அயோத்தியா காண்ட ஆழ்கடல்/உலகியல் உண்மை முத்துகள்

2. உலகியல் உண்மை முத்துகள்


ல்வியில் பெரியவராகிய கம்பர், ஏட்டுக் கல்வி யோடு நின்று விடாமல், உலகியல் உண்மைகளை நிரம்ப அறிந்துள்ளார். உலகில் மக்களின் ஒழுகலாறு உள்ள நிலைமையை அப்படியே ஓவியப்படுத்திக் காட்டியுள்ளார். அயோத்தியா காண்டத்தில் அவர் கையாண்டுள்ள இந்தக் கலைக் கூறு அமைந்துள்ள முத்தான சில இடங்களைக் காணலாம்:—

மந்திரப் படலம்

உள்ளம் நோக்கியோ?

உலகில் பெருஞ் செல்வரையோ, பெரிய பதவியாள ரையோ சிலர் 'காக்கா’ பிடிப்பதாகச் சொல்லும் வழக்காறு ஒன்று உண்டு. அந்தப் பெரியவர்கள் என்ன சொன்னாலும்- ஏன்- வெள்ளைக் காகம் ஒன்று பறந்தது என்று சொன்னாலும், ஆம்- பறந்திருக்கலாம்- இரண்டு காகங்கள் கூடப் பறந்திருக்கும் என்று கூறி அவர்களின் உள்ளத்திற்கு மாறுபடாமல் சிலர் நடந்து கொள்வர். பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளோடு வாளாவாயினும் கொஞ்சுவர்- அவர்கள் என்ன சொன்னாலும், ஆம் ஐயா, (Yes Sir- ஆங்கிலம்)- (Oui Monsieur- பிரெஞ்சு) என்று 'ஆமாம் சாமி'களாகத் 36 - சுந்தர சண்முகனார்

தலையாட்டுவர். இஃது ஒர் உலகியல் உண்மை. இனிக் கம்பரிடம் வருவோம்.

தயரதன் சிற்றரசர்களையெல்லாம் அழைத்து, யான் இராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன்; உங்கள் கருத்து என்ன என்று வினவினான். அவர்கள் அனைவரும் அப்படியே ஆகுக என்று தம் ஒப்புதலை அளித்தனர். பின்னர் தயரதன் அவர்களை நோக்கி, யான் என் மகன் மேல் உள்ள பற்றினால் இதைக் கூறினேன். நீங்கள் உடன்பட்டுக் கூறிய உயர்ந்த கருத்து, உண்மையிலேயே மகிழ்ச்சியால் கூறியதா? அல்லது, என் உள்ளம் நோகக் கூடாது- என்று கருதி என் உள்ளத்தின் நிறைவுக்காகக் கூறியதா அல்லது, இது தக்கதே என்று கருதிக் கூறியதா என்று வினவினான்.

மகன்வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம் உவகையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ தகவென நினைந்ததோ தன்மை யாது என்றான்

(78)

என்பது பாடல். இங்கே, உள்ளம் நோக்கியோ' என்பது ஒர் உலகியல் உண்மையாகும்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

விளையாட்டும் வினையும்

'விளையாட்டு வினையாயிற்று' என்று கூறுவது ஒர் உலகியல். கூனி மந்தரை கைகேயியின் மனத்தை மாற்றுவதற்காகக் கைகேயியின் மாளிகையை அடைந்தாள். சினத்தோடும் மடித்த வாயோடும், இராமன் சிறுவனாயிருந்தபோது மண்ணுருண்டையை வில்லினால் முதுகில் அடித்ததற்குப் பழிவாங்கும் எண்ணத்தோடும் கூனி சென்றாளாம். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 37

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில்மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்

(49)

என்பது பாடல். பழிவாங்க எண்ணுபவர்கள் வாயை மடிப்பது இயற்கையான ஓர் உலகியல் உண்மை. பழிக்குப் பழி வாங்க நினைப்பதும் உலகியல். இங்கே விளையாட்டு வினையானதை அறியலாம்.

செல்வமும் மன மாற்றமும்

கூனி கைகேயின் மனத்தை மாற்றப் பின்வருமாறு கூறுகிறாள்: இப்போது இராமன் உ ன் னி ட ம் அன்புடையவன்போல் காணப்படுகிறான்; ஆனால் அவன் முடிசூடிக் கொள்ளின் மனம் மாறி, தன் மனைவியையும் தன் தாயையுமே பொருட்படுத்துவான்; உன்னைப் புறக்கணித்து விடுவான்; இது உலகியல். அருள் நிரம்பிய தவசிகள் கூட, பெரிய செல்வம் பெற்றுவிடின் மனம் மாறி விடுவர்- என்று கூறிக் கலைக்கிறாள்.

