அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/விரைக, உயர்க, வலிமை பெறுக

5. விரைக! உயர்க!! வலிமை பெறுக!!!

மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிரலாபித்துக் கொண்டே வாழ்கின்றார்கள். வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகின்றார்கள். இதுதான் மனித வரலாறு தருகின்ற வருத்தமான காட்சி.

கோடி கோடியாக மனிதர்கள் பிறக்கின்றார்கள், கூடிகூடி வாழ்ந்தவாறு கோடியிலே கிடந்து, வாடி வதங்கி, அழுது புலம்பி, இளைத்துக் களைத்து, இறந்து போய் இருந்த இடத்தைக் காலி செய்து விடுகின்றார்கள்.

பூதஉடல் போனாலும் புகழுடல் இந்தப்பூதலத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் புத்திசாலிகள்.

வரம் பெற்று வாங்கி வந்த இந்த மனித உடலை, புனித உடலாக மாற்றிப் புகழ் பெற்று இறப்பவர்கள் தான், பெருமை பெற்றவர்கள் ஆவார்கள். அப்படி நினைக்காதவர்கள் நிலை, மண்ணுக்கும் அதில் கிளம்பி மறையும் புழுதிக்கும் கீழ்தான். பாழ்தான்.

'தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்று வள்ளுவர் பாடிச் சென்றார்.

'தோன்றிற் பொருளோடு தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று'

என்று சமுதாய தர்மமாக பாட வேண்டிய நிலைமை இன்று நம்மிடையே நிறைந்துகிடக்கிறது.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று பாடியது உண்மை தான். பணம் இல்லாதவன் பிணம் என்ற பழமொழி நூற்றுக்கு நூறு இன்று பொருந்துகிறது. காரணம். நமது சமுதாய அமைப்பு அப்படி மாறிப் போய் கிடக்கிறது.

பொருள் தேடுவது அவ்வளவு கஷ்டம் என்பதால் தான், திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்று கூறிச் சென்றார்கள். அந்த உயிர் போகும் முயற்சியும், உழைப்பும் முனைப்பும் உள்ளவர்களால் தான் பொருள் தேட முடியும் என்று அன்றே அறிந்து கூறினார்கள்.

மன் + இதன் என்ற இரு சொற்கள் தான் மனிதன் என்று மாறி வந்திருக்கிறது போலும். மன் என்றால் நிலைத்திருப்பது. இதமாக இருக்க வேண்டும் என்பதால் தான் இதன் என்று வந்திருக்க வேண்டும்,

வண்மை முறையில் இல்லாமல், இதமாக இந்த உலகில் நிலைத்திருக்க வேண்டும் என்பதால், மனிதன் என்று பெயர் சூட்டி அழைத்திருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.

புகழையும் தேட வேண்டும், பொருளையும் தேட வேண்டும். அது இதமாகவும், பதமாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் வாழ்க்கைமுறை,ஒழுக்கநெறி என்று போதித்தும் சென்றார்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், புகழால் வாழ வேண்டும். பொருளால் உயர்ந்து வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை தான் இனிய வாழ்க்கை. மணியான வாழ்க்கை. மாண்புமிகு வாழ்க்கையுமாகும்.

அ. வி.-3

மணியான வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டு மென்றால் அதற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? துணைவர்கள் வேண்டாமா? அவர்களைப் போல் தான் விளையாட்டுக்கள் நமக்கு நல்ல துணையாக விளங்குகின்றன.

சும்மா போய் காலத்தைக் கழிப்பதற்காக விளையாடி விட்டு வரலாமே என்று நினைத்துச் சென்று விளையாடுபவர்கள், இன்று எண்ணிக்கையில் ஏராளமாக இருக்கின்றார்கள்.

வெறும் விளையாட்டுக்காக ஏன் போக வேண்டும் என்று விமர்சித்துப் பேசுவோரும் உண்டு.

ஆனால் விளையாட்டுகளுக்கு என்று இலட்சிய நோக்கம் ஒன்று இருக்கிறது என்று யாரும் உணர்ந்து கொள்ளவில்லை. உணர்ந்து கொள்ளவும் முயலவில்லை.

