அண்ணாவின் பொன்மொழிகள்/இலக்கியப் புரட்சி!
இலக்கியப் புரட்சி!
அறிவு ஒரு தொடர்கதை!
அறிவு ஒரு தொடர்கதை! அதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து தோன்றியபடி இருக்கிறார்கள்; இனியும் தோன்றுவார்கள். உள்ளங்கவர் புத்தகங்கள் மேலும் பலப்பல வெளி வந்தபடிதான் இருக்கும்.
🞸🞸🞸
பழமையின் பிடியிலிருந்து நீங்க, விதியின் சுழலினின்று விடுபட, மேலுலக வாழ்வுப் போதையிலிருந்து தெளிந்திட, உலகியல் அறிவுச் சுடர்கள், பகுத்தறிவுப் புத்தகங்கள், ஏராளமாகப் பரப்பப்பட வேண்டும், மக்களிடையே!
🞸🞸🞸
சிந்தி! யோசித்துப் பார்! ஆராய்ச்சி செய். சூழ் நிலையைத் தெரிந்து நட! நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்! "விதியல்ல உன் வேதனைக்குக் காரணம். மதியின் துணைகொண்டு நட," என்று எடுத்துக் காட்ட வேண்டும், ஏடுகளெல்லாம்.
🞸🞸🞸
தமிழில் எல்லாவகைக் கருத்துக்களும், வாழ்வை வளப்படுத்தும் எல்லா முறைகளும் எழுதப்பட வேண்டும்.
🞸🞸🞸
தமிழ்ப் புலவர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள் இந்தத் துறையிலே, அறிவுத் துறையிலே பெரிதும் கவனம் செலுத்தி, முத்தமிழை--முக்கியமாகப் பகுத்தறிவுப் பாதைக்கே பயன்படுத்திட வேண்டுமென்று, ஆசைப்படுகிறேன்.
தன்மான இலக்கியங்கள்
தமிழரைத் தட்டி யெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை! தன்னம்பிக்கை யூட்டும் ஏடுகளே தேவை? மதியைப் பெருக்கி, விதியைத் தொலைத்திடும் விளக்க நூல்கள் ஏராளமாகத் தேவை!
🞸🞸🞸
கால வேகத்திற்கு ஏற்ற முறையிலே, விஞ்ஞானம் வளர்ந்து முன்னேறி வரும் இந்த நாளிலே, அகில உலகின் நிலையையும் விளக்கிடும் ஏடுகளைத் தமிழில் தமிழர்கட்குத் தரவேண்டும்.
🞸🞸🞸
மறு மலர்ச்சி என்றதும் மருண்டிடும் மனப்பண்பு. படைத்தவராகாது, மனவலிமை படைத்து, மனிதாபிமானத்தைத் துணைகொண்டு, மறுமலர்ச்சி நூல்களை எழுதுங்கள், எழுதுங்கள் என்று தமிழரை, தமிழ்ப் புத்தக வித்தகரைக் கேட்டுக் கொள்கிறேன்.
🞸🞸🞸
'புதிய மறுமலர்ச்சி ஏடுகளை எழுதுங்கள்; ஏழையின் துயரைப் பாடுங்கள்; ஏன் ஏழையானான் என்று கேளுங்கள்; ஏழையின் நிலையை, பாட்டாளியின் துயர வாழ்வைக் காவியமாக்குங்கள்; தொழிலாளியின் துயரை, துன்ப வெள்ளத்தை, நாட்டின் நானாவித நிலையை, மனித வாழ்வின் சூழ்நிலையை விளக்குங்கள்.' என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.
🞸🞸🞸
ஆரம்பத்திலே ஏற்படும் எதிர்ப்பைக் கண்டு மருள வேண்டாம்; தடைகள், தண்டனைகள், எதையும் பொருட்படுத்திட வேண்டாம். துணிவுடன் காரிய மாற்றுங்கள். வெற்றி நிச்சயம் கிடைத்தே தீரும் என்பது உறுதி, மிகமிக உறுதி!
🞸🞸🞸
தமிழில் தலைசிறந்த கருத்துக்கள் யாவும் தரப்பட வேண்டும். தமிழில் தன்மானக் கருத்துக்கள், மனிதாபிமான எண்ணங்கள் கொண்ட ஏடுகள் எழுதப்பட்டு மக்களிடையே மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும்.
🞸🞸🞸
இன்றையத் தமிழ்மொழிப் புலமை படைத்தோர், தமிழ்வாணர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள் தரங் கெட்டுவிடும் என்று, பழமை விரும்பிகளாகவே விளங்கி வராது, மறுமலர்ச்சி நூல்களை இயற்றித் தர வேண்டுகிறேன்.
🞸🞸🞸
மகேஸ்வரன் புகழ்பாடி, மதத்தை நம்பி, மதிகெட்ட மனிதனாக வாழவிடும் மத இலக்கியங்கள் தேவையே இல்லை. குலத்துக்கொரு நீதி வகுத்து, மனிதனது சுயமரியாதையைப் போக்கிடும் புராணங்கள், இலக்கிய வரிசையிலே, இருத்தல் கூடவே கூடாது!
