அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்

5

பட்டணத்துக்குச் சென்ற
குட்டி முயல்கள்


ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை.

காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஒடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஒடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில் வேகமாய்த் தாண்டி விழுந்து எழுந்து ஓடியது. -

பூஞ்சோலைகளில் புகுந்து அங்கு பூத்திருந்த வகை வகையான பூக்களின் மணத்தைச் சுவைத்தது.

பூஞ்செடிகளின் இளந்தளிர்களைக் கொரித்துச் சுவைபார்த்தது. மூங்கிற் புதர்களின் மத்தியிலே பாய்ந்து சிலம்பவித்தை யாடியது.

என்ன செய்தும் பொழுதுபோகவில்லை. மீதிப் பொழுதை என்ன செய்து கழிப்பது என்று அதற்குப் புதிராய் இருந்தது.

வெட்டிப்பேச்சுப் பேசுவதற்குக் காட்டில் யாரும் கிடைக்காததால் அது நகரத்துக்குப் போவதென முடிவு செய்தது.

தனியாகப் போவதை விடத் துணைக்கு யாராவது வந்தால் நன்றாயிருக்குமே என்று அந்த முயல் நினைத்தது.

அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு குட்டி முயல் வந்தது.

அந்தக் குட்டி முயலைப் பார்த்து இந்த ஆண் முயல் கேட்டது. “ஏய் குட்டி, எங்கே கிளம்பி விட்டாய்?”

“அண்ணா, காலையிலிருந்து பொழுதே போகவில்லை. அதுதான் உன்னைத் தேடிவந்தேன்” என்றது குட்டி முயல்.

“என்னைத் தேடி எதற்கு வந்தாய்? என்னிடம் வந்தால் பொழுது போய்விடுமா!” என்று கேட்டது ஆண் முயல்.

“நீ பல இடங்களுக்கும் செல்கிறவன். உன்னிடம் வந்தால் ஏதாவது கதை சொல்லுவாய். பொழுது பொடுக்கென்று போய்விடும்” என்று கூறிய குட்டி முயல்.

“எனக்கு கதை சொல்லத்தெரியாது. நான் இப்போது நகரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீயும் கூட வருகிறாயா?” என்று கேட்டது ஆண்முயல்,

“நகரத்தில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டது குட்டி முயல்.

“வேலையில்லாமலா நகரத்துக்குப் போகிறேன். எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ வருகிறாயா என்ன? வருவதாய் இருந்தால் தொண தொண வென்று பேசக்கூடாது?” என்று கட்டளையிட்டது ஆண் முயல்.

குட்டி முயல் தொந்தாவு செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுத்தது.

உடனே இரண்டு முயல்களும் சோடியாகப் புறப்பட்டன. மின்னல் வெட்டியது போல் அவை துள்ளித் துள்ளி ஓடிப் பட்டணத்து எல்லையை அடைந்தவரை யாரும் அவைகளைத் தடைப்படுத்தவில்லை.

நகர எல்லையில் ஒரு விளையாட்டு வெளி.அங்கு சின்னஞ் சிறு பிள்ளைகள் இரண்டு பேர் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். முயல்கள் அந்த இடத்தையடைந்தன.

அந்தப் பிள்ளைகள் பந்து விளையாடுவதை இரண்டு முயல்களும் கவனித்துக் கொண்டிருந்தன. பந்து இரண்டு புறமும் போய்ப் போய் மாறிவருவது அழகாகத்தான் இருந்தது. ஆனால் முயல் பாய்வதைப் போல் அப்படிச் சுழித்துத் திரும்பித் தாவினால் எவ்வளவு அழகாய் இருக்கும். அந்தப் பிள்ளைகளுக்கு தங்கள் விளையாட்டைக் காட்ட வேண்டும் என்று இரண்டு முயல்களும் நினைத்தன.

ஆண்முயலும் குட்டிமுயலும் அந்தப் பந்தின் ஊடாகப் பாய்ந்தன. இங்கும் அங்குமாகச் சுழித்துத் திரும்பித் தாவி விளையாடின. அந்தச் சிறுவனும் சிறுமியும் முயல்களின் விளையாட்டை மிக ஆவலோடு கவனித்தார்கள். அவர்களுக்கு அந்த முயல்களைப் பிடித்துத் தங்கள் மடியில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. அந்த முயல்களை நோக்கி ஓடி வந்தார்கள்.

