அயோத்தியா காண்ட ஆழ்கடல்/கம்பனின் சொல்லாட்சிக் கலை

5. கம்பனின் சொல் ஆட்சிக் கலை


க்க இடத்தில் தக்க சொல்லைப் பெய்து பேசுவதும் எழுதுவதும் ஒருவிதக் கலையாகும். பேச்சினும், என்றும் நிலைத்திருக்கும் எழுத்து வடிவத்திற்கு இந்தக் கலை மிகவும் இன்றியமையாததாகும்.

பேச்சு நடையும் எழுத்து நடையும் காலப் போக்கில் மாறுவதுண்டு. மாறுதலுக்கு மிகுந்த இடம் தந்தால், முற்கால நடை ஒரு மொழி போலவும் பிற்கால நடை மற்றொரு மொழி போலவும் தோன்றக் கூடும். அதனால் மாறுதலிலும் ஓரளவு கட்டுப்பாடு வேண்டும்.

எழுத்தால் ஆனது சொல்- சொல்லால் ஆனது சொற்றொடர் (வாக்கியம்)-என்ற அடிப்படையில் ஆய்வது 'காரண காரிய முறை' (Logic Method) ஆகும். முதலில் சொற்றொடர்- பின் சொல்- பின் எழுத்து என்ற முறையில் ஆய்வது உளவியல் முறை' (Psychological Method) ஆகும்.

மனிதன் முதலில் சொற்றொடராகத்தான் பேசினான்- பின்பே சொற்றொடரிலிருந்து சொல் பிரிக்கப் பட்டது- அதற்குப்பின் சொல்லிலிருந்து எழுத்து பிரிக்கப் பட்டது. தனி எழுத்துக்கோ- தனிச் சொல்லுக்கோ பொருள் இலை. ஒரெழுத்து ஒரு மொழியாயினும் தனிச் சொல்லாயினும் ஒரு சொற்றொடரில் வைத்துப் பயன்படுத்தும்போதே அவற்றிற்கு மதிப்பும் பொருளும் உண்டு. இதனால்தான், மொழியாசிரியர்கள், தனித்தனிச் சொற்களைத் தந்து சொந்த வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தக் கற்றுத் தருகிறார்கள். பொருள் தெளிவாக விளங்காத ஒரு சொல்லை ஒரு வாக்கியத்தில் வைத்துச் சொன்னால், அகராதியின்றியே பொருள் ஒரளவாயினும் புரியும். இத்தகைய வாக்கியத்திற்குத் தன் பொருளைத் தானே விளக்கும் வாக்கியம்' என்று பெயராம். இந்த அடிப்படையில், கம்பர் தக்க சொற்களைத் தக்க சொற்றொடர்களில் வைத்து ஆண்டிருக்கும் கலை யழகைச் சிறிது காண்போம்:

மந்திரப் படலம்

மந்திரக் கிழவர்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுதல் தொடர்பாக சூழ்வு (ஆலோசனை) செய்வதற்காக மந்திரக் கிழவர்களை அவைக்கு அழைத்தானாம். மந்திரக் கிழவர் என்பவர் மந்திரிகள். இவர்கள் சூழ்வு (ஆலோசனை) சொல்வதற்கு உரியவர்கள். கிழமை என்பதன் பொருள்உரிமை. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கிழவன், கிழவி என்னும் சொற்கள் உரிமை உடையவர்கள்- தலைவர்- தலைவியர் - என்னும் பொருளில் ஆளப்பட்டிருப்பதைக் காணலாம். முருகாற்றுப்படை யில், முருகன் 'மலை கிழவோன்' எனப்படுகிறான். புறப்பாட்டில் குமணன் 'முதிரத்துக் கிழவன்' எனப் பட்டுள்ளான். “நின்னயந்து' என்று தொடங்கும் குமணனைப் பற்றிய அதே (163) புறப்பாட்டில், பெருஞ் சித்திரனார் தம் மனைவியை 'மனை கிழவோய்' என்று விளித்துள்ளார்.