🞸🞸🞸
"குலத்துக்கொரு நீதி" ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொருவித, தனித்தனித் தன்மையுள்ள தராதரமுள்ள, பாரபட்சமான, நீதியைப் பகவான் லீலையென்றும், ஆண்டவனின் திருவிளையாடல்கள் என்றும் போற்றிப் புகழும் நிலையிலுள்ள இத்தகைய ஏடுகள் தகாத ஏடுகள், தேவையற்ற நூல்கள் என்று தூரத் தூக்கியெறிந்துவிடத்தான் வேண்டும்!
🞸🞸🞸
ஆண்டவன் தோன்றமாட்டார்! ஆகவே ஆண்டவனுக்காகப் பரிந்து பேசிடும் அடியார்களை, அறநூல் வல்லுநர்களைக் கேட்கிறேன்! 'சூலத்துக்கொரு நீதி' வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் காணப்படுவது நல்லதா? தேவைதானா?
🞸🞸🞸
இலக்கியங்கள் இத்தகைய விதி, மேலுலக வாழ்வு, குலத்துக்கொரு நீதி, என்ற மூன்று தத்துவங்களைப் போற்றும் முறையிலேயே, போதித்திடும் அளவுடனேயே அமைந்துள்ளனவே! இந்த மூன்று கருத்துக்களும் மக்களை நல்வழிப்படுத்திடப் பயன்படுகின்றனவா? மனிதன் மனிதனாக வாழ்ந்திடும் சூழ்நிலையை உண்டாக்கிடத்தான் பயன்படுகின்றனவா?
🞸🞸🞸
இலக்கியங்கள் மனிதனது எண்ணங்களை வளர்க்கின்றன; எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. கருத்துக்களை, பல தரப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன.
🞸🞸🞸
இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது; மனிதனுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது; நன்மை தீமைகளை எடுத்துக் காட்டுகிறது; மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது.
🞸🞸🞸
இலக்கியங்கள், எந்த முறையில் அமைகின்றனவோ, இலக்கியங்கள் எந்த முறையைப் போதிக் கின்றனவோ, எந்தெந்த ஏற்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றனவோ, அந்தந்த முறைகளிலே, ஏற்பாடுகளிலே மனிதனது எண்ணமும் செயலும் செல்லுகிறது.
🞸🞸🞸
பழைய இலக்கியங்கள், பழைய காலத்திற்கேற்றவைகளாக, சிறந்தவைகளாக இருக்கலாம்? ஆனால் அதே கருத்துக்கள், அந்தக் கால கருத்துக்கள், அப்படியே முழுதும், இன்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுவது, திட்டம் வகுப்பது, தீர்மானங்கள் செய்வது தகுதிதானா, தேவைதானா? கூறுங்கள்!
🞸🞸🞸
பழைய இலக்கியங்களிலே, காவிய ரசம் ததும்பலாம்; நடையழகு நன்றாக இருக்கலாம்; அதைத் தீட்டியவர் பெரியபுலவராகவும் இருக்கலாம்! அதற்காக அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கதைகள், நீதி போதனைகள் அத்தனையும் தேவை, தீர்மானமானவை, என்றும் மாற்ற முடியாதவை, மாற்றக் கூடாதவை, என்று கூறுவதை எப்படி ஒப்பமுடியும், முழுதும்!
🞸🞸🞸
எந்த இலக்கியமானாலும் அதன் கருத்தை, அது தரும் பாடத்தை, போதனையை, நல்லறிவைப் பொறுத்துத்தான் அதன் சிறப்பு, அதனது தேவை அமையும்; அமைந்திடவும் முடியும்!
🞸🞸🞸
'முற்காலப் புலவர்கள் என்ன சாமான்யமானவர்களா? அகத்தியன் பரம்பரையில் வந்தவர்கள் அறியாமலா கூறியிருப்பர்' என்று ஆர்ப்பரிப்பதும், 'வசிஷ்டர் வாக்கு வேதவாக்கு' என்று போதனை செய்வதும், நம்பினவருக்குத்தான் மோட்சம், நம்பாதவர்க்கெல்லாம் நரகம் என்று பயமுறுத்தியும், பண்டைய ஏடுகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி, அவற்றையே கற்று, தமிழர்கள் இலக்கியத் துறையிலே முன்னேறாது காலத்திற்கேற்ற கருத்தமைந்த இலக்கியங்களை--புதுப்புது இலக்கியங்களை உண்டாக்காது, பழமையில் மூழ்கித் தவிக்கின்றனர்.
🞸🞸🞸
பழமை! பழமை என்று எதற்கெடுத்தாலும் பேசுகிறார்கள்! பழைய புராணம், பழையகாலம், பழைய பாடல்,பழைய முறை, பழைய கருத்து, பழையமொழி என்றெல்லாம் கூறி, எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
🞸🞸🞸
பழமை! பழைய ஏடுகள், பழைய கருத்துக்கள், பண்டை இலக்கியங்கள் தான் முடிந்தவை--சிறந்தவை என்ற நிலை மாறி, புதிய இலக்கியங்கள் தோன்ற வேண்டும். எழுதப்படவேண்டும், இன்று!
