கால் மண்டபம் என்று சொல்லப்படுவதில் 540 கால்கள்தானிருக்கின்றன. இம் மண்டபமும் விஜயநகர சில்பமமைந்ததே. கோயிலில் பெரிய பிராகாரத்திற்குள் மணற்கல்லாலாகிய (Sandstone) இரண்டு பூர்வீக கோயில்கள் இருந்தன. சுமார் 55 ஆண்டிற்குமுன்வரையில்; இவைகளில் ஒன்றாகிய மயானீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது சில வருடங்களுக்கு முன் பிரிக்கப்பட்டு, கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறு பிரிக்கப்படாது முன் ஸ்தியிலிருக்கும் மற்றொரு கோயில் ரிஷபேஸ்வரர் கோயிலாம். இதுவும் பழய மாயானேஸ்வரர் கோயிலும் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவைகள். இவையிரண்டும் மேற்கு பார்த்த கோயில்கள். இங்குள்ள அகத்தீஸ்வரர் மண்டபமும், சபாநாதர் மண்டபமும் பழய சோழகட்டிடங்கள். இங்குள்ள கலியாண மண்டபம் 1774௵ தென்னாட்டு வள்ளல் பச்சையப்ப முதலியாரால் கட்டப்பட்டது. கோயிலுக்கு எதிரிலுள்ள பெரிய பதினாறுகால் மண்டபம் 1030௵ கட்டப்பட்டதாம். இங்கு முன்பே கூறியபடி அம்மனுக்கு மூலஸ்தானம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

திருவொற்றியூர் கோயில்: -இக்கோயிலைப்பற்றி சிறிது ஆராய்வோம். இதுவும் தேவார காலத்தில் இருந்த கோயிலாம்; பழய மரக்கோயில் மாற்றப்பட்டு, தற்கால கர்ப்பக் கிரஹ விமானம் 1012-1042 வருடங்களில் ஆண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது; இக்கர்ப்பக்கிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி யுடையது. தென்பாரிசத்தில் இருக்கும் கௌளீஸ்வரர் கோயில் என வழங்கப்படுகிற சிறு கோயில், வீரராஜேந்திரர் காலத்தில் (1067-1068) கட்டப்பட்டதாகும். அம்மன் சந்நிதி பிற்காலத்தில் உண்டானதென்பதற்குச் சந்தேகமில்லை. தியாகராஜர் சந்நிதியும் அதற்குப் பிற்காலத்தில் உண்டானதாகும். கோயிலின் உட்பிராகாரத்தில், மிகவும் பூர்வீகமான வட்டபலிநாய்ச்சியார் எனும் துர்க்கையின் கோயிலிருப்பது கவனிக்கத்தக்கது; இது பூமியின் மட்டத்திற்கு கீழ் இருக்கிறது. தற்காலத்திய கர்ப்பக்கிரஹம் கட்டப்பட்ட காலத்திலேயே இது இருந்திருக்கவேண்டும். ஆதியில் இக்கோயிலுக்கு கோபுரமே இல்லாம லிருந்தது. சென்ற நூற்றாண்டின் கடைசியில் எல்லப்ப செட்டியார் என்பவரால், பழய கருங்கல் அஸ்திவாரத்தின்மீது, கோபுரம் செங்கல் கட்டிடமாகக் கட்டப்பட்டது. வடமேற்கு மூலையில் சென்ற இருபதாண்டுக்குள் ஸ்ரீமான் இராமசாமி பிள்ளையவர்களால் ஒரு சிவாலயம் புதிதாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

(இன்னும் ம்ற்ற சிவாலயங்களைப்பற்றி அறிய விரும்புவோர், நான் தற்காலம் அச்சிட்டுவரும் "சிவாலயங்கள்- இந்தியாவிலும் அப்பாலும்" எனும் புஸ்தகத்தில் கண்டு கொள்க).