அண்ணாவின் பொன்மொழிகள்/பேச்சுக்கலை!
பேச்சுக்கலை!
மேடைப் பேச்சு
இந்நாட்களில் மேடைப் பேச்சு, நாடாளும் நற்பணியில் முக்கியமான கருவியாகிவிட்டது.
🞸🞸🞸
திசை காட்டும் கருவி தீயோனிடம் சிக்கினால் கலம் பாறையில் மோதுதல் போல, அரசுகளை ஆட்டிவைக்கும் அளவுக்கு ஆற்றல் அமைந்த மேடைப் பேச்சு எனும் சக்தி, சாதனம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து, அவர்களும் அந்தச் சக்தியைத் தவறான காரியத்துக்குப் பயன் படுத்துவதால், மக்களின் நலன், பாறை மோதிய கலமாகும்.
🞸🞸🞸
ஆள்பவர், ஆளப்படுவர் எனும் இருசாராருக்கும். மேடைப் பேச்சு, ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்காக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது.
🞸🞸🞸
மக்களுக்கு ஆள்பவர்களின் தன்மை, நோக்கம் திட்டம் இவைகளைப் பற்றிக் கண்காணிக்கும் பொறுப்பு அதிகரித்துவிட்டது. இந்தக் கண்காணிப்பு வேலைக்கு மேடைப் பேச்சு முக்கியமான துணையாகிறது.
🞸🞸🞸
அலைகடலை அடக்கும் மரக்கலம் அமைத்தோர். ஆழ்கடலுக்குள்ளே செல்லும் கலம் அமைத்தோர், விண்ணில் பறக்கும் விமானம் அமைத்தோர், தொலைவிலுள்ளதைக் கேட்கவும் காணவும் கருவிகள் கண்டு பிடித்தோர், காட்டாறுகளைக் கட்டுக்குக் கொண்டு வந்தோர், நீரிலே நெருப்பின் சக்தியைக் கண்டறிந்தோர், அனைவரும் நம்போல் மனிதரே. அவர்களால் முடிந்தது நம்மால் ஆகும் என்ற நினைப்பு அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாயிற்று. அவைகள் சாத்தியமான போது மேடைப் பேச்சு ஏன் சாத்தியமாகாது.
🞸🞸🞸
பேசாமல் இருப்பது வேண்டுமானால் சிரமம்--சிந்தனையை அடக்கியே சும்மா இருப்பதரிது--பேசுவது எளிது--பேசுவதை, ஒழுங்குக்கும் முறைக்கும் கட்டுப்படுத்துவதுதான் மேடைப் பேச்சு.
🞸🞸🞸
இந்நாளில் மேடைப் பேச்சுக்குத் தேவையும் பயனும் உள்ளது என்பது உணர்ந்து, அதனை நாமும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்வது முதல் வேலை.
🞸🞸🞸
வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பிரச்சினைகளைப் பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது, மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்சினையின் பொருப்பை உணரச் செய்வது, போன்ற காரியமே மேடைப் பேச்சு.
🞸🞸🞸
'சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்' அவன் நாவில் என்று புகழ்வதும், 'தம்பி என்னடா சண்டப் பிரசண்டமடிக்கிறார்--வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும் ஏககாலத்தில் நடைபெறும் விநோத புரியிலே இருக்கிறார் மேடைப் பேச்சாளி.
🞸🞸🞸
எந்தப் பேச்சு பலருக்கு இனியதாய், பயனுடையதாய் அறிவு நிரம்பியதாய்த் தோன்றுகிறதோ, அதே பேச்சு வேறு சிலருக்குச் சுடு சொல்லாய், வெட்டிப் பேச்சாய், ஞான சூன்யமாய்த் தோன்றக் கூடும்.
🞸🞸🞸
பேச்சு இனிமையாக இருக்கவேண்டும். என்பதையே நோக்கமாகக் கொள்வதைவிட, மக்களையும் கொள்கையையும் மதித்து நம்பிக்கையுடன் பேசும் நோக்கம் சிறந்தது--மேலானது.
🞸🞸🞸
பேசும் பொருள் பயன்படத் தக்கதாகவும், வீணான வீம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது. இனித்தே ஆகவேண்டும் என்று முயன்றால், ஜதங்கையும் ஜாலரும் தேடித் தீரவேண்டி வரும்.
🞸🞸🞸
வள்ளுவர் வாக்கின்படி பேச்சு அமைவதற்கு, வள்ளுவர் வாக்கின்படி கேட்பவர்களும் அமைய வேண்டும். பேசுபவர்க்கு முறை கூறிய வள்ளுவர் கேட்பவர்க்கும் முறை கூறி இருக்கிறார்.
"எப்பொருள். யார் யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு"
ஆனால் நடைமுறையில் இந்தக் குறள் இல்லை. மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறார் திருவள்ளுவர்; மெய்ப பொருள் காண்பதரிது என்று ஆகிவிட்டது நிலைமை.
🞸🞸🞸
மலர் கொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழு வதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர் அதுபோலப் பேச்சுக்கு முதற்பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள்.
🞸🞸🞸
மாற்றான் வீட்டுத்தோட்டத்திலே பூத்திடினும் மல்லிகைக்கு மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய்வோம்; அது போல, பேசுபவரின் கருத்து பயன் தருமாயின் கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பினும், அவர்கள் ஏற்றுக்கொள்வர். எனவே மேடைப் பேச்சுக்குச் கருத்துக்களைச் சேகரிப்பது, சிந்தனையில் விளையும்படிச் செய்வது மிகமிக முக்கியம்.
🞸🞸🞸
தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தட்டுத் தடுமாறி பேசும் பேச்சு நாளா வட்டத்தில் முழக்கமாகித் தீரும்.
🞸🞸🞸
கதம்பம், மலர் குறைவாகவும் தழை அதிகமாகவும் இருப்பின் மாதர் கொள்ளார். அதுபோலவே பேச்சுக் கருத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகி, சுவைக்குதவாதன அதிகமாக இருப்பின் எவரும் கொள்ளார். எனவே, கருத்து மிகமிக முக்கியம்; நடை வானவில் அதிக நேரம் அழகளிக்காது.
🞸🞸🞸
நீதியை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளைக் களைய, சிறுமைகளைச் சீரழிவு களைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை அழகுறத் தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு.