அம்புலிப் பயணம்/அப்போலோ - 12

14. அப்போலோ-12

ப்போலோ-12 அம்புலிப் பயணத்தில்[1] பங்குகொண்ட மூவரில் அலான் எல். பீன் (Alan L. Bean) என்பவரும் குழுவின் தலைவரான சார்லஸ் கொன்ராட் (Charles Conrad Jr} என்பவரும் அம்புலி ஊர்தியின் துணையினால் அம்புலியில் இறங்கினவர்கள். இவர்களுள் முன்னவரே அம்புலி ஊர்தியின் வலவராகப் பணியாற்றினார். மூன்றாவது. வீண்வெளி வீரரான சிச்சார்டு எஃப். கார்டன் (Richard F. Gordon) என்பார் தாய்க்கலத்திலிருந்து 10-21 கிலோ மீட்டர் தொலைவில் அம்புலியை விநாடிக்கு 1,598 மீட்டர் வேகத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார். இவர்கள் சந்திரனிலுள்ள புயல்மாகடலில் (Ocean of Storms} தாம் இறங்க வேண்டும் என்று குறிப்பிட்ட இடத்தில் சரியாக இறங்கினர். இவர்கள் இவர்ந்து சென்ற இன்டிரிபெட் (Intrepid) என்ற அம்புலி ஊர்தி அப்போலோ-11இன் அம்புலி ஊர்தியாகிய கழுகு (Eagle) இறங்கின. அமைதிக் கடல் (Sea of Tranquillity) என்ற இடத்திலிருந்து 1,520 கி. மீட்டர் தொலைவில் இறங்கியது. தாங்கள் இறங்கினதும் முதல், வேலையாக விண்வெளி வீரர்கள் 1-5 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் உள்ள அமெரிக்கக் கொடியை 2.4 மீ. நீளமுள்ள கோலில் கட்டி அதனை அம்புலிப் புழுதியில் நட்டுப் பறக்க விட்டனர். அப்போலோ-12 நவம்பர் 1969 என்ற சொற்றொடர் தாங்கிய பலகையொன்று அப்போலோ-12 இன் குழுவினரின் பெயர்களுடனும் கையெழுத்துகளுடனும் அம்புலி ஊர்தியின் கால்கள் ஒன்றில் பொருத்தப்பெற்றிருந்தது.

அப்போலோ-12 பயணத்தில் விண்வெளி வீரர்கள் அடியிற்கண்ட அருஞ்செயல்களை நிறைவேற்றினர். 1. சந்திரனின் கிழக்குப்பகுதியிலுள்ள புயல்மாகடலில் இரண்டரை ஆண்டுகட்கு முன்னர் மெதுவாக இறங்கின ஆளில்லாத சர்வேயர்-3 (Surveyor-3) என்ற விண்கலத்தைப்[2] பார்வையிட்டனர். இந்த விண்கலம் ஆயிரக்கணக்கான ஒளிப் படங்களை அனுப்பியதுடன் அம்புலி மண்ணைத் தோண்டிச் சோதித்து முடிவுகளை அனுப்பியது. இரண்டரை ஆண்டு

படம். 29 ; சர்வேயர் - 3 அமைப்பினை விளக்குவது

கட்குப்பின்னர் அம்புலியின் சூழ்நிலை எங்ஙனம் பாதித்தது என்பதை அறிய ஆவலுள்ளவர்களாக இருந்தனர் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள். தாம் சர்வேயர்-3 ஐ நெருங்கினதும் அதன் மீது படிந்திருந்த புழுதியுடன் பல ஒளிப்படங்களை எடுத்தனர். இப் படங்களை சர்வேயர் -3 இயங்கின பொழுது தன்னையே படங்களாக எடுத்தனுப்பிய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்பது இவர்கள் நோக்கமாகும். தவிர, தான் அனுப்பப்பெற்றபோது இள நீலமும் வெள்ளையும் கலந்த நிறத்திலிருந்த சர்வேயர்-3 இப்பொழுது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் காணப் பெற்றது. "கதிரவன் இதனைப் புடமிட்டு விட்டான்“ என்றார் கொன்ராட். இவர்கள் எடுத்த படங்களைப் பூமியில் ஆராயும் பொழுது அம்புலியின் சூழ் நிலை பொருள்களை எங்ஙனம் பாதிக்கின்றது என்பது தெளிவாகும்.

