அயோத்தியா காண்ட ஆழ்கடல்/கருத்து வெளியீட்டில் புதுமைப் பொலிவு
நால்வர்
ஒரு கருத்தை வெளியிடுவதில் பலர் பல முறைகளைக் கையாளலாம். கம்பர் கருத்தை வெளியிடும் முறையோ புதுமையாய்ப் பொலிவு பெற்றிருக்கும். அவற்றுள் சில காணலாம்:
தயரதனது அவைக்கு எழுந்தருளிய வசிட்ட முனிவனது பெருமையைக் கம்பர் மிகவும் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளார். மற்ற அரசர்கட்குத் தயரதன் ஆணையிடுவானாம். அத்தகைய மன்னனுக்குக் கடவுள் போல் வசிட்டன் ஆணையிடுவானாம். வசிட்டனைத் தேவரும் மற்ற முனிவர்களும் வணங்குவராம். உயர் கடவுளர்கள் மூவர் (மும்மூர்த்திகள்) எனவும், அவர்கள் சிவன், திருமால், நான்முகன் என்பவர்கள் எனவும் கூறுவது ஒரு வகை மரபு. அந்த மூவரை அடுத்து நான்காம் கடவுளாக வசிட்ட முனிவன் உயர்த்தப் பட்டுள்ளான்.
88 - சுந்தர சண்முகனார்
பூவரு பொலன் கழல் பொரு இல் மன்னவன் காவலின் ஆணைசெய் கடவு ளாம்எனத்
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வராம் முனிவந்து எய்தினான்
என்பது பாடல். முனிவர்கட்குள் வசிட்டர் சிறந்தவர் என்பதைச் சிவப்பிரகாசரும் தம் பிரபுலிங்க லீலைகைலாச கதியில் குறிப்பிட்டுள்ளார். கைலையில் கொலு வீற்றிருக்கும் சிவனது அவைக்கு வசிட்டர் முதலான முனிவர்கள் வந்தனர் என வசிட்டனுக்கு முதன்மை கொடுத்துள்ளார் சிவப்பிரகாசர்.
கழியு மாறுமுக் காலமும் உளர்தளை கழன்றார் பழியிலா வதிட்டாதி மாமுனிவரர் பரந்தார்
என்பது பாடல் பகுதி, வதிட்டர்=வசிட்டர். இந்தக் கடவுளர் மூவரை வைத்து மற்றொருவரைச் சிறப்பிக்கும் பழக்கம் கம்பருக்கு உண்டு. யுத்த காண்டம்- மாயா சீதைப் படலத்தில், முதன்மைக் கடவுளர் மூவர் என எண்ணற்ற பலர் எண்ணுகின்றனர். அனுமனையும் சேர்த்து முதன்மையர் நால்வர் எனக் கூறவேண்டும் என அனுமனைச் சிறப்பித்துள்ளார்:
இறைவர் மூவர் என்பது எண்ணிலார் எண்ணமேதான்
அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா (5)
கம்பரின் இந்த முறை ஒரு புது முறையாகத் தோன்றுகின்றதன்றோ?
தம் கருமம்
தயரதன் தான் முடி துறந்து இராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன் என அவையோரிடம் கூறியபோது, 'இது வரை உலக உயிர்கட்கு நல்லன செய்தேன்; இனி என் உயிர்க்கு உறுதி தேட விழைகிறேன்' என்று கூறுகிறான்: அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 88
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் (14)
என்பது பாடல் பகுதி. தயரதன் தன் உயிர்க்கு உறுவது செய்தல் என்பது தவம் செய்தலே. இந்தச் செய்தி, ஒரு திருக்குறளுக்கு நல்ல எடுத்துக் காட் டாய் உள்ளது.
தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு (266)
என்பதுதான் அந்தக் குறள். இங்ங்னமாக, தான் முடி துறக்கப் போவதை, தவம் செய்யப் போவதாகத் தயரதன் அறிவித்துள்ளான். மூப்பு வீடு உலகப் பற்றிலிருந்து விடுபட (வீடு பெற) வேண்டும் என மாந்தர்க்கு முதுமை அறிவிக்கின்றதாம். இதனை, விரும்பிய முப்பு எனும் வீடு கண்ட யான் (15) என்னும் பகுதி அறிவிக்கின்றது.
ஐந்து தேர்
கைகேயி கையில் கோல் (சவுக்கு-சாட்டி) கொண்டு குதிரைகளை அதட்டித் தேரைச் செலுத்தியுதவ, சம்பராசுரனுடைய பத்துத் தேர்களை வென்ற யான், மனம் என்னும் பேய் ஏறிச் செலுத்தும் மெய்- வாய்- கண்-மூக்கு- செவி என்னும் ஐம்பொறிகளாகிய- ஐந்து தேர்களை வெல்லுதல் எனக்கு அரிது அன்று- எளியதே எனத் தயரதன் கூறினான்:
பஞ்சி மென் தளிர் அடிப் பாவை கோல் கொள வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு எஞ்சலில் மனமெனும் இழுதை ஏறிய அஞ்சுதேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? (18). 90 () சுந்தர சண்முகனார்
என்பது பாடல். "கோல் கொளல்" என்பது சுற்றி வளைத்துத் தேர் ஒட்டுதலைக் குறிக்கிறது. மனத்தை (இழுதை) கழுதை என்றுளார். மனம் ஐம்பொறிகளாகிய ஐந்து தேர்களை ஒட்டுகிறது என்னும் உருவகக் கருத்து, இந்தக் கால அறிவியல் கருத்தோடும் ஒத்திருக்கிறது. மூளையின் இயக்கமே மனம் எனப்படுவது. ஐம்பொறி களின் வாயிலாக, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலங்களை மூளையே அறிந்து நுகர்கிறது. எனவே, மனம் என்னும் பேய் ஐம்பொறிகளாகிய ஐந்து தேர்களை ஒட்டுவதாகக் கூறியிருப்பது சாலப் பொருந் தும். மனம் கண்டபடி அலைதலால் அது பேய் எனப் பட்டது.
இனியது போலும்
அரசாள்வது உண்மையில் இனிது அன்று; ஆனால் மேலோடு பார்க்குங்கால் இனியது போலத் தோன்றும்; மற்றபடி இது துன்பமேயாம்- என்பதாகத் தயரதன் கூறுகிறான்:
உள்ளம், இனியது போலும் இவ்வரசை எண்ணுமோ (22)
என்பது பாடல் பகுதி. ஈண்டு, அரசாள்வது துன்பமே எனச் சேரன் செங்குட்டுவன் கூறுவதாகச் சிலப்பதி காரம்- கட்டுரை காதையில் உள்ள பகுதி ஒப்பு நோக்கத் தக்கது.
மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்... (100-104)
என்பது சிலம்புப் பகுதி. அயோத்தியா காண்ட ஆழ் கடல் 91
எச்சில் நுகர்வு
பல்லாண்டுகளாக நுகர்ந்து கழித்த எச்சிலை மீண்டும் நுகர்வது (அரசாள்வது) இன்பமானது அன்று என்று தயரதன் கூறுகிறான்:
..........நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகர்வது இன்பம் ஆகுமோ?