🞸🞸🞸
இயற்றமிழ் இலக்கியத்தில், பெரும் பகுதி நாட்டு மக்களுக்குத் தெரிந்துள்ள, தெரியப்படுத்தப்பட்டுள்ள பலவும், புராண ஏடுகளாகவும், புண்ணிய காதைகளாகவும், இதிகாசங்களாகவும், பகவத் லீலைகள் பற்றியதாகவும் தான் இருக்கின்றன!
🞸🞸🞸
பண்டைய இலக்கியங்கள் 'தரம்' உள்ள இலக்கியங்கள். அவற்றை பார்த்தால் ஆராய்ந்து, அலசி அவற்றின் 'தரத்தை', உயர்ந்த இலக்கியப் பண்பை, இலக்கிய மாண்பை அறிய முடியாது, பழிப்பர். அது மிக மிகப் பாபம், அடாத செயல் என்று பேசிடுவது, இலக்கியங்களுக்குத் 'தரம்', அல்ல. பண்டைய அவற்றிற்கு, உண்மையிலேயே, பெருமை தருவதுமாகாது! மாறாக, அவற்றின் 'தரம்' அற்ற தன்மையையும், தாழ்ந்த நிலையையும், சிறுமையையுமே, குறிப்பிடுவதாகத்தான் தோன்றுகிறது!
🞸🞸🞸
அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும்; மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலைமை- சூழ்நிலை உண்டாகித் தீரும் நாள் வெகு விரைவில் வந்தே தீரும் என்பது நிச்சயம்,உறுதி!
🞸🞸🞸
பழமைமீது கொண்ட பற்றினால், பாசத்தால் பக்தியினால் புதுமை தேவையற்றது; புதுமையையும், பழமையிலேயே கண்டு மகிழ்ந்திடுவது, என்ற நிலையிலேயே இலக்கியம் இடம் பெயராது இருந்த இடத்திலேயே, இருக்கத்தான் வேண்டும் என்ற எண்ணமுடைய ராகவே, இன்றையத் தமிழ்ப் புலவர்களும், தமிழ் நாட்டுத் தலைவர்களும், தமிழ்ப் புத்தக வித்தகர்களும் விளங்கிடுவது நல்லதா? நாகரிக உலகில் வாழ்ந்திடும் நமக்கு, நல்லறிவு நாளுக்குநாள் பெருகிவரும், கால வேகத்திற்கேற்ற முறையிலே, தேவைதானா, இனியும்?
🞸🞸🞸
மனிதனது சிந்தனை, தெளிவு, முன்னேற்றம் புராணத்தோடு, பழைய இலக்கியங்கள் கூறும் அளவோடு நிலைத்து நின்று விட்டிருந்தால்கூட இன்றைய சூழ்நிலை, நாகரிக வாழ்வு, நல்வாழ்வு உண்டாகியிருக்காது, உருவாகியுமிருக்காது என்பது உறுதி! மறுக்க முடியாத உண்மையுங்கூட!
🞸🞸🞸
பழமை, பழமை என்று பத்தாம் பசலிக் கொள்கையையே கொண்டிருந்தால், காலிகோ பைண்டு செய்து, பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மேலட்டைகளைக் கண்டிருக்க முடியாது! புராணகால இலக்கியங்கள் ஏடும் எழுத்தாணியுடனேயே, ஓலைச் சுவடிகளிலேயே, அடங்கிவிட்டிருக்கும். அனைவரும் படித்தறியும் புத்தகமாக, நூல் வடிவில், அச்சிடப்பட் டிருக்க முடியுமா? அல்லது, யாரோ, எந்த நாட்டிலோ, கண்டுபிடித்த அச்சுப் பொறியைத்தான் அதற்குப் பயன்படுத்தலாமா?
🞸🞸🞸
சிற்பிகளின் சிந்தனை, சிற்பங்களைச் செதுக்கிடும் அளவோடு நின்று, ஆண்டவன் ஆலயங்களை அழகுடன் அமைத்திடும் பணியோடு முடிந்திருந்தால் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், கோட்டைகளையும், கொத்தளங்களையும், சுற்றுச் சுவர்களையும் சூழ்ந்த மதில்களையும், மலையரண்களையும், கொண்ட மகத்தான மாபெரும் நகரங்களைக் கண்டிருக்க முடியுமா? நாடுகளைத்தான் பார்த்திருக்க முடியுமா?
🞸🞸🞸
உயர்ந்த இலக்கியங்கள், உத்தம இலக்கியங்கள் சிறந்த இலக்கியங்கள் என்பவையெல்லாம் எம்பெருமா னைப்பற்றியேதான் இருந்திட வேண்டுமா? ஆண்டவன் அடியார்களைப் பற்றிய புராணங்களாகவே, புண்ணியத்தைப் போதித்திடும் பக்திரசப் பாடல்களாகவே பழமையை நிலைநாட்டிடும் பண்பு படைத்தவைகளாகவே விளங்கிடத்தான் வேண்டுமா இன்னும் இன்றையச் சூழ்நிலையிலும்?
