அயோத்தியா காண்ட ஆழ்கடல்/சில அணி நயங்கள்

12. சில அணி நயங்கள்

ணிகளின் தாய் அணியாகிய- தலைமை அணி யாகிய உவமை அணியையும் இடையிடையே உருவக அணியையும் கொண்ட பாடல்களின் சுவையை முன்னர்க் கண்டோம். இனி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, தற்குறிப் பேற்ற அணி ஆகிய அணிகள் அமைந்துள்ள முத்தான சில பாடல்களைக் காண்பாம்:

வேற்றுப் பொருள் வைப்பு அணி

ஒரு நிகழ்ச்சியை விளக்கி அதன் வாயிலாகப் பெறத் தக்க- உலகறிந்த ஒரு பொது உண்மையை வேறாக தனியாக எடுத்துக் கூறி வைப்பது வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும்:

முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னொரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப் பொருள்வைப்பே

(47)

என்பது, அணிகள் பற்றிக் கூறும் 'தண்டியலங்காரம்' என்னும் நூலில் உள்ள நூற்பா ஆகும். இதற்குப் 'பிறிது மொழிதல் அணி' என்னும் பெயரும் கூறுவது உண்டு. இனிப் பாடல்களில் அணி அமைந்துள்ளமையைக் காண்போம்.



மந்திரப் படலம்

அறத்தின் கொடுமை

இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தயரதன் சொல்ல அவையோர் அனைவரும் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து சுமந்திரன் கூறுகிறான்: மன்னா! இராமனுக்கு முடிசூட்டு என்பதை அறிந்து மகிழ்கின்ற மனத்தை, நீ நீங்கித் துறவு கொள்ளப் போகிறாய் என்று சொல்லும் சொல் சுடுகிறது. எனவே, முறையான அறத்தினும் கொடியது வேறொன்றும் இல்லை போலும் என்கிறான்.

உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத்
துறத்தி நீஎனும் சொல் சுடும்; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று
அறத்தி னூங்கு இனிக் கொடிதெனல் ஆவது ஒன்று யாதோ

(45)

இங்கே தயரதன் மேற் கொண்ட அறநெறியை முதலில் விளக்கி, அதன் வாயிலாகப் பின்னர், இது போன்ற நேரங்களில் அறத்தினும் கொடியது ஒன்று இல்லை என வேறொரு கருத்தை அமைத்து வைத்திருப்பது வேற்றுப் பொருள் வைப்பாம்,

பெரியவர் இயற்கை

தயரதன் இராமனை நோக்கி, நின்னைப் பெற்ற யான், இன்னும் அரசுச் சுமையால் வருந்துவது தகாது; எனக்கு நீ உதவ வேண்டும்; நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் மைந்தரைப் பெற்று, துன்பம் நீங்கி, இம்மை- மறுமை இன்பங்களைப் பெறுவது முதியோரின் இயற்கையல்லவா?

உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை;

தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ?

கருமம் என்வயின் செய்யின் என் கட்டுரை கோடி

(62)

ஈண்டு, தயரதன் இங்கே தனது நிலையைக் கூறுவதன் வாயிலாக, உலகப் பொது உண்மையாகிய- பிள்ளையைப் பெற்ற முதியவரின் நிலையைக் கூறியிருப்பது வேற்றுப் பொருள் வைப்பு இந்த வேற்றுப் பொருள், குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் பின்னே கூறப்படுவதன்றி முன்னேயும் கூறப்படும்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

அன்பின் ஆக்கம்

வசிட்டன் இராமனுக்கு மேலும் கூறுகிறான்: யாவர்க்கும் ஐம்புல வேட்கையை விட்டுவிட்டால் போதாது. அன்போடு நடந்து கொள்ள வேண்டும். அன்பினும் சிறந்த செல்வம் வேறில்லை.

என்புதோல் உடையர்க்கும் இலார்க்கும் தம்
வன் பகைப் புலன் மாசற மாய்ப்பது என்
முன்பு பின்பின்றி மூவுல கத்தினும்
அன்பில் நல்லது ஓராக்கம் உண்டாகுமோ?

