அயோத்தியா காண்ட ஆழ்கடல்/உவமை உருவகங்கள்


11. உவமை- உருவகங்கள்

ஒப்புமைக்கலை

ன்கு தெரியாத ஒன்றை விளக்குவதற்கு நன்கு தெரிந்த ஒன்றை 'அதுபோல் இது' என்று எடுத்துக் காட்டுவது உவமை- ஒப்புமை எனப்படும். இந்த ஒப்புமை ஓர் இயற்கைக் கலையாகும். புலவர்கள் மட்டுமா- கல்வியறிவு இல்லாத பொது மக்களும்- எளிய மக்களும் பேசும்போது ஒப்புமை கூறுவது வழக்கம். எனவே, இது மக்கள் கலையுமாகும். ஓர் ஒப்புமையும் சொல்ல வராவிடினும், 'என்னமோ சொல்லுவாங்களே அதுபோல'- என்றாவது இனம் தெரியாத ஒப்புமை கூறப்படும். இவ்வாறு ஒப்புமை காட்டுவது 'தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்' என்னும் உளவியல் முறையுமாகும்.

ஒருவரின் முகமலர்ச்சியை விளக்குவதற்குத் தாமரை போல் அவர் முகம் மலர்ந்திருந்தது என்று கூறுவது உவமை- ஒப்புமையாகும். இதையே சுருக்கித் தாமரை முகம் எனலாம். தாமரை முகம் என்பதையே திருப்பிப் போட்டு 'முகத் தாமரை' என்று கூறுவது உருவகமாகும். தாமரை முகம் என்பதில், தாமரை- முகம் என இரு பொருள்கள் சுட்டப்படுகின்றன. முகத் தாமரை என்பதில் இரு பொருள்கள் இல்லை; முகமாகிய தாமரை- முகமே தாமரை என முகத்தையே தாமரையாக்கிக் காட்டுவது உருவகம் எனப்படும். உவமை ஆங்கிலத்தில் Simile: என்றும், உருவகம் Metaphor என்றும் வழங்கப் பெறும்.

படிக்காத மக்களே- எழுதத் தெரியாத மக்களே உவமையைக் கையாளும்போது, படித்த பாவலர்கள் எழுத்தாளர்கள் உவமையைக் கையாளாமல் விடுவார்களா என்ன? எழுத்துப் படைப்பின் இன்றியமையாத ஒர் உறுப்பு உவமையாகும். கவிஞர்கள் உவமையைக் கையாள்வதில் தங்கள் கை வரிசைகளையெல்லாம் காண்பிப்பார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மிகுதியாக உவமையை ஒருவர் கையாள்கிறாரோ- அவ்வளவுக்கு அவ்வளவு அவரை உயர்ந்த கவிஞராக எடை போடு வாரும் உளர். உவமைக் கவிஞர்' என்ற பட்டம் சூட்டு வதும் உண்டு.

இந்தக் கலையில் கம்பரும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்லர். எங்கெங்கே எவ்வளவு உவமை-உருவகங்களைக் கையாள முடியுமோ- அங்கங்கே அவ்வளவையும் கையாண்டுள்ளார். இந்த அடிப்படையுடன், கம்பர் அயோத்தியா காண்டத்தில் படைத்துக் காட்டியுள்ள முத்தான உவமை- உருவகங்களுள் சிலவற்றைக் காண்போம்.

மந்திரப் படலம்

மந்திரக் கிழவர்

தேவர்கட்கு வியாழன் குருவாய் இருப்பதுபோல், தயரதனுக்கு மந்திரக் கிழவர்கள் (அமைச்சர்கள் வசிட்ட முனிவர் முதலானோர்) இருந்தனராம்:

இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை வருக என்று ஏவினான்

(3)

துறப்பும் பிறப்பும்

தயரதன் மந்திரக் கிழவர்களை நோக்கித் தான் துறவு கொள்ளப் போவதாகக் கூறுகிறான்; பிறப்பு என்னும் பெருங்கடலைக் கடக்க, துறவு என்னும் தெப்பம் தேவையாம்:

துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ?

(20)

இப்பாடலில் துறப்பு தெப்பமாகவும் பிறப்பு கடலாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன.

இரண்டு கன்றுகள்

தயரதன் தான் முடி துறந்து இராமனுக்கு முடிசூட்டப் போகிறேன் என்றதும், இராமன் முடிசூடுவதற்காக மகிழ்ச்சியும், தயரதன் துறப்பதற்காக வருத்தமும் கொண்டு, இரண்டு கன்றுகட்கு இரங்கும் ஆவைப் போல் ஆனார்களாம் அவையோர்கள்.

திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே வெகுண்டு மன்னவன் பிரிவெனும் விதிர்ப்புறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார்

(31)

இரண்டாவது கன்று போட்ட ஆ (பசு) புதுக் கன்றுக் காக மகிழினும், இவ்வளவு நாள் உடனிருந்த முதல் கன்று பிரிவதைப் பற்றி வருந்துமாம்- அதுபோன்று காணப் பட்டனர் அவையில் இருந்த மந்திரக் கிழவர்கள்.

நறவும் வண்டும்

தயரதன் ஆணைப்படி இராமனை அழைக்கச் சென்ற சுமந்திரன், இராமனது அழகு என்னும் தேனை, தன் கண்களாலும் உள்ளத்தாலும் வண்டுபோல் நுகர்ந்தான்.

அண்ணல் ஆண்டிருந்தான்; அழகு அருநறவு எனத் தன்
கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்புறக் கண்டான்

(49)

இப்பாடலில் அழகு நறவாகவும் கண்ணும் உள்ளமும் வண்டாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

பூத்தன தாமரை மலர்கள்

இராமன் தேரேறித் தெருவில் சென்ற போது, சில பெண்கள் வீட்டு வாயிலில் தூணைப் பிடித்துக் கொண்டும், சில பெண்கள் மாடியில் நிலாமுற்றத்தில் நின்று கொண்டும், சிலர் காலதருக்குள் (சன்னல்களுக்குள்) நின்று கொண்டும் இராமனைக் கண்டனராம்:

நீள் எழுத்தொடர் வாயிலில், குழையொடு நெகிழ்ந்த ஆளகத்தினொடு அரமியத் தலத்தினும் அலர்ந்த, வாள் அரத்த வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்

(53)

இப்பாடலில் பெண்களின் முகங்கள் தாமரை மலர்க ளாக உருவகிக்கப்பட்டுள்ளன. பெண்கள் வாயிலில் துணைப் பிடித்துக் கொண்டு நின்று பார்ப்பது உண்டு. மாடியிலிருந்து கொண்டும், சாளர வழியாகவும் பார்ப்பது உண்டு. அங்கெல்லாம் (முகங்களாகிய) தாமரை மலர்கள் பூத்தன என்பது கூறப்பட்டுள்ளது. வாயிலில் காதணியோடும் மாடியில் கூந்தலோடும் தாமரைகள் (முகங்கள்) இருந்தனவாம். சாளரத்தில் பூத்த (முகமாகிய) தாமரை மலரில் வாள், வேல், வண்டு, கெண்டை மீன் ஆகியவை கலந்திருந்தனவாம். வாளும் வேலும் வண்டும் மீனும் போன்ற கண்கள் முகத்தில் இருப்பதை, தாமரையில் இந்த நான்கும் கலந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்கள் இந்த நான்கு பொருள்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

கூண்டோடு கைலாசம்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டு என்று சொல்லிய சொல்லாகிய மதுவை அவையோர் அருந்தினராம். மேலும், மகிழ்ச்சி மிகுதியால் மெய்ம்மயிர் சிலிர்க்க, உடம்போடு வீடு (முத்தி) பெற்ற சீவன்முத்தர் போல் களிப்போடு காணப்பட்டனராம்:

இறைவன் சொல்எனும் இன்நறவு அருந்தினர் யாரும் முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்

(74)

தயரதன் சொன்ன சொல் நறவு (மது) என உருவகிக்கப் பட்டுள்ளது. அவையினர்க்குச் சீவன்முத்தர் உவமையாக்கப்பட்டுள்ளனர். உடலோடும் விண்ணகம் எய்துதல், உலக வழக்கில் "கூண்டோடு கைலாசம் போதல்' எனக் குறிப்பிடப்படுவதுண்டு.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

புள் புகல்

இராமன் முடிசூட்டிற்காக நகரம் அணி செய்யப்படு கிறது. வெள்ளை, கறுப்பு, சிவப்பு முதலிய பல வண்ணக் கொடிகள் விண்ணில் பறந்து கொண்டிருந்த காட்சி, பல வண்ணப் பறவைகள் விழாகாண நகருக்குள் புகுந்து பறப்பதுபோல் இருந்ததாம்.

