அடிமனம்/ஆழ்ந்த பகுதி


ஆழ்ந்த பகுதி

னத்தை மூன்று முக்கியமான பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம் என்று முன்பே கண்டோம். சாதாரணமாகத் தொழிற்படுவது மனத்தின் மேல் பகுதியாக உள்ள நனவுமனம். அதைச் சேர்ந்தாற்போல அதன் அடிப்பாகமாக இருப்பது இடைமனம் அல்லது நனவடி மனம். அதற்கும் கீழே இருப்பது அடிமனம். இதைத்தான் நனவிலி மனம் என்று கூறுகிறோம். இப்பகுதியில் உள்ள அநுபவங்களும் இச்சைகளும் நனவுக்கு எளிதாக வருவதில்லை. இவ்வாறு ஆாாய்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளாக நாம் பிரித்துக் கொண்டாலும் இத்தகைய பிரிவினை எதுவும் மனத்தில் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மனத்தை இவ்வாறு பிரித்து ஆராயலாம் என்கிற விஷயம் சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சிகளின் பயனாகவே தெளிவடைந்தது. அதற்கு முன்பெல்லாம் உளவியலறிஞர்கள் மனத்தை நனவுமனம் என்கிற ஒரே பகுதியாகவே கருதி ஆராய்ந்தார்கள். பிராய்டுக்கும் நனவிலி மனமாகிய அடிமனத்தைப் பற்றிய எண்ணம் நாளடைவில்தான் உறுதியடைந்தது. மனநோயால் துன்புறுகின்றவர்களைத் ‘தடையிலாத் தொடர்முறை’யால் ஆராய்கின்றபோது மறந்து போன இளமைப் பருவத்து அநுபவங்களும் அதிர்ச்சிகளும் வெளியாயின. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சில அநுபவங்கள் கொஞ்சம்கூட நினைவில் இல்லாமலிருந்தும் பிராய்டின் புதிய சோதனை முறையால் அவை வெளியாயின. உதாரணத்திற்கு இங்கு ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன். 

தடையிலாத் தொடர் முறையால் ஒரு இளைஞனைப் பரிசோதனை செய்தார்கள். வெளிப்புறத்திலிருந்து எவ்வித சத்தமோ வேறு தொந்தரவுகளோ இல்லாத அமைதியான ஓர் அறையில் அவர் ஒரு மஞ்சத்தில் படுத்திருக்கிறார். மங்கலான ஒளி அந்த அறையில் பரவியிருந்தது. ஒரே நிசப்தம். அவர் நிம்மதியாக, உடலுறுப்புக்களையெல்லாம் தளர்த்திவிட்ட நிலையில் படுத்திருக்கிறார். சோதனை செய்பவர் ஏதோ ஒன்றிரண்டு சொற்களைக் கூறினார். அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அந்த இளைஞருடைய மனத்தில் என்னென்ன எண்ணங்கள் உண்டாகின்றனவோ அவற்றையெல்லாம் உடனுக்குடனே வெளிப்படையாக எவ்வித யோசனையோ தடையோ இல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே ஏற்பாடு. பரிசோதனை செய்பவரிடம் நம்பிக்கையும், அவரோடு சேர்ந்து ஒத்துழைக்கவேண்டுமென்ற ஆவலும் அந்த இளைஞருக்குண்டு. ஆகையால் அவர் தமது மனத்திலே தோன்றியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். அவர் கூறியதிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவம் வெளியாயிற்று.

அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்பொழுது அவர் தமது தாய்க்குப் பக்கத்தில் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாராம். தாய் குழந்தையோடு கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறாள். அவர்கள் இருந்தது ஒரு பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே ஒரு கூரை வீடு. அப்படி அவர்கள் படுத்திருக்கும் போது கூரையிலிருந்து ஒரு பாம்பு குழந்தை மேலே தொப்பென்று விழுந்தது. தாய் அதைக் கண்டு வீரிட்டுக் கதறிவிட்டாள். தாய் கதறுவதைப் பார்த்துப் பையனும் பயந்து நடுங்கிக் கதறியிருக்கிறான் நல்ல வேளை. பாம்பு யாரையும் கடிக்கவில்லை. அதுவும் பயத்தால் வேகமாக மறைவிடம் தேடி ஓடியிருக்க வேண்டும். இரண்டாம் வயதில் ஏற்பட்ட அந்த பயங்கர அதிர்ச்சி அந்த இளைஞரின் மனத்திலே அத்தனை காலமாக எங்கோ மறைந்து கிடந்து அப்பொழுது வெளியாயிற்று. அதற்கு முன்பு அதைப்பற்றிய நினைவே அவருக்குக் கிடையாது. இந்த அநுபவம் வெளியானதைக் கண்டு அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

தடையிலாத் தொடர் முறையால் இவ்வாறு அநுபவங்கள் வெளியாவதைக் காணக் காண பிராய்டுக்கு ஒரு யூகம் பிறந்தது. இந்த அநுபவங்கள் புதிதாக மனத்துக்குள் உண்டாகவில்லை. அவை மனத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வராமல் எங்கோ இருந்திருக்கின்றன. அப்படியானால் இவ்வாறு மறைந்து கிடக்கும் அநுபவங்களும் இச்சைகளும் இருக்கும்படியான ஒரு பகுதி மனத்தில் இருக்க வேண்டுமல்லவா? அந்தப் பகுதியைக் தான் பிராய்டு மறைமனம் அல்லது நனவிலி மனம் என்று பிரித்துக் கூறலானார். இந்தப் பிரிவினையே மன ஆராய்ச்சியில் மனப் பகுப்பியல் என்ற ஒரு புதிய கிளை உண்டாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அடிமனம்/ஆழ்ந்த_பகுதி&oldid=1004444" இலிருந்து மீள்விக்கப்பட்டது