அயோத்தியா காண்ட ஆழ்கடல்/காப்பிய முன்னோட்டச் சுவை

1. காப்பிய முன்னோட்டச் சுவை


காப்பிய ஆசிரியர்கள் தம் காப்பியத்தில் பல்வேறு சுவைகளை அமைப்பர். அவற்றுள் முன்னோட்டச் சுவை மிகவும் சிறந்தது. 'முன்னோட்டச் சுவை' என்பது நான் (சு.ச.) கொடுத்துள்ள பெயராகும்.

காப்பியத்தில், பின்னால் நிகழப் போகும் செயலை முன்னாலேயே குறிப்பாக அறிவிப்பதை முன்னோட்டம் எனலாம். இந்த முன்னோட்டம் பின்னால் நிகழ இருப் பதற்கு எதிர்மாறானதாக முன்னால் சொல்லப்படும் போது சுவை மிகுகின்றது. இந்தச் சுவையை முன்னால் படிக்கும்போது அறிய முடியாது; இதற்கு எதிர்மாறான நிகழ்ச்சி பின்னால் நடந்திருப்பதைப் படிக்கும்போது தான், இரண்டையும் ஒத்திட்டு நோக்கி மகிழ முடியும். எடுத்துக் காட்டாகச் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள சில முன்னோட்டங்களைக் காண்போம். கம்பன் காப்பி யத்தில் அமைந்துள்ள சில முன்னோட்டங்களை அறிந்து சுவைப்பதற்காக, 'இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில் சிலம்பின் முன்னோட்டங்கள் ஈண்டு அறிவிக்கப் படும்.

திருமண அரங்கிலே மணமக்களை வாழ்த்துபவர்கள் உங்கட்கு வயிற்று வலி வராமல் இருப்பதாகுக! உங்கட்கு இதய நோய் வராமல் இருப்பதாகுக! உங்கட்குக் காச நோய் வராமல் இருப்பதாகுக!- என்று வாழ்த்தினால், 

அது இயற்கைக்கு மாறான தீச் சகுனம் அல்லவா? எனவே, இதுபோல் யாரும் வாழ்த்துவதில்லை. நீங்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வீராக என்று வாழ்த்துவதுதான் முறை- இயற்கை.

திருமண அரங்கில் கோவலனுடன் இருந்த மணமகள் கண்ணகியை நோக்கிச் சிலர் பின்வருமாறு வாழ்த்தினர்: 'நீ காதலனைப் பிரியாமலும், கை கோத்த நெருங்கிய தொடர்பு தளராமலும், தீமை வராமலும் வாழ்வாயாக' என வாழ்த்தினர்.

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிராமல் தீதுஅறுக என ஏத்தி' (மங்கல வாழ்த்துப் பாடல்-61, 62)

என்பது பாடல் பகுதி. பின்னால் கண்ணகியும் கோவலனும் கவவுக் கை ஞெகிழ்ந்து பிரியப் போகிறார்கள்- தீமை வரப்போகிறது- என்பதை இந்த வாழ்த்து உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வரலாறு முழுதும் நடந்து முடிந்த பிறகு காப்பிய ஆசிரியர் இளங்கோவடிகள் எழுதியதால், பின்னால் நிகழ்ந்ததை அறிந்து முன்னோட்டமாக முன்னாலேயே எழுதிச் சுவை தந்துள்ளார். இது மட்டுமா?

மனையறம் படுத்த காதையில், கோவலனும் கண்ணகியும் இன்புற்றிருந்த வாழ்க்கையை தொண்ணுாறு (90) அடிகளால் தெரிவித்துள்ளார் இளங்கோ. இந்த தொண்ணூறு அடிகளில் நாற்பத்தைந்து அடிகள், கோவலன் கண்ணகியைப் பாராட்டிய அடிகளாகும். இந்தப் பாராட்டு எவரெஸ்ட் உச்சிக்குப் போய்விட்டிருக்கிறது. அதாவது இறுதிப் பகுதியை மட்டும் காணலாம்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

' அயோத்தியா காண்ட ஆழ் கடல் 19

'யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னைஎன்று உலவாக் கட்டுரை பல பாராட்டி!'' (73–81)