ஒரு மனையின் உரிமையாளர்கள்- தலைவர்கள் கிழவன்- கிழவி எனக் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் அகவை (வயது) முதிர முதிர உடல் தளர்ந்தனர். அப்போதும் இவர்கள் கிழவன்- கிழவி எனப்பட்டனர். நாளடைவில் அகவை முதிர்ந்தவர்கள் எல்லாரும் கிழவன்- கிழவி எனப்பட்டனர். இந்தச் சொற் பொருள் மாற்றத்தால், கிழவன்- கிழவி என்னும் சொல்லாட்சி இந்தக் காலத்தில் அகவை முதிர்ந்தவர்களையே குறிக்கலாயிற்று. எனவே, ‘மந்திரக் கிழவர்' என்பதற்கு, சூழ்வுரைக்கும் உரிமையுடைய தலைவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். இவர்கள் அகவை முதிர்ந்தவர்களாயிருப்பினும் அப் பொருளில் இவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது ஈண்டு கருதத் தக்கது.

இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை வருக என்று ஏவினான்
(3)

என்பது பாடல் பகுதி.

பிறத்து

உயர் பெருந் தேவர் மூவருள், நான்முகன் பிறக்க வைப்பவன் (படைப்பவன்); திருமாலுக்குக் காத்தல் தொழிலும் சிவனுக்குத் துடைக்கும் (அழிக்கும்) தொழிலும் உடையன. இங்கே, பிறக்க வைத்து' என்னும் பொருளில் பிறத்து' என்னும் சொல் ஆளப் பட்டிருப்பது ஒரு புதுமை. பாடல் பகுதி:

பிறத்து யாவையும் காத்து அவை பின்னுறத் துடைக்கும்
திறத்து முவரும் திருந்திடத் திருத்தும் அத்திறலோன்
(36)

என்பது பாடல் பகுதி:

வாள் உழவன்

தயரதன் வாள் உழவன் எனக் குறிப்பிடப்பட் டுள்ளான். வாளாகிய கலப்பையால் மார்பாகிய உடலாகிய வயலில் உழுபவன் என்பது இதன் விளக்கம்.

அயோத்தியா காண்ட ஆழ்கடல் 119

வில்லாகிய ஏர் கலப்பையால் பகைவரது உடலாகிய வயலில் உழுகின்ற போர் மறவரின் பகையைக் கொண்டாலும், சொல்லாகிய ஏரால் உழுகின்ற புலவர்களின் பகையைக் கொள்ளாதே என்னும் கருத்தில்,

வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

(872)

என்னும் குறட்பாவைத் திருக்குறளில் காணலாம். திருவள்ளுவர் போர் மறவரை வில் ஏர் உழவர்' என்று குறிப்பிட்டிருப்பதுபோல், கம்பர், போர் மறவனாகிய தயரதனை வாள் உழவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அலசினேன்

தயரதன் இராமனை நோக்கி, உனக்கு முடிசூட்டக் கருதியுள்ளேன். சூழ்நிலை முழுவதையும் அலசிப் பார்த்தே இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறினான். இங்கே அலசுதல்' என்னும் எளிய சொல்லாட்சி இடம் பெற்று ஒரு வகைச் சுவை பயக்கிறது. "ஐய சாலவும் அலசினென்” (61) என்பது பாடல் பகுதி.

கணிதர்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுவதற்கு உரிய நல்ல நாளைக் கணிதரோடு சூழ்ந்து தேர்ந்தெடுத்தானாம். சோதிடர் என்னும் வட சொல்லுக்கு நேரானது கணிதர்' என்னும் சொல்.

உரைதெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்

(85)

என்பது பாடல் பகுதி.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

மாற்றவள்

சக களத்தி என்னும் வட சொல்லுக்கு நேரானது மாற்றவள்' என்பது. கூனி கைகேயியை நோக்கி உன் 120 - சுந்தர சண்முகனார்

மாற்றாளின் பணிப் பெண்கட்கு நான் பணி செய்ய இயலாது என்று கூறினாள்.

மாதுயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன என்றாள்

(62)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, மாற்றாந்தாய்' என்னும் உலக வழக்குச் சொல்லாட்சி ஒப்பு நோக்கத் தக்கது.

'
நகர் நீங்கு படலம்'

இன்றிய, ஓட்டந்து

இருகண்களும் இல்லாத தாய் தந்தை என்பதற்கு, 'இரு கண்களும் இன்றிய தாய் தந்தை (77) என்று கம்பர் எழுதியுள்ளார். இன்றிய' என்பதற்கு இல்லாத என்பது பொருள். ஒடி என்பதற்கு ஒட்டந்து' என்று கூறியுள்ளார்- யானை என்று கருதித் தான் கொன்று விட்ட இளைஞனின் உடலைச் சுமந்து கொண்டு அவனுடைய பொற்றோர்களிடம் தயரதன் ஒடினானாம். பாடல் பகுதி:

வீட்டுண்டு அலறும் குரலால் வேழக் குரல் அன்றெனவே
ஓட்டங்து எதிரா, நீ யார் என, உற்ற எலாம் உரையா...