வெள்ளிய கரியன செய்ய வேறுள
கொள்ளை வான்கொடி நிரைக் குழாங்கள் தோன்றுவ,
கள்ளவிழ் கோதையான் செல்வம் காணிய புள்ளெலாம் திருநகர் புகுந்த போன்றவே

(37)

மாறிய உவமைகள்

நகர் அயோத்தி அணி செய்யப்பட்டது. பெண்களின் துடைகள் போன்ற வாழை மரங்கள் கட்டப்பட்டன. அவர்களின் கழுத்து போன்ற கமுகுகள் (பாக்குமரம்) அமைக்கப்பட்டன. அவர்களின் பல்வரிசைகள் போன்ற முத்து மாலைகள் தொங்கவிடப்பட்டன. அவர்களின் மார்பகங்கள் போல் (பூரணப்) பொற் குடங்கள் வைக்கப் பட்டன:

மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்
அங்கவர் கழுத்தெனக் கமுகம் ஆர்ந்தன தங்கொளிர் முறுவலின் தாமம் நான்றன கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே

(38)

வாழையைப் பெண்களின் துடைக்கும், கமுகைக் கழுத்திற்கும், முத்தைப் பல்லுக்கும், குடத்தை மார்பகத்திற்கும் ஒப்புமையாகக் கூறுவது வழக்கம். இங்கே, துடை வாழைக்கும், கழுத்து கமுகிற்கும், பல்வரிசை முத்துக்கும் மார்பகம் குடத்திற்குமாக- அப்படியே தலைகீழாய் மாற்றி உவமிக்கப்பட்டுள்ளன.

மாலை நல்கினாள்

கைகேயியிடம் கூனி வந்து, இராமனுக்கு முடி சூட்டாம் என்றதும், கைகேயியின் அன்பு என்னும் கடல் ஆரவாரித்ததாம்; தேய்வு இல்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கித் தோன்றிற்றாம்; ஞாயிறு முதலிய சுடர்கட்கெல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன் மணிமாலை ஒன்றைக் கைகேயி அளித்தாளாம்:

ஆய பேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழத் தேய்விலா முகமதி விளங்கித் தேசுறத்
தூயவள் உவகை போய் மிகச் சுடர்க்கெலாம் நாயகம் அனையதோர் மாலை நல்கினாள் (

60)

அன்பு கடலாகவும் முகம் மதியாகவும் உருவகிக்கப் பட்டுள்ளன. தேயாத மதி இல்லை; எனவே, தேயாத மதி என்பது இல்பொருள் உவமை.

கைகேயி சூழ்வினைப் படலம்

கைகேயியின் கைத்திறன்

கூனியின் உரையால் உள்ளம் மாறிய கைகேயி தன் ஒப்பனையைச் (அலங்காரத்தைச்) சிதைத்துக் கொண்டாள். கரிய கூந்தலில் வைத்திருந்த பூக்களை (மாலையை) கரிய முகிலுள் நுழையும் திங்களைப் பிய்ப்பதுபோல் வண்டுகள் வருந்தப் பிய்த்தெரிந்தாள்.

சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை வான மாமழை நுழைதரும் மதி பிதிர்ப்பாள்போல் தேன் அவாவுறும் வண்டினம் அலமரச் சிதைத்தாள்

(1)

மதியைப் பிதிர்ப்பது கிடையாது; எனவே, இது, இல் பொருள் உவமையாகும். இன்னும் கைகேயியின் கைத் திறன் வருமாறு.

கைகேயி, புகழ்க் கொடியை வேர் அறுத்தாற்போல் தன் மேகலையை அறுத்தெறிந்தாள். காலில் இருந்த கிண்கிணியையும் கையில் இருந்த வளையல்களையும் நீக்கி விட்டாள். திங்களின் நடுவில் உள்ள மறுவைத் (களங்கத்தைத்) துடைப்பதுபோல் தன் நெற்றியில் இருந்த மங்கலப் பொட்டை அழித்துவிட்டாள்.

விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்தென்ன
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலகமும் அழித்தாள்

(2)

புகழை வெண்ணிறமாகச் சொல்வது இலக்கிய மரபு. கம்பர் இதைப் பல இடங்களில் கூறியுள்ளார். (இது பற்றி யான் சுந்தர காண்டச் சுரங்கம்' என்னும் எனது நூலில் ஒரிடத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்) வெண் புகழாகிய கொடியை அறுத்தாள் என்றால், வெண்மையான முத்துக்களால் ஆன மேகலையை அறுத்தாள் என்பது பொருள். நெற்றிப் பொட்டை அரும் பெறல் திலகம் (பெறுதற்கு அரிய) திலகம் என்றார் கம்பர். கணவன் இருப்பவர்களே பொட்டிட்டுக் கொள்வர்; கணவனை இழந்தவர்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை- என்பது ஒருவகை மரபு. கணவனாகிய தயரதன் இன்னும் சில மணி நேரத்தில் இறக்கப் போகிறான்- கைகேயி பொட்டு இழக்கப்போகிறாள் என்பதை உள்ளடக்கி அரும்பெறல் திலகம்' என்றார்.