என்பதுதான் அந்தப் பாராட்டு. இரண்டாம் காதையின் இறுதியில் இவ்வாறு அமைத்தது, (45 அடிக்) கண்ணகியை, அடுத்த காதையாகிய அரங்கேற்று காதையிலேயே கோவலன் பிரியும்படிச் செய்து காட்டியுள்ளார் இளங்கோ. இது ஒரு வகையான காப்பிய முன்னோடிச் சுவை. இந்த மனையறம் படுத்த காதையின் இறுதியில் ஒரு தனி வெண்பா உள்ளது. இது முற்றிலும் முன்னோட்டப் பாடலாகும். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று உடலைப் பின்னி முறுக்கிக்கொண்டு இன்பம் துய்ப்பது போலவும், மன்மதனும் இரதியும் கலந்து இன்புறுவது போலவும் கோவலனும் கண்ணகியும் இரண்டற ஒன்றிக் கலந்து இன்பம் துய்த்தனராம். இந்த உலக இன்பம் நிலையில்லாதது; எனவே, நாம் இருக்கும் போதே எவ்வளவு மிகுதியாக இன்பம் துய்க்க முடியுமோ- அவ்வளவும் துய்த்துவிட வேண்டும் என்று எண்ணிச் செய்தவர் போலக் காணப்பட்டனராம்.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தாலென ஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து- நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று

என்பது பாடல். பணிகள் = பாம்புகள். காமர்-மனைவி= மன்மதனும் அவன் மனைவி இரதியும். நிலையாமை கண்டவர் போல்' என்பது உண்மையில் பலித்து விட்டதே. காமத்துறைக்குப் பொறுப்பாளனாகச் சொல்லப்படும் மன்மதனைக் குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்.

மற்றொன்று:- கண்ணகியையும் கவுந்தியடிகளையும் மதுரைப் புறத்தே தங்கச் செய்து கோவலன் மதுரை 20 - சுந்தர சண்முகனார்

நகரைச் சுற்றிப் பார்த்து வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டியனின் உயர்வையும் புகழ்ந்து கூறுகிறான். இது. தொடர்பாக, அடைக்கலக் காதையில் உள்ள ஒரு பகுதி, வருமாறு:

நிலந்தரு திருவின் நிழல் வாய்நேமி
கடம்பூண் டுருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிவிடம் புகுந்து
தீதுநீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி (1-10):

}}


என்பது பாடல் பகுதி. பாண்டிய மன்னனின் செங்கோல் சிறப்பு இங்கே கூறப்பட்டுள்ளது. தென்னவன் புகழைக் கோவலன் வாய் வழியாகவும் கூறச் செய்துள்ளார் இளங்கோ. ஏன்?- அடுத்தாற்போல், கோவலன் செங்கோல் வளையப் போகிறது. இதை வைத்து, இதன் முன்னோடியாகப் பாண்டியனது செங்கோல் சிறந்தது என்பது கூறப்பட்டுள்ளது. இதன் குறிப்பு, அடுத்து மாறான நிகழ்ச்சி வரப்போகிறது என்பதாகும். இது போல், வழக்குரை காதையிலும் ஒரு குறிப்பு உள்ளது. வழக்கு உரைக்கக் கண்ணகி வந்துள்ளதைப் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கச் சென்ற காவலன், முதலில் மன்னனை வாழ்த்திப் பின்னரே செய்தியைத் தெரிவிக்கிறான். அல் வாழ்த்துப் பகுதி வருமாறு:

வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி'

(30-33) 
அயோத்தியா காண்ட ஆழ் கடல் 21

என்பது பாடல் பகுதி. (பஞ்சவன் = பாண்டியன்) பழியே இல்லாத பாண்டியனே வாழி என்று காவலன் குறிப்பிட்டுள்ளது, இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியனின் பழி வெளிப்படப் போகிறது என்பதன் குறிப்பாகும். மற்றும் இப்பகுதியில், வாழி- வாழி என்று ஆறு முறை வாழி சொல்லியிருக்கிறான். இது, இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் இறக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டக் குறிப்பாகும்.

நான் (சு. ச.) இப்போது சிலப்பதிகாரம் பற்றி நூல் எழுதவில்லை; கம்பராமாயணம் பற்றியே எழுது கின்றேன். சிலப்பதிகாரச் சுவைப் பித்தால் ஒரளவு கூடுதலாகவே எழுதிவிட்டேன்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை
வெறும் புகழ்ச்சி யில்லை

(தமிழ்-2)

என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, இளங்கோ அடிகள் போலவே, கம்பர் தம் காப்பியத்தில் கையாண்டுள்ள முன்னோட்டச் சுவையைக் காண்போம். முன்னோட்டச் சுவை என்பது என்ன என்பதை அறிமுகம் செய்யவே இவ்வளவு பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இனிச் சுவை வருமாறு:

