அம்புலிப் பயணம்/பயணத்தின் பயன்

13. பயணத்தின் பயன்

ந்திர மண்டலத்திற்கு மனிதன் சென்று வருவதற்கான திட்டங்களில் அமெரிக்காவும் இரஷ்யாவும் ஏராளமான பணத்தைச் செலவு செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக அப்போலோ-10 பயணத்தில் சட்டர்ன் -5 ஏவுகணையை நிறுவுவதற்கான செலவு செய்து 185 மில்லியன் டாலர்; கட்டளைப் பகுதியை நிறுவுவதற்கான செலவு 55 மில்லியன் டாலர்[1] அம்புலி ஊர்திக்கான செலவு 41 மில்லியன் டாலர் ; இவற்றைச் செலுத்துவதற்கும், விண்கலத்தை மீட்பதற்குமான செலவு 69 மில்லியன் டாலர் ; ஆக மொத்தம் 350 மில்லியன் டாலர். இந்த ஒரு பயணத்திற்கு மட்டிலும் ரு. 245,00,00000 (இரு நூற்று நாற்பத்தைந்து கோடி ரூபாய்) செலவாயிற்றென்றால் இதுகாறும் இரு நாடுகளும் மேற் கொண்ட பயணங்கட்கெல்லாம் செலவான தொகையைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

ஆளுள்ள பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் இரு நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் எத்தனையோ. கோடி ரூபாய்கள் செலவழித்துள்ளன. எடுத்துக்காட்டாக டெல்ஸ்டார் (Yelstar) என்ற ஒரு சிறு துணைக்கோளை அமைத்து இயக்க ஒரு கோடி ரூபாய் செலவாகின்றது. மனிதனைச் சந்திர மண்டலத்திற்கு அனுப்புவதற்கு முன்னால் விண்வெளியின் பல்வேறு நிலைகளை அறிவதற்கு எத்தனையோ செயற்கைத் துணைக்கோள்களை அனுப்பி ஆராய வேண்டும். இவற்றிற் கெல்லாம் எவ்வளவு பணம் - செலவாகும் ? இதற்குப் பதிலாக அமெரிக்காவும், இரஷ்யாவும் ஒன்றுபட்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எவ்வளவு நலமாக இருக்கும்? ஒருவர் செய்ததையே இன்னொருவர் செய்து பார்த்துப் பணத்தை வீண்விரையமாக்க வேண்டாமல்லவா? இரஷ்யர்கள் வலுவான இராக்கெட்டுகளை அமைப்பதில் வல்லுநர்களாக இருப்பதைக் கண்டு வருகின்றோம். அமெரிக்கர்கள் நுட்பமான கருவிகளையும் தொலை நிகழ்ச்சி அறிகருவிகளையும் நிறுவுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதையும் பார்க்கின்றோம். இரு நாட்டினரின் தொழில் நுட்பத்திறன் ஒன்று பட்டால் எவ்வளவோ செயல்கள் எளிதில் கை கூடும் ; வீணாகும் செலவும் குறையும்.

இங்ஙனம் பெரும் பொருளைச் செலவிட்டு விண்வெளிச் செலவுத் துறையில் செயற்கரிய செயல்களைத் திறம்படச் சாதித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால், அவற்றால் உருவான பயன் ஏதாவது உண்டா ? இன்னும் ஏதாவது பயன்கள் ஏற்படப் போகின்றனவா? வறுமையும், பிணியும், வளர்ச்சிக் குறையும் உள்ள நிலையில் திணறித் திகைத்து வரும் உலகிற்கு அம்புலிப் பயணத்தால் நன்மைகள் விளையப் போகின்றனவா? -இவைபற்றி ஈண்டுச் சிறிது ஆராய்வோம்.

விண்வெளித் திட்டங்களின் பயனாக ஏற்கெனவே சில நடைமுறை நன்மைகள் விளைந்துள்ளன. முதன்முதலாகச் சந்திரனை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்புவதே சிறந்த ஒரு திறனுள்ள செயலாகும். ஓர் அறிவியலறிஞர் கூறியது போல், இச் செயல் பதினாறு கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஊசியின் முனையை இங்கிருந்தபடி ஒரு துப்பாக்கிக் குண்டினால் குறி தவறாமல் தாக்குவதற்கு ஒப்பாகும். இத்தகைய திறனுள்ள செயலை மேற்கொள்வதென்றால், இராக்கெட்டிலும் அஃது உயரத்தில் எடுத்துச் செல்லும் விண்கலத்திலும் உள்ள முப்பது இலட்சம் பகுதிகளும் இம்மியளவும் தவறாமல் இயங்க வேண்டும். விண்வெளிப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு பொருள்களைச் சிறிதும் பெரிதுமான இருபதாயிரம் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இவை பொருள்களை நூற்றுக்கு நூறு சுத்தமாக, கச்சிதமாகத் தயாரிப்பது என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகின்றன, இப்பயணத்திற்குத் தேவையான பொருள்களேயன்றி வேறு பொருள்களையும் திறமையுடன் ஆக்கி வருகின்றன. இத்திறன் பிற தொழிலகங்கனிலும் பரவி வருகின்றது.

