அண்ணாவின் பொன்மொழிகள்/உழைப்பாளர் இனம் ஓங்குக!


உழைப்பாளர் இனம் ஓங்குக!


தொழிலாளியின் உயர்வு

பாட்டாளி மக்களின் விடுதலை விழா மேனதினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள், வாழ்வுக்காக--விடுதலைக்காக--உரிமைக்காக மே தினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு. 8 மணி நேரம் உழைப்பது, 8மணி நேரம் குடும்பத்தினரிடம் குதூகலமாக வாழ்வது, மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது--இந்தத் திட்டத்தை மே தினம் எடுத்துக் கூறுகிறது.

🞸🞸🞸

தொழிலாளி, துயரின் உருவமாகிறான். அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள், எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வலியுறுத்தினர். அதனை வலியுறுத்த, ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

🞸🞸🞸

முதலாளித்துவம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து, வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி, அந்தக் கயிற்றை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, "பார், பார் நான் முதலாளித்துவத்தைக்கட்டிப் போட்டு விட்டேன்" என்று கூறினால் சரியா?

🞸🞸🞸

ஜார் மன்னன் ஆட்சியிலே அவனால் இழைக்கப் பட்ட கொடுமைகளை ஒழிக்க எப்படி அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்துப் போராடினார் களோ, பிரான்சிலே பணப்பட்டாளத்தின் கொடுமைகளை எதிர்த்துப் பல பட்டினிப் பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் புரட்சிச் சக்தியின் மூலம் லூயி மன்னருக்கு அறிவுறுத்தினார்களோ, அதே போன்று நம் நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்; மக்களின் சக்தி ஒன்று திரண்டு, மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்திற்குப் புத்தி புகட்ட வேண்டும்.

🞸🞸🞸

பாட்டாளிகளின் போராட்ட முயற்சியின் இடையிலே ஒரு நாள் ஓய்வு பெற்று நின்று, சென்ற கால- வருங்கால கணக்கைப் பார்க்கும் திருநாளே இம் மே நாள். சென்ற காலங்களில் மகத்தான வெற்றிகளைக் காண முடியாவிட்டாலும், கண்ட சிறு சிறு வெற்றிகளை நினைத்து, மகிழ்ந்து, உள்ளத்தை ஊக்குவித்துக் கொள்ளவும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய செயல்களை எண்ணிச் செயலாற்றும் நெறியிலே உறுதி கொள்ளவும் இம் மே நாள் பயன்படுகிறது.

🞸🞸🞸

இன்று தொழிலாளர்களில் பலர் மாயப் பிரபஞ்ச வாழ்வைப் பற்றியும் ஆண்டவன் திருவடியில் இரண்டறக் கலப்பது எப்படி என்பதைப் பற்றியும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்களே அதை முதலில் போக்கடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முதலில் வாழ்க்கையிலே உள்ள சலிப்பைப் போக்கவேண்டும். இந்த உலகம் பெரியது, விழுமியது, வளமுள்ளது என்ற விரிந்த மனப்பான்மை அவர்களிடையே தோன்ற வேண்டும். நாம் வாழப் பிறந்துள்ளோம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

பஞ்சாங்கமில்லாத வீடுகளை நீங்கள் காண முடியாது

நாள் பார்க்காத மக்களை நீங்கள் பார்க்க முடியாது.

சகுனம் கேட்காத ஜென்மங்களை நீங்கள் காண்பது அரிது.

மார்கழித் திருநாள் கொண்டாடாத மக்கள் மிகக் குறைவு.

சித்திரா பௌர்ணமிக்குப் பொங்கலிட்டுப் படைக்காத வீடுகளை நீங்கள் பார்க்க முடியாது.

பஞ்சாங்கம் பார்க்கும் பழைய புத்தி அடியோடு ஒழிந்தால் ஒழிய மக்கள் பகுத்தறிவைப் பெற முடியாது.