மந்தரை சூழ்ச்சிப் படலம்

இராமனைப் பயந்தவள்

உறங்கிக் கொண்டிருந்த கைகேயியைக் கூனி எழுப்பி, துன்பம் வந்துள்ள போதும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என, கைகேயி பின்வருமாறு கூறினாள்: 22 - சுந்தர சண்முகனார்

என் பிள்ளைகள் நால்வரும் நல்லவர்கள்- அறம் பிழையாதவர்கள்- அவர்கள் இருக்கும்போது எனக்கு, என்ன துன்பம் வரக்கூடும். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்கள் இன்பமேயன்றித் துன்பம் எய்தார். இன்னும் குறிப்பாகச் சொல்கிறேன்: இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பமே இல்லை.

வெவ் விடம் அனையவள் விளம்ப வேற்கணாள் தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பலர் எவ்விடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா (54)

'பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவரும் துயரைவிட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்கெலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர்உண்டோ என்றாள்'

'''
(55)

இந்தப் பாடல்களில் பொதுவாகப் பிள்ளைகள் நால்வரையும்- சிறப்பாக இராமனையும் பெரிதும் புகழ்ந்து பாராட்டும் கைகேயி, பின்னால், இராமனது முடியைப் பறித்துக் காட்டுக்கு அனுப்பப் போகிறாள். நிலைமை இதுவாயிருக்க, இதற்கு எதிர்மாறாக இப் பாடல்கள் அமைந்து சுவை பயப்பதை என்னென்று சொல்வது!

பரதன் தவம்

கூனி கைகேயிக்கு மேலும் கூறுகின்றாள்: இராமன் இலக்குவனை உடன் வைத்துக் கொண்டு இந் நாட்டை ஆள்வானாயின், உன் மகன் பரதன் சத்துருக்கனனுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஏற்பாடு செய்தல் நன்று- என்கிறாள்.

'சரதம் இப்புவி எலாம் தம்பியோடும் இவ்

வரதனே காக்குமேல் வரம்பில் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய்
விரதமா தவம்செய விடுதல் நன்று என்றாள்'

(65) 'அயோத்தியா காண்ட ஆழ் கடல் 23

இவ்வாறே இதன் பிற்புலம் அமைந்துள்ளது. பரதன் சத்துருக்கனனுடன் அயோத்தியை விட்டு அப்பால் உள்ள நந்தியம் பதியில் பதினான்காண்டு தவக் கோலத்துடன் காலம் கழித்தான் அல்லவா?

நாடு கடத்தல்

கூனியின் தூண்டுதலின்படி, கைகேயி, ஒரு வரத்தால் பரதனுக்கு முடியைப் பெற்றாள்; சரி- இராமனை மற்றொரு வரத்தால் பதினான்காண்டுகள் நாடு கடத்தியது எதற்காக? இவ்வாறு செய்தது, இராமனால் பின்னால் தொல்லை ஏற்படாதிருக்கவே யாம். நாடு கடத்திவிடின் தொல்லையில்லையன்றோ?

உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்போமாயின், நாடு கடத்தலின் நோக்கம் நன்கு புரியும். உலக வரலாற்றில் அன்று தொட்டு இன்றுவரை, எத்தனையோ நாடு கடத்தலைக் கண்டிருக்கிறோம். இளங்குமணன் தன் அண்ணன் குமணனது ஆட்சியைப் பறித்துக்கொண்டு அவனை நாடு கடத்திய செய்தி நாம் அறிந்ததே.

இங்கிலாந்தில் இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (King Richard-11) ஆண்டு கொண்டிருந்தபோது, தன் பங்காளிப் பகைவனாகிய பாலிங்புரோக் (Boling broke) என்பவனை நாடு கடத்திய செய்தியை, சேக்சுபியரின் King Richard-11 என்னும் படைப்பைப் படித்தவர்கள் அறிவர். பகைவன் வெளிநாட்டில் இருந்தால் தன்னை ஒன்றும் அசைக்க முடியாது- என்பது இதன் கருத்து. இதே அடிப்படையில் ஒன்று நிகழ்ந்தது. இங்கிலாந்திலிருந்து ரிச்சர்டு மன்னன் மேலாட்சியைக் கவனிக்க அயர்லாந்துக்குச் சென்றிருந்த போது, வெளிநாட்டில் இருந்த பாலிங்புரோக் இங்கிலாந்துக்கு வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு, அயர்லாந்து சென்றிருந்த ரிச்சர்டு மன்னனைச் சிறையில் அடைத்துப் பின் கொன்றே விட்டான். பகைவன் வெளியில் இருக்கும் போது எளிதில் காரியம் முடித்துக் கொள்ளலாம் என்பதை இது அறிவிக்கிறதல்லவா? 24 - சுந்தர சண்முகனார்

