அயோத்தியா காண்ட ஆழ்கடல்/புராண வரலாற்றுக் குறிப்புகள்
இந்தப் பகுதியில் புராண வரலாறுகள் சிலவற்றைக் காண்போம்:
அரிந்தான்
கைகேயி வரம் கேட்டதும் சோர்வுற்ற தயரதனிடம் அவள் கூறுகிறாள்: உண்மையை- உயர் பண்பைக் காக்கச் 'சிபி' என்னும் ஞாயிறு குலமன்னன் ஒரு புறாவிற்காகத் துலைத் தட்டில் ஏறித் தன் தசையை அரிந்த வரலாறு உனக்குத் தெரியாதா? எனவே, சொன்ன சொல்லை நீ மறுக்கலாமா?
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அருமேனி
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான்...(47)
நாரணன் ஒக்கும்
தயரதன் அழைத்ததனால் தனது மாளிகையிலிருந்து தேர் ஏறித் தெரு வழியே சென்ற இராமனைக் கண்டு பலர் பலவாறு பேசிக் கொண்டனர்: கஜேந்திரன் என்னும் யானையின் காலை முதலை பற்றி இழுத்தபோது, அந்த யானை 'ஆதி மூலமே' என்று கூவி அலறியபோது உடனே சென்று அதனைக் காத்த நாரணனை (திருமாலை) ஒத்திருக்கிறான் இராமன்- என்று சிலர் கூறினர்:
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பிதன் கருணை என்பார்
அகழ்ந்தோர்- கொணர்ந்தோர்
சகரர் என்பார் நிலத்தைத் தோண்டிக் கடலை உண்டாக்கினராம்; சகரரால் தோண்டப்பட்டதால் கடல் 'சாகரம்' எனப்பட்டதாம். பகீரதன் என்பவன் தவம் செய்து விண்ணிலிருந்து கங்கையைக் கொண்டு வந்தானாம். பகீரதனால் கொண்டு வரப்பட்டதால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயர் ஏற்பட்டதாம். ககுத்தன், முசுகுந்தன் முதலிய முன்னோர்கள் அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தனராம்:
ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
போர்கெழு புலவர்க்காகி அசுரரைப் பொருது வென்றோர்...
ஆர்கலி= கடல்; புலவர் = தேவர். இவர்களின் புகழ்ச் செயல்கள் இராமன் புகழுக்குப் பிற்பட்டவையேயாம்.
முப்புரம் எரித்தல்
தாராட்சன், கமலாட்சன், வித்வன்மாலி என்னும் அரக்கர் மூவரும் தேவர்கட்குத் தொல்லை தந்ததால், தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் மேருமலையை வில்லாக வளைத்து வாசுகிப் பாம்பை நாணாகக் கட்டிதிருமாலாகிய அம்பை ஏந்திச் சென்று சிரித்தே அம்மூவரின் கோட்டைகளை எரித்தாராம்; முப்புரம் எரித்தல் என்பது இதுதான்.
இறைவன் புரம் மூன்று எரித்த போர்வில் இறுத்தாய் (57):
இறைவன் = சிவபெருமான். தாயை வெட்டியவன்
மழுப்படை ஏந்திய பரசுராமன், தன் தாய் இரேணுகையிடம் குறைகண்டதால் அவளை வெட்டி விடுமாறு தன் தந்தை யம தக்கினி கட்டளையிட, மறுக்காமல் அவ்வாறே தன் தாய் இரேணுகையின் தலையை வெட்டி விட்டானாம்:
மான்மறிக் கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல்; தாயையே
ஊன் அறக் குறைத்தான்...
மேரு மத்து
அமிழ்தம் எடுப்பதற்காகப் பால்கடல் நடுவே மந்தர மலையை மத்தாக இட்டு வாசுகி என்னும் பாம்பைக் கடை கயிறாகப் பயன்படுத்தி, தேவர்கள் ஒரு புறமும் அரக்கர்கள் மறுபுறமுமாக நின்று கடலைக் கடைந்தனர். அப்போது கடல் திரிந்ததுபோல் இலக்குவன் திரிந்தானாம்:
மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றது போல் திரிகின்ற வேலை
கூனியால் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு கொதித்துத் திரிந்தானாம் இலக்குவன்.