🞸🞸🞸
இலக்கியங்கள் இன்று பெரும்பாலும் போதிக்கும் முதற்கருத்து, முக்கியக் கருத்து 'விதி' என்ற தத்துவமாகும்!
இந்த 'விதி' என்ற தத்துவம், இன்று மட்டுமல்ல, என்றுமே மனிதனுக்கு மகத்தான தீங்கிழைக்கும்; எக்காலமும் கேடுதரும் தத்துவமாகும்.
🞸🞸🞸
தமிழில் வரலாறுகளில் வரும் விடுதலை வீரர்களைத் தீட்டிக் காட்டுங்கள். விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்குங்கள். மத--மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெரியுங்கள். வாழ்ந்த இனம் ஏன் வீழ்ந்தது? எந்தக் காரணத்தால்? எந்தக் கருத்துக்களைக் கையாள நேரிட்டதால் என்றெல்லாம் கேளுங்கள்; விடை காணுங்கள்.
🞸🞸🞸
நாகரிக சாதனங்கள் பலவும் தோன்றி, உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டே போகும் இந்நாளில், நாம் புதுப்புதுக் கருத்துக்களை, எண்ணங்களை ஏற்பாடுகளை, வாழ்க்கை முறைகளை, நாகரிகச் சாதனைகளைத் தெரிந்து கொள்ள, புதிய இலக்கியங்கள் உண்டாக்கப் படவேண்டும், என்று கூறுவது கூடாதா, தேவை யற்றதா, பழமைக்கு விரோதமா, எந்தவிதத்திலே தவறு? எடுத்துக் காட்டுங்கள்!
🞸🞸🞸
காலத்திற்கேற்ற கருத்துக்களைப் பரப்பி கண்மூடிப் பழக்க வழக்கங்களை நீக்கி, மனித முன்னேற்றத்தை முன்னேற்ற எண்ணங்களை, எழுச்சியை, அறிவை, ஆராய்ச்சியைத் தடுத்திடும் விதி, குலத்துக்கொரு நீதி; மேலுலக வாழ்வு என்ற கருத்துக்களை மனித உள்ளத்திலிருந்து நீக்கி, மேலும் பரவாது தடுத்து, மனிதனைத் தன்னம்பிக்கையுடையவனாக,எதையும் அலசிப் பார்த்திடும் அறிவு படைத்தவனாக தனது ஊக்கத்திலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டவனாக, உருவாக்க வேண்டும்.
🞸🞸🞸
விதி--குலத்துக்கொருநீதி--மேலுலக வாழ்வு என்ற பழமைக் கருத்துக்களைத் தடுத்து, புதுமை. எண்ணங்களை, அறிவுக் கொள்கைகளை, ஆராய்ச்சித் திறனை, விஞ்ஞானக் கருத்தை மக்கள் எண்ணத்தில் எழுப்ப வேண்டும். இதற்கு இலக்கியங்களும், ஏடுகளும் மிகச் சிறந்த கருவியாகும்; சாதனமுமாகும்.
🞸🞸🞸
புத்தகங்கள் மூலம் பழங் கருத்துக்களை, பாசிபடிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துக்களை புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும். எளிதில்!
🞸🞸🞸
சாதாரண மக்கள். பாமர மக்கள் தெளிவு பெறும் வழியிலே, இலக்கியங்களை இயற்றுங்கள்.
🞸🞸🞸
தமிழ், தமிழ்ப் பேச்சு தமிழ் எழுத்து, தமிழ்ப் புலவர், தமிழ் புத்தகங்கள் என்றால் ஏதோ வேறு வழியற்றவன் விதியற்றவன் தமிழைக் கட்டியழுகிறான், என்றிருந்த காலம் மாறி, இன்று தமிழன், தமிழ் மொழி, தமிழினம், தமிழகம் தமிழ்த் திரு நாடு என்றெல்லாம் பேசப்படும் நிலை, தமிழினம் தமிழ் மொழியைப் போற்றிடும் நிலை, தன் மானங் கொண்டுள்ள நிலை--உண்டாகித்தானே இருக்கிறது?
🞸🞸🞸
அறியாமை இருளைக் கிழித்தெறிந்த அறிவுச் சுடர், ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்தெரிந்த பகுத்தறிவுப்யடைத் தலைவன், வக்கிர புத்தி கொண்ட வைதீகத்தின் வைரி, வால்டேர், "அரசாங்கம் என்னை அழிக்க முயற்சிக்கலாம். படை பலம் பாய்ந்து வரலாம், உலகே கேலியும் செய்யலாம். எனினும் நீதியை நிலைநாட்டி, ஏழையின் கண்ணீரைத் துடைத்தே தீருவேன்" என்று வீர முழக்க மிட்டுப் போரிட்டு வெற்றி கண்ட இலக்கிய வீரன், எமிலிஜோலா! ஆகியவர்களின் வரலாறும், அவர்கள் அளித்த அறிவுரைகளைக் கொண்ட ஏடுகளையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இதே முறையில், 'இங்கர்சாலின்' பகுத்தறிவு வசனக் கவிதைகள் எழுச்சியூட்டி என் மனதைக் கவர்ந்திருக்கிறது.