சில ஆண்டுகட்கு முன், ஆப்பிரிக்கப் பெரு நிலத்தில் உள்ள கானா என்னும் நாட்டின் தலைவனாக இருந்த என்குருமா என்பவன், சீனாவிற்குச் சென்றிருந்தபோது, கானாவில் இருந்த அவன் எதிரிகள் நாட்டைப் பிடித்துக் கொண்டு அவனை நிலையாக வெளியேற்றிவிட்ட வரலாறு உலகறிந்ததே.

இத்தகைய பின்னணியிலேயே இராமனும் அகப்பட்டு நாடு விட்டுக் காடு செல்லும்படிச் செய்யப்பட்டான் என்பது ஒருவகைக் காப்பியக் கருத்துச் சுவையாகும் பாடல்:

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து திரிதரச் செய்தி ஒன்றினால், செழுகிலம் எல்லாம்
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள்

(90)

ஓராண்டோ- ஈராண்டோ இல்லை. பதினான்கு ஆண்டுகள் இராமன் வெளியே இருந்தால், நாடு இராமனை மறந்துவிடும்; பரதனது ஆட்சி நிலைத்து விடும்- என்பது ஒருவகைப் பின்னணியாகும்.

கைகேயி சூழ்வினைப் படலம்

வாழிய

தயரதன் கைகேயிக்கு இராமனது முடி சூட்டைப் பற்றிச் சொல்ல அவள் இருக்கும் இடத்திற்கு, வாழ்க வாழ்க எனச் சிற்றரசர்கள் தன்னை வாழ்த்திக் கொண்டு பின்தொடர நள்ளிரவில் வந்தான்.

நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை
யாழிசை அஞ்சிய அம்சொல் ஏழை கோயில்
வாழிய என்று அயில்மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடுங்கை மடங்கல் ஆளி அன்னான்

(5) 

அடோத்தியா காண்ட ஆழ் கடல் 25


இந்தப் பாடலில் நான்கு முன்னோட்ட அமைப்புகள் உள்ளன. தயரதன் மடங்கல் ஆளி (ஆண் சிங்கம்) போன்றவனாம். இத்தகையவன் இன்னும் சிறிது நேரத்தில் மயங்கி விழப் போகிறான். வாழிய- வாழிய எனச் சிற்றரசர்கள் வாழ்த்த வந்தானாம். இந்த 'வாழிய' என்பது, தயரதன் அண்மையில் இறக்கப் போகிறான் என்பதைப் பின்புலமாகக் கொண்டது. கைகேயியின் சொல்லுக்கு- பேச்சுக்கு இருக்கும் இனிமை தன் இசைக்கு இல்லையே என யாழ் அஞ்சக் கூடிய அளவுக்கு இன்மொழி பேசும் கைகேயி என்பது, இன்னும் சிறிது நேரத்தில் வன்மொழி பேசப் போகிறாள் என்பதன் எதிர்மறை. யாழிசை அஞ்சிய அம் சொல் ஏழை எனக் கம்பர் கூறியுள்ளார். ஏழை என்னும் சொல்லுக்கு வறியவர் என்னும் பொருளோடு பெண் என்ற பொருளும் உண்டு. இந்த ஏழை என்பது, தயரதனாலும் மகன் பரதனாலும் துறக்கப்படப் போகிறாள் என்பதன் குறியீடும் ஆகும்.

இகழ்ந்தவர் மாள்வர்


கைகேயி வருந்தியவள் போல் கீழே வீழ்ந்தாள். தயரதன் அவளை நோக்கி, ஏன் வருந்துகிறாய்? ஏழு உலகிலும் உள்ளவர்களுள் உன்னை இகழ்ந்தவர் யாராயினும் இறப்பர்; நடந்ததைச் சொல்! அதன்பின் என் செயலைக் காண்பாய் என்றான் தயரதன்.

'

அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இவ்வேழு ஞாலம் வாழ்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்ற தெல்லாம் சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு என்றான்

(9)

உன்னை இகழ்ந்தவர் இறப்பர் என்றான் தயரதன். பின்னர் தயரதன் கைகேயியை இகழ்ந்து பேசி இறந்து விடுகிறான். பின்பு என் செயல் காண்டி என்றான். பின்பு அவன் இறந்த செயலைக் கைகேயி கண்டாள். 26 - சுந்தர சண்முகனார்

உன்னைத் துன்புறுத்தியவர் யார்?- உன் உடைமையைப் பறித்தவர் யார்?- என்பது போலத் தயரதன் சொல்ல வில்லை. உன்னை இகழ்ந்தவர் யார் என்றுதான் கேட்டான். அவ்வாறே அவளை உலகம் இன்றளவும் இகழ்ந்து கொண்டிருக்கிறது.