அறன் நிரம்பிய அருளுடைய அருந்தவர்க் கேனும் பெறலரும் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் (78)

என்பது பாடல் பகுதி. இங்கே, இரண்டு பாடல்கள் நினைவு கூரத் தக்கன.

ஒன்று:- பெரிய செல்வம் என்னும் பிணி வந்துவிடின், செல்வர்க்குத் தம்முன் நிற்கும் பழைய நண்பர்கள் உறவினர்கள் முதலியோரை ஏறிட்டுப் பார்க்க முடியா வண்ணம் கண்ணொளி மழுங்கிவிடும். இதற்கு மருந்து (மருத்து) உண்டா எனில், வாகடத்தில் (மருத்துவ நூலில்) சொல்லப்படவில்லை; இந்நோய் தீர்தற்கு மருந்துதான் யாதோ எனில், மீண்டும் தரித்திரம் (வறுமை) என்னும் மருந்து அவரைச் சாருமாயின், கண்ணொளி தெளிவாகி விடும்- என்னும் கருத்துடைய தனிப்பாடல் 38 - சுந்தர சண்முகனார்

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின் உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத்து இலை
தரித்திரம் என்னுமோர் மருந்தின் தீருமே

'

என்பது அப்பாடல். இரண்டாவது பாடல், தேவராசப் பிள்ளை இயற்றிய குசேலோபாக்கியானம் என்னும் நூலிலிருந்து ஈண்டு தரப்படும். அப்பாடலின் கருத்து:"அற்பர்கள் மதிக்கும் செல்வம் மிகுதியாகச் சேர்ந்துவிடின், சிலர் செருக்கு கொண்டு, வாயிருந்தும் மற்றவரோடு பேசாமல் ஊமையராய் விடுகின்றனர். சிலர், செவி இருந்தும், செல்வம் இல்லாத மற்றவர் சொல்வதைக் கேட்காமல் செவிடராகிவிடுகின்றனர். சிலர், கண்கள் இருந்தும், எளியோரை ஏறிட்டும் பார்க்காமல் குருடராகி விடுகின்றனர்.

சிறியரேம் மதிக்கும் இந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறிய புன்செருக்கு முடி வாயுளார் மூக ராவர். பறியணி செவியுளாரும் பயில்தரு செவிட ராவர் குறியணி கண்ணு ளாரும் குருடராய் முடிவ ரன்றே

என்பது பாடல். இந்த உலகியல் உண்மையைக் கூனி. கைகேயினிடம் கூறினாள்.

கைகேயி சூழ்வினைப் படலம்

வஞ்சனை மாதர்

பெண்கள் சிலரால் குடும்பத்தில் பல கோளாறுகளும் வஞ்சகப் போக்கும் அரக்கத்தனமும் நிகழ்வதால், தக்க பெரியோர் சிலர், பெண்களை வஞ்சகக் கோலம் உடையவர்கள் எனக் கருதி, அவர்களின் ஒத்துழைப்பை நாடமாட்டார்கள்- என்னும் கருத்தை, கைகேயி தயரதனது வேண்டுகோளுக்கு இணங்காததைக் குறிப்பிடும்போது கூறியுள்ளார்:
அயோத்தியா காண்ட ஆழ் கடல்
) 39

வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சென மாதரை உள்ள லார்கள் தக்கோர்

(21)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்துப் பெண்கள் சிலர் குடும்பங்களில் குழப்பம் விளைவிப்பதைக் காணலாம். ஆனால், பெண்ணுரிமை பேசும் இந்த நாளில் இந்தக் கருத்து எடுபடாது.

ஏகுமின் ஏகுமின் !

ஒரு பெருவிழாவில் தெருவில் மக்கள் மிகுதியாக நெருக்கமாகக் கூடிவிடின், பின்னால் இருப்பவர்கள் முன்னால் இருப்பவர்களை நோக்கிச் செல்லுங்கள் செல்லுங்கள் (ஏகுமின்) என்று சொல்வதும், ஆனால் யாரும் நகர முடியாதபடித் தேங்கித் தெருவின் நடு நடுவே அப்படியே நின்றுகொண்டிருப்பதும், முன்னால் போகமுடியவில்லையெனில், வந்த வழியே பின்னாலே யாவது போகலாம் எனின், அதற்கும் முடியாமல் கூட்டம் நெருக்கிக் கொண்டிருப்பதும் உலகியலில் உண்டு. இராமனது முடிசூட்டு விழாவைக் காணலாம் என்று வந்த மகளிர் கூட்டமும் மைந்தர் கூட்டமும் இதே நிலையில் இருந்தனவாம்.