🞸🞸🞸
இயற்கை நுட்பங்களைக் கண்டறிந்து, மனித சமுதாயத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இதம் தந்து உலகைப் புதியதாய் வசதியாய் ஆக்கித் தரும் விஞ்ஞான வித்தர்களின் வாழ்க்கை. வரலாறுகளும், ஆராய்ச்சிகளும் இன்றைய நிலையில் சுவையும், பயனும் தந்து மக்கள் உள்ளத்தைக் கவரவல்ல, அருமையான நூற்களாக அமைகின்றன.
🞸🞸🞸
அறிவுத் துறையின் முனைகள் இப்போது ஒன்று பலவாகப் பெருகியபடி இருக்கிறது. பல்வேறு துறைகளிலே உள்ள பிரச்சினைகளிலே தெளிவும், பண்பாட்டுக்கு ஓர் விளக்கமும், சமுதாய அமைப்பு முறை, அரசு அமைப்பு முறை, அறநெறி ஆகியவை பற்றிய கருத்துறையும் ஒருங்கே கொண்டதாய் மக்களை, அறிவும் ஆற்றலும் அறமும் கொண்டவர்களாக்க வல்லதாய், அமைந்துள்ள பெருநூல் இன்று நமக்கிருப்பது திருக்குறள். நமது உள்ளத்தை கவருவது மட்டுமல்ல, திருத்தவும் உதவுவது.
🞸🞸🞸
அருட், எழுதிய 'நெப்போலியன் வரலாறு' கிப்பன் எழுதிய 'ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் இரு ஏடுகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன.
🞸🞸🞸
நாடு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலே, விடுதலை வீரர்களின் கதைகள் மனதைக் கவரும் அளவுக்கு, விருதா கிடைத்தான பிறகு, அதே வகை ஏடுகள், உள்ளத்தைக் கவருவதில்லை. இராண்டாவது அல்லது மூன்றாவது மாம்பழம் சாப்பிடுவது போலாகி விடுகிறது.
🞸🞸🞸
நீதிக்காகப் போராடியவர்கள், மேட்டுக் குடியினரின் அட்டகாசத்தை எதிர்த்து நின்றவர்கள். புனிதப் போர்வையில் உலவிய புலிகளிடமிருந்து மனமருள் கொண்ட மான்கூட்டத்தை விடுவித்தவர்கள் நசுக்கப்பட்ட மக்களுக்குக் கைகொடுத்தலர்கள். ஆதிக்கப்பீடங்களான அரண்மனைகளையும் மடாலயங்களையும் அச்சமின்றி எதிர்த்து நின்று அறப்போர் நடத்தி மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபட்டவர்களின் வரலாறுகள், மனதைக் கவருகின்றன.
🞸🞸🞸
அழகு, இன்பம், காதல், மாந்தோப்பில் மங்கை நல்லாளைச் சந்திப்பது போன்ற கதைகள். சுவை தருகின்றன; சில சமயம் பயனும் தருகின்றன. ஆனால் அந்த ஏடுகளிலேயே நாம் தேடும் இலட்சியம் முழுவதும் இருப்பதில்லை, மாறுகிறது.
🞸🞸🞸
ஆற்றல் வளரும் பருவத்தை அடைந்ததும், வீரச் செயல்கள், களக்காட்சிகள், அரசு அமைக்கும் அருஞ் செயல்கள் ஆகியவைகளைப்பற்றிப் புத்தகங்கள் பெரிதும் கவர்ச்சி தருகின்றன.
🞸🞸🞸
அலெக்சாண்டரின் ஆற்றல், ஜுலியஸ்சீசரின் வீரம், நெப்போலியனின் பேரார்வும், பேரரசுகள் அமைந்த விதம், அழிந்த வகை, ஆகியவை பற்றிய நிகழ்ச்சி நிகண்டுகள் மனதைக் கவர்ந்ததுடன், தாய் நாட்டில், தமிழகத்தில், அத்தகைய மாவீரர்கள், மணிமுடிதரித்த மன்னர்கள். கடல் கடந்து சென்று வெற்றிக் கொடி நாட்டிய வேந்தர்கள், ஆகியவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும், தாய்த் திருநாட்டின் தனிச் சிறப்பை உணர்ந்து உலகுக்கு உரைக்கவேண்டும், என்று ஆர்வம் கிளம்பி, தமிழ்ச் சுவடிகளைத் துருவித்துருவிப் பார்க்கவும், தமிழ் அறிஞர்களிடமெல்லாம் பாடம் கேட்கவும் எண்ணம் பிறந்தது.
