அன்பு வெள்ளம்/அன்பு மொழி

அன்பு மொழி ஆள்க

ன்பினைத் தனித் திறனாகக் கொண்டு எண்ணிடக் கற்றுக் கொள். உங்களுடைய செயல்களுக்கெல்லாம் தாயாகவுள்ள அன்பின் பின்னணியில் தான்் நம் வாழ்க்கை அமைந்தது; அப்படி அமைந்த உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் நல்லது என்று எதைக் யாருக்குக் கொடுத்தாலும் அதனை அன்பாகக் கொடுங்கள்; இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பின் வழியே கொடுத் திடுங்கள். அன்பின் மொழி எது என்று அறிந்து கொள்ளுங்கள்; அந்த அன்பின் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் உலக மக்களின் மொழியின் இடத்தில் அன்பின் மொழியைத் திகழவையுங்கள்.

இதுவரை நம்மை, புலன் அறிவு ஆண்டு வந்தது போதும்; இனி அதனிடத்தில் அன்பார்ந்த அன்பினை ஆளவிடுங்கள். சிறிதளவு அன்பின் வழியினைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்; அந்த அன்பின் வழி, பண்புமிக்க நடையுடைய, மேன் மக்களுக்குரிய வழி; கடுமையற்ற மென் நயமான வழி: அழகிய வழி. அதனைக் கண்டு அதில் நடப்போம். அதுமட்டுமன்று, அதோடு அன்பினைக் காண்பது எப்படி? அன்பின் கண் கொண்டு பார்ப்பது எப்படி அன்பின் கண் கொண்டு காண்கின்ற போது அந்தக் கண்கள் அன்பினால் ஒளிமயமாகும். ஒளிமயமான அன்பு நிறை நம் கண்களில் இயேசு கிறித்து நிழலாடுவதனை மக்கள் காண்பர்! நம்மில் இயேசுவைக் காண்பர்!

பின்னர் நம்மிடம் புன்மைச் செயல்கள், பகைமை விளைக்கும் செயல்கள்; தன்னலமிக்க செய்கைகள், கசப்புணர்ச்சி தரும் பணிகள், சொற்கள் உண்டாகா. ஆகவே அன்பு எண்ணமும் அன்புச் செயல்களும் அன்பு மொழிகளும் மென்மையானவை; அழகானவை, அழியாதவை.

நம்முடைய சொற்களையும் புலன் அறிவு சார்ந்த சொற்களையும், அன்பினில் போட்டு ஊற வையுங்கள். ஊறிய பின்பு அதே சொற்கள்; நம் வாயில் இதழில் தவழும் போது, அன்பின் அழகு திகழ, அன்பின் மணம் கமழ, அன்பின் மென்மை குலவ வெளிப்படும். இத்தனைக்கும் அப்பாற்பட்டுச் சிறப்பும் வனப்பும் மிக்கவையாக இருக்கும் என்றால் மிகையில்லை.

அப்படிப்பட்ட அற்புத அன்பு நிறைந்த சொற்களை, நம் பேச்சில் ஒளிர வேண்டாமா? வன்மமும் வன்முறையும் நிறைந்த சொற்களை இனியும் பேசுதல் வேண்டா. அன்பில் ஆழ்ந்த, அன்பில் தோய்ந்த சொற்களை நெஞ்சில் சேர்ப்போம், சேர்த்து வைத்த புதுச்சொற்களைக் கொண்டு இனிப் பேசுவோமே.

அன்புச் சொற்களை, எங்கும் நிறைந்து பரவும் காற்றில் கலந்திடப் பேசுவோம்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஆடவர் மகளிர் அனைவரோடும் பேசி, நடந்து கொள்ளும் அத்தனையும் அன்பின் உறுதுணையால் நடைபெறல் வேண்டும். நாம் மானுட இனம்; மக்கள் அல்லரோ? நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையினை மேற்கொண்டு வாழ்தல் வேண்டும். அந்த அன்பு வாழ்க்கை இயேசுவில் எப்படியெல்லாம் இழைந்து இயைந்து இருந்ததோ அதே போன்று நம் வாழ்விலும் இயேசுவின் அவ் அன்பு வாழ்க்கையை இழைய இணையவிடல் வேண்டும்.

இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை நம் நெஞ்சங்களை ஆளும் ஆட்சியாகக் கொள்ள வேண்டும் எதுவரையில்? நெஞ்சத்திலிருந்து பிறந்து வரும் எண்ணம் ஒவ்வொன்றும் அன்பாக; அன்பான எண்ணங்களிலிருந்து வெளிப்படும். சொற்கள் எல்லாம் அன்பில் தோய்ந்தனவாக, அமையும் வரையில். அள்ள அள்ள எப்போதும் - என்றென்றும்! ஏன் அன்பில் மலர்ந்த எண்ணங்கள் அன்பு மணக்கும் சொற்களாக மாறினால் தான்், மற்றவரை வாழ்த்தவும், அவ் வாழ்த்தினால் கிளர்ச்சி பெறவும், பின்பு ஆற்றுப்படுத்தவும் அதற்கும் மேலாக உதவிகள் செய்ய வேண்டி, அன்பென்னும் பேராட்சியை நம் நெஞ்சங்களை ஆட்சி புரிய விட வேண்டும் என்பது.

நமது அறிவை அடக்கியாளும் வண்ணம், அன்பினை, நெஞ்ச அரியணையில் அமர்த்திடல் வேண்டும். அன்பினுக்கு வேலையாள் ஆக வேண்டும். அறிவு ஆகக் கூடியதா என்றால் சற்று கடினம் தான்். எனென்றால், தான்் வைத்ததே சட்டம் என்னும் தன் முனைப்பு கொண்டது நம் அறிவு. ஆகவே அன்பினுக்கு அறிவு, இணங்காது; அடிபணியாது. ஆனாலும் நாம் நம் அறிவினை, அன்பினுக்குக் கீழ்ப்படியவைக்க வேண்டும். கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். -

நாம் நம்முடைய வணிகத் துறையிலும் அன்பினை ஆட்சி புரியச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் அலுவலகங்களில் இருப்பவர்களும் அன்பின் ஆற்றலை உணர்வர்; பின்பற்றுவர். அலுவலகங்களில் அருவருப்போடு வேலை செய்கிறவர்கள், அன்புச் சூழலில், அன்பின் ஒளியில் அன்பு உணர்வில் பணியாற்றுவர்.

அன்பால் அலுவலகப் பணிகள் மிகச் சீரிய முறையில் நடைபெறும். அலுவலம் உயர்நிலை அடையும். அலுவலகத்தில் பணி செய்பவர்களும் நல்ல பயனும் உயர்வும் பெறுவர்!

ஆகவே நாம் எல்லாரும் இனிமேல் அன்பின் சூழலில், அன்பில் இணைந்து காரியம் ஆற்றுவோம். அதற்குக் கைமேல் பலன் உண்டு! அதனால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பாதையிலும், அன்பின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வருவோம். அதன் விளைவாக, நம் நினைவும் மொழியும் செயலும் அனைத்துமே அன்பில் மலர்ந்தனவாகவே அமையும்.

அரும்பொருள் அன்பே அனைத்துலகை ஆளும்
பெரும்பொருள் வையத்துப் பேறு.