அண்ணாவின் பொன்மொழிகள்/முத்தமிழ் ஓங்குக!


முத்தமிழ் முழங்குக!


முத்தமிழ்

முக்கனி படைத்த நாடு, முத்தமிழ் படைத்த நாடு, முத்தமிழால் முன்னேற — மறுமலர்ச்சி பெற முத்தமிழைப் போற்றுங்கள்! முத்தமிழை முன்னேற்றப் பாதைக்குப் பயன்படுத்துங்கள்!...

🞸🞸🞸

தமிழ்மொழி மூலம், முத்தமிழ் மூலம், தமிழரது வாழ்வில் மாறுதலையுண்டாக்கிட முடியும்--நிச்சயமாக.

🞸🞸🞸

தமிழர், தம்மின மொழியை, தமிழ் மொழியைப் பெரிதென மதித்துப் போற்றி, புகழ்ந்து, பரப்பிடும் நிலைமை, மறுமலர்ச்சி, தமிழின் மறுமலர்ச்சி பூத்துக் குலுங்கி வரும் இந்த நேரத்திலேதான் இந்தச் சூழ்நிலையில் தான், தமிழரை, தன்மானமுள்ளோராக நாகரிக மாந்தராக, நல்ல வாழ்வு நடத்திடும் மனிதராக மாற்றமுடியும்.

🞸🞸🞸

தமிழன் தமிழைப் படிக்கத் தொடங்கி விட்டான்; தமிழைப் போற்றத் தலைப்பட்டுவிட்டான்-தமிழருக்குத் தனிப் பெருமை, தனது மொழிக்கு. தன் தாய்- மொழிக்குத் தனது பணியைச் செய்திட முன் வந்து விட்டான். நாடெங்கும் தமிழ்த் திருநாட்கள், முத்தமிழ் முழக்கங்கள் நடைபெறும் நன்னாளைக் காண்கிறோம் இன்று!

🞸🞸🞸

மறைந்த தமிழ்ப் பெரியார் மறைமலைகளாரும், தள்ளாத வயதடைந்தும் அடி தளராது, தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்களும், தமிழ்ப் பற்றைமறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள், முதல்வர்கள், முன்னணி வீரர்கள்.

மறைமலை அடிகளாரின் தமிழ்ப் பற்றும், தனித் தமிழ் உணர்ச்சியும், திரு. வி. க. அவர்களின் தமிழார்வமும், தமிழ்ப் பண்பும், இருவரது தமிழ்த் தொண்டும், தமிழ் வளர்ச்சியில் அவர்களது பேரூக்கமும், இடைவிடாத உணர்வும் உழைப்பும் தமிழர் இதயங்களில் இரண்டறக் கலந்து விட்டன! தமிழர் சரித்திரத்தில் தமிழ் மொழியின் மறுமலர்ச்சி ஏட்டில், அவர்களது காலம், அவர்களது தமிழ் வாழ்வு என்றும் நிலைத்து நிற்பவை!!

முத்தமிழ் முக்கனிகள்!

முத்தமிழ், முக்கனிகள்! மா, பலா, வாழை என்ற முக்கனி போன்றவை இயல், இசை கூத்து, தமிழ் மொழிக்கு!

கனிகளிற் சிறந்தவை! முக்கனிகள்— மா, பலா வாழை என்பவை. இயல், இசை, கூத்து என்ற பிரிவுகளைக் கொண்ட மொழி, தமிழ்மொழி, நமது மொழி, சிறந்த மொழி!

மாங்கனிகளைப் பொறுக்கி, தேர்ந்தெடுத்துப் புசிக்க வேண்டும். சில உறுதி தரும், உருசியோடு. வேறு சில உண்ண உருசியும், உடலுக்குத் தீங்கும் விளைத்திடும் பண்பு கொண்டதாகவும் விளங்கிடும்.

இது போலவே, இயல்! இயற்றமிழும் பல வடிவிலே, பல முறைகளிலே பலப்பல பண்பு கொண்டது; பயன் தருவதாயும், பயனற்றதாகவும் பலப்பல விதங்களிலே அமைந்திருக்கின்றன!

