அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/326-383
322. மதங்களால் மநுக்கள் கேடடைவதுபோக மதங்களால் தேசமும் கேடடையும் போலும்
நமது அயர்லாண்ட் தேசமானது கருணையும் நீதியுமமைந்த பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டதேயாம். அத்தேசத்தோர் ஒரே சாதியினரும் ஒரே பாஷையினருமாவார். மதத்திலோ கிறீஸ்துவையே தொழும்படியான ஒரே மதத்தினராயினும் பிரிவினையால் கத்தோலிக்குமதத்தினரென்றும் புரோட்டிஸ்டான்ட் மதத்தினரென்றும் இருவகுப்புண்டு. அப்பிரிவினைச் செயலோ கத்தோலிக்க குருக்கள் விவாகஞ் செய்துக்கொள்ளலாகாது, விக்கிர ஆராதனை செய்ய வேண்டுமென்பது. பிராட்டிஸ்டெண்டு குருக்கள் விவாகஞ் செய்துக் கொள்ளலாம், விக்கிரகாராதனைச் செய்யலாகாதென்னும் இதுவே பிரிவினையன்றி பொதுவில் கிறீஸ்தவர்களென்றே அழைக்கப்படுவார்கள். அத்தகைய தேசத்தோரொன்று கூடி சுயராட்சியம் பெற வேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் பிரிட்டிஷ் அரசாட்சியோருக்கு விண்ணப்பம் அனுப்பி கேட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியோரும் அவ்விண்ணப்பத்தின் மீது அன்புபாராட்டி, சுயராட்சியங் கொடுக்கும்படியான நல்லெண்ணமுங் கொண்டார்கள். அவற்றை அறிந்த கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களிற் சிலர் முன்வந்து அயர்லாண்டு தேசத்திற்கு சுயராட்சியங் கொடுக்கப்படாது என்றெழும்பி மறு விண்ணப்பங்களனுப்பவும் கலகத்திற்கான படைகளைக் கூட்டமுயன்றுவிட்டதால் ஒரே சாதியோரும் ஒரே பாஷையைப் பேசுவோரும் ஒரே கிறீஸ்துவை நம்பினோருமாய தேசத்தோர் சீர்திருத்தமுற்று சுயராட்சியங் கேட்கின்றபடியால் அதை அளிக்கவேண்டுமென்னும் நல்லெண்ணங்கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாரோ பெரும் பரிதாபமும் கவலையும் உற்றிருக்கின்றார்கள்.
மதப்பற்றினாலும் மதவைராக்கியத்தினாலும் உண்டாகுங் கேடுபாடுகள் தேசத்தைப் பாழ்படுத்துவதுடன் தேசமக்களையும் பாழ்படுத்தி சீரழிக்கும் போல் காண்கின்றதே. ஒரு சாதியும் ஒரு பாஷையுமுள்ளக் குடிகள் சுயராட்சியம் பெற்று தங்களுக்குள் தாங்களே தேசத்தை ஆண்டுக் கொள்ளுவதால் காது கேடோ விளங்கவில்லையே. பிரோட்டிஸ்டான்டு மதத்தர் பெரும்போலோர் சுயராட்சியம் பெற்றுக் கொள்ளுவார்களாயின் கத்தோலிக்கு மதத்தருக்கு இடுக்கணுண்டாமென்னுஞ் சங்கையோ, அத்தகைய சங்கையுள்ளோர் இதுகாரும் எம்மதத்தோர் அரசாட்சியின் கீழ் வாழ்க்கை புரிந்தார்கள். அக்காலத்தில் ஏதேனும் இடுக்கணுண்டாயுள்ளதா இல்லையே. அக்காலத்தை ஒத்தே சுயராட்சியம் பெற்றுத் தங்கள் வாழ்க்கை புரியலாகாதா. யாதார்த்தத்தில் கிறீஸ்துவைப் பின்பற்றியவர்களாயின் கிறீஸ்தவர்களின் சேர்க்கையையும் கிறிஸ்தவர்களின் அரசாட்சியையும் மறுப்பரோ, ஒருக்காலு