(24)

அன்பினும் நல்ல ஆக்கம் இல்லை என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

நகர் நீங்கு படலம்

பிறந்தார் பெயரும் தன்மை

வசிட்டன் கைகேயியின் மாளிகைக்குச் சென்று, இறந்தானா- இறக்கவில்லையா என்ற மயக்க நிலையில் இருந்த தயரதனைக் கண்டு, கைகேயி துன்பம் இன்றி உள்ளாள்- கோசலையோ துன்புற்றிருக்கிறாள். நற்குடியில் பிறந்தவர் மாறும் தன்மை பிறரால் அறிய முடியாது- என்கிறான்.

இறந்தான் அல்லன் அரசன், இறவாது ஒழிவான் அல்லன்,
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர் கோன் மங்கை

துறந்தாள் துயரம் தன்னை; துறவாள் துயர் கோசலை; இற்
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ

(35}

இதில் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பாகும்.

ஊழ் வினை

மரவுரி அணிந்த இராமனைக் கண்ட வசிட்டன், வாழ்வு பெற வேண்டிய மங்கல நாளிலே மரவுரி உடுத்திருக்கிறான். நான்முகன் முயலினும், ஊழ்வினையை ஒருவராலும் ஒழிக்க முடியாது- என்று கூறினான்.

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ்வினை அதுவரச் சீரை சாத்தினான்
சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?

(159)

ஒரு முகம் அன்று- இரு முகங்கள் அல்ல- நான்கு. முகங்களை உடைய பிரமனாலும் முடியாது என்னும் நயம் இதில் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பு.

உண்டு இடர்

கோசல நாட்டு மன்னனாகிய தயரதனின் மனைவிமார்கள் அறையினின்றும் வெளியில் வந்து புலம்புகின்றனர். இதுவரையும் அவர்களுடைய தாமரை போன்ற முகங்களைக் காணாத ஞாயிறும் இப்போது கண்டு விட்டான். விண்ணில் உறையும் இந்திரனாயினும் துன்பம் அடைவதுண்டு. துன்பம் வந்த போது உறாத, வருத்தங்கள் என்ன இருக்க முடியும்?

தண்டலைக் கோசலைத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும், கமல வாள் முகம்; விண்தலத்து உறையும்கல் வேந்தற்கு ஆயினும் உண்டு இடர் உற்றபோது என் உறாதன !

(179)

தேவியர் இதுவரையும் வெளியில் வராததால் ஞாயிறு இதுவரையும் அவர்களைக் கண்டதில்லை; இப்போது அவர்கள் வெளியில் வந்ததால் ஞாயிறு காண முடிந்தது. ஞாயிற்றின் ஒளிக்கும் தாமரைக்கும் தொடர்பு உண்டாதலின், 'கமல வாள் முகம்' என்றார். பெரிய செல்வர் வீட்டுப் பெண்கள் சிலரின் கால்கள் தரையில் பட்டதில்லை எனப் புனைந்துரைப்பது உலகியலில் உண்டு. அதாவது, அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வண்டியிலேயே செல்வார்களாம். தேவியர் வெளிவராமையும் அது போன்றதேயாம். தண்டலை = சோலை; வேந்தன்=இந்திரன், 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' எனத் தொல்காப்பியரும் (புறத்திணை யியல்- 5) இந்திரனை வேந்தன் எனக் கூறியிருப்பது நினைவுகூரத் தக்கது. பாடலின் இறுதியில் உள்ள இடர் உற்ற போது என் உறாதன என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

தயரதன் மோட்சப் படலம்

விதியை வென்றவர் உளரோ?

சுமந்திரனோடு தயரதன் இருக்கும் பகுதிக்குச் செல்லும் வசிட்டன் பின் வருமாறு கூறிக் கொண்டே செல்கிறான்: வள்ளலாகிய மன்னன், வரங்களை மறுத்தால் பழி வரும் என அஞ்சி எதையும் தடுக்க முடியவில்லை; யான் சொல்வதையும் கேட்கான்; அறத்தை உறுதியாகப் பின்பற்றுகிறான். விதியை வென்றவர் உளரோ?- இல்லையே- என்று கூறுகிறான்.