என்பது பாடல் பகுதி. இதேபோல் புத்தரும் கூறியது ஈண்டு நினைவைத் தூண்டுகிறது. காட்டிற்கு வந்துவிட்ட புத்தரை, அமைச்சரும் அரசவைப் புலவரும் அடைந்து, மீண்டும் வந்து அரசேற்கும்படி வேண்டினர். அதற்குப் புத்தர் கூறியது:
- எறிந்து விட்ட எச்சிலை மீண்டும்
அருந்தி நுகர்வது அளவிலா மடமையாம்
பூமகள் திருமணம்
அடுத்து, தயரதன் கூறுகின்றான்: இராமன் முடி சூடிக் கொள்வதைக் கண்டு யான் மகிழ வேண்டும் என்னும் கருத்தை வேறு உருவத்தில் உரைக்கிறான். இராமன் சீதேவியை (சீதையை) மணந்து கொண்ட திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்; அவன் பூதேவியையும் மணந்து கொள்ளும் திருமணத்தைக் காண விழைகின்றேன்- என்கிறான். பூதேவியை மணப்பது என்றால், முடிசூடிக் கொண்டு நிலத்தை (பூமியை) ஆள்வதாகும். இராமனாக வந்து பிறந்திருக்கும் திருமால் திருமகள், நிலமகள் (பூமாதேவி) ஆகிய மனைவியரை உடையவர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. ____________________________________________________
- கவுதமப் புத்தர் காப்பியம்- அமைச்சரும் புலவரும்
அழைத்த காதை- சுந்தர சண்முகனார். 92 - சுந்தர சண்முகனார்
பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திருமகள் மணவினை தெரியக் கண்டயான் அருமகன் நிறை குணத்து அவனிமாது எனும் ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்
என்பது பாடல். இந்தக் கருத்து வெளியீடு புதுமையாய்ச் சுவை பயக்கின்றதன்றோ?
உயிர்க்கெலாம் நல்லன்
இராமனுக்கு முடி சூட்டுவதற்கு உடன்பட்டு வசிட்டன் பேசும் போது பின்வருமாறு இராமனைப்பற்றி ஒரு கருத்து கூறுகிறான். மன்னா, இராமன் உன் உயிர்க்கு மட்டும் நல்லது செய்பவன் என்று கூறுதல் தக்கதன்று; உன் உயிர்க்குப் போலவே உலகத்து உயிர்க் கெல்லாம் நன்மை செய்பவன் இராமன்:
தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த உன் உயிர்க்கு என, நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய்
(37)
இங்கே, தம் மக்களின் அறிவுடைமை, தம்மைக் காட்டிலும் (அல்லது தம்மைப் போலவே) உலகத்து உயிர்கட்கு எல்லாம் இனிமையாய்த் தோன்றும்- என்னும் கருத்துடைய
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68)
என்னும் திருக்குறட் பாடல் ஒப்புநோக்கி மகிழ்தற்கு உரியது.
அகமும் முகமும்
இராமனுக்கு முடிசூட்டலாம் என்று வசிட்டன் அறிவித்தபின், அமைச்சர்கள் அனைவரும் வாயால் ஒன்றும் சொல்லலர். ஆனால் அவர்களின் முகமாகிய ஒலையில், இராமனுக்கு முடிசூட்டலாம் என்பது எழுதப் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 93
பட்டிருந்ததாம்- என்று சுமந்திரன் கூறினான். அதாவது, அவர்களின் முகக் குறிப்பு உடன்பாட்டை அறிவித்ததாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்னும் முன்னோர் மொழியும்,
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
என்னும் குறட்பாவும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. மற்றும், உலகியலில், ஒருவர் மற்றொருவரை நோக்கி 'நீ இப்பேர்ப்பட்டவன் என்று உன் முகத்தில்- நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதே என்று கூறும் வழக்காறும் ஈண்டு எண்ணி மகிழ்தற்கு உரியது. பாடல்:
பழுதில் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் இறை மகற்கு ஏற்கத் தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும்
கொடிய அறம்
சில நேரங்களில் அறம் கொடியதாய்த் தோன்று மாம். சுமந்திரன் கூறுகிறான்: இராமனுக்கு முடிசூட்டு என்ற செய்தியால் உண்டாகும் குளிர்ச்சியை, தயரதனைப் பிரிதல் என்னும் நெருப்பு சுடுகின்றதாம். என் செய்வது! "தந்தைக்குப் பின் மைந்தன்' என்பது தொன்று தொட்டு வரும் அறமாயிற்றே. அங்ங்னமெனில், இத்தகைய அறத்தைவிடக் கொடியது வேறொன்றும் இருக்க முடியாது என்கிறான். உண்மையில் அறம் கொடியதன்று. ஈண்டு அவ்வாறு கூறியிருப்பது ஒருவகை எதிர்மறைப் புது நோக்காகும் பாடல்:
உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை
துறத்தி நீ எனும் சொல் சுடும்; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று;
அறத்தி ன்னூங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ?
அளக்கும் முறை
காவல் (போலீசு) துறைக்கும் போர்த்துறைக்கும் தேர்ந்தெடுக்கும் ஆட்களின் உடம்பை அளப்பது வழக்கம். இங்கே, தயரதன், தம் மகன் இராமனுக்கு நாடாளும் உடல் வலிமை இருக்கிறதா என அளக்கிறான். ஏதாவது அளவுக் கருவி கொண்டு அளந்தானா? இல்லை. இராமனைக் கட்டித் தழுவிக்கொண்டு, தன் தோள்களால் இராமனின் தோள்களையும், தனது மார்பால் இராமனது மார்பையும் அளந்தானாம்- இயற்கையாகத் தழுவியதை அளப்பதற்காகத் தழுவியதாகக் கம்பர் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார். பாடல்:
நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதென் நனிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்ன திண்தோளையும் மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்புகொண்டு அளந்தான்
சொல் மறா மக
மறுக்காமல் முடிசூடிக் கொள்ளுமாறு இராமனிடம் தயரதன் கூறுகிறான். அரசரோ- தேவரோ- இந்திரன் போன்றவரோ- தவசியரோ- துன்பம் நீங்கியவர் அல்லர், ஆனால், பெற்றோர் சொல்லை மறுக்காத பிள்ளையைப் பெற்றவரே துன்பம் இல்லாதவராவர்.
