அண்ணாவின் பொன்மொழிகள்/இளைஞர் ஏறுகள்!


இளைஞர் ஏறுகள்!


வாலிபர் முழு வாழ்வுபெற

சிற்பியிடம் கற்பாறை தரப்படுகிறது. அவன் வேலைக்கான மூலப் பொருள் --இனி அவனுக்குத் தேவை சிறிய உளியும், பெரிய உள்ளமும்; சுதந்தர இந்தியாவிலே, இதுபோலவே, வாலிபர்களுக்குப் பகுத்தறிவும். சுயமரியாதை உணர்ச்சியும் தேவை--புது வாழ்வு பெற--முழு வாழ்வு பெற.

🞸🞸🞸

வாலிபர்கள்,உரிமைப் போர்ப்படையில் ஈட்டி முனைகள். அவர்தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும் வாழ்க்கை எனும் பொய்கையிலே, விசாரம் என்னும் நஞ்சு கலக்கப்படாத பருவம்.

🞸🞸🞸

சந்தனக் காட்டைக்கடந்து மணமும் குளிர்ச்சியும் மருவி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல் அது போன்றது வாலிபம்.

🞸🞸🞸

மாயா வாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரன் வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம், ஆபத்துக்குப் பொருட்படுத்தாமல் அநீதியைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு. வாலிபர்களிடையே மிகுந்திருக்கும்.

🞸🞸🞸

முடியுமா? காலம் சரியா? போதுமான பலம் இருக்கிறதா? நாளைவரை பொறுத்திருக்கக் கூடாதா? என்பன போன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா.

🞸🞸🞸

வாலிபர்கள் நடமாடும் எஃகுக் கம்பிகள், அகத்திலே அருவிபோல் ஆர்வம், முகத்திலே வீரக்களை, செயலிலே துடிதுடிப்புக் காணப்படும். தலை குனிந்து நிற்பது பெருமூச்செறிவது, நம்மால் முடிகின்ற காரியமா என்று இழுத்துப் பேசுவது, ஆகிய முறைகள் அவர்களுக்குப் பிடிக்காதன. அவர்கள் செயலாற்றும் வீரர்கள்.

🞸🞸🞸

உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள், அக்கிரமங்களை அழிக்க அனைத்தையும் அர்ப்பணித்த தியாகிகள், மக்கள் வாழ உழைத்த மாவீரர்கள், ஆகியோர் பற்றிய வரலாறு படித்தறிந்த அவர்கள் சிந்தனையிலே நம்மாலாவதென்ன பராபரமே, என்ற பஜனைப்போக்கு ஏற்பட முடியாதல்லவா? ஆகவேதான் வாலிபர்கள் விறுவிறுப்புடன் காணப்படுகின்றனர்.

🞸🞸🞸

என் நாடு பொன்னாடு; எங்கும் இதற்கு இல்லை ஈடு என்று மார்தட்டுகிறான் வாலிப வீரன், நாட்டின் நிலை உயர வேண்டும்; வளம் பெருக வேண்டும். செல்வம் வளர வேண்டும்; தொழில் செழிக்க வேண்டும்: ஒருவர் ஒருவரை அடக்குவது; சுரண்டுவது; மேல் கீழ் என்று பேதம் காட்டுவது; விசாரத்தோடு விண்ணை அண்ணாந்து பார்ப்பது; வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று வேதாந்தம் பேசுவது; பிறவா வரம் தாரும் என்று சலிப்புச் சிந்து பாடுவது ஆகிய போக்கு முறையும் மாறி, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று பாரதியார் சொன்னபடி அனைவரும் உரிமையுடன் உவகையுடன் வாழவேண்டும். நாடு பூந்தோட்டமாக விளங்கி, நானிலத்தோர் கண்டு புகழும் நிலை அடைதல் வேண்டும் என்பது வாலிபர்களின் இன்பக் கனவு.

🞸🞸🞸

சுதந்திரம்--விடுதலை--என்றால், சட்டசம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது. புதிய நிலை--புது அழகு--புது உருவம் புதிய மகிழ்ச்சி நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான்; உண்மையும் அதுதான்.

🞸🞸🞸

சுதந்திர இந்தியாவிலே, வளைவுகளை நிமிர்த்த படுகுழிகளை மூட, பாதைகளைச் செப்பனிட, சூது மதியினரை அடக்க, சொந்த மதியற்றோருக்கு அறிவு புகட்ட, சுரண்டுபவனை அடக்க, சோர்ந்திருப்பவனுக்கு உரம் ஊட்ட, பஞ்சம் வராமல் தடுக்க, படிப்பைப் பரப்ப, தொழிலை வளர்க்க, வாலிபத்தை வளமாக்க--எண்ணப் போனால் மளமள வென்று பலப்பல வேலைகள் தெரியும் மனக் கண்முன், இவைகளைச் செய்யவேண்டும். அதற்கான உறுதிவேண்டும். செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும்.

🞸🞸🞸

பழமை பயங்காட்டும்; வைதீகம் மிரட்டும்; ஜாதி எதிர்க்கும், சம்பிரதாயம் சீறும்; குருட்டுக் கோட்பாடுகள், முரட்டுப் பிடிவாதங்கள், அர்த்தமற்ற பற்று பாசங்கள், இவைகளெல்லாம் இருண்ட மண்டபத்திலே வட்ட மிடும் வௌவால்கள் போலக் கிளம்பும். உற்றார் உறவினர், அண்ணன் தம்பி, பெற்றோர் பெரியவர்கள், எங் கெங்கேயிருந்தோ எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்பும். இவைகளைக் கண்டு அஞ்சாமல் அயராமல், பணி புரியும் பண்பு வாலிபருக்குத் தேவை.

🞸🞸🞸

மனிதன் மனிதனாக வாழ வழி கண்டுபிடிக்கும் மகத்தான வேலை, வாலிபர்கள் முன் இருப்பது. நாட்டின் இயற்கை வளத்தையும், மக்களின் மன வளத்தையும் பெருக்கும் பெரும் வேலை இருக்கிறது. புதிய வாழ்வு அமைக்கும் பொறுப்புள்ள வேலை; இதற்குப் பல பொருள் பற்றிய அறிவும் எதையும் பகுத்தறியும் தன்மையும். காரணம் கண்டே எதையும் ஏற்றுக்கொள்ளும் போக்கும் அறிவுடன் தொடர்புகொண்ட ஆற்றலும், மக்களிடம் மட்டற்ற அன்பும், அவர்களை வாழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், அவர்கள் அனைவரும் வஞ்சிக்காமல், சுரண்டாமல், அடக்கி ஆளாமல், அடிமைப்படாமல் வாழக்கூடிய விதத்தில் நாட்டின் வளத்தையும் முறையையும் புதுப்பிக்கமுடியும் என்ற எண்ணமும், பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல் என்ற எண்ணமும், வாலிபர்களுக்குத் தேவை.

🞸🞸🞸

வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்டவேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாகவேண்டும். உடல் உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்கவேண்டும். வாலிபர்கள் பாலம் அமைக்க, நீர்த்தேக்கம் அமைக்க, உழவு முறையை மாற்றப் பணிபுரியவேண்டும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்துப் புதுமையின் சோபிதத்தைக் காட்டிப் புத்துலகு அமைக்கவேண்டும் வாலிபர்கள். இதற்கான திறமும் தீரமும் தேவை. அறிவு ஆராய்ச்சி தேவை. இதற்கான வெளி உலகத் தொடர்பு தேவை.