அன்பு வெள்ளம்/அன்பு மனப்பாங்கு

அன்பு மனப்பாங்கு

மாந்தர்களாகிய நமக்கு அன்புப் பின்னணி உண்டு.அன்பின் வழி வந்த பெற்றோரின் மரபு நமக்கு இருக்கிறது. கடவுளால் படைக்கப் பெற்றோம். கடவுள் அன்பாயிருக்கிறார்.

கடவுளின் இயல்பினில் இணைந்து அவ் இயல்பினை நம்மில் கொண்டுள்ளோம். கடவுளின் இயல்போ, அன்பு! புதிய படைப்பு! அன்பின் படைப்பு! அந்தப் புதிய படைப்பின் வடிவமைப்பு அன்பு. அந்த அன்பினால் உருவாக்கப் பெற்றவர்கள் நாம்.

அன்பு உங்களுடைய இயல்பாகும் என்றால், உங்களில் அரியணை போட்டு அமர்ந்து கொண்டிருந்த தன்னலம் தூக்கி எறியப்பட்டு விடும்.

ஆனால் என் செய்வோம், தன்னலமிக்கவரால் சூழப்பட்டிருக்கிறோம்; தன்னலத்தால் சூழப்பட்டிருக்கிறோம். இயற்கையாக நம் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தனையும் தன்னலப் பண்பும் வண்ணமும் கலந்தனதாகவே இருக்கின்றன. அந்தத் தன்னலப் பாங்கினை, விலங்குகளிடத்தில் காணலாம். பொதுவாக எல்லா இடத்தும் தன்னலமிக்க மனிதனைக் காணலாம்!

நம்முடைய தொழில் - முதல் அதாவது, தொழிலாளி முதலாளி வகுப்பு போர் நடைபெறக் காரணமே இந்தத் தன்னலம்தான்்! உலகில், இதற்கெல்லாம் தேவையான ஒன்று நிலையான அடையாளம் எனப்படும் கடவுளின் இயல்பான அன்புதான்்! அத்தகைய அன்பினை நாம் எங்கெங்கும் எல்லாரிடத்தும் நின்று நிலைத்தோங்கச் செய்ய வேண்டும். அன்பினுக்கு அனைவரும் ஆட்பட வேண்டும். அதுவொன்றே நாம் செய்ய வேண்டியது. மீண்டும் படைக்கப் பெற்ற உயிர்ப்பின் அகத்துண்டுதல் உணர்ச்சியினைப் பெற்றால் நாமும் அன்பில் வாழ்ந்த பண்பாளர் போன்று வாழ்ந்திடலாம்.

ஆயினும் நாம் என்ன செய்கிறோம்...... நம்மில் புதிதாக மீட்டும் படைக்கப் பெற்ற உயிர்ப்பின் அகத்துண்டல் உணர்ச்சிக் கனலையே அணைத்துவிடுகிறோம். அதோடு அன்பாக இருப்பது என்பது நம்மால் முடியாதது. அன்பாக இருக்க வேண்டும் என்று நம்மை அன்பில் இணைத்துக் கொள்வதுகூட நம்மால் ஆகக் கூடியது இல்லை என்று சொல்கிறோம். அதுமட்டுமில்லை அன்பு நெறியில் நடக்க நாம் அஞ்சுகிறோம்.

அன்பினை உலகில் வெளிப்படுத்திய சான்றோரை, அவரைக் காட்டும் நூல்களைக் கூட சார்ந்து நிற்க நம்பிக்கை வைத்திட அஞ்சுகிறோம். நம்மில் இயல்பாக இருக்கிற அன்பைக் கூட வெளிப்படவிடப் பயப்படுகிறோம்.

இத்துணை ஏன்? எல்லாம் வல்ல இறைமை நம்மோடு இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கக் கூட நாம் கருதுவதில்லை.

ஏசாயா 41:10, 'நீ அச்சப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் கடவுள்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவி பண்ணுவேன்;என் அறத்தின் வலது கையினால் உன்னைத் தாங்குவேன்'

இப்படிச் சொல்லப்பட்டதோடு, மேலும் சொல்லப்படு வதைப் பாருங்கள். 'உன் இறை நான் அன்பாயிருக்கின்றேன். உன்னை விரும்பவிடு; உன்னில் அன்பு கூர்ந்திட விடு; உன்னையும் உன்னை உள்ளடக்கிய மானுடத்தையும் நான் வாழ்த்தியருளுவேன்' என்றெல்லாம் இறை மொழிகள் நம்மை அறிவுறுத்துகின்றன. ஏதோ ஒட்டுமொத்தமாக யார் பொருட்டோ சொல்லப்பட்டதா இது? இல்லை. மானிட உயிர்க்குக் கடவுளின் அன்பு மொழியல்லவா? இனியேனும் இவற்றை எல்லாம் நினைவிற் கொண்டு அன்பு உள்ளம் படைத்தவராவோம்.