மன்னர் வானவர் அல்லர்; மேல் வானவர்க் கரசாம் பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்; பின்னும் மாதவம் தொடங்கி நோன்பு இழைத்தவ ரல்லர்;
சொல் மறா மகப் பெற்றவரே துயர் துறந்தார்
என்பது பாடல். ஈண்டு, ஏவாமலே குறிப்பறிந்து பணிபுரியும் மக்களே, இறப்பைத் தராத அமிழ்தம் போன்றவராவர் என்னும் கருத்துடைய 'ஏவா மக்கள் முவா மருந்து" என்னும் ஒளவையின் கொன்றை வேந்தன் மொழி (8) ஒப்பு நோக்கத் தக்கது அயோத்தியா காண்ட ஆழ் கடல் 95
கடனும் நீதியும்
முடிசூடிக் கொள்வதற்கு இராமன் உடன்பட்டான் என்பதைக் கூறவந்த கம்பர் ஒரு தொடரில் அதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அவர் அதை எவ்வாறு கூறுகிறார்?:- முடிசூடிக்கொள் என்று சொன்னதும், இராமன், விருப்போ வெறுப்போ கொள்ளவில்லை; இது தனது கடமை என்றும், தந்தையும் அரசனுமாகியவர் கூறுவதை ஏற்பதே அறம் என்றும் கருதி உடன்பட்டானாம்.
தாதை அப்பரிசு உறை செயத் தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்தும்,
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு என நினைந்தும் அப்பணி தலைநின்றான்
சீதையின் சிறந்தன
தன்னிடம் வந்த சிற்றரசர்களை நோக்கித் தயரதன், இராமனுக்கு முடிசூட்டப் போகிறேன் என்று நேரில் வெளிப்படையாய் அறிவிக்கவில்லை. 'இராமனுக்கு அரசச் செல்வமும் நாடும் சீதையைப் போலவே சிறந்தனவாகப் போகின்றன என்கிறான். சீதையை அடைந்தது போலவே, திருவும் பூமியும் அடையப் போகிறானாம். பாடல்:
நிருபர் கேண் மின்கள் இராமற்கு நெறி முறைமையினால்
திருவும் பூமியும் சீதையின் சிறந்தன என்றான்
இராமனுக்கு முடிசூட்டுவதற்கு உடன்படுகின்றோம் என்று மன்னர்கள் கூறியதைக் கம்பர் நயம்படப் பின்வருமாறு கூறியுள்ளார்: ஊரார் நீர் உண்ணும் ஊருணி நிறைவதையும், பயன் மரம் பழுப்பதையும், முகில் மழை பெய்வதையும், கழனிக்கு நீர் பாய்ச்சும் ஆற்றில் தண்ணிர் நிறைவதையும் கூடா என மறுப்பவர் யார்? யாரும் இலர். அதுபோலவே இராமனது முடிசூட்டை, 96 சுந்தர சண்முகனார்
மறுப்பவர் யாரும் இல்லை; அனைவரும் உடன்படு கிறோம். பாடல்:
ஊருணி நிறையவும், உதவும் மாடுயர்
பார்கெழு பயன்மரம் பழத்தற் றாகவும்,
கார்மழை பொழியவும், கழனிபாய் நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் ?
பூண்ட காதலர்
இராமனுக்கு முடிசூட்டு என்பதால் மகிழ்ந்த மங்கையர் நால்வர் விரைந்து ஒடிக் கோசலைக்கு இதைக் கூறினராம். இப்பெண்டிரின் மகிழ்ச்சி மிகுதியையும் அவர்களின் ஒட்டத்தின் விரைவு மிகுதியையும் பின் வருமாறு கம்பர் கூறியுள்ளார். மகிழ்ச்சி கொண்ட பெண்டிர் நால்வரும் விரைந்து ஒடியபோது, மார்புக் கச்சு அவிழ்ந்து தெரியும் கொங்கையினராகவும், அவிழ்ந்து தொங்கும் நீண்ட கூந்தலராகவும், அவிழ்ந்தகலைந்த உடையினராகவும் ஓடினராம். ஆனால், துள்ளித் துள்ளி ஒடும் ஒட்டத்தின் விரைவினால், சிறிய இடுப்பு இன்னும் ஒடியவில்லையாம். ஆடுகின்றனராம்; பண்ணோடு பொருந்தாமல் கண்டபடி பாடுகின்றனராம்; பார்த்தவர்களை எல்லாம் கைகூப்பிக் கும்பிடுகின்றனராம்; என்ன சொல்வதென்று அறியாமல் தவிக்கின்றனராம்.
ஆண்ட அந்நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர்
ஈண்ட ஓடினர் இட்டு இடை இற்றிலர்
ஆடு கின்றனர் பண் அடைவு இன்றியே
பாடு கின்றனர் பார்த்தவர்க்கே கரம்
சூடு கின்றனர் சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே
என்பன பாடல்கள். நால்வர் பெண்டிரின் உவகை மிகுதியையும் ஒட்டத்தின் விரைவு மிகுதியையும் இதனினும் இன்னும் எவ்வாறு அணிந்துரைக்க முடியும்? கருத்து வெளியீட்டுச் சிறப்பில் கம்பர் உயர் எல்லைக்குப் போய்விட்டிருக்கிறார்!
முந்து வான்
தயரதனின் வேண்டுகோள்படி, முடிசூட்டலை அறிவிப்பதற்காக, வசிட்டன் இராமன் மாளிகைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து சென்றானாம்.
முனிவனும், உவகையும் தானும் முந்துவான் மனுகுல நாயகன் வாயில் முன்னினான்
என்பது பாடல் பகுதி. 'உவகையும் தானும் முந்துவான்' என்ற தொடர் மிகவும் சுவைக்கத் தக்கது. ஒட்டப் பந்தயத்தில், சில நேரங்களில், ஒருவரை ஒருவர் மாறி மாறி முந்திக் கொண்டு ஒடுவது வழக்கம். அதுபோல இங்கே, மகிழ்ச்சியும் தானும் மாறி மாறி முந்திக்கொண்டு விரை கின்றனராம். அதாவது, மிக்க மகிழ்ச்சியோடு விரைந்து சென்றான் என்பது இதன் உட்பொருள்.
நோற்ற தாமரை
கைகேயிக்கு இராமனது முடி சூட்டு பற்றிச் சொல்லக் கூனி சென்று, உறங்கிக் கொண்டிருந்த கைகேயியின் காலைத் தொட்டு எழுப்பினாளாம். முகம், கண், கை, கால் ஆகிய உறுப்புகட்குத் தாமரையை உவமிப்பது இலக்கிய மரபு. கைகேயியின் காலுக்கு ஒப்புமையாவதற்குத் தாமரை தவம் கிடந்ததாம். அத்தகைய காலைத் தொட்டு எழுப்பினாளாம் கூனி.
எய்தி அக்கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
அ. ஆ.-7 98 - சுந்தர சண்முகனார்
செய்தபேர் உவமை சால் செம்பொன் சீறடி கைகளின் தீண்டினள் காலக் கோள் அனாள்
சிலர் தண்ணிரில் இருந்துகொண்டு தவம் புரிவர்; சிலர் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிவர். ஆனால் தாமரை ஒன்றே இந்த இரண்டு செயல்களையும் செய்கிறதாம். தண்ணீரில் ஒற்றைக் காலுடன் (ஒரு தண்டுடன்) நின்று பெரிய தவம் புரிகிறதாம் எனவே தான், தாமரை நோற்ற நோன்பு' எனப் பொருத்தமாகக் கம்பர் அணிந்துரைத்துள்ளார். இதனால் தாமரைக்கு “மாதவம் புரிவாள்' என்னும் பெயரும் உண்டு.