அம்புலியை அடைவது என்ற குறிக்கோள் பல புதிய கண்டுபிடிப்புகளுக்குத் துணை செய்துள்ளது. எடுத்துக் காட்டாக, அப்போலோ விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் அமரும் இடத்தைச் சுற்றியுள்ள சுவர் அலுமினியத்தாலானது. இந்த அலுமினியம் சாதாரணமாக நாம் காணும் அலுமினியத்தைவிட நாற்பது மடங்கு இலேசானது ; அதே சமயம் நாற்பது மடங்கு உறுதியும் வாய்ந்தது! இதுபோன்ற பல புதுப் பொருள்கள் இதுகாறும் 2,500 வரை கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இவை யாவும். விண்வெளித் திட்டத்தால் அன்றாட வாழ்விற்குப் பெரிதும் பயன்படக் கூடியவை. இவையெல்லாம் இதுவரை கையைப் பிடித்துள்ள மாபெரும் செலவுக்கு இன்றும் ஈடாகமாட்டா.

அம்புலியில் மனிதன் முதன் முதலாக அடியெடுத்து வைப்பதால் மனித குலத்திற்கு இனிமேல் வரக்கூடிய நன்மை என்பது தான் மெய்யாகவே எழுப்ப வேண்டிய வினா. கணக்கில் அடங்காத நன்மைகள் விளையினும் விளையும் என்று எதிர் பார்த்தே அமெரிக்கா ஏராளமான பொருளை வாரி இறைத்து, பேராபத்துகளையும் பொருட்படுத்தாமல், துணிந்து இம் முயற்சியில் இறங்குவது நியாயமே என்று கருதுகின்றது. அப்போலோ-11 விண்கலம் புதியதொரு துறையினை, இது காறும் மனிதன் கண்டறியாத ஒன்றைத் துலக்குகின்றது.

நாளிதுவரை மனிதன் பூமியிலேயே அடங்கிக் கிடந்தவன். பூமி மிகப் பெரியது என்பது உண்மையே. எனினும், அதற்கும் வரம்புகள் உள்ளன. தோன்றிய நாள் தொட்டு முடங்கிக் கிடந்த அவன் இந்தப் பூமிக்கு அப்பால் செல்ல இப்போது ஒரு பாலம் அமைக்கின்ருன், முதல் பாலமாகிய இது வலுவற்றதுதான். எனினும், இதனைத் துணைக்கொண்டு இந்தப் பூமிக்கு அப்பால் அடியெடுத்து வைக்கத் துணிந்துள்ளான். அங்குத் தன் உயிர் வாழ்க்கைக்கும் உள்ளத்து. வாழ்க்கைக்கும் அடிப்படையாக என்ன கிடைக்கும் என்று தெரியாமல் துணிவினை மேற்கொண்டுள்ளான்.

தேவை எங்ஙனம் ஆராய்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். அம்புலியில் மனிதன் வாழ்வது என்பது உறுதியாகிவிட்டால் அங்கும் தேவை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்று சந்திர மண்டலத்தைப் பற்றி அறிவியலறிஞர்கட்குப் பல தகவல்கள் தெரியும். இவற்றைக் கொண்டு அவர்கள் மனிதனுக்கு ஏற்படக்கூடிய பல நன்மைகளை அறிவிக்கின்றனர். இந்த அகிலத்தை (Universe) ஆராய அம்புலி ஒரு சிறந்த தளமாக அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அங்குப் பெரிய வானொலி - தொலை நோக்கிகளை நிறுவி இத்தகைய ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்வர். பூமியினின்றும் நோக்கும் பொழுது உள்ள வளி மண்டலத் திரை அம்புலியில் இல்லையாதலின் வான நூல் ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். பூமி, சந்திரன், இதர கோள்கள் இவற்றின் தோற்றத்தைப் பற்றிய புதிய தகவல்கள் - இவ்வாராய்ச்சியால் தெரியவரலாம்.

