ஆடும் தீபம்/சேதுவில் பாலம்


சேதுவில்
பாலம்
திருக்கார்த்திகைக்குத் தீப மங்கள ஜோதி. அண்டமும் பிண்டமும், உயிர்ப்பும் உயிர்ப்பின்மையும், ஊழியும் ஆழியும், உருவமும் அருவமும் இடை வெட்டிய இருளைப் பிளந்து ஒளிப் புனலில் நீராடிக் களிக்கும் கன்னியராகி விட்டிருந்த அந்த நாளில், மானிடப் பெண்களெல்லாம் ‘காளையராகி’ அதில் உள்ளத்தை வீழ்த்தி, வீழ்ந்து குழிந்து அந்த உள்ளத்திலே நெய்யும் இட்டுத் தீபம் எடுத்து உயிர்க் குலத்தின் மூச்சை ஜோதியாக எழுப்பிக் கொண்டிருந்த தீத்திருநாள்.

‘சோறு படைத்த சோழ நாடு’ என்று கூறுவதால் மட்டும் சோழ நாட்டின் பெருமையை முழுதுமாக அளந்துவிட முடியாது கங்கை நீரிலே ஒரு செம்பை மொண்டு, ‘இது கங்கை’ என்று கூறுவதைப் போலத்தான் அது. கங்கை ஒரு செம்பு அல்ல. கங்கையை அளக்கின்ற—கொணர்கின்ற நம் சக்தி ஒரு செம்பின் அளவே என்பதுதான் சரி. சோழநாட்டை அளக்க வந்தவர்கள் கையில் கொண்டு போனதெல்லாம் ஒரு செம்பே. நாம் கேட்டதெல்லாம் ஒரு செம்புக்கு உட்பட்ட சோழத்தைத்தான்.

இப்பொழுது நான் சொல்லப் போவது ஒரு செம்புக்கு மேற்பட்ட சோழநாட்டை அல்ல. ஏனென்றால், நான் ஓர் ஆராய்ச்சிக்காரன் அல்ல; எதையும் தைரியமாக மக்கள் முன்னே நிறுத்திப் பிரமிக்க
வைக்கும் சரித்திரச் செப்பிடு வித்தை தெரியாத சாதாரண மனிதன். உண்மையான மரியாதைக்குத் தடபுடலான பாஷை கிடையாது. உண்மை குழைந்து, உணர்ச்சி தெளிந்து, உடலம் குளிர்ந்து போய் நிற்கும் ஒரு மோன நிலைதான் மரியாதைக்குச் செலுத்தும் உயரிய வணக்கமாகும். சோழத்திற்கு நான் உயரிய வணக்கம் செலுத்த விரும்புகிறேன். அதனால் ஊமையாகத்தானே நிற்க வேண்டும்?

என் ஊமைத்தனத்தைப் போக்க நானும் முயன்றேன். அண்ணா உமாபதியும், தோழர் ‘பூவை’யும் முயன்றனர். எங்களைப் போன்ற எழுத்தாள அன்பர் சிலரும் முயன்றனர். முயற்சி திருவினையாக்கிற்று. இன்றையச் சோழத்தின் உள் வாசலிலே கோலமாக இழைத்திருக்கும் ஒரு சிற்றூரை எடுத்துக் கொள்வதாகத் தீர்மானித்தோம் பழங்காலச் சோழத்திற்குப் பக்தி செலுத்துவதற்காக, ஊமையாக நிற்கும் நான் , இன்றையச் சோழத்திற்காகத் தோழமையுடன் வாய் திறந்து பேசமுடியும். என் வாயைக் கிளறி விட்டுப் பின்னர் பேசவிருக்கும் அன்பர்கள், புகழ் வளர்ந்த எழுத்தாளர்கள்: பண்பால் உயர்ந்தவர்கள்.

எல்லோருமாகச் சேர்ந்து தீபம் ஒன்றை ஆக்கினோம். அதைச் சோழ மண்ணில் ஏற்றி வைக்கும் பணியை எனக்கிட்டனர். அதை ஆட்டி வைக்கும் பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ‘பூவை’யின் பொறுப்பு என்னவென்பதை இப்பொழுதே நான் சொல்ல மாட்டேன். அது ‘சஸ்பென்ஸ்’.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நாங்கள் சேதுவில் பாலம் அமைக்கிறோம். எங்கள் ஒவ்வொருவருடைய முயற்சியும் அணில் முயற்சிதான். பாலம் ஒழுங்காக அமைந்து விட்டால், அணிலைப் பாராட்டாதீர்கள் அமைப்பைப் பாராட்டுங்கள்.

வாசவன்