இரக்கம் இன்மையின் நன்மை
தயரதன் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் கைகேயிக்கு இரக்கம் இல்லாது போனதால், இராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது. இதை அறிவிப்பதில் கம்பர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது:- கைகேயிக்கு இரக்கம் இல்லாததால் ஒரு பெரிய நன்மை ஏற்பட்டதாம். அதாவது, கைகேயிக்கு இரக்கம் இல்லாததால் இராமன் காட்டிற்குப் போக நேர்ந்தது. அதனால் இராமனது சிறந்த பண்புகள் வெளிப்பட்டன. அதனால் பெரும் புகழ் உண்டாயிற்று. அந்தப் புகழ் என்னும் அமிழ்தத்தை உலகம் பருகுகின்றது- என்று கம்பர் பாடியுள்ளார். பாடல்:
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே (86)
_________________________________________________ 'மாதவம் புரிவாள்' என்பதன் விரிவான விளக்கத்தை எனது 'மாதவம் புரிவாள்' என்னும், நூலில் காணலாம். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 99
இந்தப் பாடலில் மற்றும் ஒரு புதுமை உள்ளது: கைகேயி தூய இனிய மொழி பேசக் கூடியவள்; இளைய மான் போன்றவள்; அத்தகையவள் அருள் துறந்து கடுமொழி பேசியதற்குக் காரணம், அரக்கர்கள் செய்த தீவினையும் மற்றவர்கள் செய்த நல்வினையுமேயாகும்என்பது தான் அந்தப் புதுமை!
பேயும் தரும்
தயரதன் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டா எனக் கைகேயியிடம் கெஞ்சுகிறான். தன்னிடம் ஒருவர் ஒர் உதவி கேட்டு வந்தால் பேயும் தாய்போல அவ்வுதவியைச் செய்யும். எனவே, கைகேயீ! நீ இந்த உதவியைச் செய்தால் எந்தப் பிழையும் வராது என்று கெஞ்சுகிறான்:
தாய்தந் தென்ன தன்னை இரந்தால் தழல் வெங் கண்
பேய்தங் தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ
நா அம்பு
தயரதன் கைகேயியை நொந்து திட்டுகிறான். நீ (கைகேயி) உன் நாக்காகிய அம்பால் என் உயிரை உண்டுவிட்டாய். இனி உலகம் பெண் பாவம்' என்றும் பாராமல் உனது உயிரை மாய்க்கும்.
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய்; இனி ஞாலம் பாவம் பாராது இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்
இப்பாடலில் நாக்கு அம்பாக உருவகிக்கப்பட்டுள்ளது. ஒருவர் நாவால் கெடு சொல் கூற, அதனால் மற்றொருவர் துன்பம் உறுதலைக் கண்டவர், அவன் நாக்கு என்ன நாக்கோ, என்று பழிப்பதை உலகியலில் காணலாம். மற்றும் ஒரு நயம் இதில் உள்ளது. சுவைத்து உண்பது 100 - சுந்தர சண்முகனார்
நாக்கு; எனவே, நாக்கால் உயிர் உண்டாய் என்று கூறியிருப்பது பொருத்தம். குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரை நாணும்படி நாவால் வைதுவிட்டால், வையப்பட்டவர், மானம் தாளாது, நஞ்சு அருந்தியோ தூக்குப் போட்டுக் கொண்டோ தற்கொலை செய்து கொள்ளும் உலகியல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
பிரித்த பந்தர்
இராமனது முடிசூட்டு விழாவிற்காக முத்துப் பந்தர் போடப்பட்டதுபோல் இரவில் வானில் விண்மீன்கள் பளிச்சு- பளிச்சு என மின்னிக்கொண்டிருந்தன. பொழுது புலர்ந்ததும், முத்துப் பந்தரைப் பிரித்ததுபோல் விண் மீன்கள் கண்கட்குப் புலப்படாமல் மறைந்தன.
வரித்த தண்கதிர் முத்த தாகி இம்மண் அனைத்தும் நிழற்றமேல்
விரித்த பந்தர் பிரித்த தாம்என மீன் ஒளித்தது வானமே
என்பது பாடல் பகுதி. வானில் இரவில் உள்ளது போலவே பகலிலும் விண்மீன்கள் உள்ளன. ஆனால், ஞாயிற்றொளி மிக்கதாய் இருப்பதால் விண்மீன்கள் பகலில் தெரியவில்லை. இதைக் கம்பர், வானம் விண் மீன்களை ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறது என்னும்மிகவும் நயமான பொருளில் 'மீன் ஒளித்தது வானமே" எனக் கூறியுள்ளார். இதே பாடலின் முதல் அடியில், 'சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமனை' என, இராமனின் கண்ணுக்குச் சிரித்த பங்கயம் ஒப்புமையாக்கப் பட்டுள்ளது. மலர்ந்த தாமரை என்னும் பொருளில் 'சிரித்த பங்கயம் என- பங்கயம் சிரிப்பதாகக் கூறியிருப்பது புதியதொரு சுவையாகும்.
நஞ்சினை இடுவார்
இராமனுக்கு முடி சூட்டு விழா நடக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியால், ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மடந்தையர், காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு அயோத்தியா காண்ட ஆழ் கடல் 101
பூசுகின்றனர்; கைகளில் வெள்ளை வளையல்களை நல்லனவாகத் தேர்ந்தெடுத்து அணிகின்றனர்; கண்கட்கு மை தீட்டுகின்றனர்; கூந்தலில் அன்றலர்ந்த மலரைச் சூடுகின்றனர்.
குஞ்சரம் அனையார் சிந்தைகொள் இளையார் பஞ்சினை அணிவார் பால்வளை தெரிவார் அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார் நாள்மலர் புனைவார்
குஞ்சரம் அனையார் = யானை போன்ற ஆடவர். இளையார்= இளம் பெண்கள். பால்வளை = வெள்ளை வளையல்கள். மங்கல விழாவில் வெள்ளை வளையல் அணிவது மரபு. வாள் அம்புகள் = ஒளி பொருந்திய அம்புகள் போன்ற கண்கள். அம்புகள் கண்களைக் குறிப்பது. இலக்கணத்தில் ஆகுபெயர் எனப்படும். அம்புகள் தைத்து வருத்துவதுபோல், அரிவையரின் கண் பார்வை ஆடவரின் உள்ளத்தைத் தைத்து வருத்துவதால், கண்கள் அம்புகள் எனப்பட்டன. அம்புகள் போன்ற கண்களில் அஞ்சனம் (மை) பூசினர் என வாளா கம்பர் கூறிவிடவில்லை; கண்களில் அஞ்சனம் (மை) பூசும் பெயரில் நஞ்சைப் பூசுகின்றனர் என்பது சுவைக்கத் தக்கது. ஏனெனில், அரிவை மார்களின் பார்வை ஆடவர்களை நஞ்சுபோல் துன்புறுத்துகிறதாம். இதில் இன்னொரு சுவையும் உள்ளது. போர்க்களத்தில் பயன் படுத்தும் அம்புகளின் நுனியில் நஞ்சைச் சேர்த்திருப்பார்களாம். அம்பு தைத்ததும், புண் உண்டாக, அந்தப் புண் வழியாக நஞ்சு உடலுக்குள் புகுந்து கொன்றுவிடுமாம்.