நமது பூமியில் கிடைக்காத பயனுள்ள கனிவளங்கள் அம்புலியில் இருக்கலாம் என்று நம்பப் பெறுகின்றது. அப் பொருள்களை அகழ்ந்தெடுத்து அம்புலியில் ஒரு பெரிய சுரங்க முகாம் அமைக்கப்பெறலாம், அம்புலியிலிருந்து அக்கனிப் பொருள்களைப் பூமிக்குக் கொணர்வதில் சிரமம் அதிகம் இராது. பூமியின் ஈர்ப்பு ஆற்றலும், பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலமும் பூமியிலிருந்து கிளம்பும் இராக்கெட்டுகட்குத் தடையாயிருக்கின்றன. ஆனால், சந்திரனிலிருந்து பூமிக்கு வருவது ஒப்புநோக்குகையில் மிக எளிதானது.

கதிரவ மண்டலத்தின் பிற கோள்கட்கு நீண்ட நெடுந் தொலைவுப் பயணம் செல்வதற்கு, அம்புலி எதிர்காலத்தில் இடைவெளி நிலையமாதல் கூடும். அவ்விடங்களில் இருக்கக் கூடிய உயிரினங்களுடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அம்புலி வசதியான வாய்ப்புகளை நல்கக் கூடும். விண்வெளி ஆராய்ச்சியின் காரணமாக ஏற்கெனவே சில நன்மைகளை நாம் அநுபவிக்கின்றோம். விண்வெளியில் உலகினை வலம் வரும் தகவல் ஒலிபரப்புச் செயற்கைத் துணைக்கோள்கள், வானிலை ஆராய்ச்சிக்கென அனுப்பப் பெற்றுள்ள செயற்கைத் துணைக்கோள்கள் ஆகியவற்றின் பயனை எத்தனையோ நாடுகள் இன்று அன்றாடம் அநுபவித்து வருகின்றன. இத்தகைய தகவல் ஒலிபரப்புச் செயற்கைத் துணைக் கோள்கள் மூலம் வருங்காலத்தில் முதல் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொடுப்பது சாத்திய மாகலாம்.

அம்புலியின் வளி மண்டலமற்ற சூழ் நிலை சில சிறப்புத் தயாரிப்புகளுக்குச் சாதகமாக அமையும். எடுத்துக்காட்டாக, வாயுக்களின் கலப்படமின்றித் தூய்மையான உலோகங்களைத் தயாரிப்பது எளிதில் கைவரக் கூடியது. இத்தகைய தூய்மையான உலோகங்களைப் பூமியில் தயாரிக்க வேண்டுமானால் செயற்கை முறையில் வெற்றிடத்தை உண்டாக்கி அங்கு இவை தயாரிக்கப்பெறுதல் வேண்டும். நடைமுறையில் இன்று. இம்முறைதான் மேற்கொள்ளப் பெறுகின்றது. சந்திரனில் கிலோ மீட்டர் கணக்கில் வெற்றிடம் காத்துக் கிடக்கின்றது. அங்கு இம் முறையை மேற்கொள்வது எளிதாகின்றது.

விண்வெளியில் நிலவும் எடையற்ற சூழ்நிலையும் சில சிறப்பான தயாரிப்புகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். காமிரா, தொலைநோக்கி, மூக்குக் கண்ணாடி போன்றவற்றில் பயன்படும் வில்லைகளும் {Lenses), உயர் தர நிலைக்கண்ணாடிகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் தூய்மையான நிலையில் தயாரிக்கலாம். பல்வேறு பொறிகளில் பயன்படும் பால் பேரிங் உருளைகளையும் (Ball - bearing Cylinders) அணு அளவும் தரங் குன்றாது உருவாக்கலாம். இதனால் இவை இடம்பெறும் பொறி அமைப்புகள் நீடித்த உழைப்பை நல்கும்.

வளி மண்டலமே இல்லாத அம்புலியில் விண்வெளி உடையின்றி மனிதன் ஐந்து நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது, எனினும், அங்குள்ள மலைகளைக் குடைந்து பெரிய பெரிய குகைகளை உண்டாக்கலாம் என்றும், அவற்றினுள் செயற்கை முறையில் தயாரிக்கப் பெறும் உயிரியத்தை (Oxygen) நிரப்பி வாழலாம் என்றும் அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். காற்று வெளியேறாமல் குகை வாயில்களை மூடிய கதவுகள் காக்கும், அணுவாற்றல் தரும். மூலப் பொருள்கள் அம்புலியில் உள்ளன என்றும், அவற்றைக் கொண்டு மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். அஃது இயலாது போயினும் பகலவன் ஒளியினின்றே மின்னாற்றலை அளிக்கவல்ல மின் கலங்களைத் (Solar batteries} தயாரித்து இந்த ஆற்றலைப் பெறலாம். மின்னாற்றலை இருப்பின் பல தொழிலகங்கள் தோன்றி செயற்படத் தொடங்கிவிடும்.