(81)

'அ' உருபு

ஆறாம் வேற்றுமை உருபு 'அது' எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்- வேற்றுமையியல்:

.................................ஆறாகுவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (18)

என்பது நூற்பா. நன்னூலார் அது, ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமை உருபு என்று கூறி, உடைமைப் பொருள் ஒருமையாயிருந்தால் அது, ஆது உருபுகளும், அயோத்தியா காண்ட ஆழ் கடல் 121;


உடைமைப் பொருள் பன்மையாயிருந்தால் 'அ' உருபும் இடவேண்டும் என்று கூறியுள்ளார்- பெயரியல்:

''''ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அ வ்வும் உருபாம்...'''' (43)

என்பது நூற்பா. இந்த உருபுகள், உடைமைப் பொருள் அஃறிணையாயிருந்தால்தான் பயன்படுத்த ப்பட வேண்டும். உயர்திணைக்கு உடைய' என்னும் சொல் உருபைப் பயன்படுத்த வேண்டும் என உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். எடுத்துக்காட்டுகள்: எனது கை, எனாது கை, என கைகள், என்னுடைய மகன்.

ஆனால் கம்பர், உடைமைப் பொருள் உயர் திணையாயும் ஒருமையாயும் இருக்குமிடத்திலும் 'அ' உருபைப் பயன்படுத்தியுள்ளார்:

தானும் தன தம்முனும் அல்லது ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க

(116)

என்னும் பாடலில் உள்ள 'தானும்' என்பதற்கு 'இலக்குமணனும்' எனப் பொருள் கொள்ளவேண்டும். 'தன தம்முனும் என்பதற்குத் தன்னுடைய அண்ணனும் எனப் பொருள் கொள்ள வேண்டும். தம்முன்' என்றால் தனக்கு முன் பிறந்த தமையன் என்று பொருளாம். இங்கே 'தம்முன் என்பது இராமனைக் குறிக்கிறது. 'தன’ என்பது தன்னுடைய (இலக்குமணனுடைய) என்னும் பொருள் உடையது. உயர்திணை ஒருமையாகிய இராமனை தன தம்முன்' என 'அ' உருபு போட்டுக் குறிப்பிட்டுள்ளார் கம்பர். இது நன்னூல் கொள்கைக்கு மாறானது. நன்னூல் ஆசிரியராகிய பவணந்தி முனிவர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர். எனவே, பவணந்திக்கு முற்பட்ட காலத்தவராகிய கம்பரை நன்னூல் விதி கட்டுப் படுத்த முடியாது என்பதை எளிதில் உணரலாம். 122 ) சுந்தர சண்முகனார்

காமரம்

பெண்டிரின் மொழியைப் பற்றிக் கூறவந்த கம்பர்,

காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி (197)

என்று குறிப்பிட்டுள்ளார். கா = சோலை. காமரம் சோலையில் உள்ள மரங்கள். சோலை மரங்களின் கனிந்த பழம் போலும் இனிய மெல்லிய மொழி என்பது பொருள்.

இதற்கு மற்றும் ஒரு பொருள் கூறலாம். காமரம் என்பதற்கு ஆலமரம் என்னும் பொருளும் உண்டு. 'தனி (ஒரு) மரம் தோப்பாகாது' என்பது பழமொழி. ஆனால் தனி மரம் தோப்பாவதும் உண்டு. அந்தத் தனிமரம் ஆலமரமே. நால்வகைப் படையுடன் மன்னர்க்கிருக்க நிழல்தரும் தனியொரு ஆலமரம் என்பதை வெற்றிவேற்கை என்னும் நூலில் அதிவீர ராமபாண்டியன் கூறியுள்ளார். பாடல்:

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆள்பெரும் படையுடன் மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே

(17–21)