🞸🞸🞸

கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டானோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயாமல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான். ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கை தான். நாகரிக நாட்டிலே, தன்னரசு தழைத்து ஓங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது. மிருகங்களுக்கு கிடைக்கும் ஓய்வுகூட ஏழைத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை. உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயர முடிகிறதா?

🞸🞸🞸

ஆலைத் தொழிலாளி சகுனத்திலே நம்பிக்கை வைத் திருப்பது விசித்திரமானது. அமெரிக்காவிலிருக்கும் தொழிலாளிகள் சகுனம் பார்ப்பதில்லை. ரஷ்யாவில் உள்ள தொழிலாளி சகுனம் என்றால் என்ன என்று கேட்பார். சகுனம் பாராத மேலை நாட்டுத் தொழிலாளிகள், கடிகாரத்தைக் கவனித்து நடக்கிற மேனாட்டினர், முன்னேற்றத்தின் உச்சியிலே இருக்கிறார்கள். நம் நாட்டுத் தொழிலாளர்கள், கடிகாரத்திற்கு மதிப்புத் தருவதில்லை. கடிகாரம் வாங்கப் பணமில்லாமலே பஞ்சாங்கம் வாங்கி வைத்துக் கொண்டு இராகு காலம் பார்க்கிறார்கள்; சகுனம் பார்க்கிறார்கள்; இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.

🞸🞸🞸

உலகம் மாயம் இல்லை. உழைப்பவன் வாழ்வும் மாயமன்று. ஆனால் உழையாதவன் உல்லாசத்தில்தான் மாயம் இருக்கிறது.

🞸🞸🞸

மனிதன் உணவு உண்கிறான்; மிருகமும் உணவு உண்கின்றது. மனிதன் காதல் புரிகிறான். மிருகமும் காதல் புரிகிறது. மக்களிலே ஆணும் பெண்ணும் மருவுகின்றனர். விலங்குகளிலும் அப்படியே. ஆனால் மிருகத்திற்குத் தேவைக்கேற்ற வசதி இருக்கிறது. மனிதனுக்கோ தேவைக்கேற்ற வசதி இல்லை.

🞸🞸🞸

நாட்டிலே ஒரு குலம் பாடுபடாது உண்டு உறங்கிக் கிடக்க, மற்றவர் உடல் தேய, உள்ளமும் உணர்வும் தேய, உழைத்துக் கெடுவதா?

🞸🞸🞸

பண்ணைகளில் பாடுபட்டுப் பயிர் செய்வது சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா இன்னவித உயர் வகுப்புப் பயிர்கள். ஆனால் அவன் உண்பது கால் வயிற்றுக் கஞ்சி. அதுவும் கம்பங் கூழோ கேழ்வரகுக் கஞ்சியோதான். பாட்டாளி பாடுபட்டுக் கட்டுவது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் போன்ற மனைகள், நான்கடுக்கு ஐந்தடுக்கு அரண்மனைகள்; அவைகளை நிமிர்ந்து நோக்கினால் கழுத்துவலிக்கும். ஆனால் அவன் அண்டியிருப்பது குனிந்து நுழைய வேண்டிய குடிசை! ஏன் இந்தப் பேதம் இந்த நாட்டிலே?

🞸🞸🞸

பணக்காரன் குளம், குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி ஊற்றுக்குச் சமமானவன். மழை பெய்தால் குளம் குட்டைகளில் நீர் இருக்கும்; இன்றேல் வரண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்து கொண்டே இருக்கும். இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும்--முதலாளிக்கும்.

🞸🞸🞸

உழைக்க ஒரு குலம், அதனை உறிஞ்சப் பிறிதொரு குலம் என்ற நியதி நியாயமா?

🞸🞸🞸

தோழமை--ஆழ்ந்த கருத்துள்ள அழகான சிறு சொல்.

