அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்

7

பந்தயத்தில்
வெள்ளை முயல்


காட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. என்ன வென்று தெரிந்து கொள்வதற்காக தினசரித் தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்து வந்தார்கள்.

பேருந்து ஒட்டி வந்தவன் சொன்னான். காட்டு நடுவில் உள்ள ஒரு பொட்டலில் எங்கு பார்த்தாலும் இலைகளும் பூக்களும் தோரணம் கட்டியிருந்ததாம். விலங்குக்ள் அங்கும் இங்கும் அவசர அவசரமாகவும் கூட்டம் கூட்டமாகவும் அந்தப் பொட்டலில் திரிந்து கொண்டிருந்தனவாம். இந்தச் செய்திகளைக் கேட்டதும் தினசரித்தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்தார்கள்.

செய்தியாளர்களைக் கண்டவுடன் விலங்குகளுக்கு மேலும் தெம்பு வந்துவிட்டது. முதலியேயே தெரிவித்திருந்தால், எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்று யானையார் கூறினார்.

மணியோசை முன்னால் வரும். யானையார் பின்னால் தான் வருவார். தலைவர் யானையாருக்குப் பின்னால் தான் எல்லா நினைப்புகளும் தோன்றும். செய்தியாளர்களைக் கண்டபிறகுதான் வானொலிக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தெரிவிக்கவில்லை என்பது நினைவு வந்தது.

செய்தியாளர்கள் யானையாரைச் சூழ்ந்து கொண்டார்கள். காட்டில் இன்று என்ன சிறப்பு என்று கேட்டார்கள்.

சிறப்பாக ஒன்றும் இல்லை. விளையாட்டுப் போட்டி ஒன்று வைப்பதென நேற்று ஒரு முடிவெடுத்தோம். பொதுக்குழு முடிவின்படி இன்று உடனே போட்டி வேலைகளைத் தொடங்கி விட்டோம்.

“உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி கிடைத்தது?” என்று யானையார் கேட்டார்.

உலகில் எந்த மூலை முடுக்கில் எது நடந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.

“காற்று நுழையாத இடத்திலும் கடவுள் நுழைவார், அவர் நுழையாத இடத்திலும் நாங்கள் நுழைந்து விடுவோம்.” என்று செய்தியாளர்கள் கூறினார்கள்

யானையார் வந்திருந்த பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராகத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தார்.

போட்டிகள் தொடங்கின. முதலில் பொட்டல் வெளி நடுவில் ஐந்து கழுதைகள் வந்து நின்று கடவுள் வாழ்த்துப் பாடின. ஐந்தும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடியபோது அவற்றின் குரல் கைலாசத்துக்கு எட்டியிருக்க வேண்டும் என்று மிருகங்கள் பேசிக் கொண்டன.

அடுத்து நடனப் போட்டி நடை பெற்றது.

ஆறு மயில்கள்.

மூன்று மூன்று எதிர்க்கட்சியாக இருந்து தோகை விரித்து தாளத்திற்கேற்பக் கால்போட்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அடுத்தது குரங்குகள். கைகூப்பி வணக்கம் சொன்னபின் அவை குட்டிக் காரணம் போட்டே மேடையை வலம் வந்தன. அவை செய்த வேடிக்கையைப் பார்த்துக் கூடியிருந்த விலங்குகள் அனைத்தும் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தன.

அடுத்தது மல்யுத்தம்.

இரண்டு காட்டானைகள் ஒன்றை யொன்று மோதிச் சண்டையிட்ட காட்சி உடம்பு நடுங்க வைத்தது. துதிக்கையால் வளைத்தும் காலால் மிதித்தும், கட்டிப் புரண்டும் படுபயங்கரமாகச் சண்டையிட்டன.

எருதுச் சண்டையைப் பார்த்த போது, யானைச் சண்டை சாதாரணமாகி விட்டது.

சேவற் சண்டை கண்ணுக்கு விருந்தாயிருந்தது.

புலிச்சண்டை தான் எல்லாவற்றிலும் பயங்கரமாய் இருந்தது. சில விலங்குகள் பயந்து கண்ணை மூடிக் கொண்டன. சில அந்தத் திடலை விட்டு ஒடியே போய் விட்டன!