என்பது பாடல் பகுதி. ஒரு தோப்புபோல்- சோலை போல் உள்ள மரம் 'காமரம்' என்று பொருள் கொள்ளல் வேண்டும். அந்த அளவுக்குப் பரந்து விரிந்து அகன்று உயர்ந்தது ஆல மரம். இதற்குச் சான்றாக, சில ஆல மரங்களின் தோப்புத் தோற்றத்தின் விளக்கம் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் உள்ளவாறு வருமாறு:

'கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள ஆலமரம், 1782- இல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம், கிழக்கு மேற்கில் 300 அடி, தெற்கு வடக்கில் 288 அடி, அடி மரத்தின் சுற்றளவு 57 அடி, முடியின் சுற்றளவு 93.8 அடி, அயோத்தியா காண்ட ஆழ் கடல் 123

உயரம் 85 அடி. நிலத்தில் வேர் ஊன்றிய விழுதுகள் 464. அது நிற்கும் நிலப்பரப்பு 1 ஏக்கர். சத்தாரா (மகா ராட்டிரம்) மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி-மே 442 அடி, தெ-வ 595 அடி, முடியின் சுற்றளவு 1587 அடி இருந்ததென்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக்கூடிய ஒரு மரம் நருமதையாற்றுத் திட்டு ஒன்றில் இருந்ததென்றும், இருபதினாயிரம் மக்களுக்கு நிழல் தரக் கூடிய மரம் ஆந்திரப் பள்ளத்தாக்கில் இருந்ததென்றும் அறியப்படுகின்றன.

இது, 1954- இல் வெளியான தமிழ்க் கலைக் களஞ்சியம்- முதல் தொகுதியில் உள்ளது. கல்கத்தாவில் உள்ள ஆலமரம் இப்போது இன்னும் விரிவடைந்திருக்கலாம் அல்லவா? தமிழ் நாட்டில் சென்னை- அடையாறில் உள்ள ஆலமரமும் இங்கே குறிப்பிடத் தக்கது. ஓரளவு மிகவும் பெரியதாகிய இந்த ஆலமரம் பலரும் சென்று பார்க்கும் காட்சிப் பொருளாக உள்ளது. அண்மையில் இதில் சிதைவு ஏற்பட, பின்னர் ஒரளவு சரி செய்யப் பட்டுள்ளது.

சுமந்திரன் மீட்சிப் படலம்

முதலிய

தன்னை அழைத்துச் செல்ல வந்த சுமந்திரனிடம் இராமன் பின்வருமாறு ஆறுதல் மொழி கூறி அனுப்புகிறான்:

முந்தினை முனிவனைக் குறுகி முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறி..

.
(32)

என்பது பாடல் பகுதி. இங்கே, பலரும் எளிமையாகப் பயன்படுத்துகிற முதலிய என்னும் சொல்லாட்சியைக் காணலாம். 124 ) சுந்தர சண்முகனார்

வணக்கம்

ஒருவரை ஒருவர் காணும்போது, நமஸ்தே நமஸ்காரம் எனச் சமசுகிருதத்திலும் Good Morning Good Evening என ஆங்கிலத்திலும், Bon Jour-Bon Soir எனப் பிரெஞ்சிலும், அஸ்ஸலாமு அலைக்கும்' என அரபு மொழியிலும் கூறிக் கொள்வது நீண்ட காலமாகத் தமிழகத்தில் ஒரு மரபாக இருந்து வந்தது. இந்தக் காலத்தில் தமிழர்க்கு ஒரளவு மான உணர்வு ஏற்பட்டதன் விளைவாக "வணக்கம்' என்று கூறும் மரபு பெரும்பான்மையாக உள்ளது. இந்தச் சொல்லைக் கம்பர் பயன்படுத்தி யுள்ளார். சுமந்திரனிடம் சீதை சொல்வதாக உள்ளது இது. அரசர்க்கும் (தயரதனுக்கும்) அத்தைமார்க்கும். தனது வணக்கத்தைத் தெரிவிக்கும்படி சீதை கூறினாள்:

அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பி...

(39)

என்பது பாடல் பகுதி.