🞸🞸🞸
மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழைய கருத்துக்களை மாற்றுவது பண்பு தருவது, செயல் புரியும் திறன் அளிப்பது என்பன போன்ற பயன்களைப் பெறுவதற்கே; படிக்கிறோம். ஒவ்வொரு வகைப் புத்தகமும் ஒவ்வொரு பயனை, ஒவ்வொரு அளவுக்குத் தருவதுடன் நமது மனதை உருவாக்க உதவுகின்றன.
🞸🞸🞸
மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றே புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக்கூடிய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது.
🞸🞸🞸
நாரதரின் கானம் பற்றியோ, தேவலோகக் காட்சி பற்றியோ. சுவை தரும் விதமாகத் தீட்டப்பட்ட ஏட்டினைப் படிக்கும்போது. ஒருவகை இனிமை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், புதிய எண்ணம். விழிப்பு, செயலாற்றும் தன்மை ஏற்படுவதில்லை. பக்திப்பரவசத்துடன் அந்த ஏடுகளைப் படிப்போரும், போய்ப்பார்த்து விட்டே வரவேண்டும் நாரதரை என்று பயணப்படுவதில்லை.
🞸🞸🞸
மலேயாவைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்திலே சுவை இருக்காது. எனினும், படிப்பவர்கள் வசதி கிடைத்தால் அங்கு போய் வரலாம் என்ற எண்ணம் கொள்ளவும், செயலாற்றவும் முடிகிறது.
🞸🞸🞸
புராண இதிகாசக் கதைகளை நான் பள்ளிப் பருவத் திலே, படிக்க நேரிட்டபோது, அவை தேவையற்றவை என்ற கருத்தோ--அல்லது நம்மால் சாதிக்க முடியாதவைகளைக் கொண்ட ஏடுகள் என்றோதான் எண்ணம் ஏற்பட்டது.
🞸🞸🞸
உள்ளத்திலே சில சமயம் அதிர்ச்சி தரும், நரக லோக வர்ணனை, மண்டை ஆயிரம் சுக்கலாக வெடிப்பது, மலைப்பாம்பு விழுங்கி விடுவது போன்றவைகளைப் பற்றிப் படிக்கும்போது--ஆனால் நீண்ட காலம், அந்த ஏடுகளோ, அவைகளிலே குறிப்பிடப்பட்ட கருத்துக் களோ, மனதில் தங்கி இருந்ததில்லை. தினையுன்னும் பட்சிகள்போல அக்கருத்துக்கள்கூட்டம் கூட்டமாக வரும்; உள்ளத்தைத் தொடும். ஆனால், அறிவுத் தெளிவு எனும் ஆலோலம் கேட்கக் கேட்க அவை பறந்தே போய்விடும்- எனக்கு மட்டும் அல்ல. சராசரி அறிவுள்ள எவருக்கும்.
🞸🞸🞸
படித்துக் கொண்டிருக்கும் போதே நம்மைப் பரவசப்படுத்திவிடும் ஓசை நயமும், பொருள் செறிவும் கொண்ட புத்தகங்கள் மனதைக் கவரும் தன்மை உடையன. இந்த வரிசையிலே, என் மனதை மிகவும் அதிகமாக ஈர்த்த புத்தகங்களிலே, கலிங்கத்துப் பரணியை முக்கியமானதாகக் கருதுகிறேன். அத்தகைய ஏடுகள் சுவை தருவன--சுவை ஏற்படுகிறது. நிச்சயமாக--ஆனால் பயன் கருதிப் படிக்கும் பருவத் திலே, வெறும் சுவை தரும் ஏடுகளாகிய கலிங்கத்துப் பரணி, குற்றாலக் குறவஞ்சி ஆகியவைகளைப் படிக்க நேரமும், நினைப்பும், இயற்கையாகவே ஏற்படுவதில்லை.
🞸🞸🞸
உள்ளம் வளருகிறது--சிந்தனையால், உலகில் உலவும் எண்ண அலைகளால், வாழ்க்கை எனும் ஆசிரியன் புகட்டும் பாடங்களால் இலட்சியங்கள், புதிது புதிதாகப் பிறக்கின்றன. இவைகளுக்கேற்ற வண்ணம், அறிவுத் தாகம் ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைத் தீர்க்கும் ஏடுகளை நாடுகிறோம்.
🞸🞸🞸
கம்பரின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை, ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம்.
🞸🞸🞸
நாங்கள் கண்டிப்பது கம்பரின் கவித்திறனையல்ல; அதன் தன்மையை, விளைவை என்பதை, அறிஞர்கள் தெரிய வேண்டுகிறேன்.
