Siva Temple Architecture etc./சிவாலய ஜீரனோத்தாரணம்
சிவாலய ஜீரனோத்தாரணம்
முதலில் "பத்து புதிய ஆலயங்களைக் கட்டுவதைவிட, பழயதொரு சிவாலயத்தை ஜீர்ணோத்தாரணம் பண்ணுதல் அதிக புண்ணியமாம்" எனும் பழமொழியை இதை வாசிக்கும் சிவநேயர்களுக்கு நினைப்பூட்டுகிறேன். அப்படி பழய சிவாலயங்களைப் புதுப்பிப்பதில் மிகுந்த சிவ பக்திமான்களாகிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கு, நாம் அனைவரும் முதல் ஸ்தானத்தைக் கொடுக்கவேண்டும். அவர்களது தயாள குணமும் விடா முயற்றியு மில்லாவிடின் நமது நாட்டிலுள்ள பல பெரிய சிவாலயங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கும் என்பது நிச்சயம். பழய சிவாலயங்களை ஜீர்ணோத்தாரணம் செய்வதில், அவர்களுக்கும், அத்திருப்பணியைப் பூணும் மற்றவர்களுக்கும் அடியேனுடைய விண்ணப்பம் அடியில் வருமாறு:-
பழய கோயில்களை மராமத்து செய்யும்பொழுது கூடுமானவரையில் கர்ப்பக்கிரஹம் முதலிய முக்கியமான பாகங்களையெல்லாம் பூர்வகாலத்தில் இருந்தபடியே மராமத்து செய்து, நிலைநிறுத்த வேண்டியது மிகவும் அவசியம். கூடுமானவரையில் அபூர்வமான சில்பங்களை அப்படியே பாதுகாத்தல்தான் சிவபக்தர்களுடைய கடமையாகும்; பழய சில்பிகளைப்போல் தற்காலத்து சில்பிகள் அவ்வளவு திறமைவாய்ந்தவர்களன்று, என்பது சில்ப சாஸ்திரத்தை ஆராய்ச்சி செய்த பல பெரிய சாஸ்திரீகர்களுடைய அபிப்பிராயம். அப்படிக்கின்றி தற்காலத்து சில்பிகள் அத்துணை திறமை வாய்ந்தவர்களா யிருந்தபோதிலும், பழய சில்பங்களுக்குரிய அருமையும் பெருமையும், புதிய சில்பங்களுக்கு கிடைக்கமாட்டாதென்பது திண்ணம்.
அன்றியும் அநேக பழய சிவாலயங்களில், மிகவும் அருமையான பழய கல்வெட்டுகள் உள. அவைகளைப் பாதுகாப்பது நம்மவர்களுடைய கடமையாகும். கோயில்களைப் பிரித்துக் கட்டும்பொழுது அக்கல்வெட்டுகள் உள்ள கற்களை, பழயபடியே வைக்காமல் மாற்றிவிடுவதினால், பழய கல்வெட்டுப் பரிசோதகர்களுக்கு நேரிடும் கஷ்டம் கொஞ்சமல்ல. முக்கியமாகத் தென் இந்தியாவின் பூர்வீக சரித்திரத்திற்கு இக்கல்வெட்டுகள்தான் மிகவும் ஆதாரமாயிருக்கின்றன, என்பதை வற்புறுத்த விரும்புகிறேன். மேலும் அப்படிப்பட்ட கல்வெட்டுகள் உள்ள இடங்களில், சுண்ணாம்பு அடிப்பது உசிதமல்ல. கோயில்களில் சுண்ணாம்பு கட்டிடங்களுக்கும் வெளி மதில்சுவர்களுக்கும் தவிர, கருங்கற்பாகங்களுக்கெல்லாம் வெள்ளைச் சுண்ணாம்படிப்பது அவ்வளவு அழகாயில்லை என்பது என் அபிப்பிராயம் மாத்திரமன்று, நமது கோயில் சில்பங்களைப் புகழ்ந்து பேசும் பலநாட்டு சாஸ்திரீகர்களுடைய அபிப்பிராயமுமாம்.
கோயில்களே ஜீரணோத்தரணம் செய்யும் பக்திமான்கள் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பழய மண்டபங்கள் முதலியவைகளை மராமத்து செய்யும்போதும், புதியனவாய் ஏதாவது கட்டும்போதும், கருங்கற்களையும் செங்கற்களையும் உபயோகிக்கவேண்டுமே யொழிய, தகரக் கொட்டைகளையும், துத்தினாமத்தாலாகிய மேற்பரப்புகளையும் உபயோகிப்பது ரசாபாசமாகத் தோன்றுகிறது என்பதற்குச் சந்தேகமில்லை. இதை அவர்கள் முற்றிலும் தவிர்க்கும்படியாக நான் வேண்டிக் கொள்ளுகிறேன்.
பழய கோயில்ளைப் புதுப்பிப்பதில் மைசூர் ராஜ்யத்து பூர்வீக நாகரீக சாஸ்திர இலாகாதார்கள் மிகவும் அருமையாக, பழய அழகும் அருமையும் கெடாதபடி மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். சில இடங்களில் அவர்கள் மாரமத்து செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாதபடி, அவ்வளவு அழகாக பூர்வீக வேலையை ஒட்டிச் செய்திருக்கிறார்கள் ; இவர்கள் முறையை மற்றவர்களும் கைப்பற்றுவது மிகவும் நலமாகும்.