விளையாட்டுக்களின் நோக்கத்தைப் பாருங்கள்.

விரைக, உயர்க, வலிமை பெறுக என்பவை தான் அந்த அற்புத நோக்கங்கள்.

சோம்பித் திரிபவன் தேம்பியே வாழ்வான், சோர்வானது சுகத்தையே அழித்து விடும். மந்தமாக இருப்பவன் கதியும் மங்கியே போகும். இவற்றை யெல்லாம் எண்ணிப்பாருங்கள்.

ஒடுன்ற தண்ணிக் தான் தூய்மையாக இருக்கும். தேங்கி நிற்கின்ற நீர் சகல விதத்திலும் தூய்மையிழந்து கிடக்கும்.

மனிதன் என்பன் இயக்கமுள்ளவன். மிருகங்களும் இயக்கமுள்ளவை தான். என்றாலும், மனித இயக்கத்தில் விவேகம் இருக்கிறது. வேகத்திலும் நிதானம் இருக்கிறது.யூகம் நிறைந்த முன்னேற்ற நினைவு முனைந்து நிற்கிறது.

மனித செயல்கள் பொருள் தேடவும், சுகம் நாடவும் உள்ளவை. வெறும் வயிற்று ஜீவனத்துக்காக மட்டும் முயற்சி அல்ல. இந்தக் கருத்தினுக்கு கை கொடுத்து உதவுவது போல அமைந்தது தான் விரைக என்பதாகும்.

வாழ்க்கையின் செழிப்புக்கு விரைந்து உழைக்க வேண்டும் விரைவான செயல் முறைகள் வேண்டும்.

மனிதர்களின் வாழ்வு குறைவானது தான். ஆனால் அது நிறைவானதாக இருக்க வேண்டும் . அந்த நிறைவினைப் பெற விரைவான இயக்கம் வேண்டும். மறைவாக ஒரு மூலையில் கிடந்து உறங்கும் போது மனித உடம்பு மகிமை இழக்கிறது.

அதனால் புகழுக்கு விரைக என்று பொருந்தும்படி இந்த விளையாட்டு லட்சியம் அமைந்து வழி காட்டுகிறது.

புகழ் மட்டும் போதாது. வாழ்க்கையில் வெறும் புகழ் சிறப்படையாது. மனித முகத்திற்கு இருகண்கள் அழகு. அது போலவே மனித வாழ்க்கைக்கும் இரண்டும் தேவை. ஒன்று புகழ், அடுத்தது பொருள்.

பொருளால் உயர்ந்து நிற்பவர்களே புகழால் உயர்ந்து நிலை பெற முடியும். புகழில்லாதவர் பொருளும், பொருள் இல்லாதவர் புகழும் பிரயோஜனப்படாத ஒன்றாகும். ஆகவே பொருளால் உயர்க உயர்ந்து வாழ்க என்று விளையாட்டுக்கள் விளக்குகின்றன.

மனிதர்களுக்குப் பொருளும் புகழும் போதும் என்று இருந்து விட்டால், அதனால் வாழ்க்கை இன்பமாக அமையாது என்பதைத் தெளிவு படுத்தவே, மூன்றாவது லட்சியம் இருக்கிறது. அது தான் வலிமை பெறுக என்பதாகும்.

ஒரு வீட்டின் ஒளி தீபங்கள் பெண்கள் தான். ஒரு மனிதனுக்கு உயிரான உறவுகள் தாயும் தாரமும் தான். அந்தத்

தாயும் தாரமும் ஒருவனை விரும்ப மாட்டார்கள் என்பது எப்பொழுது தெரியுமா? பொருள் இல்லாத போது, வலிமையில்லாத போது,

வலிமை இல்லாதவனை தாய் மட்டுமல்ல. தாரம் மட்டு மல்ல, சமுதாயமே விரும்பாது, வலிமையில்லாதவன் வீட்டுக்கு பாரம் மட்டுமல்ல; சமுதாயத்துக்கு அவன் சுமை.

