அன்பு வெள்ளம்/அன்புடன் நடத்தல்
அன்புடன் நடத்தல்
நடத்தல் என்பது அன்றாட ஒழுக்கம். உன்னை நோக்கி அன்பில் நடந்துவந்த சால்பினரைப் போன்று உலகின் மாந்தர்களும் அன்பில் நடக்கிறார்கள்.
அன்பின் வழி நடந்தால், அன்பே அன்றாட ஒழுக்கமாகக் கொண்டால், அடடா! எவ்வாறு அழகான வாழ்க்கை அமைகிறது. செவிக்கினிய இன்னிசையும் சிரிப்பும் நிறைந்த இயற்கையின் உயிர்ப் பூங்காவன்றோ அன்பு!
ஆர்வமிக்க தயவார்ந்த செயல்கள், அன்பார்ந்த பார்வை, சிறு பரிசளிப்பு ஆகியவை அன்புடன் நடப்பதன் - ஒழுகுவதன் பிரிவுகளே!
காலையில் நமக்கு முன்பே கண்விழித்து எழுந்த அன்னை, தன் அன்பினைத் தன் குழந்தையிடம் கொண்டதன் வெளிப்பாடு அன்றோ வீட்டில் அங்கும் இங்குமாக அலைந்து தேடித் தேடிப் பொம்மைகளையும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்ப்பது.
கணவன் கடமை ஆற்றிடச் செல்ல வேண்டியதற்கு ஆவன செய்வதும், பிள்ளைகள் பள்ளிக்கும் செல்ல வேண்டியதற்கான பணிகளையும் செய்து அதற்கும் முன்பாகக் காலை உணவையும் சமைத்து வைக்கிறார். உணவறையில் உணவருந்தும் பலகையில் உணவைப் பரிமாறி வைத்துவிட்டுக், கணவன் மட்டுமின்றி அன்புப் பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வருவதனை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பாள். இல்லத்தரசியாக விளங்கும் அன்னை அவள்தான் அவ் வீட்டின் அரசி! பிள்ளைகளின் தந்தையும், தன் கணவனுமான தலைவன்தான் அரசர்! அந்த இல்லறப் பேராட்சியில் அவள் பெற்ற பிள்ளைகள்தாம் அர்சாங்கம். என்ன அற்புதமாக இடம்! ஆர்வமற்ற சொல் அங்கே பேசப்படுவதேயில்லை! தன்னல மிக்க செயல்கள் இல்லை அங்கே! அங்கே ஒவ்வொருவரும் அடுத்தவரை மகிழ்விப்பதற்காகவே வாழ்ந்து வருகிறார்களோ எனும்படி ஒரு வியப்பு நிலை!அந்த இனிமையான நிலையினைக் கணவன் தன்னுடனே உள்ளத்தில் கொண்டு செல்கிறார் அலுவலகத்துக்கு பிள்ளைகளும் பள்ளிக்குப் படிக்க வேண்டிய நூல்களோடு சுமந்து கொண்டு செல்கிறார்கள். அன்னையோ, அன்று முழுவதும் பாடிய வண்ணம் பணிகளைச் செய்து பெருமகிழ்ச்சி அடைகிறாள், தன் வீட்டில் நிலவிய இனிய சூழலை எண்ணி எண்ணி
அண்டை அயல் வீட்டார் வருகின்றார்கள், சற்று நேரம் அளவளாவிப் பேசிச் செல்வதற்காக! அவர்கள் வந்து பேசிய பின் அந்த அன்பு வாழும் இல்லத்தைவிட்டுத் தங்கள் வீட்டுக்கத் திரும்பிச் சென்றிட மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்ன? அவர்கள் வீடு, பாழடைந்த வீடுபோல் காட்சியளிக்கிறது; அன்பு கொண்ட மக்கள் இல்லை அவர்கள் வீடுகளில்! அப்படிப்பட்ட வீடுகளில் இருப்பதைவிட இயேசு ஆண்டவர் சில சமயங்களில் தங்கியிருந்தாரே காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலப்பகுதி! அதுபோன்ற காட்டுக்குள் போய்விடலாமா என்றகூட ஏங்கு கிறார்கள்.
யோவான் 14:23ல் "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் உரையைக் கைக் கொள்வான்; அவனில் என் தந்தை அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாழ்ந்திருப்போம்” இப்படி இயேசு சொல்கிறார்.