தொழிலகங்களுள் மிகவும் முக்கியமானது உணவுத் தொழிற்சாலையாக இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். அம்புலியிலுள்ள பாறைகளிலிருந்து உயிரியம், நீரியம் (Hydroger), மந்தவாயு (Nitrogen), கரி, கந்தகம், பாஸ்வரம் போன்றவற்றைப் பிரித்தெடுத்து, பிறகு அவற்றைப் பல்வேறு விகிதங்களில் இணைத்து வேதியியல் முறையில் புரதம், கொழுப்பு, சருக்கரை, மாப்பொருள் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். இதனால் அங்கு உணவுப் பஞ்சமே இல்லாமல் செய்யலாம். சந்திரனில் சுரங்கங்கள் வெட்டி அதன் அகட்டில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளைக் கொணர்ந்து உருக்கித் தண்ணீர்த் தட்டுப்பாடும் இல்லாது செய்யலாம். செயற்கை ஒளியின் கீழ் சில தாவரங்களையும் பயிர் செய்யலாம்.

மருத்துவத் துறையிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பலவீனமான இதயம் படைத்தவர்கள் சந்திர மண்டலத்தில் சுகமாக வாழலாம். ஏனெனில், அங்கு ஈர்ப்பு ஆற்றல் குறைவானதால் உடலுக்கு அதிகமான ஆயாசம் ஏற்படுவதில்லை. ஆயினும், சந்திரனைச் சென்றடையும் பயணத்தைத் தாங்குவது பலவீன இதயம் படைத்தவர்கட்குச் சாத்தியமா என்பதுதான் ஐயத்திற்கு இடமாக உள்ளது! நாளடைவில் மனித குலத்திற்கு என்னென்ன நன்மைகள் விளையக்கூடும் என்பதை முன் கூட்டியே யாவர் தாம் அறிதல் கூடும்?

அம்புலித் தரையில் விண்வெளி விமானிகள் சிறிது. நேரமே தங்குகின்றனர். அக்குறுகிய காலத்தில் அவர்கள் சேகரிக்கும் அறிவியல் தகவல்கள் அந்தப் பாழ்வெளியில் அடங்கிக் கிடக்கும் அறிவுக் களஞ்சியத்தின் 'கைம்மண் அளவே'யாகும். இதன் பின்னர் அம்புலிக்குச் செல்வோர் இன்னும் அதிக நேரம் அங்குத் தங்குவர் ; மேலும், பல சிக்கலான சோதனைகளை மேற்கொள்வர். அண்மையில் மேற்கொள்ளப் பெற்ற அப்போலோ-12 பயண விண்வெளி வீரர்கள் ஏழு மணிநேரம் அங்குத் தங்கினதையும் அணுவாற்றலால் இயங்கக்கூடிய பல பொறியமைப்புகளை நிறுவி வந்ததையும் கண்டோம். வருங்காலத்தில் இத்தகைய கருவி அமைப்புகளும் நுட்பங்களும் இன்னும் செம்மையுறும் என்பதற்கு ஐயமில்லை. இன்று நாம் ரைட் சகோதரர்கள் பறந்து சென்ற பொறியை எங்ஙனம் கருதுகின்றோமோ, அங்ஙனமே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து அப்போலோ-11 கருதப்பெறும் என்பது எள்ளளவும் மிகையாகாது.