🞸🞸🞸

ஒற்றுமை--கூட்டுறவு--ஒப்பந்தம்--கூடிவாழ்தல்--நட்பு--அன்பு--என்றுள்ள எத்தனையோ பதங்களும், ஒவ்வோர் அளவுவரை மட்டுமே சொல்லக் கூடியவை--முழுத் திருப்தி தருபவையல்ல--தோழமை என்ற நிலையை அடையும் படிக்கட்டுகள் இவை--ஆனால் தோழமை, இவ்வளவுக்கும் மேலான ஓர் நிலை,பேதம் நீங்கிய, நீக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத நிலை அல்ல--பேதம் ஏற்படாத நிலை-ஏற்பட முடியாத நிலை.

🞸🞸🞸

ஒருவரை ஒருவர் கண்டவுடன் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும்-பயன் கருதி அல்ல--அர்த்த மற்று அல்ல-கண்டதும் களிப்பு நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து அந்தக் களிப்பு மலரவேண்டும். அதுவே தோழமை!

🞸🞸🞸

சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டு வரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

🞸🞸🞸

நீதியையும் நேர்மையையும், சமுதாயத்தில். அமைதியையும், சுபிட்சத்தையும் விரும்பும் எவரும், தொழிலாளர் பிரச்னையை அலட்சியப்படுத்தி விடவோ, அல்லது அடக்கு முறைகளால் அழித்து விடக் கூடுமன்றோ எண்ண முடியாது.

🞸🞸🞸

எந்த ஸ்தாபனமும், ஐக்கியத்தை, ஒற்றுமையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே வலிவுடன் விளங்கும், பயன் விளையும்.

🞸🞸🞸

ஸ்தாபனம்--அதாவது அமைப்பு--பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்--ஓர் பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க்கருவி களும் வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும்--வகையும் வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால் வாள் மட்டும் போர்போல் குவித்து வைத்துக்கொண்டு கேடயம் தேடாமல் இருப்பதோ, வில்களைக் குன்றெனக் குவித்துக் கொண்டு அம்புகள் இல்லாமலிருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்துவைத்துக் கொண்டு, வெடிமருந்து தேடாமலிருந்து விடுவதோ, இவையாவும் ஒழுங்காகவும், தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுக்கு வீரர்கள் இல்லாதிருப்பதோ, வீரர்கள் இருந்தும், இவர்களை நடத்திச் செல்லும் படைத்தலைவன் இல்லாதிருந்தால், பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோல் இருக்குமே தவிர பயன் தரும் மனிதராக இருக்க முடியாது.

🞸🞸🞸

குறைகளை உணர்ந்து, அவைகளுக்குக் காரணம் யாவை என்பது பற்றிய விவாதத்திலே ஈடுபட்டு உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக் கொள்ள, தனித் தனியாக முயற்சித்துப் பார்த்து, முடியாது போன பிறகு தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபனரீதியாகத் தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தங்களின் வாழ்க்கை முறையும், தொழில் முறையும், தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைவுகளும், எல்லா தொழிலாளருக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு, அனைவருக்கும் ஒரே வகை வியாதி என்று தெரிவதால், அனைவரும் ஒரே வகை மருந்து தேடவேண்டும், என்று முடிவு செய்து, ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத் தன்மை கெடாதிருக்கு மட்டும் ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும்.

🞸🞸🞸

பொதுத்தன்மை பலமாக இருக்க வேண்டுமானால், ஸ்தாபனம், மிக மிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்பட வேண்டும்.

🞸🞸🞸

அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய் `அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காமலிருக்கும். ஆனால் சில காலத்துக்குத்தான் எப்போது மல்ல. தம்பியின் பழக்கமே அண்ணன் அறியா வண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகி விட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, எந்த விதமான பந்த பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனை யும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும். குடும்பம் பிளவுறும்; பிரியும். அண்ணன் தம்பிக்குள்ளாக ஒரு குடும்பத்திவேயே, இந்த நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்தாபனத்தில் மற்ற ஐக்கிய உறுப்பினருக்குமிடையே, கடைசி வரையில் பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையாதபடி பார்த்துக் கொள்ள முடியாது.