அடுத்து ஒட்டப் பந்தயம் தொடங்கியது.

காளை மாடுகள் ஐநூறு முழ ஓட்டப்பந்தயம் ஓடின.

வேட்டை நாய்கள் ஆயிரமுழ ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டன.

குதிரைகள் இரண்டு கல் பந்தயம் ஓடின.

மான்கள் ஐந்து கல் பந்தயம் ஓடின.

கடைசியாக முயல்கள். அவை ஆறுகல் பந்தயம் ஒடத் தொடங்கின.

ஆமையோடு போட்டியிட்டுத் தோற்ற முயலின் கதையைக் கூறி அப்படியாகிவிடக் கூடாது என்று எல்லா விலங்குகளும் பேசிக் கொண்டன.

பத்து முயல்கள் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன.

அதில் சிவபக்தி மிகுந்த முயல் ஒன்று இருந்தது. பந்தயத்துக்கு வரும் முன்னாலேயே காட்டுக்குளத்தின் கரையில் அரசமரத்தடியில் இருந்த சிவலிங்கத்திற்கு லிங்க பூசை செய்து விட்டு அது பந்தயத்திற்கு வந்திருந்தது.

“கடவுளே என் கால்களுக்கு விசையைக் கொடு. எல்லாருக்கும் முன்னால் நான் ஓடி வந்து முதல் பரிசு பெற எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்” என்று பாடித் தொழுதது.

சிவபெருமான் அதன் கால்களுக்கு மிக விரைந்து செல்லும் ஆற்றலைக் கொடுத்தார். கதிரவன் செல்லும் வேகத்தில் நீ செல்லுவாய் என்று சிவலிங்கப் பெருமான் அந்த முயலுக்கு வரம் கொடுத்தார்.

முயல்கள் பந்தயத்தில் ஒடத் தொடங்கின. அந்தத் திடலில் அவை ஒடிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

அம்பு போலப் பாய்வதும், சக்கரம் போல் சுழித்துத் தாவுவதும் பார்க்கப் பார்க்க வியப்புத் தோன்றியது. சிவபக்தி மிகுந்த அந்த முயல் ஒடத் தொடங்கியபோது மற்ற முயல்களைக் காட்டிலும் மிக வேகமாக்த் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

ஒரே பாய்ச்சலில் அது ஒடிக்கொண்டே இருந்தது. பந்தயம் நடக்கும் இடத்தைத் தாண்டி காட்டைத் தாண்டி, ஊரைத்தாண்டி, கடலைத்தாண்டி அப்படி துள்ளித் துள்ளித் ஒடிக் கொண்டிருந்தது.

அது எந்த நேரம் தலை நிமிர்ந்து பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு மேலேயே காட்சி தந்தான். அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை.

பொழுது சாய்வதற்குள் உலகத்தைச் சுற்றி வந்து விடவேண்டும் என்று அது திட்ட மிட்டது. ஆனால் அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை.

சிவபெருமான் கதிரவனைப் போல் அந்த முயலும் விரைந்து செல்ல அருள் புரிந்ததால் அது எப்பொழுது பார்த்தாலும் தலைக்கு மேல் இருக்கும் கதிரவனே தோன்றியது.

சரியாக இருபத்து நான்கு மணி நேரம் மேற்கு நோக்கியே சென்ற முயல் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்பொழுது பந்தயம் நடந்த இடத்தில் யாரும் இல்லை. அந்த வெட்டவெளியானது வெறும் மொட்டை வெளியாகக் காட்சி தந்தது. கூடியிருந்த விலங்குகள் கொரித்துச் தின்ற கடலைத் தோல்களும் பறித்துத் தின்ற வாழைப்பழத் தோல்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன.

புலிகளும், எருதுகளும் நடத்திய போராட்டக் காட்சிகளில் வழிந்த குருதி திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்தது.