மறுக்க மாட்டார்கள். தங்கள் மதமே மதமென்னும் பற்றும் தங்கள் மதத்தோருக்கு மாறுபட்டச் செயலுள்ளோர் சுயராட்சியம் பெறலாகாதென்னும் மதவைராக்கியமேயாம். இதனாலன்னோர் மதபக்தி பரமன் பக்தியாகக் காணாது, பணபக்தியாகவே விளங்குகின்றது. இதுவே மதக்கடைபரப்பி சீவிப்போர் செயலை மதிக்க விளக்குவதாகும். அயர்லாண்டார் சுயராட்சியத்திற்கு முயன்று காரியங் கூடி வருங்கால் அதனை மறுக்கத்தோன்றிய கட்சியார் ஆதியிலேயே தோன்றி மறுத்து வேண்டிய உள்சீர்திருத்தங்களைச் செய்துக்கொள்ளலாகாதா. அக்காலத்தில் விடுத்து காரியங் கூடிவருங்கால் தடுப்பதினால் தேசத்தோருக்குள்ளாகவே கட்சி பிரிதிகட்சிகள் தோன்றி கலகத்திற்கே ஏதுண்டாகிப்போமன்றோ. அக்காலத்தை அடக்குதற்கு பிரிட்டிஷ் ஆட்சியார் முயலுவதாயின் யாரை ரட்சித்து யாரை சிட்சிப்பார்கள். இருவரையும் சமாதானம் படுத்தி பழையநிலையில் தேசத்தை ஆளவேண்டியதே அவர்கள் செயலாகும். ஒரே பாஷை ஒரே சாதியானோர் சொற்ப மதபோதச் செயலால் இருகட்சியாகப் பிரிந்து பெருங்கலகத்திற்கே ஏதுவாயிருக்க இவ்விந்திய தேசத்தில் பலசாதி, பலபாஷை பலமதங்கள் நிறைந்திருக்க இவர்களுள் எச்சாதி எப்பாஷை எம்மதத்தினர் சுயராட்சியம் விரும்பி நிற்கின்றார்களோ தெரியவில்லை ஒரே சாதி ஒரே பாஷையினர் மதமென்னும் பற்றினால் இருகட்சியோராய்ப் பிரித்து பல தொல்லைகட்குட்பட்டு அவதியுருவது உலகப்பிரசித்தம். மதப்பற்று ஒன்றுமட்டிலுமுள்ளவர்களுக்கு சுயராட்சிய முநிவால் கவலையுங் கலகமுந் தோன்றுவதாயின், மதப்பற்று சாதிப்பற்று இரண்டும் நிறைந்துள்ள தேசத்தில் சுயராட்சியங் கேழ்க்கவுந் துணியுண்டோ , ஆகாவாம். அவ்வகைவீண் முயற்சியாலும் பேராசையாலும் இத்தேசத்தோரிற் சிலர் கூடி சுயராட்சியங் கேட்க முயலினும் பிரிட்டிஷ் ஆட்சியார் அவர்களது வீண் கூச்சலுக்கிணங்கப் போமோ, இணங்கவே யாகாவாம். காரணம் யாதெனில் மதப்பற்றினும் சாதிப்பற்றை வற்புறுத்தி நிற்பவர்கள் இத்தேசத்தோர் ஆதலின் இப்பொய்யாய் சாதிப்பற்று கட்டோடொழியுமாயின் மதப்பற்றுக்கள் யாவும் அன்றே ஒழிந்துபோம் அக்காலத்தேசமும் தேசமக்களும் சுகச்சீர் பெறுவதுடன் சுயராட்சியமென்னும் எண்ணமும் அக்காலுதிக்கில் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சற்று கண்ணோக்கிப் பார்ப்பார்கள். அங்ஙனமின்றி சாதியும் இருத்தல் வேண்டும் மதமுமிருத்தல் வேண்டும் சுபராட்சியமும் வேண்டுமென்பராயின் அம்மொழியை பிரிட்டிஷ் ஆட்சியார் செவிகளில் ஏற்கவே மாட்டார்கள். ஆதலின் எத்தேச எப்பாஷைக்காரராயினும் பொதுவாய ராஜாங்கம் விரும்புவோர் மதப்பற்றையும் சாதிப்பற்றையும் ஒழிக்கும் வழிகளை முதலாகக் கூட்டங்கள் கூடி தேடிக் கொள்ள வேண்டியதே அழகாம்.
- 7:44; ஏப்ரல் 8, 1914 -