இராமன்மேல் ஆணை

கைகேயி தயரதனை நோக்கி, எனக்கு முன்பு இரண்டு வரங்கள் தருவதாகக் கூறினீர்களே- அவற்றை இப்பொழுது தருவீர்களா?-என்று வினவினாள். அதற்கு மன்னன், ஒ! தருவேன்- மறுக்க மாட்டேன்- வஞ்சிக்க மாட்டேன். உன் மகன் இராமன்மேல் ஆணை:- என்று பதிலிறுத்தான்:

உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான்

(11) இது பாடல் பகுதி. உள்ளம் உவந்தது செய்வேன் என்பதை உள்ளம் உவந்து அது செய்வேன் எனப் பிரித்து, மனம் விரும்பி, நீ கேட்ட அதைச் செய்வேன் என்று பொருள் கொள்வர். இதில் மற்றொரு மறை பொருள் உள்ளது. உவந்தது என்பதை உவந்து + அது என்று பிரிக்காமல், என் மனம் விரும்பியதைச் செய்வேன் என்பதே அம் மறைபொருள். தயரதன் உள்ளம் உவந்தது இராமனுக்கு முடிசூட்டுவதுதான். அதைச் செய்வேன்- நீ மறுக்காதே- விட்டுக்கொடுஎன்னும் பொருள் மறைந்திருக்கிறது. மேலும் இராமனை, உன் மகன் இராமன்' எனக் கைகேயியின் மகனாகக் கூறுகிறான். அப்படித்தான்- அவள் உண்மைத் தாயாக இருந்தவள் இப்போது மாறிவிட்டாள். இராமன் மேல் ஆணை என்பது இராமனது முதன்மைச் சிறப்பைக் குறிக்கிறது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில், இராமன், கைகேயியால் செல்லாக் காசாக ஆக்கப்படப் போகிறான். படிப்பவர்கட்டு இஃதும் ஒரு முன்னோட்டச் சுவைதானே! 

அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 21


இப்பொழுதே பகர்ந்திடு

தயரதன் கைகேயியிடம் கூறுகிறான். நீ வரம் கேட்க இவ்வளவு மயங்க வேண்டியதில்லையே. வருத்தமோ தயக்கமோ வேண்டா. இப்பொழுதே கேள்- உடனே தருவேன்- என்கிறான்:

வரம்கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவ தில்லை ஈவேன் என்பால் பரம்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் உரம்கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலா தான்

(13).

இப்போதே கேள்- தருகிறேன்- என்றானே ஆனால் உடனே தரக்கூடிய வரமாக அவள் கேட்க வில்லையே- உடனே தயரதன் ஒத்துக் கொள்ள வில்லையே!

வண்மைக் கேகயன் மான்

இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டா எனத் தயரதன் கைகேயியிடம் கெஞ்சுகிறான். பெண்ணே! எதையும் ஈயும் வள்ளலாகிய கேகயன் மகளே! நீ என் கண்ணை வேண்டினும் தருவேன்- மேற் கொண்டு என் உயிரையே கேட்கினும் ஈவேன். மண் ஆட்சியை பரதனுக்கு ஆட்சியை வேண்டுமானால் பெற்றுக்கொள் மற்ற இன்னொன்றையும் மட்டும் மறந்துவிடு என்கிறான்.

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உணதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொள் மற்றையதொன்றும் மற என்றான்

(32)

உயிர் வேண்டினும் தருவேன் என்றான். அவ்வாறே உயிர் போய்விட்டது. பெண்கள் இரக்கம் உடையவர்கள் என்னும் பொருளில் பெண்ணே' என்றான். ஆனால் அவள் பெண்மை மாறிவிட்டாள். இரண்டு வரங்களுள் 28 - சுந்தர சண்முகனார்

மண்ணை (ஆட்சியை) வேண்டுமானால் பெற்றுக் கொள்! ஆனால் இராமனைக் காட்டுக்கு அனுப்பாதே- என்ற கொடிய செய்தியை வாயால் சொல்லவும் உள்ளம் இடம் தராமல், மற்றையது ஒன்று' என மறைமுகமாகக் குறிப் பிடுகின்றான்- அதை மறந்தே விடு- என்கிறான். இஃதும் ஒருவகைச் சுவையன்றோ?

