அண்ணாவின் பொன்மொழிகள்/காந்தி அண்ணல்!
காந்தி அண்ணல்!
வேறு நாடுகளிலே விடுதலைப் போர் தொடுத்தவர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சொந்தத்திலேயோ, வேறு நாட்டின் துணைகொண்டோ, இராணுவத்தைத் திரட்டுவது, போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது; சதி செய்வது என்ற பல முறைகளைக் கையாண்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.
🞸🞸🞸
உலக வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தத் திட்டம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப் புதியதோர் தத்துவத்தைக் கொண்ட திட்டத்தை, ஆயுதமின்றி இரகசியமின்றி, வெளிப்படையாகத் தூய்மையுடன் விலைதலைப் போர் நடத்தலானார்; அதிலே வெற்றி கண்டார், காந்தியடிகள்.
🞸🞸🞸
நல்ல மனிதர்களால் தான் நல்லாட்சி நடத்த முடியும், நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலை பாதகர்கள், கொள்ளைக்காரர்கள், ஆதிக்க வெறியர்கள், ஆள் விழுங்கிகள், ஆஷாடபூதிகள் ஆகியோரின் ஆதிக்கம் அழிந்தபடாதிருந்தால், விடுதலையால் என்ன பலன்? வேடனிட மிருந்து மீட்டு வந்த புள்ளி மானை; வேங்கையின் முன்பு துள்ளி விளையாட விடுவதா?
🞸🞸🞸
அவர் மந்தரக்கோல் கொண்டோ, யாககுண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை மக்களிடையே வாழ்ந்து, மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.
🞸🞸🞸
இவ்வளவு பெரிய துணைக் கண்டத்துக்கு விடுதலையை வாங்கித் தந்தவர், நாட்டு மக்களின் ஏழ்மைக் கோலத்தைக் கண்டார்--கருத்திலே அக் காட்சி கலந்தது. அவர், அவர்களிலே ஒருவராகவே வாழலானார். "எல்லாம் மாயம்; உலகமே இந்திர ஜாலம்" என்று உபதேசிக்கும் குருமார்கள், தங்கப் பாதக் குறடும், வைரம் இழைத்த குண்டலங்களும் அணிந்துகொண்டிருக்கக் கண்ட மக்கள் முன்பு, சுகத்தையும், வசதியையும் நினைத்தால் பெறுவதற்கு உரிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும், ஏழை வாழ்வை நடத்திய உத்தமர் உலவினார். மக்களின் மனம் என்னென்ன எண்ணியிருக்கும்; குண்டல மணிந்த குருமார்களையும், குறுந்தடி பிடித்து உலவிய உத்த மரையும் ஏககாலத்தில் கண்டபோது கண்டறியாதன கண்டோம் என்று களித்தனர்.
🞸🞸🞸
அவரைக் கொன்றானே கொடியோன், அப்போது அவர் மனதிலே இருந்து வந்த எண்ணங்கள் யாவை? என்பதை எண்ணும் போதுதான், நாம் எவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளங்குகிறது. கல்லும், கட்டிடையும், காகிதக் குப்பையும் ஏற்றிக்கொண்டு சென்ற கலம் கவிழ்ந்தால் நஷ்டம் என்ன? முத்தும், பவளமும், முழுமதி போன்ற துகிலும், பிறவும் கொண்டு செல்லும் கலம், கடலிலே மூழ்கிவிட்டால், நஷ்டமும் மனக்கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யுமல்லவா? அதுபோலக் காந்தியாரைக் கயவன் கொன்றபோது, அவருடைய மனதிலே அருமையான திட்டங்கள், நாட்டுக்குப் பலன் தரும் புதிய முறைகள், ஊசலாடிக்கொண்டிருந்தன. அதை எண்ணும்போதுதான் எவ்வளவு பெரிய நஷ்டம் இந்தச் சம்பவம் என்பது விளங்குகிறது.
🞸🞸🞸
விடுதலை பெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவு கட்டவில்லை. நாட்டை மீட்க வேண்டும்--நல்லாட்சி அமைக்கவேண்டும்--மக்களை நல்லவர்களாக்கவேண்டும், வீரம், திறம், விவேகம், மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்க வேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம்.
🞸🞸🞸
நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும், நல்லாட்சி அமைக்க பல கலைவாணரையும் மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாக வேண்டும்; எந்த நாட்டுக்கும் அனைவரும் ஏககாலத்தில் கிடைக்கமாட்டார்கள். ஒரு தலை முறையிலே வீரன் தோன்றி விடுதலை நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார்.
🞸🞸🞸
இந்து மதத்திலே ஏறிப்போய் --ஊறிப்போயிருந்த கேடுகளைத் தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும், புதிய விளக்க உரைகளாலும் நீக்கும் காரியத்தில் ஈடுபடலானார்; அன்பு நெறி தழைக்கவேண்டும் என்றார்.
🞸🞸🞸
அவர் இந்த மதம், அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர் என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார், அமளிக்கிடையே நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கெல்லாம் சென்று கூறிவந்தார்.
🞸🞸🞸
மக்களை நல்லவர்களாக்க வேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம், சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழிந்தாக வேண்டும்.
🞸🞸🞸
தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு, அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக. அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத் தூவ அங்கு சென்றபோது புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போல், நாட்டை மீட்டு நல்லாட்சி அமைத்து, மக்களை நல்லவர்களாக்குவதற்காகக் கருத்தைப் பரப்பும்போது, கோட்சே கிளம்பினான்.
🞸🞸🞸
மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும்பாம்பை ஒழித்தாக வேண்டும். அவர், 'அனைவரும் ஒன்று' என்னும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம், என்பதே நமது உறுதியாக இருக்கவேண்டும்.