எனவேதான், கண்களாகிய அம்புகளில், அஞ்சன மாகிய நஞ்சை இடுகின்றார்களாம். இதில் மேலும் ஒரு சுவை உள்ளது! கண்களைச் சுற்றி மை தீட்டினால், முகம் மிகவும் கவர்ச்சியாயிருப்பதை யாரும் அறிவர். அதனால் தான் அஞ்சனம் நஞ்சின் இடத்தை இலக்கியத்தில் பெற்று விட்டது. 102 - சுந்தர சண்முகணார்
'இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில், பெண்களின் கண்கள் ஆண்களை வருத்துவதாகத் திருக்குறள்- காமத்துப் பாலில் உள்ள கருத்தையும் காண்போமே! ஒருத்தியைக் காதலிக்கும் ஒருவன் கூறுகிறான்: இவளுடைய கொடிய- வளைந்த புருவங்கள், கண்களைச் சுற்றி வளைத்துச் செல்லாமல், கண்களின் குறுக்கே, நேர் கோட்டில் சென்று கண்களை- கண்பார்வையை மறைத் திருக்குமாயின், இவள் கண்கள் நடுங்கத்தக்க துன்பத்தைக் கொடுத்திரா- என்ற கருத்துடைய குறள் வருமாறு:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன் இவள் கண்
இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து
என்னும் குறளும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
எங்கள் வாழ்க்கை
முனிவர் முதலியோர் பல கூறி இராமனை வாழ்த்து கின்றனர். அவற்றுள் ஒரு புது முறையான வாழ்த்தும் உள்ளது. "மைந்தனே (இராமனே)! யாங்கள் எத்தனை யாண்டு காலம் வாழவேண்டும் என அமைப்பு உள்ளதோ. அத்தனை யாண்டு காலங்களையும் உன் வாழ்நாளுடன் கூட்டி மிகவும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!- என்பது அது.
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கைநாள் யாவும் என்பார் (92)
என்பது பாடல் பகுதி. இது போன்ற ஒரு வாழ்த்து புறநானூற்றுப் பாடல் ஒன்றில் உள்ளது. சிறு குடி கிழான் பண்ணன் என்பவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாழ்த்துகிறான்: யான் வாழும் ஆண்டு காலம் எவ்வளவோ, அவ்வளவு ஆண்டு காலமும் கூட்டிப் பண்ணன் வாழ்க என்னும் பொருளில், அயோத்தியா காண்ட ஆழ் கடல் 103
யான் வாழு நாளும் பண்ணன் வாழிய (173)
என்று கூறி வாழ்த்தியுள்ளான். 'கல்வியில் பெரியராகிய கம்பர், இந்தப் புறநானூற்றுப் பாடலைப் படித்து இருக்கலாமோ!
புகழ் தழுவல்
மேலும் பெரியோர்கள் இராமனை வாழ்த்திப் புகழ் கின்றனர்:- கடலைத் தோண்டி உண்டாக்கிய சகரர் புகழும், கங்கையை நிலத்திற்குக் கொண்டு வந்த பகீரதன் புகழும், தேவர்களைக் காப்பதற்காக அரக்கர்களைக் கொன்று வென்ற முசுகுந்தன் முதலியோரின் புகழும் இராமனது புகழுக்குப் பிற்பட்டனவேயாம்- எனப் புகழ்கின்றனர்:
ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர், முந்தைப்
போர்கெழு புலவர்க் காகி அசுரரைப் பொருது வென்றோர்,
பேர்கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன்
தார்கெழு திரள் தோள் தந்த புகழினைத் தழுவி என்பார்
ஆர்கலி = கடல். புலவர் = தேவர். சகரர் என்பார் கடலைத் தோண்டி உண்டாக்கியதால்தான் கடலுக்குச் ‘சாகரம்' என்ற பெயர் உண்டாயிற்று. பகீரதனால் நிலத்திற்குக் கொண்டு வரப்பட்டதால் கங்கை பாகீரதி' என்னும் பெயர் பெற்றது. முசுகுந்தன், ககுத்தன் முதலியோர் அசுரரை வென்று தேவரைக் காத்தனர். இவர்கள் அனைவரும், இராமனது ஞாயிறு குலத்தவர் இராமன் குடியின் முன்னோர்கள். ககுத்தனது குடிவழி வந்ததால் இராமன் 'காகுத்தன்' எனப்படுகிறான்.
இவர்களின் புகழ்கள் இராமனது புகழுக்கு அடுத்தபடியான சிறப்புடையனவே யாம். இராமனுக்குப் புகழ் எப்படி வந்தது? இளமையிலேயே தன் தோள் வலிமையால் மறச் செயல்கள் புரிந்துள்ளான். அவை:- யாராலும் நகர்த்தவும் முடியாத வில்லை ஒடித்தமை; தங்கள் குல 104 - சுந்தர சண்முகனார்
எதிரியாகிய பரசுராமனை வென்றமை, விசுவாமித்திரனது வேள்வி காக்க அரக்கர்களைக் கொன்றமை, தாடகை வதம்- முதலியன. மற்றும், கல்லை மிதித்து அகலிகையை எழுப்பிய அறச் செயல்- இன்ன பிறவற்றால் இராமனது புகழ் மிகுதியாகும்.
மற்றவரின் புகழ்ச் செயல்கள் இராமன் புகழுக்குப் பிற்பட்டவை என்று கூறாமல், இராமனது புகழைத் தழுவி' என்று கூறியிருப்பதன் பொருத்தம் என்ன? ஒருவர் எழுதிய சிறந்த நூல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மற்றொருவர் எழுதிய நூலை முன்னதின் தழுவல் என்று கூறுதல் மரபு. தழுவலாகிய பின்னதை விட முன்னதே சிறப்புடையதாகக் கொள்ளலும் ஒருவகை மரபு. எனவே, தழுவல் என்பதற்கு, சிறப்பிலே மற்றதற்கு அடுத்தபடியானது என்று பொருள் கொள்ளலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், இராமனது புகழை நோக்க மற்றவர் புகழ் அடுத்தபடியேயாகும் எனக் கொள்ளலாம்.