மேலும் கைகேயி, எல்லா அணிகலன்களையும் சிதறி, கூந்தல் தரையில் படும்படிப் பரப்பி, கண்ணில் பூசிய மை போலி அழுகையால் ஒழுக, பூக்கள் உதிர்ந்த ஒரு கொம்பைப்போல் (கொடியைப்போல்) தரையிலே படுத்துப் புரண்டாள்:

தாவில் மணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பி,
காவி உண்ட கண் அஞ்சனம் சான்றிடக் கலுழா,
பூ உதிர்ந்த தோர் கொம்பெனப் புவிமிசைப் புரண்டாள்

(3)

எல்லா அணிகலன்களும் நீக்கப்பட்டமையால் பூ உதிர்ந்த கொம்பு எனப்பட்டாள் கைகேயி.

வேகம் அடங்கிய வேழம்

பாம்பு போன்ற கொடிய கைகேயியின் நாக்கின் வழி வந்த சொற்களாகிய நஞ்சைக் கேட்டதும், யானை போன்ற தயரதன், பாம்புக் கடியால் வேகம் (வலிமை) இழந்து விழும் யானைபோல் விழுந்தான்:

நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்தழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்

(15)

கொடியாள் என்பது, கொடியவள் என்னும் பொருளையும் கொடி போன்றவள் என்னும் பொருளையும் தரும். பாம்புக்குப் பல்லிலிருந்து நஞ்சு வரும்; கைகேயிக்குச் சொல்லிலிருந்து நஞ்சு வந்தது. நஞ்சு தீண்டினால் தான் கொல்லும்; சொல் காதால் கேட்கவே கொல்வதாயிற்று. பாம்பால் யானை வீழ்ந்ததுபோல், மனைவியால் மன்னன் விழுந்தான்.

தாய் கண்ட கன்று

இராமன் கைகேயியின் மாளிகைக்குச் சென்று, மாலையில் மந்தையிலிருந்து திரும்பி வீடு வந்த தாய் ஆவினை ஆன் கன்று கண்டு மகிழ்ந்தாற்போல் கைகேயியைக் கண்டு மகிழ்ந்தானாம்.

அந்திவந் தடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் (108)

இத்தகையவனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பிவிட்டாள்.

பிணி அவிழ்ந்தது

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமன், தந்தையின் கட்டளையால் அரசுச் சுமையை (அரச பாரத்தை) ஏற்றுக் கொண்டான். ஆனால் பின் என்ன ஆயிற்று? காளை மாட்டுக்கு உரியவன் காளையை வண்டியில் பூட்டி ஒட்ட, கண்டவன் ஒருவன் பூட்டை அவிழ்த்துக் காளையை விடுவித்தது போல், கைகேயியின் செயலால் அரசுச் சுமையைத் துறந்தானாம்:

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடை உலகம் தாங்கும் இன்னனுக்கு இயைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்

(113) .

இராமன் கரியவன் ஆதலின் கார் ஏறு ஒப்புமை யாக்கப்பட்டது. அங்கு அருளுடைய ஒருவனால் மாடு சுமை நீங்கிற்று; ஆனால் இங்கே அருள் இல்லாத கைகேயியால் சுமை நீங்கிற்று; இருப்பினும், பின்பு. சீதையை இழந்து வருந்துவதால் கைகேயியின் செய்கை அருள் உடையதாகாது.

நகர் நீங்கு படலம்

மாலும் சிவமும் தழுவல்

அளப்பரும் பெருமைமிகு திருமாலும் பொன்மான் உரியுடைய சிவனும் தழுவிக்கொண்டதுபோல் இராமனும் இலக்குமணனும் தழுவிக் கொண்டனராம்:

அன்னான்தனை ஐயனும், ஆதியோடு அந்தம் ஒன்றாம்
தன்னாலும் அளப்பரும் தானும் தன் பாகம் நின்ற பொன்மான் உரியானும் தழீஇ எனப் புல்லிப் பின்னை
சொன் மாண்புடைய அன்னை சுமித்திரை கோயில் புக்கான்

(138)

கரிய திருமால்போல் இராமன் கருநிறத்தான்; பொன்னிறச் சிவன்போல் இலக்குவன் பொன்னிறத்தான். எனவே ஒப்புமை பொருந்தும். திருமாலின் வலப்பக்கத்தே சிவன் இருப்பதாக ஆழ்வார்கள் கூறியுள்ளனர்; திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி என்னும் திவ்வியப் பிரபந்த நூலிலுள்ள

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரம்மனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து

(3-4-9)

என்னும் பகுதியும், பொய்கையாழ்வாரின் இயற்பாமுதல் திருவந்தாதியிலுள்ள

பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும்- என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவன்அங்கத் தென்றும் உளன்

(98)

என்னும் வெண்பாப் பாடலும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. இருவரும் ஒருவர் உடம்பிலே இன்னொரு வராயும் இணைந்துள்ளனர். இதனால்தான், தானும் தன் பாகம் நின்ற பொன்மான் உரியானும் என்று பாடினார். இந்த வடிவம் 'சங்கர நாராயணன்' எனப் படும். பல ஊர்களில், ஒரே கோயிலுக்குள் சிவன் கருவறையின் இடப்பக்கத்தே திருமாலின் கருவறை இருப்பதை- அதாவது- திருமால் கருவறையின் வலப் பக்கத்தே சிவன் கருவறையும் இருப்பதைக் காணலாம். மக்களுள் சிலருக்குச் சங்கரநாராயணன்' என்னும் பெயர் வழங்கப்படுவதைக் காணலாம்.