குகப் படலம்

நாள் முதல்

ஒரு நாளின் தொடக்கப் பகுதியாகிய- முதல் பகுதியாகிய காலை நேரத்தை நாள் முதல்' என்னும் தொடரால் கம்பர் குறிப்பிட்டுள்ளார். நாள் முதலில் இராமன் (காலைக்) கடனை முடித்தானாம்:

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடரப் போனான்

(26). என்பது பாடல் பகுதி. அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 125

வனம் புகு படலம்

வருவான்

பவணந்தி தமது நன்னூல்- வினையியலில் வினை யெச்சங்கள் பற்றி,

செய்து செய்பு செய்யாச் செய்பூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற ஐந்தொன் நூறுமுக் காலமும் முறைதரும்

(24)

என்று கூறியுள்ளார். வான், பான் என்பன வினையெச்ச விகுதிகளாம். வருவதற்காக என்னும் பொருளில் உள்ள 'வருவான்' என்பது வான்’ விகுதிபெற்ற வினையெச்சம், உண்பதற்காக என்னும் பொருளில் உள்ள 'உண்பான்' என்பது பான் விகுதி பெற்ற வினையெச்சம்.

ஆனால், கம்பர், 'வருதல்’ என்னும் 'தல்' விகுதி ஏற்ற தொழிற்பெயர் போல வருவான்' என்பதைக் குறிப்பிட்டுள்ளார். காட்டில் பாரத்துவாச முனிவர் இராமனை நோக்கி, நீ தவக்கோலம் பூண்டு வந்தது- வருதல் ஏன்? என்று வினவுகிறார்:

தகவில் தவவேடம் தழுவினை வருவான் ஏன்
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான்

(24)

என்பது பாடல் பகுதி. இங்கே வருவான்' என்பதில் உள்ள வான் என்பது, வினையெச்ச விகுதியாயில்லாமல், தொழிற்பெயர் விகுதியாயுள்ளது. பேச்சு வழக்கிலும், வருவானேன்- கொடுப்பானேன்- என்ற வழக்காறு உண்டு.

சித்திர கூடப் படலம்

கட்டளை

பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என அறிவுறுத்துவதுபோல், பெண்கட்கெல்லாம் ஒரு மாதிரிப் 126 - சுந்தர சண்முகனார்


பெண்ணாக- ஓர் எடுத்துக்காட்டுப் பெண்ணாகச் சீதை. விளங்குகிறாள் என்னும் பொருளில் கட்டளை' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே (33):

என்று இராமன் சீதையை விளிக்கிறான்.

மிதிலை நாடியர்

நாடன் என்னும் ஆண்பால் பெயருக்கு நேரான பெண்பாலாக 'நாடி' என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. சீதை மிதிலை நாட்டாள்' என்னும் பொருளில் மிதிலை நாடி என்று குறி ப் பி ட ப் பட்டுள்ளாள்:

வேறிடம் வீரற்கும் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றி

(46)


என்பது பாடல் பகுதி. இலக்குவன் இராமனுக்கும், சீதைக்கும் தனியிடம் அமைத்துக் குடில் காட்டினானாம்.

பள்ளி படைப் படலம்

திருமுகம்

கடிதம் 'திருமுகம்' என்னும் அழகிய- மங்கலமான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. தயரதனது மடலைத் தூதர்கள் பரதனிடம் தந்தார்களாம்.

கொற்றவன் திருமுகம் கொள்க என்றார் (4)

என்பது பாடல் பகுதி.

வில்லின் வேதியர்

பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குப் புறப் பட்டபோது, வில்லின் வேதியர் முதலான படைஞர்களும் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 127

உடன் வந்தனராம். வேதியர் என்றால் வேதம் கற்றவர் என்று பொருளாம். வில்லின் வேதியர் என்றால், வில்வேதம் அதாவது வில்கலை பற்றிய நூல் கற்றவர் என்று பொருளாகும். இந்தப் பெயர் சுவையாயுள்ளது.

வில்லின் வேதியர் வாள்செறி வித்தகர். தொல்லை வாரணப் பாகரும் சுற்றினார் (13)

பகல் நீந்தி

பரதன் கேகய நாட்டிலிருந்து ஏழு பகல் நீந்தி அயோத்தியை அடைந்தானாம். கடந்து என்பதற்கு நீந்தி என்று கம்பர் கூறியுள்ளார். அந்தக் காலத்துப் பயணங்கள் நீரில் நீந்துவதுபோல் பாடுபட்டுச் செய்ய, வேண்டிய ஒன்றாகும் என்பது இதனால் புலனாகிறது.

ஆறும் கானும் அகல் மலையும் கடந்து ஏறி ஏழ் பகல் நீந்தி (18)

என்பது பாடல் பகுதி. இங்கே, ஆறும் காணும் அகல். மலையும் கடந்து' என்பது குறிப்பிடத் தக்கது.