கைகேயியின் காலில் விழல்

சிற்றரசர்கள் பலர் ஒருவரோடொருவர் போட்டி போட்டு முந்திக் கொண்டு வந்து தயரதன் காலில் விழுவார்களாம். அத்தகைய பெருமைக்கு உரிய தயரதன் இப்போது கைகேயியின் காலில் விழுந்து சிறுமை எய்தினானாம்.

கால்மேல் வீழ்ந்தான் கந்துகொல் யானைக் கழல் மன்னர்
மேல்மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்

(29)

விரைவின் போதுதி

கைகேயியிடம் அடைக்கலம் (சரணாகதி) அடைந்த தயரதனைத் தேடிக் கொண்டு கைகேயியின் இருப் பிடத்திற்கு வந்த சுமந்திரனை நோக்கி, இராமனை அழைத்துவா எனக் கைகேயி ஆணையிட்டாள். உண்மை அறியாத சுமந்திரன் இராமனிடம் சென்று கூறுகிறான்: உலகத்தவர் உன்னைப் பெற்றவனைப் போலவே உன் மேல் பெரும் பரிவு கொண்டுள்ளனர். உன் சிற்றன்னை கைகேயியோ, (விரைவில் உனக்கு மகுடம் சூட்டு வதற்காக) உன்னை அழைத்துவரச் சொன்னாள். எனவே, முடி சூடிக் கொள்வதற்காக நீ விரைவில் புறப்படுவாயாக!- என்றான்.

கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளோர் உன்னைப்
பெற்றவன்தன்னைப் போல பெரும் பரிவு இயற்றி நின்றார்
சிற்றவைதானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் அப்
பொன்தட மகுடம்சூடப் போதுதி விரைவின் என்றான்

(85) 

அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 29


இங்கே சுமந்திரன் கூறியதற்கு எதிர்மாறாக நிலைமை ஆனது. முடி சூடிக் கொள்ள விரைவாகப் போனவன் மர உரி அல்லவா அணிந்து கொண்டான்! தேவரின் வாழ்த்து

கைகேயி அழைத்ததாகச் சுமந்திரன் சொன்னதும், தெய்வப் பாடல்கள் இசைக்க, தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்த, பெண்கள் ஆரவாரித்து நோக்க இராமன் தேரில் சென்றான்.

தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத் தையலார் இரைத்து நோக்கத் தார் அணி தேரில் சென்றான்

(86)

தேவர்களின் மகிழ்ச்சியும் வாழ்த்தும் எதிராய் மாறின அன்றோ?

வறியோர்க்கு வழங்கு

சந்தனம், மணிமாலை, நெற்றிப் பொட்டு, யானைகள், குதிரைகள், பொன் அணிகள் முதலியவற்றை இராமன் முன் கொண்டு வந்து, முடிசூட்டு மகிழ்ச்சியின் கூறாக ஏழைகட்கு வழங்குவாயாக என்றனர் பெரியவர்கள்:

சந்தம் இவை; தாவில் மணியாரம் இவை; யாவும் சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழப் பந்திகள் வயப்பரி பசும் பொனின் வெறுக்கை மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார்

(97)

மகிழ்ச்சி மேலீட்டால் வறியோர்க்கு இவற்றை யெல்லாம் வழங்கியும் மேற்கொண்டு நிலைமை. என்னாயிற்று! வளர்த்தது கைகேயி

முனிவர் முதலிய பெரியோர்கள் பின்வருமாறு பேசிக் கொள்கின்றனர்: இராமன், பெற்ற தாய் கையில் வளரவில்லை. அவனை தவப் பயனால் வளர்த்தது கைகேயியே. மகிழ்ச்சியோடு வளர்த்த கைகேயி, இராமனது 30 - சுந்தர சண்முகனார்

முடிசூட்டிற்காக அடையும் உவகையின் அளவினைச் சொல்ல இயலாது:

தாய் கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை கிளர்ஞாலம் இவன் ஆள ஈகையில் உவந்தவள் இயற்கை இது என்றால் தோகையவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்

(101)