இயேசுவின் இந்த உரையைக் கண்கூடாகக் காண்கின்ற இல்லமே அன்பு இல்லம். பிறந்தாலும் அப்படிப்பட்ட அன்பு இல்லத்தில்தான் குழந்தைகளாகப் பிறத்தல் வேண்டும். அன்பின் அருளாட்சி நடைபெறும் அப்படிப்பட்ட இல்லங்களில் அல்லவா சிறுவர்களும் சிறுமிகளும் ஓடி ஆடி விளையாடல் கூடும்; நடக்கவும் நல்லன பேசவும் முடியும்! அன்பாட்சி செய்கின்ற அப்படிப் பட்ட இல்லங்களில் ஆடிப்பாடி விளையாடிடும் குழந்தைகள், தாம் வளர்ந்த பின்பு வாழ்க்கை என்னும் மிகப் பெரிய விளையாட்டுகளிலும் விளையாடி வெற்றி கொள்ள முடியும்.
நம்முடைய எல்லா இல்லங்களுமே அன்பு இல்லங்களாக மாற முடியும். அப்படி அஃது ஒன்றும் கவிதையில்லை; அது மெய்பொருள் அன்று. எல்லாராலும் முடியாது என்பதற்கு. ஒவ்வொரு நாளும் அன்புடன் நடக்கும் ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான்! நடத்திக் காணக் கூடியது தான் அன்பு இல்லம்!படைக்கப்பட்டுள்ள அனைத்துமே அன்பினை அடிப்படைக் காரணமாகக் கொண்டவைதாம்! உலகில் மனிதன் தோன்றி வாழ்வதற்குக் காரணமும் அன்புதான்! அன்பின் வழிதான் மாந்தர் பிறப்பெடுத்ததே! இதை எண்ணும் போது எத்தனை அழகானது நம் தோற்றமும் வாழ்வும் என்று வியக்க வேண்டியுள்ளது!
எ.பே. 3:17 "....... நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலை பெற்றவர்கள் ஆக இயேசுவின் அன்பிலே வேரூன்றி அவ்வன்பிலே நிலை பெற்றவர்கள் ஆகிவிட்டால், வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் புயலும் நம்மை எதுவும் செய்ய முடியாது!
ஒருவர் ஆழ்ந்த வருத்தத்தில் தோய்ந்தவராக இருப்பதை நான் கண்டேன். அவருடைய இல்லத்தில் இருந்தவர்கள் ஆன்மீகப் பற்றற்று அன்பற்றுப் போனதால் - அனைவரும் வாழ்க்கையில் சுக்கு நூறாகச் சிதறிக் கிடந்தனர். இனி கடைத் தேற்றமே அற்ற நிலைக்குச் சென்று விட்டனர்! உண்மையான புயல் அடித்து அதில் சிக்கிய வீட்டுக் கட்டடம்கூட இப்படிச் சிதறிச் சிறுமையாகி விட்டிருக்காது.
புயலால் பாதிக்கப்பட்ட அந்த இல்லத்தை விட ஆன்மீகப் பற்றற்றதால் அன்பற்ற தன்மையால் அவர்கள் உள்ளங்கள், நொறுக்கப்பட்டுத் தூள் தூளாகச் சிதறிக் கிடப்பதன் நிலை மிகக் கேடானது.
ஓர் இல்லதரசியைக் கண்டேன்; அவர் அமைதியான வடிவம்; பண்பின் கொடுமுடி! எப்போதும் எதற்காகவும் சீர்கெட்ட சொல்லை உதிர்த்ததே இல்லை. அவ் அம்மையாரின் வாயிதழ்கள் அம்மையாரின் உள்ளத்தில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் வெறுப் புணர்ச்சியும் கொண்டதல்ல எனக்காட்டும். அவ் அம்மையார் தம் கணவரை அன்புடன்தான் விரும்பி வந்துள்ளார். அடங்கித்தான் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அழகான வாழ்க்கையினையும் ஒழுங்கையும் அழித்து விட்டார் அவருடை கணவர்! அதுபற்றி அவர் மனைவி கொண்டுள்ள ஆறாத் துயரம் அளவிடற்கு அரியது. அந்த அம்மையாரின் அன்பு உள்ளம் இன்னும் அவருடைய கணவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனை அவர் அறியாததால் அன்றோ, தம் மனைவியின் அன்பினைக் கொன்று விட்டார்; தூயதான் அன்பினை வதை செய்துவிட்டார்.
அன்பு அவர் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. மனைவியின் கோலத்தில் இயேசு ஆண்டவர் மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுந்து வந்ததுபோன்று மீண்டும் அன்பு கொண்டு, கொடிய மனப்பான்மையில் புதைந்து போய்விட்ட தம் கணவர் எழுந்து மீண்டும் வர மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது மனைவியில் தோய்ந்து கிடக்கும் அன்பு. அந்தக் கணவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. பொல்லாத போக்கில் புதைந்துவிட்ட அவர் புலரும் பொழுது போல ஒளிமயமான அன்புலகம் நோக்கி ஒரே ஓர் அடியெடுத்து வைத்து நடக்கத் தொடங்கிட வேண்டியது தான்.