நின்றனர்

இராமனுக்குக் காடு என்பதை அறிந்த பெண்கள் சிலர்,இரும்பு போன்ற மனத்தினராயும் பெரும் பொருளை இழந்தவர் போலவும் அப்படியே நின்றிருந்தனர்!

இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார்

(170)

உலகியலில், இன்றியமையாப் பொருளை இழந்தவர் சிலர், மனத்தை இரும்பாக்கிக் கொண்டு, ஒன்றும் புரியாமல்- செய்வதறியாமல் அப்படியே நின்றிருப் பதைக் காணலாம்.

சுமந்திரன் மீட்சிப் படலம்

சிந்தையின் இருண்டது

ஞாயிறு மறைந்ததும், மந்தரையின் உரையால் மாறிய கைகேயியின் மங்கிய மனம்போல் வானில் இருள் வந்ததாம்.

அந்தியில் வெயில்ஒளி அழிய வானகம்
நந்தலில் கேகயன் பயந்த நங்கைதன்
மந்தரை உரையெனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே

(5)

பகலில் வானம் வெளிச்சமாயிருந்ததைப் போன்று களங்கமின்றி வெள்ளையாயிருந்த கைகேயியின் மனம், இருள் வந்ததும் வானம் கருமையானதுபோல், கூனியின் வஞ்சக உரையினால் கைகேயியின் மனம் இருண்டது.

தயரதன் மோட்சப் படலம்

கை விளக்கு

பொய் வாழ்க்கையினராகிய அரக்கருக்கு உதவி செய்யப் போகின்றவர் போன்ற இருளைப் போக்க, வானம் கை விளக்கு எடுத்தது போல் திங்கள் தோன்றியது.

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி அன்னார்
செய்வினைக்கு உதவும் நட்பால் செல்பவர்த் தடுப்ப தேய்க்கும்
மைகுழைத் தெனவே வந்து வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்த தென்னப் பொலிந்தது கடவுள் திங்கள்

(2)

திங்களை வணங்கும் மரபு உண்மையால் கடவுள் திங்கள் எனப்பட்டது. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்பது சிலப்பதிகாரத் தொடக்கப் பகுதி. கை விளக்கு என்பது நடைமுறை வழக்காறாகும். மக்களுக்குக் கை விளக்கு போல், வானத்திற்குத் திங்கள் கை விளக்காம். திங்களைக் கை விளக்கு என ஏன் சொல்ல வேண்டும்? மக்கள் பெரியபெரிய விளக்குகளையெல்லாம் பயன்படுத்துவதுண்டு. மின்சாரம் இல்லாத காலத்தில், இருளில் சிறிய கை விளக்கை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்வர். மக்களுக்குப் பெரிய விளக்குகள் உள்ளது போல வானத்திற்கு ஞாயிறு பெரிய விளக்காயிருப்பதால், திங்கள் கை விளக்கு எனப்பட்டது. மற்றும் இங்கே,

இருளை நீங்கக் கைவிளக்கு ஏந்தியாங்கு
வீறுயர் மதியம் தோன்ற...

(1542)

என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.

மக்களால் மாய்வு

தயரதன் இறந்தமையை அறிந்து கோசலை புலம்புகிறாள்: மன்னன் நோய் இல்லாமலும் பகைவரின் வாள் வேல் போன்ற படைகளால் தாக்கப்படாமலும் மக்களால் இறந்துவிட்டானே. நண்டு, நாகம், கனிவாழை, மூங்கில் ஆகியவைதாம் கருவுயிர்க்கும் பிள்ளைகளால் இறப்பதுபோல்- அழிவது போல் அல்லவா இருக்கிறது இது- என்று புலம்புகிறாள்:

நோயும் இன்றி நோன்கதிர் வாள் வேல் இவை இன்றி
மாயும் தன்மை மக்களின் ஆக, மறமன்னன்
காயும் புள்ளிக் கற்கடகம் நாகம் கனிவாழை வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள்

(18)

கற்கடகம்=நண்டு; வேய் = மூங்கில். மற்றும் இங்கே,

நண்டு சிப்பி வேய் கதவி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவுயிர்க்கும் கொள்கைபோல்... (36)

என்னும் ஒளவையின் நல்வழிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. நண்டின் முதுகைப் பிளந்து கொண்டு குஞ்சுகள் வெளிவருமாம்; பின்னர் நண்டு இறந்து விடுமாம். உள்ளே இருக்கும் முத்தை எடுக்கச் சிப்பியைப் பிளப்பதால் சிப்பி அழிகிறது. பெரும்பாலான மூங்கில் இனங்கள் ஆண்டுகள் பல வாழ்ந்திருந்து ஒரே முறை பூத்துப் பின்பு சிறிது காலத்திற்குள் பட்டுப் போகுமாம். குலை ஈன்றதும் தாய் வாழை மரம் வெட்டப்படும் அதனால்தான் கம்பர் "கனி வாழை' என்றார்.