நின்றுயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்;
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி
பொன்திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான்

(8)

மேலை விதி= முன்னாலேயே அமைந்து விட்ட விதி. மேலை வதியினை வென்றவர் உளரோ' என்பது: வேற்றுப் பொருள் வைப்பு.

வனம் புகு படலம்

காட்டில் இலக்குவன் குடில் அமைத்ததும் இராமன் கூறுகிறான். அனிச்ச மலரினும் மெல்லிய அடியாள் சீதை காட்டில் நடந்து வந்தாள். ஒரு குற்றமும் அறியாத தம்பி இலக்குவன் காட்டில் எப்படியோ குடில் அமைத்து விட்டான். எதையும் இழந்து இல்லாதவரானவர்க்கும் முயன்றால் முடியாதன யாவை? (முடியாதன இல்லை-- எல்லாம் முடியும்) என்று கூறுகிறான்.

மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா வில் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே

(50)

காட்டின் கடுமையான வழியில் நடந்தறியாத சீதை நடந்தாள். குடில் கட்டியறியாத இலக்குவன் குடில் அமைத்தான். எனவே, துணையில்லாரும் எதையும் முயன்று செய்துகொள்ள முடியும் என்பது கருத்து. இப் பாடலில், 'யாவை யாதும் இலார்க்கு இயையாதவே" என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

ஆறு செல் படலம்

தெருள் மனத்தார்

முடிசூடிக் கொள்ள வேண்டுமென வசிட்டன் பரதனை வற்புறுத்திக் கூறுகிறான். பரத! அறத்தை நிலை நாட்டுதல் என்பது ஒர் அரிய பெரிய செயல் என்பதை நீ அறிவாய். எனவே, நீ அறத்தை மதித்து நடந்து கொள்ளின் இருமைப் பயனும் கிடைக்கும். இது, தெளிந்த மனம் உடையவர்க்கு அல்லாமல் மற்றவர்க்குத் தெரியாது- என்கிறான்:

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது, அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது, ஈண்டு இது தெருள் மனத்தார்க்கு அலால் தெரிதற் பாலதோ?

(6)

இப்பாடலின் இறுதிப் பகுதி வேற்றுப் பொருள் வைப்பாகும்.

திருவடி சூட்டு படலம்

கால வலை

இராமனை அழைத்துவரப் பரதனுடன் காடு ஏகிய வசிட்டன் காட்டில் இராமனைக் கண்டு கூறுகிறான். நல்லொழுக்கமும் நல்லறமும் கொண்ட இராம! சிவன், திருமால், நான்முகன் ஆகியோராலும் காலம் என்னும் வலையைக் கடக்க முடியாது; எனவே, நடந்தது நடந்து போயிற்று. இனி நீ நாட்டுக்கு வந்து முடிசூடிச் கொள்ள வேண்டும் என்கிறான்:

சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய் சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய முவர்க் காயினும்
காலம் என்றொரு வலை கடக்கல் ஆகுமோ?

(73)

சீலமும் தருமமும் சிதையாதவன் என்று கூறியதால், முறைப்படி நீ நாடாள்வதே அறமாகும் என்பது குறிப்பாய் அமைந்துள்ளது. சிவன் சூலமும் திருமால் ஆழியும் (சக்கரமும்) நான்முகன் சொல்லும் தாங்கி யுள்ளனர். சொல் என்பது, ஈண்டு, சொல்லுக்கு (கல்விக்கு) உரிய கலைமகளைக் குறிக்கிறது. இப்பாடலின் இறுதிப் பகுதியாகிய 'காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ' என்பது வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும். மேலுள்ளவாறு, ஒரு நிகழ்ச்சியை விளக்கி, அதன் வாயிலாக மற்றொரு (வேறொரு) பொதுக் கருத்தை விளங்க வைத்துள்ளார் கம்பர். இந்த வேற்றுப் பொருள் வைப்புத் தொடர், ஒரு பொது நீதி வாக்கியம் போல் உள்ளது பயன்தரத் தக்கதாகும்.