🞸🞸🞸
சன்யாட்சென் காலத்திலே, சீன மக்கள் பலப்பல தெய்வ வணக்கம் செய்து கிடந்தனர். சன்யாட்சென் அந்நாட்டுப் படித்தோரை அழைத்து, கடவுள்களின் பட்டியலைக் காட்டிக் கேட்டாராம், மக்களுக்கு ஒரு முழு முதற் கடவுள் இருந்தால் போதுமல்லவா என்று. ஆமென்றனர் அறிஞர். அப்படியானால், இந்தப் பெயர் வரிசையிலே ஒன்று வைத்துக்கொண்டு, மற்றவற்றைச் சிகப்புக் கோடிட்டு விடுக என்று செப்பினாராம். பிறகு, ஒன்றே தேவன் என்றனர் மக்கள். இங்கோ நமது சைவசமயத் தலைவர்கள், ஐம்பதாண்டுகளுக்கு மேலாகவே, சிறு தெய்வ வணக்கம் கூடாது; எமது சிவமொன்றே முழு முதற் கடவுள் என்று கூறினர். பலன் என்ன? இன்று வரை பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ்சேலை கட்டும் வழக்கத்தைக்கூட ஒழித்தபாடில்லை!
🞸🞸🞸
மக்களின் பொது அறிவு வளர்ந்த நாடுகளில், தெளிவு கொண்ட மக்கள் உள்ள தேசங்களில் இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும், கவியழகை மட்டும் கண்டு, கருத்துரையிலே உள்ள ஆபாசத்தை, மூடத்தனத்தை நீக்குகின்றனர். கிரேக்க ரோமானியர்கள், இதிகாச காலக் கடவுள்களாகக் கொண்டிருந்த வீனஸ், அபாலோ முதலியனவற்றை, ஏசுவிடம் விசுவாசம் வைத்ததும் விட்டொழித்தனர். பிரிட்டனிலே கிறிஸ்தவ மார்க்கம் பரவியதும் பழங்காலத்திலே வணங்கிய, தார், ஓடின் எனும் தெய்வங்களை மறந்தனர். இங்கோ, அன்றுதொட்டு இன்று வரை, ஆரியக் கற்பனையான சிறு தெய்வங்களிலே ஒன்றை நீக்கவும், மக்கள் தயாரில் இல்லை. இந்நிலை கண்டு, புலவர்கள் என் செய்தனர் என்று கேட்கின்றேன்.
🞸🞸🞸
உலகிலே எந்நாட்டிலும் எந்தப் பக்திமானுக்கும் நேரிடாத சோதனை, இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந் நாட்டிடம் ஓரவஞ்சனை? மற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சி, துர்ப்பாக்கியமிகுந்த இந்நாட்டில் மட்டுந்தானே நடந்திருக்கிறது, பிள்ளைக் கறி கேட்பதும், பெண்டை அனுபவிக்கச் சொல்வதும்.
கண்ணைப் பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள், இங்கு மட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கெடும் என்பதைக் கண்டேம். நாங்கள் பெரிய புராணத்தைக் கண்டிக்கிறோம்.
🞸🞸🞸
புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே நாங்கள். அப்புராணங்களைக் கண்டிக்கிறோம்.
🞸🞸🞸
பண்டிதர்கள் எங்களைப் பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகைமூட்டி இராமன் மரத்தின் மறைவிலிருந்து வாலி மீது அம்பு எய்தது போலச் செய்ய, ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்புகிறேன்.
🞸🞸🞸
நூற்றுக்கு 96 பேர் தற்குறிகளாக உள்ள நாட்டிலே பிற இனத்தின் உயர்வுக்கும் ஆதிக்கத்துக்கும் பயன்படும் ஏடுகள் மனதில் பதியும்படி செய்வது முறையாகுமா? அங்ஙனம் பிற இனத்தின் கலையிலே ஊறும் மனம், இன எழுச்சிபெற முடியுமா? இன மானம் கோரவோ, தனியரசு பெறவோ முடியுமா என்பதை யோசிக்க வேண்டுகிறேன்.
🞸🞸🞸
தமிழனின் தனியான நெறியிலே, அவதாரங்கள் எடுக்கும் ஆண்டவன் கிடையாது.
🞸🞸🞸
தமிழனின் கலை, கம்பராமாயணத்தில் ஆரம்பமாகி, அத்துடன் முடிகிறது என்று எந்தப் பண்டிதரும் கூற மாட்டார் என்று நம்புகிறேன். கலப்புக் கலையும்.. ஆரியப் பொய்க் கற்பனைகளும் புகாமுன்பே, தமிழன் தனியான கலையை முதல், இடை, கடைச் சங்க காலங்களிலே வளர்த்தான் என்பது யாவரும் அறிந்ததே.
🞸🞸🞸
நான், தன் காலக்கருத்தை அப்படியே எடுத்துக் கூறும் கவியைவிட, தன் காலத்துக் கருத்தை அதற்கு முற்பட்ட காலக்கருத்துடனும், தன் அறிவில் தோன்றும் கருத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்து, தன் காலத்திலே மக்கள் கொண்ட கருத்து ஏதேனும் தவறு எனத் தனக்குத் தோன்றினால் அதைத் திருத்தி, மக்களை நல்வழிப்படுத்த தன் நூலிலே தைரியமாகக் காட்டும் கவியையே, அதிகம் பாராட்டுவேன்; முதல்தரமான கவி என்பேன்.
🞸🞸🞸
கம்பர் மக்கள் சென்ற வழிச் சென்றாரே தவிர தனி வழி காட்டவில்லை. நற்கவி, அதைச் செய்ய வேண்டுமென்பது என் எண்ணம்.