வளர்த்த கைகேயி மிகவும் மகிழ்வாள் என எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இந்தப் பாடலில் உள்ள வளர்த்தது கேகயன் மடந்தை' என்னும் தொடரின் தொடர்பாக ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. வானொலியில் செய்தி வாசிப்பவர், வாசிப்பது இன்னார், என்று தம் பெயரைச் சொல்லிச் செய்தியைத் தொடங்குகிறார். இது குறித்துப் பலரிடையே 'தடை விடை நடைபெற்றது. வாசிப்பது இன்னார்' என்று சொல்வது தவறு: 'வாசிப்பவர் இன்னார்' என்று சொல்வதே பொருத்தம் என்பது சிலரது கொள்கை. சிலர், வாசிப்பது இன்னார்' என்று கூறுவதில் தவறு இல்லை என்று கூறினர். எது பொருத்தமானது என்பதை அறியக் கம்பரிடம் சென்று கேட்டுப் பார்ப்போம்: 'வளர்த்தவள் கேகயன் மடந்தை' என்று கூறாமல் வளர்த்தது கேகயன் மடந்தை' என்றே கம்பர் கூறியுள்ளார். எனவே, இந்த இரண்டினுள் எவ்வாறு கூறினும் பொருத்தமே என்ற தீர்ப்பு கம்பரால் நமக்குக் கிடைத்துள்ளது.

இடர் தருவாய்

உடன் வருவேன் என்று மன்றாடிய சீதைக்கு இராமன் சொல்கிறான். நீ உடன்வரின், எல்லையில்லாத் துன்பம் வரும். இதை நீ உணரவில்லை என்றான்: ....................... விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை ஆதலின்

எல்லை யற்ற இடர் தருவாய் என்றான்(ந. நீ.ப-227) அயோத்தியா காண்ட ஆழ் கடல்
31 

இராமன் முன்னால் கூறியது போலவே, சீதை வந்ததால், பின்பு எல்லையற்ற துன்பம் வந்ததைச் சொல்ல வேண்டுமா!

சுமந்திரன் மீட்சிப் படலம்

எம தூதன்

யான் நாட்டிற்குத் திரும்ப முடியாது; நீ தேரை ஒட்டிக் கொண்டு அயோத்தி செல்க என்று சுமந்திரனிடம் இராமன் கூறியதும் சுமந்திரன் கூறுகிறான்: கல் மனம் உடைய யான், மிகவும் வருந்திக் கொண்டிருக்கும் தயரதனிடம், நீ சொல்வதை அறிவிக்கச் செல்லவா? அல்லது எம தூதனாகச் செல்லவா?- என்கிறான்.

வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன்
என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்பால் உன்புலக் குரிய சொல் உணர்த்தச் செல்கெனோ? தென்புலக் கோமன் தூதின் செல்கெனோ?

(22)

தென் புலம் = தென் திசை; கோமன் = தென் திசை யின் காவலனாகிய எமன். 'திசை என்னும் வடசொல்லுக்குப் பதிலாக, தென்புலம்’ எனப் ‘புலம்’ என்னும் தமிழ்ச் சொல்லைக் கம்பர் கையாண்டுள்ளார். தென் புலத்தார்’ எனத் திருவள்ளுவரும் கூறியுள்ளாரே. எம துரதனாகச் செல்லவா?- என்று சுமந்திரன் முன்னர்ச் சொல்லியவாறே பின்னர்த் தயரதன் இறந்து விட்டான்.

பயந்த மூவர்

அயோத்திக்குத் திரும்ப இருக்கின்ற சுமந்திரனிடம், இராமன், என்னைப் பெற்றெடுத்த தாயர் மூவர்க்கும், எனது குறையாத- குறைவு இல்லாத நீண்ட- பெரிய வணக்கத்தை அறிவிப்பாயாக என்று கூறினான். 


முறைமையால் என் பயந்தெடுத்த முவர்க்கும் குறைவிலா என்நெடு வணக்கம் கூறி.(37)


தனக்குத் தீங்கிழைத்த கைகேயிக்கும் இராமன் தெரிவித்திருப்பதும், அதிலும்- போலித்தனம் (குறைவு) இல்லாத உண்மையான வணக்கம் என்று கூறியிருப்பதும் ஒருவகைச் சுவை பயக்கிறது. இராமன் திரும்பப் பதினான்கு ஆண்டு காலம் ஆகுமாதலின் நெடு வணக்கம்' என்று கூறியுள்ளான்.