மற்றும், தழுவல்' என்பதற்கு உள் அடக்குதல்' என்ற பொருளும் உண்டு. முருகன் அன்பர் எதிரில் தனது பேருருவை உள்ளடக்கிக் கொண்டிருப்பான் என்ற கருத்தில், நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 'அணங்கு சால் உயர் நிலை தழீஇ" (289ஆம் அடி) என்று பாடி யுள்ளார். தழிஇ என்றால் தழுவி என்பதாம் தழிஇ (தழுவி) என்பதற்கு உள்ளடக்கிக் கொண்டு என்று பொருள் எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். சகரர் முதலியோர் புகழ் நிலைத்து நிற்பது- அதாவது, அழியாமல் நிலைத்திருப்பது என்னும் பொருளில் பெரும் புகழ் நிற்பது' எனக் கம்பர் பாடியுள்ளார். இராமனது புகழை உள் அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவர்களின் புகழ் நிலைத்திருப்பதாகப் பொருள் கொண்டு புகழினைத் தழுவி' என்னும் தொடரைச் சுவைக்கலாம். அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 105
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
இராமன் பிரிகிறானே என் வருந்தும் சுமித்திரைக்கு இராமன் ஆறுதல் கூறுகிறான். அன்னையே! யான் காடு செல்லினும், கடல் (கடலிடைத் தீவு) செல்லினும், வான் செல்லினும் அயோத்திக்கு யான் செல்வதைப் போன்றதே. எல்லாம் எனக்கு அயோத்தி போன்றனவே. எவரும் என்னை வெல்லமாட்டார். நீ உடலும் உயிரும் உணர்வும் நலிய வருந்தாதே- என்கிறான்.
கான்புக் கிடினும் கடல்புக் கிடினும் கலிப்பேர் வான்புக் கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான்புக்க தொக்கும் எனையார் நலிகிற்கு மீட்டார் ஊன்புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான்
'இராமர் இருக்கும் இடம் அயோத்தி' என்னும் வழக் காற்றின் தொடக்கப் புள்ளி' (Starting Point; இப் பாடலாய் இருக்குமோ! கானைத் தாண்டிப் பின் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்வதால், கான் புக்கிடினும் கடல் புக்கிடினும்' என்று கூறியது இயற்கையான பொருத்தமாயுள்ளது.
தோற்றல்
இராமன் பிரிவான் என்ற வருத்தத்தால், விளக்கம் குறைந்த மங்கையரின் முகங்கள் திங்களுக்குத் தோற்றனவாம்.
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்குத் தோற்றவே
என்பது பாடல் பகுதி, உவமிக்கும் (உவமைப்) பொருள்கள் எல்லாம் பெண்களின் உறுப்புகட்குத் தோற்றன என்று கூறலே பெரும்பான்மையான வழக்கம். இங்கே, திங்களை வென்றிருந்த பெண்களின் அழகிய முகங்கள் 106 () சுந்தர சண்முகனார்
இப்போது திங்களுக்குத் தோற்றுவிட்டனவாம். ஒரு சுவை இது.
முகம் திங்களுக்குத் தோற்றது போலவே, பெண்டிரின் அமிழ்தினும் இனிமையாய் இருந்து குழலையும் யாழையும் வென்றிருந்த இனிய சொற்கள் இப்போது குழலுக்கும் யாழுக்கும் தோற்றுவிட்டனவாம். அதாவது, வருத்தத்தால் சொற்கள் நிலை தடுமாறுகின்றன. பாடல்:
கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன அளவிறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன இளையவர் அமுதினும் இனிய சொற்களே
கிளை=மூங்கில்; மூங்கிலில் தொளை போட்டது புல்லாங்குழல். நரம்பினும் என்பது யாழ் நரம்பைக் குறிக்கிறது.
ஆம்பல் பழனம்
அரண்மனையில் தயரதனின் முப்பெருந்தேவியரோடு, அறுபதினாயிரம் வேறு மனைவியரும் உள்ளனர். மகன் இராமன் காடு செல்வான் என்ற துயரத்தால் இப் பெண்டிர் அனைவரும் வாய் விட்டு- வாய் திறந்து அழுதனராம். இதனால், அரண்மனைப் பகுதிகள், பகலிலே செவ்வாம்பல் பூத்த பழனம் போல் இருந்தனவாம்.
புகலிடம் கொடுவனம் போலும் என்று தம் மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் அகல்மதில் நெடுமனை அரத்த ஆம்பல்கள் பகலிடை மலர்ந்ததோர் பழனம் போன்றவே
ஆம்பல் இரவிலே மலர்வது. இம் மலர் பெண்களின் வாய்க்கு உவமையாக உரைக்கப்படுவது. எனவே, பெண்களின் சிவந்த வாய்கள் திறக்கப்பட்டதால், அரண்மனைப் பகுதிகள் பகலிலே ஆம்பல் மலர்ந்த பழனமாகத் தோற்றம் அளித்தனவாம். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 101
இரும்பு மனம்
உலகில் தமக்குப் பல பிள்ளைகள் இருப்பினும், அவர்களுள் கண்- கை- கால் ஆகியவற்றுள் ஒன்று குறைந்து ஊனம் உற்ற ஒரு பிள்ளை பிரிந்தாலும் பெற்றோர் தம் உயிரை விட்டு விடுவர். தயரதனோ, முடிசூட்டுக்கு உரிமை உடைய உயரிய ஒரு மகனைப் பிரியச் செய்ததால் அவன் மனம் இரும்போ என்கின்றனர் மக்கள்:
நிறைமக உடையவர் நெறிசெல் ஐம்பொறி குறைமகக் குறையினும் கொடுப்பராம் உயிர் முறைமகன் வனம்புக மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமனம் இரும்பு என்றார் சிலர்
மக்கள் வருத்தத்தால் தயரதன் மனம் இரும்பு எனினும், பல பிள்ளைகளுள் ஊனமுற்ற ஒரு பிள்ளை பிரியினும் உயிர் விடுபவர் போலவே, இராமன் பிரிந்ததும் தயரதன் உயிர் பிரிந்தான் என்பது ஈண்டு எண்ணத் தக்கது.
செவி சுடல்
கணவன் இராமன் முடியிழந்தான் என்பதற்காகவும் காடு செல்வான் என்பதற்காகவும் சீதை வருந்தவில்லையாம்; நான் சென்று வருகிறேன்- நீ அயோத்தியிலேயே இரு என்று சொன்ன கொடிய வெப்பமான சொல் சீதையின் செவியைச் சுட்டதால் தேம்பி அழுதாளாம்:
நாயகன் வனம் கண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்
'நீ வருந்தலை நீங்குவென் யான்' என்ற
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்
சொல் செவியைச் சுட்டதாம். அங்ங்னமெனில், தீய சொல் நெருப்பினும் கொடியது போலும். திருவள்ளுவரும் 'நாவினால் சுட்ட வடு' என- நாக்கி 108 - சுந்தர சண்முகனார்
னால் பேசும் சொல் சுடும் எனவும், ஆறாது' என- அச் சொல்லால் சுட்ட புண் ஆறாது எனவும் கூறியுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
என்பது குறள். தீப் புண் ஆறிவிடுமாம், நாப் புண் ஆறாதாம்.
கண் ஈர்கிலாக் கள்வன்
இராமனை விட்டுப் பிரிய குகனுக்கு மனம் இல்லை. ஐயனே, உங்களை இந்தக் கோலத்தில் கண்ட கண்களைத் தோண்டி எடுக்காத திருட்டு மனம் உடையவன் யான் எனக் கூறுகிறான்.
