அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/ஆயத்தம் அவசியம்

4. ஆயத்தம் அவசியம்

எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் ஒருநாள் என் நண்பர் ஒருவரை வழி அனுப்பி வைப்பதற்காகச் சென்றிருந்தேன் இரவு மணி 9 இருக்கும்.

வண்டி புறப்படுவதற்குக் கடைசி மணி அடித்தாகி விட்டது. ஒரு குடும்பம் அவசரம் அவசரமாக ஸ்டேஷன் உள்ளே நுழைந்தது. கையில் மூன்று மூட்டை முடிச்சுகள். நடக்கின்ற இரண்டு குழந்தைகள், இடுப்பிலே வாசம் செய் செய்கின்ற மூன்றாவது சவலைக் குழந்தை.

குடும்பத் தலைவன் மேல் மூச்சு வாங்க ஓடி வந்து அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சுக்களை உள்ளே தள்ளும் நேரத்தில், வண்டி நகர்ந்து விடுகிறது. ஒரு குழந்தை யையும் உள்ளே நுழைத்துவிட்டார். மற்றொன்றையும் கையில் துக்கியவாறு ஓடிக்கொண்டே தள்ளிவைத்தார். தானும் தொற்றிக் கொண்டார்.

இடுப்புக் குழந்தையுடன் பின்னால் ஓடி வந்து ஏற முடியாத குடும்பத்தலைவி, கோவென்று கதறியபடி பிளாட் பாரத்தில் குந்திவிட்டார். பத்தடி தூரம் போன வண்டியை சங்கிலியைப் பிடித்து ஒருவர், இழுத்து நிறுத்தினார்.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. அதற்குள் வண்டியில் இருந்த அனைவரும் 'அவர்களை' கன்னா பின்னாவென்று

பேசித்தீர்த்து விட்டார்கள். அவமானத்தில் அவர்கள் தலை குனிந்து கிடந்தார்கள்.

இந்தக் காட்சி என் நினைவை விட்டு அகலவே இல்லை.

இந்தத் தேதியில் ஊருக்குப் புறப்படப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வண்டியில் தான் போகப்போகிறோம். இத்தனை மணிக்குத்தான் வண்டி புறப்படும் என்பதும் தெரியும். தெரிந்திருந்தும் இந்த இழி நிலைமை ஏன்?

இந்தத் திட்டு வாங்கிய குடும்பத்தினரைப் போலத்தான் நிறைய பேர்கள் நாட்டில் இருக்கின்றார்கள். நெஞ்சிலே மதமதர்ப்பும் தேகத்திலே சோம்பேறித்தனமும், தடித்தனமும் நிறைந்த கூட்டம் என்றுகூட நாம் தைரியமாகச் சொல்லலாம்.

காலதாமதம் எத்தனை எத்தனை கஷ்டங்களை உண்டு பண்ணி விடுகின்றது என்பது யாருக்குத் தெரியாமல் இருக்கிறது? இருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதுதான் புரியாத புதிர். ஆமாம். இதுதான் மனிதப்புதிர்.

ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு இடத்திற்குப் போகிறோம் என்றால், அதற்கு ஆயத்தமாக இருப்பவர்களால் தான் அமைதியாகச் செயல்பட முடியும். அற்புதமாகவும் செய்திட முடியும்.

அவசரப்பட்டுச் செல்பவர்கள் அடிக்கடி பதட்டப்படுகின்றார்கள். சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள். சமயோசிதப் புத்தியையும் சாமர்த்தியத்தையும் இருந்தும் பறிகொடுத்து விட்டுப் பரிதாபமாக நிற்கின்றார்கள். அதனால் தான் பதறாத காரியம் சிதறாது என்கிறார்கள்.

இந்தப் பதட்டம், நேரத்தோடு செல்லாத நேரத்தில் தான் உண்டாகிறது என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு ஆயுத்தமாக இருக்கின்ற நிலைதான் சரியான பரிகாரமாகும்.

இத்தகைய ஆயத்தமான அறிவையும், பக்குவத்தையும் விளையாட்டுக்கள் மட்டுமே கொடுக்கின்றன. கற்பிக்கின்றன. கணக்காக வழங்குகின்றன.

காலை 8 மணிக்கு விளையாட்டுப்போட்டி நடக்கிறது என்று நாம் வைத்துக் கொள்வோம். அதில் பங்கு பெறுகின்ற ஓர் ஆட்டக்காரர் 8 மணிக்குப்போய் நின்றால், என்ன ஆகும்? எதுவுமே செய்ய முடியாமல், கைகால்கள் பிடித்துக்கொள்ள, காண்பவர்கள் கேலியாகப் பேசித்தீர்க்க இத்தனை அவதிகளுக்கு அவர் ஆளாகிப்போவார்.

8 மணிக்கு ஆட்டம் என்றால் அவர் மனதால் காலை 8 மணிக்கே ஆயத்தமாகி விடுகிறார். நினைவால் அவர் அந்த நிகழ்ச்சிகளில் ஆழ்ந்துவிடுகிறார். காலை 7 மணிக்கு அவர் உடலால் பதமாகி விடுகிறார். பிறகு 8 மணிக்கு ஆட்டம் என்றால் அவர் அற்புதமாக ஆடி சாதித்துவிடுகிறார்.

இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஆயத்த மனதுடன், ஆயத்த உடலுடன் இருக்கும்பொழுதுதான் ஆபத்தில்லாமல் ஆடுகின்றார்கள். அவசரப்படாத சலனப்படாத ஆத்திரப்படாத அமைதியுடன் திகழ்கின்றார்கள்,

இந்த அருமையான பண்புகளை மக்களினத்திற்குக் கற்பிக்கவே விளையாட்டுக்கள் தோன்றியிருக்கின்றன போலும்.

ரயில் வண்டிப் பயணம் போலவே ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் இருக்கிறது. வாழ்க்கைப் பயணத்திற்கு நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற உண்மையை, மக்களுக்கு வழிநடத்திக் காட்டத் தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன.

ரயில் வண்டியில் பிரிந்துநின்ற குடும்பம், கலங்கித்தவித்த காட்சி, யாருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடாது. இதைத் தான் நல்லவர்கள் விரும்புகிறார்கள்.

ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் புகழ்பெற்ற வீரர் ஒருவர், பங்கு பெற்றால் வெற்றியடையக் கூடிய நிலையில் இருந்தும், அவர் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை மறந்து தன் அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கடைசி நிமிடத்தில் தனது நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிந்து ஓடினார். பாவம் அவரால் பங்கு பெற இயலாமற் போயிற்று பரிசையும் புகழையும் இழந்தாயிற்று, அவர் பல ஆண்டுகளாக உழைத்த உழைப்பும் பாழாய் போயிற்று.

இதற்குத்தான் எதற்கும் எதிலும் எப்பொழுதும் ஆயத்தம் வேண்டும் என்கிறோம்.

வாழ்க்கையில் முன்னுக்கு வர விரும்புவர்களுக்கு, அமைதியாக ஆனந்தமாக வாழ விரும்புவர்களுக்கு, சிறந்த சாதனைபுரிய வேண்டும் என்று முயல்பவர்களுக்கு ஆயத்தம் அவசியம். இந்த ஆயத்தத்தை விளையாட்டுக்களே கற்பிக்கின்றன. விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் சிறப்பாக வாழ இதுவே மூலகாரணமாகவும் முக்கியமான பண்பாகவும் அமைந்திருக்கிறது.