தற்குறிப் பேற்ற அணி

அடுத்துத் தற்குறிப் பேற்ற அணி குறித்துப் பார்க்க லாம். ஒரு பொருளின் நிகழ்ச்சி இயல்பாக- இயற்கையாக நிகழ, புலவன் அதை விட்டு, இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது என்று ஒரு காரணத்தைத் தற்குறிப்பாக (தனது கருத்தாக) ஏற்றி உரைப்பது தற்குறிப்பு ஏற்ற அணியாகும். 'பெயர் பொருள் அல்பொருள் என இரு பொருளினும் இயல்பின் விளை திறன் அன்றி அயலொன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்' என்பது தண்டியலங்கார நூற்பா. இனிச் சில எடுத்துக்காட்டுகள் காண்பாம்:

கைகேயி சூழ்வினைப் படலம்

கங்குல் நங்கை

இவ்வளவு நாள் கணவனோடு இருந்து விட்டு, இப்போது இரண்டு வரம் பெற்றுக் கணவனை மயங்கச் செய்த கைகேயி என்னும் இரக்கமில்லாப் பெண்ணின் செயலைக் கண்டு ஆடவர் முன் நிற்கவும் வெட்கப்பட்டு மறைந்தவள் போல் கங்குல் (இரவு) என்னும் பெண் மறையப் பொழுது விடிந்ததாம்.

சேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா
வாணிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர்முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குலாகிய நங்கையே

(50)

இங்கே, இரவு ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு உள்ளது. ஒரு பெண்ணின் கொடிய செயலால் மற்ற பெண்கட்கும் ஏற்படுவது இழிவு தானே! என இரவாகிய பெண் எண்ணி ஆடவர் முன் நிற்க நாணினவள் போல் மறைந்து விட்டாளாம். இயற்கையாக இரவு போய்ப் பொழுது புலர்கிறது. ஆனால் கம்பர் இங்கே, கைகேயியின் செயலுக்கு நாணிக் கங்குலாகிய நங்கை மறைந்ததாகத் தானாக ஒரு காரணம் குறித்தேற்றிக் கூறியுள்ளார்- இது தான் தற்குறிப்பு ஏற்றம்.

கோழியின் விளிப்பு

கைகேயியால் தயரதன் மயங்கியதற்கு வருந்தி, சிறகுகளாகிய தம் இரண்டு கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு கூவுவதுபோல் கோழிகள் கூவினவாம்.

எண்தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன, ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறை யான துணைக் கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே

(51)

ஏழை - கைகேயி. துணைக் கரம்= இரண்டு கைகள். எற்றுதல் = அடித்துக் கொள்ளுதல். விளித்தல் = கூவுதல். துன்பம் வந்தபோது வாயிலும் வயிற்றிலும் கைகளால் அடித்துக் கொள்வது இயல்பு என்பதை, அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள் என்னும் உலக வழக்காற்றால் உணரலாம். விடியற். காலையில், கோழிகள் இரண்டு இறக்கைகளையும் மாறி மாறி விரித்தும் வயிற்றுப் பக்கம் அடித்துக் கொண்டும். கூவுவது இயற்கையாக நடப்பது. ஆனால், இவை, தயரதனுக்காக இரங்கி இவ்வாறு செய்வதாகக் கூறுவது. ஒருவகைத் தற்குறிப் பேற்றமாகும்.