பார்குலாம் செல்வ! நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்......
குகன் கூறுவது, ஒரு புது முறைத் திருட்டாக உள்ளது. நீக்கவேண்டிய கண்களைக் கள்ளத்தனமாக வைத்துக் கொண்டிருக்கிறானாம்.
துன்பமும் இன்பமும்
பிரிய மனம் இல்லாத குகனை நோக்கி இராமன் ஆறுதல் கூறுகிறான். அன்பனே! இன்பத்திற்கு இடை யிடையே துன்பம் வரும்போதுதான் இன்பத்தின் அருமை தெரிகிறது. இப்போது நாம் பி ரியாமல் இங்கே உள்ளேம். இது உனக்கு இன்பமாய்த் தோன்றலாம். நான் இவ்விடத்தைப் பிரியின் உனக்குத் துன்பம் ஏற்படும். நான் மீண்டும் வந்து உன்னைக் காணுங்கால் அந்த இன்பம் மிகவும் சுவையாய் இருக்கும். அதனால் அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 109
வருந்தற்க. நாங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வராயிருந்தோம் இப்போது உன்னையும் சேர்த்து ஐவரானோம் என்பது ஆறுதல் மொழி.
துன்புளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்புளது இடை மன்னும் பிரிவுஉளது என உன்னேல்
முன்புளேம் ஒரு நால்வேம் முடிவுளது என உண்ணா அன்புள இனி நாமோர் ஐவர்கள் உளர் ஆனோம்
பிரிவினால் வருந்தல் கூடாது என்பதை, இராமன் சுற்றி வளைத்துக் குகனுக்குக் கூறுவது சுவையாயுள்ளது.
கமலம் போன்றன
காட்டில் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சென்று கொண்டிருந்தபோது பகல் போய் அந்தி நேரம் வந்தது. அப்போது தாமரை மலர்கள் குவிந்தன; ஆம்பல் முதலியவை மலர்ந்தன. ஆனால், இம் மூவரின் கைகளும் கண்களும் தாமரை மலர்போன்றிருந்தனவாம்.
<poem>மொய்யுறு நறுமலர் முகிழ்த்த வாம்சில மையறு நறுமலர் மலர்ந்த வாம்சில ஐயனோடு இளவற்கும் அமுது அனாளுக்கும் கைகளும் கண்களும் கமலம் போன்றவே</poem> (42)
இதன் கருத்து என்ன? அந்தி மாலைப் பொழுது வந்ததும், மூவரும் தாமரை போன்ற கைகளைக் குவித்துக் கொண்டும் தாமரை போன்ற கண்களை மூடிக்கொண்டும் இறையை உன்னிக் கும்பிட்டுத் தொழுதனராம். கைகளுக்கும் கண்களுக்கும் தாமரையை உவமிப்பது ஒரு மரபு. இங்கே, மூடிய தாமரை மலர்களைப் போலவே, மூவரின் கைகளும் கண்களும் வழிபாட்டின்போது மூடிக் கொண்டனவாம். 110 சுந்தர சண்முகனார்
கொடியின் கானம்
கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த பரதன் நகரில், காடுபோல் அடர்ந்து பறந்து கொண்டிருக்கும் கொடிகளைக் காணவில்லையாம். இங்கே வானளாவிய கொடிகள், ஞாயிறை நோக்கி, நீ உலகமெல்லாம் திரிந்து சோர்வுற்றிருக்கிறாய்! அதனால் இவண் தங்கி உணவு கொண்டு சோர்வு தெளிந்து செல்வாய் எனக் கூறுதல் போல் ஞாயிறைத் தடுக்குமாம். அத்தகைய காட்சியைப் பரதன் பார்க்கவில்லை. இராமன் நீங்கியதால் கொடிகள் பறக்கவில்லை.
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்ததால், அமுது உண்டு போதி என்று ஒண்கதிர்ச் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடுங் கானமே
கொடிகள் மிகுந்து உயரமாக இருப்பதாலும் நெடுகிலும் கட்டப்பட்டு இருப்பதாலும், ஞாயிறைத் தொடர்ந்து, சென்று தடுக்க முடிந்ததாம்.
ஏன் சென்றாய்?
தந்தையை எண்ணிப் பரதன் புலம்புகின்றான்: தந்தையே! உன்னிடம் பலரும் வந்து பலவித உதவி வேண்டி இரப்பர்; எனவே, இல்லாதவர்கள் வானுலகத்திலும் உளரோ? அவர்கட்கு உதவுவதற்காக அங்கே சென்று விட்டாயோ? நினது குடை நிழலில் குளிர்ச்சியாய் வாழ்ந்த உயிர்கள் வெந்து வாடிக் கொண்டிருக்க, நீ கற்பகமர நிழலைக் காதலித்து விண் சென்றனையோ? முன்பு உன்னால் வெல்லப்பட்ட சம்மரன் போன்ற அரக்கர்கள் இன்னும் உளரோ? அவர்களை அழித்துத் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 111.
தேவர்களைக் காப்பதற்காகச் சென்றனையோ? நீ சென்று விட்டது எதற்காக?- எனப் பரதன் புலம்புகிறான்.
செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ
எவ்வழி மருங்கினும் இரவ லாளர்தாம்
இவ்வழி உலகினில் இன்மை நண்ணினோர்
அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐயா!
பல்பகல் நிழற்றும் நின்கவிகைப் பாய் நிழல் நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்
கற்பக நறுநிழல் காத லித்தியோ?
மல்பக மலர்ந்ததோள் மன்னர் மன்னனே
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பிழந்து
உம்பர் வந்து உன்கழல் ஒதுங்கி னார்களோ? சம்பரன் அனைய அத் தானைத் தானவர்
அம்பரத்து இன்னமும் உளர்கொலோ ஐயா?
பிறந்தாய் ஆதி
பரதன் வருத்தத்துடன் கைகேயியிடம் கூறுகிறான்: போகாத உனது உயிரைப் போக்கிக் கொள்வாயானால், உன் கெட்ட பெயர் மறையும்; அதாவது, நீ வேண்டுமென்றே பழி செய்யவில்லை; ஏதோ மறந்து தப்பித் தவறி செய்து விட்டாய் என உலகம் எண்ணும். இதனால், நீ உலகில் பிறந்த பயனும் அடைவாய். இது தவிர இப்போது உனக்கு வேறு வழியில்லை. நல்லோர் சொல்லும் உரையை நான் உனக்குச் சொல்கிறேன் என்கிறான் பரதன்:
சிறந்தார் சொல்லும் நல்லுரை சொன்னேன் செயல் எல்லாம் .
மறந்தாய் செய்தாய் ஆகுதி, மாயா உயிர் தன்னைத்
துறந்தா யாகின் தூயையும் ஆதி உலகத்தே - பிறந்தாய் ஆதி ஈதுஅலது இல்லைப் பிறிது என்றான்
இந்தப் பாடலில் உள்ள 'தூயையும் ஆதி உலகத்தே பிறந்தாய் ஆதி' என்னும் பகுதி, குறிப்பாக, 112 - சுந்தர சண்முகனார்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
என்னும் குறள் கருத்தை நினைவுறுத்துகின்றது அல்லவா?