பாகியல் பவளச் செவ்வாய் பணை முலை பறவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும்
ஏகுமின் ஏகுமின் என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம்

(72)

வாய் புதைத்தல்

உயர்ந்தவர்களிடம் மற்றவர் பேசும் போது -ஏதாவது சொல்லும் போது, வணங்கி, கையால் வாயைப் பொத்திக்கொண்டு மெதுவாய்ப் பேசுதல் உலகியல். இவ்வாறே சுமந்திரன் இராமனிடம் பேசினானாம்: குன்றிவர் தோளினானைத் தொழுது வாய் பொத்திக் கூறும் (84)

என்பது பாடல் பகுதி. 

சுமந்திரன் இராமனிடம் வாய் பொத்தி நின்றது போலவே, இராமனும் கைகேயினிடம் ஒரு கையால் வாய் பொத்திக் கொண்டும் மற்றொரு கையால் நீண்டு தொங்கும் உடையைச் சிறிது மடக்கிக் கொண்டும் நின்றானாம்.

சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டுகின்றான்

(108)

என்பது பாடல் பகுதி.

நகர் நீங்கு படலம்

கையால் தைவரல்

சோர்ந்து கிடப்பவரை, அவருக்கு நெருக்கமானவர் வந்து உடம்பையும் முகத்தையும் இரு கால்களையும் கைகளால் தடவிக் கொடுத்தல் சோர்வை நீக்க முயலும் ஒரு செயலாகும். சோர்ந்து கிடந்த தயரதனைக் கோசலை இவ்வாறு தடவிக் கொடுத்தாளாம்.

என்றென்று அரசன் மெய்யும் இருதாள் இணையும் முகனும்
தன்தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள வண்திண் சிலைநம் குரிசில் வருமே வருமே என்றான்

<
(70)

என்பது பாடல். மகனது பிரிவால் ஒன்றும் புரியாமல் மயங்கிக் கிடக்கும் தயரதன், கோசலையை நோக்கி, நம் மகன் இராமன் மீண்டு வருவானா- வருவானா என்று கேட்டானாம். இவ்வாறு, துயரத்தின்போது குழந்தை நிலையை அடைந்து விடுதல் உலக இயல்பு அன்றோ?

கைவிடுவேம்

தலைவனே தவறு செய்தால், கீழிருப்பவர்கள், அந்த ஆளே அப்படிச் செய்யும் போது நமக்கு மட்டும் அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 41

என்னாடா- அடித்துத் தள்ளுங்கடா- என்று பேசிக் கொள்வது உலகியலில் சிலரிடையே உண்டு. இதுபோல், அயோத்தி மக்கள், தயரதனே அறத்தைக் கைவிட்டு இராமனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டான். இனி நாமும் அறத்தைக் கைவிடுவோம்- என்று பேசிக் கொள்கிறார்களாம்.

ஆஆ. அரசன் அருள் இலனே ஆம் என்பார்;
காவா அறத்தை இனிக் கைவிடுவேம் யாம் என்பார்

(95)

என்பது பாடல் பகுதி.

காக்குநர் காமின்

ஓரிடத்தில் ஒரு கொடுமை நிகழின், அதைப் பொறுக்க முடியாத ஒருவர், யான் இப்படி யெல்லாம் என்னென்னவோ செய்யப் போகிறேன்; என்னைத் தடுப்பவர் தடுக்கட்டும் பார்க்கலாம்- என்று கூறுவது உலகியலில் உண்டு. இராமன் முடி இழந்ததைப் பொறாத இலக்குமணன், யான் எதிர்ப்பவர் அனைவரையும் கொன்று வென்று இராமனுக்கு முடி சூட்டுவேன். என் செயல் நிகழாமல் காப்பவர் காக்கட்டும் பார்க்கலாம்- என்று முழங்கு கிறான். பாடல்:

புவிப்பாவை பரம்கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்து அவர் ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், இன்றே என் கோவினைக் கொற்ற மெளலி
கவிப்பானும் கின்றேன் இது காக்குநர் காமின் என்றான்

(117)

வாய் தந்தன

சீற்றம் கொண்ட ஒருவன் கண்டபடி ஏதாவது பேசினால், மற்றவர், நீ வாயில் வந்தவை யெல்லாம் பேசலாமா என்று கண்டிப்பது உலகியல். இலக்குமணனின் சீற்ற உரையைக் கேட்ட இராமன், 42 - சுந்தர சண்முகனார்

ஐய! நின் தன் வாய்தந்தன கூறுதியோ? (131)

என்றான்.