இவற்றையெல்லாம் கண்ட அந்த வெள்ளை முயலுக்கு குழப்பமாய் இருந்தது. பந்தயம் முடிவதற்குள் இந்தக் காட்டு விலங்குகள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன. ஏன் ஓடி விட்டன. பரிசு கொடுக்க வேண்டிய அந்த யானையார் எங்கே என்றெல்லாம் அது நினைத்துக் குழம்பியது.

அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த குட்டி மான் ஒன்று அதன் அருகில் வந்தது. “முயல் அண்ணா நேற்று நீ எங்கே போய் விட்டாய்? பந்தயத்தில் ஓடியதும் பரிசு வாங்காமல் எங்கே போனாய். யானையார் உனக்காக அரைமணி நேரம் காத்திருந்தார். எல்லாரும் கலைந்து போன பிறகும் கூட உனக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக தலைவர்கள் ஐந்தாறு பேர் உனக்காக காத்திருந்தார்கள். அண்ணா நீ எங்கே போய் வருகிறாய்.?”

மான் குட்டியின் கேள்வி முயலை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

“நான் இன்னும் பந்தயத்தை முடிக்கவில்லையே, இன்னும் பொழுது சாயவில்லையே; அதற்குள் நீங்கள் ஏன் கலைந்து போனீர்கள்?” என்று கேட்டது வெள்ளை முயல்.

“முயல் அண்ணா, உனக்கென்ன பைத்தியமா? நேற்று ஒருநாள் தானே பந்தயம் வைத்திருந்தோம். பந்தயம் முடிந்து நேற்றே எல்லாருக்கும் பரிசு கொடுத்தாய் விட்டது. உனக்குக் கொடுக்க வேண்டிய தங்கக் கோப்பையை யானையார் தான் இருக்கும் இடத்திலுள்ள அரசமரப் பொந்தில் பத்திரமாக வைத்திருக்கிறார். வா போய்ப் பார்க்கலாம். பாவம் எல்லார் முன்னேயும் நீ பரிசு வாங்கினால் எவ்வளவு பெருமையாய் இருக்கும்” என்று கூறி வெள்ளை முயலை மான்குட்டி யானையாரிடம் அழைத்துச் சென்றது.

யானையார் “பரிசு வாங்கக் கூட இருக்காமல் எங்கே போனாய்?” என்று கோபித்துக் கொண்டார். ஆனால் முயலின் ஒட்டத்தைப் பாராட்டினார். “கதிரவன் கூட உன் வேகத்திற்குத் தோற்றுப் போவான்” என்று யானையார் சொன்ன போதுதான் முயலுக்கு உண்மை புரிந்தது.

சிவபெருமான் வரங்கொடுத்தபடி அது கதிரவனின் வேகத்தில் பாய்ந்து சென்றதால், கதிரவனும் அந்த முயலும் ஒரே வேகத்தில் போயிருக்கின்றன. அதனால்தான் அது எப்போது திரும்பிப் பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு நேரேயே இருந்திருக்கிறான். பொழுதும் சாயாமல் இருளும் வராமல் இருபத்து நான்கு மணிநேரம் ஓடி இருந்த இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது. அதற்குத் தெரியாமலே அந்தக் காட்டில் ஒரு நாள் ஒடிப்போய் இருக்கிறது.

தான் இல்லாவிட்டாலும் தனக்காகப் பரிசை வைத்திருந்த காட்டு விலங்குகளின் பெருந்தன்மையை எண்ணி அது மனம் பூரித்தது.

தன் பரிசான தங்கக் கோப்பையை எடுத்துக் கொண்டு காட்டுக் குளத்தின் கரையில் அரச மரத்தடியில் இருந்த சிவலிங்கப் பெருமானை வணங்கி நன்றி கூற அந்த முயல் சென்றது. அப்போது அங்கங்கே எதிர்ப்பட்ட வன விலங்குகளெல்லாம் அதைப் பார்த்துப் பாராட்டிப் புகழ்ந்தன.

வெள்ளை முயல் மிக்க மகிழ்ச்சியோடு தனக்கு வரங்கொடுத்த சிவபெருமானைச் சென்று வணங்கி நன்றி கூறித் திரும்பியது. அதன் உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.