மேல் ஏறினான்
உலகத்தை யாண்ட மற்ற மன்னர்களையெல்லாம் (பண்பினால்) கீழ்ப்படுத்தி, அவர்களினும் பண்பினால் மேலே உயர்ந்தவனாகிய பரதன், தன்னுடன் வந்தவர்கள் எல்லாரும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தபின், தானும் படகில் ஏறினான்:
சுழித்து நீர்வரு துறை ஆற்றைச் சூழ்படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான்
உலகில் மன்னர்கள் பெரும்பாலார் தாம் அரசாள வேண்டும் என்றே விரும்பினர்; அதற்காகப் பங்காளி அரசர்களுடனோ- உடன் பிறந்தவர்களுடனோ போட்டி போட்டும் போர் புரிந்தும் ஆட்சியைப் பிடித்தவர் பலர். கள்ள ஆசையினால், தந்தையையோ- உடன் பிறந்தவர் களையோ- சிறையில் இட்டோ- அல்லது கொன்றோ அரசு கட்டில் ஏறியவரும் உண்டு. இந்தக் காலத்திலும், ஆட்சித் தலைமையைக் கைப்பற்றப் பலர் செய்யும் சூழ்ச்சிகளை உலகம் அறியும். உலகியல் இங்ஙனம் இருக்க, எளிதில் கிடைத்த ஆட்சியைப் பரதன் ஏற்கவில்லை எனில், அவன் எல்லாரினும் மேல் ஏறியவன் தானே!
மற்றும், தானும் ஏறினான்' என்ற தொடரிலும் ஒரு சுவை காத்திருக்கிறது. தலைவர்கள் சிலர் உண்ணும் அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 113
பந்தியில் தாங்கள் முதலில் அமர்ந்து விடுவார்கள். ஆனால், உயர்ந்த பண்பாளர்களோ, மற்றவர்களை உண்ணச் செய்து மேற்பார்வையிட்டுப் பிறகே தாம் உண்ணுவார்கள். குழுவாகப் பயணம் மேற்கொண்டவர்கட்குள் உயர்ந்த பண்பாளர்கள், மற்றவர்களையெல்லாம் வண்டியில் ஏறச் செய்த பிறகே தாம் ஏறுவர்; அந்த வண்டியில் இடம் போதாதெனின், தாம் அடுத்த வண்டியில் ஏறி வருவர். இவ்வாறே, பண்பாளனாகிய பரதனும், எல்லாரையும் ஏற்றிக் கங்கையைக் கடக்கச் செய்த பின்னரே, தான் படகில் ஏறினான். தாங்கள் முதலில் உண்டு விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்து விடுபவர்கள் போன்றவன் அல்லன் பரதன். அதனால் தான் அவன் மேல் ஏறினான்’ எனப் பாராட்டப்படுகிறான்.
அவலத்தின் படிவம்
காட்டிலிருந்து தன்னை அயோத்திக்கு அழைத்துப் போக வந்த பரதனை இராமன் கூர்ந்து நோக்கினான். அப்போது பரதன் இருந்த தோற்றமாவது:
கைகளைத் தலைமேல் உயர்த்திக் கும்பிட்டுத் தொழுது கொண்டிருந்தான்; உடம்பு துவண்டுபோயிருந்தது; கண்கள் அழுததால் நீரைச் சொரிந்தன; அவலம் (அழுகைத் துயர்) என்பது என்ன என்பதை அவனது உருவத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். அதாவது, அவலம் என்பது என்ன என்பதை அறிவிக்கும் வகையில் எழுதப்பட்ட படிவம் போன்றிருந்தான்:
தொழுதுயர் கையினன் துவண்ட மேனியன்
அழுதழி கண்ணினன் அவலம் ஈது என
அ. ஆ.-8 114 ) சுந்தர சண்முகனார்
எழுதிய படிவம் ஒத்து எய்து வான்தனை
முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்
என்பது பாடல். அவலம் (அழுகை) என்பது எட்டு மெய்ப் பாடுகளுள் ஒன்று- ஒன்பது சுவைகளுள் (நவரசங்களுள்): ஒன்று. எனவே, பரதன், அழுகை என்னும் மெய்ப் பாட்டின் மொத்த உருவமாகக் காணப்பட்டான். அதாவது, துயரின் எல்லைக் கோட்டின் இறுதியில் இருந்தான் என்பது கருத்தாகும்.
தொல்காப்பியர் அவலத்தை அழுகை' என்றே. மெய்பாட்டியலில் கூறியுள்ளார்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் "அழுகை என்பது அவலம்" என உரை வரைந்துள்ளார். தண்டியலங்கார ஆசிரியர், தண்டியலங்காரம்- பொருளணியியலில், அழுகையை, அவலம் என்று கூறியுள்ளார்.
வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே
என்பது நூற்பா. எனவே, அழுகை எனினும் அவலம் எனினும் ஒன்றே. தொல்காப்பியர், நான்கு காரணங்களால் அழுகை வரும் என்று கூறியுள்ளார்
இளிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே
என்பது நூற்பா. இந்த நான்கனுள் இழவு' என்பதற்கு, 'இழவு என்பது, தந்தையும் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலிய வற்றையும் இழத்தல்' எனப் பேராசிரியர் விளக்கம் தந்துள்ளார். அயோத்தியா காண்ட ஆழ் கடல் 115
இங்கே பரதனுக்கு ஏற்பட்ட அழுகை (அவலம்) என்பது, தந்தையை உலகினின்றும் இழத்தல், கொடுமை செய்தவள் ஆகையால் தாயை உயிர் இருக்கும் போதே இழத்தல், தமையனாகிய இராமனைப் பிரிவினால் இழத்தல், உள்ளம் நன்றாயில்லையாதலால் எல்லா இன்ப நுகர்வுகளையும் இழத்தல் ஆகிய அவலமாகும். இதனால் தான், கம்பர், அவலம் ஈது என எழுதிய படிவம் ஒத்து எய்துவான்' எனப் பரதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புகழினும் பெரியது
பாதுகையைப் பரதனுக்குத் தரவும் பதினான்கு ஆண்டு முடிந்ததும் மீண்டு வரவும் ஒத்துக் கொண்ட இராமன், மிகவும் உயர்ந்த பண்பாளன் அல்லவா? இதைக் கம்பர் குறிப்பிடுங்கால், 'தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்' என்று கூறியுள்ளார். உலகில் புகழ் பெரியது. அதிலும் இராமன் புகழ் மிகப் பெரியது. அந்தத் தன் புகழைவிட இராமன் உயர்ந்தவனாம். ஒரு புதுமைக் கருத்தல்லவா இது!
இவ்வாறு முத்தான புதுமைகள் பல, பொலிவுற்றிருப் பதைக் கம்பன் பாடல்களில் கண்டு சுவைத்து மகிழலாம்.