ஆனால் முயல்கள் பிடிபடாமல் தப்பிக்கொண்டேயிருந்தன. முயல்களைப் பிடிக்க முடியவில்லை என்றவுடன் அந்தச் சிறுமி தரையில் உட்கார்ந்து கொண்டு அழுதாள். சிறுவன் அவளை அழாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஆண்முயல் அதைப் பார்த்து இரக்கங் கொண்டது.

மெல்ல அந்தச் சிறுமியின் அருகில் சென்றது. குட்டி முயலும் அதைத் தொடர்ந்து சென்றது.

“முத்தம்மா, கண்ணைத் திறந்து பார். முயல்கள் உன்னிடம் வந்து விட்டன” என்று சிறுவன் கத்தினான். அந்தச் சிறுமி அழுகையை நிறுத்தி விட்டுக் கண்ணைத் திறந்தாள்.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இரண்டு முயல்களையும் இரண்டு கைகளாலும் முதுகில் தடவிக் கொடுத்தாள். அன்போடு வாரித் துக்கி மடியில் வைத்துக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

முத்தம் முத்தமாக அவள் தொடர்ந்து முத்தமழை பொழிவதைப் பார்த்துத்தான் அவளுக்கு முத்தம்மா என்று பெயர் வைத்தார்களே என்னவோ!

அண்ணா, இந்த முயல்களை நாம் வீட்டுக்குக் கூட்டிச் செல்வோமா என்று முத்தம்மா கேட்டாள்.

அவனும் ஒப்புக் கொண்டான்.

அவர்கள் தங்கள் வீட்டுக்கு முயல் இரண்டையும் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

அன்று முழுவதும் முயல்களை வைத்துக் கொண்டு அவர்கள் பொழுது போக்கினார்கள். முயல்களுக்கும் அந்தக் குழந்தைகளோடு இருப்பது இன்பமாயிருந்தது. அன்புள்ள குழந்தைகள். ஆசையோடு விளையாடினார்கள். அவ்வப்பொழுது இரை கொடுத்தார்கள். பேசிச் சிரித்துக் கல கலவென்று இருந்தார்கள். முயல்களுக்குப் புதிய இடத்தில் பொழுது மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.

மறுநாள் காலையில், அந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் பள்ளிக் கூடம் சென்று விட்டார்கள். முயல்களுக்குப் பொழுது போவது மிகக் கடுமையாக இருந்தது. பிள்ளைகள் இல்லாமல் நாம் இங்கிருப்பது தண்டனையனுப்பவிப்பது போல் இருக்கிறது என்று குட்டி முயல் கூறியது. வா நாம் காட்டுக்கே போய் விடுவோம் என்று ஆண்முயல் அழைத்தது.

பேசி முடிவெடுத்தவுடன்அவை அங்கிருந்து புறப்பட்டன. துள்ளித் துள்ளிப் பாய்ந்தோடித் தங்கள் காட்டுக்கு வந்து சேர்ந்தன.

நகரத்துப் பிள்ளைகளைப் பற்றியும், அவர்கள் அன்பைப்பற்றியும், அவர்கள் வீட்டைப் பற்றியும் தோட்டத்தைப் பற்றியும் அவை மற்ற முயல்களிடம் எடுத்துச் சொல்வதிலேயே நன்றாகப் பொழுது போயிற்று.

ஆறு நாள் ஆயிற்று. அவற்றிற்கு மறுபடியும் அந்தப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

இந்தத்தடவை கூட இரண்டு முயல் குட்டிகள் அவற்றுடன் கிளம்பின.

நான்கு முயல்களும் அந்த சிறுவனும் சிறுமியும் இருக்கும் வீட்டுக்கு வந்தன. உரிமையோடு உள்ளே நுழைந்தன.

அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு முயல்களோடும் அவர்கள் விளையாடினார்கள்.

அன்று மாலையே முயல்கள் காட்டுக்குத் திரும்பின.

“சமர்த்து முயல்கள்! அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் வந்துவிடுங்கள்” என்று அந்தச் சிறுமி டாட்டா கூறினாள்.

அதன்படியே நான்கு முயல்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பட்டணத்து வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டன.