கம்பர் சிப்பியைக் கூறவில்லை; நாகத்தைக் கூறி யுள்ளார். நாகப் பாம்பு தன்னிடம் உண்டான மாணிக்கம் நீங்கினால் இறந்துவிடும் என்பதாகச் சொல்லப்படுகிறது.

நீலகேசி என்னும் காப்பியத்தின் உரையில் பின்வரும் பாடல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது:

புத்தன்தாய் நண்டிப்பி வாழை புனமுங்கில்
கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி- இத்தனையும்

வேலாலும் வாளாலும் இன்றியே தாம்கொண்ட சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு

இத்தனையும் சூல் கொண்டதால் அழிகின்றனவாம்.

இந்தப் பாடலில், நண்டு-இப்பி (சிப்பி)- வாழை மூங்கில் என்பனவற்றோடு விரியன் பாம்பும் சிலந்தியும் அவ்வாறே அழியும் என்பது கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் புத்தன் தாய்' என்றிருப்பது கவனிக்கத் தக்கது. புத்தருடைய தாய் மாயா தேவி. புத்தரைப் பெற்ற ஏழாம் நாளே இறந்து விட்டாள்என்பதை இது குறிக்கிறது.

முற்காலத்தில் பெண்கள் கருவுயிர்ப்பால் இறந்து போவது மிகுதி. அதனால்தான், கருவுற்றிருக்கும்போது அவர்கட்கு ஆசைப்பட்டதை ஆக்கிப் போடுதல்-வாங்கித் தருதல் போன்ற கரிசனம் பின்பற்றப்பட்டது. வயிற்றின் வழியாகக் குழந்தையை எடுக்கும் அறுவை மருத்துவம் வந்துள்ள இந்தக் காலத்திலுங் கூட, பொறையுயிர்ப்பால் பெண்டிர் சிலர் இறந்து போகின்றனர் அல்லவா? இத்தகைய அடிப்படையில், தயரதன் பிள்ளையால் இறந்தான் என்று கூறி அழுதாள் கோசலை. இராமன் பிரிந்ததாலேயே தயரதன் இறந்தான் அல்லவா?

உய்த்து மீண்ட நாவாய்

தயரதன் இறந்ததும் அவன் உடலைத் தேவியர் பற்றிப் பிடித்துக் கொண்டு விழாமல் அழுதனர். உலகப் பித்து மயக்கமாகிய சுறான் மீன் உள்ள பிறவி என்னும் கடலைத் தேவியர் கடக்க நாவாயாக அவன் உடம்பு பயன்பட்டதாம். பலமுறை சென்று திரும்பிப் பழக்கப்பட்ட நாவாயாக அவன் உடல் இருந்ததாம்.

கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வற் பிரிந்தும் கடைஓட
மெய்த்த வேந்தன் திருஉடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்;
பித்த மயக்காம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயின் தாமும்போவார் ஒக்கின்றார்

(25),

உலகப் பித்து சுறா மீனாகவும், பிறவி கடலாகவும் தயரதன் உடம்பு நாவாயாகவும், தேவியர் பயணி களாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது.

வனம் புகு படலம்

களிமயில்

இராமன் சீதையுடன் காட்டில் செல்லும்போது, வழியிலுள்ள பல காட்சிகளைக் காண்பித்துச் செல்கிறான்: வண்டு பாடும் பாணனாகவும் மழை இடி முரசாகவும் இருக்க, மயில் என்னும் நடன மாது ஆகின்றாள். அந்த மயில் சீதையின் சாயலைப் பல கண்களால் காண்பது போல் தோன்றுகிறதாம். இராமன் பாராய் என்கின்றான்.

பாண் இள மிஞறு ஆக, படுமழை பணை ஆக, நாணின தொகுபீலி கோலின நடம் ஆடல் பூணியல் நின் சாயல் பொலிவது பல கண்ணின் காணிய எனல் ஆகும் இயல்பின இவை காணாய் (4)

மயிலின் தோகையில் கண்கள் போன்ற பகுதிகள் பல இருப்பதால் பல கண்ணின் காணிய எனல் ஆகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காந்தள் மலரின்மேல் அமர்ந்துள்ள கிளி, சீதையின் முன் கையில் அமரும் கிளி போன்றுள்ளதாம். இதையும் காண்க என்றான். காந்தள் மலர் கைபோன்றிருக்கும்.

