அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது


6
ஒரு முயல் குட்டி
சாபம் போட்டது

ஒரு காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது. ஒரு நாள் அது ஒரு பாறையின்மேல் ஏறியது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தது.

சிறிது தொலைவில் உள்ள நிலத்தில் பச்சைப் பசேலென்று புல் வளர்ந்திருந்தது. நீள நீளமாகத் தளதள வென்று வளர்ந்திருந்த புல் வெளியைக் கண்டது. இளம்பச்சைப் புல் நிறைந்திருந்த அந்த நிலம் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. முயல் குட்டிக்கு அந்தப் புல்லைக் கடித்துக் கடித்துத் தின்ன வேண்டும் என்று ஆசையாயிருந்தது.

பாறையிலிருந்து துள்ளிக் குதித்தது.

தாவித்தாவி அந்தப் புல்வெளியை நோக்கி ஓடியது. அங்கும் இங்குமாக ஒடி ஒடி ஆசைதிரப் புல் நுனிகளைக் கடித்துக் கடித்துத் தின்றது. ஒரு புல்லைக் கடிக்கப் போகும் போது கூர்மையாயிருந்த அந்தப் புல்லின் தாள் முயலின் மூக்கை அறுத்துவிட்டது. சிறிது குருதி வழிந்தது. எரிச்சலோடு கூடிய வலி ஏற்பட்டது.

முயல் குட்டிக்குச் சினம் பொங்கியது. இந்தப் புல் என் மூக்கையறுத்துவிட்டது. என்ன திமிர் இதற்கு! கடவுளே! இந்தப் புல்லெல்லாம் எரிந்து சாம்பலாகப் போகட்டும் என்று சாபம் போட்டது.


பிறகு மூக்குப் புண்ணோடு தான் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தது. சிறிது நேரத்தில் தூங்கிப் போய் விட்டது.

திடீரென்று அந்தப் புல்வெளி யெங்கும் தீப்பற்றிக் கொண்டது. நெருப்புப் பட்டு அந்தப் புல் அனைத்தும்

கருகின. தீ மெல்ல மெல்லப் பரவி முயல் குட்டி இருக்கும் இடம் வரை இருந்த புல் அனைத்தும் நெருப்பில் கருகிச் சாம்பலாய்ப் போயின.

“வேண்டும்! வேண்டும்! புல்லே! என் மூக்கையறுத்தாய் அல்லவா! உன் கூட்டத்தோடு ஒழிந்தாய்” என்று முயல் குட்டி கும்மாளம் போட்டது.

சிறிது நேரத்தில் முயல்குட்டிக்குப் பசி எடுத்தது.

“ஐயோ! ஒரு புல் கூட இல்லாமல் எரிந்து போயிற்றே! எதைத் தின்பேன்!” என்று முயல்குட்டி கவலை கொள்ளத் தொடங்கியது.

அதற்கு அழுகை அழுகையாக வந்தது. ஆராயாமல் தான் இட்ட சாபத்தால் அத்தனை புல்லும் கருகிப் போய் விட்டதே என்று தன் மீதே குறைப்பட்டுக் கொண்டது.

புல் அறுத்துவிட்ட தன் மூக்கு எப்படியிருக்கிறதென்று தன் முன்னங் காலால் தடவிப் பார்த்தது. அது ஆறிக் காய்ந்து போயிருந்தது.

“சற்றுநேரம் ஏற்பட்ட வலிக்காக அவ்வளவு புல்லும் எரிந்து போகச் சாபம் கொடுத்தேனே நான் ஒரு முட்டாள்!” என்று கத்திக் கொண்டே தலையை ஆட்டியது.

தூக்கம் கலைந்து கண் விழித்தது. அதைச் சுற்றிலும் எந்தப் புல்லும் கருகவில்லை. பாறையின் மீது ஏறிப் பார்த்தது. புல்வெளி முன்னைப் போலவே இருந்தது. புல் அனைத்தும் தள தள வென்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

முயலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

நல்ல வேளை! கனவுதான் கண்டேன். இல்லா விட்டால்--என் முட்டாள் தனமான சாபம் நிறைவேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

கடவுளே! என்னைப் போன்ற மூடர்களின் சாபம் பலிக்காமல் செய்யும் உனக்கு ஆயிரம் நன்றி! ஆயிரம் வணக்கம்!

இவ்வாறு கூறிக் கொண்டே முயல் புல் வெளியை நோக்கித் தாவிப் பாய்ந்து ஓடியது.