நெடிது நிற்கின்றான்

நீடு காடு வர வேண்டா என்று தடுத்த இராமனை நோக்கி நான் வரத்தான் போகிறேன் என்று மன்றாடிய இலக்குமணனை அவ் இராமன் மறுத்துக் கூற முடிய வில்லை; இலக்குமணனது முகத்தை நோக்கி நோக்கிக் கண்களினின்றும் நீரைக் கொட்டிச் செய்வதறியாது திகைத்து அப்படியே நின்றுவிட்டான். இது ஒருவகை உலகியல். பாடல்:

உரைத்தபின் இராமன் ஒன்று உரைக்க உன்னிலன் வரைத் தடங் தோளினான் வதனம் நோக்கினான் விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்கநீர் நிரைத்து இடை இடைவிழ நெடிது நிற்கின்றான்

(156)

மறந்தனர்- அறிந்திலர்

நிலைமையில் குழப்பமான துன்பச் சூழ்நிலை ஏற்பட்டபோது, தாய்மார்கள் குழந்தைகளையும் மறந்து கவனிக்காமல் துன்பத்தில் தோய்ந்து மூழ்கியிருப்பதும், தாய்மார்கள் போன இடம் அறியாமல் குழந்தைகள் திகைத்து அழுவதும் உலகியல். இராமனுக்கு முடியில்லை என்றதை அறிந்ததும், மாதர்கள் மக்களை மறந்தனராம்; பிள்ளைகள் தாயர் இருக்குமிடம் அறியாமல் திகைத்தனராம். பாடல் பகுதி:

மக்களை மறந்தனர் மாதர் தாயரைப்
புக்க இடம் அறிந்திலர் புதல்வர்...

(196}

முன்- பின் செல்லல்

கணவனும் மனைவியும் தெருவில் செல்லும் போதோ அல்லது வேறு எங்கேனும் நடந்து செல்லும் போதோ ஆடவனாகிய கணவன் முன் செல்வதும், பெண்ணாகிய அயோத்தியா காண்ட ஆழ் கடல் 43

மனைவி கணவனின் பின் செல்வதும் இயற்கை. (பணக்காரப் பெண் வீட்டில் வாழ்க்கைப் பட்டுவிட்ட மாப்பிள்ளை வேண்டுமானால் பெண்ணுக்குப் பின் சென்றாலும் செல்லலாம்).

அம்பிகாபதி கோவை என்னும் நூலிலே ஆணும் பெண்ணும் முன்பின் செல்லல் ஒரு வேடிக்கையாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. ஒரு பாலை நிலச் சுரத்தைக் கடக்கும் போது, தலைவன் பின்னே தலைவி சென்றாளாம். ஆனால் முன் செல்வதை நிறுத்தி, தலைவியின் இடை அழகைக் கண்டது போலவே நடையழகையும் காண வேண்டும் என தலைவியின் பின் சென்றானாம். தலைவியோ, தலைவனுக்கு முன் செல்ல நாணிப் பின் சென்றாளாம்- ஒருவர்க் கொருவர் பின்னால்பின்னால் சென்று கொண்டிருந்தால் நிலைமை என்னாவது?

இந்த முறையினால், புதுச்சேரிக்குத் தெற்கேயுள்ள கடலூருக்குச் செல்லப் புறப்பட்டவர்கள், கடலூருக்குச் செல்லாமல், புதுச்சேரிக்கு வடக்கேயுள்ள மரக்காணத்தைச் சென்றடைவர். இவர்கள் கடலூர் செல்ல வேண்டு மெனில், மரக்காணம் பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் பின் ஒருவர் சென்றால்தான் கடலூரை அடைவர். இது ஒருவகை நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. இனி அம்பிகாபதி கோவைப் பாடலைக் காணலாம்:

முன்செல்ல நாணும் முகிழ்நகை வல்லி முருகனிவன் - பின்செல்ல எண்ணும் பிடிகடை காண. (179) என்பது பாடல் பகுதி. முகிழ் நகைவல்லி = முல்லை மொக்குப் போன்ற பற்களையுடைய தலைவி. முருகனிவன் = முருகனைப் போன்ற தலைவன்.

சிலர் முன்னும் பின்னுமாகச் செல்லாமல் இணை யாகக் கைகோத்துக் கொண்டு செல்வர். (ஒருவர் இன்னொருவரை விட்டு ஒடிவிடாமல் இருப்பதற்காகக் 44 - சுந்தர சண்முகனார்

கையைப் பிடித்துக் கொண்டு செல்லவில்லை. காதல் மிகுதியால் அவ்வாறு செல்வர்.)

இனிக் கம்பனிடம் வருவோம்: இராமனுக்கு முன்னே காவலாக இலக்குமணன் செல்ல, இராமனுக்குப் பின்னே சீதை சென்றாளாம். அப்படியென்றால், சீதைக்கு முன்னே இராமன் செல்ல, இராமனுக்குப் பின்னே சீதை சென்றாள் என்பது கருத்து. இது முறையான உலகியல் அமைப்பு. இந்தக் காட்சியைத் தெருவில் கண்ட ஊரார் மிகவும் வருந்தினராம். பாடல்:

சீரை சுற்றித் திருமகள் பின்செல
முரி விற்கை இளையவன் முன்செல
காரை ஒத்தவன் போம்படி கண்டஅவ்
வூரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?