மனத்து வைவன

நீர்நிலைகளிலும் மரங்களிலும் இரவில் தங்கியிருந்த பறவை இனங்கள், காலையில், பெண்களின் சிலம்பு, ஒலிப்பது போல் ஒலி எழுப்புகின்றன. இதைக் கம்பர், கைகேயியை மனத்துள் நினைத்துக் கொண்டு அவளை வைவது போல் இருக்கிறதாகத் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார்:

தோய் கயத்தும் மரத்தும் மென்சிறை துள்ளி மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ
கேகயத் தரசன் பயந்த விடத்தை இன்னதொர் கேடு சூழ்
மாகயத் தியை உள்கொதித்து மனத்து வைவன போன்றவே

(52)

சிவந்தனன்

கதிரவன், கைகேயியின் செயலால் மிகவும் சினந்து முகம் சிவந்தவன்போல் கிழக்கு மலையில் தோன்றினான்- இயற்கையான செந்நிறத்துடன் தோன்றினான். 'செஞ் ஞாயிறு' எனல் மரபு. ஆனால், கைகேயிமேல் சினங் கொண்டே முகம் சிவந்து தோன்றினான் எனத் தற்குறிப் பேற்றம் செய்யப்பட்டுள்ளது:

பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில் வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குணக் குன்றிலே

(65) *

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் என்பது தொல்காப்பிய நூற்பா. எனவே, கதிரவனின் சிவப்பு சினக் குறிப்பாயிற்று.

தயரதன் மோட்சப் படலம்

யானே காப்பேன்

இராமனை அழைக்கப் பரதனுடன் வந்த மக்கள் காட்டில் ஒருநாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அறியாமல் இராமன் வேறிடத்திற்குச் சென்று விட்டான். பொழுது விடிந்ததும் கதிரவன் தோன்றினான். இங்கே கம்பர் கதிரவன் தோற்றத்தை ___________________________________________________

  • தொல்காப்பியம்- உரியியல்-76.

அ. ஆ.-14 (சூரியோதயத்தை) அணிந்துரைக்கிறார். கதிரவன், தன் மகன் தயரதன் இறந்து விட்டான்; அவன் மக்களும் காட்டிற்குச் சென்று விட்டனர்; அவர்கள் நாடு திரும்பி ஆட்சி ஏற்கும் வரையும் நானே காப்பேன் என்று எண்ணி வந்தவன் போல் வந்தானாம். கடல் ஒளியாகிய முரசு ஒலிக்க, தேவர்கள் துதிக்க, மண்ணுலகோர் வணங்க, ஒளியாகிய வாள் பக்கத்தில் விளங்க, ஒளி பொருந்திய தன் ஒற்றை ஆழித்தேரில் ஏறிக் கதிரவன் வந்தானாம்:

மீன்நீர் வேலை முரசு இயம்ப, விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச
தூநீர் ஒளிவாள் புடை இலங்கச் சுடர்த்தேர் ஏறித் தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன்; மக்கள் அகன்றார்; வரும் அளவும்
யானே காப்பென் இவ் வுலகை என்பான் போல எறி கதிரோன்

(30)

இராமன் சூரிய குலத்தவனாம். இக்குலத்தாரின் தோற்றம் கதிரவனிலிருந்து தொடங்குகிறது. அதனால் தான், தயரதனை மகன் முறையாக்கி 'வானே புக்கான் அரும்புதல்வன்' என்பது கூறப்பட்டது. இந்தக் காலத்திலுங்கூட, ஒரு நாட்டின் அரசுத் தலைவரோ அல்லது தலைமை அமைச்சரே இறந்து விடின் அல்லது நீங்கிவிடின், நிலையான அடுத்தவர் வரும் வரையும் ஒருவர் இடைக்கால அரசுப் பொறுப்பாளராய் இருப்பது வழக்கம். அதே போல், கதிரவன் தன் குலத்தின் இடைக் காலத் தலைவனாய் வந்தவன் போல் உள்ளான் எனத் தற்குறிப்பேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரு பொருள் அணி