🞸🞸🞸

ஸ்தாபனம் ஏற்படச் செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்துக்கு, அதற்கான திறமை வாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படுவது போலச் சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்க திறனும்,உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை.

🞸🞸🞸

பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ்வளவு முக்கியமானதல்ல--அந்த ஜன்னல் இல்லாமற் போனாலும் மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப்படையும் குறுக்குச் சுவரும், மேல் அமைப்பும் சரியாக இருக்கு மட்டும், ஜன்னல் இருந்தாலும் எடுப்பட்டாலும், கெட்டாலும், மாளிகைக்கு ஒரு சேதமுமில்லை. ஆனாலும் மாளிகையிலே அக்கரை உள்ளவர்கள், அந்தச் சிறு ஜன்னலைக் கூடத்தான் கவனித்துக் கொள்வார்கள் கெடாதபடி. ஜன்னலை மட்டுமல்ல, அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும், கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டுக் கள்ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து அதன் விளைவாக மாளிகைக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்பட்டு விடக் கூடுமே, என்ற யூகம், மாளிகைக்காரருக்கு இருக்கும். எனவே, அவர் ஜன்னலின் கம்பி, மாளிகையின் அடிப்படை அல்ல என்ற போதிலும், அதனையும் தான் அக்கரையுடன் கவனித்துக் கொள்வார்; ஸ்தாபனங்களிலும் இது போலத்தான், தொழிற் ஸ்தாபனங்களின் ஐக்கியமும் பலமும் கெடாதிருக்க வேண்டுமானால், ஜன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர் போல், ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும், கவனித்து, கட்டுக் கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

🞸🞸🞸

பெரிய மரங்களை மாளிகை மண்டபத்துக்குத் தூண்களாக அமைத்து விட்டால் மட்டும் போதாது. மிக மிகச் சாதாரணச் செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்து கொள்ளாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும்-- செல் அரிக்க ஆரம்பித்தால் செம்மரமும் சரி, எம்மரமும் சரி கெடும்.

🞸🞸🞸

தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒரு சேர ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்க வேண்டும்-- இருக்க வேண்டுமானால், இருவகை சக்திகளையும் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்க வேண்டும். ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு என்ற எண்ணம், குன்றாது, குறையாது இருக்க வேண்டும். அந்த எண்ணத்தாலேயே ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாமல் காப்பாற்ற முடியும்.

🞸🞸🞸

அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடாதிருப்பது போலக் கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது.

🞸🞸🞸

ஸ்தாபன ஐக்கியம், ஒரு முறைப்பாடுபட்டுச் சாதித்து விட்டு, அதைக் கண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டு இனிக் கவலை இல்லை என்று இருந்து விடக் கூடிய ஒரு சம்பவமல்ல. எப்போதும் விழிப்போடு இருந்து கொண்டு அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஓர் அற்புதமான ஜீவ சக்தி. ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த ஐக்கியத்தை--ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது.

🞸🞸🞸

வீணை உயர்தரமானதால், வித்வானும் தேர்ந்தவர் தான். ஆனால் ஒரு நரம்பு மட்டும் ஓரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும்; வித்வானின் நாதமும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம் சங்கீதத்துக்கு உள்ள சுருதி ஞானத்தைப் போன்றது--மிக மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

🞸🞸🞸

முதலாளிகளுக்கு கிடைக்கும் லாபம் அவர்கள் மேனிமினுக்குக்குப் பயன்படுத்தும் அளவு இருக்கக் கூடாது. அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர மீதிப் பணத்தை வரி போட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

🞸🞸🞸

தனிப்பட்ட எவரும் எந்த தொழிற்சாலையையும் எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது. முதலாளிகளிடம் இருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும் சர்க்கார் எடுத்து நடத்த வேண்டும். அவ்விதம் செய்தால் அதில் கிடைக்கும் லாபம் அரசாங்கத்தைச் சாரும். எந்தத் தனிப்பட்ட முதலாளியையும் சாராது. அதனால் முதலாளித்துவம் வளராது; பூண்டே இல்லாமல் ஒழிந்து விடும்.