2. விண்வெளி வீரர்கள் இருவரும் சுமார் 33 மணிநேரம் அம்புலித் தரையில் தங்கினர்; ஐந்து மணிநேரம் அம்புலியில் நடந்தனர்.[3] அப்போலோ-11 இன் வீரர்கள் தங்கட்கு அருகிலுள்ள இடத்திலிருந்தே சந்திரமண்டலக் கற்களைத் தோண்டி எடுத்து வந்தனர். ஆனால், அப்போலோ-12 இன் வீரர்கள் சற்றுத் தொலைவிடங்கட்குச் சென்று பல்வேறு வகை அம்புலி நில உட்கூற்றியல் வகை மாதிரிக்கற்களைக் கொண்டு வந்தனர். இவர்கள் ஏழு மணிநேரம் அம்புலி ஊர்தியின் வெளியிலிருந்து கொண்டு அம்புலித் தரையை நன்கு ஆய்ந்தனர்.

3. அம்புலி ஊர்தியிலிருந்து சுமார் 90 மீட்டர் (100 கெஜம்) தொலைவில் ALSEP என்ற கருவித் தொகுதியை[4] திறுவிவிட்டு வந்தனர். தாங்கள் திரும்பிய நாளிலிருந்து சுமார் ஓராண்டுக் காலம் இக் கருவித்தொகுதி பல்வேறு எடுகோள்களைப் (Data) பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர அம்புலியின் வெப்ப நிலைகளை அறிய ஒரு வெப்பநிலை மானியையும், அம்புலியின் காந்த மண்டலத்தைப் பதிவு செய்யும் கருவியொன்றையும், கதிரவக் காற்று வீசுவதை அளந்து காணவல்ல கருவியொன்றையும் தம்முடன் கொண்டு சென்றனர். தவிர, இவர்கள் அப்போலோ-13 இறங்கவேண்டிய இடத்தையும் படம் பிடித்துக்கொண்டு வந்தனர்.

வழக்கம்போல் இப் பயணமும் கென்னடி முனையிலிருந்தே தொடங்கியது. இதிலும் சாட்டர்ன்-5 என்ற மாபெரும் இராக்கெட்டே பயன்படுத்தப்பெற்றது. நூற்றுக் கணக்கான பார்வையாளர்களும் தொலைக்காட்சிப் படங்கள் எடுப்போரும் இப் பயணத்தை நேரில் கண்டுகளித்தனர். ஆயினும், அப்போலோ-11 ஐக் காண வந்த பெருங்கூட்டம் இப் பயணத்தின்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஃதாவது, பெரும்பாலோர் அம்புலிப் பயணத்தைச் சாதாரண மாக நடைபெறக்கூடிய பயணம் என்று கருதிவிட்டனர் போலும்! இப் பயணம் தொடங்கியபோது எதிர்பாராத வண்ணம் கருவி வானம் இடிமின்னலுடன் மழைப்புயலைத் தோற்றுவித்தது. இதனால் பயணம் தாமதமாகத்தொடங்குமோ என்ற ஐயமும் இருந்தது. ஆயினும், கால நிலைகளை நன்கு ஆய்ந்து, அவை சரியாகவே உள்ளன என்று தேர்ந்து, பயணத்தைக் குறிப்பிட்ட நேரத்திலே தொடங்கப் பச்சை விளக்கு காட்டி விட்டனர். "அடாது மழை பெய்யினும் விடாது நாடகம் நடத்தப்படும்” என்பதற்கேற்பப் பயணமும் தொடங்கியது.


  1. இஃது 1988ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் தொடங்கியது.
  2. இஃது 1967 ஆம் ஆண்டு ஏப்ரலில் சந்திரனில் இறங்கியது.
  3. அப்போலோ-11 இன் வீரர்கள் இருவரும் சுமார் 22 மணி நேரம் தந்தி 2 மணிக்குமேல் சில நிமிடங்கள் அம்புலித் தரையில் நடந்தனர். என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
  4. Apollo Lunar Surface Experiment Package (ALSEP).