'
பள்ளி படைப் படலம்'

பரதன் பண்பு

தயரதன் தந்த திருமுகத்தை (கடிதத்தை), கேகய நாட்டில் இருந்த பரதனிடம் தூதர்கள் கொண்டு போய்த் தந்தனர். அவர்களைக் கண்டதும், பரதன், மன்னர் (தயரதன்) நலமாயுள்ளாரா என வினவினான்:

தீது இலன்கொல் திரு முடியோன் என்றான் (2}

பின்னர், இராம- இலக்குமணர் நலமா என, நலம் என, தாழ்ந்து தொங்கிய நீண்ட கைகளைத் தலைமேல் ஏந்திக் குவித்து, இங்கிருந்தபடியே புலம் (திசை) நோக்கி வணக்கம் செலுத்தினான்:

தலையில் ஏந்தினன் தாழ் தடக் கைகளே (3)

பின்னர்த் திருமுகத்தை வாங்கித் தலைமேல் வைத்துச் சிறப்பளித்தான்.

துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான் (5)

திருமுகத்தைப் படித்துப் பார்த்து, இராமனுக்கு முடி சூட்டு என்பதை அறிந்ததும், மகிழ்ச்சி மேலீட்டால், கொண்டு வந்த தூதர்க்குக் கோடிக்கு மேலும் நிதி வழங்கினானாம்.

அயோத்தி சென்று இராமன் திருவடிகளில் மலர் தூவி வணங்கலாம் என்னும் ஆவல் தூண்டியதால், பரதன், நகை முகத்தோடும் மெய்ம்மயிர்ச் சிலிர்ப்போடும் பொங்கிய காதல் உடையவனானான்.

வாள் நிலா நகை தோன்ற, மயிர்ப்புறம்
பூண, வானுயர் காதலின் பொங்கினான்
தானிலாம் மலர் தூவினன் தம்முனைக்
காணலாம் என்னும் ஆசை கடாவவே

(7)

உடனே பரதன் நாளும் நேரமும் பார்க்காமல் தம்பி சத்துருக்கனனொடு தேரேறி அயோத்திக்குப் புறப்பட்டுப் போனான்.

தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்

(8)

ஊருக்குப் புறப்படுபவர்கள் நல்லநாளும் அந்த நாளிலேயே நல்ல நேரமும் பார்த்துப் புறப்படுவர். இந்தப் பாடலில் நாள்' என்பது, திதி- நட்சத்திரம்ட கிழமை ஆகியவற்றை குறிக்கும் நல்ல தேதியாகும். பொழுது என்பது, இராகு காலம்- எமகண்டம் முதலியன இல்லாதனவாய் இருக்கும் நல்ல நேரம் ஆகும். ஆனால், பரதன், இராமனைக் காணவேண்டும் என்னும் ஆவலினால் நாள்- நேரம்- பாராமல் உடனே புறப்பட்டானாம். உலகியலில் நாள்தோறும் பார்க்கும் பழைய பஞ்சாங்கங்கள் கூட (மூடநம்பிக்கையினர் கூட) சாவுச் செய்தி வந்தால் நாள்- நேரம் பார்க்காமல் உடனே புறப்படுவது உண்டு. பரதனுக்கு வந்த திருமுகம் (கடிதம்) ஒரு வகையில் சாவு ஒலை போலவே ஆயிற்று. பரதன் அயோத்திக்குச் சென்று செத்த தந்தையின் உடலைத் தானே கண்டான். மிக்க பண்பாளனாகிய பரதனுக்குப் பின்னர் எல்லாம் எதிர் மாறாகவே நிகழ்ந்தன.

ஆய காதல்

இராமனைப் பிரிந்திருந்த கோசலை, தூய்மையான பரதனைக் கண்டதும் காடு சென்ற இராமனே வந்தால் அ. ஆ.-3 34 ) சுந்தர சண்முகனார்


எவ்வளவு மகிழ்ச்சி கொள்வாளோ- அவ்வளவு மகிழ்ச்சி கொண்டாள்; காதலுடன் அழுது கொண்டே பரதனைத் தழுவிக் கொண்டாள்:

தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கிமுன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால் அழுது புலம்பினாள்

(117)

கைகேயி கோசலையின் மைந்தனுக்குக் கொடுமை செய்திருந்தும், அவள் மகனைக் கோசலை தழுவிக் கொண்டது படிப்பதற்குச் சுவையாயுள்ளது.

பின்னால் வரப்போவதை அறிந்தவர் போல முன்னாலேயே சொல்வதும் செய்வதும் ஆகிய முன்னோட்டம் காப்பியத்தில் மிகவும் சுவை நல்கும் பகுதியாகும். மற்றும், ஒருவர்க்கொருவர் தமது உரிமையை விட்டுக் கொடுப்பதும், தமது துன்பத்திற்குக் காரணமானவர்களையும் போற்றி வணங்குதலும் இன்ன பிற மாற்றங்களும் மேலும் சுவையூட்டும் கூறுகளாம்.