(230)
சுமந்திரன் மீட்சிப் படலம்

முலை வருடலும் அங்கை அணையும்

இராமனை நகருக்கு அழைத்துவரச் சுமந்திரனுடன் காட்டிற்குச் சென்ற மக்கள் வழியில் ஒர் இரவில் ஒரு சோலையில் தங்கித் தூங்கினர். இளைய சில பெண்டிர், தம் முலையைக் குழந்தை தடவிக் கண்டு சுவைத்துக் கொண்டிருக்கத் தாம் தூங்கிக் கொண்டிருந்தார்களாம்.

சிலர் கையையே தலையணையாக மடித்து வைத்துக் கொண்டு உறங்கினராம். இவையெல்லாம் உலகியல் அன்றோ? பாடல் பகுதிகள்:

மகவு முலை வருட இளமகளிர்கள் துயின்றார் (15)

அங்கை அணையில் பொலிவழுங்க முகமெல்லாம் பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார் (16)

முலை வருடல் = முலையைத் தடவுதல். கம்பர், கையாகிய அணையில் துயின்றார் எனக் கூறவில்லை. "அங்கை அணை' என்றே கூறியுள்ளார். அங்கை அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 45

(அகங்கை) என்றால் உள்ளங்கை. கையை மடித்து முழங்கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு, அகலமாக உள்ள உள்ளங்கையை விரித்து வைத்துக் கொண்டு, அந்த உள்ளங்கையின் பரப்பில் தலையை வைத்துக் கொண்டு தூங்கினர் என்னும் பொருளில் அங்கை அணை' என்றுகூறியிருப்பதில் உள்ள நயம் சுவைக்கத் தக்கது.

'தயரதன் மோட்சப் படலம்'

உரையாமையும் காணாமையும்

துன்பச் செய்தியைச் சொல்ல மனம் வராமல் பேசா திருத்தலும், துன்பச் சூழ்நிலையைக் காணப் பொறாமல் அப்பால் நகர்தலும் உலகியற்கை. இராமன் திரும்ப வில்லை என்பதைத் தயரதனிடம் சொல்ல மனம் வராமல் வசிட்டன் பேசாதிருந்தானாம்; பின்னர்த் தயரதன் நிலைமையை அறிந்ததும் சோர்ந்து கிடைப்பதைப் பார்க்க மனமின்றி அங்கிருந்து அகன்றானாம். பாடல்:

இல்லையென் றுரைக்க லாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்;
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் சொல்லலும் அரசன் சோர்ந்தான்; துயர்உறு முனிவன் நானில்
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்குகின்றகலப் போனான் (11)

உயிர் வரல்

மக்கள் ஒரு துன்பத்தால் வருந்திக்கொண்டிருக்கையில் அத்துன்பம் நீங்கியதும், அப்பா இப்பொழுதுதான் உயிர் வந்தது' என்று கூறுவது உலகியல். சுமந்திரனுடன் சென்று ஊர் மக்கள் காட்டில் உறங்கிக் கொண்டிருக்கை யில், இராமன் வர மறுத்ததால் சுமந்திரன் அயோத்தி நோக்கித் தேரை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டான். விழித்துப் பார்த்த மக்கள், நகர் நோக்கிச் சென்றதன் அடையாளமாகிய தேர்ச் சுவடைக் கண்டு, இராமன் 46 () சுந்தர சண்முகனார்

அயோத்திக்குச் சென்றுவிட்டான் என எண்ணி, இப்போதுதான் உயிர் வந்தவர்களானார்களாம். முகிலும் கடலும் ஒருசேர ஒலித்தாற்போல ஆரவாரித்தார்களாம். பாடல்:

தேரின் சுவடு நோக்குவார்; திருமா நகரின் மிசைத் திறிய
ஊரும் திகிரிக் குறி கண்டார்; உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்;
ஆரும் அஞ்சல் ஐயன்போய் அயோத்தி அடைந்தான் என அசனிக்
காரும் கடலும் ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது
(ஆர்த்தார்

(33)
கங்கைப் படலம்

மனையின் நீங்கிய மக்கள்

பிள்ளை, பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஒடிவிடின், பெற்றோர் நாடோறும் பிள்ளையை நினைந்து நினைந்து காணாது தேடிக் கொண் டிருப்பார்கள். அந்தப் பிள்ளை திரும்ப வந்துவிடின் அன்போடு எதிர்கொண்டு அணைத்து மகிழ்வர். இது போலவே, இராமனைத் தம் பிள்ளைபோல் நினைத்திருந்த முனிவர்கள், காட்டில் இராமனைக் கண்டதும் வரவேற்றுத் தத்தம் தவப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். பாடல்:

மனையின் நீங்கிய மக்களை வைகலும்
கினையும் நெஞ்சினர் கண்டிலர் கேடுவார் அனையர் வந்துற ஆண்டெதிர்ந் தார்கள் போல்
இனிய மாதவப் பள்ளி கொண் டெய்தினார்

(13)
குகப் படலம்

பெரியோரைக் காணும் முறை

பெரியோரைக் காணச் செல்பவர்கள் தலைப் பாகையை நீக்கி, தோளின்மேல் உள்ள துண்டை அயோத்தியா காண்ட ஆழ் கடல்
- 47

(அங்கவத்திரம்) இடுப்பில் குறுக்கு வாட்டத்தில் கட்டிக் கொண்டு ஆடம்பரம்- ஆரவாரம் இல்லாமல் அமைதி யுடன் செல்வது உலகியல். இராமனைக் காணச் சென்ற குகன், தன்னைச் சேர்ந்தவர்களை அப்பால் நிறுத்திவிட்டு, தான் மட்டும், கை வில்லையும் இடுப்பில் உள்ள வாளையும் கீழே எறிந்து விட்டுத் தூய- அன்புள்ள மனத்துடன் சென்று, இராமன் இருக்கும் தவப் பள்ளியை அடைந்தானாம், பாடல்:

சுற்றம் அப்புறம் கிற்கச் சுடுகணை
வில்துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நற்றவப் பள்ளி வாயிலை கண்ணினான்

(10)

மற்றும் வாயிலுக்குள் புக்க குகன், இராமனைக் கண்டதும் கால்களில் விழுந்து வணங்கி, உடலை வளைத்து வாய் பொத்தி நின்றான். இராமன் குகனை அமர்க என்று கூறிய பிறகும் அவன் அமரவில்லை; உண்ணுதற்கு மீனும் தேனும் கொண்டு வந்துள்ளேன் என்று குகன் கூறியதும், மீனை விரும்பாத இராமன், மீனை விரும்பாத முனிவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தானாம். இவையெல்லாம் உலகியல் அன்றோ? பாடல்கள்;-

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான்

(13)

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம் என்னவீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்

(14)

தம்பி கூறல்

துன்பச் சூழ்நிலையில் உள்ள தலைவரைக் காணச் சென்றவர், என்ன துன்பம் என்பதைத் தலைவரிடம் 48 () சுந்தர சண்முகனார்

நேரில் கேட்காமல் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது ஒருவகை உலகியல். இவ்வாறே, குகன், காட்டிற்கு வந்தது எதற்காக என்று இராமனை வினவாமல், தம்பி இலக்குமணனை வினவி அவன் கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பாடல்:

திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையுள் எய்தி இருகண் நீர் அருவி சோரக் குகனும் ஆண் டிருந்தான்.

(20)
பள்ளி படைப் படலம்

ஒரு பெண், தன் தாய் வீட்டிலிருந்து வந்த ஒருவரை நோக்கி, என் பெற்றோர், உடன் பிறந்தவர் எல்லாரும் குறைவின்றி நலமாயுள்ளனரா என்று வினவுவதுண்டு. கேகய நாட்டிலிருந்து பரதன் வந்து தன் தாயாகிய கைகேயியை வணங்கியதும் அவள் அவ்வாறே வினவினாள். பாடல்:

வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆரத் தழுவினள், தீது இலர்
எந்தை, என்னையர், எங்கையர் என்றனள் அந்தமில் குணத்தானும் அது ஆம் என்றான்

(42)

எந்தை - என் தந்தை; என்னையர் - என் அண்ணன் மார்; எங்கையர் = என் தங்கைமார்.

செவி கூடின

பரதன் கைகேயியை இரு கைகளையும் குவித்து வனங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவள், இராமன் காடு சென்றதையும், தயரதன் மேல் வீடு (மோட்சம்) அடைந்ததையும் கூற, அச் சொல்லைக் கேட்டதும், பரதனின் இரு கைகளும் இரு காதுகளைப் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 49

பொத்திக் கொண்டனவாம். கேட்கக் கூடாத சொற் களைக் கேட்க நேர்ந்தபோது செவிகளைக் கையால் பொத்திக் கொள்வது இயற்கைதானே! பாடல் பகுதி:-

சூடின மலர்க்கரம் சொல்லின் முன் செவி கூடின... (66)

உயிரோடு தின்றல்

ஒருவர் செயற்கையாக இறந்துவிடின், அவரது இறப் பிற்குக் காரணமாயிருந்தவரை நோக்கி, மற்றவர், அவரை உயிரோடு தின்று விட்டாயே- என்று கூறுதல் ஒருவகை உலக இயற்கை. தம்பியர் இருவர் இறந்து போக, அவர்களின் தமையன், நான் என் இரண்டு தம்பிகளையும் உயிரோடு தின்று விட்டேன் என்று கூறியதை யும், குழந்தையை இழந்த தாய் ஒருத்தி, நான் என் குழந்தையைத் தின்று விட்டேன் என்று கூறியதையும் யான் (சுந்தர சண்முகம்) நேரில் கேட்டுள்ளேன். இங்கே, பரதன் தாயை நோக்கி, உன் வாயாலேயே தந்தை தயரதரின் உயிரைத் தின்று விட்டாயே என்று கூறினான்.

ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன்பழி கொண்டீர்...

(77)

என்பது பாடல் பகுதி. இங்கே வாயால்' என்னும் சொல்லின் நயம் கவனிக்கத் தக்கது. கைகேயி வாயால் வரம் கேட்டுத்தானே கொன்றாள் அல்லவா? மற்றும், தின்பது வாய்தானே என்னும் கருத்தும் இதிலே அடங்கியுள்ளது.

நாவில் நீர் வரல்

ஒருவர் சிறந்த உணவு உண்பதைப் பார்க்கும் மற்றொருவர்க்கு நாக்கில் நீர் ஊறும் என்பதாகச் சொல்வதுண்டு. இங்கே, பரதன், கோசலையிடம் சில சூளுரை கூறுகிறான்: நான் உண்மையில் இராமனை வஞ்சித்தேன் எனில், நறுமணம் மிக்க உணவைப் பிறர்க்கும் தராமல் அவர்களின் நாக்கில் நீர் ஊறும்படி அ. ஆ.-4 50 ) சுந்தர சண்முகனார்

தான்மட்டும் உண்ணும் ஒருவன் அடையக்கூடிய தீமையை யானும் அடைவேனாக என்கிறான். பாடல் பகுதி:

நறியன அயலவர் நாவில் நீர்வர
உறுபதம் நுங்கிய ஒருவன் ஆக யான்

(112)

நுங்குதல் = நிரம்ப 'லபக்- லபக்' என்று விழுங்குதல். உறுபதம்= மிக்க உணவு. ஈண்டு,

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

(82) என்னும் குறளும், 'மருந்தே யாயினும் விருந்தோடுண்" என்னும் ஒளவையின் 'கொன்றை வேந்தன் அடி- (70) ஒப்பு நோக்கத்தக்கன.

மங்கையர் முன்

ஆடவர் பெண்களின் முன்னே தோல்வி உறுதலுக்கும் தாழ்த்தப்படுதலுக்கும் மிகவும் நாணுவது உலகியற்கையே. பரதன் மேலும் கூறுகிறான். மங்கைமார்கள் முன்னே, பகைவரின் அடியைப் பணியும் தலையை உடையவனாக யான் என்று சூளுரைக்கின்றான். பாடல் பகுதி:

மணிக்குறு நகை இள மங்கை மார்கள்முன்
தணிக்குறு பகைஞரைத் தாழ்க என் தலை

(1.15)

பெண்டிர் தோற்றவனை நோக்கி ஏளனமாகக் குறுநகை புரிவார்கள் என்னும் கருத்து இதிலே அடங்கி யுள்ளது.

தளை ஈர்த்த கால்

ஒருவனைக் காலில் விலங்கு பூட்டி இழுத்துச் சென்றால், அவன் தன் பகைவர் முன்னே- ஏன்- பொது மக்கள் முன்னேயும் மிகவும் நாணம் அடைவது இயல்பு.

புதுச்சேரியிலே பெரிய கடைத் தெருவின் நடுவிலே சிறைச்சாலை உள்ளது. பெரியவர்கள் கூடின ஒரு கூட்டத்திலே, 'கடைத் தெருவிலிருந்து சிறைச்சாலையை அயோத்தியா காண்ட ஆழ் கடல் 51

வேறிடத்திற்கு மாற்றச் செய்யவேண்டும். கடைத் தெருவின் வழியாகப் பலர் பார்க்க விலங்கிட்டுச் சென்றால் வெட்கமாயிருக்காதா'- என்று ஒருவர் கூறினார். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; 'கடைத் தெரு வழியாகப் பலர் பார்க்க அழைத்துச் சென்றால்தான், எவரும் குற்றம் செய்ய அஞ்சுவர்- என்று மற்றவர்கள் கூறிவிட்டனர்.