மற்றும் இப்பாடலில் இரண்டு பேருக்கும் பொருந்துமாறு இரு பொருள் (சிலேடை) அணி அமைக்கப் பட்டுள்ளது. அரசர் பதவிக்கு வரும்போது முரசம் முழங்கும்- கதிரவனுக்கும் கடல் ஒலியாகிய முரசம் முழங்குகிறதாம். தயரதன், இராமன் முதலியோர்வரின் தேவரும் மண்ணுலகத்தவரும் ஏத்தித் தொழுவர் கதிரவனையும் தேவர்களும் மண்ணுலகத்தவரும் தொழுவர். காலையில் ஞாயிறு வணக்கம் செய்வது பலருக்கு நடைமுறை வழக்கமாகும். பெரும் பொங்கல் நாளை ஞாயிறு வணக்க நாளாகக் கொண்டாடுதல் மரபு. இளங்கோவடிகள் 'ஞாயிறு போற்றுதும்- ஞாயிறு போற்றுதும்’ எனச் சிலப்பதிகாரத்தைத் தொடங்கி யுள்ளார். அடுத்து, மன்னரும் இடையில் உடைவாள் செருகியிருப்பர்- கதிரவனுக்கும் ஒளியாகிய வாள் உள்ளது. அரசரும் தேரேறி வருவர்- கதிரவனும் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை ஆழித்தேரில் வருவதாகக் கூறப்படுகிறான். இப்பாடலில், கதிரவனின் இயற்கையான தோற்றத்திற்குத் தான் ஒரு காரணம் கூறியுள்ளார் கம்பர். இது தற்குறிப்பேற்றம். இதில் இரு பொருள் அணியும் (சிலேடையும்) ஒரளவு உள்ளது.

வனம் புகு படலம்

காணாய்

இராமன் காட்டில் பல காட்சிகளைச் சீதைக்குக் காட்டிக் கொண்டே செல்கிறான். கல் முள் நிறைந்த தரையில் நடக்க உன் அடிகள் பொறுக்கமாட்டா என மரங்கள் வழி நெடுக மலர்களை உதிர்த்திருப்பதைக் காணாய். மரம்- செடிகளில் உள்ள கொம்புகள் உன் துடிபோன்ற இடையைக் கண்டு நாணித் துவள்வதைக் காண்பாய்:

அடிஇணை பொறைகல்லா என்றுகொல் அதர் எங்கும்
இடையிடை மலர் சிந்தும் இனமரம் இவை காணாய் கொடியினொடு இள வாசக் கொம்பர்கள் குயிலே உன்
துடிபுரை இடைநாணித் துவள்வன. அவை காணாய்

(16)

இயற்கையாய் நிகழ்வதற்குக் கம்பர் செயற்கையாகக் காரணம் கற்பித்துத் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார்.

ஆறு செல் படலம்

பிடி ஊர்தி

பரதனுடன் காடு செல்லும் மக்களுள் பெண்டிர் சிலர் பெண் யானையின் மேல் ஏறிச் சென்றனராம். இங்கே கம்பர் ஒரு தற்குறிப்பேற்றம் செய்துளார். தாமரையை வென்ற கால்களை உடைய பெண்டிருடன் நடையழகில் போட்டியிட்டுத் தோற்றுப் போன பிடிகள் (பெண் யானைகள்) தாம் தோற்றதற்கு ஈடாக அப் பெண்டிரைச் சுமந்து சென்றனவாம்:

சேற்றிள மரைமலர் சிதைந்தவாம் எனக்
காற்றளம் பொலிதரு சன்னி மாரொடும்
ஏற்றிளம் பிடிக்குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரைச் சுமப்ப போன்றவே

(29)

காற்றளம் என்பதைக் கால்தளம் எனப் பிரிக்க வேண்டும். பெண்களின் நடைக்குப் பிடியின் நடையை உவமிப்பது இலக்கிய மரபு. நடையில் பிடிகள் தோற்றதால் பெண்களைச் சுமக்கின்றனவாம்.

இவ்வாறு, சுவையான பல தற்குறிப்பு ஏற்றங்களைக் கம்பர் தம் பாடல்களில் செய்து காட்டியுள்ளார். இன்னும் தன்மையணி, ஒப்புவினை புணர்ப்பு (சமாதி) அணி முதலிய அணிகள் சிலவும் உள்ளன. அவற்றை, யெல்லாம் விவரிப்பின் பெருகும்.