ஆறு செல் படலம்

உடுபதி

பரதன் இராமனை அழைத்துவரப் போகிறான்;. எல்லாரும் புறப்படுங்கள் என்ற செய்தியைக் கேட்டதும், திங்கள் (சந்திரன்) தோன்றின் கடல் பொங்குதல் போல, நகர மக்கள் மகிழ்ச்சி எய்தினராம்:

முடுகுக என்ற சொல் முரி மாநகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே

(24)

என்பது பாடல் பகுதி. இங்கே திங்கள் உடுபதி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். உடு - விண்மீன்; பதி - கணவன்; 128 சுந்தர சண்முகனார்

உடுபதி = அசுவனி, பரணி முதல் இரேவதி முடிய உள்ள இருபத்தேழு விண்மீன்களும் பெண்களாம்; இவை இருபத்தேழும் சோமனின் (திங்களின்) மனைவிமார்களாம். ஏழைப் புலவர் ஒருவர் கூறியுள்ளார்: வானில் உலவும் சோமனுக்குத் (திங்களுக்குத்) தையல் (மனைவியர்) இருபத்தெழுவர் (27 பேர்); ஆனால் என் இடையில் (இடுப்பில்) உலாவும் சோமனுக்கோ (உடைக்கோ) தையல் (கிழிசல்களை மூட்டித் தைத்த தையல்) எண்ணித் தொலைக்க முடியாது- என்னும் பொருளில் ஒரு வேடிக்கைத் தனிப் பாடல் கூறியுள்ளார்.

வான் உலாவும் சோமனுக்கோ தையல் இருபத்தேழு
என் இடை உலாவும் சோமனுக்கோ தையல் எண்ணித் தொலையாது

என்பது பாடல் பகுதி. சில விண்மீன்களின் கணவன் திங்கள் என்னும் பொருளில் திங்களை உடுபதி' எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் என்பது இதனாலும் புலனாகும்.

கடல்கள்

சமுத்திரத்தைக் குறிக்கப் பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் சொற்கள் உள்ளன. பரதனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாள் படை என்னும் கடல் போன்ற நான்கு பெரும் படைகளும் சென்றனவாம். ஒவ்வொரு படையையும் முறையே பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் சொற்களால் கம்பர் குறிப்பிட்டிருப்பது சுவையாயுள்ளது. பாடல்:

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி, கார்க் கடல் ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது பதாதிப் பெளவமே

(32) அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 129
கங்கை காண் படலம்

வில்லின் கல்வியான்

குகன் வில் பயிற்சிக் கல்வியில் வல்லவனாம். வில் பயிற்சியாகிய படைப் பயிற்சியும் ஒருவகைக் கல்வியாகும். படைப் பயிற்சிக் கல்லூரி இப்போது இராணுவக் கல்லூரி எனப்படுகிறது. எனவேதான்,

மெய்உறு தானையான் வில்லின் கல்வியான் (8)

என்று குகனைக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கங்கை வேடனாகிய குகனைப் போலவே, காளத்தி வேடனாகிய கண்ணப்பனும் படைப் பயிற்சிக் கலை முதலியவற்றில் இளம் பருவத்திலேயே வல்லவனாயிருந்தான். இதனால், சுந்தரர் தமது தேவாரம்- திருத் தொண்டத் தொகை- என்னும் பகுதியில்,

கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்

என்று கண்ணப்பனைக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

குறி

சுமந்திரன் பரதனுக்குக் குகனைப் பற்றி அறிமுகம் செய்கையில், அவன் குகன் என்னும் 'குறி உடையான் எனக் கூறினான். 'குறி' என்பது, ஈண்டு ஒருவகை அடையாளமாகிய பெயரைக் குறிக்கிறது.

கொங்கலரும் நறுந்தண் தார்க்கு குகன் என்னும் குறி உடையான் (25)

என்பது பாடல் பகுதி. குறி என்னும் சொல்லாட்சி சுவை பயக்கிறது

பூவில் பூட்டிய கையன்

குகன் பரதனின் காலில் விழுந்து கையால் காலைக் கட்டிக்கொண்டு வணக்கம் செய்தானாம். பரதனின் அ. ஆ.-9 130 ) சுந்தர சண்முகனார்

காலாகிய தாமரைப் பூவில் கையைப் இறுகப் பூட்டிக் கொண்டானாம்.

தீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன் பொய்யில் உள்ளத்தன் புகல லுற்றான்

(34)

என்பது பாடல் பகுதி. பூட்டிய' என்பது, இறுகப் பிடித்துக் கொண்டதான பொருளைத் தந்து சுவையூட்டுகிறது.

மண்ணு நீர் ஆட்டல்

காட்டில் இராமன் படுத்திருந்த மண் பகுதியை அறிந்து நோக்கிப் பரதன் அழுதானாம். அதாவது, அவன் கண்களிலிருந்து நீர் அந்த மண் பகுதியின் மேல் கொட்டிற்றாம். கடவுள் வழிபாட்டில் நீராட்டுதல் (அபிஷேகம் செய்தல்) என்பது ஒரு பகுதி. இங்கே, இராமன் படுத்திருந்த மண் பகுதியை, பூசனை செய்வது, போல் கண்ணிரால் நீராட்டினானாம்.

வார்மணிப் புனலால் மண்ணை
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்

(39)

என்பது பாடல் பகுதி. மண்ணு நீர் என்பது நீராட்டும் (அபிஷேக) நீர் எனப் பொருள்படும். மண்ணுதல் என்பதற்குக் குளித்தல்- தூய்மை செய்தல் என்னும் பொருள் உண்டு.

மடல் பெரிது தாழை மகிழ்இனிது கந்தம் உடல் சிறியர் என்றிருக்கவேண்டா- கடல்பெரிது மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்

(12)

என்னும் ஒளவையின் மூதுரை நூல் பாடலிலே உள்ள மண்ணீர்' என்பது, தூய்மை செய்யக் குளிக்கும் நீர் என்னும் பொருள் தருவது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ‘மண்ணை மண்ணு நீர் ஆட்டும்' என்னும் கம்பரின் சொற்றொடர் ஆட்சி சுவையானது. அயோத்தியா காண்ட ஆழ் கடல் 131


திருவடி சூட்டு படலம்

சிறுமை செய்தல்

கடலினும் பெரிய வில்படையுடன் வரும் பரதனை இலக்குமணன் நோக்கினான். பரதனது பெரும்படை, கடலைச் சிறுமை செய்து விட்டதாம். அதாவது, அந்தப் படையை நோக்கக் கடல் சிறியதாகத் தோன்றுகிறதாம்:

செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான்

(26)

என்பது பாடல் பகுதி. கடலினும் பெரிய படை என்று கூறுவதற்குப் பதிலாகக் கடலைச் சிறுமை செய்த படை என்னும் சொற்றொடர் ஆட்சி இன்பூட்டுகிறது.

ஒருமை

பரதன்மேல் சினம் கொண்ட இலக்குமணன் இராம னிடம் கூறுகிறான்:- பரதனது தோளின் பருமையையும் அவன் சேனையின் பெருமையையும் எனது ஒருமையையும் காண்- என்கிறான். அதாவது, பருத்த தோள் வலிமை உடைய பரதனையும் அவனுடைய பெரிய சேனையையும் யான் ஒருவனே வெல்வேன் என்னும் பொருளில் இலக்குமணன் முழங்குகின்றான்.

இருமையும் இகழ்ந்த அப் பரதன் ஏந்துதோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் கின்ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம்நீ

(30)

என்பது பாடல். ஈண்டு 'ஒருமை’ என்பது, தான் ஒருவனே வெல்ல முடியும்- என்னும் பொருளில் உவகை ஊட்டுகிறது. 132 சுந்தர சண்முகனார்

வலியனோ?

தன்னை வணங்கிய பரதனை நோக்கி, நம் தந்தை வலிமையுடன்- நலமுடன் உள்ளாரா என இராமன் வினவினான்:

மல்உயர் தோளினான் வலியனோ என்றான் (56) என்பது பாடல் பகுதி. நலமோ என்னும் பொருளில் உள்ள வலியனோ' என்னும் சொல்லாட்சியில் புதுமை பூத்துள்ளது.

இவ்வாறு இன்னும் பல முத்தான சொல்லாட்சி களையும் சொற்றொடர் ஆட்சி முத்துகளையும் கம்பர் தம் நூலில் பெய்து, கற்போரின் உள்ளங் கவர்ந்துள்ளார்.