இதைத்தான் பரதனும் குறிப்பிடுகிறான்: இரும்பு விலங்கு பூட்டிய கால்களோடு பகைவர் முகத்தின் எதிரில் யான் விழிப்பேனாக- என்கிறான். பாடல் பகுதி:

இரும்பலர் நெடுந்தனை ஈர்த்த காலொடும் விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்கயான்

(116)
ஆறு செல் படலம்

மகளிரின் இரங்குதல்

ஒருவர் துணிவான மன வலிமையின்றி எடுத்ததற் கெல்லாம் சோர்ந்து போவாராயின், அவரை மற்றவர் நோக்கி, 'என்னையா! ஆண் பிள்ளையா நீ? பெண் பிள்ளைபோல் அது அதற்கும் சோர்ந்து போகிறாயே! பெண்களே அவ்வாறு சோர்வர். அவர்கள் மேல்போல் இருக்கிறதே! அவர்களினும் நீ கோழையாயிருக்கிறாயே,’’ என்று கூறுதல் ஒருவகை உலகியல். இங்கே, வசிட்டர் பரதனை நோக்கி, நீதான் முடி சூடிக்கொண்டு ஆளவேண்டும் எனக் கூற, பரதன் நடு நடுங்கினானாம்- நாக்குப் பேச முடியாமல் தடுமாறினானாம்- கண்களை இடுக்கிக் கொண்டானாம்- பெண்களைப்போல் நெஞ்சம் சோர்ந்து போனானாம். பாடல் பகுதி:

நடுங்கினன் நாத்தடு மாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன்

(13) 52 ) சுந்தர சண்முகனார்
திருவடி சூட்டு படலம்

கைகயன் மகள்

ஒருவர்க்கு ஒரு பெண்ணின்மேல் காழ்ப்பு வந்து விடின், அவளது பெயரைக் கூறாமல், 'தோ அவன் பெண்டாட்டி' தோ அவன் மகள்' என இழித்துச் சுட்டுவது ஒர் உலகியல். இலக்குமணன் தன் சிற்றன்னையாகிய கைகேயியைத் தாய் என்றும் குறிப்பிடாமல்- கைகேயி எனப் பெயர் சூட்டியும் குறிப்பிடாமல், கைகயன் மகள்' என்று கூறுகின்றான். இலக்குவன் இராமனை நோக்கி, 'உன்னைப் பெற்ற அன்னையின் துயர் கண்டு மகிழ்பவளும்- குற்றம் நிறைந்தவளும் ஆகிய கைகயன் மகள் விழுந்து அழும்படிச் செய்கிறேன் பார்'- என்று கடுமையாகப் பேசுகிறான். பாடல் பகுதி:

கைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய கைகயன் மகள் விழுந்து அரற்றக் காண்டியால்

(40)

யார் முகத்தை நோக்கல்

ஒருவர் பொருந்தாச் செயல் செய்ய நேர்ந்தபோது, 'நான் இதைச் செய்தால் பின் யார் முகத்தில் விழிப்பது? ஒருவர் முகத்திலும் நாணத்தோடு விழிக்க முடியாதே,' என்று கூறுதல் உலகியலில் ஒன்று. தந்தை இறந்ததையறிந்த இராமன் கூறுகிறான்: யான் அரசை ஏற்றுக்கொண்டிருப்பின் தந்தை இறக்க மாட்டார். கைகேயியின் வரத்துக்கு மாறாக யான் ஆள்வதனினும் யான் இறந்து போதல் நல்லது. இந்த உடம்பைச் சுமந்து கொண்டு ஆள்வதெனில், அப்புறம் யார் முகத்தில் விழிக்க முடியும்- என்கிறான். பாடல்:

மாண்டுமுடிவ தல்லால் மாயா உடம்பிது கொண்டு
ஆண்டு வருவது இனியார் முகத்தே நோக்கவோ?

(64) அயோத்தியா காண்ட ஆழ் கடல் ) 53

உந்தை

தவறு செய்த ஒருவரின் பிள்ளைகள் இருவர் உரை யாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுள் ஒருவர் இன்னொருவரை நோக்கி, இது நம் தந்தை செய்த தவறு என்னாமல், 'உன் தந்தை செய்த தவறு" எனக் குறிப்பிடுதல் ஒருவகை உலகியல். இதுபோல், திரும்பவும் வந்து முடிசூடிக்கொள் என்று இராமனை வற்புறுத்தும் பரதன் இராமனை நோக்கி, "உன் தந்தை செய்த தவறும் என் தாய் செய்த தவறும் நீங்க, எந்தையே! வந்து ஆட்சி செய்' என்றான். பாடல்:

உங்தை தீமையும் உலகு உறாதநோய்
தந்த தீவினைத் தாய்செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்கஎனா
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்

(103)

உந்தை என்பது உன் (இராமனின்) தந்தை எனப் பொருள் படும். பரதன் இராமனை நோக்கி, என் தந்தையே’ என்னும் பொருளில் 'எந்தை' என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வாறு, கம்பர் தம் பட்டறிவில் கண்ட உலகியல் உண்மைகளைத் தம் காப்பியத்தில் ஆங்காங்கு-பொருத்த மான இடங்களில் குறிப்பிட்டு கற்பவர் களிக்கச் செய்துள்ளார். கல்வியில் பெரிய கம்பரின் கலைத் திறனில் இஃதும் ஒன்றாகும்.