நம்மில் ஏனோ அச்சம் குடிகொண்டுவிட்டது. அதனால்தான், அன்பு நம்மில் உள்ளிருந்து ஊக்குவித்துச் செயல்படு முன்னமே அன்புக் கனலை அனைத்துவிட்டோம். அன்பு எப்போதுமே இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடும் துணிவினைக் கொண்டதில்லை!

கணவன் மனைவி ஆகிய இருவருமே ஒருவர்க்கொருவர் சண்டையிடாமலிருக்கும் தந்திரம் ஒன்று தெரியுமா? பெரிய உள்ளம் வேண்டும்; அன்புள்ளம் வேண்டும்; தவறாகப் பேசியவர் தவறு செய்தவர் கணவனாக இருந்தால் மனைவியிடம், மனைவி யாக இருந்தால் கணவரிடம் "என்னை மன்னித்துவிடு. இனி நான் ஒருபோதும் அப்படிப் பேச மாட்டேன்; செய்ய மாட்டேன்" என்று அன்பாகச் சொல்லிப் பாருங்கள். பிறகு எப்படி சண்டையோ மனக் கவலையோ வருகிறது பார்க்கலாம்.

அன்பில்லாதவராக இருப்பீர்களேயானால் அதை ஒத்துக் கொள்ளுங்கள் முதலில். பிறகு அன்பில்லாத உங்கள் வெற்று நெஞ்சத்தில் அன்பினைக் கொண்டு நிரப்புங்கள். அதன் பின்பு பாருங்கள் உங்கள்.வீட்டில் உள்ளவர்களிடையே மனத்தாங்கல், வீண் சண்டை ஏற்படக் காரணமாயிருந்த உங்கள் செய்கைகளை நீங்களே நிறுத்தி விடுவீர்கள். பிறகு அன்பு நிலவும் ; நேயம் குலவும் உங்கள் வீட்டில் இருப்பவர்களிடையே அன்புள்ளம் கொண்டிரானால் இல்லத்தரசிகளே! உங்கள் உள்ளத்தில-இல்லத்தில் இயேசு கிறித்து வந்துறைகிறார். இல்லத் தலைவர்களே! அன்புள்ளம் கொண்டீர்களேயானால் உங்கள் அன்பு உள்ளங்களில் - இல்லங் களில் இயேசு பெருமான் வந்து வாழ்வார். உங்களின் அன்பு நிறைந்த வாழ்க்கையில் குடும்பத்தில் எந்தச் சிக்கல்களும் - பாடுகளும் தோன்றா அமைதி நிலவும்.

1 யோவான் 4 : 1இல் சொல்லப்பட்டுள்ள உரையில் ஒவ்வொருவரின் நெஞ்சக் குரலுக்கும் ஒவ்வொரு சிக்கலுக்கும் சரியான விடை பொதிந்து உள்ளது என்பது என் நம்பிக்கை. இதோ அந்த உரை 'கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து பற்றுறுதிக் கொண்டிருக்கிறோம். கடவுள் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் கடவுளில் நிலைத் திருக்கிறான் கடவுளும் அவனில் நிலைத்திருக்கிறார்'

மேலே சொன்னபடியே, நாம் அன்பை விரும்பியிருக்கிறோம். அன்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த அன்பு என்றுமே தோல்வியுறாது என்றும் நாம் நம்பியிருக்கிறோம்.

ஒவ்வொன்றும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. எடுத்துக்காட்டாக நம் மானுடத்தின் அறிவு தோல்வியுற்றிருக்கிறது. நம் மானுடத்தின் திறன் தோல்வி கண்டிருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையை ஓட்டாண்டியாக விட்டோம். பொருளற்று நொடித்த நிலைக்குத் தள்ளிவிட்டோம். நொடிந்து போகச் செய்து விட்டோம். காரணம் என்ன? வாழ்க்கையில் அன்பினை இட்டு நிரப்பத் தவறிவிட்டோம். அதனால் பொருளற்ற நிலையினைச் சரிப்படுத்தும் பொறுப்பினை அன்பினிடமே விடப் படல் வேண்டும்.