ரைட் சகோதரர்களின் அன்றைய சாதனையும் விமான அகத்தின் தோற்றமுமே இன்றைய விண்வெளிப் பயண வாய்ப்பினை நல்கியுள்ளன. பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தான் மனிதன் சின்னஞ்சிறு செயற்கைத் துணைக்கோள்களால் விண்வெளிக்குக் கை நீட்டினான். எட்டு ஆண்டுகட்கு முன்னரே முதன்முதலாக அவன் விண்வெளிக்கு நேரில் சென்றான், அப்போது அவன் சென்ற தொலைவெல்லாம் பூமியின் வளி மண்டலப் போர்வைக்குச் சற்று மேலாகத்தான். ஆனால், இன்று மனிதன் அம்புலித் தரையில் நிமிர்ந்து நிற்கும் நிலைக்கு ஆயத்தமாகியுள்ளான். இதனால் என்னென்ன விளையும் என்பது எவரும் அறியாத புதிராகவே உள்ளது. அப்போலோ-10 விண்வெளிக் கலத்தின் தலைமை விமானி தாமஸ் ஸ்டாஃபோர்டு கூறிய கருத்து இவ்விடத்தில் சிந்தித்தற்குரியது. அவர் கூறியது: "இனி நாம் எவ்வளவு தூரம் முன்னேறப் போகின்றோம் என்பது உங்கள் கற்பனையைப் பொறுத்தது. ஆனால், நாம் நம் ஆற்றல்களை யெல்லாம் ஒருங்கு திரட்டி நம் பார்வையைச் சரியானபடி செலுத்தினோமாயின், குறிக்கோளுக்கு எல்லையே இல்லை“ என்பது.

ஆதியில் நமது பூமியில் ஆராய்ச்சிப் பயணங்களை மேற்கொண்டவர்களும் இதே கருத்தினைக் கொண்டவர்களாகவே இருந்திருத்தல் வேண்டும் கொலம்பஸ், மெகல்லன், டயஸ், வாஸ்கோடகாமா ஆகிய - எல்லாருமே எப்படியாவது மனிதனுடைய நிலைமை முன்னேறும் என்ற ஆவலாலும் நம்பிக்கையாலும் உந்தப் பெற்றவர்களேயாவர். அவர்கள் காலத்திலும் உலகில் வறுமையும் வளர்ச்சிக் குறையும் வாட்டத்தான் செய்தன. எனினும், அவர்கள் எட்டிய பார்வையுடன் துணிந்து முயன்றனர் ; வெற்றியும் கண்டனர். இன்றைய ஆராய்ச்சிப் பயணமும் அப்படித்தான் அமையும்.

மனிதன் தான் விரும்பும் பொருள்களையும், தனக்குத் தேவைப்படும் வளங்களையும் இப் புவியில் அடையாவிடினும் விரிந்து பரந்த விண்வெளியிலாவது கண்டடையலாம். அவற்றையெல்லாம்விடச் சிறந்ததொரு பயனையும் அவன் பெறுதல் கூடும். இறுதியில் நமக்கு உறைவிடமாகக் கூடிய இந்த அகிலத்தில் என்றென்றும் மாறாத சகோதரத்துவத்துடன் அமைதியாகவே வாழவேண்டும் என்ற உணர்வுதான் அப் பயனாகும்.

அம்புலியைச் சென்றடைவது என்பது ஒரு தொடக்க திலைச் செயலேயாகும். அம்புலியை விண்வெளியின் தலை வாசல் என்று தான் கருதுதல் வேண்டும். மனிதன் எதிர் காலத்தில் அம்புலிக்கும் அப்பாலும் செல்வான். அணு வாற்றலைப் பயன்படுத்தும் விண்கலத்திலோ அல்லது கதிரவன் ஒளியையே ஆற்றலாக மாற்றிப் பயன் படுத்தும் விண்கலத்திலோ இவர்ந்து செல்வான். நாம் ஒருகால் காணாவிடினும், அடுத்த தலைமுறையினராவது செவ்வாய்க்கோளில் அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி நிலையங்களை நிறுவியிருப்பதைக் காண்பர். வழிவழி வரும் வருங்கால சந்ததியினர் அறிவியலாரின் அறிவாற்றலையும் அறிவியல் வளர்ச்சியினையும் நினைந்து வியந்து போற்றுவர். மேலும்,

"சாட்டி நிற்கும் அண்டமெலாம்
சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து
அண்ணலார்[2]

என்று கவிஞன் போற்றிப் புகழ்ந்துரைப்பது போலவே அவர்களும் இந்த அகிலத்தின் இயக்கத்துடன், அண்டம், பேரண்டம், எல்லையற்ற பிரம்மாண்டம் இவற்றின் இயக்கத்திற்கே அதிபதியாக விளங்கும் ஆண்டவனின் 'அலகிலா விளையாட்டுக்களை' எண்ணி எண்ணி அடக்கமும் பெறுவர்.


  1. 1 மில்லியன் என்பது பத்து இலட்சம்; 1 டாலர் என்பது நம் ரூபாய் மதிப்பில் சுமார் ஏழு ரூபாய்.
  2. குற்றாலக் குறவஞ்சி - செய். 107,