நாம் அல்லது எல்லாவுயிருமே வாழ்ந்து கொண்டிருப்பது அன்பினால்தான். அன்பின் அடிப்படையில்தான்! நம் வாழ்க்கையைச் சிறந்ததாக - உயர்ந்ததாக வளநலமாகச் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று; அதுதான் அன்பு!
அப்படிப்பட்ட அன்பு இரக்கமின்றி, கொல்லப்படுகிறதே! தயவின்றி பசித்துத் தவிக்க விடப்படுகின்றதே! சிந்திக்காமல் புறக்கணிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகிறதே அன்பு!
நாம் பேசும் பேச்செல்லாம் இரக்கம் உள்ளதாக, செய்யும் செயல்களில் எல்லாம் இரக்கம் வெளிப்படுவதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஏன்? இரக்கத்தில், தயவில், கனிவில்தான்் அன்பு வளர்கிறது. இத்தனையும் தெரிந்திருந்தும் நாம் நமது வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அன்பினைப் பற்றியும் அதனை வளர்க்கும் இரக்கத்தையும் ஈதலையும் மறந்தே போகிறோம்.
அன்பினை நினையாமல் மறந்து போகின்ற "மறதி"யையும் அந்த மறதியினால் ஏற்பட்ட அன்புச் சிந்தனையற்ற தன்மையினையும் நாம் எப்படிச் சீர் செய்யப் போகின்றோம்? தெரிய வில்லை!
இயேசுவின் நெஞ்சத்தில் நம் அன்பு வேரூன்றச் செய்திட வேண்டும்; வேரூன்ற நிலைபெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், தந்தையின் நெஞ்சத்தில் ஓங்கும் ஆற்றலைப் பெறலாம். அவ் ஆற்றலைப் பெற்றால் நாம் அன்பினை, எப்போதும் எதற்காகவும் மறவாத நிலை பெறுவோம்!
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய முழுத்தன்மையாலும் நிறைபடவும்: என்றெல்லாம் சொல்லி, 'அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி, நட்புவழி காட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு" என்று மென்மையாகத் தன்மையாக நமக்குச் சொல்லப்படுவது ஏன்?
அன்பினைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லப்படும் சொற் காத்துப் பேணி வளர்த்துப் வருவோமேயானால் அன்பின் இன்பச் சூழலில் நிலவும் அமைதியினைத் தகர்த்திடும் எந்தச் சொல்லினையும் சொல்லோம்; எப்படிப்பட்ட செயலினையும் செய்யோம்; நாம் அன்புள்ளவராக இருந்தோம் என்றால் நாம் பேசுவதெல்லாம் கனிவாக, அன்பாதரவானதாக உண்மையாகவே இருக்கும். அப்படித்தான் பேசுவோம்.
'நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயன்தலைப்படா அப் பண்பினர்' வாயிதழ்களில் இருந்து வரும் சொற்கள் வேண்டுமானால் திருத்தத்திற்கு உரியனவாக இருக்கலாம். ஆனால் அச் சொற்கள் எல்லாம் அன்பில் ஊறியவை - தோய்ந்தவை!
அன்பு ஓங்கி ஆட்சிச் செய்யும் நெஞ்சத்திலிருந்து வெளிக் கிளம்பி வரும் சொற்கள் எல்லாம் என்றும் எங்கும் வாழ்பவை; நிலைத்து நிற்பவை. அச் சொற்கள், நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று மண்டலத்தையே கமழச் செய்கின்றன; துறக்கத்தின் தெய்வீக மணம் கமழச் செய்கின்றன என்றால் மிகையல்ல. உண்மை; வெற்றுச் சொல் இல்லை!
கடவுளானவர் கிறித்துவுக்குள் கனிவாகவும் அமைதியாகவும் இருந்ததுபோல் நம்மிலும் ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டால், நாமும் கனிவும், அமைதியும் வாழும் நெஞ்சத்தைப் பெற்றவர்கள் ஆவோம்.
அன்பில் நாம் வாழ்கிறோம்; வாழ்வோம். அன்பின் வரை றறைக்குள்தான்் நாம் சிந்திக்கிறோம் - சிந்திக்க வேண்டும். அன்பினில் வாழ்ந்து அன்பு வரையறைக்குள் சிந்தித்த உலகை வாழ்த்துவோம்; வாழ்த்தி வாழ்வோம்.
அகமும் புறமும் நம் அன்பில் இணையின்
உகந்தெழும் வையத் துயிர்.