🞸🞸🞸
இங்கு வானை முட்டும் மலைகள், வற்றாத ஆறுகள், வளமான வயல்கள், கனி குலுங்கும் சோலைகள் ஏராளம்; முத்து உண்டு எமது கடலில்; தங்கம் உண்டு எமது பூமியில் என்று ஆனந்தக் களிப்புச் சிந்து பாடியிருக்கிறோம். எல்லாம் சரி; உமது நாட்டு கல்வி நிலையைக் கூறு என்று கேட்டால், நாம் வெட்கித் தலைகுனியும் நிலையில் இருக்கிறது.
🞸🞸🞸
நாட்டு மக்களிலே மிகப்பெரும்பாலானவர்களுக்குக் கூரிய வாள், பலமான கேடயம், அஞ்சா நெஞ்சு; ஆனால் அந்த வீரனின் பழுது, இந்நிலை நாட்டுக்குச் சிறப்பும் அளிக்காது. நல்லாட்சிக்கு வழி கிடைக்காது.
🞸🞸🞸
நாட்டு நிலை, உலக நிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும். "வீட்டிற்கோர் புத்தக சாலை" என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நிலை ஏற்படச் செய்யவேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை.
🞸🞸🞸
மலை கண்டு, நதிகண்டு, மாநிதி கண்டு அல்ல ஒரு நாட்டை உலகம் மதிப்பது--அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும்.
🞸🞸🞸
வீட்டில் அலங்காரத்தையும், விஷேச கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பதுபோல, வீட்டிற்கோர் புத்தகசாலை. சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்டவேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.
🞸🞸🞸
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப்பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி. புத்தக சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை--அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.
🞸🞸🞸
பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்து போகச் செய்வதற்குப் பல புத்தகங்கள் தேவை. நமது மக்களுக்குக் கைலாய காட்சிகள். வைகுந்த மாகத்மியம், வரவட்சுமி நோன்பின் மகிமை, நாரதரின் தம்பூரு, நந்தியின் மிருதங்கம், சித்ரா புத்திரனின் குறிப்பேடு, நரகலோகம், அட்டைக்குழி, அரணைக்குழிகள், மோட்சத்தின் மோகனம், இந்திர சபையின் அலங்காரம், அங்குப் பாடி ஆடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும். ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும்; அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வானைக்கும் ஏசல் நடந்தது தெரியும். இவையும் இவை போன்றவையும் ஏராளமாகத் தெரியும்.
🞸🞸🞸
நந்தி துர்க்கமலை எங்கே? தெரியாது என்பர். நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலை கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன; கணக்கு அறியார். தாராபுரம் எந்தத் திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர் பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாகாணத்தின் வருமானம் என்ன? தெரியாது என்பர். மாகாணத்தின் வருமானம் என்ன? அறியார்கள் - அறிந்துகொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமத்பிரபாவம் தெரியும்; அரச மரத்தை சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதைக் கூறத் தெரியும். பேய், பில்லி சூனியம் பற்றிய கதைகளைக் கூறத் தெரியும்: அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப்போகும் கருணானந்த சுவாமிகளின் கால்பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.
🞸🞸🞸
புத்தகசாலை அமைப்பது என்று திட்டமிட்டுப் புதுவருஷ பஞ்சாங்கத்தில் ஒரு மூன்று தினுசும், பழைய பஞ்சாங்கக் கட்டு ஒன்று, பவளக்கொடி மாலையும் பஞ்சாமிர் தச் சிந்தும், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையும் பேய் பேசிய புராணமும், நல்லதங்காள் புலம்பலும் அரிச்சந்திரன் மயானக்காண்டமும், ஆகியவற்றை அடுக்கிவைத்தால், நாம் கோரும் மனவளம் ஏற்படாது, நமது நாட்டை வஞ்சகர்களுக்கு ஏற்ற வேட்டைக்காடு ஆக்கும் தீக்குச்சி சேர்ப்பது போலாகும்.
🞸🞸🞸
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்கவேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து, அதற்குப் புத்தகசாலை யென்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டிவைத்து அவர்கள் உள்ள இடத்துக்கு, வழி காட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.
ஒவ்வோர் வீட்டிலும். வசதி கிடைத்ததும். வசதி ஏற்படுத்திக் கொண்டதும். அமைக்க வேண்டிய புத்தக சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள், இவை முதலிடம் பெறவேண்டும்.
🞸🞸🞸
பஞ்சாங்கம் அல்ல புத்தகசாலையில் இருக்க வேண்டியது அட்லாஸ்--உலகப் படம் இருக்க வேண்டும்.
🞸🞸🞸
புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தன வாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.
🞸🞸🞸
நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்று அந்த நாட்களில்; நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று அந்த நாட்களில்--நமது சரித்திர அறிவு பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு,நெருப்பிலே ஆறும், அதன்மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.
🞸🞸🞸
நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாசு இருக்கவேண்டும்.