இருந்தையில் தீ

பொன்னிற அசோகத்தில் கரு நிற வண்டுகள் மொய்க்கின்றன. இது, பொன் ஊது உலையில் உள்ள கரிய கரித்துண்டுகளின்மேல் தீ எழுவது போன்று உள்ளதாம். (இருந்ததை - கரி)

செருந்தியின் மலர்தாங்கும் செறி இதழின் அசோகம் பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும்
இருந்தையின் எழுதி ஒத்து எழுவன இயல் காணாய்

(8)
சித்திர கூடப் படலம்

சிங்கத்தோடு போர் செய்து புண்பட்ட யானையின் குருதியில் யானையிடம் பிறந்த முத்துகள் கலந்து கிடப்பது, பெண்கள் கணவருடன் ஊடல் கொண்ட காலத்தில் சிந்தின குங்குமக் குழம்பில் அவர்கள் மாலையிலுள்ள முத்துக்கள் சிதறிக் கலந்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்:

சலம் தலைக் கொண்ட சீயத்தால் தனி மதக் கதமா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்தென வேழ முத்து இமைப்பன காணாய்

(6)

முத்து பிறக்கும் இடங்களில் யானையும் (யானைக் கொம்பும்) ஒன்று என்பது இப்பாடலால் புலனாகும்.

பள்ளி படைப் படலம்

நிற்கும் பரிசிலர்

அகன்ற குளக்கரையின் கீழே உள்ள பயிர்கள், மடை வாயிலிலிருந்து நீர் வராமையால், கருமிகளின் கடை வாயிலில் வருந்தி நிற்கும் பரிசிலர் போல் வாடினவாம்.

அலர்ந்த பைங்கூழ் அகன்குளக் கீழன
மலர்ந்த வாயில் புனல்வழங் காமையால்
உலர்ந்த, வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே

(26) 

வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

என்னும் திருவருட்பாப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது.

ஆறு செல் படலம்

அரசிலா வையகம்

அரசை ஏற்க மறுக்கும் பரதனுக்கு வசிட்ட முனிவர் கூறுகின்றார்: அரசர் இல்லாத நாடு, ஞாயிறு இல்லாத பகல் போலவும் திங்கள் இல்லாத இரவு போலவும் உயிர் இல்லாத உடம்பு போலவும் பொலிவு இன்றி மங்கிப் போகும்:

வள்ளுறு வயிரவாள் அரசு இவ்வையகம்
கள்ளுறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதியிலா இரவும், தேர்தரின்
உள்ளுறை உயிரிலா உடலும் ஒக்குமே

(7)

நான்கு கடல்கள்

பரதனுடன் நால்வகைப் படைகளும் புறப்பட்டன. ஒவ்வொருவகைப் படையும் ஒவ்வொருவகைக் கடலாக உருவகிக்கப்பட்டுள்ளது. ஒரு கடல் தேர்களின் மேலும், இன்னொரு கடல் யானைகளின் மீதும், மற்றொரு கடல் குதிரைகள் மீதும் வேறொரு கடல் தரைமேல் பரவியும் சென்றனவாம்.

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை, செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி, கார்க்கடல் ஏர்முகப் பரிமிசை ஏகிற்று, எங்கணும்
பார்மிசைப் படர்ந்தது பதாதிப் பெளவமே

(32)

தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாள்படை ஆகிய நான்கும் கடலாக உருவகிக்கப் பட்டுள்ளன. இப்பாடலில் கம்பர் சொற்சிலம்பம் ஆடியுள்ளார். கடல் என்னும் பொருளைக் குறிக்கும் பரவை, உவரி, கடல், பெளவம் என்னும் நான்கு சொற்களையும் பயன்படுத்தியுள்ளார்.

அறிஞர் போல

பரதனுடன் கொண்டு செல்லப்படும் தாரை, சங்கு முதலிய இடங்கள் எல்லாம், அறிவிலார் கூட்டத்தில் அறிஞர் பேசாமல் அடங்கியிருப்பதுபோல் சிறிதும் ஒலி எழுப்பவில்லை.

தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு வார்மிசைப் பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற, பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே

(33)

மதி இலாக் கங்குல்

பரதனுடன் வெண் கொற்றக் குடை இல்லாமல் செல்லும் படை, விண்ணில் விண் மீன்கள் இருப்பினும் வெள்ளிய திங்கள் இல்லாத இரவைப் போன்றிருந்ததாம்:

அதிர்கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதிவரும் தனிக்குடை மீது இலாப் படை,
பொதிபல கவிகை மீன் பூத்த தாகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே

(35)

மறி கடல் ஒத்தது

இராமன் சென்றபின் பரதனும் அறிஞர், இளைஞர் முதலியோருடனும் திருவுடனும், பலவகைப் படை களுடனும் இராமனை அழைத்துவரக் காட்டிற்குச் சென்று விட்டதால், வறிய அயோத்தி, அகத்தியர் நீர் முழுவதையும் குடித்துவிட்ட காலிக் கடல் போல் காட்சியளித்ததாம்.

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச்
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால், குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் மறிகடல் ஒத்தது அவ்வயோத்தி மாநகர்

(45)

குறியவன் = குள்ளமான அகத்தியன். கடலில் மறைந்து கொண்ட விருத்திராசுரன் என்னும் அரக்கனைக் கண்டு பிடிப்பதற்காக இந்திரனது வேண்டுகோளின்படி அகத்தியர் கடல் நீர் முழுவதையும் குடித்து விட்டார்என்பது புராணக்கதை.

சித்திரச் சுவர்

மத்தளம் முதலிய பலவகை இயங்களோடு செல்லினும் ஒலிக்காமல் அமைதியாய்ச் செல்லும் படை, சுவரில் ஒவியம்ாகத் தீட்டப்பட்டுள்ள படையைக் காண்பது போல் இருந்தது.

மத்தளம் முதலிய வயங்கு பல்லியம்
ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அப்படையின் ஈட்டமே

(49)

'சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருந்த முகம் (சுந்தர காண்டம்- காட்சிப் படலம்-20) எனக் கம்பர் பின்னர் ஓரிடத்தில் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

கங்கை காண் படலம்

எலியும் புலியும்

இராமனைக் கொல்லப் பரதன் படையுடன் வருவ தாகத் தவறாக எண்ணிய குகன் கூறுகிறான்: இந்தப் படைகள் யாவும் எலிகள்- யானோ இவற்றைக் கொல்லும் பாம்பு என்று கூறி, உலகில் உள்ள புலிகளை எல்லாம் ஓரிடத்தில் அழைப்பதுபோல் தன் படை மறவர் அனைவரையும் அழைக்கிறான்:

எலி எலாம் இப்படை, அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்;
வலி உலாம் உலகினில் வாழும் வள்ளுகிர்ப்
புலி எலாம் ஒருவழிப் புகுந்த போலவே

(10)

ஆ முன் கூழ்

ஏழு கடல்கள் போன்ற பெரிய படை எனினும் இப்படை என்முன், ஆவின் முன் வைத்த சிறு கூழ்போல் ஆகிவிடும் என்று குகன் கூறுகிறான்:

ஏ முனை உற்றிடில் ஏழு கடற்படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ்என இப்பொழு தாகாதோ

(23)

உன் புகழ்

பரதனது உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட குகன் பரதனைப் புகழ்கின்றான்: ஞாயிறு மற்ற ஒளிகளை யெல்லாம் அடக்கி விடுதல்போல், உன் புகழ், உன் முன்னோர் புகழ்களை எல்லாம் அடக்கித் தன் புகழாக்கிக் கொண்டது- என்றான்.

என் புகழ் கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க் குமாபோல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத்து உரவுத்தோளாய்

(
36)
திருவடி சூட்டு படலம்

விளக்கு அவிதல்

தயரதன் இறந்தான் என்பதைக் கேட்டுப் புலம்பிய இராமனை வசிட்டன் தேற்றுகிறான்: புண்ணியம் என்னும் நெய் ஊற்றி, (ஆயுள்) காலம் என்னும் திரி இட்டுப் பற்றச் செய்த விதி என்னும் எரியும் விளக்கு, மற்றவை இரண்டும் தீர்ந்துவிடின் அவியும் அல்லவா?

புண்ணிய நறுநெயில், பொரு இல் காலமாம் திண்ணிய திரியினில், விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு, அவை இரண்டும் எஞ்சினால் அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ?

(75)

புண்ணியம் நெய்யாகவும் காலம் திரியாகவும் விதி தீயாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. தயரதன் புண்ணியம் செய்து முடித்து விட்டான்; அவனது அகவையும் (ஆயுள் காலமும்) முடிந்தது; அவனது விதி இம்மட்டோடு நின்று விட்டது. எனவே, அவன் இறந்ததற்காக வருந்த வேண்டியதில்லை- என்பது கருத்து.

இவ்வாறு பல்வேறு முத்து முத்தான உவமைஉருவகங்களை அமைத்துக் கம்பர் காப்பியத்தைச் சுவைக்கச் செய்துள்ளார். உவமைகளின் வாயிலாகச் சில அரிய கருத்துகளை விளங்க வைத்துள்ளார்.