புராண இலக்கியம், பொழுது போக்கு இலக்கியம், அறிவை அகலப்படுத்தும் இலக்கியம், அப்பாவி  யாக்கிடும் இலக்கியம், கற்பனை இலக்கியம், காவியம், கதை, கட்டுரை, ஆராய்ச்சி, முன்னேற்றம், சிந்தனை, சீர்திருத்தம் பற்றிய முற்போக்கு இலக்கியம், மறுமலர்ச்சி இலக்கியம் என்று இயற்றமிழ் எத்தனையோ சுவையும், சுவையற்றதுமான பயனும் பயனற்றதுமான பல இலக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

மாங்கனிகளை, நன்மை பயப்பவை, தீமை தருபவை. உபயோகமுள்ளவை, உபயோகமற்றவை என்ற முறையிலே பிரித்துப் பாகுபடுத்தித் தெளிந்து, தேர்ந்து உண்பது போல, இயற்றமிழில் அடங்கிய இலக்கியங்களையும் ஆய்ந்து தெளிந்து கற்றிட வேண்டும். காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த, உபயோகமான இலக்கியங் களையே படிக்கவேண்டும்!

🞸🞸🞸

மேலே முள், முரட்டுத்தனமான உருவம், முட்களைக் கொண்ட தோல் மூடியிருக்கிறது. ஆனால் உள்ளே உருசியான பழச்சுளைகள்; உண்ண உண்ணத் தெவிட்டாத பழச்சுளைகள்; உடலுக்கு உறுதியான பழச்சுளைகள். முள் நீக்கித் தோலை உரித்தெடுத்துப் பெறும் பலாச்சுளையைப் போன்றது தான், இசை!

இசையைக் கற்பது, இசைவல்லுநராவது எளிதல்ல; எல்லோராலும் முடியக்கூடியதுமல்ல!

இசையில் தேர்ந்திட, இராகம், தாளம், ஆலாபனம் இன்னும் எத்தனையோ முறைகளைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டிய நிலை! இவையெல்லாம்--இத்தகைய கட்டு திட்டங்களெல்லாம் முதலில் சுவையைத் தராது இசைத் தமிழில், எல்லோருக்கும். ஆனால், இசைவாணர்கள் இனிய குரலில், பாடக்கேட்டிடும் பொழுது பரவசமடைகிறோம். கேட்டுக் கேட்டு  இன்புறுகிறோம் இசைத் தமிழை, முள்நீக்கிய பலாச் சுளைகளைப் போல்!

🞸🞸🞸

வாழை! தோலை உரித்ததும் பழத்தைச் சுலபத்தில் உண்ண முடிகிறது. தோலை உரித்தவுடனே வெகு எளிதிலே பழத்தின் பண்பைப் பெறுகிறோம். அதே போலத்தான் முத்தமிழின் மூன்றாவது பிரிவு, நாடகமென்ற கூத்து.

முக்கனி, கனிவகைகளில் சிறந்து விளங்குகின்றன! மொழிகளிற் சிறந்து விளங்குகிறது முத்தமிழ்!!

🞸🞸🞸

தமிழர் வாழ்வு தழைக்க தமிழ் மணம் நாடெங்கும் செழித்துக் கொழிக்க, தமிழர் தமிழராய் வாழ, தன் மானத்துடன் வாழ, தமிழன் தன்னைத்தான் உணர்ந்து. தன்னம்பிக்கை பெற்றுத் தன்னையும், தன்னைச் சுற்றிலுமுள்ள சமுதாயத்தின் சூழ்நிலையைத் தெரிந்து--புரிந்து--தெளிந்து--வாழும் நிலைக்கான வகையில், வழியில், முறையில் முத்தமிழ் விளங்கவேண்டும். பயன்படவேண்டும்; பயன்படுத்தப்படவேண்டும்.

🞸🞸🞸

முத்தமிழ், சூழ்நிலையை மனித வாழ்வின் சூழ்நிலையை, வளப்படுத்தும்-- வகையிலே பண்படுத்தப்படவேண்டும்; பரப்பப்படவேண்டும்; பயன்படுத்தப்படவேண்டும்.

🞸🞸🞸

வாலிபர்களாகிய நீங்கள் இந்த மாணவப் பருவத்திலே, முத்தமிழிலே பற்றுக்கொண்டு, முத்தமிழ் மூலம், நாட்டின் நிலையை--சூழ்நிலையை நன்கு தெரிந்து, நாட்டின் எதிர்கால ஏற்றத்திற்கான பற்று--பாசம் பயிற்சி-- பெறவேண்டும்! பெற வேண்டும் பகுத்தறிவின் துணைகொண்டு!