முற்றா மதியம்
சந்திரனின் மனைவிமார்கள் எனப்படும் அசுவணி பரணி முதலிய இருபத்தேழு விண்மீன்களும் தக்கனின் பெண்களாம். சந்திரன் அவர்களிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாமையால் தக்கன் சினந்து, சந்திரனை நோக்கி, நீ ஒவ்வொரு கலையாய் அழிந்து போவாயாக என்று கெடுமொழி (சாபம்) இட்டானாம். அதனால், சந்திரனின் பதினாறு கலைகளுள் ஒவ்வொன்றாய்ப் பதினைந்து கலைகள் அழிந்தனவாம். ஒரு கலை மட்டும் இருக்கும் போது சந்திரன் சிவனிடம் அடைக்கலம் புகுந்தானாம். சிவன் முற்றாத அந்த ஒற்றைக் கலைப் பிறைச் சந்திரனை எடுத்துத் தலையில் சூடிக் கொண்டாராம். மேலும், நீ ஒவ்வொரு கலையாய் வளர்ந்து மீண்டும் முழுமை பெறுவாய்; பின்னர், தக்கன் கெடுமொழிப்படி ஒவ்வொன்றாய்க் குறைவாய். மீண்டும் ஒவ்வொன்றாய் வளர்வாய் என்று அருளினாராம். இதுதான் சிவன் பிறை சூடிய கதை:
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் (132)
புரந்தரன் உரு
இந்திரன் கெளதம முனிவரின் மனைவியாகிய அகலிகையை, முனிவர் போல் கோலம் கொண்டு வஞ்சகமாய்ப் புணர்ந்ததனால், முனிவர் சினந்து, நீ விரும்பிய அந்தப் பெண் உறுப்பு உன் உடம்பு முழுவதும் உண்டாகுவதாக என்று கெடுமொழி (சாபம்) இட்டார். அவ்வாறே உடம்பு ஆயிற்று. மற்றவர் கண்கட்கு மட்டும் அவை கண்கள்போல் தெரியும்படி வரம் வேண்டிப் பெற்றான். இக்காலத்தில் மக்களுக்குக் கண்ணாயிரம் என்னும் பெயர் வைக்கப்படுகிறது. அது இந்திரனைக் குறிக்கும் பெயர். ஞாயிறு மறைய இருள் தோன்றியது. அப்போது, வானத்தில் விண்மீன்கள் பல மின்னின. அப்போது வானம், உடம்பு முழுதும் கண்கள் பெற்ற இந்திரனது தோற்றம் போல் இருந்ததாம். இராமன் காட்டில் இருந்தபோது, ஞாயிறின் மறைவும் இரவின் வருகையும் ஒரு நாள் நிகழ்ந்தது இவ்வாறு புனையப் பட்டுள்ளது. பாடல்:
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பில நெடுங்கண் ஈண்டிய
புரந்தரன் உருஎனப் பொலிந்தது எங்குமே
இளை ஏந்தினான்
இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாள உலகில் சென்று தங்கிவிட்டானாம்; தேவரின் வேண்டுகோள்படி திருமால் பன்றி உரு எடுத்துக் கடலுள் புகுந்து இரண்யாட்சனை வென்று தன் (பன்றியின்) ஒற்றைக் கொம்பால் பூமியை மீண்டும் ஏந்தி எடுத்து வந்தாராம்:
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஓர் கேழலாய்
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ
அகன் புனல் - கடல். இளை= பூமாதேவி. இவ்வாறு பல புராணச் செய்திகள் உள்ளன.
புராணச் செய்திகளை அறிவியல் நோக்கில் ஆராயலாகாது. என்னவோ புராணக் கதைகள் என்ற அளவில் அமைய வேண்டும்.