🞸🞸🞸

முதலாளிகள், அதிக சரக்கைத் தயார் செய்து அகண்ட தன் நாடு பூராவிலும் விற்று, நிறைய லாபம் சம்பாதித்து பெரிய முதலாளிகள் ஆகிறார்கள். இம் முறையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில்தான் வியாபாரம் செய்யலாம். அதற்குமேல் செய்ய வேறு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற முறை இருக்க வேண்டும்.

🞸🞸🞸

ஓய்வு நேரம்--வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக, மிச்சமிருக்கும் பொழுது வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் 'காலம்'--ஓய்வு அல்ல--அது ஒய்யாரம். வேலை கிடைக்காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத்திருப்பது 'ஓய்வு' அல்ல. திகைப்பு. வேலை செய்யும் மனப்பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது 'ஓய்வு' அல்ல--அது சோம்பல். ஆக, யாராவது ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது.

🞸🞸🞸

பொது மக்களின் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் 'ஓய்வு' இருக்கிறதே, அதையே நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நல்ல அறிவாளர்கள்.

🞸🞸🞸

உழைப்பு, உருக்குலைந்து விடக் கூடாது--உடலையும் சரி, உள்ளத்தையும் சரி, வாழ்விற்காக வசதி தேடுவதற்கு உழைத்து, அந்த உழைப்பினாலே, உருக்குலைந்துச் போகும் நிலை மனிதனுக்கு ஏற்படுமானால், அவன் முட்டையிட்டதும் செத்து விடும் கோழி, அரும்பு விட்டதும் பட்டுப்போகும் செடி போலப் பயன் காணாமலும் பயன் தாராமலும், போய் விடுகிறான்.

🞸🞸🞸

உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தக்க வருவாயைத் தருகிறது. இந்த வருவாயைப் பெறுவதற்காக உழைத்த நேரம் போக மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது என்ற நிலைமை நாட்டு மக்களின் பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டால்தான், ஓய்வு நேரம் சமூகத்தின் தரத்தையும் மனப்பண்பையும் உயர்த்தக் கூடிய சக்தி பெறும்.

🞸🞸🞸

இயற்கை நம்மைத் துரோகம் செய்து விட வில்லை. மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம் இங்குக் கண்டவர்கள் பொறாமைப் படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம், தொழில் திறம் போதுமான அளவு பெருகாத்தால் தரித்திரம் தாண்டவமாடக் காண்கிறோம்.

🞸🞸🞸

பெரும்பான்மையினருக்கு ஓய்வு கிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன் படுத்தினால்தான் பாடுபடுபவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும், திறமையுடன் பாடு படவும் முடியும்--பிறகு பொதுச் செல்வம் வளரும்; சீர் உண்டாகும்; நாடு செழிக்கும். இவைகள் எல்லாவற்றையும்விட, மனித மாண்பு மலரும். உழைத்தோம், வாழ்வின் பயனைப் பெறுகிறோம் என்ற களிப்பு முதலிலே ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும்.

🞸🞸🞸

வேலை, மனிதத் தன்மையை மாய்க்காத அளவு இருக்க வேண்டும்.

ஓய்வு சிலருக்கு--வேலை பலருக்கு என்ற--முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது.

🞸🞸🞸

வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே, ஓய்வு கிடைத்துப் பயனில்லை. பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும்.

🞸🞸🞸

ஓய்வு-உயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் தாம் என்ன பெறமுடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது இன்றுள்ள சமூக, பொருளாதார அமைப்பு முறையில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம்.

🞸🞸🞸

உதக மண்டலத்து வனப்பு, கொடைக்கானல் குளிர்ச்சி, குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுது போக்கு--ஓய்வு--எவ்வளவு பேருக்குக் கிடைக்க முடியும்? வாழ்க்கைத் தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய 'உல்லாசம்' சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும்.