வலிமை இல்லாதவன் ஜடத்துக்கு சமம். அவன் நோய் வாழும் பாழும் கூடாகத் தான் இருப்பான். நோயாளியால் யாருக்குமே பயன் இல்லை. நோயாளியாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

ஒரு நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்? உருட்டிக் கொண்டு கிடக்குமே தவிர, உடைத்துத் தின்ன, அனுபவிக்க அதற்குத் தெரியாது. அது போலவே, நோயாளிக்கு இருக்கின்ற பொருளும் புகழும் அப்படித்தான் அவனை வாழவைக்கும்.

நோயாளிக்கு வலி காரணமாக முனகத்தான் தெரியும். மற்றவர்களைக் கண்டு எரிச்சல் படத்தான் முடியும். அவன் பொருளை அடுத்தவர்கள் தான் அனுபவிப்பார்கள். அவன் இறப்பைத் தான் விரும்புவார்கள். 'சீக்கிரம் சாகமாட்டானா அவனது பொருள் நமக்கு வந்து சேராதா' என்று தான் காத்துக் கிடப்பார்களே தவிர, நோயாளிக்குக் கருணை காட்ட மாட்டார்கள்.

காலம் மாறிக் கொண்டு வருகிறது. பொருளின் இயல்பும் அப்படித்தான்.

பொருளைப் பயன்படுத்த, புகழில் மகிழ, உணவை சுவைக்க, உலகை ரசிக்க, உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து செல்ல உடல்தான் முக்கியம் அதிலும் வலிமையான உடல்தான் அவசியம்.

இந்த உண்மையை விளக்கவே. வலிமை பெறுக என்று வழிகாட்டுகிறது விளையாட்டுக்கள்.

மனிதர்களை நாம் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்

போற்றுதலுக்குரியராக வாழ்பவர்கள்.

பிறரைப் போற்றி மகிழ்பவர்கள்.

போற்றும் பண்பில்லாது தூற்றித்திரிபவர்கள்.

விளையாட்டுக்களின் நோக்கமானது ஒருவனுக்குரிய உள்ளாற்றலை, உயர்ந்த திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். தனக்கிருக்கும் திறமையை, தான் வெளிப் படுத்திக்காட்ட வாய்ப்பு ஏற்படும் பொழுது அவனும் மகிழ்கிறான். அவனது ஆற்றலைக் கண்டு காண்பவர்களும் மகிழ்கிறார்கள். வாயாரப் புகழ்கின்றார்கள்.

ஆகவே, புகழால் அவன் உயர்கிறான். பிறரால் புகழப்படுகிறான்.

புகழ்கின்ற மனம் பண்பட்டவர்களுக்குத் தான் உண்டு. பண்பாடுள்ளவர்கள் பிறரைப்போற்றியும், புகழ்ந்தும், தங்களை உயர்த்திக் கொண்டு வாழும் புத்திசாலிகள். ஆகவே, விளையாட்டு உலகமானது, போற்றக் கற்றுத் தருகிறது. போற்று தலுக்கும் ஆளாக்குகிறது.

உடல் வலிமையும் மனவலிமையும் இல்லாதவர்கள் இந்த இரண்டும் இல்லாமல், தூற்றித்திரியும் தெருநாய்களாக வாழ்கின்றனர். நன்றியுள்ள நாயாக அவர்களால் இருக்க முடியாது. காரணம் அவர்களுக்குள்ளே நிறைந்து நசுக்கும்லிவுகள் தான். நோய்த்துன்பங்கள் தான்.

ஆகவே, வினரக உயர்க வலிமை பெறுக என்னும் விளை யாட்டு லட்சியங்கள், விளையாட்டில் ஈடுபடும் வீரர்களை வீராங்கனைகளை, விழுமிய முறைகளில் பின்பற்றக் கற்றுத் தருகின்றன. செம்மைப்படுத்துகின்றன. சிறப்பாக பயன்பட உதவுகின்றது. உற்சாகம் ஊட்டுகின்றன.

இந்த லட்சியங்களுடன் வாழ்வோம். இணையற்ற இனிய வாழ்வில் திகழ்வோம். மகிழ்வோம்.